அத்தியாயம் – 16

“மச்சா யார்டா இது?” என்று ரித்திக்கின் உற்சாக குரல் வந்து ப்ரித்வியின் செவியில் விழவும் “என்னடா?” என்று கேட்டுத் திரும்பினான்.

“டேய்.. டேய் இந்த பக்கம் பாருடா.. யாரு அந்த பொண்ணு?” என்று ரித்விக் ஆர்வமாய் கேட்க,

“யார்ரா?!” என்று சற்று எரிச்சலுடனே கேட்டவன், ரித்திக்கின் பார்வை சென்ற பக்கம் செல்ல, தங்கமீனாள் அழகரசியுடன் நின்று இருந்தாள். இப்போதுதான் வந்திருக்கிறாள் என்று புரிந்துகொண்டான் ப்ரித்வி.   

அதிகாலை ஐந்து மணிக்கு பூமி பூஜை ஆரம்பித்து இருந்தார்கள். காசிராஜனும், சந்திராவும் முன்னமே வந்திருக்க, அனைவருமே கேட்டது “மீனாள் வரலையா?!” என்பதுதான்.

“பிரண்ட் கல்யாணம் வேற ஒன்னு இருக்கு இன்னிக்கு. ரெடியாகிட்டு வருவா..” என்று சந்திரா சொல்லிட, பூஜையும் ஆரம்பமாகிவிட்டது.

நேரம் செல்ல செல்ல, ப்ரித்விக்கு என்னவோ தங்கமீனாள் வருவது போல் காணோம் என்று தோன்றவும், மனது கொஞ்சம் சுணக்கம் காண, பெரியவர்களோடு சேர்ந்து நின்று இருந்தான். ரித்திக் முதல் நாள் இரவே வந்திருக்க, பல நாட்களுக்கு பிறகு நண்பனைக் கண்ட சந்தோசம் மனதினில் நிறைந்து இருந்தாலும், இதோ இந்த நேரத்தில் அவன் மனது தங்கமீனாளை எதிர்பார்த்தே நின்றது. பின்னே அவள்தானே இப்படியொரு நிகழ்விற்கு மூல காரணம்.

அவள் மட்டும் இப்படி செய்யலாம் தானே என்று சொல்லியிருக்காவிட்டால், நிச்சயம் யாரும் இதனை இப்படி செய்யலாம் என்று யோசித்திருக்கவே மாட்டார்கள்.

கணேசனும், அவரது இளைய மகனும் வந்திருக்க, பிருந்தாவிற்கோ மனது வினோதனை எதிர்பார்த்தது. வார கடைசி நாளில் தானே அவன் எப்போதும் வருவான். அது தெரிந்தும் கூட, மனம் அவனை எதிர்பார்க்கத்தான் செய்தது. ஆசையும், ஆர்வமும் கொண்ட மனது அல்லவா?! இன்னும் காதல் எனும் நிலைக்கு அவள் வந்திருக்கவில்லை. ஆனாலும் அவனைத் தேடும் மனதினை கட்டுக்குள் வைக்கவும் பிருந்தாவிற்கு தெரியவில்லை.

 பூஜை ஆரம்பித்த சில நிமிடத்திலேயே, அவளுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுக்கும் விதமாய் வினோதன் வந்து நின்றிருந்தான்.

அவனைக் கண்டதுமே பிருந்தாவின் கண்கள் தன்னையும் மீறி விரிந்து, முகமோ மலராய் மலர்ந்து போனது. என்னவொன்று யாரும் அதனை கவனிக்காதவாறு, தன் மகிழ்ச்சியை அவன் கண்களுக்கு மட்டுமே காட்சி கொடுத்திட வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டு இருந்தாள். அவளின் தல்லாடளால் அனைத்தும், வினோதனின் கண்களும் கண்டுகொண்டு,  உள்ளமோ உள்ளுக்குள்ளே கொஞ்சம் பூரித்துப் போக, அவனது பார்வையும் கூட பிருந்தாவைத் தான் சில வினாடிகள் பருகி நின்றது.

