அத்தியாயம் – 2

“மீனா.. மீனா.. எழுந்துக்கோ. இன்னும் எத்தனை நேரம் தூங்குவ நீ..?” என்று உறங்கும் மகளை எழுப்பிக்கொண்டு இருந்தார் சந்திரா.

“ம்மா இன்னிக்கு லீவ் தான் ம்மா..” என்று கண்களை திறக்காமல், கட்டிலில் புரண்டவள் “மக டூர் போயிட்டு வந்திருக்காளே, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டுமேன்னு நீ நினைக்கிறியா..?” என்று கேட்டபடி, சோம்பல் முறித்து எழுந்தமர,

“அதுசரி.. அம்மா நாள் ஓயாமா உழைக்கிறாளே, அவளுக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுப்போம்னு நீ நினைக்கிறியா?” என்று சந்திராவும் பேச,

“அடடா..! பேச்சு இப்படி போகுதா?! ம்ம் வாத்தியார் பொண்டாட்டிக்கு பேசவா சொல்லிக் கொடுக்கணும்? நீங்க தொழில் அதிபர் மம்மி. உன்னை யாரும் கேள்வி கேட்கமாட்டாங்க. நானெல்லாம் பாவப்பட்ட மாச சம்பளக்காரி. ஓடிட்டே தான் இருக்கணும்..” என்று பாவம்போல முகத்தை வைத்து மகள் பேசுவதை, எப்போதும் போல், ஒரு இளம் சிரிப்போடு சந்திரா பார்த்திருக்க,

வீட்டினுள்ளே காசிராஜன் நுழையும் அரவம் கேட்டு “அப்பா வந்துட்டார் டி. எந்திரி நீ முதல்ல. டிபன் சாப்பிட்டு வந்து தூங்குவியாம். எனக்கு இன்னிக்கு சாயந்திரம் ஒரு ஆர்டர் முடிச்சு குடுக்கணும். வேலைக்கு ஆள் வந்திடுவாங்க..” என்று, கணவரை நோக்கி நடந்தபடியே பேசிச் செல்லும் அம்மாவினைத் தான், கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் தங்கமீனாள்.

அம்மாவிற்கும், அப்பாவிற்கும் கடந்த மாதம் தான் இருபத்தி ஏழாவது திருமண நாள் முடிந்திருந்தது. ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் சந்திராவை யாரும் அப்படி சொல்லவே முடியாது. பார்த்தால் தங்கமீனாளின் அக்காவா என்றுதான் கேட்பார்கள். அத்தனை ஏன் மீனாளின் தோழிகளே கூட அப்படித்தான் கேலி பேசுவார்கள்.

அத்தனை ஏன் காசிராஜனைக் காண்கையில் கூட, இன்னும் இரண்டாண்டுகளில் ஓய்வு பெறப்போகும் ஆசிரியர் என்று கூறினால் யாரும் நம்பிடமாட்டார்கள். கணவன் மனைவி இருவரிடமுமே ஒருவித அழகுடன் கூடிய இளமை  நிறைந்திருக்கும்.  அதற்கு அவர்கள் வாழ்வை கொண்டு செல்லும் விதமும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அளவற்ற அன்பும், புரிதலும், வாழ்வுமுறையும் தான் என்பது மீனாளின் அசைக்க முடியாத எண்ணம்.

“அம்மாவ எனக்கு பார்த்ததுமே பிடிச்சி போச்சு தங்கம். அதுதான் கட்டிக்கிட்டேன்..” என்று காசி அடிக்கடி மகளிடம் சொல்லியதுண்டு.

மகள் ஒரு வயதிற்கு மேல் வந்தபிறகு இப்படியான பேச்சுக்கள் இல்லை. ஆனால் காசிராஜன் மனைவியை நடத்தும் விதத்திலேயே, சந்திராவின் மீது அவர் எத்தனை அன்பினில் இருக்கிறார் என்பது காண்போருக்கு புரிந்துவிடும். வீட்டில் எப்போதுமே சந்திராவின் சொல் தான். ஆனால் அவருமே கணவரிடம் கேட்காமல் ஒரு முடிவும் எடுத்திடமாட்டார்.

என்ன வேலையாய் இருந்தாலும், வீட்டிற்குள் காசிராஜன் நுழைகிறார் என்றால், பார்வை அங்கே அவர்மீது சென்றுவிடும். கால்களோ தன்னப்போல் கணவரிடம் நகர்ந்துவிடும். இதழ்களா தானாய் திறந்து “வாங்க…” என்று வரவேற்பாய் ஒருவார்த்தையை மொழிந்துவிடும்.

