அத்தியாயம் – 19

கிடா விருந்து தடபுடலாய் தான் நடந்துகொண்டு இருந்தது. காசிராஜனோடு வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்று அனைவருமே பரிமாறும் வேலையில் இறங்கியிருக்க, மீனாளும் அவர்களுடன் தான் இணைந்து நின்று இருந்தாள்.

“என்னதான் ஆள் விட்டு சமையல் பண்ணாலும், நம்ம கையாள சாப்பாடு போட்டாதானே நல்லாருக்கும்..” என்று அழகரசி ராதாவிடம் சொல்லியவர்

“ப்ரித்வி நீ இதெல்லாம் பழகிக்கோ.. போ.. நீயும் போய் நில்லு.. அப்போதான் உன்னையும் நாலு பேருக்கு தெரியும்.. நீயும் நாலு பேரை தெரிஞ்சுப்ப..” என்று கூறிட, அவனோடு ரித்திக்கும் தொற்றிக்கொண்டான்.

ஆனால் இதைக் கேட்டதுமே போஸ்ராஜனின் முகம் மாறிப்போனது.

“இதெல்லாம் அவனுக்கு பழக்கமில்லாத ஒன்னு சித்தி. அதையும் மீறி, வீட்டு ஆளுங்களே பரிமாறினா, எத்தனை நேரத்துக்கு நிக்க முடியும். ஆளுங்களை விட்டிருந்தா, அவங்களே சரியா செஞ்சிருப்பாங்க. இப்போ பாருங்க, அவங்கவங்க, அவங்களோட சொந்தங்களுக்குத்தான் கவனிப்பாங்க. அது எல்லா நேரத்துலையும் சரி வராது..“ என்று சொல்ல,

அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. ஆனால் இவர்கள் எப்போதுமே இப்படிச் செய்துதானே பழக்கம்.

வேம்பரசனோ “இங்க விருந்து குடுக்கிற ஆளுங்களே முன்ன நின்னு கவனிச்சுத்தான் பழக்கம் போஸு. இதுவரைக்கும் தப்பாவும் எதுவும் ஆனது இல்லை. பாரு வினோதனுக்கும் அவன் தம்பிக்கும் இதுல சம்பந்தமில்லை தான். ஆனா நம்ம குடும்பம்னு அவங்க ஆளுக்கு முன்ன போய் நிக்கிறாங்க. அப்போ ப்ரித்வி தள்ளி நிக்கிறது சரியில்ல தானே. அவனும் எல்லாம் பழகட்டுமே. நீதான் ஆரம்பத்துல இருந்தே ஒதுங்கி நின்னுட்ட..” என்றிட, அதற்குமேல் போஸ்ராஜனுக்கு எதுவும் பேசமுடியவில்லை.

பிருந்தாவிற்கோ தானும் சென்று அவர்களுடன் இணைந்து, வேலை செய்யவேண்டும் என்று அத்தனை ஆசையாய் இருந்தது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தியாவது வினோதனோடு பேசவேண்டும் என்று மனம் பேராவல் கொள்ள “ம்மா நானும் போகவா?!” என்றாள் ராதாவிடம் மெதுவாய்.

“ம்ம்க்கும்.. உங்க அண்ணன் போனதுக்கே உங்கப்பா முகம் மாறிடுச்சு..  நீ எந்திரிச்சு போனா அவ்வளோதான். வெளியா ஆடுற சாமி எல்லாம் போதாதுன்னு உங்கப்பா இங்க ஆடிருவார்..” என்று மகளை தன்னோடு இருத்திக்கொள்ள, பிருந்தாவின் முகம் விழுந்துவிட்டது.

ஆனால் அங்கே ப்ரித்வியும், மீனாளும் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டாலும், பேசாமல் நகர ரித்திக் இதனைக் கவனித்தவன் “என்னடா சண்டையா?!” என்றான் மீனாளின் காதிலும் விழுவது போல.

ப்ரித்வியோ “மூடிட்டு எல்லாருக்கும் முட்டை எடுத்து வை..” என்று சொல்லிக்கொண்டே நகர,

மீனாளோ “ரித்திக் அண்ணா, ஸ்வீட் இருக்கு. முதல்ல அதைதான் வைக்கணும். முட்டை எல்லாம் அடுத்துத்தான்..” என்றாள், ப்ரித்வியை ஓரப் பார்வை பார்த்துக்கொண்டே.

