பிருந்தாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வீட்டுப் பெரியவர்கள் பேசி முடிவு செய்துவிட்டார்கள் என்றால், என்ன அர்த்தம்?! மனது அதிலே நின்று நின்று அவளுக்கு மூச்சடைத்து போனதுதான் மிச்சம். போதாத குறைக்கு தங்கமீனாள் ஒரு நாள் இவளிடம் பேசியது எல்லாம் நினைவில் வந்துவேறு தொலைத்து.
“எங்கப்பா அம்மாக்கு தெரியாதா எனக்கு யார் சூட்டாவங்கன்னு. என்னோட ஒரே கண்டிசன் இங்கன இருக்க ஆளா இருக்கணும். அவ்வளோதான். மத்தபடி அவங்க யாரை காட்டினாலும் நான் கண்ண மூடிட்டு ஓகே சொல்லிடுவேன்..”
என்றோ ஒருநாள் தங்கமீனாள் பிருந்தாவிடம் பேசியது, இன்று இப்போது நினைவில் வந்து தொலைத்து, பிருந்தாவின் நிம்மதியை முற்றிலும் இல்லாமல் செய்தது.
‘ஒருவேளை மீனா ஓகே சொல்லிட்டா..’ என்று நினைக்கும்போதே நெஞ்சு பதறியது.
வினோதநோடு இப்போதே பேசிடவேண்டும் போல இருக்க, அவனின் அலைபேசி எண்ணை இப்போது வரைக்கும் கூட வாங்காமல் விட்ட முட்டாள்தனத்தை எண்ணி மிகவும் நொந்துபோனாள் பிருந்தா.
‘ஷிட்.. சரியான முட்டாள் நீ பிரு..’ என்று தன்னை தானே வைதுகொண்டவளுக்கு, என்ன செய்து இந்த ஏற்பாடுகளை நிறுத்தவது என்று தெரியவில்லை.
ஒருவேளை தங்கமீனாள் சரியென்று சொல்லிவிட்டாள். அப்பா அம்மா சொல்வதை வினோதன் மீறி முடிவு எடுப்பானா என்ன?! பிருந்தாவிற்கு எந்தவொரு முடிவிற்கும் வரவே முடியவில்லை. ஒருவேளை தங்கமீனாள் சரியென்று சொல்லி, பின் வினோதன் வீட்டினில் அவனை கட்டாயம் செய்தால் என்று இப்படி என்னென்னவோ அவளுள் அடுத்தடுத்து ஓடிக்கொண்டே இருந்தது.
இவளுக்கு இப்படியெனில் ப்ரித்விக்கோ மனது கலக்கமாகவே இருந்தாலும் கூட, உள்ளூர பயமெல்லாம் இல்லை. அவனின் தங்காவின் மனம் அவனுக்குத் தெரியாத ஒன்றா என்ன. என்னவொன்று பெரியவர்களின் விருப்பம் என்று வருகையில், வேறுவிதமான பிரச்சனைகள் ஏதேனும் வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற யோசனைதான்.
அவளோடு பேசிய ஆகிடவேண்டும் என்று தோன்ற, மெல்ல எழுந்து தன் அறைக்கு வந்தவன், தங்கமீனாளுக்கு அழைக்க உடனே அவளும் எடுத்துவிட்டாள். எடுத்தவள் ஹலோ என்றுகூட சொல்லவில்லை. ஒருவித நடுக்கத்தோடு ‘மா.. மாமா..’ என்று அழைத்திட,
“ஆர் யூ ஓகே தங்கா..?” என்றான் ப்ரித்வி.
அவளின் மாமா என்கிற அழைப்பே, அவனுக்கு அவளது உள்ளத்து நிலையை காட்டிக் கொடுத்திட, ஓடிச் சென்று அவளை இழுத்து அணைத்துக்கொள்ள வேண்டும்போலவே இருந்தது.
“எங்க போனீங்க நீங்க மாமா? எத்தனை தடவ கால் பண்றது. நா.. நா எத்தன தவிச்சுட்டேன் தெரியுமா..” என, அவளுக்கு ஒரு நெருக்கடி என்றதுமே தன்னை தேடிய மீனாளின் மனதில், அவனுக்கான இடம் என்னதென்று இதற்குமேலுமா அவனுக்கு விளங்காமல் போகும்.
“ஆமா ரிலாக்ஸ் பண்றாங்க. இங்க என்ன நடக்குது தெரியுமா..” என்று அவள் ஆரம்பிக்கும் போதே,
“தெரியும் தங்கா..” என்றவனின் பதில், அவளை ஒருநொடி திகைக்க வைத்தது.
