அத்தியாயம் – 25

மொத்த குடும்பமும் மருத்துவமனையில் இருந்தது. யாரின் முகத்திலும் கிஞ்சித்தும் ஒரு இலகுத்தன்மனை இல்லை. ஒருவித குழப்பம், பயம், அதிர்ச்சி என்று இப்படி ஆளாளுக்கு ஒருப்பக்கம் அமர்ந்திருக்க, போஸ்ராஜனோ  அப்படியே இறுகிப் போய் அமர்ந்திருந்தார். பின்னே மகள் கையை அறுத்துக்கொள்ளும் போது, அவர்தானே நேரில் கண்டது.

இப்போது நினைத்து பார்த்தாலும், உடல் தூக்கிப்போட்டது அவருக்கு. ஒரே மகள். வெளியில் பாசத்தை அவ்வளவாய் காட்டிடவில்லை எனிலும், மனதிற்குள் பிருத்தா மீது, தனியொரு ப்ரியம் உண்டு அவருக்கு. ஒரே பெண் அவளுக்கு நல்லபடியாய் எல்லாம் செய்திட வேண்டும் என்கிற அசாத்திய ஆசை உண்டு உள்ளுக்குள்.

அதனாலே தான், ப்ரித்வி அவளின் திருமணம் பற்றி பேசியபோது கூட ‘என் மகளின் திருமணம், என் பொறுப்பு..’ என்பதுபோல் பேசினார். ஆனால் இப்போதும் நடந்த விபரீதத்தை அவரால் நம்பவும் முடியவில்லை, ஏனிப்படி என்று எதையும் யோசிக்கவும் முடியவில்லை.

முதலில் அவளுக்கு என்ன குறை?! எதனால் இப்படி செய்துகொண்டாள்? அவள் மனதினில் என்ன இருந்தது?!

வெளிப்படையாய் எதையும் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் தன் பிள்ளைகள் இங்கே எப்படி பொருந்திப் போவர், அவர்களின் மனதினில் என்ன கவலைகள் இருக்கிறது என்கிற யோசனை எல்லாம் போஸ்ராஜனுக்கு உண்டு. ஆனால் அவர் நினைத்தது போல இல்லாமல், இங்கே வந்து சில நாட்களிலேயே ப்ரித்வியும், பிருந்தாவும் இந்த சூழலுக்கு ஒத்துப் போய்விட,  தான்தான் அதிகப்படியாய் யோசிக்கிறோமோ என்று நினைத்துக்கொண்டார்.

ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கையில் என்னவோ பெரும் குற்றவுணர்வாய் இருந்தது அவருக்கு. தொழில் விசயத்தில் கொஞ்சம் சுதாரித்து இருக்கலாமோ என்று ஏற்கனவே நினைக்க ஆரம்பித்து இருந்தார்தான். இப்போது மகள் இப்படி செய்துகொள்ளவும், நிஜமாகவே பயந்துபோனார்.

‘ஒருவேளை உள்ளுக்குள்ளே எல்லாம் போட்டு வைத்து, மன அழுத்தம் தாளாமல் இப்படி செய்துகொண்டாளோ..’ என்று நினைக்க, ராதாவும் கூட அப்படித்தான் நினைத்தார்.

அந்த ராத்திரி வேளையில், வேம்பரசனும், அழகரசியும் கூட மருத்துவமனையில் தான் இருந்தனர்.

ப்ரித்வியோ, காசிராஜனோடு மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தான். மற்றொருபக்கம் மீனாளும், சந்திராவும் அமர்ந்திருக்க, அழகரசியோ “என்னன்னு இந்த புள்ள இப்படி செஞ்சா?!” என்று கைகளை விரித்து விரித்து புலம்ப, ராதாவிற்கோ நிற்காமல் கண்ணில் நீர் வழிந்துகொண்டே இருந்தது.

அவரும் பயந்து தானே போனார். அத்தனை நேரம் தன்னோடு நல்லபடியாய் பேசி சிரித்த மகள், திடீரென கையை அறுத்துக்கொள்ளவும் என்னவென்று நினைப்பது. அதிலும் கணவர் ‘பிருந்தா…’ என்று அலறிய அந்த சத்தம், இன்னமும் செவிக்குள்ளே ஒலிப்பது போலவே இருக்க, நெஞ்சில் அழுந்த கை வைத்துக்கொண்டார்.