ப்ரித்வி அதற்கும் எவ்வித பதிலும் கொடுக்காமல்,  கையில் இருந்த வாளியோடு நகர்ந்துவிட, ரித்திக்கும் அவன் பின்னே போக, வினோதன் இவர்களைப் பார்தவன் “என்ன ப்ரித்வி உங்களையும் பந்தி பரிமாற்ற  வச்சிட்டாங்களா?!” என்றான் தோழமையோடு.

“ஆமா வினோதன். ஆக்சுவலா இதெல்லாம் எனக்கு என்னன்னு கூட செய்ய தெரியாது.. ஆனாலும் பாக்குறப்போ நல்லாருக்கு..” என்றபடியே அவன் நிற்க,

“முதல்ல அப்படிதான் இருக்கும். அடுத்து பழகிடும். இதோ நிக்கிறாளே நூத்து கிழவி, இவளே சொல்லிக்குடுப்பா..” என்று தங்கமீனாளை வம்பிழுக்க, வினோதன் தங்கமீனாளை கிழவி என்று சொல்லவுமே, ப்ரித்விக்கு புன்னகை அரும்புகள் தோன்றிட, மீனாளோ இருவரையும் முறைத்து நின்றாள்.

ரித்திக்கோ கன கச்சிதமாய் இதில் தலையிடாமல், அனைவரின் இலையிலும் இனிப்பு வைத்துக்கொண்டே நகர்ந்துவிட்டான். காசிராஜன் கூட “என்ன தம்பி நீங்களும் வந்துட்டீங்களா?!” என்று புன்னகையோடு கேட்க,

“பழகிக்கிறேன் சர்..” என்றான்.

“நல்லது நல்லது.. செய்ங்க..” என்றவர் அவரின் முதுகில் தட்டிவிட்டுச் செல்ல, அங்கோ மகள் கோபமாய் முறைத்துக்கொண்டு நிற்பது கண்டு

“இங்க என்ன பேச்சு மீனாம்மா. பந்தி கவனிக்காம என்ன அரட்டை?” என்று கேட்டுக்கொண்டே தான் வந்தார்.

எதுவும் தெரியாமல் அப்பாவும் இப்படி கேட்டுக்கொண்டு வந்து நிற்கவும் மீனாளுக்கு இன்னும் முகம் மாறிப்போனது. ப்ரித்வியோ ‘போச்சு டா…’ என்று நினைக்க,

வினோதனோ “சார்.. உங்க பொண்ணுக்கு மஞ்ச தண்ணி ஊத்தி மலை ஏத்தி விடுங்க..” என்று சொல்லிக்கொண்டே நகர்ந்துவிட, காசிராஜன் பக்கென்று சிரித்துவிட்டார்.

“ப்பா…” என்று மீனாள், காலை உதைத்து நின்றவள் “ரெண்டு பேரும் என்னை கிண்டல் பண்றாங்கப்பா..” என்று சிறுமி போல புகார் சொல்ல, வினோதன் தப்பித்திருந்தான். பக்கத்தில் நின்ற ப்ரித்வி பரிதாபமாய் மாட்டிக்கொண்டான்.

காசிராஜனுக்கு மகளைப் பற்றியா தெரியாது. இருந்தும் அவள் சொல்கிறாள் என்பதனால் “என்ன ப்ரித்வி?!” என்று கேட்க, அவனோ அதனை நிஜமென்றே ஒருநொடி நம்பிவிட்டான்.

“அது.. நா.. நா நான் எதுவமே செய்யல மாமா..” எனும்போதே, திரும்பி வந்த வினோதன்,

“ப்ரித்வி சில்லி சிக்கன் அந்த லைன்ல இல்லை பாருங்க.. நடங்க…” என்று சொல்லிக்கொண்டே அவனை அழைத்துச் சென்றுவிட்டான்.

