கணேசன் ஐந்து வரைபடங்கள் கொண்டு வந்திருந்தார். அதில் இரண்டு தனி வீடு அமைப்பாய் இருந்தது. ப்ரித்வி சொன்ன பண அளவில் இருந்து கொஞ்சம் கூடுதல் செலவாகக் கூடும் என்றும் கணேசன் சொல்லிட, போஸ்ராஜன் பதில் எதுவும் சொல்லவில்லை.
மகன் எடுத்துச் செய்கிறான். அவனே முடிவு சொல்லட்டும் என்று ப்ரித்வியைத் தான் பார்த்தார்.
வேம்பரசனோ “எல்லாமே நல்லா இருக்கு கணேசன். ஆனா இந்த தனி வீடு போல வர்ற அமைப்பு இன்னும் அழகா இருக்கு. என்ன பட்ஜஸ்ட் அதிகம்னு சொல்றியே ப்பா..” என்று பெரியவர் பொறுப்பில் பேச்சினை ஆரம்பித்தார்.
“அய்யா… ப்ளான் குடுத்துட்டேன். நீங்க இன்னும் வேற எஞ்சினியர் கிட்ட கூட கேட்டுக்கோங்க. நான் சொன்னதை விட அதிகமாத்தான் சொல்லுவாங்க…” என்று நயமாய் அவரும் பதில் சொல்ல,
அழகரசியோ “காசிக்கும் ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம். அவன் வந்து பேசிருப்பான்…” என்றார் மெதுவாய் ராதாவிடம்.
ஆனால் ராதா என்ன பதில் சொல்லுவார். எதற்கெடுத்தாலும் காசிரஜனை அழைப்பதில், போஸ்ராஜனுக்கு பிடித்தமில்லை என்று வெளிப்படையாய் சொல்லிட முடியாதே. ஆனாலும் பெரிய மனுஷி பேசுகையில் பதில் சொல்லாமலும் இருக்க முடியாது இல்லையா.
“ஒவ்வொரு விசயத்துக்கும் காசி அண்ணன தொல்ல பண்ண முடியுமா அத்தை..?” என்று பவ்யமாய் பதில் சொல்லிவிட்டார்.
“ம்ம்.. அதுவும் சரிதான்..” என்ற அழகரசி “கணேசா பார்த்து செஞ்சு குடுப்பா..” என்று சொல்ல,
“நீங்க எந்த மாடல்னு முதல்ல முடிவு பண்ணிட்டு சொல்லுங்கம்மா. அடுத்து நம்ம பேசிப்போம். பணம் பத்தி பிரச்சனை இல்லை. முன்ன பின்ன ஆனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.. நமக்குள்ள என்ன இருக்கு..” என்றுவிட்டு, கொண்டு வந்து காட்டியிருந்த ஐந்து வரைபடங்களின் விபரங்களையும் மீண்டும் ஒருமுறை விளக்கிவிட்டு சென்றுவிட்டார்.
ப்ரித்வி இப்போது இயல்பிற்கு மீண்டிருந்தான். தங்கமீனாளும் அவனும் அடுத்து எதுவும் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பம் அமையவில்லை தான். ஆனாலும் அதிகப்படியான வேலை அவனை நடந்ததில் இருந்தும், அவன்மீது அவனே கொண்ட கோபத்தில் இருந்தும், கொஞ்சம் அவனை மீட்டெடுத்து இருந்தது.
ஒவ்வொரு வரைபடங்களையும் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருந்தவனுக்கு, மனதிற்குள் பலவிதமான பண கணக்குகள். சட்டென்று ஒரு முடிவிற்கு வந்திட முடியவில்லை. பட்ஜெட் கம்மியாக இருக்கும் ப்ளான் அத்தனை யாருக்கும் திருப்தி இல்லை. அது அவனுக்கும் நன்றாகவே புரிந்தது. தனி வீடு அமைப்பு என்பது வேறொன்றும் இல்லை. உள்ளிருக்கும் வீட்டின் பின்பக்கமாய் வரும் அறைகளை உள்ளிழுத்து, சுற்றிலும் சுற்றுச் சுவர் எழுப்பி, முன்பக்கமும் இரண்டு அறைகள் எடுத்து கட்டுவது தான் திட்டம்.
