எத்தனை முறை கண்ணிமைகளை சிமிட்டி சிமிட்டி, ப்ரித்வி கேட்டனுப்பியிருக்கும் கேள்வியை படித்திருப்பாளோ தெரியவில்லை. எத்தனை முறை படபடக்கும் நெஞ்சத்தினை நீவி நீவி, நீர் அருந்தி பெருமூச்சினை வெளியிட்டாளோ, அதுவும் தெரியவில்லை. வியர்க்கிறதா, வியர்க்கவில்லையா என்று தெரியாமலே, கழுத்தையும் நெற்றியையும் எத்தனை முறை துடைத்துக்கொண்டாளோ தெரியவில்லை.
கிட்டத்தட்ட ஒருமணி நேரமாய் தங்கமீனாள் இதனைத்தான் செய்துகொண்டு இருந்தாள். ப்ரித்வியிடம் இருந்து இப்படியொரு கேள்வி வந்து நிற்கும் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. அதிலும் அவன் இத்தனை பிடிவாதக்காரனாய் இருப்பான் என்றும் நினைக்கவில்லை.
ஆனாலும் இவையெல்லாம் ஒரு அழகிய இம்சையாய், அவள் இதயத்திற்குள் புதிதான ஒரு உணர்வையும், உற்சாகத்தையும் பாய்ச்சுவதாய் இருந்தது. அவன் கேட்டிருக்கும் கேள்வியின், நேரடி அர்த்தம், மறைமுக அர்த்தம், உள்ளர்த்தம், வெளியர்த்தம் என்று எப்படிச் சுற்றி சுற்றி யோசித்தாலும், அதன் அர்த்தம் ஒன்றே ஒன்றுதான்.
அவளின் வெட்கம் அவனுக்கு சொந்தமாகிட வேண்டுமாமே?!
அம்மம்மா…!
மீண்டும் தங்கமீனாளின் மனது ஒரு அதிர்வை கண்டுகொண்டது.
‘என்ன கேட்டுவிட்டான்..’ என்று உதடு வளைத்தாலும், அதற்கு உடனே எல்லாம் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
சொல்லிடத்தான் முடியுமா என்ன?!
அது அவனுக்கும் தெரியும். அவளிடம் இருந்து உடனடியாக இல்லை, பதிலே வராது என்பதும் அவனுக்குத் தெரியும்.
மீனாளைப் போலத்தான் ப்ரித்வியும், அவன் கேட்டிருந்த கேள்வியை எத்தனை முறை படித்திருப்பானோ தெரியவில்லை. இதுநாள் வரைக்கும் கவிதை எதுவும் எழுதியிருக்கிறானா என்றால் அது இல்லவே இல்லைதான். கவிதைகள் பக்கம் பார்வை கூட சென்றது இல்லை. ஆனால் அவளிடம் அவன் கேட்ட கேள்வி, இந்த நொடி அவனுக்கு அது கவிதையாகவே தெரிந்தது.
அவள் கண்டுவிட்டாள் என்பதற்கான அடையாளம் தெரியவும், இன்னும் கொஞ்சம் தித்திப்பான பதற்றம் அவனுள்.
‘கேவலமா திட்டிடுவாளோ?!’ என்கிற பயமும் ஒருபுறம்.
‘அதெல்லாம் திட்டமாட்டா…’ என்கிற ஒரு அசட்டு தைரியமும் ஒருபுறம்.
‘ஒருவேளை திட்டிட்டா?!’ என்று அவனது மனதே கேள்வி கேட்க ‘திட்டினா திட்டிக்கட்டும். நீதானே வெட்கப்பட்ட, அதனால தான் கேட்டேன்னு சொல்லிடுவேன்..’ என்று அந்தநேரத்தில் கூட கெத்தாக, மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல அவன் எண்ணங்கள் இருக்க, தானாய் சிரித்தும் வைத்தான்.
ரித்திக் நண்பனை கண்டும்காணமல் இருந்துகொள்ள, ப்ரித்விக்கோ அவளிடம் இருந்து பதில் வராது என்று தெரிந்தாலும் கூட, ஒவ்வொரு நொடியும் இம்சையாய் நகர்ந்தது. ட்ரிம் செய்யப்பட்டிருந்த மீசையை கொஞ்சம் அழுத்தமாய் நீவிக்கொண்டவன், கேசத்தையும் அழுந்த கோதிக்கொள்ள, நெஞ்சுக்குள்ளே கதகதப்பாய் ஓர் உணர்வு.
