போஸ்ராஜனுக்கு  தன் பிள்ளைகள் மீது அழகரசியின் இந்த கரிசனம் கண்டதும் சிறு வயதில் தன்னிடமும் இப்படித்தானே இருப்பார் என்கிற நினைப்பு வந்து “இதெல்லாம் எங்க இவங்க சாப்பிட்டு இருக்காங்க சித்தி..” என்று சொல்ல,

“சாப்பிட்டு பார்த்தாதானே இதோ அருமை தெரியும் போஸு..” என்றவர் பேரனைப் பார்க்க,

அவனோ பெரியவர் கொடுக்கிறாரே என்று பெயருக்கு ஒருவாய் எடுத்து உள்ளே போட்டுக்கொண்டான். அவன் முகமோ கொஞ்சமில்லை நிறையவே அஷ்டகோணலாய் தான் மாறியது.

அழகரசியோ  “கொஞ்சம் கசக்கும் தான். ஆனா சந்திரா செய்யற பக்குவம் நல்லாருக்கும். அதான் செய்யச் சொன்னேன். நம்ம மீனா பொண்ணு தான் வந்து குடுத்துட்டு போனா..” என்றிட,

‘அட.. நம்ம செல்லம் இதை குடுக்கத்தான் வந்தாளா..’ என்று எண்ணியவனுக்கு, அந்த களியை யாருக்கும் அடுத்து கொடுக்க மனதே இல்லை.

பின்னே அவனின் தங்கா கொண்டு வந்து கொடுத்தது ஆகிற்றே.

ஆனால் அவன் உண்ட வேகம் பார்த்து “என்ன இப்படி முழுங்குறான்..” என்றுதான் அனைவரும் பார்த்தனர்.

மீனாளும் வீடு சென்றுவிட்டாள். வினோதனும் அவனின் வீடு சென்றுவிட்டான்.   ஆனால் நினைத்தது போல, இருவரின் பெற்றோரும் தங்களின் பிள்ளைகளிடம் எடுத்ததுமே இதனை பேசிட முடியவில்லை. காரணம் ஆரம்பத்தில் இருந்தே அழகிய, புரிதலான நட்பினை மட்டுமே முன்னிறுத்தி தங்களின் பிள்ளைகளை வளர்த்தவர்களால், திருமணம் என்ற ஒன்றைப் பற்றி பட்டென்று பேசவே முடியவில்லை அதுதான் நிஜம்.

ஆனால் பேசியும் ஆகவேண்டும் இல்லையா.

அங்கே வினோதன் வீட்டிலோ ஏகப்பட்ட ரகளை. ‘இன்னிக்கு எனக்கொரு முடிவு தெரிஞ்சே ஆகணும்..’ என்று லட்சுமியின் தம்பி அமர்ந்திருக்க, அவர்கள் முன்னிலையில் கணேசனால் வினோதனிடம் பேசவும் முடியவில்லை.

இங்கே மீனாளின் வீட்டிலோ மதியம் வரைக்கும் பொழுதை நெட்டி தள்ளியவர்கள், ஒருவழியாய் மாலையில் அவள் சிறு தூக்கம் களைந்து வரவும் “மீனாம்மா..“ என்ற அப்பாவின் அழைப்பில்

“என்ன ப்பா..” என்று வந்து அமர்ந்தாள்.

சந்திராவும் “எதுவும் சாப்பிடுறியா மீனா?” என்று வினவ,

“இப்போ வேணாம் ம்மா..” என்றவள் “சொல்லுங்கப்பா..” என,

“அதுடா.. உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்..” என்றவர், மனைவியைப் பார்க்க, சந்திராவோ “என்னங்க இன்னும் இழுத்து நிறுத்தி பேசிக்கிட்டு..” என்றுசொல்லி, மகளிடம் ஒரே மூச்சில் அனைத்தையும் சொல்லிவிட, அவளுக்கோ மூச்சு விடவும் மறந்த நிலை..

அப்பா அம்மா இருவரையுமே அதிர்ந்த முகத்தோடு மாறி மாறி மீனாள் பார்க்க, காசிராஜனுக்கு அதிலேயே புரிந்துபோனது மகளின் மனநிலை.

