அத்தியாயம் – 15

ப்ரித்வியை நேரில் கண்டு பேசும் வரைக்கும்தான் தங்கமீனாளுக்கு உள்ளுக்குள்ளே தடுமாற்றம் எல்லாம். இப்போது பேச்சு வளர்ந்து, நேரம் கடக்கவும் மனது கொஞ்சம் மட்டுப்பட்டது. உள்ளிருந்த உதறல்கள் எல்லாம் கொஞ்சம் அமிழ்ந்து போனது நிஜம். அதிலும் அவள் பேசியதை கேட்டு, அவன் சிரித்துவிடவும் ‘அப்பாடி…’ என்கிற ஆசுவாசம் அவளுள்.

அவன் கரத்தால் பூ வாங்கி, தான் உணர்ந்த அந்த புத்துணர்வு அவள் எப்போதும் மறந்திட மாட்டாள். ஆனாலும் இதோ ஏற்பட்டிருக்கும் இந்த இனிய உறவையும், சொந்தத்தின் நெருக்கத்தையும் அவள் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

‘இப்போ என்ன சைட், க்ரஷ் இப்படி இந்த ப்ரித்வி மாமாவ சேர்த்துக்க வேண்டியது தான். மாமா மகனை சைட் அடிக்கிறது இல்லையா. இதெல்லாம் உலக வழக்கம் தானே..’ என்று அவளாகவே ஒரு சமாதானத்திற்கு வந்துவிட்டாள்.

மீனாளின் பேச்சையும், மகனது சிரிப்பையும் தான் பார்த்துக்கொண்டு இருந்தார். இருவரும் எதார்த்தமாக செய்ததுதான். ஆனாலும் ராதாவின் ஆசை கொண்ட மனது, அனைத்தையும் அவரது ஆசைகளுக்கு ஏற்றதுபோல காண ஆரம்பித்தது.

அதிலும் ப்ரித்வி இப்படி சத்தம் போட்டு சிரிக்கும் ரகமெல்லாம் இல்லவே இல்லை. ஒருவேளை அவனின் நண்பர்களோடு இருக்கும்போது இப்படி இருப்பானாக இருக்கும் போல. ஆனாலும் மகனின் இந்த மலர்ந்த சிரிப்பினை, ராதா மகிழ்ச்சியாகவே பார்த்துக்கொண்டு இருக்க,

தங்கமீனாவோ ‘சிரிக்கிறப்போ இன்னும் அழகா இருக்கான்யா..’ என்று அப்பட்டமாய் மனதிற்குள் ரசித்துக்கொண்டாள்.

ப்ரித்விக்குக்கோ ‘இப்படியெல்லாம் கூட ஒருத்திக்கு ஆசை இருக்குமா?!’ என்று நினைத்து நினைத்து சிரிப்பு வர, அவன் சிரிப்பு அவளைக் கண்டு அடுத்து கேலியாய் மாற

“போதும் மாமா…” என்றாள் கொஞ்சம் சங்கோஜப்பட்டு.

பிருந்தாவும் “அப்படி எங்கயாவது கிளம்பி போயிடாத தாயே..” என்று தோழியிடம் சொன்னவள் “ஹேய் மீனா வீட்டுக்கான ப்ளான் எல்லாம் வந்திருக்கு. நீ பாக்குறியா?” என்றாள் ஆர்வமாய்.

மீனாளோ கேள்வியாய் அழகரசியைப் பார்க்க “வினோதன் அப்பா வந்து குடுத்துட்டு போயிருக்கார் மீனா. இன்னும் முடிவு பண்ணல. ப்ரித்வி தான் முடிவு பண்ணனும்..” என்று சொல்ல,

அதற்குள் பிருந்தாவே கணேசன் கொண்டு வந்திருந்த வரைபடங்களை எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் கொடுக்க, ப்ரித்வியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பிருந்தா கொண்டு வந்தவைகளில் பார்வையை பதித்தாள்.

ராதாவோ “நீயும் சொல்லு மீனா எது சரியா வரும்னு..” என,

“நானா அத்தை?!” என்று விழிகள் விரித்தவள் “எனக்கு இதுல என்ன ஐடியா இருக்கப் போகுது?!” என்றாள் தயங்கி.