சந்திரா இதனைக் கண்டவர், எழுந்து சென்று ராதாவின் அருகே அமர்ந்து “ஒண்ணுமில்ல அண்ணி. நம்ம சரியான நேரத்துக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்துட்டோம் தானே. ஒண்ணுமில்ல..” என்று அவரின் கரத்தை பற்றி தட்டிக் கொடுக்க,

“நான் என்னன்னு நினைக்க சந்திரா..” என்று ராதா அழவே தொடங்கிவிட்டார்.

வேம்பரசனோ “போஸ்.. தைரியமா இரப்பா..” என்று அவரின் தோள் தொட,

“நான் என்ன பாவம் பண்ணேன் தெரியலை சித்தப்பா..” என்றவர் வெகுவாய் கலங்கிப்போனார்.

அழகரசியோ  “என் குடும்பத்துக்கு எதுக்கு இப்படியொரு சோதனை ஆண்டவா..” என்று புலம்ப, தங்கமீனாள் தான் “ஆச்சி.. நீங்கதான் எல்லாருக்கும்  தைரியம் சொல்லணும். அதைவிட்டு..” என்று அவருக்கு ஆறுதலாய் பேச,

“என்னத்த தைரியம் சொல்றது?! இந்த காலத்து புள்ளைங்கள புரிஞ்சுக்கவே முடியல. அத்தனை நேரம் நல்லாத்தானே இருந்தா. எதை நினைச்சு இப்படி செஞ்சுக்கிட்டாளோ தெரியலையே. நல்லவேளை போஸ் பார்த்ததுனால ஆச்சு. இல்லைன்னா..” என்றவருக்கு மனது ஆறவே இல்லை.

தங்கமீனாளுக்கும் மனது அடித்துக்கொண்டது தான். குடும்பத்தில் அவளுக்கென்று ஒரு தோழி கிடைத்தது சந்தோசமாய் இருந்தது. அதையும் தாண்டி இப்போது அவள் விரும்பும் ப்ரித்வியின் தங்கை அவள். இன்னும் கூடுதலான ஒரு பிடித்தம் இருக்கவே செய்தது. அப்படியிருக்கையில் பிருந்தா இப்படி செய்துவிட்டாள் என்று தெரிந்ததுமே அவளால் நம்பிடவே முடியவில்லை.

மருத்துவர் என்ன கூறுவாரோ என்று அனைவருமே ஒருவித பயத்தோடு அமர்ந்திருக்க, அங்கே ப்ரித்வி மற்றும் காசிராஜனிடம் “ரொம்ப வொரி பண்ணிக்கிற அளவுக்கு எல்லாம் எதுவும் இல்லை. டீப் கட் எல்லாம் ஆகல. ப்ளட் லாஸ் கூட நிறைய இல்லை. சோ நாளைக்கு ஒரு நாள் அப்சர்வேஷன்ல இருந்துட்டு, நீங்க உங்க சிஸ்டர வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்..” என்று சொல்ல,

காசிராஜனோ “இல்ல பிரகாஷ் அது.. இன்னும் கண்ணு முழிக்கலையே..” என்று கேட்க,

“சர்.. அவங்க இப்போ தூக்கத்துல தான் இருக்காங்க. பெயின் தெரியாம இருக்கவும், நல்லா தூங்கி எழுந்துக்கவும் இன்ஜக்சன் போட்டிருக்கோம். எப்படியும் ஒரு நாலு மணி நேரம், அவங்க டீப் ஸ்லீப்ல தான் இருப்பாங்க. டோன்ட் வொரி சர்…” என,

“சரிப்பா. ரொம்ப தேங்க்ஸ்.. நான் கால் பண்ணதுமே இந்த நேரத்துல வந்து ட்ரீட்மென்ட் பண்ணதுக்கு..” என்று காசிராஜன் நன்றி சொல்ல,

“சர்.. நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்லலாமா. இது என்னோட கடமை..” என்ற பிரகாஷ் “நர்ஸ் கிட்ட சொல்லிட்டுத் தான் போறேன். தே வில் டேக் கேர். நீங்க இத்தனை பேர் இங்க இருக்கிறதும் நல்லது இல்லை. அண்ட் அவங்க கண் விழிச்சதும், ரொம்ப டென்சனா யாரும் எதுவும் பேசிக்க வேண்டாம்..” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

டாக்டர் பிரகாஷ் கிளம்பிய பிறகும் கூட, ப்ரித்வி அப்படியே ஒருமாதிரி இறுகிப் போய்தான் அமர்ந்திருந்தான்.

