பிருந்தாவிற்கு அன்றைய தினத்தில் அப்படியொரு சந்தோஷ பூரிப்பு. பின்னே வினோதனோடு சேர்ந்தாற்போல ஐந்து நிமிடங்கள் பேசியிருக்கிறாளே. அதிலும் அவளிடம் தெரிந்த அதே ஆர்வமும், ஆசையும், அவளோடு பேசிடவேண்டும் என்கிற துடிப்பும் அவன் கண்களிலும் தெரிய, பிருந்தாவின் சந்தோஷ அளவை, அளவிட முடியுமா என்ன?!
இதற்கும் அத்தனை பெரிதாக எல்லாம் ஒன்றும் பேசிடவில்லை. எல்லாமே பொதுவான பேச்சுக்கள் தான். ஆனால் அதை அவர்களுக்குமட்டும் பொதுவானதாய் இப்போது நினைக்க முடிந்தது. எண்ணிவிடும் அளவிற்கு ஒருசில வாக்கியங்கள் தான். ஆனால் அதனையே பொக்கிஷமாய் எண்ணி எண்ணிப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு இருந்தாள். அதிலும் அவள் உணவுண்ண என்று அமர்கையில், அவளுக்கான அத்தனையும் கொண்டு வந்து வைத்து, பார்த்து பார்த்து பரிமாறியது என்னவோ வினோதன் தான்.
காசிராஜன், எங்கே தான் வந்து முன்னே நின்று கவனித்தால், போஸ்ராஜன் சங்கடம் எதுவும் கொள்வாரோ என்று, தன் பொறுப்பினை “பார்த்து கவனி வினோதன்..” என்று சொல்லி, வினோதனிடம் கொடுத்திருந்தார்.
ஆட்களுக்கு பரிமாறிக்கொண்டு இருந்த ரித்திக்கையும், சந்திரா அழைத்து உணவுண்ணச் சொல்ல, அவனோ “ப்ரித்வி வரட்டும் ஆன்ட்டி..” என்று மறுத்திட,
சந்திராவோ “அப்போ ரெண்டு பேரும் இங்கனயே இருந்து இவங்களை கவனிச்சுக்கோங்க..” என்றுவிட்டு நகர்ந்தார்.
ரித்திக்கோ “சும்மா சொல்லக் கூடாது டேஸ்ட் அமர்களமா இருக்கு..” என்று சொல்லிக்கொண்டே, பிருந்தாவிற்கு குடல் கறி கொண்டு வந்து வைக்கையில் “ஐயோ இதெல்லாம் சாப்பிட மாட்டேன்..” என்று அவள் பதறி மறுக்க,
அவளை ஒரு பார்வை பார்த்தா வினோதன் “என்ன பிடிக்கும்?!” என்று கேட்க,
பிருந்தாவின் அருகினில் இருந்த ராதா தான் “எது குடுத்தாலும் இப்படிதான் தம்பி. அவளுக்கு சில்லியும், மட்டனும் மட்டும் வைங்க..” என்றிட, மற்றவர்களுக்கு வைத்ததை விட, அவளுக்கு அதிகமாகவே வைத்துவிட்டுச் சென்றான்.
ஆனால் வினோதன் ‘என்ன பிடிக்கும்..?’ என்று கேட்டது, உண்ணும் உணவை மட்டும் அவன் குறித்துக் கேட்கவில்லையோ என்று இப்போது நினைத்துப் பார்க்கையில் பிருந்தாவிற்கு புரிந்தது.
‘ச்சே இன்னும் கொஞ்ச நேரம் பேசிருக்கலாம்..’ என்று நொந்துகொள்ளமலும் இருக்க முடியவில்லை.
ராதாவோ, வினோதன் அம்மா லட்சுமியோடு நன்கு பேசியபடி இருக்க, அந்த இடையிவேளையில் தான் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
“எல்லாம் பிடிச்சதா?! நல்லா சாப்பிட்டியா?!” என்று வினோதன் கேட்டிருக்க,
“ம்ம்.. நீங்க இன்னும் சாப்பிடல?” என்று பதிலுக்கு இவள் கேட்க,
“நாங்க லாஸ்ட்ல தான் சாப்பிடுவோம்..” என்றவன் “இதெல்லாம் புதுசு உனக்கு..” என,
“நல்லாருக்கு. பழகிக்கிறேன்..” என்று பிருந்தா மலர்ந்த முகத்துடன் சொல்ல,
“பழகித்தானே ஆகணும்..” என்று வினோதன் சொல்லி, அவள்பக்கம் ஒரு பார்வை வீசும் போதே,
வாய் வார்த்தையால் பேசியது இப்படியெனில், கிளம்பி காரில் ஏறும்வரைக்கும் பார்வையில் பேசிக்கொண்டது தனி ஒரு கதை. அம்மா அப்பாவை அனுப்பிவைக்கவென்று அவர்களோடு வந்த வினோதன், பிருந்தாவையும் அனுப்பிவிட்டுத்தான் உள்ளே வந்திருந்தான்.
