‘ச்சே.. இனி எப்படி அவங்க முகத்துல முழிக்கிறது.. நேருக்கு நேரா பார்த்தா கூட, எப்படி கேசுவலா பேச முடியும்.. ரொம்ப ஓவரா பண்ணிட்டோம்..’ என்று நினைத்து நினைத்தே அவளுக்கு தன் மீது அத்தனை கோபம்.

இப்படி என்னென்னவோ சொல்லி சொல்லி அவள் எப்படியெல்லாம் தன்னைத் தானே  திட்டி தீர்க்கவேண்டுமோ அத்தனையும் திட்டிக்கொண்டாள். எல்லாம் முடிந்து இருந்தியாய் ப்ரித்வி மீதும் கொஞ்சம் கோபம் வந்தது நிஜம்.

‘கேட்டப்போவே போட்டோஸ் அனுப்பியிருந்தா, நான் எதுக்கு இப்படி செஞ்சிருக்கப் போறேன். இப்போ என்ன பண்ணிடுவேன்னு இப்படி போன் ஸ்விட்ச் ஆப் பண்ணனும்..’ என்று முணுமுணுக்கும் போதே, அவளையும் மீறி கன்னத்தில் சூடான கண்ணீர் மெல்ல இறங்கியது.      

‘பண்றதை பண்ணிட்டு, இப்படி முகத்துல அடிச்சமாதிரி போனை வேற ஆப் பண்ணி வச்சிட்டாங்க…’ என்று எண்ணியவள் வேகமாய் அலைபேசியை மீண்டும் எடுத்து “சாரி இனிமே உங்களுக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் எல்லாம் பண்ணமாட்டேன். நீங்க பேச முடியாதுன்னு சொல்லியும் நான் கால் செஞ்சிருக்க கூடாது. இட்ஸ் மை மிஸ்டேக்..

அந்த போட்டோஸ் எனக்கு ஒன்னும் வேணாம். டெலிட் பண்ணிடுங்க.. ஆனா அதுக்காக, இப்படி போனை ஆப் பண்ணி வைக்கிற அளவுக்கு நீங்க போயிருக்க வேண்டாம். அகைன் சாரி.. இனி தொல்லை பண்ணல..” என்று நீளமாய்,வேகமாய் டைப் செய்தவள் அதனை அவனுக்கு அனுப்பியும் விட்டாள்.

அப்படி அனுப்பியபிறகும் கூட, அவளுக்கு உறக்கம் வருவேனா என்று இருக்க, அடுத்து எப்போது உறங்கினாளோ தெரியவில்லை.

ஆனால் அங்கேயோ ரித்திக் “இப்போ எதுக்குடா போனை ஆப் பண்ண?!” என்று கேட்க,

“ஷ்.. விடேன் டா..” என்றான் ப்ரித்வி மாட்டிக்கொண்ட உணர்வில்.

“டேய் டேய் நல்லவனே.. நீ யாருன்னு எனக்குத் தெரியும். நான் யாருன்னு உனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். என்ன போட்டோஸ் அது?!” என்று ரித்திக் கேட்க, அவன் என்ன கேட்டும் ப்ரித்வி அவனுக்கு மீனாளின் படங்களை காட்டவில்லை.

“அது காலைல பிருந்தாவையும், தங்காவையும்  போட்டோஸ் எடுத்தேன்ல. அப்போ  தங்காவை மட்டும் தனியா சில ஸ்டில்ஸ் எடுத்தேன். அதை கேட்குறா. வேற ஒண்ணுமில்ல..” என்று சமாளிக்க,

“ஓ..! இதனை நான் நம்பவேற செய்யணுமா?!” என்றான் ரித்திக்.