“அட பார்த்தா உனக்கும் ஏதாவது தோணும் தானே..” என்று பிருந்தா சொல்ல,

மீனாளோ கையில் இருக்கும் வரைபடங்களை எல்லாம் பார்த்தவள் “எல்லாமே நல்லா இருக்கு தான் அத்தை. ஆனா உங்களுக்கு எது சரிபட்டு வரும்னு நீங்கதானே முடிவு பண்ணனும்..“ என்றிட,

“முடிவெல்லாம் ப்ரித்வி கைல விட்டாச்சு மீனா..” என்றார் ராதா.

தங்கமீனாளோ மீண்டும் ப்ரித்வியைப் பார்த்தவள் “உங்களுக்கு எது செட்டாகும்னு தோணுதோ அதை முடிவு பண்ணுங்க மாமா..” என்றுவிட்டாள்    

என்ன இருந்தாலும் இவர்கள் வீட்டு விசயத்தில், தான் எப்படி கருத்துச் சொல்வது என்கிற தயக்கம் இருக்கவே செய்தது அவளுக்கு. ப்ரித்வியோ அவளை ஒருமுறை நோக்கிவிட்டு, பின் ராதாவிடம் “ம்மா ஆக்சுவலா இங்க பின்னாடி வீடு ஜாயின் பண்ணி கட்டுறதே தங்காவோட ஐடியாதான்..” என்று நிஜத்தை சொல்லிவிட்டான்.

“என்னது?!” என்று ராதாவும், பிருந்தாவும் திகைத்துக் கேட்க, தங்கமீனாளுக்கு கொஞ்சம்  சங்கடமாய் போனது.

‘இதை ஏன் இப்போ சொல்லணும்?’ என்று நினைத்துக்கொண்டவள் “அது அத்தை.. நா.. நான் எதோ சும்மா சொன்னேன்..” என்று பேச,

“ம்மா நிஜமா தங்கா சொன்னது பெஸ்ட் ஐடியா தானே..” என்று அவளை மேலும் பேச்சில் இழுத்தான். 

ராதாவிற்கு இன்னமும் நம்பிட முடியவில்லை. இந்த வீடு கட்டும் விஷயம் பெரியவர்களின் யோசனை என்றே இருந்தவருக்கு, அது தங்கமீனாளின் யோசனை என்று தெரியவும், கொஞ்சம் அடர்ந்த உணர்வு தான் மனதிற்குள். எதிர்மறையாய் இல்லை. நிறைவான ஒரு அழுத்தம் அவருக்குள் வந்தமர்ந்து கொண்டது நிஜம்.

பிருந்தாவோ “ஹேய் நல்ல ஐடியா கொடுத்திருக்க மீனா..” என்று தோழியின் தோளினை தட்ட, மீனாவிற்கு என்னவோ அதற்குமேல அங்கே இருக்க முடியும்போல தோன்றவில்லை.

மெதுவாய் எழுந்துகொள்ளப் பார்க்க, அழகரசியோ “நீங்க எப்போ விருந்து குடுக்கிறீங்க மீனா?” என்று கேட்டு நிறுத்தினார்.

“ஆ.. அது தெரியல ஆச்சி.. இன்னும் அப்பா ஒன்னும் சொல்லல..” என்றவள் சொல்லிக்கொண்டு எழும்போதே, ப்ரித்வி அலைபேசியில் பேசியபடி வெளியே செல்வது தெரிந்தது.

மீனாவும் “நானே தான் வரணும்னு இல்லை. நீயும் வரலாம் பிருந்தா எங்க வீட்டுக்கு..” என்று சொல்லிவிட்டே செல்ல,

“வீக்கென்ட்ல நீ இருப்பதானே. வர்றேன் டி..” என்று அவளும் சொல்ல, தங்கமீனாள் கிளம்பிவிட்டாள். 

வழக்கமாய் செல்லும் வழியில் செல்லலாம் என்று, அந்த குறுக்கு சந்து பக்கம் நுழைய, ப்ரித்வி அங்கே அந்த பழைய வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தான்.

அந்த வீட்டின் திண்ணையை அவனுக்கே சொந்தமாக்கிக் கொண்டான் போல. அடிக்கடி அங்கேதான் இருக்கிறான். அதுவும் இந்த இருட்டுகிற வேளையில் இங்கே என்ன வேலை என்பதுபோலவே அவனைப் பார்த்து “போயிட்டு வர்றேன் மாமா…” என்று சொல்லியபடி  வேகமாய்  நடக்க,  

“தங்கா…” என்று அழைத்து நிறுத்தினான்.

