ராதாவும், அழகரசியும் ப்ரித்வியை கேட்டிருக்க “தூங்குறான் அவன்..” என்றவனைத் தான் விசித்திரமாய் இருவரும் பார்த்தார்கள்.

அறைக்குள் வந்தவனோ நண்பன் அப்போது தான் எழுந்தமர்ந்து, அதுவும் அலைபேசியைப் பார்த்து தானாய், தனியாய் சிரித்துக்கொண்டு இருப்பவனைப் பார்த்து “டேய் மச்சா..” என்று அழைத்தபடி நெருங்க, ப்ரித்வி வேகமாய் அலைபேசியை கவிழ்த்து வைத்துவிட்டான்.

“டேய் டேய் போதும்டா போதும்..” என்ற ரித்திக் “நீ தூங்கிட்டு இருக்கன்னு சொன்னா, உங்க அம்மாவும், பாட்டியும் என்னை வித்தியாசமா பாக்குறாங்க..” என்று குறைபட,

“ஓஹோ..!” என்றவன் “பிரெஷ் ஆகிட்டு வர்றேன்..” என்று சொல்லிக்கொண்டே குளியலறைக்குள் நுழைந்துகொண்டான்.

மனதோ ‘தங்காவ பார்க்கணும்..’ என்று முணுமுணுத்துக்கொண்டே இருக்க ‘எப்படி பாக்குறது?!’ என்று தனக்கு தானே கேட்டும் கொண்டான்.

இதே யோசனையோடு ஒரு சிறு குளியலைப் போட்டு, உடைமாற்றி வரவேற்பறைக்கு வர, அம்மாவும் ஆச்சியும் மிக தீவிர அன்றைய சமையல் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

“குட் மார்னிங் பாட்டி.. குட் மார்னிங் ம்மா..” என்றவனை பார்த்த பெண்களோ

“என்ன ப்ரித்வி இத்தனை நேரம் தூக்கம்?” என்று வினவ,

“நைட் தூங்க கொஞ்சம் லேட்டகிருச்சு பாட்டி..” என்றவன் “ம்மா காபி..” என,

ராதாவோ அவன் கேட்பதற்கு முன்னேயே “கற்பகம்..” என்று குரல் கொடுத்து இருந்தார்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் அவனுக்கு குடிப்பதற்கு காபி வந்து சேர்ந்திருக்க, ராதாவோ அழகரசியிடம் “நேத்தே எல்லாம் நான்வெஜ் தானே அத்தை சாப்பிட்டோம்.. இன்னிக்கு சிம்பிளா ஏதாவது செஞ்சிப்போமே..”என்று சொல்ல,

“அதுவும் சரிதான்.. வெறும் உப்பு பருப்பும் சுடு சோறுமே சொர்கமா இருக்கும்.. நல்லா சீரகம் மிளகு தட்டிப்போட்டு தக்காளி ரசம் வச்சா இன்னும் அருமையா இருக்கும்..” என்ற பாட்டி

“ஏன் ப்ரித்வி உன் கூட்டாளி இன்னிக்கு ஊருக்கு கிளம்புறானாம்.. நல்லா எண்ணெய் தேச்சு ஊரவச்சுட்டு கும்பக்கரையில போய் ஒரு குளியலை போட்டுட்டு வரலாம் தானே..” என.

அங்கே வந்த பிருந்தாவோ “சூப்பர் பாட்டி. எல்லாரும் கூட போகலாம். நாங்க வந்தும் கூட அங்க போகலை தானே. மீனாவும் சொல்லிட்டு இருந்தா. போகலாம்னு..” என்றிட, ப்ரித்விக்கு மனதிற்குள் பல்ப் எரிந்தது.

“ஆச்சி நேத்து விருந்துக்கு போயிட்டு வந்தது, எல்லாருக்கும் டயர்டா தானே இருக்கும். ரித்திக்கும் கிளம்புறான். எல்லாருமே சேர்ந்து கும்பக்கரை போலாமே.. காசி மாமா வீட்ல சொல்லிடுங்க..” என்று எடுத்துக் கொடுக்க,

“இதுவும்  நல்ல யோசனை தான். ஆனா நானோ தாத்தாவோ எல்லாம் வர முடியாது ப்ரித்வி. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க. சமைச்சு எடுத்துட்டுப் போனா, குளிச்சிட்டு சாப்பிட நல்லாருக்கும். ஆனா என்ன நல்லா குளிச்சிட்டு கவுச்சி சாப்பிட்ட தான் அதுவும் நல்லாருக்கும்..” என்று சிரித்தார் ஆச்சி.