காசிராஜனும் அப்படித்தான், எப்போது வீடு நுழைந்தாலும் கண்கள் என்னவோ மனைவி எங்கே என்று ஒருநொடியில் தேடிவிடும். சந்திராவை கண்டதுமே, அவர் முகத்தில் மேலும் ஒரு இளநகை வந்து ஒட்டிவிடும்.

இப்படி அப்பா, அம்மாவின் அழகான நேசத்தைக் கண்டு வளர்ந்து வந்தவளுக்கு, தானும் இப்படியான ஒரு காதலான வாழ்வை வாழவேண்டும் என்று மிக மிக ஆசை. அதற்காக காதலித்து கல்யாணம் முடிக்கவேண்டும் என்கிறது போலான எண்ணமெல்லாம் இல்லை.

அவளைப் பொறுத்தவரையில், அவளுக்கான வாழ்க்கை துணை என்பது அவளின் அப்பா அம்மா கை காட்டும் ஒருவன் தான். ஆனாலும் அந்த வாழ்வு குறித்து அவளுக்கு நிறைய கனவுகளும், கற்பனைகளும் உண்டு.

எப்படியேனும் ஒரு அரசு உத்தியோகத்தில் அமர்ந்திடவேண்டும் என்று, பள்ளி படிப்பு முடியவுமே அதற்கான பயிற்சிகளில் இறங்கிவிட்டாள். இளங்கலை படிக்கும்போதே, தேர்வுகள் எழுதத் தொடங்கி, முதுகலை முடித்து ஒருவருடத்திற்குள் வேலையும் வாங்கிவிட்டாள்.

அதிலும் அவளின் விருப்பமாய், சொந்த ஊருக்கு பக்கத்திலேயே வேலை கிடைத்துவிட, தங்கமீனாளை கையில் பிடிக்க முடியவில்லை.  வேலைக்கான ஆர்டர் கையில் வரவுமே சொல்லிவிட்டாள் “கல்யாணம்னு எல்லாம் யாரும் பேசக் கூடாது. வேலைக்கு சேர்ந்து ஒருவருசமாவது ஆகணும்..” என்று சொல்லிவிட, மகளுக்கு உடனே திருமணம் செய்யும் எண்ணமெல்லாம் இவர்களுக்கும் இல்லை.

“இருபத்தி ஆறு ஆகட்டும்…” என்றுதான் காசிராஜனும் நினைக்க, தெரிந்தவர்கள், சொந்தங்கள் என்று நிறையபேர் பெண் கேட்டார்கள் தான்.

“இப்போதான் வேலைக்கு சேர்ந்திருக்கா, இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே..” என்று இன்முகமாகவே மறுத்துவிட்டார்கள்.

ஆனால் அழகரசி கூட “கால நேரம் நம்ம இஷ்டத்துக்கு எல்லாம் கூடி வராது. தானா நல்ல இடமா வந்தா நம்ம வேண்டாம்னு எல்லாம் சொல்லக் கூடாது..” என்று கொஞ்சம் கடிந்துவிட்டார்.

வேம்பரசனும் சந்திராவிடம் “காசி வேலையில இருக்கும்போதே, மீனாளுக்கு கல்யாணம் முடிக்கிறது தான் நல்லது சந்திரா. வரன் பார்க்க ஆரம்பிச்சா உடனே முடியும்னு நம்ம சொல்ல முடியாது இல்லையா? நாங்களும் வெடுப்பா இருக்கும்போதே, ஒரு நல்லது காண வேணாமா ம்மா?” என்று கேட்க, அதன்விளைவு,

இதோ சித்திரை முடிந்து வைகாசியில் இருந்து தங்கமீனாளுக்கு, வரன் பார்க்கலாம் என்கிற முடிவிற்கு வந்துவிட்டார்கள். இதில் கொஞ்சம் மீனாளுக்கு  மன சுணக்கம் தான். ஆனாலும் பெரியவர்கள் பேச்சிற்கு மறுப்பு சொல்லவெல்லாம் இல்லை. 

எப்போதுமே அவளது விருப்பத்திற்கு குறுக்கே நிற்காத பெற்றோர்களும், அவளை அத்தனை அன்புடன் வாஞ்சயாய் அரவணைத்துக்கொள்ளும் தாத்தாவும், பாட்டியும் எது செய்தாலும் நல்லதற்காக மட்டுமே இருக்கும் என்கிற அதீத நம்பிக்கை, மீனாளுக்கு இதிலும் உண்டு.

இதோ, இப்போது கூட அவளது அலுவலகத்தில் பணிபுரிவோர் எல்லாம் சேர்ந்து திருப்தி வரைக்கும் சென்றுவிட்டு வந்தார்கள். வீட்டில் செல்கிறேன் என்று சொன்னதற்கு, சரி என்பதனைத் தவற யாரும் ஒன்றும் சொல்லவில்லை.

