“டேய் உன்னோட ப்ளான் என்ன?!” என்று இப்போது ரித்திக் பேச்சினை மாற்ற,
“என்ன ப்ளான்?!” என்றான் ப்ரித்வியும்.
“உன்னோட பியூச்சர் ப்ளான்?!”
“வீடு கட்டி முடியவும், அடுத்து பிருந்தா மேரேஜ்.. எல்லாம் முடிச்சிட்டு ஆன்சைட் கொஞ்ச நாள் போகணும்.. அதுக்கு அப்புறம் என்னன்னு யோசிக்கணும்..”
“ஓஹோ.. சோ அதுக்கு அப்புறம் தான் உன்னோட மேரேஜ் இல்லையா?!“ என,
“அதெல்லாம் நான் யோசிக்கவே இல்லைடா..” என்று தோளை குலுக்கினான் ப்ரித்வி.
“நீவேணா பாரு, தங்கமீனாளை கட்டினா உன்னோட லைப் இன்னும் நல்லா இருக்கும். குடும்பம், உறவுகளோடு வசதி வாய்ப்போட நல்லா நீ வாழலாம்..” என்று மறுபடி முதற்புள்ளியில் வந்து ப்ரித்வி நிற்க,
“டேய் நாயே..” என்று ப்ரித்வி ஏகவசனத்தில் ஆரம்பிக்க,
“திட்டிக்கோ டா.. ஆனா புத்தியுள்ளவன் இப்படித்தான் முடிவு பண்ணுவான். இப்போல்லாம் பொண்ணு கிடைக்கிறதே அபூர்வமா இருக்குடா. அப்படியே கிடைச்சாலும் லைப் எப்படின்னு சொல்ல முடியாது?” என,
“டேய்.. என்னவோ நீ என்னை ரொம்ப கம்மியா நினைக்கிற போல மச்சான். அப்படி எத்தனை பொண்ணு என்னை ரிஜக்ட் பண்ணிருக்காம்? டூ மச் டா டேய்..” எனும்போதே ப்ரித்விக்கு உள்ளூர தங்கமீனாள் நியாபகமே.
அவனோ வெளிநாட்டிற்கு பறக்க எண்ணம்கொண்டு இருக்கிறான். நினைக்கையில் அவனையும் மீறிய ஒரு பெருமூச்சு வர “இதெல்லாம் செட்டாகாது மச்சான்..” என்றான் ஒருவித ஆழ்ந்த குரலில்.
நண்பன் எதையோ யோசித்து பதில் கூறவும், ரித்திக் “எதுக்கு செட்டாகாது?!” என்று கேட்க,
“அது அப்படித்தான். மீனாக்கு இந்த ஊர்லையே இருக்கிற மாப்பிள்ள தான் வேணுமாம். அதையும் மீறி, எங்கப்பாக்கு காசி மாமாவை கண்டாலே ஆகாது..” என,
“இதெல்லாம் ஒரு ரீசனாடா..” என்றான் முகத்தை சுருக்கி.
“எங்களோட இக்கட்டான சூழல்ல, எங்களை அப்படியே அக்சப்ட் பண்ணிக்கிட்டு, இதோ இப்போ வரைக்கும் எங்களுக்கு ஹெல்ப் பண்றாங்க எல்லாரும். காசி மாமாவும், அத்தையும் என்னை சின்ன அளவுல கூட வித்தியாசமா பார்க்கல. எனக்கு இந்த சொந்தங்கள் போதும். அவங்கவங்க எல்லைல இருந்தா மட்டும் தான் எல்லாருக்கும் நல்லது..” என்று ஒருவித இறுகிய குரலில் சொன்னவனுக்குள், மீண்டும் மீனாளின் வெட்கம் பூத்த முகம் வந்து எட்டிப் பார்த்தது.
இதுபோல அவளும் யோசிப்பாளா?!
அவளின் வாழ்வு பற்றிய முடிவுகள் என்ன, இப்போது அவள் காட்டிய பிரதிபலிப்பு என்ன?!
புகைப்படம் எடுக்கும்போது இப்படித்தான் அவளுக்கு வெட்கம் வந்து சேருமா?!
இல்லை என்னிடம் தான் இப்படியா?!
இதெல்லாம் அவனுள் கேள்வி வண்டுகளாய் துளைத்துக்கொண்டு இருக்க, இதற்கெல்லாம் காரணமான தங்கமீனாளோ அலுவலகத்தில்,அவளது வேலையில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் திண்டாடிக்கொண்டு இருந்தாள்.
காலையில் ப்ரித்வி தன்னை நெருங்கி வந்ததுமே, அவளது இதயத்து ஓசை தாறுமாறாய் ஒலித்தது நிஜம்.