“ப்ரித்வி.. மாப்ள..” என்று காசிராஜன் அவனின் தோள் தொட,

“மாமா…” என்றவனின் முகத்தினில் உயிர்ப்பே இல்லை.

“ஒண்ணுமில்ல ப்ரித்வி. டாக்டர் தான் சொல்லிட்டார்ல. பயமில்லை இனி..” என,

“என்னன்னு நினைக்கிறது மாமா. ஒண்ணுமே புரியலை. என்ன யோசிக்கிறதுன்னே தெரியலை..” என்று அவன் பேச,

“நம்ம இங்கனயே இருந்தா, அங்க எல்லாரும் பயந்துட்டு இருப்பாங்க. வா போவோம் முதல்ல..” என்றவர், ப்ரித்வியை அழைத்துக்கொண்டு அனைவரும் அமர்ந்திருந்த இடம் செல்ல, இவர்களைப் பார்த்ததுமே அனைவருமே என்னவோ என்றுதான் அஞ்சிப் பார்த்தார்கள்.

காசிராஜன் தான் சூழலைப் புரிந்துகொண்ட “பயப்பட எதுவுமில்லை. காயம் ஆழமெல்லாம் இல்லை. இப்போ தூங்கவும் வலி தெரியாம இருக்கவும் மருந்து குடுத்து இருக்காங்களாம். நாலு மணி நேரம் ஆகும் பிருந்தா கண்ணு முழிக்க. வேற பயப்பட ஒண்ணுமில்லை. நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் சொல்லிட்டாங்க..” என்று அனைவருக்கும் பொதுவாய் சொல்ல, அனைவரின் முகத்திலும் ஒரு ஆசுவாசம்.

போஸ்ராஜனோ மகனின் முகத்தையே பார்க்க “ப்பா..” என்றவன், அவரின் அருகே  அமர்ந்துகொள்ள,

ராதாவோ “வேற.. வேற எதுவும் இல்லையேண்ணே..” என்று கலங்கிப் போய் கேட்டார்.

“நிஜம்மா வேற எதுவுமில்லை ம்மா. மயக்கம் கூட இல்லையாம். தூங்கிட்டு தான் இருக்கு பிருந்தா. கண்ணு முழிக்கவும் ரூமுக்கு மாத்திடுவாங்க. ஆனா எழுந்துக்கவும், அது இதுன்னு எதுவும் பேசக் கூடாதுன்னு சொல்லிருக்கார்..” என,

“என்ன பேச? என்ன கேட்க?” என்று ராதா மேற்கொண்டு விசும்ப,

அழகரசியோ “ராதா.. அதான் ஒண்ணுமில்லைன்னு சொல்றாங்க தானே. நீயே இப்படி விசனப்பட்டா, பாரு உன் புருசனும் பிள்ளையும் எப்படி இடிஞ்சு போயிருக்காங்கன்னு..” என்று கொஞ்சம் அதட்டி அவரை தைரியப்படுத்த,

சந்திராவோ “சித்தி அவங்களுக்கு பயம் இருக்காம இருக்குமா?” என்றார் மெல்லிய குரலில்.

அடுத்து யாருக்கும் கூட என்ன பேசவென்று தெரியவில்லை.  அனைவருமே அமைதியாகவே இருக்க, நர்ஸ் வந்தவர் “சார் இத்தனை பேர் இங்க இருக்கக் கூடாது. பேசன்ட் கண்ணு முழிக்க நேரமாகும். யாராவது ரெண்டு பேர் மட்டும் இருங்க. மத்தவங்க எல்லாம் போயிட்டு நாளைக்கு வாங்க. ப்ளீஸ் தப்பா எடுத்துக்க வேணாம்..” என்று சொல்லிவிட்டுச் செல்ல,

“சரிங்க சிஸ்டர்..” என்ற காசிராஜனோ “ப்ரித்வி.. நாங்க கிளம்புறோம் ப்பா. காலைல வர்றோம்..” என்றவர்

“அத்தை.. மாமா வாங்க..” என்று பெரியவர்களையும் அழைக்க, அவர்களுக்கும் அதற்குமேல் அங்கே இருக்க முடியாத ஒரு நிலை.