பொதுவாய் எல்லாரும் அவனை வரவேற்க, சந்திராவோ  “வா வினோதன்.. என்ன திடீர் விஜயம்?!” என்றார்.

“வேற ஒரு வேலையா ஊருக்கு வந்தேன் ஆன்ட்டி. அப்பா தான் வரச் சொன்னார்..” என்றவன் முகத்தினில் எப்போதும் இருக்கும் புன்னகையே.

ப்ரித்வியோ “ஹாய் வினோதன்..” என்று வந்து கரம் குலுக்கினான்.

“ஹாய் ப்ரித்வி. வாழ்த்துக்கள்.. நல்லபடியா எடுத்துச் செய்ங்க..” என்று அவன் வாழ்த்திட, பிருந்தா பேசும் அனைவரின் வாயையும் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

ராதாவோ “என்ன டி இப்படியே நின்னுட்டு இருக்க. எல்லாருக்கும் காபி குடு..” என்று மகளை ஊக்க,

“நானா ம்மா?!” என்றாள் பிருந்தா, அழகிய கனவு கலைந்தது போல.

“நீயில்லாம?! போ.. நட..” என்றவர் காபி டம்பளர் அடங்கிய தட்டினை மகளிடம் நீட்ட,

அழகரசியோ “சின்ன புள்ளையா நீ? எல்லாருக்கும் குடு பிருந்தா..” என்று குரலை உயர்த்தவும் தான், தட்டினை எடுத்துக்கொண்டு அனைவருக்கும் காபியை கொடுக்க,

ரித்திக்கோ “பிருந்தாவா ம்மா நீ?! அதிசயமா இருக்கே?! சேலை கட்டி.. அடக்க ஒடுக்கமா எல்லாருக்கும் காபி வேற குடுத்து..” என்றவன்,

ப்ரித்வியிடம் “என்னடா நிஜமாவே இது பிருந்தாவா?!” என்று கேலி செய்ய,

“அண்ணா…” என்று இருவரையும் முறைத்தவள்,

அடுத்து நின்றிருந்த வினோதனிடம், தட்டினை நீட்டியவள் “வாங்க…” என்று தலையை ஆட்டிட,

“ம்ம்..” என்று தலையை ஆட்டிக்கொண்டான்.

ஆனாலும் வினோதனின் பார்வையில் ஒரு சிறு மாற்றம் இருப்பதை, பிருந்தாவும் கண்டுகொள்ள, அவளுக்குள்ளே சொல்ல முடியாத ஒரு உணர்வு. பயமா, படபடப்பா, தவிப்பா இல்லை வெட்கமா என்னவென்று அவளால் வரையறுக்க முடியவில்லை.

கை கால் எல்லாம் நடுங்குவது போலிருக்க, கையில் இருந்த தட்டினை இறுகப் பற்றிக்கொண்டாள்.

பக்கத்தில் ப்ரித்வியும், ரித்திக்கும் இருக்க அவர்கள் முன்னிலையில் வினோதனோடு மேற்கொண்டு என்ன பேச முடியும். ஆனாலும் பேசிட ஆசையாய் இருந்தது. அவனது முகத்தை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தவள், பின் ஒன்றும் செய்ய இயலாமல் நகர்ந்துசெல்ல, வினோதனின் பார்வையோ அவளை மெல்ல தொட்டு தொட்டு மீண்டது.

காசிராஜன் வந்து வினோதனோடு என்னவோ பேசிக்கொண்டு நிற்க, ப்ரித்வியோ பூஜையில் பார்வை வைத்து நின்று இருந்தான். அடிக்கடி அவனது பார்வையும் மீனாள் வருகிறாளா என்று பார்த்துக்கொண்டே தான் இருந்தது. எப்படியும் எல்லாம் வந்து முக்கால்மணி நேரம் கழித்துத்தான் தங்கமீனாள் வந்து சேர்ந்தாள்.

