ஆனால் விஷயம் அறிந்ததும் மீனாளுக்கு சும்மா இருக்க முடியவில்லை. என்னவோ கண்ணில் விழுந்த தூசிபோல, மனதினில் இவ்விசயம் நுழைந்து உறுத்திட தொடங்கியது. அவள் பிறந்ததில் இருந்து தாத்தா பாட்டி என்று உரிமையோடு சொந்தம் கொண்டாட்டிய மனிதர்கள்.
அவர்களின் அந்த வீடு, அவளது அப்பா சில வருடங்கள் வாழ்ந்த வீடு என்ற அடையாளத்தையும் கொண்டது. அத்தனை ஏன், தங்கமீனாள் பிறந்து, அவளை முதன்முதலில் சந்திராவும், காசியும் இங்கேதான் தூக்கி வந்தார்கள். அவளது அத்தனை சந்தோசங்களையும் தாத்தா பாட்டியோடு சேர்ந்தே கொண்டாடியிருக்கிறாள்.
என்னவோ அவர்கள் இவளுக்கு மட்டுமே உரிமையுள்ள சொந்தம் என்கிற உணர்வு தங்கமீனாளுக்கு நிறையவே உண்டு. வருடத்திற்கு ஒருமுறை வந்துசெல்பவர்களை பற்றி அவள் அதிகம் யோசிக்கவே இல்லை. அவளைப் பொருத்தமட்டில் அவர்கள் எல்லாம் விருந்தினர்கள். அவ்வளவே.
ஆனால், இப்போதோ அவர்கள் நிரந்தரமாகவே இங்கே வருகிறார்கள் எனவும், அவளுக்கு சொல்ல முடியாத ஒரு உணர்வு. முன்னார்போல அங்கே சுதந்திரமாய் சென்றுவர முடியாது. தாத்தா பாட்டியொரு நினைத்ததை எல்லாம் பேசிச் சிரிக்க முடியாது. எனக்கு மட்டுமே நீங்கள் சொந்தம் என்று உரிமையாய் உறவு கொண்டாட முடியாது.
இதனை எல்லாம் மனதில் போட்டு, உருட்டி பிரட்டியபடி குளித்துத் தயாராகி அங்கே செல்ல, இவள் எப்போதடா வருவாள் என்பதுபோலவே காத்திருந்தார் அழகரசி.
மீனாளை கண்டதுமே “வா டி வா டி.. தங்கமீனாளே..” என்று எப்போதும்போல ஒருவித குஷியோடு அழகரசி பேத்தியை வரவேற்க,
“வந்தேன் வந்தேன்..” என்றபடி, அவரின் கையில் திருப்பதி லட்டினை கொடுத்தவள், வீட்டினை ஒரு நோட்டம் விட “தாத்தா வெளிய போயிருக்கார்..” என்றபடி “கற்பகம்..” என்று சத்தம் கொடுத்தார் அழகரசி.
“டிபனெல்லாம் சாப்பிட்டு தான் வந்திருக்கேன் ஆச்சி..” என்றாள் வேகமாய்.
“அட, நம்ம கற்பகம் வெண்பொங்கல் பண்ணிருக்கா. வடை வேற வாங்கி வச்சிருக்கேன். எப்படியும் நீ வருவன்னு தெரியும்.. ரெண்டு வாய் சாப்பிடு..” எனும்போதே,
தங்கமீனாள் சத்தமாய் “கற்பகம் அக்கா, ஒரு அரைமணி நேரம் போகட்டும்..” என்றுவிட்டாள்.
“சரி மீனா…” என்று பதிலுக்கு அவரும் உள்ளிருந்தே சத்தம் கொடுக்க, சட்டென்று இனி இப்படியெல்லாம் இங்கே நடந்துகொள்ள முடியாதோ என்று தோன்றி, முகம் வாடிப் போனது மீனாளுக்கு.
பேத்தியின் முக மாற்றத்தை கண்ட ஆச்சியோ “என்ன டி என் ராஜாத்தி?!” என்று வினவ,
“ஹ்ம்ம்.. இனி என்னப்பா, இந்த ராணியையும், அந்த ராஜாவையும் கைல பிடிக்கவே முடியாது. உங்க வீட்டு மனுஷங்க எல்லாம் வர்றாங்க போல. வருசத்துக்கு ஒருதடவ வர்றதுக்கே, வீடு தடபுடலாகும். இப்போ சொல்லவா வேணும்…” என்று முகத்தை தூக்கி வைத்தே நீட்டி முழக்க,
“என்ன என் தலை உருளுது?!” என்றபடி வந்து சேர்ந்தார் வேம்பரசன்.