சிறிய முள்ளும், பெரிய முள்ளும் எத்தனை முறை முத்தமிட்டு காதல் கொண்டு, அவர்களின் கடிகார உலகத்தை சுற்றி சுற்றி வந்தாலும், அவளும் பதில் சொல்லிடப் போவதில்லை. அவனுக்கோ அவளிடம் இருந்து பதில் வராமல் உறக்கம் வரும்போல என்றும் தெரியவில்லை.
‘என்னடா இப்படி கேட்டு வச்சிட்ட..?!’ என்று தன்னை தானே கேட்டுக்கொண்டவன், மீண்டும் அவள் புகைப்படத்தில் புதைந்துவிட்டான்.
இம்முறை இன்னும் ரசிப்பும், உரிமையும் கூடிப்போனதாய் இருந்தது. சிறிதும் லஜ்ஜையின்றி அவளின் மீது பார்வை பரந்து நகர்ந்தது. நேரம் கூட கூட, அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றதுமே, கொஞ்சம் அவளை சீண்டிட ஆசை பிறந்தது பரிதவிக்கு. அப்படிச் செய்து அவளை கோபமுறச் செய்தால் ஏதேனும் பேசுவாளோ என்று எண்ணியவன், அடுத்து வேண்டுமென்றே அவனது புகைப்படம் ஒன்றினை அவளுக்கு அனுப்பிவைத்தான்.
அலைபேசியில் அவனிடம் இருந்து என்னவோ வந்திருக்கிறது என்று பார்த்தவள், புகைப்படம் என்றதுமே அவளததைத் தான் அனுப்பியிருப்பான் என்று எண்ணிக்கொண்டே அதனை எடுத்துப் பார்க்க, வந்திருப்பதோ அவனது அழகியப் படம் ஒன்று.
‘அம்மாடியோ..!’ என்று மீண்டும் நெஞ்சில் கை வைத்து, திகைத்து விழித்துக்கொண்டு இருந்தாள் மீனாள்.
‘என்ன இப்படில்லாம்..’ என்று அதற்குமேல் அவளால் யோசிக்கவே முடியவில்லை.
இவர்களின் இந்த செயல்களுக்கான பாதை எதை நோக்கி எங்கே செல்கிறது என்று அவளுக்குத் தெரியாமல் இல்லை. காதல் என்கிற மேகமூட்டம் சூழ்ந்த பின்னே, அங்கே வேறெதையும் சிந்திக்கும் செயல்கள் எல்லாம் மந்தமாகிவிடுமே. அப்படித்தான் ஆனது மீனாளுக்கும், ப்ரித்விக்கும்.
அவரவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் மீதெல்லாம் இப்போது கவனமில்லை இருவருக்கும். மற்றவர் பற்றிய சிந்தனைகள் மனம் முழுவதும் கிளைவிட்டு வாசம் பரப்பிக்கொண்டு இருந்தது.
தங்கமீனாள் ப்ரித்வியின் புகைப்படத்தைப் பார்த்து முதலில் அதிர்ந்து திகைத்தாலும், பின்னே ஒரு மெல்லிய சிரிப்போடு அதனையே கொஞ்சம் பெரிதாக்கி பார்த்துக்கொண்டிருந்தாள். ஏன், எதற்கு என்கிற கேள்விகளுக்கான பதிலெல்லாம் எங்கோ ஓடிப்போக ‘நான் பார்க்காம வேற யார் பார்ப்பாங்களாம்..’ என்கிற உரிமையுணர்வு வந்து அவளுள் புகுந்துகொண்டது.
தான் அனுப்பிய தன்னுடைய புகைப்படத்தையும் அவள் பார்த்துவிட்டாள் என்று தெரிந்ததும் இன்னும் மலர்ந்த மென்னகை ப்ரித்வி முகத்தினில்.
தன் அலைபேசியில் இருந்த அவளைக் கண்டவனோ ‘செல்லம்…’ என்று கொஞ்சிக்கொண்டான். ஒரு இனிய பாரம் அவன் நெஞ்சம் உணர, அவளே பேசட்டும் என்று நினைத்துக்கொண்டே, உறக்கத்திற்கு தயாராகினான்.
