அத்தியாயம் – 18

தங்கமீனாளின் “மாமா..” என்ற அழைப்பினை தாங்கிக்கொண்டு வந்த குறுந்தகவலைத் தான் குறுகுறுவென பார்த்துக்கொண்டு இருந்தான் ப்ரித்வி.

இதழ் மடக்கி, லேசாய் மீசையை லீவிக்கொண்டு ஒரு மெல்லிய நகைப்பை வெளியிட்டவனுக்கு அவள் எப்படியொரு பாவனையில் இந்த ‘மாமா..’ வை அனுப்பி இருப்பாள் என்று கண் முன்னே காட்சியாய் ஓடியது.

அவளோடு கொஞ்சம் விளையாடிப் பார்க்கும் ஆசையும் எட்டிப்பார்க்க, மீண்டும் பார்வையை ரித்திக் பக்கம் தான் செலுத்தினான். அவனோ அவனின் அலைபேசியில் மூழ்கியிருக்க, அறையின் விளக்கை அணைத்தவன் கட்டிலில் சரிந்தபடி “எஸ் தங்கா…” என்று பதிலுக்கு அனுப்பிட,

“என்ன இது?!” என்று வேகமாய் பதில் வந்து விழுந்தது.

ப்ரித்வியோ அன்று அவள் சொன்னதுபோலவே “ஓ! சாரி தங்கா.. வொர்க் ரிலேட்டடா அனுப்பின மெசேஜ். உனக்கு மாத்தி அனுப்பிட்டேன்..” என்று பதில் அனுப்ப, தங்கமீனாள் நறநறவென பல்லைக் கடித்துக்கொண்டாள்.

உடனே என்ன பதில் சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. கண்களை மூடி மனதனை ஒருநிலைப் படுத்த எண்ணினாள். அதுவும் அவளால் இயலவில்லை. மூடிய இமைகளுக்குள் ‘தங்கா..’ என்ற அழைப்போடு அவளருகே நெருங்கி வந்த ப்ரித்வி தான் வந்து நின்றான்.

“ஷ்..! என்ன டி மீனா உனக்கு வந்த சோதனை. இதை எல்லாம் என்ன கணக்குல என்னன்னு சேக்குறது?!” என்று வாய்விட்டே தனக்கு தானே கேட்டுக்கொண்டாள் மீனாள்.

அதற்குள் “ஆர் யூ தேர்..?!” என்று ப்ரித்வி மீண்டும் குறுந்தகவல் அனுப்பிவிட,

“ம்ம் சொல்லுங்க மாமா…” என்றாள்.

“என்னாச்சு பதிலைக் காணோம்?! தூங்கிட்டியா?! ஓகே ஓகே தூங்கு. குட் நைட்.. ஹேவ் எ டைட் ஸ்லீப்…” என்று வேறு அனுப்பி, அதனோடு சில பல சிரிக்கும் பொம்மைகளை வேறு அனுப்பியிருக்க

‘அடேய் ப்ரித்வி மாமா…’ என்று உதட்டை பிதுக்கி, கண்களை உருட்டி அவளின் அலைபேசியை கண்டு முறைக்கவே செய்துவிட்டாள்.

‘டைட் ஸ்லீப்பாம் டைட் ஸ்லீப்.. விட்டா வந்து போர்வை போத்தி விடுவாங்க போல..’ என்று முனங்கியவள் “இதெல்லாம் சரியே இல்ல மாமா…” என்று பதில் அனுப்பினாள்.

“என்னம்மா?! நான் என்ன தப்பா சொல்லிட்டேன்..” என்று அவனோ பாவமாய் முகம் வைத்திருக்கும் ஒரு பொம்மையை சேர்த்தனுப்ப,

“போட்டோஸ் அனுப்புங்க மாமா…” என்றவளின் குறுந்தகவலை படிக்கும் போதே, கார நெடி வீசுவது போல இருந்தது ப்ரித்விக்கு.

‘ஷப்பா..! ரொம்ப கோபமா இருக்கா போலவே. மார்னிங் அத்தனை வெக்கப்பட்டா.. அதுக்கான அடையாளமே இப்போ தெரியலையே..’ என்று இமைகளை சுருக்கி, தன் நாடியை தடவி யோசித்தவன், அவளும் பிருந்தாவும் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும், பின் மீனாள் மட்டும் தனியே இருந்த சில புகைப்படங்களையும் அவளுக்கு அனுப்பி வைத்தவன்

வேகமாய் “ஸ்வீட் ட்ரீம்ஸ் தங்கா…” என்று அனுப்பிட,

‘சேட்ட சேட்ட. இவங்களை என்னவோன்னு நினைச்சேன். அமுக்குனியாட்டம் இருந்துக்கிட்டு, இந்த மீனாக்கிட்டயே ஆட்டம் காட்டுறாங்க..’ என்று வேக மூச்சுக்களை வெளியிட்டவள், இது சரிவராது என்றெண்ணி அவனுக்கு அழைப்பே விடுத்துவிட்டாள்.