“நல்லவேள அந்த அலங்காரி இல்லை. இருந்திருந்தா என்னை ஒருவழி பண்ணிருப்பா..” என்று தங்கமீனாளிடம் மாட்டிக்கொள்ளவில்லை என்கிற நிம்மதியும் சேர்ந்தே பிறந்தது அவனுக்கு.
வினோதன் மனதிலும் தன்மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்பதனை புரிந்துகொண்ட பிருந்தாவிற்கு, அப்போதுதான் பெரும்நிம்மதி. அந்த நிம்மதியோடு அவள் வீடு நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தாள்.
“டெலிட் யுவர் போட்டோஸ்..” என்று ப்ரித்வி அத்தனை பிடிவாதமாகச் சொல்ல, மீனாள் உள்ளுக்குள்ளே அதிர்ந்து, அரண்டுதான் போனாள்.
மென்மையாய், இலகுவாய் பழகிச் சிரிக்கும் ப்ரித்வி. ஈகோவெல்லாம் இல்லாதவன் என்று எண்ணியிருந்த ப்ரித்வியினுள் இப்படியொரு பிடிவாத குணமும், குரலும், முகமுமா என்று அவளுள் ஏகப்பட்ட தவிப்பாய் போனது.
அவள் மனம் சுனங்கியதுமே, அதை அவள் முகமும் வெளிப்படுத்த “என்ன தங்கா?! நீதானே சொன்ன, போட்டோஸ் வேணாம், டெலிட் பண்ணிடுங்கன்னு..” என்றவனின் குரலில், ஒருவித கசப்பு.
“அ.. அது..” என்று இழுத்தவள் “இப்படில்லாம் பேசாதீங்க ப்ரித்வி மாமா..” என்று இறங்கிய குரலில் சொல்லியேவிட்டாள்.
“ஓ..!” என்று ஒருவித நக்கல் குரலில் சொன்னவன் “இப்போ உனக்கு எப்படி பீல் ஆகுதோ, அப்படித்தானே எனக்கும் இருந்திருக்கும்?” என்று அவன் பதிலுக்கு கேட்க,
“சாரி…” என்றாள் உள்ளே போன குரலில்.
‘அடடா மதுராபுரியோட தங்கமீனாள் ஒருத்தர்கிட்ட சாரி கேட்கிறதா?’ என்று சொல்லாமல் சொல்லிக் காட்டியது அவன் பார்வை.
“ம்ம்ச் இப்போ என்ன நீங்க மாமா?” என்று வேகமாய் குரலை உயர்த்தியவள், அடுத்து அவன் பார்த்த பார்வையில், அப்படியே ஸ்ருதி இறங்கி, உதடு பிதுக்கி “என்னோட இடத்துல இருந்தும் யோசிக்கணும்..” என்றாள் பாவமாய்.
“நான் உன்ன தப்பா நினைப்பேனா?!” என்று வேகமாய் வந்து விழுந்தது அவனின் கேள்வி.
“இட்ஸ் ஓகே விடு..” என்று தோள்களை குலுக்கினான் ப்ரித்வி.
‘சாரி..’ என்றுவிட்ட பின்னே அவனுக்கு அதற்குமேல் வாக்குவாதம் செய்ய மனதில்லை. ஆனாலும் இந்த இரண்டு நாட்களாய் அவள் அவனை சுற்றலில் விட்டதை இன்னமும், அவனால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
“இல்ல.. நீங்க நார்மல் ஆகல..”
“இந்த பாவப்பட்ட டோன்ல பேசாத தங்கா. உனக்கு அது செட்டாகல..” எனும்போதே, அவள் விழித்த விதத்தில், அவனிடம் ஒரு குட்டி குறுநகை எட்டிப்பார்த்தது.