“டேய்.. ” என்று பல்லைக் கடித்த ப்ரித்வி “தூங்கலாம் டா..” என்று கண்ணை கசக்க,

“அதெப்படி டா நான் சொல்றப்போ எல்லாம் நியாயவான் போல பேசிட்டு, இப்போ என்கிட்டே கூட காட்ட முடியாதளவுக்கு என்ன போட்டோ எடுத்து வச்சிருக்க?” என்று கேட்க,

“டேய் பரதேசி.. வாய்ல நல்லா வரும்.. தப்பா எல்லாம் எதுவுமில்ல.. அது.. அது.. நான் போட்டோஸ் எடுக்கிறப்போ தங்கா கொஞ்சம் ப்ளஷ் ஆகிட்டா… அதான் வேறொன்னும் இல்லை..” என்று மென்று முழுங்கி சொல்லிவிட,

“அதானே பார்த்தேன்.. ரித்திக் கணக்கு எப்பவும் தப்பாது. அந்த பொண்ணு உன்ன பாக்குதுன்னு சொன்னேன் தானே..” என்று ரித்திக் மலர்ந்த குரலில் கேட்க,

“அய்யோடா அதெல்லாம் ஒண்ணுமில்ல.. போய் படுத்துத் தொலை.. நாளைக்கு லாகின் பண்ணனும்..” என்று நண்பனை பிடித்துத் தள்ளினான்.

“அஹான்… சரிதான்.. சரிதான்…” என்று சொல்லியபடி ரித்திக் அவனது இடம் நோக்கிப் போக, ப்ரித்விக்கோ மனதும், முகமும் புதிய ஒரு உணர்வில் சிக்கிக்கொண்டது.

காலையில் தங்கமீனாள் தன்னை ஒருநொடி ரசித்துப் பார்த்ததை அவனும் கவனித்துத்தானே இருந்தான். அதை இப்போது வரைக்கும் ரித்திக்கிடம் கூட சொல்லவில்லையே.  இதோ இத்தனை வாயாடியும் கூட, அவளது புகைப்படங்களை அவன் காட்டவே இல்லையே.

என்னவோ அவளின் அந்த பாவனைகளும், உணர்வு வெளிப்பாடுகளும் தனக்கு மட்டுமே உரித்தான ஒன்றாய் அவனுள்ளம் சொந்தம் கொண்டாடியது. பிருந்தாவிற்கு கூட பொதுவான படங்களை தானே அனுப்பினான்.

தலையை அழுந்த கோதியவன், மீண்டும் படுக்கையில் சரிந்து அலைபேசியை உயிர்பிக்க, அடுத்த சில நொடிகளிலேயே அவள் அனுப்பியிருந்த குறுந்தகவல்கள் வந்து விழ, படித்தவனுக்கு அய்யோடா என்றாகிப் போனது.

‘தங்கா ரியலி ஐ டிட்ன்ட் மீன் லைக் தட்..’ என்று சொல்லிக்கொண்டவன், திரும்ப திரும்ப அவள் அனுப்பிய தகவலை படித்துப் பார்த்தவனுக்கு, புகைப்படங்கள் தனக்கு வேண்டாம், அழித்துவிடுங்கள் என்று அவள் சொல்லியிருப்பதைக் கண்டு, ஒரு வேகம்.

‘டெலிட் பண்ண முடியாது. என்ன பண்ணுவ நீ? உனக்கு வேணாம்னா இருந்துக்கோ.. எனக்கு வேணும்.. எனக்கு மட்டுமே வேணும்..’ என்று எண்ணிக்கொண்டு இருந்தவனின் எண்ணப் போக்கு, ப்ரித்விக்கே அதிர்ச்சியாய் இருந்தது.

‘ஓ! காட்..’ என்று மீண்டும் கேசத்தினை அழுந்த கோதியவன் ‘என்ன ப்ரித்வி நீ.. இப்படியெல்லாம் திங் பண்ற?!’ என்று தன்னை தானே கேட்டுக்கொள்ள, உடலில் ஒரு உஷ்ணம் பரவுவது நன்கு புரிந்தது அவனுக்கு.

தண்ணீர் பாட்டில் எடுத்தவன், அதனுள் இருந்த அத்தனை நீரையும் பருகியிருக்க, அவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.

அவளின் கோபம் நியாயமான ஒன்றாய் தான் தெரிந்தது அவனுக்கு. அவளது இடத்தில் யார் இருந்தாலும் இப்படித்தானே நினைப்பார்கள்.

‘எதுக்குடா ஸ்விட்ச் ஆப் பண்ண..’ என்று தன்னையே குறைசொல்லி கொண்டவன் ‘எல்லாம் இந்த ரித்திக் நாயால வந்தது..’ என்று கடிந்துகொண்டே நாளை எப்படியும் அவளிடம் பேசவேண்டும் என்று முடிவு செய்துகொண்டான்.