இந்த நேரத்தில் அழைப்பு விடுப்பாள் என்று அவன் நினைக்கவில்லை. அலைபேசி சத்தம் கொடுக்கவுமே, ரித்திக்கும் எட்டி நண்பனைப் பார்க்க “என்னடா?!” என்றான் வந்த அழைப்பை ஏற்காமல்.

“என்ன என்னடா?! போன் ரிங்காகுதேன்னு எட்டிப் பார்த்தேன்..” என்று அவன் பதில் சொல்லி முடிப்பதற்குள், அழைப்பு கொடுத்த சத்தம் நின்று இருக்க,

“ஐ கான்ட் டாக் நவ்..” என்று அவளுக்கு பதில் அனுப்ப,

“ஏன்?!” என்றாள் ஒற்றைக் கேள்வியாய்.

“ரித்திக் இருக்கான்..” என்று வேகமாய் அனுப்பிவிட்டான் தான்.

ஆனால் அதன் பிறகுதான் ‘போச்சு… இதுக்குm ஆயிரம் கேள்வி கேட்கப் போறா..’ என்று எண்ணி முடிக்கவில்லை.

“சோ வாட் மாமா?! ஏன் பிரண்ட் முன்னாடி போன் பேச கூடாதுன்னு எதுவும் விரதமா?!” என்று அவள் பாணியில் கேட்டேவிட,

“ஷ்..!” என்று நெற்றியை நீவி அவன் விட்ட பெருமூச்சு, அவன் நண்பனின் செவிகளுக்கு எட்டாமல் இல்லை.

அத்தனை நேரம் படுத்துக்கொண்டு, அலைபேசியில் கவனமாய் இருந்தவன், அழைப்பு வந்தும் அதனை உடனே ஏற்காமல், தான் என்ன செய்கிறேன் என்று பார்த்த நண்பனின் செயலில் வித்தியாசம் உணர்ந்தவன், ப்ரித்வி என்ன செய்துகொண்டு இருக்கிறான் என்றுதான் பார்த்துக்கொண்டு இருந்தான் ரித்திக். ஏனோ ஒருவித பதற்றம், இதுவரை தன் நண்பன் முகத்தினில் இப்படியொரு பாவனையை கண்டிருந்ததில்லை ரித்திக்.

‘என்னவோ மறைக்கிறான்..’ என்று தோன்ற, இப்போது அவன்விட்ட பெருமூச்சும் சேர்ந்து “மச்சா..” என்று அழைத்தான்.

‘இவனும் பார்த்துட்டானா?!’ என்று நொந்துகொண்டவன் “சொல்டா…” என,

“என்ன மூச்செல்லாம் பெருசா வருது?!” என்று நக்கல் தொனியில் கேட்டவனிடம், என்னவென்று பதில் சொல்வான்.

என் மாமன் மகள் அழைக்கிறாள் என்று சொன்னால் போதும். ஏற்கனவே அவளை திருமணம் செய்துகொண்டு, இங்கேயே செட்டில் ஆகிவிடு என்று பினாத்திக்கொண்டு இருப்பவனிடம், அவளின் புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது, அதனைக் கொடுக்காமல் விளையாட்டுக் காட்டிக்கொண்டு இருக்கிறேன். அதற்காக அழைக்கிறாள் என்று சொன்னால் போதும், திருமணமே செய்து வைத்துவிட்டுத்தான் ரித்திக் ஊருக்குச் செல்வான்.

நினைக்கையில் அவனையும் மீறி ஒரு சிரிப்பு வேறு, நேரங்காலம் தெரியாமல் வந்துத் தொலைக்க, அதற்குள் மீனாளோ “இப்போ மார்னிங் எடுத்த போட்டோஸ் எல்லாம் அனுப்ப முடியுமா முடியாதா மாமா?” என்று கேட்டு அனுப்பியிருக்க,

‘இப்படியா சிக்கணும் ப்ரித்வி நீ..’ என்று இதழ் வளைத்தவனுக்கு, இந்த உணர்வுகள் பிடித்தே இருந்தது.