அவள் வந்து அங்கே நுழைகையிலேயே அவளது பார்வை ப்ரித்வி மீதுதான் படிந்து பின் நகர்ந்து சென்றது. ஆனால் அவள் வந்த நேரம், ப்ரித்வியிடம் கணேசன் வந்து பேசிக்கொண்டு இருக்க, மீனாள் வந்ததை  கவனிக்கவில்லை. ஆனால், அவனருக்கே நின்று நடப்பதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த ரித்விக்கின் பார்வையில் தான் தங்கமீனாள் விழுந்தாள்.

பார்த்ததுமே ரித்திக் ‘வாவ்…’ என்று இதழ் அசைத்தவன், யாரடா இவள் என்று பார்க்க, ப்ரித்வி பேசிவிட்டு இவன் பக்கம் திரும்பவும், நண்பனை போட்டு உலுக்க

‘யார்ரா அது…’ என்று ஒருவித சலிப்போடு தான் பார்வையை திருப்பினான் ப்ரித்வி.

பார்த்தவனுக்குமே ஒருநொடி இதயம் மெல்ல தன் வேலையே நிறுத்தி பின் துடிப்பது போல் இருந்தது. அரப்பு பச்சை நிற மென்பாட்டு சேலையும், வெங்காயச் சருகு நிற ரவிக்கையும் அணிந்து, தலை நிறைய குண்டு மல்லிச் சூடி, மிக மிதமான ஒப்பனையில், காதில், கழுத்தில், கையில் என்று கல் வைத்த ஒரு செட் நகை அணிந்து அழகான ஓவியம் போல வந்து நின்று இருந்தாள்.

அழகரசி அவளைப் பார்த்ததுமே, இரு கரத்தையும் அவள் தலை சுற்றி மடக்கி, திருஷ்டி கழிப்பது போல செய்ய “ஆச்சி…” என்று கண்களை உருட்டி புன்னகை செய்தாள்.

“ஹேய் சூப்பரா வந்திருக்க டி..” என்று தயங்காமல் அவளை பாராட்டியபடி பிருந்தா சென்று மீனாவிடம் நிற்க,

“நீ மட்டும் என்னவாம்?! அழகா இருக்க..” என்று மீனாளும் பதிலுக்கு சொல்ல, ப்ரித்வியின் பார்வை எல்லாம் அவர்களிடம் தான்.

மீனாளும் அவனைப் பார்த்தாள் தான். அவள் பார்வை தன்னிடம் வந்ததுமே, தலையை ‘வா..’ என்பதுபோல் அசைத்துக் காட்டியவனை அதற்குமேல் பொறுமைகாக்க விடவில்லை ரித்திக்.

“டேய்… மச்சா.. யாருன்னு கேக்குறேன்லடா..” என்று அவன் கரம் பிடித்து அழுத்த,

“என்னடா வேணும் உனக்கு?!” என்றான் இவனோ பல்லைக் கடித்து.

“யார் இந்த பியூட்டி?!” என்றான் மீண்டும்.

“ம்ம்ச்.. தங்கமீனா. காசி மாமா பொண்ணு.. எனக்கு கசின்..” என்று சொல்ல,

“ஓ! உனக்கு மாமா பொண்ணா?! வாவ்.. மச்சா நான் ஒன்னு சொல்லவா?!” என்று ஆர்வமாய் நண்பன் கேட்கவும்,

“அமைதியா இரேன்டா. என்ன செய்றாங்கன்னு பாரு..” என்று நண்பனை அடக்கினான்.

ஆனால் அதே நேரம் மீனாள், வினோதனைப் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சியாகி பின் சந்தோசமாய் கை ஆட்டியவள் “என்ன சர் திடீர்னு வந்திருக்கீங்க? என்ன விஷயம்?!” என்று கேட்டுக்கொண்டே அவனருகே சென்று நிற்க,

“வாங்க மேடம், கோட்டிங் எல்லாம் பலமா இருக்கே…” என்று சொல்லி அவனும் பேச, இருவரும் ஒன்றாய் நின்று பேசுவது கண்டு கணேசனுக்கும், காசிராஜனுக்கும், அவர்களின் பொருத்தம் பார்த்து மனதிற்குள் சந்தோசம் இன்னும் கூடியது.     