மீனாவோ பாவமாய் ப்ரித்வியைத் தான் பார்த்தாள். அவன் முகமே காட்டிக்கொடுத்தது அவன் எப்படிப்பட்ட உணர்வுகளின் பிடியில் இருக்கிறான் என்று. அவனின் கரம் பிடித்து ‘ஒண்ணுமில்ல மாமா..’ என்று ஆறுதல் சொல்ல மனம் உந்தியது.

இப்படி எல்லோரும் சூழ்ந்திருக்கும் போது அவனுக்கென்று தனியே எப்படி ஆறுதல் சொல்வது. நடக்கிற காரியமா இது.

சந்திராவோ “ப்ரித்வி, தம்பி நீயும் எங்களோட வாப்பா. அப்பா அம்மாக்கு வேண்டிய திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வரணும் இல்லையா. அப்படியே பிருந்தாக்கும் தேவையானது எல்லாம் எடுத்துட்டு வருவியாம்..” என,

“ஆமா.. வா ப்ரித்வி.. எங்களை வீட்ல விட்டுட்டு, வேண்டியது எல்லாம் எடுத்துட்டு வருவியாம்..” என்று அழகரசியும் அழைக்க, அவனும் சூழ்நிலை புரிந்து அவர்களை அழைத்துக்கொண்டு சென்றான்.

பிருந்தா இப்படியொரு முடிவு செய்தபின்னே, உள்ளுக்குள் பயமில்லாமல் எல்லாம் இல்லை. ஆனால் அதனைக் காட்டிலும் வினோதன் என்கிற ஒருவன் அவளுள்ளே புகுந்து பேயாட்டம் போட்டுக்கொண்டு இருந்தான். மீனாமட்டும் தான் என்றால், பேசி சரி செய்துவிடலாம்.

ஆனால் அவனின் தாய்மாமனின் மகள் அடுத்து தயாராய் இருக்கிறாளே. எங்கே சென்று யாரிடம் பேசுவது. எது நடந்தாலும் சரி தான் நினைத்தது நடந்தே தீரவேண்டும். வினோதன் அவளுக்கே அவளுக்கு என்று சொந்தமாகிட வேண்டும்.

தன் திட்டத்தை செயல்படுத்த நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள். கையை அறுத்துக்கொள்வது என்பது சாமானிய வேலையல்ல.  நினைக்கவே பயமாய் இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. மாத்திரை எதுவும் விழுங்கலாம் என்று நினைத்தால், முதலில் மாத்திரைக்கு எங்கே போவது?!

அதையுண்டு, பிறகு ஏதேனும் அதனால் பக்க விளைவுகள் வந்துவிட்டால் என்ன செய்ய. அதனால் அந்த யோசனையை கைவிட்டவள், கையை அறுத்துக்கொள்வது தான் சிறந்த வழி என்று தானே முடிவு செய்தவள், யாருக்கும் தெரியாமல் ஒரு சிறு கத்தியை வேறு அறைக்குள் எடுத்துச் சென்று வைத்துவிட்டு வந்தாள்.

போஸ்ராஜனுக்கு மகளின் முகத்தில் என்னவோ ஒரு மாறுதல் தெரிய, ராதாவிடம் “பிருந்தாக்கு உடம்பு சரியில்லையா?” என்று வினவினார்.

“இல்லையேங்க அதெல்லாம் இல்லையே..” என்று ராதா கூறிவிட்டாலும், போஸ்ராஜன் ஆட்களை கண்டுகொள்வதில் கொஞ்சம் கை தேர்ந்தவர் தான்.

மகளது முகத்தினில் தெரிந்த என்னவோ ஒரு மாற்றம், அவர் மனதிற்குள் சரியாய் படவில்லை. இரவு உணவு முடிந்து அனைவரும் அமர்ந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருக்கும் போதும் கூட பிருந்தாவும் அங்கேதான் இருந்தார்.

அழகரசி கூட “என்ன பிருந்தா அமைதியா இருக்க?” என்று வினவ,

“ஒண்ணுமில்ல பாட்டி. தூக்கம் வர்ற மாதிரி இருக்கு..” என்றவள் அறைக்குள் புகுந்துகொள்ள, போஸ்ராஜன் அப்போதும் கூட மகளிடம் நேரே கேட்கவில்லை.

பின்னே அனைவரும் அவரவர் அறைக்கு உறங்கச் செல்ல, என்னவோ போஸ்ராஜனுக்கு மனது ஒரு நிலையில் இல்லை.