“மாமா பேசிட்டு இருந்தார் வினோதன்..” என்று ப்ரித்வி சொல்ல,

“அட அவரோட குட்டி பாப்பா கம்ப்ளைன்ட் பண்ணிருப்பா இல்லையா. அதனால அவளை கூல் பண்ண உங்களை கேட்டிருப்பார். மத்தபடி ஒண்ணுமில்ல..” என, அப்போதுதான் ப்ரித்விக்கு இவர்களின் விளையாட்டே புரிந்தது.

“இதென்ன விளையாட்டு?!” என்று வினோதனிடம் கேட்க,

“சின்ன சின்ன என்ஜாய்மென்ட் லைப்ல இருக்கணும் தானே. அப்பப்போ மீனாளை இப்படித்தான் நாங்க கேலி கிண்டல் செய்வோம். அவளுக்கும் இது தெரியும்…” என்று சொல்லிக்கொண்டே வினோதன் பந்தியை கவனிக்க, ப்ரித்வியோ மீனாள் என்ன செய்கிறாள் என்று திரும்பிப் பார்க்க, அவளோ யாருடனோ வாயாடிக் கொண்டு இருந்தாள்.

‘நானும் பாக்குறேன், வேலையே செய்யல. ஆனா வேலை நடக்குற எல்லா இடத்துலயும் இருக்கா..‘ என்று அவளை கண்டுகொண்டான்.

பந்தி விறுவிறுப்பாய் நடந்துகொண்டு இருக்க, போஸ்ராஜனோ ராதாவிடம் “சாப்பிட்டு கிளம்பலாம்…” என்று சொல்ல,

“இப்போவேவா?!” என்றார் ராதா.

“ஏன் முதல் பந்திக்கு ஒன்னும் போகலையே. கூப்பிட்டதுக்கு வந்தாச்சு.. எனக்கு சூளைக்கு போகணும் ராதா. நேரமாச்சு.. சாப்பிட்டு கிளம்பலாம்..” என்றவர்

“சித்தி, சாப்பிட்டுக் கிளம்பலாம்..” என்று அழகரசியிடமும் சொல்ல,

அழகரசி ராதாவை ஒரு பார்வை பார்த்தவர் “நீங்க சாப்பிட்டு முன்ன கிளம்புறதுன்னா கிளம்புங்க. நான் காசி கூட வந்துக்கிறேன்..” என்றுவிட்டார்.

ராதாவிற்கோ வினோதனின் அம்மாவுடன் நன்றாய் பேச்சு ஒத்துப் போக, கிடைத்த வாய்ப்பை வீணாக்க அவருக்குப் பிடிக்கவில்லை. கணவரை மட்டும் உணவுண்ண வைத்து, அனுப்பி வைப்பதும் சரியாய் இருக்காது. என்னடா செய்வது என்று நினைக்கும்போதே சந்திரா வேகமாய் அங்கே வந்தவர்,

அழகரசியிடம் “சித்தி, நான் அவசரமா வீடு வரைக்கும் போயிட்டு வரணும்.யாரும் என்னை கேட்டா நீங்க பார்த்துக்கோங்க..“ என்று சொல்ல,

“என்னாச்சு?!” என்றார் அழகரசியும்.

“இல்ல.. எப்பவும் சமையல் ஆளுங்களுக்கு, பின்ன வேலை செஞ்சவங்களுக்கு துணி நம்ம வீட்டு சார்பா எடுத்துக் கொடுப்போம்தானே சித்தி. சேலை இருந்த பேக் வீட்லயே வச்சிட்டு வந்துட்டேன். இப்போ பந்தி முடியும்போது அவங்களுக்கு குடுக்கணும் இல்லையா…” என்று சொல்ல,

லட்சுமியோ “அதுக்கேன் சந்திரா நீ போற. பசங்களை அனுப்பிவிடு. இரு வினோவை கூப்பிடுறேன்..” என்றவர் மகனுக்கு அலைப்புவிடுக்கப் போக,

ராதாவோ “நீங்க இருங்க. ப்ரித்வி போயிட்டு வரட்டும்..” என்று லட்சுமியிடம் சொன்னவர் “பிருந்தா நீ போய் அண்ணன் கூட்டிட்டு வா..” என்று மகளை அனுப்பவும், போஸ்ராஜனின் முகம் கடுகடுத்துப் போனது.