ரித்திக்கோ “மச்சா என்னடா பச்சக்கிளி அங்க போய் நிக்குது..” என்று நண்பனின் தோளினை சுரண்ட,

“டேய்…” என்று பல்லைக் கடித்தான் ப்ரித்வி.

“மச்சா எனக்கு ஒன்னு சொல்லியே ஆகணும்..” என்று ரித்திக் நச்சரிக்க,   ரித்திக் பற்றி நன்றாய் தெரிந்தவன் ஆகிற்றே ப்ரித்வி. ஆர்வமிகுதியில் ஏதாவது பேசி வைப்பான். சுற்றி பெரியவர்கள் நின்றிருக்க, அது யார் காதிலும் விழுந்தால் என்ன செய்வது என்று, ப்ரித்வி நண்பனை அடக்கிவிட்டான்.  

மீனா, வினோதன் அருகில் நின்று இருந்தாலும், அவளின் பார்வையோ அடிக்கடி ப்ரித்வியிடம் தான். முதல்முறையாய் அவனை வேஷ்டி சட்டையில் காண்கிறாள். சும்மாவே இப்போதெல்லாம் அவன் எப்படி இருந்தாலும் பார்க்கத் தோன்றுகிறது. இப்போதோ கண்ணுக்கு லட்சணமாய், மனதை கவர்ந்திழுக்கும் வகையாய் அவன் நின்றிருக்க, தடுமாறாமல் என்ன செய்வாள்.

இப்போது வருகிறதே வேஷ்டியும் சட்டையும் ஒன்றுபோல ஒரே நிறத்தில், சந்தன நிற வேஷ்டி சட்டையில், கொஞ்சம் மின்னி பளபளக்கும், காற்றில் ஆடும் முன் கேசத்தோடு, நெற்றியில் சிறு விபூதி கீற்றோடு, முகத்தை கொஞ்சம் சீரியசாக வைத்து, இரு கைகளையும் கோர்த்து நின்று, பார்க்க பார்க்க அவளுக்கு தெவிட்டவே இல்லை.

‘சைட் அடிக்கிறியா மீனா?!’ என்று அவளுக்கு அவளே கேட்டுக்கொள்ள, வினோதன் அவளிடம் என்ன கேட்டானோ “ஆமா…” என்று சொல்லி தலையை ஆட்டினாள்.

அவள் பதிலில் அவளை விசித்திரமாய் பார்த்தவன் “ஏய் லூசு..” என்று அதட்ட,

“என்ன?!” என்றவளிடம், சந்திரா வந்த பேச  “அ.. என்னம்மா?! என்ன?!” என்றாள் திரும்ப.

“எந்த உலகத்துல இருக்க நீ?!” என்று சந்திரா திரும்ப மகளை கேட்க,

வினோதனோ “அவளுக்கு என்னவோ ஆகிருச்சு ஆன்ட்டி…” என்றான் கிண்டலாய்.

பிருந்தாவிற்கோ இவர்களிடம் சென்று நின்று பேசவேண்டும் என்று ஆசையாய் இருந்தது. அவளின் பார்வை ஒவ்வொரு நொடியும் வினோதனை பார்த்து பார்த்து நகர, மீனாளோ “அங்க என்ன டி பண்ற. இங்க வா..” என்று பிருந்தாவை அழைத்து தன்னருகே நிற்க வைக்க, கிடைத்தது வாய்ப்பு என்று பிருந்தாவும் அவளிடம் சென்று நின்றுகொண்டாள்.

வினோதன் ஒரு அடக்கப்பட்ட சிரிப்போடு அமைதியாய் நிற்க, அடுத்த சில நிமிடங்களில் பூஜையும் நல்ல முறையில் முடிய, அதன்பிறகே அனைவரும் கொஞ்சம் ஆசுவாசமாய் அமர்ந்தனர்.