“நேத்து சாப்பிட்டதே போதும்..” என்று ராதா மறுக்க,

“அட உனக்கு வேணாம்னா இரு. பசங்க சாப்பிடட்டும்…” என்றவர் “ப்ரித்வி நான் சொன்னா சந்திரா வேணாம் அது இதுன்னு எதாவது சொல்லுவா. நீயே பேசு காசிக்கிட்ட. இங்க கற்பகத்த சமைக்க சொல்றேன். எல்லாரும் போயிட்டு வாங்க..”  என, பிருந்தாவிற்கோ ஏக மகிழ்ச்சி.

ராதாவோ போஸ்ராஜனிடம் சொன்னால் ஏதேனும் மறுப்பார் என்று தெரியும். இருந்தும் எல்லாரும் ஒன்றாய் சென்று வந்தால் நன்றாகவே இருக்கும் என்று எண்ணியவர் “இரு ப்ரித்வி. அப்பாக்கிட்ட எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுட்டு வர்றேன்..” என்று கணவரிடம் போய் நிற்க,

போஸ்ராஜனோ “நேத்து சுத்திட்டு வந்தது எல்லாம் போதாதா?!” என்றார் கண்டிப்புடன்.

“அது.. அதுங்க.. ரித்திக் ஊருக்கு போறான். நம்ம பசங்களும் எங்கயும் போகல..” என்று இழுக்க, போஸ்ராஜன் பார்த்த பார்வையில் “இதெல்லாம் சின்ன சின்ன சந்தோசம் தானே..” என்றார் உள்ளே போன குரலில்.

“இங்க வரவும், உங்க எல்லாரோட போங்கே மாறிடுச்சு. எதுவும் எனக்கு சரியா படல. நாளைக்கு ஏதாவது பிரச்னைன்னு வந்து நில்லுங்க, அப்புறம் இருக்கு பார்த்துக்கிறேன்.. எந்நேரம் பாரு கூட்டு சேர்ந்துட்டு சுத்துறது. இப்போ பசங்களையும் உன்னோட சேர்த்துக்கிட்ட..” என்று கடிய, ராதா கையை பிசைந்து கொண்டு நின்றார்.

“முகத்தை இப்படியே வைக்காத.. நாம இங்க எந்த சூழ்நிலைல வந்திருக்கோம்னு நினைப்பு இருக்கா இல்லையா?! நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு சுத்திட்டு இருக்க ராதா. எதோ சித்தப்பாவும் சித்தியும் வந்ததும் தொழில் குடுத்ததுனால ஆச்சு. இல்லைன்னா என்ன செய்றது? நேத்து தானே வெளிய போயிட்டு வந்தது எல்லாம். இன்னிக்கு எங்கயும் யாரும் கிளம்பக் கூடாது.. ப்ரித்விக்கு வேணும்னா அவனும் அவன் பிரண்டும் போயிட்டு வரட்டும்..” என்று போஸ்ராஜன் மறுத்துவிட்டார்.

ராதாவின் வாடிய முகம் பார்த்தே, அனைவருக்கும் புரிந்துபோனது என்ன நடந்திருக்கும் என்று. பிருந்தா பாவமாய் அம்மாவைப் பார்க்க ப்ரித்வியோ “லீவ் இட் ம்மா.. இன்னொரு நாள் போலாம். வேணும்னா எல்லாருக்கும் சேர்த்து இங்க சமையல் பண்ணுங்க. நான் காசி மாமா வீட்ல சொல்லிட்டு வர்றேன். அவங்களுக்கும் டயர்டா தானே இருக்கும்..” என்றவன், பாட்டியைப் பார்க்க,

“சரிப்பா..” என்று முடித்துக்கொண்டார்.

அப்பாவின் செயல்கள் மீது வருத்தம் இருந்தாலும், இருக்கும் அமைதியான சூழலை ப்ரித்வி கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அவனுக்கு தேவையெல்லாம் மீனாவை பார்க்கவேண்டும். அதுபோதும்.

அதனால் ரித்திக்கிடம் “காசி மாமா வீடு வரைக்கும் போயிட்டு வந்துடுறேன் டா.. வந்து வெளிய போலாம்..” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

எப்படியோ அவளை ஒருமுறை பார்த்துவிட்டால் போதும் என்பது தான் அவனுக்கு போதுமானதாய் இருக்க, அங்கே போனாலோ அவளைக் காணோம். அதன்பிறகு அவள் கொடுத்த தரிசனமோ அவனை வேறொரு வகையில் திணறச் செய்துவிட்டது.

மீனாள் உள்ளே ஓடியிருக்க, ப்ரித்வியோ தான் வந்த சங்கதி இன்னதென்று அத்தையிடமும், மாமாவிடமும் சொல்ல, காசியோ “அட இதுனால என்ன ப்ரித்வி.. இன்னிக்கு ஒருநாள் தான் நாங்க மூணுபேரும் வீட்ல இருக்கிறதே.. நீ வந்து கூப்பிட்டதுல சந்தோசம் தான். பாரு வீட்ல எல்லாம் போட்டது அப்படியே இருக்கு..” என்று சொல்லிவிட்டு மனைவியைப் பார்த்தார்.