“ம்ம் அடுத்து?!” என்றான் இன்னும் கொஞ்சம் இலகுவான குரலில்.
“ம்ம் இந்த டோன் கூட ஓகே தான்..” என்று மீனாள் தலையை ஆட்டிச் சொன்ன விதத்தில், அவன் முகம் முழுதாய் மலர்ந்துவிட,
“சரி போட்டோஸ் பாரு..” என்றான் கொஞ்சம் அழுத்தம் குடுத்து.
அவளது புகைப்படம் தான். அவன் எடுத்ததுதான். தன் முன்னே அவளை அதனை பார்க்க வைத்தே தீரவேண்டும் என்கிற பிடுங்கல் அவனுள். எங்கே அப்படி சொல்லிவிடுவானோ என்கிற பரிதவிப்பு அவளுள் இருக்க, அதனை வெளிக்காட்டாமல் இருந்திடவே பெரும்பாடாய் ஆனது.
ஆனால் ப்ரித்வி விடுவதாய் இல்லை.
“ம்ம் பாரு தங்கா..” என்று ஊக்கியவன் “உனக்கு எந்த போட்டோஸ் எல்லாம் வேணுமோ உனக்கு அனுப்பிக்கோ, மத்ததை டெலிட் பண்ணிடு…” என்று அவன் சொல்ல,
‘ச்சோ இந்த மாமா இதை விடவே மாட்டாங்க போல. ஆளப் பார்த்து எடைப் போட்டது தப்புன்னு தோணுது..’ என்று எண்ணியவள், ஒருவித பதற்றம் கொண்டுதான், அவளது புகைப்படங்களை பார்க்கத் தொடங்கினாள்.
சாலையில் கண் பார்வை இருந்தாலும், ப்ரித்வியின் கவனம் மொத்தமும் அவளிடம் தான் இருக்கிறது என்று தங்கமீனாளுக்கு உணரவே முடிந்தது. அவனின் அலைபேசியை பிடித்திருந்த அவள் விரல்கள் மெதுவாய் நடுங்குவது போலிருக்க, இறுக்கமாய் அதனைப் பற்றிக்கொண்டவள், ஒவ்வொரு புகைப்படமாய் பார்க்க சட்டென்று கண்கள் விரிந்தது.
எப்படியும் ஒரு நூறு படங்களுக்கு மேலே இருக்கு.
அவளே.. அவள் மட்டுமே..
அத்தனையும் அவள் காட்டிய ஒவ்வொரு சிறு உணர்வு பிரதிபலிப்பும், தப்பாமல் விழுந்திருந்தது. சில படங்களில் அவளைப் பார்க்க அவளுக்கே ‘அட அழகி..’ என்று சொல்லிவிடலாம் போல இருந்தது.
இன்னும் சில புகைப்படங்கள் அவளது வெட்கச் சிவப்பையும், அதை தவிர்க்க பரிதவிப்பை மிக அழகாய் எடுத்துக்காட்டியிருக்க, தங்கமீனாளின் சிவந்த மெல்லிய இதழ்களில் நடுக்கம். மேலுதடும், கீழுதடும் மாறி மாறி கடிபட, அவன் தன்னை கவனித்துக்கொண்டு இருக்கிறான் என்பதிலேயே, அவளது கன்னம் கொஞ்சம் சூடு கண்டு சிவப்பது போலிருந்தது.
தங்கமீனாளின் விரல்கள் தன்னைப்போல் ஒவ்வொரு படமாய் நகர்த்திக்கொண்டு பார்க்க, மனதோ ‘எப்படி எடுத்திருக்காங்க பாரு..’ என்று அவனை செல்லமாய் கண்டிக்கச் செய்தது.
எல்லாம் தாண்டி இது பிடித்திருக்கின்றதே.. அந்த பிடித்ததை என்ன செய்ய.
ஒவ்வொரு படமாய் பார்க்க பார்க்க, அவள் அகத்திலும் புறத்திலும் ஒரு மெல்லிய உணர்வு. கண்களில் ஒருவித லயிப்பு தோன்றிட, இந்த புகைப்படங்களை எல்லாம் ப்ரித்வியும் பார்த்திருப்பானே என்கிற எண்ணம் தொன்றவுமே, உள்ளுக்குள்ளே சிறு நடுக்கம்..
பார்த்திருப்பானோ..?!