ரித்திக்கோ “டேய் மச்சா.. அந்த பொண்ணு உன்னை பாக்குது டா…” என்று பொங்கி பூரித்துச் சொல்ல,

“என்னடா நீ?!” என்றான் ஒருவித எரிச்சலோடு ப்ரித்வி.

“அட நிஜமா.. நானும் வந்ததுல இருந்து பாக்குறேன், அந்த பொண்ணு உன்னை பாக்குது…” என்றுசொல்ல,

“இதை அவக்கிட்ட கேட்டோம்னு வை, கேவலமா கலாய்ச்சு விட்டுட்டு போயிடுவா. தங்கா பத்தி உனக்குத் தெரியாது. வாய் குடுத்து பேச்சு வாங்கிடாத…” என்றுவிட்டான்.

“நீ என்னடா நீ.. அழகான ஒரு பொண்ணு, உன்னை ஆர்வமா பாக்குதுன்னு சொன்னா, கலாய்ச்சு விட்டுடுவான்னு சொல்லிட்டு இருக்க…” என்றவன் மீண்டும் மீனாளை கவனிக்கவே செய்தான்.  

தங்கமீனாளோ பிருந்தாவிடம் “நான் கிளம்புறேன் பிருந்தா. என் பிரண்ட்ஸ் வெய்ட் பண்ணுவாங்க. அவங்களை பிக்கப் பண்ணிட்டு போகணும்..” என்று சொல்லிக்கொண்டே நகரப் பார்க்க,

“இரு டி கொஞ்சம் போட்டோஸ் எடுப்போம்..” என்றாள் பிருந்தா.

“அச்சோ.. நேரமில்ல பிருந்தா…” எனுன்போதே,

“அண்ணா…” என்று ப்ரித்வியை அழைத்திருந்தாள் பிருந்தா.

“ஏய் என்ன பண்ற நீ?!” என்று மீனாள் கேட்க,

“இரு டி.. நானே அதிசயமா சேலை கட்டிருக்கேன். போட்டோ எடுப்போம்..” என்று சொல்லி அவளின் கையை பிடித்துக்கொண்டு இருந்தாள்.

ப்ரித்வியும், அவன் பின்னோடு ரித்திக்கும் வந்துவிட, ப்ரித்வி முறையாய் வினோதனையும், மீனாளையும் ரித்திக்கிற்கு அறிமுகம் செய்து வைக்க, வினோதன் ‘ஹாய் ப்ரோ…’ என்று கரம் குலுக்க,

மீனாளும் “ஹாய் அண்ணா…” என்றாள்.

அவ்வளவுதான் ரித்திக்கிற்கு சப்பென்று ஆகிப்போனது.

‘அண்ணா வா?! இதென்ன லாஜிக்?! அண்ணன் பிரண்ட அண்ணனா பார்க்கணும். தங்கச்சி பிரண்ட தங்கச்சியா பார்க்கணும். அதுபோல முறைப்பையனோட பிரண்ட முறைப்பையனா தானே பார்க்கணும்..’ என்று அவனுக்குள் எண்ணிக்கொண்டே, ப்ரித்வியை முறைக்க, நண்பனின் எண்ணப் போக்கினை உணர்ந்தவன் லேசாய் நகைத்துக் கொண்டான்.

மீனாவோ கிளம்புவதிலேயே குறியாய் இருக்க “அட இரு டி..” என்று அதட்டிய பிருந்தா “ண்ணா எங்களை போட்டோ எடேன்…” என்றாள்.

புகைப்படம் எடுப்பதற்கு ப்ரித்விக்கு கசக்குமா என்ன. அதிலும் அழகாய் இரண்டு பெண்கள் கேட்கையில் மாட்டேன் அன்பானா என்ன. அப்படியே மாட்டேன் என்றாலும், பிருந்தா அடுத்து சும்மா இருப்பாளா என்ன?!

“நில்லுங்க…” என்றுசொல்லி அவனின் அலைபேசியை எடுக்க,

“சீக்கிரம் மாமா டைம் ஆச்சு…” என்றாள் மீனாள்.