சந்திராவும் “ஆமா ப்ரித்வி.. சங்கடம் வேணாம்.. வீட்லயும் நிறைய வேலை இருக்கு. இதோ இந்த மீனாவும் இத்தனை லேட்டா எந்திரிச்சு இருக்கா. நீயும் மனசுல எதுவும் வச்சுக்காத..” என்று சொல்லிட, ப்ரித்விக்கு அதற்குமேல் அவர்களிடம் என்ன பேச என்று தெரியவில்லை.

 “ரித்திக் இன்னிக்கு ஊருக்கு கிளம்புறான். அதான் வெளிய போலாம்னு ப்ளான் பண்ணோம். அடுத்து சரி வீட்ல எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்னு நினைச்சு தான் கூப்பிட வந்தேன்..” என்று ப்ரித்வி சொல்ல,

“இப்போ என்ன, நீங்களும் இங்கன தானே இருக்கப் போறீங்க. இன்னொரு நாள் பார்த்துக்கலாம் ப்ரித்வி..” என்ற சந்திராவிடம் அதற்குமேல் அவனுக்கு ஒன்றும் பேசுவதற்கு இல்லை என்பதாகவே இருந்தது.

மனதினில் தலைதூக்கும் ஏமாற்றதோடும், இப்போதைக்கு அவள் வரப்போவதில்லை என்கிற சின்ன கோபத்தோடும் ப்ரித்வி கிளம்பிட, தங்கமீனாளோ  வேக வேகமாய் குளித்து, உடைமாற்றி தன்னை சீர் செய்துகொண்டு வந்தவளுக்கு அவன் இல்லை என்றதும் முகம் வாடித்தான் போனது.

‘அதுக்குள்ளே என்னவாமாம்..’ என்று சலித்துக்கொண்டவள், நொடியினில் வேகமாய் மாடிக்குச் செல்ல

“ஏய் மீனா எங்க போற?!” என்கிற அம்மாவின் குரலுக்கு,

“செடிக்கெல்லாம் தண்ணி ஊத்திட்டு வர்றனே ம்மா..” என்றவளின் பதிலில் கணவரைத் தான் பார்த்தார் சந்திரா.

“ஆமா நானும் காலைல தண்ணி விடல சந்திரா..” என்ற காசி நகரந்துவிட,

மாடியேறிய மீனாளோ வேகமாய் ப்ரித்வி செல்லும் வழி கண்டு அந்த பக்கம் பார்க்க, நடந்து செல்லும் அவனின் பின்புற தோற்றமே அவளுக்குத் தெரிந்தது. கொஞ்சம் சத்தமிட்டால் கேட்கும் தூரம் தான். ஆனால் சத்தமிட்டு அழைக்க முடியுமா என்ன?!

‘அச்சோ போறாங்களே..’ என்று பார்த்தவளுக்கு, என்ன செய்வது என்றும் தெரியவில்லை. அழைப்போமா என்று நினைத்தாலும் எப்படி அழைப்பது.

‘திரும்பி பாருங்க.. திரும்பி பாருங்க ப்ரித்வி மாமா..’ என்று உறுப்போட்டபடி அவள் நிற்க, ப்ரித்விக்கு என்ன தோன்றியதோ சட்டென்று திரும்பிப் பார்த்தவன், மாடியில் நின்று அவனையே பார்த்துக்கொண்டு இருந்த மீனாள் கண்ணில் படவும், பட்டாசாய் வெடித்துச் சிதறும் உற்சாக ஊற்று.

‘வா…’ என்பது போல் வேகமாய் ப்ரித்வி சைகை செய்ய, மீனாளோ வேகமாய் மாட்டேன் என்று தலையை அசைக்க, அடுத்து ‘போன் பண்ணு..’ என்று ப்ரித்வி சைகை செய்ய,

அவன் பின்னேயோ “என்ன பேராண்டி காத்துல யாருக்கு சைகை பண்ணிட்டு இருக்கீங்க..” என்று கேட்டது வேராரும் இல்லை.

அன்றொரு நாள் பார்த்த அதே வளையல்காரப் பாட்டி.

‘மாட்டின ப்ரித்வி..’ என்று நினைத்துக்கொண்டே, மாடியைப் பார்க்க அங்கே மீனாள் இருந்தால் தானே.

“அ.. அது..” என்று ப்ரித்வி விழிக்க “சரி சரி.. மச்சானாச்சு.. முறைப்பொண்ணு ஆச்சு.. அவ எங்க நின்னா, சிட்டா பறந்துட்டா..” என்றபடி அந்த பாட்டியும் நகர்ந்து விட,

“அட அப்படில்லாம் இல்ல பாட்டி..” என்றவன் சொல் காற்றோடு கலந்தது.