சந்திரா எழுப்பியதில், கட்டிலில் எழுந்தமர்ந்திருந்தவள் வெளிய அப்பாவும் அம்மாவும் பேசுவது மெல்லிய குரலில் கேட்க “சரியான லவ் பேர்ட்ஸ்..” என்று வழக்கம் போல சொல்லிக்கொண்டே, தன்னை சுத்தம் செய்து வந்தவள், பெற்றோர்களிடம் தான் சென்று அமர்ந்தாள்.

இருவரின் முகமுமே கொஞ்சம் வாட்டமாய் இருப்பது போல் தோன்ற “என்னப்பா?!” என்றாள் கேள்வியாய்.

“என்ன மீனாம்மா, தூங்கி எழுந்தாச்சா? முதல்ல டிபன் சாப்பிடு…” என்று காசிராஜன் சொல்ல,

“ப்பா என்ன விஷயம்? ரெண்டு பேர் முகமுமே சரியில்லை..” என்றாள் நெற்றி சுருக்கி.

“இவ ஒருத்தி கேள்வியா கேட்டுக்கிட்டு. முதல்ல சாப்பிடு. நீங்களும் சாப்பிட்டு கிளம்புங்க..” என்று சந்திரா குரலை உயர்த்தவும் தான், அப்பா மகள் இருவரும் தட்டில் கவனம் வைக்க, பாதி உணவு முடியும் நேரத்தில் தான்,

சந்திரா “சென்னைல இருந்து போஸ் அண்ணன் குடும்பம் வருதாம் இங்க..” என்று மகளிடம் சொல்ல,

“மகராஜா குடும்பம் வருதாக்கும்?! இனி இவங்க அல்டாப்பை வேற கொஞ்ச நாளைக்கு சகிக்கணுமா?!” என்று மகள் கிண்டலாய் மொழிந்ததில், காசிராஜன் முகம் லேசாய் மாறியது.

சந்திராவோ ‘நான் பேசிக்கிறேன்..’ என்று ஜாடை காட்டிவிட, காசிராஜன் உண்டுமுடித்து,  உடை மாற்றிக்கொண்டு பள்ளிக்கு கிளம்பிவிட்டார்.

மகள் முழுதாய் உண்டு முடிக்கவும், சந்திரா முழு விபரத்தையும் சொல்லி முடிக்க “ஓ!” என்றதைத் தவற மீனாள் ஒன்றுமே சொல்லவில்லை.

என்ன சொல்ல முடியும்?!

ஆனாலும் அவளைப் பார்த்ததும் எப்போதுமே அன்பாய் பேசும் ராதாவின் முகமும், பிருந்தாவின் முகமும் தான் மனக்கண்ணில் வந்து போனது. பிடிக்கிறதோ இல்லையோ, இவர்களும் நம் உறவுகள் என்று சிறு வயதில் இருந்து மனதில் பதிந்து போனவர்கள் தானே இவர்களும்.

இதற்கும் அதீத ஒட்டுதல் எல்லாம் இல்லை. அலைபேசியில் அவ்வப்போது பேசிக்கொள்ளும் அளவில் கூட நெருக்கமில்லை. ஊருக்கு வருகையில், அதுவும் பெரியவர்களை கொண்டு மட்டுமே இவர்களின் உறவு. இருந்தும் வருடத்திற்கு ஒருமுறை இங்கே வந்து செல்கையில், போஸ்ராஜன் எப்போதும் போல் மிடுக்குடனும், செருக்குடனும் நடந்துகொண்டாலும்,  பெண்கள் இருவரும் இவர்களுடன் நல்லபடியாகவே பழகுவர்.

ப்ரித்வி பற்றி சொல்லவேண்டியதே இல்லை. அவனது உலகமே தனி என்பது போலத்தான் இருப்பான். அதற்காக மரியாதை குறைவு என்றெல்லாம் இல்லை. இரண்டொரு வார்த்தைகள், நலம் விசாரிப்புகள் அவ்வளவே.

என்னவொன்று, மீனாளுக்கு போஸ்ராஜன் தன் அப்பாவிடம் நடந்துகொள்ளும் முறை சுத்தமாய் பிடிக்காது. இப்போதும் அதையே நினைத்து “என்ன ஆட்டம் போட்டார் ம்மா. நம்ம அப்பாவை எவ்வளோ துச்சமா பார்த்து பேசுவார். நல்லா வேணும் தான்..” என்று பொறுக்கமாட்டாமல் சொல்லிவிட,

“மீனா..!” என்று அதட்டிவிட்டார் சந்திரா.