‘அச்சோடா..’ என்று திடுக்கிடலுடன் மீனா திரும்பி நிற்க,

அவனுக்கு மனதிற்குள் ஒன்றை வைத்துக்கொண்டு இருப்பது எல்லாம் ஆகவே ஆகாத காரியம். எப்போதடா இவள் நேரில் மாட்டுவாள் என்று இருந்தவன் போல, இதோ அவள் வரும் வழியில் நின்று அதற்கான வாய்ப்பினை உருவாக்கிக்கொண்டு “என்னை அவாய்ட் பண்றியா?!” என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.

மீனாளோ கண்கள் விரிய “என்ன மாமா?!“ என்று திரும்பக் கேட்க,

“மெசேஜ் என்னவோ அனுப்பிட்டு, டெலிட் பண்ணிருக்க. வீட்டு பக்கமும் வரவே இல்லை. அன்னிக்கு மதுரைல நடந்ததை நினைச்சு, ஒருவேளை என்மேல எதுவும் கோபமோன்னு..” என்று அவன் பேசும்போதே,

“கோபம் எனக்கில்ல. உங்களுக்குத்தான் ரொம்ப கோபம்..” என்றுவிட்டாள் பட்டென்று.

அவள் அப்படிச் சொன்னதுமே, லேசாய் இதழ் வளைத்தவன் “இப்போ இல்ல..” என்று மென்குரலில் சொல்ல,

“இல்லைன்னா சரிதான். ஆனா கோபம் ஜாஸ்திதான் உங்களுக்கு மாமா. அன்னிக்கு எல்லாரும் அத்தனை சொல்றோம், கொஞ்சம் கூட நீங்க சமாதானமே ஆகல..” என்றவள் “நான் கிளம்புறேன் நேரமாச்சு..” என்று நடக்க,

“நான் கொஞ்சம் அப்படித்தான் தங்கா..” என்றவனும் அவளோடு நடந்தான்.

 ‘இதென்னடா மீனாளே உனக்கு அந்த சோதனை..’ என்று நினைத்தவள் “வேலை முடிஞ்சதா?!” என்று கேட்க,

“நைட் ஒரு மீட்டிங் இருக்கு. சோ இப்போ கொஞ்சம் ப்ரீ. கொஞ்சம் பிரெஷ் ஏர் வேணும்போல இருந்தது. அதான் சின்னதா ஒரு வாக்..“ என்றுசொல்ல,

“ஓ!” என்றவள், அடுத்து ஒன்றும் பேசவில்லை.

ஆனால் ப்ரித்வி “என்ன மெசேஜ் அனுப்பின தங்கா?!” என்று கேட்க,

அந்த பொழுது மங்கிய வேளையில், கொஞ்சமே கொஞ்சம் சிலுசிலுத்து வீசும் காற்றோடு, சிறு குறுக்கு சந்திற்குள், அவனோடு பேசியபடி அவர்கள் மட்டுமாய் நடந்துசெல்லும் இந்த நிமிடங்கள் என்னவோ அந்தநொடி அவளுக்கு கவிதைபோல இருக்க, இதோ இப்போதும் அவனது தங்கா என்ற அழைப்பு கொஞ்சம் அவளை தடுக்கிப் பார்த்தது நிஜம்.

“எ.. என்ன மெசேஜ் மாமா?!” என்று அவள் திரும்பவும் கேட்க,

“நீ வேற எதோ திங்கிங்ல இருக்க போல தங்கா..“ என்று ப்ரித்வி நின்று அவள் முகம் பார்க்க,

“அ.. அதெல்லாம் இல்ல மாமா. அது.. அன்னிக்கு மாத்தி அனுப்பிட்டேன்.. வேலை விசயமா என்னோட வேலை செய்றவங்களுக்கு போட்ட மெசேஜ்..” என்று எப்படியோ சமாளிக்க,

“ஓ..” என்றவன் ”பின்ன ஏன் வீட்டுக்கே வரலை..” என்றான் அடுத்து.