சந்திராவோ சங்கடமாய் “இருக்கட்டும் அண்ணி. நானே போயிட்டு வந்துடுறேன். நீங்க இங்க பார்த்துக்கோங்க..” என்று பொதுவாய் சொல்ல, அதற்குள் பிருந்தாவோடு ப்ரித்வி வந்துவிட்டான்.

“என்னம்மா?!” என்று விசாரிக்க,

“இங்க வேலை செய்றவங்களுக்கு குடுக்கவேண்டிய ட்ரெஸ் மறந்து வச்சுட்டு வந்துட்டாங்களாம்.. எடுத்துட்டு வரணும்..” என்று ராதா சொல்ல,

“இதை நீங்க என்கிட்டே சொல்லிருக்கலாம் தானே அத்தை..” என்றான் அவன் சென்று எடுத்து வருவதற்கு சம்மதம் போல.

“வீட்டு ஹால்ல தான் ஒரு மெரூன் கலர் பேக் ப்ரித்வி..” என்றவர் வீட்டின் சாவியைக் கொடுத்துவிட்டு “கூட நானும் வர்றேன்..” என, அப்போதெனப் பார்த்து தங்கமீனாள் அங்கே வந்து சேர்ந்தாள்.

“லட்சுமி ஆன்ட்டி, அங்க கொஞ்சம் ப்ரீ ஆகிருக்கு. வினோதனை உங்களை வரச் சொல்றார்..” என,

“இருக்கட்டும்டா லாஸ்ட்ல நம்ம எல்லாம் ஒண்ணா உக்கார்ந்துக்கலாம்..” என்று லட்சுமி சொல்லும்போதே,

காசிராஜன் அங்கே வந்தவர் “வாங்க சாப்பிடலாம்..” என்று முறையே கணேசன் மற்றும் போஸ்ராஜன் குடும்பத்தினரை அழைப்பு வைக்க, சந்திராவும் “வாங்க வந்து சாப்பிடுங்க..” என்று சொல்லி நின்றார்.

அழகரசி தான் “நீ போ ப்ரித்வி. நீ இங்கன இருந்து பாரு சந்திரா. அவன் தெரியலைன்னா கால் பண்ணி கேட்டுப்பான்..” எனும்போதே,

மீனாள் என்னவென்று கேட்க, சந்திரா விஷயம் சொல்லவும் “ம்மா நானே போயிட்டு வர்றேன்..” என்றவள் அப்பாவிடம் கார் சாவி வாங்கிக்கொண்டு, ப்ரித்வி கையில் இருந்த அவர்களின் வீட்டு சாவிக்கு கை நீட்டினாள்.

இவர்கள் பேசிக்கொண்டு நிற்கும்போதே, போஸ்ராஜன் உண்பதற்கு என்று எழுந்துவிட, ராதாவோ வேறு வழியில்லாமல் அவரோடு சேர்ந்து எழுந்துகொள்ள, காசிராஜன் கணேசனையும் லட்சுமியையும் மீண்டும் அழைக்க, அவர்களும் உண்பதற்கு எழுந்துகொண்டார்கள். பிருந்தாவும் இவர்களுடன் நடக்க,

சந்திராவோ “ரெண்டு பேர்ல யார்னாலும் போய் எடுத்துட்டு சீக்கிரம் வாங்க.. நான் போய் இவங்களை கவனிக்கணும்..” என்றவர் அவர்களுக்கு பின்னே சென்றுவிட்டார்.

அழகரசியோ “மீனாளே.. ப்ரித்வி கிளம்பி நின்னுட்டான்ல. என்ன பிடிவாதம் உனக்கு?” என்று மெதுவாய் கேட்க,

“எனக்கொண்ணும் பிடிவாதம்லாம் இல்லை ஆச்சி. அவங்களுக்கு எங்க என்னன்னு தெரியணும்ல..” என்றாள் நொடிப்பதுபோல.

“எல்லாம் உங்கம்மா சொல்லிட்டா. அவன் போயிட்டு வரட்டும்..” என்றவர் “நீ போயிட்டு வா ப்ரித்வி..” என்றார் பேரனிடம்.

