“டேய் மச்சா… நான் சொல்றதை கேளு..” என்று தன் முன்னே விரல்நீட்டி, ஆர்வமாகவும், அதிதீவிரமாகவும் பேசிக்கொண்டு இருந்த ரித்திக்கை நெற்றிக் கண் திறக்காத குறையாய் தான் பார்த்துக்கொண்டு இருந்தான் ப்ரித்வி.
இருந்திருந்து இவனுக்கு ஏன் இப்படியெல்லாம் புத்தி யோசிக்கிறது என்று நினையாமலும் இருக்க முடியவில்லை ப்ரித்விக்கு. நல்லவேளை வீட்டிலேயே இதனை எல்லாம் சொல்லாமல் விட்டானே என்று கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியாகவும் கூட இருந்தது.
ஏற்கனவே போஸ்ராஜனிற்கு ரித்திக்கை அழைத்தது அத்தனை பிடித்தமில்லை. ‘என்ன இது புது பழக்கம். வீடு வரைக்கும் வர வச்சு, தங்க வைக்கிறது?!’ என்று ராதாவிடம் தன் முகத்தினை காட்டியிருந்தார்.
ராதாவும் சத்தமில்லாமல் மகனிடம் “ரித்திக் எத்தன நாள் இருப்பான்?” என்று விசாரித்திருக்க,
“இப்போ என்ன?!” என்றுதான் ப்ரித்வி கேட்டிருந்தான்.
“அப்பா கண்ல படாம, அவரோட எதையாவது இவன் பேசாம பார்த்துக்கோ..” என்று நகர்ந்திருந்தார் மனுஷி.
பின்னே மகனிடமும் பேச்சு வாங்க அவர் தயாராய் இல்லை. ஆனால் அப்பாதான் ஏதோ சொல்லியிருக்கிறார் என்பது ப்ரித்விக்கு புரியாமல் போகுமா என்ன?!
நகரப் போன அம்மாவினை நிறுத்தியவன் “மனுஷங்க முக்கியம்னு எப்போ தான் ம்மா அப்பாவுக்கு புரியும்? இங்கவந்து நம்ம இப்போ கொஞ்சம் நிம்மதியா மூச்சு விடுறோம்னா, பணத்துனால இல்லை. மனுஷங்கனால…” என்று சொல்லிவிட்டான்.
“என்னை எதுவும் கேட்காத ப்ரித்வி…” என்று அப்போதும் ராதா நகர்ந்துவிட்டார்.
அவரது ஒரே நோக்கம் இப்போது பிருந்தா மற்றும் ப்ரித்வியின் திருமண ஜோடிகள் குறித்த எண்ணங்கள் தான். கணேசனும், காசிராஜனும் தங்கமீனாளையும், வினோதனையும் பார்த்து தங்களுக்குள் பார்வை பரிமாறி, சிரித்ததை பார்த்திருந்தார் ராதா.
மனதில் திக்கென்ற அழுத்தம் வந்து குடி கொண்டது. சொல்லமுடியாத ஒரு வருத்தமும் அவருக்குள்ளே தலை தூக்கியது. இத்தனை ஆண்டுகால வாழ்வில் சம்பாரித்ததை எல்லாம், காலம் மீண்டும் திரும்பப் பெற்றுக்கொண்டது. இருப்பதை காப்பாற்றி, தன் பிள்ளைகளுக்கு நல்லதொரு வாழ்க்கை துணையை அமைத்துக் கொடுத்து, அவர்களையும் கண் முன்னேயே இருக்கச் செய்து, மீதமிருக்கும் காலத்தை நிம்மதியாய் கழித்திட வேண்டும் என்கிற அவரது எண்ணம், ஒரு அன்னையாய் சரியான ஒன்றே தான்.
வினோதனும், மீனாளும் அவர்கள் இயல்பில் இருந்தாலும் கூட, இந்த பெரியவர்களின் பார்வை பரிமாற்றம் மனதில் கலக்கத்தை உண்டு செய்திருக்க, இந்த ஜோடிகளை மாற்றுவதற்கான வழி தான் அவரின் கண்களுக்குத் தெரியவில்லை.
அந்த மனவுளைச்சலில் இருந்தவரைதான் போஸ்ராஜன் அழைத்து கடிந்துகொண்டது. மகனிடம் அப்பாவின் கருத்தினை சொல்லாமலும் விட முடியாது. நாளை பின்னே நேரடியாய் போஸ்ராஜன் கடிந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. ரித்திக்கோ வந்ததில் இருந்து அனைவரோடும் பேச்சோ பேச்சாய் பேசிக்கொண்டு இருந்தான்.