‘விடமாட்டான் போலவே…’ என்று முகத்தை சுருக்கியவள் “நீங்க பிரெஷ் ஏர் வாங்க வந்தது போல தெரியல மாமா. என்னை கேள்வி கேட்கன்னே வந்தது போல இருக்கு..” என்று வந்த கடுப்பினை உள்ளடக்கி பேசினாள்.

“ம்ம் அப்படியும் கூட சொல்லலாம்..” என்று வெகு இலகுவாய் ஒத்துக்கொண்டான்.

‘ஓஹோ.. அப்போ நான்தான் வந்து சிக்கிட்டேனா..’ என்பதுபோல அவள் பார்க்க,

“சரி விடு.. எந்த ப்ளான் நல்லாருக்கு..?” என்று கேட்க,

“ஹா.. அது நீங்கதானே டிசைட் பண்ணனும்..” என்றாள்.

“உனக்கு எது சரின்னு தோணுது..” என்றான் விடாமல்.

“இதென்னடா வம்பா போச்சு…” என்று வாய்விட்டே மீனாள் சொல்லிட, ப்ரித்விக்கு அவனை மீறிய ஒரு புன்னகை.

எதற்காக அவளோடு பேச்சு வளர்க்கிறோம் என்று அவனுக்குமே தெரியவில்லையே. அவள்தான் வீடு விசயத்தில் யோசனை சொன்னது என்று ஏன் அம்மாவிடம் சொன்னோம் என்றுகூட அவனுக்கு இப்போது நினைவில் இல்லை. பட்டென்று சொல்லிவிட்டான்.

இந்த விஷயம் அப்பாவிற்கு தெரிந்தால், அவர் எப்படி எடுத்துக்கொள்வாரோ என்கிற நினைப்பே இப்போதுதான் வந்தது. ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற ஒரு எண்ணமும் சேர்ந்தே வந்தது இப்போது.

“சொல்லு தங்கா…” என்று அவன் மீண்டும் கேட்க,

“மாமா.. இதுல நான் சொல்ல எதுவுமே இல்லை. உங்க பட்ஜெட்க்கு எது சரியா வருமோ அது முடிவு பண்ணுங்க..” என,

“ஹ்ம்ம் தனி வீடு போல ரெண்டு ப்ளான் இருந்தது இல்லையா, அதுதான் எல்லாருக்குமே பிடிச்சிருக்கு. பட் அது கொஞ்சம் அமௌன்ட் ஜாஸ்தி..” என்றான்.

“அப்படியா?!“ என்று இதழ் மட்டும் அசைத்தவள்,

“நான் ஒன்னு சொல்லவா?!” என்று தலையை ஆட்டி கேட்க,

“என்ன தங்கா?” என்றான்.

“இந்த ஆச்சி.. எங்கம்மா இவங்க எல்லாம் பிக் ஷாட்ஸ். எல்லாம் அக்கவுண்ட்ல யூஸ் பண்ணாம நிறைய பணம் போட்டு வச்சிருக்காங்க. லோன் போட்டாலும் மன்த்லி இன்ட்ரெஸ்ட் கட்டணும் இல்லையா. இவங்கக்கிட்டா வாங்கினா, கைமாறலா வாங்கிக்கலாம். உங்களுக்கு பணம் வர வர அசல்ல மட்டும் கழிச்சுக்கலாம். வட்டி மிச்சம்..” என்று சொல்ல,

“அடிப்பாவி?!” என்றான் ப்ரித்வி.

“அட நிஜம்.. இதுல என்ன இருக்கு?! ஆச்சிக்கிட்ட அப்ளிகேசன் போடுங்க.. கண்டிப்பா கிடைக்கும்..” என்றாள் சிரிப்போடு.

“நீ பயங்கரமான  ஆளு தான்..” என்றவன் “சரி உன் அக்கவுண்ட்ல பணம் இல்லையா என்ன?” என்றான் வம்பு செய்வதுபோல.

“இருக்கே.. எத்தன லட்சம் வேணும்னு சொல்லுங்க. கொடுத்துடலாம்..” என்று சர்வ சாதரணமாய் அவள் பதில் சொல்ல, ப்ரித்விக்கு தான் ஆச்சர்யமாய் போனது இப்போது.