“என்ன மீனா..?” என்று சந்திரா மகளை உலுக்க,

“என்னம்மா இது? நா.. நான்.. நாங்க.. வினோதன்.. நான் அப்படில்லாம் இல்ல..” என்று வேகமாய் மறுக்க,

“அட உங்களை நாங்க அப்படி சொல்லவே இல்லை டா. எங்களுக்கு இப்படியொரு ஆசை..” என்ற காசிராஜன், கணேசன் பேசியதையும் சேர்த்து சொல்ல, மீனாவிற்கு குப்பென்று வியர்த்துவிட்டது.

முதலில் ப்ரித்வியும் அவளுமே இன்னும் மனம் விட்டு பேசவில்லை. வீட்டினில் இப்போதைக்கு திருமணம் பற்றிய பேச்சில்லை என்பதால் அவள் கலக்கமில்லாமல் சுற்றிக்கொண்டு இருந்தாள். ஆனால் இப்போது திடீரென்று திருமணப் பேச்சும், அதுவும் வினோதனோடு என்பதும் அவளால் அந்த அதிர்ச்சியை தாங்கவே முடியவில்லை.

சந்திராவோ “இதென்ன நீங்க இத்தனை விளக்கம் சொல்லிட்டு இருக்கீங்க. நம்ம தப்பா எதுவும் சொல்லலையே..” என்று கணவனிடம் பேசியவர் “நீயும் வினோதனும் பேசி முடிவு பண்ணுங்க மீனா..” என,

“ம்மா.. இதுல பேச எதுவுமில்லை  என் மனசுல அப்படியொரு எண்ணமே இல்லை. வினோதனுக்கும் அப்படித்தான்..” என்று மறுக்க,

“சரி டி.. நீ சொல்றது எங்களுக்கும் தெரியும். இப்போ ரெண்டு வீட்டு பெத்தவங்களும் எங்களோட விருப்பத்தை சொல்றோம். என்னிக்கு இருந்தாலும் நீங்க கல்யாணம் பண்ணித்தானே ஆகணும். இதேது தெரிஞ்ச குடும்பம், தெரிஞ்ச பையனா இருந்தா வேண்டாங்குதா? அதை மனசுல வச்சு யோசிக்கலாம் இல்லையா..” என,

“ம்மா எனக்கு இந்த பேச்சே பிடிக்கல..” என்று முகத்தை சுளித்துவிட்டாள் மீனாள்.

இதே கதைதான் ஆக்னே வினோதன் வீட்டிலும். முடியவே முடியாது என்கிற மறுப்புதான் அவனிடமும் திண்ணமாய்.

“சரி உனக்கு இல்லை.. ஒருவேளை வினோதன் வீட்ல இதை சொல்லவும், அவன் யோசிக்கலாம் இல்லையா..” என்று இங்கேயும்,

“மீனா யோசிக்கலாம் இல்லையா. பேசி பாக்குறதுல தப்பில்லையே..” என்று அங்கேயும் பெரியவர்கள் பிள்ளைகளுக்கு புரிய வைக்க முயன்றுகொண்டு இருக்க,  வினோதனுக்கும், மீனாவிற்கும் நன்கு புரிந்துபோனது.    

நாங்கள் இருவரும் பேசிவிட்டு முடிவு சொல்லாமல், இவர்கள் எதையும் ஏற்கப் போவதில்லை என்பது. மீனாவிற்கோ, தன் மனதில் இருப்பதை வினோதனிடம்   சொல்வதற்கு எவ்வித தயக்கமும் இல்லை. நிச்சயம் அவன் தன்னை புரிந்துகொள்வான் என்கிற நம்பிக்கை அவளுக்கு உண்டு. அதுபோலவே தான் அவனுக்கும் இருந்தது.

அதனால் தைரியமாகவே “சரி.. பேசிட்டு சொல்றோம். ஆனா எங்களுக்கு சரின்னு தோணிச்சுன்னா மட்டும் தான் எதுவும்..” என்று சொல்லிவிட்டே சம்மதம் சொன்னார்கள்.

மகள் சரி என்று சொல்லவும் தான் காசிரஜனுக்கும் சந்திராவிற்கும் ஒரு நிம்மதியே வந்தது. ஆனால் மனதில் தைரியம் இருந்தாலும் மீனாவிற்கு ஒருவித சங்கடம். மனதினில் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்க, அவளுக்கோ மனது ப்ரித்வியை தேடியது.