அழகரசி கூட “அதிகமா பேசவே பேசாத எங்க பேரனுக்கு இப்படியொரு நண்பனா..” என்று கேட்டே விட்டிருந்தார்.
ஆனால் அதற்கும் அசராமல் ரித்திக் “பாட்டி நானெல்லாம் பச்சை மண்ணு. மனசுல எதுவும் இருக்காது. பேசிடுவேன்.. ஆனா இவனைப் போல இருக்கவங்க எல்லாம் தான் டேஞ்சரஸ் பெல்லோ…” என்று சிரிப்புடன் சொல்ல,
“டேய்..” என்று நண்பனின் தோளில் கரம் போட்டு இருக்கியிருந்தான் ப்ரித்வி.
இதனை எல்லாம் தான் போஸ்ராஜன் கண்டுவிட்டு மனைவியிடம் பேசியது. இப்போது மகனிடமும் வார்த்தைகளை வாங்கிக்கொள்ள முடியாது.
ஆனால் இந்த ரித்திக்கோ நண்பனின் வாழ்வில் விளக்கேற்றும் வேலையில் மிக தீவிரமாய் இறங்கி இருந்தான். பூஜை முடிந்த அன்றே ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கியிருக்க, ப்ரித்விக்கு அடுத்த வாரத்திலிருந்து, இரவு நேர வேலை. அன்றைய தினம் விடுப்பு எடுத்திருக்க, ரித்திக்கும் அவனோடு தான் இருந்தான்.
“நீ லாகின் பண்ணலையா மச்சா..” என்று ப்ரித்வி சொல்லியிருக்க,
“டேய் நானே லீவ் போட சான்ஸ் கிடைக்காதான்னு இருந்தேன். இங்க வர்றதுக்கு முன்ன, சுத்தி எத்தனை சைட் சீயிங் ஸ்பாட்ஸ் இருக்குன்னு லிஸ்ட் போட்டு வந்திருக்கேன். நீ வான்னு கூப்பிட்டுட்டு, இப்போ லாகின் பண்ணலையான்னு கேட்டா எப்படி?” என்று கடிந்தவனிடம் வாய் திறக்கவில்லை ப்ரித்வி அடுத்து.
கணேசனோ “நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க தம்பி. நாங்க இங்கன பார்த்துப்போம்..” என்று இளையவர்களை அனுப்பிவிட்டார்.
வேம்பரசனோ “பிரண்ட் வந்திருக்கான்ல ப்ரித்வி, நம்ம சூளை, தோட்டம் எல்லாம் சுத்தி காட்டிட்டு வா. கும்பக்கரை போய் குளிச்சிட்டு வாங்க. இங்கன நாங்க எல்லாம் இருக்கோம் தானே..” என்று சொல்லிட, சூளைக்கு போகவில்லை ப்ரித்வி.
அங்கே எப்படியும் அப்பா வந்திருப்பார் என்று தெரியும். அதனால் வேம்பரசனின் மாந்தோப்பிற்கு தான் தோழனை அழைத்துக்கொண்டு வந்திருந்தான். தோப்பிருக்கு பின்னே, சிறு வாய்க்கால் ஒன்று சிலு சிலுவென்ற நீரினை சுமந்து ஓடிக்கொண்டு இருக்க, இருவரும் அந்த நீரில் காலை நினைத்தபடி தான் அமர்ந்து இருந்தனர்.
“கண்ணாடி மாதிரி இருக்குல்ல தண்ணி..” என்ற ரித்திக் தனிமை கிடைத்ததுமே “மச்சான் நிஜமா யூ ஆர் ப்ளஸ்ட் டா…” என்று மனதார கூறியிருந்தான்.
“அட! சில் மேன்.. கொஞ்சம் பிராக்டிகலா திங் பண்ணு. இங்க வர்றப்போ நீ எத்தனை கவலைப்பட்ட. இடிஞ்சு போய் தானேடா இருந்த. இன்னமும் அந்த கவலை எல்லாம் உனக்கு இருக்குன்னு, உன்னை பார்த்தாலே தெரியும். ஆனா என்ன இல்லைடா இங்க உனக்கு?!” என்று கேட்ட தோழனை, கொன்றுவிடுவது போல பார்த்தான் ப்ரித்வி.