ஒரு சிறு தயக்கம் கூட இல்லாது, உடனே தருகிறேன் என்கிறாளே என்று. அதை அப்படியே கேட்டுவிட “அட.. இதிலென்ன இருக்கு மாமா. வேணும்னா சொல்லுங்க. தர்றேன். நீங்க என்ன யாரோ என்னவோ வா..” என்று அன்று அவன் சொன்னதையே இப்போது அவள் சொல்லிச் செல்ல, என்ன காரணம் என்றே தெரியாமல் ப்ரித்விக்கு மனது கொஞ்சம் இதமாய் உணர்ந்தது.

“ஆபிஸ்ல லோனுக்கு பேசிருக்கேன் தங்கா. என்ன கொஞ்சம் பட்ஜெட் கம்மின்னா, பிருந்தா கல்யாணம் நல்லா கிரேன்டா பண்ணலாம்..” என்றவன் “இட்ஸ் ஓகே பார்த்துக்கலாம்..” என்று சொல்ல, இதற்கு அவள் என்ன பதில் சொல்வாள்.

அதற்குள் அவளின் வீடும் வந்துவிட “வீட்டுக்கு வாங்க மாமா..” என்று அழைத்தபடி அவள், வெளி கேட்டினை திறக்க “சும்மாதான் இப்படியே வந்தேன் தங்கா. இன்னொரு நாள் வர்றேன்..” என்று அப்படியே இவர்கள் வீட்டின் பக்கவாட்டில் இருக்கும் பாதையில் இறங்கிவிட்டான்.

கேட்டினை திறந்து உள்ளே போகாமல், வாசலில் அப்படியே நின்று அவன் செல்வதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் தங்கமீனாள்.

ஏன் வந்தான்?!

என்னோடு பேசவேண்டும் என்றா?!

இல்லை மனதில் இருப்பதை பகிரவேண்டும் என்றா?!

நான் தான் கிடைத்தேனா?!

இப்படி பல கேள்விகள் அவளுள் தேங்கி நிற்க, அவளும் வாசலில் அப்படியே தேங்கி நிற்க, வெள்ளை நிற டி ஷர்ட்டும், ஒரு காக்கி நிற முழங்கால் அளவு ஷார்ட்சும் அணிந்து, ஒரு பக்கத்துக்கு பக்கெட்டில் கரம் நுழைந்து நடந்தவனோ, பின்னே திரும்பி பாராமலே மற்றொரு கரத்தை உயர உயர்த்தி கைகளை ஆட்டிவிட்டு நடக்க, பின்னோட மீனாளின் மனதும் இப்படி கையாட்டி செல்லத் தொடங்கியது.

வேகமாய் தலையை உலுக்கிக்கொண்டாள் மீனாள்.

இங்கே வீடு வந்த ப்ரித்விக்கோ, அவனைக் கண்டதும் முகம் மலர்ந்து ஆசையாய் பார்க்கும் அழகரசியைக் கண்டதும், தங்கமீனாள்  சொன்னது தான் நினைவில் வந்தது.

அதனை எண்ணியபடி அவரின் அருகே அமர்ந்தவன் “பாட்டி.. உங்களைப் பத்தின ரகசியம் ஒன்னு சொல்லவா?” என்று கேட்க,

“என்ன ரகசியம்?” என்றார் அவரும் ரகசிய குரலில்.

“இப்போதான் உங்க ஆசை பேதி, அல்லிராணி தங்கமீனா சொல்லிட்டுப் போனா..” என்று அவனும் அவளைப் போலவே பேசிக் காட்ட, பெரிய மனுஷிக்கு சிரிப்பு பொங்கியது.

“போக்கிரி படவா..” என்று அவனின் காதை லேசை திருகியவர் “என்னவாம் அவளுக்கு?” என்றார்.

“அக்கவுண்ட்ல நிறைய பணம் வச்சிருக்கீங்களாம் நீங்களும் சந்திரா அத்தையும். எதுக்கு மாமா லோன் எல்லாம் போட்டு வட்டி கட்டுறீங்க, இவங்கக்கிட்ட வாங்குங்க, அசல் மட்டும் கொஞ்சம் கொஞ்சமா குடுங்கன்னு ஐடியா சொல்லிட்டுப் போறா..” என்று சொல்லி சிரிக்க,

‘இவர்கள் இத்தனை பேசிக்கொள்கிறார்களா..’ என்று ஆச்சிக்கு கொஞ்சம் வியப்பாய் இருந்தாலும், அவன் சொல்லிய சங்கதி கேட்டு லேசாய் தலையை ஆட்டியவர் “உனக்கு எவ்வளோ வேணும்னு சொல்லு பேராண்டி..” என்றார்.