“வாங்க தாத்தா..” என்று புன்னகைத்தவள் “சும்மாதான்…” என்று சொல்ல,
“அடடா! யார் அது என் வீட்டம்மாவ இடிச்சிட்டு போனது?!” என்று வேம்பரசனும் பதிலுக்கு கேட்க, தங்கமீனாள் பக்கென்று சிரித்துவிட
“ம்ம்.. இதுதான்.. இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்கிறது தான் உனக்கு அழகு. அதைவிட்டு முகத்தைத் தூக்குற வேலை எல்லாம் வைக்கக் கூடாது..” என்ற ஆச்சி “இவளுக்கு கவலை.. அவங்க எல்லாம் வந்த பிறகு, இப்படி எப்பவும் போல வந்து போக முடியுமான்னு?!” என்று கணவரிடம் சொல்ல,
“அப்படியில்ல தாத்தா…” என்று என்னவோ பேச வந்தவள், வேகமாய் அதனை விழுங்கிவிட்டு “நீங்க என்ன முடிவு பண்ணிருக்கீங்க தாத்தா?!” என்றாள் ஒருவித ஆழ்ந்த குரலில்.
காசிராஜன் கூட இந்த கேள்வியை கேட்கவில்லையே. அவருக்கு பதிலாய் தங்கமீனாள் கேட்கவும், பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள “மனசுல இப்பவும் ஒரு எண்ணத்துக்கு வந்திருப்பீங்க தானே நீங்க..” என்றாள் மீனாள்.
“ம்ம் ஆமா மீனா.. வரச் சொல்லிட்டேன் தான். என்னிக்கு இருந்தாலும் இந்த வீடு அவங்களுக்குத்தான். அதுல மாற்று எதுவுமில்லை. ஆனா எங்களுக்கு போஸ், காசி ரெண்டு பேரும் வேற வேற இல்லை. அதுலையும் எந்த மாற்றமும் இல்லை. இந்த வீடு அவங்களுக்கு வசதிப்படுமான்னு எல்லாம் நாங்க சொல்ல முடியாது. வரட்டும் பார்த்துப்போம்..” என்ற வேம்பரசன்,
பின் தாழ்ந்த குரலில் “அழகரசிக்கு அவங்கப்பா வீட்ல கொடுத்த சொத்தெல்லாம், காசி பேருக்கு எப்பவோ மாத்திட்டோம். எங்களுக்கு அடுத்து அது அப்படியே உங்கப்பனுக்குத் தான்..” என ,
“அச்சோ தாத்தா நான் சொத்து பத்தி பேசல..” என்றாள் பதறி.
“அது எனக்கும் தெரியும் மீனா. காலைல காசிக்கிட்ட கூட இதை நாங்க சொல்லலை. நீயும் தெரிஞ்சமாதிரி காட்டிக்காத. போஸுக்கு இந்த வீட்ல பங்கிருக்கே தவற, மத்தபடி இங்க அவனுக்கு என்ன இருக்கு?! வரட்டும் பார்த்துப்போம்…” என்றிட,
“கஷ்டம் தான் இல்லையா?!” என்றாள் பொதுவாய்.
அத்தனை நேரம் அமைதியாய் இருந்த அழகரசியோ “எதை கஷ்டம்னு சொல்ற மீனா?!” என்று கேட்க,
“அவங்களுக்கும் சரி, உங்களுக்கும் சரி..” என்று சொல்ல,
“எண்ணமா?!” என்று கண்களை உருட்டியவள் “இந்த ஊர்ல தான் பொறந்து வளர்ந்திருக்கேன்.. அப்போ, இங்கயே தான் என் வாழ்க்கையும் அமையணும். இந்த ஊரோட நல்லது கெட்டது எல்லாம் பார்த்து தான் வளர்ந்திருக்கேன். அப்போ நானும் கல்யாணம் பண்ணிட்டு நல்லா வாழறதை இங்க நீங்க எல்லாம் கண் குளிர பார்க்கணும்.
நினைச்சா உங்களை, அப்பா அம்மாவை பார்க்கிறபடி இருக்கணும். எனக்கு வரப்போற மனுஷன் அவ்வளோ படிச்சிருக்கணும், இவ்வளோ சம்பாரிக்கணும்னு எல்லாம் எனக்கு ஆசையில்லை. இந்த ஊர்காரனா இருந்தா போதும் எனக்கு. சிம்பிளான லைப்னாலும், மனசுக்கு பிடிச்சு, நம்ம மனுஷங்களோட சேர்ந்து வாழ்ற வாழ்க்கை தான் எனக்கு வேணும் ஆச்சி..” என்றிட, பெரியவர்கள் இருவரும் ஒரு புன்னகையோடு பார்த்திருந்தார்கள் அவளை.
அவர்களுக்குத் தெரியும், தங்கமீனாள் இதனைத் தான் சொல்வாள் என்று. அவள் மனம் போலவே அவளுக்கு வாழ்வை அமைத்துக்கொடுக்க வேண்டுமென்று மனமார வேண்டிக்கொண்டார்கள் இருவருமே.
அதேநேரம் அங்கே சென்னையில் போஸ்ராஜன் வீட்டினில் அனைவரும் அப்படியொரு இறுக்கத்தில் இருந்தார்கள். அத்தனை நேரமும் ப்ரித்விராஜன் சண்டையிட்டு இருந்தான். வீட்டில் எப்போதுமே மூன்று வேலையாட்கள் உண்டு. இப்போது மூவரையும் வரவேண்டாம் என்று பணம் கொடுத்து அனுப்பியாகிவிட்டது. நாளை கிளம்பிடவேண்டும்.