“மாமா..!” என்று அவள் உளர்ந்து போன உதடுகளால் அதிர்ந்து விளிக்க, அவளின் தவிப்பு தாளாமல் “என்ன டி செல்லம்?!” என்று கேட்டுவிட்டான்.
அவளுக்கோ அவனது பேச்சில் தெரியும் நெருக்கம் கூட கூட, இன்னும் தவித்து “உ.. உங்களுக்கு புரியுதா மாமா?! நா.. நான்.. டென்சன் ஆகாம என்ன செய்யட்டும்? வினோ.. நான் அப்படியெல்லாம் நினைக்கவே இல்லை. வினோதனும் அப்படித்தான்..” என,
“பின்ன எதுக்கு இத்தனை பதற்றம் உனக்கு..” என்றவன், குரலை கொஞ்சம் மாற்றி “நான் அங்க வரட்டுமா? உனக்கு ஓகே வா?” என, அவளுக்கோ இன்னும் நெஞ்சம் திக்கென்று தான் அதிர்ந்து.
“வ.. வந்து?!” என்றாள் வேகமாய்.
“வந்து.. உன்ன கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிவிட்டுட்டு வர்றேன்..” என்று அமட்டுக் கடித்துச் சிரிக்க, அவளுக்கும் அது புரியாமல் இல்லை.
ப்ரித்விக்கோ அவள் கொஞ்சம் பேசட்டும் என்று அமைதியாகவே இருக்க, அவனின் அமைதியோ அவளை மேலும் சீண்டி “உங்களைத்தான் மாமா. காது கேக்குதா இல்லையா. செல்லம் வெள்ளம்னு என்ன பேச்சு உங்களுக்கு. எதுக்கு கால் பண்ணீங்க நீங்க?” என்று பேச,
“ஷ்..” என்று தன் காதினை குடைந்தவன் “டென்சனா இருப்பியேன்னு கால் பண்ணா. என்னை இத்தனை பேசுற டி நீ..” என்று அவனும் அடிக்குரலில் பேச,
“டென்சன் ஆகாம..” என்றாள் அவளும்.
“சரி எதுக்கு டென்சன்..?”
“எதுக்கா? என்னாச்சு உங்களுக்கு. நா.. நா என் மனசுல இருக்கிறது என்னன்னு உங்களுக்கு தெரியாதா என்ன? என்ன மாமா?!” என்றவள் ஒருநொடியில் அயர்ந்து போனாள்.
“உன் மனசுல என்ன தங்கா இருக்கு..?” என்றவனுக்கோ, இந்த நேரத்திலாவது தன்மீதான விருப்பத்தினை அவள் நேரடியாய் சொல்லிவிடமாட்டாளா என்கிற ஆசை.
“சரியான கள்ள கோடாங்கி மாமா நீங்க. எந்த நேரத்துல என்ன கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க. இப்போ எதுக்கு போன் பண்ணீங்க?” என்று திரும்ப அவள் சத்தத்தை கூட்ட,
“ஏய்..! ஏய்..! செல்லம் மலை இறங்கு..” என்றான் இறங்கிய குரலில்.
“ம்ம்ச்.. என்ன இப்போ..?” என்று கேட்டவளுக்கு இவன் இப்போது கூட தன்னை புரிந்துகொள்ளாமல் பேசுகிறானே என்கிற பரிதவிப்பு.
“சரி சொல்லு.. என்ன சொல்லணும் உனக்கு..?” என்று கேட்க,
“எனக்கு ஒருமாதிரி டென்சனா இருக்கு..” என்றாள் அவளும் உடனே தணிந்து.
“நான் வந்து மாமாக்கிட்ட பேசட்டுமா?” என்று ப்ரித்வி கேட்க, இதை அவள் கொஞ்சமு எதிர்பார்க்கவில்லை.
“எ.. என்ன பேசப் போறீங்க மாமா?” என்று கேட்க,
“உங்க பொண்ண எனக்கு கட்டி குடுங்கன்னு கேக்குறேன்.. இல்லையா நானும் அவளும் லவ் பண்றோம்னு சொல்றேன்.. இதுல எது உனக்கு ஓகே..” என்று அவன் கேட்டவிதத்தில் கொஞ்சம் மீனாள் ஆடித்தான் போனாள்.