ப்ரித்வியோ ‘பார்த்தியா..’ என்பதுபோல மீனாவை பார்த்துவிட்டு, நகரப் போக “ஆச்சி சாவி குடுக்க சொல்லுங்க. நானே போயிட்டு வர்றேன்..” என்று அப்போதும் முகத்தினை கடுகடுவென்று வைத்துக்கொண்டு தங்கமீனாள் நிற்க,            

ப்ரித்வி என்ன நினைத்தானோ “நீயே போயிட்டு வா..” என்றுசொல்லி, அவன் கரத்தில் இருந்த அவர்கள் வீட்டுச் சாவியை, அவள் முன்னே நீட்ட, தங்கமீனாள் எதுவும் சொல்லாமல், அதனை வெடுக்கென்று வாங்கிக்கொண்டு நடக்க

“என்னாச்சு ப்ரித்வி இவளுக்கு?!” என்றார் அழகரசி.

“அது.. சும்மா பாட்டி. நானும் வினோதனும் கொஞ்சம் கிண்டல் பண்ணிட்டோம்..” என்று சமாளிக்க,

“அதுக்கெல்லாம் இப்படி இருக்கமாட்டாளே..” என்று அழகரசி நெற்றி சுருக்க, ப்ரித்வி அப்படியே வேலை இருப்பது போல நகர்ந்துவிட்டான்.

தங்கமீனாளுக்கு ஏனோ கோபமும் எரிச்சலும் கலந்துகட்டி நின்றது. அன்று ப்ரித்வி அலைபேசியை அமர்த்தி வைத்தது இப்போதும் கூட அவளை முகத்தில் அடித்த உணர்வு தான். அவனது அத்தனை சமாதானங்களும் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அதிலும் இப்போது, ஒன்றுமே நடவாதது போல வினோதனோடு சேர்ந்து அவன் கேலி செய்து சிரித்தது, இன்னும் காந்தியது அவளுக்கு.

‘பண்றதை எல்லாம் பண்ணிட்டு…’ என்று அவள் பல்லைக் கடித்துக்கொண்டே காரினைக் கிளம்ப, அந்த பரிதாபம் கார் கிளம்பாமல் சண்டித்தனம் செய்தது.

‘என்னாச்சு இந்த காருக்கு..’ என்று அவளும் என்னென்னவோ செய்து பார்க்க, கார் இம்மியளவு கூட நகரவில்லை.

வேறு வழியில்லாமல் சந்திராவிற்கு அழைத்து “ம்மா கார் ஸ்டார்ட் அகலைம்மா.. அப்பாவை வரச் சொல்லேன்..” என,

“உன்னை…” என்று பல்லைக் கடித்த சந்திரா, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ப்ரித்வியோடு வந்தார்.

மீனாவிற்குத் தெரியும், அம்மா இவனை அழைத்துக்கொண்டு தான் வருவார் என்று. ப்ரித்வியோ அவளை நக்கலாய் ஒரு பார்வை பார்த்தவன் “சாவி…” என்று அவள் முன்னே வீட்டு சாவியை வாங்க கை நீட்ட,

“முறைச்சிட்டே நிக்காத மீனா. சொல்ற பேச்சை கேட்கிறதே இல்லை..” என்று சிடுசிடுத்தவர் “கிளம்பு நீயும் கூட போயிட்டு வந்து சேரு..” என்று அவளையும் அவனோடு கிளம்பச் சொல்ல,

“ம்மா..!” என்றாள் அதிர்ந்து.

“என்ன நொம்மா?! ஒருத்தருக்கு ட்ரெஸ் குடுக்கிறது நல்ல மனநிலைல குடுக்கணும். இந்த வருஷம் உன் கையாள குடுக்க வைக்கணும்னு இருந்தேன். நீ இப்படி முகத்தை தூக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கும். கிளம்பு கூட போய் எடுத்துட்டு வா..” என்றுவிட்டு சென்றுவிட்டார்.

ப்ரித்வி எதுவும் சொல்லவில்லை. காசிராஜன் காரின் பக்கத்தில் தான் அவனது காரினையும் நிறுத்தியிருக்க “வா தங்கா…” என்று மெல்லிய குரலில் சொன்னவன், அவள் ஏறுவதற்காக முன்பக்க கதவினையும் திறந்து வைக்க,

“தேங்க்ஸ்..” என்று முணுமுணுத்தபடி ஏறிக்கொள்ள, அவனும் எதுவும் பேசாமல் காரினை எடுத்தான்.