‘தங்கா?!’ என்ற அழைப்பும், அதனோடு ஒட்டிக்கொண்டு வந்த கேள்வியும், அவன் என்ன கேட்க வருகிறான் என்பதனை சொல்லாமல் சொல்லியது.
என்னவென்று சொல்லுவாள்?!
உன்னைப் பார்க்கப் பிடிக்கும்..
உன்னோட பேசவும், உன்னைப் பற்றி பேசவும் பிடிக்கும்..
உன்னைப் பற்றி நினைத்திட பிடிக்கும்..
ஆகமொத்தம் உன்னை பிடிக்கும்..
இப்படியெல்லாம் அவளால் சொல்ல முடியுமா?!
சொல்லிவிடும் தைரியசாலிதான் தங்கமீனாள். ஆனால் மனம் இன்னுமொரு முடிவிற்கு வரவில்லையே. இவன் தான் இந்த வாழ்வு முழுமைக்கும் என்கிற ஸ்திரமான முடிவு ஒன்றிற்கு வரமுடியாமல் மீனாளின் தவிப்பு அதிகம் தான் ஆனது.
காரணமே இன்றி ஒரு கலக்கம். அடிப்படையே இல்லாத ஒரு பயம்.. என்னவென்று சொல்லவே முடியாத ஒரு தவிப்பு. அடிக்கடி நெஞ்சினை அழுந்த அழுந்த நீவிக்கொள்ளத்தான் அவளால் முடிந்தது.
உடன் வேலை செய்யும் பெண்மணி கூட “என்ன மீனா உடம்பு சரியில்லையா?!“ என்று கேட்கும்படி இருந்தது அவளின் நிலைமை.
“அ.. அதெல்லாம் இல்லைக்கா..” என்று அவள் மறுக்க,
“நானும் பாக்குறேன் என்னவோ போலவே இருக்க? என்னவும் பண்ணுதாப்பா.. ஹாஸ்பிட்டல் போறதுன்னா போயிட்டு வரலாம்..” என்று அவர் அக்கறையாய் சொல்லவும்,
“அச்சோ! அதெல்லாம் இல்லைக்கா. காலைல சீக்கிரமே எழுந்துட்டேன். கல்யாண வீட்ல சாப்பிட்டது வேற கொஞ்சம் ஜீரணம் ஆகலப் போல..” என்று சமாளித்துவிட்டாள்.
நேரம் பார்த்தாள், மதியம் கூட இன்னும் ஆகவில்லை. மாலைவரைக்கும் நேரத்தை நெட்டித் தள்ளி, வேலையையும் சரியாய் செய்திட வேண்டுமே. மிக மிக விருப்பட்டு, கடும் முயற்சியில் கிடைத்திருக்கும் அரசு பணி. அதில் கவனம் தவறினால், மீனாள் தன்னையே மன்னித்துக்கொள்ள மாட்டாள்.
சட்டென்று தலையை உலுக்கிக்கொண்டவள், கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு, வேலையில் கவனம் செலுத்த, அதன்பின்னே தான் ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்த மனது கொஞ்சம் சமன் ஆனது.
ஆனாலும் அடிநெஞ்சில் ‘என்னை என்ன நினைத்திருப்பான்?!’ என்ற கேள்வி ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.
இதோ வரும் சனி அன்று, காசிராஜனும் அவரோடு வேலை செய்யும் சில ஆசிரியர்களும் சேர்ந்து வீரபாண்டி கோவிலில் கிடா வெட்டி விருந்து வைக்கிறார்கள். வருடாவருடம் நடக்கும் ஒன்று தான். இந்தவருடம் போஸ்ராஜன் வீட்டிற்கும் அழைப்பு வைத்தாகிவிட்டது.
அதிலும் குடும்பத்தோடு வரவேண்டும் என்று. பொதுவாய் அனைவரும் வரவேண்டும் என்றுதான் வாரக் கடைசியில் கிடா வெட்டு வைப்பதே. மீண்டும் அனைவரும் சந்தித்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். என்ன செய்து சமாளிப்பேன் என்று இப்போதே அவளுக்குள் படக் படக் தடக் தடக் என்று அடித்துக்கொள்ள தொடங்கிவிட்டது.
பகல் எல்லாம் இப்படி இருவருக்கும் என்றால், இரவில் உணவுண்டு ப்ரித்வி உறங்கப் போகையில், பிருந்தா “அண்ணா காலைல எடுத்த போட்டோஸ் அனுப்பு..” என்று கேட்க,
“ம்ம்..” என்றவன் குறிப்பிட்ட சில புகைப்படங்களை மட்டும் தங்கைக்கு அனுப்பியவன், மீனாளை தனியே வைத்து எடுத்ததை எல்லாம் அனுப்பவில்லை.