ஆள் பார்க்கத்தான் அமைதி. ஆனால் அவனுள் வேறொரு ப்ரித்வியின் ரூபம் இருக்கிறதுபோல என்று மெல்ல மெல்ல இப்போதுதான் அவளுக்கு புரிகிறது. தங்கமீனாள் எப்போதுமே வெளிப்படையாய் நான் இப்படித்தான் என்று காட்டிவிடுவாள். ஆனால் ப்ரித்வியும் அப்படியே இருந்திட வேண்டும் என்கிற அவசியம் இல்லையே.
அவன் கேட்ட கேள்வியில், அவள் வாயடைத்து நிற்க “சொல்லு தங்கா.. என்ன பேசட்டும். எனக்கு கல்யாணம் பண்ணி குடுங்கன்னு கேட்கவா? இல்லை நாங்க லவ் பண்றோம்னு சொல்லவோ?” என்று திரும்பக் கேட்க,
“மா.. மாமா..” என்றாள் வார்த்தைகளை தேடிக்கொண்டு.
“என்ன தங்கா பேச்சு வரலையா? சரி சொல்லு இப்போ உனக்கு முன்னாடி வந்திருக்க இந்த விஷயம், உன்னால சமாளிக்க முடியாத ஒண்ணா? வினோதன் கிட்ட நீ பேசி புரிய வைக்க முடியாத ஒண்ணா?” என்று கேட்க,
“அப்படில்லாம் இல்ல மாமா. இப்போ நான் எப்படி டென்சனா இருக்கேனோ அதுபோலத்தான் வினோதனும் இருப்பாங்க. பாவம் அவங்க வீட்ல வேற அவங்க மாமா ரொம்ப ப்ரெஷர் போடுறார். அதுனால தான் இந்த விசயமே இப்போ.. நான் பேசினா கண்டிப்பா வினோதனுக்கு புரியும்…” என,
“பின்ன எதுக்கு என் தங்கத்துக்கு இத்தனை டென்சன். நீ கால் அட்டென் பண்ணி மாமான்னு சொன்னதுலயே நீ எத்தனை டென்சனா இருக்கன்னு தெரிஞ்சது. உன்னை ஜஸ்ட் டைவர்ட் பண்ணத்தான் இத்தனை பேசினேன்..” என்று அவனும் சொல்ல,
“ஓ! நான் நார்மலா பேசிருந்தா, சரி நீயே மேனேஜ் பண்ணிக்கோன்னு வச்சிருப்பீங்க. இப்போ என்னடான்னா வீட்டுக்கு வரவா, பொண்ணு கேட்கவான்னு எல்லாம் பேசுறீங்க..” என, லேசாய் சிரித்துக்கொண்டான் ப்ரித்வி.
தங்கமீனாளுக்குமே இப்போது தான் மனதினில் ஒரு அசாத்திய தைரியம். அவளே சமாளித்திருப்பாள் தான், இருந்தும் ப்ரித்வி நான் வருகிறேன் என்று சொன்னதுமே அவளது மன திடத்தின் அளவு கூடிப்போனது. ஒருவித ஆசுவாசம் அவளுள்.
சலசலவென்று பேசிக்கொண்டே இருந்துவிட்டு, இப்போது சட்டென்று இருவரிடமும் ஒரு மௌனம் வந்து குடிகொள்ள, ப்ரித்விக்கு இதிலேயே புரிந்தது தங்கமீனாள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டாள் என்று. முதலில் தங்கா வினோதனிடம் பேசட்டும், அதற்கும் மீறி எதுவும் விசயமென்றால் பார்த்துக்கொள்வோம் என்கிற முடிவில் அவனும் இருக்க, மீனாளுக்கு இதற்கு மேலே என்ன சொல்ல என்று தெரியவில்லை.
‘உன் அப்பாவிடம் வந்து பெண் கேட்பேன்..’ என்று அவன் சொல்லியதே அவளுக்கு அவன் காதலை சொல்லியது போலத்தானே.
‘எப்போ வந்து சொல்றாங்க பாரு..’ என்று இனிமையாய் சலித்துக்கொண்டவள், அமைதியாகவே இருக்க, ப்ரித்வி தான் “இப்போ ஓகே வா?!” என்றான் ஆழ்ந்த குரலில்.