“ஹா..!” என்று அவரைப் பார்த்தவன் “சும்மா உங்களோட வம்பிழுத்தேன் பாட்டி..” என்றவன் “லோனுக்கு சொல்லிட்டேன். எல்லாருக்கும் பிடிச்சமாதிரியே வீடு கட்டிக்கலாம்..” என்றவன் எழுந்து சென்றுவிட்டான்.

ப்ரித்வி முடிவு செய்துவிட்டான் என்றதுமே, காலம் தாழ்த்தாமல் ராதா அடுத்து பூமி பூஜை போடுவதற்கான நாள் குறிக்க, அடுத்தகட்ட வேலைகள் எல்லாம் துரிதமாய் நடக்கத் தொடங்கியது.

போஸ்ராஜன் இதுவரைக்கும் ஒருநாள் கூட காசிராஜன் வீடு சென்றிருக்கவில்லை. ஆனால் இப்போது நேரில் சென்று பூமி பூஜைக்கு அழைக்கவேண்டும். இல்லையேல் நிச்சயம் பெரியவர்கள் மனம் வருந்துவார்கள் என்கிற ஒரே காரணத்திற்காகவே நேரில் மனைவி மற்றும் மகனோடு சென்று அழைப்பு வைத்தார்.

காசிராஜனோ “நமக்குள்ள என்ன பார்மாலிட்டி. கண்டிப்பா வந்திடுவோம்..” என்றுவிட்டார்.

இவர்கள் வந்தபோது மீனா அங்கில்லை. வேலைக்குச் சென்றுவிட்டாள். ராதாவோ “மீனாக்கிட்டயும் சொல்லிடுங்க..” என்றுவிட, ப்ரித்வி அவளது உணவு நேரம் பார்த்து அழைத்தேவிட்டான்.   

“ஹலோ மாமா..” என்றவளுக்கு ஒரு இனிய படபடப்பு உள்ளே.

“லஞ்ச் டைம் தானே தங்கா?!” என,

“ஆமா மாமா..” என்றவளுக்கு புரிந்தது பூமி பூஜைக்காக அழைக்க அழைப்பு விடுத்திருக்கிறான் என்று.

அவனோ “வர்ற புதன் காலைல பூமி பூஜை தங்கா.. கண்டிப்பா வந்திடனும்..” என்று சொல்ல, அன்றைய தினம் அவளோட கல்லூரியில் படித்த தோழி ஒருத்திக்கு திருமணம் வேறு. கல்லூரி தோழிகள் சிலர் ஒன்று சேர்ந்து செல்லலாம் என்று முடிவு செய்திருந்தார்கள்.

பூமி பூஜைக்கு வீட்டில் இருந்து அப்பா அம்மா செல்லட்டும், திருமணத்திற்கு தான் தோழிகளோடு கிளம்பிடலாம் என்று மீனா எண்ணியிருக்க, இப்போது ப்ரித்வி தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கவும், என்ன செய்வது என்று யோசனையாய் இருந்தது.

“என்ன தங்கா பதிலே இல்லை..” என்று ப்ரித்வி மீண்டும் கேட்க,

“வர்றேன் மாமா…” என்றுமட்டும் சொல்ல,

“நான் தனிப்பட்ட முறையில இன்வைட் பண்றதே என்னோட பெஸ்ட் பிரண்ட் ரித்திக் அப்புறமா நீ. அவன் கண்டிப்பா வந்துடுவான். நீயும் வரணும் தங்கா…” என்றுசொல்லி வைத்துவிட்டான்.

ப்ரித்வி இதை எப்படி எண்ணி அவளை அழைத்தானோ. ஆனால் மீனாவிற்குள் ஏகப்பட்ட நடுக்கம்.

‘அப்படியென்ன தனிசிறப்பு?!’ என்கிற கேள்வியும் அவளுள்.

அலைபேசியை பார்த்தபடி அப்படியேதான் அமர்ந்திருந்தாள்.