இமைகளை அழுந்த மூடித் திறந்தவள், அவனுக்கு அழைத்துப் பார்க்க ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்..’ இருப்பதாய் பதில் கிடைக்க “ம்ம்ச்..” என்று ஒருவித சலிப்புடன் அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்டாள். இருந்தும் அடிக்கடி அவனுக்கு அழைத்துப் பார்த்துக்கொண்டே தான் இருந்தாள்.

மகள் அறையிலேயே இருப்பது கண்டு, காசிராஜன் கூட “அவளை போர்ஸ் பண்றோமா?” என்று மனைவியிடம் கேட்க,

“திடீர்னு சொல்லவும் அவளுக்கு ஷாக் தான். அதான் இப்படியிருக்கா. கொஞ்ச நேரத்துல நார்மல் ஆகிடுவா..” என்றிட,

“சரி நான் அத்தை மாமாக்கிட்ட சொல்லிடுறேன்..“ என்று வேம்பரசனுக்கு அழைப்பு விடுக்க, அவரோ வெளியில் இருப்பதாய் சொல்ல, அடுத்து அழகரசிக்கு அழைத்துவிட்டார் காசிராஜன்.

அழகரசியும் ராதாவும் அமர்ந்திருக்க, ப்ரித்வியும் போஸ்ராஜனும் அப்போதுதான் சூளையில் இருந்து வந்திருக்க, பிருந்தா இருவருக்கும் குடிப்பதற்கு டீ கொண்டு வந்து கொடுத்துவிட்டு அங்கேயே அமர்ந்துகொள்ள, அப்போது பார்த்துதான் காசிராஜன் அழகரசிக்கு அழைத்து விசயத்தைச் சொன்னது.

“அப்படியா ரொம்ப சந்தோசம். திடீர்னு சொல்லவும் புள்ள தான் கொஞ்சம் அரண்டு போயிருப்பா. நல்லதே நடக்கும் காசி. உன்னோட முடிவு தப்பா போகாது. கண்டிப்பா ரெண்டு பேரும் பேசிட்டு சம்மதம் சொல்வாங்க.” என்று பேசிவிட்டு வைத்தவர்,

ராதாவிடம் “நான் அன்னிக்கு சொன்னேன்ல நம்ம மீனாள வினோதனுக்கு குடுக்கணும்னு காசிக்கும் சந்திராவுக்கும் விருப்பம்னு. கணேசன் வீட்லயும் அதேதான். இன்னிக்கு எல்லாம் பேசி முடிவு பண்ணிருக்காங்க போல..” அதைக் கேட்ட ராதாவிற்கும், ப்ரித்விக்கும், பிருந்தாவிற்கும் நெஞ்சடைத்த உணர்வு.

அழகரசி பேசும்போது ப்ரித்வி தன் அலைபேசியை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். தங்கமீனாளிடம் இருந்து ஏகப்பட்ட தவறிய அழைப்புகள்.

‘என்ன இத்தனை கால் பண்ணிருக்கா..’ என்று நினைக்கும்போதே பாட்டி இப்படி சொல்லவும், அவனுக்கு ஒருமாதிரி ஆகிப்போனது.

பிருந்தாவோ ‘முடிவு பண்ணிட்டாங்க..’ என்று சொல்லவுமே மூச்சடைத்த நிலை.

‘ஐயோ..!’ என்று நெஞ்சை கசக்கி பிழிவது போல ஒரு வலி.

ராதாவிற்கோ பெருத்த ஏமாற்றம். ஆனால் மூவருக்குமே இதனை இந்த நொடி வெளிக்காட்டிட முடியாதே. பதிலுக்கு எதுவும் பேசாமல், என்ன கேட்பது என்றுகூட தெரியாமல் மூவரும் இருக்க, போஸ்ராஜனோ “பரவாயில்ல.. நல்ல முடிவுதான் சித்தி…” என்று சொல்ல,

“இல்லையா பின்ன.. பெத்தவங்க பேசி முடிவு பண்ணிட்டாங்க. நாளைக்கு சின்னதுங்க ரெண்டும் பேசட்டும்னு இருக்காங்களாம்..” என்றதுமே ப்ரித்விக்கு கொஞ்சம் நிம்மதியானது.

ஆனால் பிருந்தாவோ ‘முடிவு பண்ணிட்டாங்க..’ என்பதிலேயே மற்றது எதையும் உணரும் நிலையில் இல்லை.