ஆனால் அடுத்த இரண்டு நாட்களும் அவள், அவனின் கண்களில் படவே இல்லை. அவனைத் அழைப்பையும் எடுக்கவில்லை. அவனின் குறுந்தகவல்கள் அனைத்திற்கும் அவள் பதிலே சொல்லவில்லை. அத்தனை ஏன் அதனை எல்லாம் அவள் படிக்கவே இல்லை.

‘நோ மீனா.. வேண்டாம்.. கோபமா இருக்கும்போது இன்னும் ஏதாவது பேசினா, உன் வாய் சும்மா இருக்காது…’ என்று தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டாள்.

ஆனால் ப்ரித்விக்கும் பொறுமை ஒரு அளவில் தானே. என்ன முயன்றும் அவளிடம் இருந்து எந்தவொரு பதிலும் இல்லை என்றதுமே, அவள் வரும் வழியில் கூட காத்திருந்து பார்த்தான் ஒருமுறை. அவளுக்கா தெரியாது, இவன் அப்படிச் செய்வான் என்று. வழக்கமாய் வந்து செல்லும் வழியைக் கூட மாற்றி இருந்தாள்.

ப்ரித்விக்கோ, இரவு நேரத்திற்கு மாற்றலாகும் முன்னம் முடிக்கவேண்டிய வேலைகள் வேறு நிறைய இருந்தது. அதுபோதாது என்று கட்டிட வேலைகள் ஆரம்பித்திருக்க, அதிலும் ஒரு கவனம் வைக்கவேண்டும், தான் அழைத்ததால் வந்திருக்கும் நண்பனோடும் நேரம் செலவிட வேண்டும். இதற்கு இடையில் அனைத்திற்கும் மேலாய் அவள்.

‘ஆரம்பமே அமர்களமா இருக்கு ப்ரித்வி..’ என்று எண்ணியவனுக்கு இப்போது சிறு கோபமும் ‘சரிதான் போ டி..’ என்று.

ஆனால் அதெல்லாம் மறுநாள் வீரபாண்டி திருவிழாவில் அவளை காணும் வரையிலும் தான்.

அன்றைக்கு பட்டுப்புடவையில் வந்திருந்தாள் எனில், இன்று அழகிய மஞ்சள் நிற பருத்தி புடவையில் வந்திருந்தாள். அங்கே வந்திருந்த அத்தனைக்கு அத்தனை பெண்களும் மஞ்சள், சிகப்பு நிற உடைகளில் தான் இருந்தனர்.

கோவில் சுற்றிலும் ஒரு பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தே ஜனக் கூட்டம். திருவிழா கடைகள், கண்காட்சிகள், பொழுதுபோக்குகள் ஒருபக்கம் எனில், வீரபாண்டி முல்லை ஆற்றில் நீராடி, வேண்டுதல் நிறைவேற்றி, வேடிக்கைப் பார்த்து,  அம்மனை தரிசித்து கம்பத்திற்கு நீர் ஊற்றி, வேடிக்கைப் பார்த்து, கடைகளில் வேண்டியது வாங்கி வரும், பக்தர்களின் கூட்ட நெரிசல் ஒருப்பக்கம் இருக்க, சுற்றி இருக்கும் தோட்டம், மண்டபங்கள், காலி இடங்களை எல்லாம் தங்களின் விருந்துக்கு தற்காலிக சொந்தமாக்கி கொண்டு, உற்றார் உறவினர்க்கு விருந்தளிக்கும் குடும்பங்களின் கூட்டம் என்று எங்கு பார்த்தாலும் ஜனக்காடு தான் நிரம்பி வழிந்தது.

இங்கே காசிராஜனும், அவரோடு வேலை செய்பவர்களும் இணைந்து கொடுக்கும் விருந்தில் எப்படியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் இருப்பார்கள். தனியாய் ஒரு மண்டபம் பிடித்து சமையல் செய்து, பரிமாறிக்கொள்ள என்று ஏற்பாடுகள் செய்திருக்க, அந்த ஓரளவு பெரிய மண்டபமே கொஞ்சம் நிரம்பித்தான் இருந்தது.