பார்த்துக்கொண்டே இருந்திருப்பானோ?!
ரசித்திருப்பானோ?!
என்று நினைக்க நினைக்க, வேகமாய் கண்களை இறுக மூடிக்கொண்டாள். இத்தனைக்கு நடுவிலும் ‘அழகாய் எடுத்தருக்கிறான்..’ என்று பாராட்டாமல் இருந்திடவே அவளால் முடியவில்லை.
இதனை எப்படி அழிப்பதாம்?!
யாருக்குமே மனம் வராது தான்..
“எப்படியிருக்கு?!” என்று கேட்ட ப்ரித்வியின் குரலில் என்ன இருந்தது என்று கண்டறிய முடியவில்லை.
இருந்தும் இமைகள் படபடக்க, இதயம் தடதடக்க வேர்க்காத முகத்தினை அழுந்த துடைத்தவள் “ந.. நல்லாருக்கு..” என்று பொதுவாய் சொல்லி, அலைபேசியை மடியில் வைத்துக்கொண்டாள்.
“அவ்வளோதானா?” என்று அவன் கேட்ட விதத்தில், உள்ளுக்குள்ளே கனமாய் ஏதோவொன்று உருள்வது போல் ஓர் உணர்வு.
“வே.. வேறென்ன மாமா?!” என்று கேட்பதற்குள், அவன் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டாள்.
அவனுக்கு இன்னமும் புன்னகை விரிந்து “சரி இப்போ சொல்லு என்ன பண்ணட்டும்?!” என்று கேட்க,
“எ.. என்னது?!” என்றாள் புரியாமல்.
“உன்னோட போட்டோஸ் தான். உனக்கு வேணும்னா எடுத்துக்கோ. இல்லைன்னா டெலிட் பண்ணிட்டு..” என்கிறபோது, சரியார் அவர்ளின் வீடும் வந்திட, அவனை அழுந்த ஒரு பார்வை பார்த்துவிட்டே காரில் இருந்து இறங்கி கேட்டினை திறந்தாள்.
ப்ரித்வியும் கார் விட்டு இறங்கி, அவள் வீட்டு கேட்டினை திறக்கவும் உள்ளே வந்து போர்டிகோவில் நின்றுகொள்ள, வேகமாய் வீட்டினுள் நுழைந்தவள் பிரிட்ஜில் இருந்த குளிர்ந்த நீரை பருகிக்கொண்டே, இன்னொரு பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்து அவனிடம் கொடுக்க
“தேங்க்ஸ்..“ என்றபடி வாங்கிக் குடித்துக்கொண்டான்.
“உள்ள வாங்க..” என்றபடியே அவளும் உள்ளே செல்ல, ப்ரித்வி உள்ளே எல்லாம் செல்லவில்லை.
“ட்ரெஸ் பேக் எடுத்துட்டு வா தங்கா…” என்றதோடு நின்றுகொள்ள, அவளோ முகம் கழுவி, தன்னை கொஞ்சம் சீர்செய்துகொண்டு தான் வெளிவந்தாள்.
அவளைப் பார்த்ததுமே அவனுக்கும் புரிந்துபோனது. இருந்தும் எதுவும் கேட்காமல் மீண்டும் காரினை கிளம்ப, முன்னர் போல இப்போது பேச்சு இல்லை இருவரிடமும். அத்தனை ஏன் மீண்டும் கோவில் செல்லும் வரைக்கும் கூட பேசவில்லை இருவரும்.
தங்கமீனாள் கண்களை இருக்கையில் சாய்ந்திருந்தாள். அதுமட்டும் தான் அவளுக்குத் தெரியும். வீரபாண்டி கோவிலில் இவர்கள் பிடித்திருந்த மண்டபத்தின் முன்னே காரினை நிறுத்திவிட்டு “தங்கா..” என்று அவன் எழுப்பிவிடவும் தான்
“ஹா..!” என்று அதறி பதறி கண் விழித்தாள்.
“எந்திரி தங்கா..” என்றவன், காரினில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்ட,
“தூங்கிட்டேனா?!” என்று கேட்டுக்கொண்டே, அவன் நீட்டிய பாட்டிலை வாங்கி நீர் பருகினாள்.