“ரொம்ப பண்ணாத டி. எங்கண்ணா அழகா போட்டோஸ் எடுக்கும் தெரியுமா?!” என்ற பிருந்தா “அண்ணா கேண்டிட் போல எடுண்ணா…” என்றுசொல்லி அதற்கு ஏற்றவகையில் தானும் நின்று, பேசி என்று இல்லாமல், மீனாவையும் ஒருவழி செய்தாள்.

ப்ரித்வியும் தங்கையின் சொல்போல் புகைப்படங்கள் எடுத்தவன் “வேற பக்கம் நின்னு கொஞ்சம் எடுக்கலாமா?!” என்று கேட்க,

மீனாள் பதில் சொல்லும் முன்னமே பிருந்தா  “ஓகே ண்ணா…” என்றவள் “வா வா மீனா.. எங்கண்ணா போட்டோ எடுக்கிறேன்னு சொல்றதே பெருசு..” என்று அவளையும் விடாது இழுத்துக்கொண்டாள்.

“டி.. பைவ் மினிட்ஸ் தான்..” என்றவள், கண்களை உருட்ட,

ப்ரித்வியோ அவர்களை அந்த பழைய வீட்டின் வாசல் பக்கம் நிற்கச் சொல்ல “அதானே பார்த்தேன்…” என்றாள் தங்கமீனாள்.

பிருந்தா “என்ன மீனா?!” என்று கேட்க,

“உங்க அண்ணா, ஒருநாளைக்கு ஒருதடவையாவது இங்கன வரலைன்னா தான் தெய்வ குத்தம் ஆகும்..” என்று பேச, அவளின் கேலி புரிந்து ப்ரித்வி சிரித்தவன்

“அது என்னவோ இந்த திண்ணை எனக்கு ரொம்ப பிடிக்குது…” என்றவன், இருவரையும் இப்படி நிற்கவேண்டும், இந்த பக்கம் பார்க்கவேண்டும், கழுத்தை இப்படி வைத்திருக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே புகைப்படங்கள் எடுக்க, மீனாவிற்கோ என்னவோ சொல்லமுடியாத ஒரு தவிப்பு உள்ளுக்குள்ளே.

பிருந்தாவும் “ஹேய் நீவேணா பாரேன் ஸ்டில் எல்லாம் செமையா வரும்…” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

“பிருந்தா இங்க என்ன பண்ற.. வந்தவங்களை கவனிக்காம…” என்று பின்னோடு வந்துவிட்டார் ராதா.

“போட்டோஸ் எடுக்கிறோம் ம்மா..” என்றவள் “இரு மீனா வந்திடுறேன்…” என்று சொல்லிக்கொண்டே நகர, இதுதான் சாக்கென்று எண்ணி மீனாவும் கிளம்பப் பார்க்க,

“ஒன் மினிட்..” என்றவன், சூரிய வெளிச்சம் நேராய் அந்த பழைய வீட்டின் கதவினில் பட்டு வெளிச்சம் கொடுக்க, அதற்கு பக்கத்திலேயே அவளை நிற்க வைத்து “இந்த சைட் பாரு தங்கா..” என்று சொல்லி அவளை புகைப்படம் எடுக்க,

“அப்படியே இரு.. பார்வை மட்டும் மேல பாரு..” என்று சொல்லிக்கொண்டே அலைபேசியில் படங்களை எடுத்துக்கொண்டு இருந்தவன் “வாவ்..! சூப்பர்ப்.. தங்கா.. அவ்வளோ அழகா இருக்க..” என்று சொல்லிக்கொண்டே இருக்க, மீனாவிற்கோ குப்பென்று வியர்த்துப் போனது.

உள்ளுக்குள்ளே தடக் தடக் என்று ரயிலோசை கேட்பதுபோல இதயம் தாறுமாறாய் வேகமாய், சத்தமாய் துடிக்க, ப்ரித்விக்கோ ஒவ்வொரு கோணத்திலும், படங்கள் எடுக்கையில் அவனது ரசனை தலைதூக்கி “செமையா இருக்கு தங்கா..” என்று சொல்லிக்கொண்டே படங்களை எடுக்க, அவளால் அதற்குமேல் நிதானமாய் நிற்க முடியவில்லை.