தவிர்க்கவேண்டும் என்று எண்ணியும் கூட, அது முடியாமல் போனதே என்கிற எண்ணம் தான் அவளுக்கு. பின்னே இரண்டு நாட்களாய் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் இதோ, இந்த நொடி முடிவடைந்து போனது அல்லவா.

வராத சொடுக்கினை கை விரல்களில் போட்டபடி, பார்வையை வெளிப்பக்கம் திருப்பி வைத்து அமர்ந்திருக்க, ப்ரித்வியோ “அப்படி என்ன கோபம் தங்கா?!” என்றான் ஆழ்ந்த குரலில்.

‘கேட்டுவிடுவானோ..’ என்று புறுபுறுத்துக் கொண்டிருந்த மனது, இப்போது ப்ரித்வி கேட்டதுமே கொஞ்சம் அமைதி கண்டது.

உடனே பதில் சொல்லாமல் இருந்தவளை ஒரு பார்வை பார்த்தவன் “இந்த ரெண்டு நாளும், நீ வர வழியில எல்லாம் வெய்ட் பண்ணேன்…” என்று அவனே சொல்லக் கேட்டதும், அவளுள் ஒரு அடர்ந்த உணர்வு.

சட்டென்று வேகமாய் வந்து உள்நுழைந்து, நெஞ்சடைக்கச் செய்தது போல இருந்தது  மீனாவிற்கு. பின்னே, அவன் காத்திருப்பான் என்று அவள் மனம் இந்த இரண்டு நாட்களும் கூப்பாடு போட்டது தானே. அதை இல்லை என்று அவளால் கூட மறுக்க முடியாதே. தன் மனம் போகும் பாதை கண்டு அவளே கொஞ்சம் அஞ்சியல்லவா இருந்தாள்.

இந்த நிலையில் ப்ரித்வியை சந்திப்பதும், அவனோடு பேசுவது என்பதுமெல்லாம் அவளுக்கு பெரிய விசயமாய் இருந்தது. இயல்பில் இலகுவில் கடந்து செல்லும் ஒன்றாய் அவளுக்குத் தெரியவில்லை. அதனாலே தான்   அவன் காத்திருப்பான் என்று தெரிந்தே, வேறு வழியில் அவள் சென்றாள். ஆனாலும் அவன் சொல்லி கேட்கையில் ஒருமாதிரி இருக்கவே செய்தது. கூடவே ஒரு மென் உணர்வும் சேர்ந்தே பிறந்தது.

‘நீ வரும் வழியில் காத்திருந்தேன்…’ என்று அவன் சொன்னது அடிநெஞ்சில் ஒரு சிறு பூவினை பூக்கவே செய்தது.

அத்தனை நேரம் வாய் திறவாதிருந்தவள் “போன் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு, எதுக்கு வெய்ட் பண்ணனும்..“ என்றாள் அவனைப் பாராமலே.

“நான் அத்தனை மெசேஜ் போட்டும் கூட, உனக்கு மனசு சமாதானம் ஆகலை தானே தங்கா..” என்று அவன் ஆற்றாமையாய் கேட்டுவிட, அவனது அந்த குரல் அவளை என்னவோ செய்தது தான் நிஜம்.

“அப்படின்னுல்லாம் இல்லை..” என்று அவளும் இறங்கிய குரலில் பேச,

“பின்னே ஏன் பேசல என்னோட? புது வீட்டு பூஜைக்கு நான் உன்னை இன்வைட் பண்ணேன் தானே. ஆனா நீ விருந்துக்கு வாங்கன்னு ஒரு வார்த்தை கூட கூப்பிடல. வரக் கூடாதுன்னு தான் இருந்தேன்..” என்றவன் நெற்றியை அழுந்த நீவிக்கொண்டான்.