“நல்லா குறட்டை விட்டு தூங்கி, தூக்கத்துலையே நாலு பாட்டுக்கு டான்ஸ் வேற ஆடின நீ…” என்று அவன் சிரிக்காமல் சொல்லிக்கொண்டு இருக்க,
“ஆமா ஆடினாங்க. அதையும் படம் பிடிச்சு வைக்க வேண்டியது தானே..” என்று சடைத்துக்கொண்டே சொன்னாலும், அதில் இம்மியளவு கூட கோபமோ எரிச்சலோ இல்லை அவளிடம்.
ப்ரித்வியோ அவள் இறங்கி, வீட்டினில் இருந்த பையை எடுத்துக்கொண்டு நடக்கும் வரைக்கும் அமைதியாய் இருந்தவன்,தானும் அவளோடு இணைந்து நடந்தபடி “என்ன பண்றதுன்னு சொல்லவே இல்லை?!” என்று திரும்பக் கேட்க,
‘போச்சு டா..’ என்று சொல்லிக்கொண்டவள்,
“நீங்க என்னவும் பண்ணுங்க மாமா..” என்று முணுமுணுப்பாய், கொஞ்சம் சந்கோசமாய் பதில் சொல்லிவிட்டு ஓடாத குறையாய் நடந்துவிட்டாள்.
ஆனால் அதன் பிறகு அவன் இருக்கும் பக்கம் கூட தங்கமீனாள் வரவில்லை. எடுத்து வந்த பையை கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்துவிட்டு, வேகமாய் வந்து அழகரசியோடு அமர்ந்துகொண்டாள்.
எப்படியும் ஆச்சியின் முன்னம், தன்னை எதுவும் பேசமாட்டான் என்கிற நம்பிக்கையில் வந்து அமர்ந்துவிட, ஆச்சிக்கு மற்றொருபக்கம் வந்தமர்ந்த ப்ரித்வியோ “அப்பா அம்மா எங்க பாட்டி?” என்று வினவ,
“கொஞ்ச நேரம் போகட்டும் பாட்டி..” என்றவனை தேடிக்கொண்டு வந்த ரித்திக் நண்பனைப் பார்த்து கண்களாலேயே கேள்வி கணை தொடுத்துக்கொண்டு இருந்தான்.
அதை மீனாளும் கண்டுகொள்ள, அப்போதுதான் புரிந்தது ரித்திக் முன்னே எதற்கு ப்ரித்வி பேச முடியாது என்றான் என்று. அவளும் நண்பர்களோடும், அலுவலகத்திலும் கேலி கிண்டல் என்று இருப்பவள் தானே. நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் எப்படி பேசுவார்கள் என்று தெரியாதா அவளுக்கு.
ஆக, பேச முடியாத அளவிற்கு ரித்திக் என்னவோ பேசியிருக்கிறான் என்று புரிய, அது என்னவாய் இருக்கும் என்று மண்டையில் கேள்வி வண்டாய் குடைய, ப்ரித்வியோ “வா டா போவோம்..” என்று தோழனை இழுத்துக்கொண்டு நகர்ந்துவிட, அவர்களின் பின்னே மீனாளின் பார்வையும் நகர்ந்தது.
ரித்திக் எதுவோ கேட்க, அதற்கு அவனின் வயிற்றினில் செல்லக் கோபத்தோடு தன் முழங்கை வைத்து குத்திக்கொண்டே நடந்துகொண்டு இருந்தான் ப்ரித்வி.
மீனாளின் முகத்திலும் இதமாய் ஒரு மென்னகை பரவ, ஆச்சியோ “போயி சாப்பிடு டி மீனாளே..” என்றார் வாஞ்சையாய்.
“நீங்க சாப்பிடீங்களா ஆச்சி?” என்று அவளும் பதிலுக்கு கேட்க,
“எல்லாம் ஆச்சு.. கடைசி பந்தி நடக்குது. எழுந்து போ.. பின்ன எதுவுமில்லாம போயிட போகுது..” என்று சொல்லி அவளை அனுப்பியேவிட,
காசிராஜன் “வா மீனம்மா.. வந்து உக்காரு..” என்று மகளை அழைத்து அமர வைக்க, அவள் முன்னே ப்ரித்வியும், வினோதனும் ஆளுக்கு ஒரு வாளியோடு வந்து நிற்க,
“நல்ல பசியில இருக்கேன். ரெண்டு ஓடிடுங்க..” என்று பொய் கோபம் கட்டி, கண்களால் மிரட்ட,
“அடடா எனக்கு கால் எல்லாம் நடுங்குதே.. ப்ரித்வி என்னை கொஞ்சம் பேலன்ஸ் பண்ணி பிடிங்க பாப்போம்..” என்று வினோதன் கேலி செய்ய, தங்கமீனாளோ ப்ரித்வியை சவாலாய் ஒரு பார்வை பார்த்தாள்.