அழகராசி தான் ஆளுக்கு முன்னே கிளம்பி வந்திருந்தார். என்ன இருந்தாலும் பிறந்த வீட்டு விசேசம் இல்லையா. அதிலும் காசியும், சந்திராவும் அனைத்திற்கும் வேம்பரசனையும், அழகரசியையும் முன்னிறுத்த அவர்களோடு ப்ரித்வியும் நின்று இருந்தான்.

“உங்கப்பா வரமாட்டான். நீ வந்து எங்களோட நில்லு..” என்று வேம்பரசன் பேரனை தன்னருகே நிறுத்தி இருந்தார்.

ரித்திக்கிற்கோ இதெல்லாம் முற்றிலும் புதிது. காண்பதற்கும் அனைத்தும் சுவாரஸ்யமாய் இருக்க, அவனது கேண்டிகேமில் அனைத்தையும் படம் பிடித்துக்கொண்டு இருந்தான்.

வினோதன் அவனது மொத்த குடும்பத்துடனும் வந்திருக்க, பிருந்தாவின் மகிழ்ச்சியை கேட்கவேண்டியதே இல்லை. ராதா கணவன் மற்றும் மகளோடு அமர்ந்திருக்க, கணேஷன் தங்களின் குடும்பத்தோடு வரவும், முறைக்கு தன் மனைவியிடம் போஸ்ராஜன் மற்றும் ராதாவை அறிமுகம் செய்தவர், பிருந்தாவையும் அறிமுகம் செய்து வைத்தார்.

ராதா இப்போது தானே வினோதனின் அம்மாவான லட்சுமியை காண்கிறார். இந்த வாய்ப்பை தவறவிடாமல் “வாங்க உக்காருங்க..” என்று மகளை நகர்ந்து அமரச் சொன்னவர், பிருந்தாவிற்கும் தனக்கும் இடையில் அமர இடம் கொடுத்து,

“பிருந்தா ஜூஸ் எடுத்துட்டு வந்து எல்லாருக்கும் குடு..” என்று சொல்லும் போதே, அங்கே மீனாள் வந்துவிட்டாள்.

“வாங்க வாங்க..” என்று அனைவரையும் வரவேற்றவள் “எப்படி இருக்கீங்க ஆன்ட்டி…” என்று லட்சுமியின் கரம் பற்றி பேச,

“வா டி ராசாத்தி.. மீனாளே..” என்று வாஞ்சையாய் அவள் கன்னம் தடவியவர் “வீட்டுக்கே வர்றது இல்லை..” என்று பேச, அவ்வளவுதான் ராதாவிற்கு காற்று போன பலூனின் நிலை.

பிருந்தாவோ லேசாய் கலங்கிய மனதினை திடம் செய்துகொண்டு, முகம் மாறாமல் அமர்ந்திர்க்க வினோதனின் பார்வை என்னவோ அவள்மீது தான். தன் அம்மா மீனாவை கொஞ்சியதும், பிருந்தாவின் முகம் மாறியதும் அவனுக்கு அவளது மனதினை நன்கு புரிய வைத்திருந்தது.

இதெல்லாம் இப்படியெனில், ப்ரித்வியும் தங்கமீனாளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதோடு சரி. பேசவே இல்லை. அதிலும் மீனாள் இவர்கள் வந்தபோது வரவேற்றதோடு சரி. தனிப்பட்ட முறையில் ப்ரித்வியிடம் ‘வாங்க மாமா ..’ என்று கூட அவள் சொல்லியிருக்கவில்லை.                      

ஆனால் ரித்திக்கை முறைப்படி “வாங்க அண்ணா..” என்று சொல்லியிருந்தாள்.

அவள் பேசாமல், தன்னை தவிர்த்துச் செல்வது என்னவோ ப்ரித்விக்கு அத்தனை பேரின் மத்தியிலும் ஒருவித எரிச்சலை உண்டு செய்தது.

‘அதென்ன பாக்காம போறா.. இப்படியே இருந்துடுவாளா? அதையும் பாக்குறேன்..’ என்று எண்ணிக்கொண்டான்.