“நீ என்னை கொலையே பண்ணாலும் இதான் நிஜம்…” என்றவன் “நல்ல குடும்பம், இங்க ஊர்ல பெரிய குடும்பம்னு பேர் இருக்கு. வந்ததுமே உங்களுக்குன்னு வீடு, தொழில் எல்லாம் கைக்கு வந்திடுச்சு. இதோ உன்னோட ஏற்பாடுல நீ எடுத்து செய்றதுக்கு, சொந்த பந்தமெல்லாம் கூட வந்து நிக்குது. அதையும்விட, கண்ணுக்கு நிறைவா, நல்ல குடும்ப பின்னனியோட, படிச்சு வேலையில அதுவும் கவர்ன்மென்ட் வேலையில இருக்க முறைப்பொண்ணு வேற கண்ணு முன்னாடியே இருக்கு..” என ,
“இனஃவ் ரித்திக்…” என்று கரத்தினை போதும் என்பதுபோல உயர்த்தி இருந்தான் ப்ரித்வி.
ஏற்கனவே காலையில் தங்கமீனாளின் வெட்கம் கண்டு, மனம் கொஞ்சம் தடுமாறியிருந்தது. தடுமாற்றம் என்ன, சுற்றி இருக்கும் சூழல் மறந்து “தங்கா…” என்று அழைத்தபடி அவளிடம் நெருங்கியே இருந்தானே.
வேர்வை பூத்திருந்த அவளது முகமும், தன் உள்ள படபடப்பை மறைக்கும் விதமாய், இமை தாழ்த்தி பார்வையை நிமிர்த்தாமல், லேசாய் ஒரு பெருமூச்சினை வெளியிட்டு, வெட்கத்தின் சூடு கொடுத்த செம்மையை சூடிக்கொண்டு அவள் நின்ற அழகு, இதோ இப்போதும் கூட அவன் கண் முன்னே வந்து ஊசலாடுகிறதே.
காலத்திற்கும் அக்காட்சியை மறக்க இயலும் என்று அவனுக்குத் தோன்றவில்லை.
சில வினாடிகள் தான்.
கவிதையாய், அழகிய ஓவியமாய், நீங்காத உணர்வாய் அவன் மனதில் பதிந்துபோனது.
தங்கமீனாள் மட்டும் வேகமாய் ஓடியிருக்காவிட்டால், அவள் கரம் பிடித்தே உன் வெட்கத்தின் காரணம் என்னவென்று கேட்டிருப்பான். அப்படியொரு நிலையில் தான் இருந்தான் ப்ரித்வி அப்போது.
அந்த நிலையே இன்னும் தன்னுள் அடங்காதிருக்க, இந்தவொரு தனிமையை வேண்டியே தான் வந்திருந்தான். இப்போது ரித்திக்கின் பேச்சுக்களோ அதற்கு தூபம் போடுவதுபோல அமைய, ப்ரித்வியால் வெளிப்படையாய் இதை ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை.
ஒரு பெண்ணின் மீது விருப்பம் கொள்வதற்கு, மற்றது அனைத்தையும் விட மனம் கொண்ட நேசம் மட்டும்தானே முழுமுதற் காரணமாய் இருக்கவேண்டும் என்பது அவனின் எண்ணம்.
“நீ எது சொன்னாலும், நான் சொல்றது தான் நிஜம் மச்சான். பேசாம அந்த பொண்ண கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிடு. வாழ்க்கைக்கும் நிம்மதியா இருந்துடலாம்..” என்ற நண்பனின் யோசனை கேட்டு முறைக்க,
“டேய் நான் இதை பணம் மட்டும் சம்பந்தப்பட்ட விசயமா சொல்லல. நிறைய இருக்கு. சிட்டில பிறந்து வளர்ந்து நீ என்ன கண்டுட்ட இப்போ?! சரி சரி முறைக்காத.. ஒரு லக்ஷுரியஸ் லைப் தான். ஆனா அங்க இல்லாத உயிர்ப்பு உனக்கு இங்க இருக்குல்ல மச்சான்..” என, ப்ரித்வி இப்போது கொஞ்சம் அமைதியானான்.
“அந்த பொண்ணு நிஜமா உன்னை பாக்குது மச்சா..” என்று ரித்திக் இரு கைகளையும் விரித்துச் சொல்ல,
“அடடா.. முறைல இருக்க பசங்க, பொண்ணுங்கள பார்க்குறது தான் ரித்திக். அதுக்காக மேரேஜ் பண்ணிக்க முடியுமா? நானே அவளை அழகா இருக்கான்னு நிறைய தடவை நினைச்சு இருக்கேன்டா. பட் நீ சொல்றது எல்லாம் வேற..” என,
“நினைச்சிருக்க தானே.. பார்த்திருக்க தானே..” என்று வேகமாய் ரித்திக் கேட்க,
“நீ சொல்ற மாதிரி இல்ல..” என்றான் அதனினும் வேகமாய்.