தங்கமீனாளும் கூட அப்படித்தான். தான் ஒன்றும் பதில் அனுப்பாமல் போனாலும், அவன் ஒன்றும் தவறாய் எண்ணிடமாட்டான் என்கிற நம்பிக்கை எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. அலைபேசியில் தெரியும் அவனின் புகைப்படத்தில், லேசாய் அவனது மூக்கினை பிடித்து ஆட்டுவது போல செய்தவள் ‘அழகா இருக்கீங்க ப்ரித்வி மாமா..’ என்று சொல்லிக்கொண்டே தான் கண்களை மூடினாள்.
பொழுது எப்போது விடிந்தது என்று யாருக்குத் தெரியும். தங்கமீனாளிற்கு நல்ல உறக்கம். சந்திரா வந்து எழுப்பியும் கூட முதலில் அவள் எழவில்லை.
காசிராஜனும் “விடு சந்திரா.. எழும்போது எழுந்துக்கட்டும்..“ என்று மனைவியிடம் சொல்ல,
“அதுசரி.. அலுப்பு சலுப்பு எல்லாம் எனக்கும்தானே இருக்கும். அத்தனை துணி இருக்கு மெசின்ல போட. நாளைக்கு வேணுங்கற ட்ரெஸ் எல்லாம் அயர்ன் பண்ணிக்கணும் இல்லையா. அந்த வேலையும் நான் தான் செய்யணுமா? என்னவோ நீங்க உங்க பொண்ணுக்கு ரொம்ப செல்லம் குடுக்குறீங்க..” என்று கணவரிடம் லேசாய் கடிந்தபடி, மீண்டும் அவளை எழுப்பிடச் செல்ல, சரியாய் அந்த நேரத்தில் ப்ரித்வி அங்கே வந்து சேர்ந்தான்.
மகளின் அறைக்குள் செல்லப் போன சந்திராவோ ப்ரித்வியை கண்டதும் “வா ப்பா ப்ரித்வி..” என்று வரவேற்க,
காசியும் “அட வா மாப்ள..” என்று அவரும் வரவேற்க, இருவரையும் பார்த்து தலையை லேசாய் ஆட்டி புன்னகை செய்தவன் “குட் மார்னிங்..” என்றும் சொல்ல,
“குட் மார்னிங் ப்ரித்வி.. வா.. வா வந்து உக்காரு..” என்று அமரவைக்க,
சந்திராவோ “காபி எடுத்துட்டு வர்றேன்..” என்று நகர,
“அத்தை இல்ல வேண்டாம்.. இப்போதான் எழுந்து குடிச்சிட்டு வர்றேன்..” என்றவன் “நேத்து விருந்து நிஜமா ரொம்ப நல்லா இருந்தது..” என்று மனதார சொல்ல, பெரியவர்கள் இருவருமே அதனை ஆமோதித்து ஒரு புன்னகை செய்துகொண்டனர்.
ப்ரித்விக்கோ பார்வை அங்கே இங்கே என்று பிறர் அறியாபடி மீனாளை தேட, அவள் வீட்டினில் இருக்கும் அரவம் கொஞ்சம் கூட தெரியவில்லை.
‘எங்கயும் வெளிய போயிட்டாளோ..’ என்று நினைக்கும்போதே, சந்திரா அவனுக்கு கஷாயம் போல ஒன்றினை கொண்டு வந்து கொடுத்தார்.
என்னதிது என்று கேள்வியாய் பார்த்துக்கொண்டே கையினில் டம்ப்ளரை வாங்கிவிட்டு, அவரைப் பார்க்க “கஷாயம் தான் ப்ரித்வி.. ஜீரணத்துக்கு குடிக்கிறது..” என்று அவர் சொல்ல,
காசியோ “நம்பி குடிக்கலாம் ப்ரித்வி.. ஞாயிற்றுகிழமைன்னா போதும் உங்கத்தை முதல்ல இதை குடிக்க சொல்லிடுவா…” என்று சொல்ல,
“ம்ம்..” என்று தலையை ஆட்டியவன் ‘தங்கா.. உன்னப் பார்க்கலாம்னு வந்தா, கஷாயம் குடிக்க வச்சிட்டியே..’ என்று மனதிற்குள் நொந்தபடி, சந்திரா கொடுத்ததை பருக, அப்படியொன்றும் மோசமாயில்லை அது.