“நமக்குன்னு கட்டி வாழ்ந்த வீடுங்க.. வெள்ளிக்கிழமை அதுவுமா கிளம்பி போக வேணாம்..” என்று ராதா சொல்லிட, போஸ்ராஜன் வாயே திறக்கவில்லை.
ஆனால் ப்ரித்விராஜனோ “ம்மா.. இப்போ இது நம்ம வீடு இல்லை. அதை முதல்ல மனசுல வைங்க…” என்றான் பட்டென்று.
பிருந்தாவோ அழுது, அழுது ஓய்ந்து ஒருவழியாய் நிஜத்தை ஏற்றுக்கொண்டு அம்மாவோடு இணைந்து பொருட்களை எல்லாம் ஒதுக்கி வைக்க, மகனோ முறுக்கிக்கொண்டு நின்றான்.
“ம்மா நான் இப்பவும் சொல்றேன். இது நல்ல முடிவு கிடையாது. அப்பாவுக்கு மனசுக்கு ஒரு மாறுதல் வேணும்தான். அதுக்காக முழுசா இங்க விட்டு, அங்க போறது சரி கிடையாது. வேற வீடு நான் பாக்குறேன். நம்ம இங்கயே இருப்போம்..” என்று லட்சம் முறை சொல்லிவிட்டான்.
ராதாவோ “வேணாம்.. இங்க இனி வேணாம்.. அங்க போனா, உங்கப்பாவும் கொஞ்சம் நிம்மதியா இருப்பார்டா. தாத்தாகூட சேர்ந்த தோட்டம் தொரவுன்னு சுத்தி வருவார். பழைய ஆளுங்களோட எல்லாம் பேசி வருவார்.. கொஞ்ச நாள் போகட்டும். அடுத்து நமக்குன்னு என்னன்னு யோசிப்போம்..” என,
“ம்மா இப்போ என்ன தோட்டம் தொறவு வேணும்னா, நான் லோன் போடுறேன். இங்கயே ஏதாவது ஃபார்ம் வருதா பார்க்கலாம்..” என்றான் மகனும் விடாது.
“அதானே என்னிக்கு நான் சொல்றதை கேட்டிருக்கீங்க? மூணு வருஷம் முன்னாடியே சொன்னேன்.. புதுசா எதுவும் இன்வஸ்ட் பண்ணாதீங்கப்பா. போதும்.. கொஞ்சம் கொஞ்சமா கம்மி பண்ணிக்கோங்க. லோன் எல்லாம் இருந்தா எல்லாம் செட்டில் பண்றதுக்கான வழியைப் பார்த்துட்டு, நீங்க ரிலாக்ஸா இருங்கன்னு சொன்னேன். கேட்கவே இல்லை.” என்று இத்தனை நாட்களாய் மனதில் அழுத்திக்கொண்டு இருந்த ஆதங்கத்தை கொட்டிவிட,
“ப்ரித்வி..” என்று அதட்டிவிட்டார் அம்மா.
பணம் பற்றிய கவலையே இல்லாமல் வளர்ந்த பிள்ளைகள் அல்லவா இவர்கள். இப்போது இப்படியாகும் என்று யாரும் தான் எண்ணவில்லையே. சூழல் அனைவரையும் பேச வைக்கத்தானே செய்யும். அதிலும் ப்ரித்வி, ஒரு நிலைக்கு வந்து, நல்லதொரு சம்பளமும் கைக்கு வரவும் அப்போதே சொன்னான்தான்.
“அப்பா நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க..” என்று சொல்லவே செய்தான் தான்.
அவரோ மகன் பேச்சிற்கு பதில் கூட பேசவில்லை. அப்போதும் பேசவில்லை. இப்போதும் பேசவில்லை.
ஆனால் ராதா இம்முறை மசிவதாய் இல்லை. கணவரின் நிலையை இன்னும் இறங்கவிட அவருக்கு மனதில்லை. இங்கிருந்தால் ஒன்று நடந்தவைகளை எண்ணி எண்ணியே மிகவும் நோந்துபோவார். இல்லையோ புதிதாய் எதுவும் தொழில் ஆரம்பிக்கிறேன் என்று சொன்னாலும், ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அதையும் மீறி மகன் பார்க்கும் வீட்டினில், மகனின் நிழலில் வாழ்வதை நிச்சயம் போஸ்ராஜன் மனம் இப்போதே ஏற்காது. தன விருப்பத்திற்கு வாழ்ந்துவிட்டார். வசதி குறைந்தாலும், அவரின் அந்த மரியாதை குறையாமல் காப்பது மனைவியை அவரது கடமை என்று எண்ணினார் ராதா.
அதெல்லாம் தாண்டி மகளின் திருமண வாழ்வு. அங்கே போனால், நிச்சயம் சொந்த பந்தத்தில் பெரியவர்களின் கண் பார்வையில் நல்ல வரனாகவே பார்த்து முடிக்கலாம். பெரிய வீட்டு மனிதர்கள் என்கிற மரியாதை எப்போதுமே இருக்கும்.