கரம் அதுபாட்டிற்கு அவளது படத்தை தொட்டு அடுத்து அடுத்து என்று பார்த்துக்கொண்டிருக்க, பார்வையோ அதுபாட்டிற்கு அவள் மீது படர்ந்தது படர்ந்து சுழன்றது. பொழுது புலரும் காலை நேர சூரிய ஒளி பட்டு, தேவதையாய் ஜொலித்துக்கொண்டு இருந்தாள்.
‘டிவைன் பியூட்டி..’ என்று அவனது இதழ்கள் உச்சரிக்க, அவனது மனம் அவனையும் மீறி ‘தங்கா…’ என்று அழைப்புக் கொடுத்து, பின் சுற்றிலும் நோட்டம் விட்டான்.
ரித்திக் அதே அறையில் தனியே ஒரு கட்டில் போட்டு படுத்து, அலைபேசியில் எதையோ பார்த்தபடி படுத்திருக்க ‘இவன் பாத்தான் அவ்வளோதான்..’ என்று எண்ணியவன், உடைமாற்றிக்கொண்டு வந்து அவனது கட்டிலில் விழுந்தான்.
அதற்குள் பிருந்தா அவளது புகைப்படத்தை ‘வாட்ஸ் அப் ஸ்டேட்ஸில்’ வைத்திருந்தாள். அதனை மீனாளும் பார்த்திருந்தாள்.
பிருந்தாவின் புகைப்படத்தைக் கண்டதுமே நெஞ்சம் துணுக்குற “போட்டோஸ் அனுப்பு டி..” என்று தோழிக்கு தகவல் தட்ட, பிருந்தாவும் தன்னிடம் இருந்த புகைப்படங்களை அனுப்பினாள்.
மீனாளுக்குத் தான் தெரியுமே. இன்னும் பல படங்கள் இருக்கிறது என்று. அதனால் பிருந்தாவிடம் நேரடியாய் கேட்காமல் “இவ்வளோதானா பிருந்தா.. நிறைய எடுத்தோமே..” என்று கேட்க,
“அண்ணா செலக்டீவா அனுப்பிருப்பான் போல. இரு அனுப்ப சொல்றேன்..” என்று பதில் சொன்னவள்,
ப்ரித்விக்கு அழைத்து “அண்ணா மீனாக்கு போட்டோஸ் அனுப்பேன்..” என, அவனையும் மீறி ப்ரித்வியின் முகம் மந்தகாசம் பூண்டது.
“ம்ம் ஓகே..” என்றுமட்டும் சொன்னவன், மீனாளின் இரண்டொரு புகைப்படங்களை அவளுக்கு அனுப்பியவன், வேகமாய் அவள் காணும் முன்னம் அதனை அழித்தும் இருந்தான்.
அன்றைய தினம் அவள் செய்ததை, இன்றைய தினம் இவன் செய்கிறான்.
ப்ரித்வியின் எண்ணில் இருந்து புகைப்படங்கள் வந்ததற்கான அறிகுறி தெரிந்து, வேகமாய் உள்ளே சென்று பார்க்கும் முன்னம், அது அழிந்திருக்க மீனாள் கண்டுகொண்டாள். விளையாடிப் பார்க்கிறான் என்று.
மேலுதட்டினை அழுந்த கடித்து விடுவித்தவளுள் ‘கேட்போமா வேண்டாமா’ என்கிற பட்டிமன்றம்.
தலையணையில் முகம் புதைத்தாள், எழுந்தமர்ந்து தண்ணீர் குடித்தாள், முகத்தை எழுந்த துடைத்தாள். அவனுக்கு குறுந்தகவல் அனுப்ப கை விரல்கள் படபடத்தது. ஆனால் மனதோ தவியாய் தவித்துக்கொண்டு இருந்தது.
ஏதேனும் கேட்டுவிட்டால் என்கிற பயம்..
‘கேட்டா கேட்கட்டுமே உனக்கா சமாளிக்கத் தெரியாது.. அன்னிக்கு போல இன்னிக்கும் எதையாவது சொல்லேன்..’ என்று ஒருப்பக்கம் மனது தைரியம் கொண்டாலும், கேள்வியும் ஆவலுமாய் அவன் பார்த்த பார்வை அவளை அந்த நொடியும் கட்டிப்போடுவதாய் இருந்தது.
ப்ரித்வியோ வேண்டுமென்றே ஒரு புகைப்படம் அனுப்புவதும், பின் அழிப்பதுமாய் இருக்க, ஒரு நேரத்திற்கு மேலே பொறுக்காமல் “மாமா…” என்று அழைத்து குறுந்தகவல் அனுப்பியே விட்டாள்.