“ம்ம்..” என்பது மட்டும்தான் அவளின் பதிலாய் வர,
“சரி.. அப்படியே வந்து உங்க வீட்டு மாடியில நில்லு. அந்த பக்கமா ஜஸ்ட் ஒரு வாக் வர்றேன்..” என,
“இந்த நேரத்துலையா மாமா?!” என்றாள் மேலும் திகைத்து. தனக்காக வருகிறானே என்றும் இருக்க,
“ஏன் இந்நேரத்துக்கு என்ன? ஐம் ஆன் தி வே..” என,
தங்கமீனாளோ “முன்னாடியே சொல்றதுக்கு என்ன?” என்று கேட்டபடி வேகமாய் அவர்கள் வீட்டு மொட்டைமாடிக்குச் செல்ல, சற்று தொலைவில் ப்ரித்வி வருவது தெரிந்தது.
“அன்னிக்கு போல இன்னிக்கும் ஓடிடாத..” என்று ப்ரித்வி செல்லமாய் கடிந்துகொள்ள,
“மாமா இன்னிக்கும் அந்த வளையல்கார பாட்டி வர்றாங்க..” என்று நிஜம் போலவே மீனாள் சொல்ல, ப்ரித்வி வேகமாய் திரும்பிப் பார்த்துக்கொண்டான்.
தான் சொன்னதை அப்படியே நம்பி, அவன் திரும்பிப் பார்ப்பது கண்டு தங்கமீனாளுக்கு அடக்கமுடியாத சிரிப்பு வர, அவனோ சாலையில் வந்தபடியே அவளை பார்த்து முறைக்க, அழைப்பை துண்டித்துவிட்டு நடந்துவரும் அவனைத்தான் பார்த்துகொண்டு இருந்தாள் தங்கமீனாள்.
இருட்டிடத் தொடங்கி இருந்தாலும், ஓரளவு கொஞ்சம் வெளிச்சமும் இருக்க, ஜில்லென்று காற்றும் மேனி தழுவிச் செல்ல, ப்ரித்வியின் பார்வை மொத்தமும் அவள் மீது இருந்தாலும், சுற்றிலும் ஒருமுறை கவனம் வைத்தும்கொண்டான். தங்கமீனாளுக்கோ நெஞ்சம் நிறைந்து வழிவது போல இருந்தது.
தனக்காகத்தான் வந்திருக்கிறான் என்பது அவளுக்கு உணர முடிய, மீண்டும் அவனுக்கு அழைத்தவள் “வீட்டுக்கு வாங்க மாமா..” என,
“நோ தங்கா.. இப்போ சரி வராது..” என்றவன், அவர்கள் வீட்டிற்கு கொஞ்சம் தள்ளி இருக்கும் ஒரு சிறு சந்தின் முன்னே நின்றுகொண்டான். மேலிருந்து இவள் பார்த்தாள் தெரியும். ஆனால் வீட்டில் இருந்து யாரும் பார்த்தால் ப்ரித்வி நிற்பது தெரியாது.
“ஏ.. ஏன் மாமா..?” என்று அவள் வேகமாய் கேட்க,
“வர்றது பிரச்னை இல்லை. நான் வந்து மாமாவோ இல்லை அத்தையோ இந்த விசயமா எதுவும் பேசினா, நான் அவங்களுக்கு சாதகமாவும் பேச முடியாது. நம்மளதை மறைச்சும் பேச எனக்கு மனசு வராது..” என்று அவன் ஆழ்ந்த குரலில் பேச, அவன் சொல்வதும் மீனாளுக்கு சரியாகவேப்பட்டது.
பார்வை மொத்தமும் அவன் மீது இருக்க, மீண்டும் சில நிமிட பேச்சு அவளுக்கும் சரி, அவனுக்கும் சரி ஒருவித ஆழ்ந்த அமைதியை கொடுத்தது.
‘உன்னை நான் விரும்புகிறேன்..‘ என்று நேரடியாகத்தான் சொல்லிட வேண்டுமா என்ன?!
இதோ.. இதுபோல சிறு சிறு சம்பாசனைகள். சிறு சிறு செயல்கள்.. புரியவைத்துவிடாதா என்ன?!
ப்ரித்வியும் நிறைய பேசினான். பேசிமுடித்து கிளம்புகையில் “நல்லா சாப்பிட்டு, தூங்கி ரெஸ்ட் எடு. எதையும் நினைக்காத. ஒருவேள.. ஒருவேள விஷயம் கைமீறி ஏதாவது போனா, நான் இருக்கேன் சரியா. எதுன்னாலும் பார்த்துக்கலாம். எதுக்கும் நீ யோசிச்சு கலங்க வேண்டியது எல்லாம் இல்லை தங்கா..” என்று அவன் சொல்லி இவள் கேட்டதுமே, தங்கமீனாள் கண்களில் மழுக்கென்று கண்ணீர் துளிர்த்துவிட்டது.