ரித்திக்கோ “டேய் உயிரோட இருக்கியா, இல்ல விட்ட பெருமூச்சுல போயிட்டியா?”  என்று கேட்க,

“பண்ணாடை..” என்று வழக்கம் போல நண்பர்கள் பேசிக்கொள்ளும் வசை மொழியை எடுத்துவிட்டிருந்தான் ப்ரித்வி.

“இருந்துட்டு போறேன். போன்ல யாரு…” என்று காதை குடைந்தபடி எழுந்து வந்தவனிடம் “அது எதோ ஸ்பாம் கால்..” என்று சொல்லும் முன்னம், தங்கமீனாள் திரும்ப அழைத்துவிட்டாள்.

காலையில் நொடியில் தன்னைப் படுத்திவிட்டான் அல்லவா. இப்போது ரித்திக் இருக்கிறான், பேச முடியாது என்று அவன் சொன்னதுமே அவளுக்கு புரிந்துபோனது. நண்பர்களின் கேலி கிண்டல் எல்லாம் அவளுக்குத் தெரியாதா என்ன?!

‘மாட்டிக்கிட்டீங்க மாமா..’ என்று ஒருமுறை தலையை ஆட்டி சிரித்துக்கொண்டவள், வேண்டுமென்றே அவனுக்கு ‘மிஸ்ட் கால்..’ கொடுத்துக்கொண்டே இருக்க,

‘அடியே கொஞ்ச சும்மாதான் இரேன் டி..’ என்று பல்லைக் கடித்தவன் “இப்போ என்னடா உனக்கு?!” என்று நண்பனிடம் காய்ந்தான்.

சற்று நேரத்திற்கு முன்னர் தான், தங்கமீனாள் தலை தாழ்த்தி பார்வையை பக்கவாட்டில் செலுத்தி, படபடக்கும் நெஞ்சோடு கொஞ்சம் பரிதவிப்போடும், சிவங்க கன்னங்கலோடும் இருந்த புகைப்படத்தினை அவளது அலைபேசி எண்ணிற்கான படமாய் மாற்றி வைத்திருக்க, இப்போதோ அவள் அழைப்பு விடுத்து விடுத்து துண்டிக்க, அவனது அலைபேசி திரையில் மீனாளின் புகைப்படம் தான் மின்னி மின்னி மறைந்தது.

ரித்திக் அதனைக் கண்டவன் “அஹான்..” என்று ஒரு இழுவை இழுத்து,

“நீ நடத்து மச்சான்..” என்று சிரிக்க,

“டேய்.. ஏன்டா நீவேற.. அவ எதோ என்னை வம்பு பண்ணிட்டு இருக்கா…” எனும்போதே, அடுத்தமுறை அழைப்பு வரவும், ரித்திக் வேகமாய் அழைப்பினை ஏற்றுவிட்டு, ஸ்பீக்கரும் ஆன் செய்துவிட

“மாமா.. நீங்க பண்றது சரியே இல்ல. போட்டோஸ் தானே கேட்டேன்.. அதுக்கு என்ன பிரண்ட் இருக்கான். பேச முடியாதுன்னு எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க…” என்றவளின் குரலில் அத்தனை உரிமை தொனித்தது.

‘சரிதான்.. இவன் இனி எனக்கு கல்யாணமே பண்ணி வச்சிடுவான்..’ என்று எண்ணியபடி தலையில் கை வைத்துவிட்டான் ப்ரித்வி.

ரித்திக்கோ  ‘நான் இருக்கேன்னு பேசலையா இவன். திருட்டு ராஸ்கல்..’ என்று நண்பனை முறைத்தவன் ‘பேசு…’ என்பது போல நண்பனுக்கு சைகை செய்தான்.

அழைப்பை ஏற்ற ப்ரித்வியிடம் இருந்து பதில் இல்லை என்றதும் “ப்ரித்வி மாமா…” என்று மீண்டும் தங்கமீனாள் அழைக்க,

“அ.. சொல்லு தங்கா..” என்றபடி கரகரத்த குரலை சரிசெய்துகொண்டு பேச,

‘தங்காவாம்  தங்கா…’ என்று பார்த்தான் ரித்திக்.

“என்ன பேசிட்டே தூங்கிட்டீங்களா?” என்று மீனாள் கேட்க,

“இல்ல இல்ல..” என்றவன் “போட்டோஸ் தானே அனுப்புறேன்.. காலைல அனுப்புறேன்..” என்று சொல்லி வேகமாய் அலைபேசியை அமர்த்தியவன், அதனை ஸ்விட்ச் ஆப் செய்தும்விட்டான்.