வரக் கூடாது என்று எண்ணினேன் என்று அவன் சொன்னதுமே, பார்வையை சரக்கென்று அவன் பக்கம் திருப்பியவள் “ப்ரித்வி மாமா..” என்று அதிர்ந்து அழைக்க,

“ஆமா.. மாமாதான் ப்ரித்வி மாமா தான். இந்த ரெண்டு நாள்ல எத்தனை டைம் கால் பண்ணேன்.. எத்தனை மெசேஜ் போட்டேன்..” என்றவன், அவனுடைய அலைபேசியை அவளின் மடியில் தூக்கி போட்டவன் “மொபைல் லாக் இல்ல.. போட்டோஸ் இருக்கும் நீயே டெலிட் பண்ணிக்கோ…” என்று சொல்ல,

“மாமா..!” என்றாள் மீண்டும் அதிர்ந்து.

“உனக்கு வேனாம்தானே. டெலிட் பண்ண சொன்னாதானே.. நீயே பண்ணிடு. எனக்கு பண்ண மனசு வரல..” என்றவன் பார்வை மொத்தமும் சாலையில் தான்.

இவன் இப்படியெல்லாம் பேசுவான் என்று அவள் நினைத்தாளா என்ன?!

ஒரே நேரத்தில் அவளுக்குள்ளே பனிக்கட்டியின் குளுமையையும், நெருப்பின் தகிப்பையும் சேர்த்து தோன்றவைத்துக்கொண்டு இருந்தான் ப்ரித்வி. அவளின் புகைப்படத்தை அழித்துவிட மனம் இல்லையாம். அவளிடமே சொல்கிறான். அவளுக்கு உள்ளே குளுமையாய் இராதா என்ன?!

ஆனால் அதனை சொல்லும்விதம்..

‘ஷ்..! யப்பா…’ என்று பெருமூச்சு விட்டவள் “இப்போ நீங்க எதுக்கு இத்தனை கோபமா இருக்கீங்க மாமா..” என்றாள், அவனது அலைபேசியை அவனிடமே திரும்ப நீட்டியபடி.

ப்ரித்விக்கு இந்த இரண்டு நாட்களாய் மனதில் போட்டு படுத்தியது, அவள் கொடுத்த அழுத்தமெல்லாம் இன்றுதான் வெளிப்பாடு ஆகிறது போல. கிடைத்த வாய்ப்பினை அவன் வீண் செய்ய விரும்பவில்லை. அவளது அந்த புகைப்படங்களை பொக்கிஷம் போல நினைத்திருக்க, எத்தனை கூசாமல் அதனை அழித்துவிடு என்றுவிட்டாள்.

“டெலிட் யூவர் பிக்ஸ்..” என்றான் இறுகிய குரலில்..

“மாமா.. இந்த பேச்சை விடுங்களேன்..” என்று இறங்கிப் போவது அவள்முறையானது.

“எப்படி தங்கா?! நான் இன்டன்சலா உன்னை ஹர்ட் பண்ணனும்னு எதுவும் பண்ணலைன்னு அத்தனை சொல்லியும் கூட, அதுக்கு ஒரு சின்ன ரிப்ளை கூட நீ பண்ணல. அப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும்?! யாரும் என்னை இத்தனை உதாசீனப் படுத்தினது இல்லை..” என்று கடுகடுத்துவிட, மீனாளுக்கு சட்டென்று கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.

“எ.. எனக்கும் அப்படித்தான் இருந்தது. நான் டைம் பார்க்காம கால் பண்ணிட்டேன் தான். ஆனா நீங்க சடனா ஸ்விட்ச் ஆப் பண்ணது ஒருமாதிரி ஆகிருச்சு.. நீங்க என்ன நினைப்பீங்களோன்னு யோசிச்சு யோசிச்சே ஒருவழியாகிட்டேன். பின்ன உங்கமேல கோபமும் கூட, அப்படி என்ன செஞ்சிடுவேன் நான்னு…” என,

“இட்ஸ் ஓகே..” என்று தோள்களை குலுக்கியவன் “டெலிட் யுவர் போட்டோஸ்..” என்று திரும்பச் சொல்ல, முதல்முறையாய் அவன் எத்தனை பிடிவாதக்காரன் என்பதனை காண்கிறாள் மீனாள்.

பின்னே போஸ்ராஜனின் மகனல்லவா.