“ம்ம்ம்…” என்றாள் கண்களை துடைத்துக்கொண்டே.
“அழறியா நீ?!” என்று கேட்டவனின் குரலில் சட்டென்று ஒரு கோபம் தெரிய,
“இல்ல இல்ல.. நல்லாத்தான் இருக்கேன்..” என்று ஒரு புன்னகையோடு அவனுக்கு விடைகொடுத்து கீழிறங்கி வந்தாள் தங்கமீனாள்.
இவர்களின் நிலை இதுவெனில் அங்கே பிருந்தாவோ நேரம் செல்ல செல்ல கலங்கித் தவித்தாள். தங்கமீனாளிடம் தன் மனதினை சொல்லிவிடலாம் என்று எண்ணியிருக்க, அவளுக்கோ தனியே சென்று பேசுவதற்கான சந்தர்ப்பமே அமையவில்லை.
ராதா தன் மனதினில் இருக்கும் வருத்தத்தை மறைக்க, மகளோடு அமர்ந்துகொண்டு எதையோ பேசிக்கொண்டே இருந்தார். அதற்குமேலே அழகரசி வேறு. யார் யார் கதைகளை எல்லாமோ இவர்களிடம் பேச, ராதாவிற்கு ஒருநிலைக்கு மேலே பொறுக்கவே முடியவில்லை.
“ஏன் அத்தை மீனாக்கு இப்போதைக்கு கல்யாண பேச்சு எடுக்கக் கூடாதுன்னு தானே ஜோசியர் சொல்லியிருந்தார்..“ என்று கேட்க,
“அது நிஜம் தான் ராதா. இப்போ திரும்ப சந்திராக்கிட்ட பேசினேன். வினோதன் வீட்ல அவங்க தாய்மாமா கொஞ்சம் நெருக்கடி குடுக்கிறார் போல. அவங்க பொண்ண வினோதனுக்கு முடிக்கணும்னு. இங்க கணேசனும் காசியும் இப்படி பேசி வச்சிருந்தாங்க. அதான் பிள்ளைங்க ரெண்டும் பேசி முடிவு சொல்லட்டும்னு நினைச்சு இந்த ஏற்பாடு.
அப்படியே எல்லாம் சரிபட்டு வந்தா, கல்யாணம் ஜோசியர் சொல்றப்போ தான் செய்வாங்க. இல்லைன்னா, வினோதனுக்கு சரின்னா, அவங்க தாய்மாமா பொண்ண பேசுவாங்கன்னு நினைக்கிறேன்..” என்று விபரத்தை விளக்கிச் சொல்ல, அது பிருந்தாவின் மனதில் இன்னும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்தது.
தங்கமீனாளிடம் பேசினால் போதும், இதை சமாளித்துவிடலாம் என்று நினைத்திருக்க, புதிதாய் வந்திருக்கும் மாமன் மகள் வேறு யாரென்றே தெரியாமல் பிருந்தாவை அச்சுறுத்தினாள்.
ராதாவிற்கோ ‘அட கடவுளே..’ என்று ஆனது. பிருந்தாவிற்கு அதற்குமேல் அங்கே இருக்க முடியவில்லை. மெதுவாய் எழுந்து தனது அறைக்கு வந்தவளுக்கோ, ஏதேனும் செய்தே ஆகிட வேண்டிய கட்டாயம் தனக்கு இருக்கிறது என்று நினைத்தாள்.
ஒருமுறையேனும் வினோதனை எண்ணிப் பார்த்து இருக்கலாம். அவன் கண்களில் தான் கண்ட தனக்கான நேசம் நிஜமெனில், அவன் தன்னை இத்தனை தூரம் கலங்கிட விடமாட்டான் என்கிற உறுதி கொண்டு நிம்மதியாய் இருந்திருக்கலாம் பிருந்தா.
ஆனால் அதற்கெல்லாம் முதலில் அவனோடு பேசவேண்டுமே. பேசியிருந்தால் தானே ஒருவித புரிதலும் அவர்களுக்கு இடையில் வந்திருக்கும். வெறும் பார்வை பரிமாற்றத்தை மட்டும் வைத்து, அவனது சூழலும் அங்கே என்னவென்று தெரியாமல் இவள் எந்தவொரு நிம்மதியில் இருப்பது.