பாவம் அவனும்தான் என்ன செய்வான்?!

ஆனால் மீனாளிற்கோ அவன் பட்டென்று பேசி அழைப்பினை துண்டித்தது என்னவோ போல் ஆகிப்போனது. இனிய ஸ்வரம் போல இருந்த அந்த பொழுது, சட்டென்று மாறிப்போனது போல இருக்க, சில நொடிகள் அலைபேசியைப் பார்த்துக்கொண்டே இருந்தவளுக்கு அப்போதுதான் நேரம் என்னவென்பதே புரிந்தது.

இரவு பதினொன்றுக்கும் மேல்..

“ஐயோ..!” என்று தலையில் கை வைத்துக்கொண்டவள்  ‘அறிவே இல்ல மீனா உனக்கு. அவரே இந்நேரம் பேச முடியாது, கூட பிரண்ட் இருக்கான்னு சொல்லியும், நீ எதையும் யோசிக்காம கால் பண்ணி வச்சிருக்க. அதுலயும் அத்தனை மிஸ்ட் கால் வேற. என்ன பொண்ணு நீ? அம்மா சொல்றது சரிதான். கொஞ்சம் கூட பொறுமையே இல்லை எனக்கு… இந்த நேரத்துல கால் பண்ணி பேசுவாங்களா?’  என்று ஏகத்திற்கும் தன்னை தானே கடிந்தவளுக்கு ,

‘இந்த ப்ரித்வி மாமா என்னை என்ன நினைச்சிருப்பாங்க..’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

‘இடியட்..’ என்று தன்னையே திட்டிக்கொண்டவள், யோசிக்காமல் “சாரி மாமா.. டைம் பார்க்காம நான் கால் பண்ணிட்டேன்..” என்று அவனுக்கு குறுந்தகவல் அனுப்ப, அவனோ ஆன்லைனில் இருப்பது போலக் கூட தெரியவில்லை.

தங்கமீனாளுக்கோ தவறு செய்துவிட்ட உணர்வு. என்னதான் ப்ரித்வி நல்லமுறையில் பழகினாலும், தான் இந்த நேரத்தில் அதுவும் அவன் இப்போது பேச முடியாது என்று சொல்லியும் கூட அழைப்பு விடுத்ததை எப்படி நினைத்துக்கொள்வான் என்று மனம் தவியாய் தவித்துப் போனது அவளுக்கு.

‘ச்சே முட்டாள் முட்டாள் .. அவசர புத்தி டி உனக்கு.. இப்போ இத்தனை வேகமா போட்டோஸ் வாங்கி என்ன செய்யப் போற நீ?!’ என்று தனக்கு தானே கேட்டவளுக்கு, மனதில் என்னென்னவோ சிந்தனை, சட்டென்று என்ன தோன்றியதோ மீண்டும் அலைபேசியை எடுத்தவள் யோசனையோடே மீண்டும் ப்ரித்வி எண்ணுக்கு அழைப்பு கொடுத்து, மெதுவாய் அலைபேசியை செவிக்கு அருகினில் வைத்துப் பார்க்க, அவள் எண்ணியது போலவே அது அமர்த்தி வைக்கப்பட்டு இருப்பதாகவே பதில் வர, நொடியில் தங்கமீனாளின் முகம் மாறிப்போனது.

ஒருமாதிரி முகத்தினில் அடித்த உணர்வு. தன்னுடன் பேசிவிட்டு உடனே அலைபேசியை அமர்த்தியிருக்கிறான் எனில், தான் அடுத்து அழைப்பு விடுக்கவோ இல்லை குறுந்தகவல் அனுப்பவோ கூடாது என்று தானே.

சட்டென்று கண்களில் நீர்கோர்த்து ஒருவித அழுத்தமும், அவமானமும், கூடவே கொஞ்சம் கோபமும் கலந்து உள்ளுக்குள் நுழைந்துகொண்டது அவளுக்குள்.

‘மட்டி.. மட்டி..’ என்று தன் தலையில் தட்டிக்கொண்டவளுக்கு காலையில் இருந்து, அவளிடம் ஒட்டிக்கொண்டு இருந்த அத்தனை உணர்வுகளும் இப்போது காணமல் போயிருந்தது.

‘என்ன நினைத்திருப்பான்?!’ என்று எண்ணி எண்ணியே அன்று முழுவதும் உறங்கவில்லை அவள்.