தான் இப்படி எண்ணுவது கூட தவறு என்று தெரியும்தான். இருந்தும், அவர் நடந்துகொண்ட விதத்திற்கு, இப்படி யாரால் தான் பேசமால் இருக்க முடியும். அம்மாவின் அதட்டலுக்கு ஒன்றும் சொல்லாமல், தங்கமீனாள் அமைதியாய் இருந்துகொள்ள,

“பிருந்தாக்கு இப்போதான் கல்யாணம் பேச ஆரம்பிச்சாங்க. இப்போன்னு பார்த்து இப்படி ஆகிருச்சு? வாழ்க்கை திடீர்னு மாறும்போது அது எப்படியிருக்கும்னு உனக்கு புரியாது மீனா. இனி வார்த்தைக்குக் கூட, யாரையுமே இப்படி பேசிடாத நீ…” என,

“சரிம்மா…” என்று பெருமூச்சு விட்டவள் “ஆமா அந்த சின்ன மகராஜாக்கு நல்ல வேலை நல்ல சம்பளம் தானே. அப்புறமென்ன?!” என்றாள் அடுத்து.

“அடியே..” என்று முறைத்த சந்திரா “ப்ரித்விக்கு நல்ல வேலை, சம்பளம் தான். ஆனா இப்போ இருக்க சூழலுக்கு, அதுமட்டுமே போதாது. வீட்டு வாடகை குடுக்கணும், குடும்பம் பண்ணனும், தங்கச்சி கல்யாணப் பொறுப்பு, அடுத்து அவனுக்குன்னு ஒரு வாழ்க்கைன்னு எத்தனை இருக்கு..” என,

“ம்மா..!” என்று வியப்பாய் பார்த்தவள் “இப்போ நீ சொல்ற இத்தனையும் எல்லா குடும்பத்துலையும் நடக்கிற ஒண்ணுதான்..” என்றாள்.

“அட ஆமா டி. ஆனா அவங்க எல்லாம் ஆரம்பத்துல இருந்தே வசதியா பழகிட்டாங்க. இப்போ சூழ்நிலை இப்படி மாறினா என்ன பண்றது?”

“அதுக்குன்னு?! வழியே இல்லையா என்ன? இப்போ இங்க ஆச்சிக்கும், தாத்தாக்கும் வீடே இல்லைன்னு வைங்க, அப்போ என்ன செய்வாங்க? எனக்கென்னவோ இது சரின்னு படலம்மா. என்னிக்கு இருந்தாலும், பெரிய வீடு அவங்களுக்குதான். தாத்தா சொத்தெல்லாம் கூட அவங்களுக்கு தான். ஆனா இத்தனை வருசமா பேருக்கு வந்துட்டு தலைகாட்டி போயிட்டு, இப்போ அவங்களுக்கு கஷ்டம்னதும் இங்க வர்றாங்களா?” என்றவளுக்கு கோபமே.

“மீனா, இதெல்லாம் நீ பேசக் கூடாது. பெரியவங்க பார்த்துப்பாங்க…” என்று சந்திரா கண்டிக்க,

“இப்போ என்ன, இனி நம்ம முன்ன போல போய் வர முடியாது. அப்படிதானே?!” என்றாள் அவளும் வேகமாய்.

“அவங்க வந்து எல்லாம் கொஞ்சம் இலகுவாகட்டும். அடுத்து போய் பார்த்தா ஆச்சு. உனக்கு விஷயம் தெரிஞ்சிருக்கட்டும்னு சொன்னா, நீ என்னென்னவோ பேசிட்டு இருக்க. இப்பவும் சொல்றேன், பெரியவங்க விஷயம், சொத்து விஷயம் இதெல்லாம் உனக்கு தேவையே இல்லை. நமக்கு பெரியவங்க சொந்தம் மட்டும் போதும்…” என்று, எங்கே மகள் அனைவரின் முன்னமும் எதுவும் பேசிவிடுவாளோ என்று பயந்தே சொல்லிவிட்டார் சந்திரா.

அம்மாவின் பேச்சின் அர்த்தம் புரியவும், லேசாய் புன்னகைத்தவள் “யாரையும் எதுவும் பேசமாட்டேன் ம்மா. அவங்களை பேசி எனக்கென்னன ஆகிடப் போகுது?” என்றவள் “நான் போய் லட்டு குடுத்துட்டு, ஆச்சியைப் பார்த்துட்டு வர்றேன்..” என்று கிளம்ப,

“இப்போதானே சாப்பிட்ட. இன்னும் நீ குளிக்கக் கூட இல்லை. கொஞ்ச நேரம் கழிச்சு குளிச்சிட்டு போயிட்டு வா. எனக்கும் வேலை இருக்கு..” என்று நகர்ந்துவிட்டார் சந்திரா.