ப்ரித்வி பதிலேதும் பேசாமல், சத்தம் இல்லாமல் “எனக்கும் பசிக்குது. வாங்க சாப்பிடலாம்..” என்று சொல்லிக்கொண்டு வினோதனையும் தன்னோடு அமரச் செய்துவிட்டான்.
ஒருவழியாய் விருந்து முடிந்து, வேலை செய்தவர்களுக்கும் உணவு பரிமாறி, அவர்களுக்கான சம்பளம், உடைகள், இனிப்பு, காரம் என்று எல்லாம் கொடுத்து, வீட்டிற்கு கிளம்பி வருகையில் மாலை ஆகிவிட்டது.
அனைவருக்குமே சரியான சோர்வு. மீனாளோ வந்ததும் ஒரு குளியலை போட்டுவிட்டு, அப்பா அம்மவினோடு அமர்ந்துவிட, இங்கே ப்ரித்வியோ நண்பனிடம் மாட்டிக்கொண்டான்.
“என்னவோ பண்ற மச்சா.. என்கிட்டே மறைக்கணும்னு நினைக்காத..” என்று போலியாய் மிரட்ட,
“உனக்குத் தெரியாம என்னடா செய்யப் போறேன்?” என்று ப்ரித்வி ஒன்றும் அறியாதவன் போல பேச,
“சரி.. சரி.. என்னிக்கு இருந்தாலும் தெரிய வந்துதான் ஆகணும்..” என்றவன் “ஆனாலும் இங்க இப்படியொரு லைப் எனக்கெல்லாம் கிடைக்கலன்னு கொஞ்சம் வருத்தமாவே இருக்குடா..” என்றான் மனம் திறந்து.
“அட ஏன் டா.. உனக்கும் இங்க ஒரு பொண்ணு பார்த்துடலாம். மாமனார் வீட்ல வந்து செட்டில் ஆகிடு..” என,
“அப்படி வா வழிக்கு.. அதென்ன உனக்கும்னு சொல்ற?” என்று கேட்க,
“டேய் டேய் நல்லவனே.. நீ அன்னிக்கு செஞ்ச வேலையே போதும்..” என்று கரம் எடுத்து கும்பிட்டவன் “அப்பா கூப்பிட்டார் பார்த்துட்டு வந்துடுறேன்..” என்று சொல்லி நகர்ந்துவிட்டான்.
ஆனால் அன்றைய இரவு உறங்குகையில், வழக்கம் போல தங்கமீனாளின் படங்களைப் பார்த்தவன், அவளுக்கு “என்ன பண்ணட்டும் தங்கா?” என்று கேட்டு குறுந்தகவல் அனுப்ப,
இப்படி பேசினாலாவது பேச்சினை விடுவான் என்று பார்த்தால், அவனோ விடக்கண்டனாய் அல்லவா இருக்கிறான்.
“என்னவோ மீன்ஸ் என்ன என்னவோ?” என்று அவன் வார்த்தைகளின் விளையாட இறங்க,
“மாமா..!” என்று அவளுள் சிணுங்கலாய் ஒரு அழைப்பு.
அவளது பதிலைப் படிக்கையில், அந்த சிணுங்கள் அவன் மனதும் உணர்வதாய் இருக்க “சொல்லு தங்கா..” என்றான்.
காதோடு ரகசியம் கேட்பது போல இருந்தது அவன் சொல்லு தங்கா என்று அனுப்பியது. ஆழ மூச்சினை எடுத்துவிட்டவள் “இப்போ என்ன வேணும் உங்களுக்கு?” என்று கோபமாய் இருப்பது போல காட்டிக்கொள்ள,
அடுத்த ஐந்து நிமிடங்கள் எதுவும் பதில் வரவில்லை அவனிடமிருந்து. அந்த ஐந்து நிமிடமும் படாதபாடு அவள் பட்டுவிட, ஆறாவது நிமிடத்தில் அவளின் வெட்க முகம் தாங்கிய புகைப்படமும், அதில் ‘உன் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?!’ என்ற கேள்வியும் தாங்கி வந்து விழுந்தது.