ஒருவித சூட்டினை, அவள் கன்னமும் உடலும் உணர்ந்து, பார்வையை அலைபுரச் செய்து தடுமாற வைத்தது.

வேகமாய் கண்களை தழைத்து, தன்னுடைய வெட்கம் அவன் கண்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்று பெரும்போராட்டம் செய்து அவள் நிற்க, காமிரா கண்கள் வழியாய் காணும் அவனுக்கா அவளது ஒவ்வொரு முக மாற்றமும் தெரியாமல் போகும்.

ஒரு பெண்ணின் வெட்கம்..

அதை மறைக்க அவள் படும்பாடு..

லேசாய் மேலுதட்டினை கடித்து விடுத்தது, கழுத்து வியர்வையை துடைத்து, கைகுட்டையால் நெற்றியை ஒற்றிக்கொண்டு, திணறும் பார்வையோடு “போதும் மாமா…” என்று சத்தமே இல்லாமல் உதட்டசைத்து அவள் சொன்ன விதம், கவிதை போல அவனுக்கு இருந்தது.

கூடவே ‘அந்த பொண்ணு உன்ன பாக்குதுடா..’ என்று உள்ளுக்குள்ளே ரித்திக்கின் குரல் வேறு சத்தமாய் சத்தம் எழுப்பியது.

“தங்கா இங்க நேரா பாரேன். ஒரே ஒரு ஸ்டில்.. லைட்டிங் சூப்பரா இருக்கு இங்க..” என்றவனின் கண்களும், இதற்கு என்ன சொல்வாள் என்று ஆர்வமாய் பார்க்க,

அவளோ மறுப்பாய் தலையை ஆட்டியவள், தலை குனிந்து நின்று “கிளம்புறேன் மாமா…” என,

“இங்க நேரா பாரேன் தங்கா…” என்று அடுத்துச் சொல்ல, வேகமாய் காதோர கேசத்தை ஒதுக்கிவிட்டவள், கீழுதட்டினை அழுந்த கடித்து நிற்க “தங்கா..” என்ற அழைப்போடு, அவளின் அருகே ப்ரித்வி மெல்ல நெருங்கிவர, தங்கமீனாளுக்கோ மூச்சு வாங்குவது போல் இருந்தது.

‘கண்டுகொண்டானோ?!’ என்கிற பெறும் தவிப்பு.

பக்கம் வருகிறானே என்கிற பதபதைப்பு.

அவளின் ஒவ்வொரு அசைவும் அவனது மனதிற்கு ஆர்வத்தையும், அவளின் வெட்கத்தை இன்னும் பக்கத்தில் நின்று பார்க்கும் ஆவலையும் கூட்ட, அவளின் பக்கம் நின்றவன் “தங்கா…” என்றுசொல்லி முகம் பார்க்க,

“மா.. மாமா…” என்றவள் அப்படிச் சொல்லும் முன்னம் வெகுவாய் தவித்துப் போனாள்.

உதட்டின் மேலே, நாசியிலும், நெற்றியும், அவளின் சங்கு கழுத்திலும் வியர்வை மினுமினுப்போடும், மல்லிகை வாசத்தோடும் தலைதாழ்த்தி, முகத்தினில் செம்மையும் வெட்கத்தையும் கலந்து கட்டி காட்சி கொடுத்து அவள் நின்ற விதம் ப்ரித்வியை “தங்கா?!” என்று ஆர்வமாகவும், கேள்வியாகவும் அவளை அழைக்கச் செய்ய,

அவன் கேள்வியில் இருந்த பொருள் என்னவென்று அவள் புரிந்துகொண்டு “நா.. நான் கிளம்புறேன் மாமா…” என்று ஓடாத குறையாய் சென்றுவிட்டாள்.