“பேசிட்டு இருங்க.. நான் மீனாவ எழுப்புறேன்..” என்று சந்திரா உள்ளே செல்ல,
‘அட.. இன்னும் எழுந்துக்கலையா இவ..’ என்று எண்ணியவனோ இரவு எத்தனைக்கு மணிக்கு உறங்கினாளோ என்று நினைத்தும் கொண்டான்.
காசிராஜனோ “புள்ள நல்ல டயர்ட்ல இருக்கும். இனி பாரு அம்மாவுக்கும் பொண்ணுக்கும் சண்டையாகும். அடுத்து என் தலை உருளும்..“ என்று சிரித்துக்கொண்டே பேசியவர் “வீட்டு வேலை எல்லாம் நல்லா போகுது தானே ப்ரித்வி..” என்றும் கேட்க,
“நல்லா போகுது மாமா.. நீங்களும் வந்து அடிக்கடி பார்த்துக்கணும்..” என்று உரிமையாய் அவரை அழைக்க,
“அதுக்கென்னப்பா வந்து பார்த்தா ஆச்சு..” எனும்போதே,
“உன்னோட பெரிய தொல்லையா இருக்கு ம்மா..” என்று சொல்லிக்கொண்டே, முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு அறைவிட்டு வெளியே வந்தாள் தங்கமீனாள்.
சந்திரா ஒன்றும் செய்யவில்லை, முதலில் வந்து எழுப்பும்போது ஏசியை அமர்த்திச் சென்றிருந்தவர், இப்போது காற்றாடியை அமர்த்திவிட, மீனாள் எழுந்துவிட்டாள். என்னதான் இரவெல்லாம் ஏசி ஓடினாலும் அவளுக்கு காற்றாடியின் சத்தமும் மெல்லமாய் கேட்டிட வேண்டும். இல்லையேல் உறக்கம் வராது.
சந்திரா இப்போது அதனை அமர்த்திவிட, எரிச்சலோடு எழுந்தவள் வீட்டிற்குள் யார் இருக்கிறார்கள் என்றுகூட பாராது அப்படியே வந்துவிட்டாள். இரவு நேர உடையில், கலைந்த தலையும், உறக்கத்திற்கு கெஞ்சும் விழிகளுடன் வந்தவளோ வரவேற்பறையில் ப்ரித்வியை கண்டதும், அப்படியே நின்றுவிட, ப்ரித்விக்கோ அவளைப் பார்த்ததும் வந்த சிரிப்பினை அடக்கவே முடியவில்லை.
என்ன முயன்றும் கூட அவனால் முடியவில்லை. வாயில் இருக்கும் கஷாயம் எல்லாம் குபீர் சிரிப்பினில் வெளி வந்துவிடுமோ என்கிற பயத்தில், மிக சிரமப்பட்டே அதனை அடக்கியவன், அவளைப் பார்த்து கண் சிமிட்ட, தங்கமீனாளோ அப்படியே அறைக்குள் மீண்டும் ஓடிவிட்டாள்.
‘ச்சே ச்சே மானமே போச்சு..’ என்று வேகமாய் சென்று தன்னை கண்ணாடியில் பார்த்தவளுக்கு, முகம் அஷ்டகோணலாகி இருந்தது.
‘இந்த அம்மா இருக்கே.. இருக்கு இன்னிக்கு..’ என்று பல்லைக் கடித்துக்கொண்டே குளியல் அறைக்குள் புகுந்துகொண்டாள்.
ஆனால் இந்த காலை பொழுதில் அவனைக் கண்டதும் மனது மெல்ல மெல்ல மலர்ந்து மொட்டு விரிக்கும் மலர் போல அப்படியே சிறகை மெது மெதுவாய் விரித்து பறந்துகொண்டது.
ப்ரித்விக்கோ துயில் எழுந்ததுமே மனது இருப்பு கொள்ளவே இல்லை. உடனே தங்மீனாளைக் காண வேண்டும் என்கிற துடிப்பு அவனுள் அதிகமாய் இருப்பது போல உணர ‘ஒரே நாள்லயா டா?!’ என்று அவனுக்கு அவனே கேட்டும் கொள்ள, அவனுக்கு முன்னே எழுந்து, தன்னை தூய்மை செய்துகொண்ட ரித்திக் அறைவிட்டு வெளியே சென்று ராதா கொடுத்த காபியையும் குடித்துவிட்டு அறைக்குள் வந்திருந்தான்.