அனைத்திற்கும் மேலாய் இனியும் தன் மனதினில் இருப்பதை வினோதனிடம் பகிராமல் இருந்திடவே முடியாது என்கிற துடிப்பு அவளுள். போதும் அமைதியாய் பொறுமையாய் இருந்தது எல்லாம் என்கிற பதபதைப்பு.
‘என்ன நடந்தாலும் சரி மீனாகிட்ட பேசி அவர் நம்பர் வாங்கிடலாம்..’ என்று தன்னை திடம் செய்துகொண்டு தங்கமீனாளுக்கு அழைக்க, அந்த பரிதாபம் அலைபேசி அமர்த்தி வைக்கப்பட்டு இருந்தது.
மீனாளுக்கு ப்ரித்வியோடு பேசும்போதே அலைபேசியில் சார்ஜ் மிக கம்மியாகவே இருக்க, பேசி முடிக்கையில் அலைபேசி தானே கண்ணை மூடி இருந்தது.
“ஷிட்.. இப்போ எதுக்கு இவ போனை ஆப் பண்ணி வச்சிருக்கா..” என்று கடிந்தவளுக்கோ, உள்ளம் கலங்கியது.
‘அண்ணன் கிட்ட பேசலாமா..’ என்று நினைத்தவள், உடனே அதனை கைவிட்டாள்.
எந்த அண்ணன் தான் தங்கையின் காதலை உடனே புரிந்து, ஆதரிப்பான். நிச்சயம் குடும்பத்தில் குழப்பம் வரும். தேவையில்லாமல் எதுவும் செய்யக் கூடாது என்றுதான் ப்ரித்வி சொல்வான் என்று பிருந்தா தானாகவே ஒரு முடிவிற்குவர, அந்த நேரம் பார்த்து போன வருடம் சென்னையில் இருக்கையில் அவளின் தோழி செய்த ஒரு விஷயம் நினைவில் வந்தது.
பிருந்தாவின் கல்லூரி தோழி. நெருங்கிய தோழி என்றும் சொல்லலாம். அவளுக்கும் அவளின் காதளுனுக்கும் ஐந்தாண்டுகளாய் காதல். நீயில்லாமல் நானில்லை என்கிற அளவில் தான் இருந்தார்கள். திடீரென அவளின் தோழியின் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க, அவளும் காதலனைப் பற்றிச் சொல்ல கடும் எதிர்ப்பு.
அங்கே காதலனின் வீட்டிலும் இப்படித்தான் உறவில் யாரையோ பேச, குடும்பத்தின் நச்சரிப்பு தாளாமல் அவனுமே கொஞ்சம் யோசித்து முடிவெடுக்கும் நிலையில் இருக்க, பிருந்தாவின் தோழியோ முதலில் கலங்கி தவித்து அழுதவள், ஒருநாள் இரவில் கையை அறுத்துக்கொண்டாள்.
வீட்டினரும், காதலனும் பின் அவனின் குடும்பமும் பதறியடித்துக்கொண்டு வர, அது இது என்று பஞ்சாயத்து ஆகி, வேறுவழியில்லாமல் திருமணம் செய்துவைத்தார்கள்.
பிருந்தா கூட “ஏன் டி இப்படி பண்ணிட்ட. ஏதாவது ஆகிருந்தா என்ன பண்றது?” என்று வருந்தி கேட்டிருக்க,
“அட.. நான் சாகனும்னு எல்லாம் கட் பண்ணிக்கல. வீட்ல என்ன சொல்லியும் என்னை புரிஞ்சுக்கல. அவனும் அவங்க வீட்ல சொல்றதை மீர முடியாம தவிச்சுட்டு என்ன பண்றதுன்னு என்கிட்டே கேட்டுட்டு இருக்கான். என்னால அவன் இல்லாம வேறொரு வாழ்க்கை எல்லாம் வாழ முடியாதுன்னு தெரியும்தானே. அதான், கையை கட் பண்ணிக்கிட்டேன். ரொம்ப டீப்பா எல்லாம் கட் பண்ணிக்கல. எனக்கு தெரியும் நான் சாகமாட்டேன்னு. ஆனாலும் அந்த நேரத்துல எல்லாத்தையும் சரி படுத்த எனக்கு வேற வழியே தெரியல..” என்று பேசியிருந்தாள்.
இந்த காதல் தான் எத்தனை கிறுக்குத்தனங்களை செய்ய வைக்கிறது என்று அப்போது பிருந்தா நினைத்திருக்க, இப்போது அதே கிறுக்குத்தனத்தை தான் செய்ய துணிந்துவிட்டாள்.