அது நன்றாகவும் வந்திருந்தது. ஆனால் ப்ரித்வி சொன்ன பண அளவில் இருந்து கிட்டத்தட்ட ஏழு லட்சம் அதிகம். லோன் போட்டுக்கொள்ளலாம் தான். இருந்தும் கடன் கம்மியாய் இருந்தால், பிருந்தாவின் திருமணம் என்கிற போது கொஞ்சம் நன்றாய் செலவுகள் செய்துகொள்ளலாம் என்று தோன்றியது.
குடும்பத்தின் பொறுப்பு என்பது சும்மா அல்லவே. போஸ்ராஜன் கையில் இப்போது தான் செங்கல் சூளை பொறுப்பு வந்திருக்கிறது. தேனியில் இருக்கும் கடைகளின் வாடகை பணம் இனிதான் அவரிடம் வரத் தொடங்கும். ஆனால் அதில் எல்லாம் அவன் கை வைக்கவே விரும்பவில்லை.
இப்படியொரு முடிவு எடுத்தது அவன்தானே. அதனால் தானே இதனை செய்து முடிக்கவேண்டும் என்கிற யோசனையில் இருக்க, அழகரசி தான் “பணம் பத்தி யோசிக்காத ப்ரித்வி. முன்ன பின்ன ஆனாலும் பார்த்துக்கலாம்..” என்று தைரியம் சொல்ல,
“லோன் போட்டா ரெண்டே நாள்ல பணம் கைக்கு வந்திடும் பாட்டி. ஆனா பிருந்தா கல்யாணம் அப்போ செலவு குறைக்கவேண்டி வரும். அதைதான் யோசிக்கிறேன்..“ என,
அதாவது இந்த வீடு கட்டும் முடிவு நீ எடுத்தது. அதனால் இதை நீ பார்த்துக்கொள். என் மகளின் திருமணம் என்பது என்னுடைய பொறுப்பு. அதைப் பற்றி நீ யோசிக்கவேண்டியது இல்லை என்பது போல அவரது பேச்சு இருக்க, அதில் அனைவருக்குமே சற்று மனச் சுருக்கம் தான். ஆனாலும் ஒரு அப்பாவாய் அவரது இடத்தினில் இருந்து பார்த்தால் தானே இந்த சூழலின் அழுத்தம் அவருக்கு எப்படி இருக்கும் என்று புரியும்.
பிருந்தாவோ “அண்ணா.. வீடு கட்டுறதுன்னு முடிவு ஆகிருச்சு. இதேது நீ முன்ன சொன்னதுபோல, இடம் வாங்கியோ இல்லை வேற தனி வீடோ வாங்கிருந்தா, நிச்சயம் இதைவிட அதிகம் தானே வந்திருக்கும். அதை யோசி. இந்த ப்ளான் நல்லாருக்கு. வேணும்னா என்னோடது அம்மாவோட ஜ்வல்ஸ் இருக்குதானே…” எனும்போதே,
“அந்த பேச்சு வேண்டாம் பிருந்தா..” என்று வேகமாய் மறுத்துவிட்டான்.
பிருந்தாவோ அம்மாவின் முகம் பார்க்க, ராதாவும் “என்ன ப்ரித்வி நீ?” என்று பேச வர,
“இல்லம்மா.. நகை பத்தி எப்பவும் பேச்சு வரக் கூடாது. நான் ஆபிஸ்ல பேசிட்டு என்னன்னு சொல்றேன்..” என்றவன் எழுந்துகொண்டான்.
அழகராசிக்கு ப்ரித்வியை எண்ணி மனதிற்குள் பெருமையாய் இருந்தது. பரவாயில்லை யோசித்து, நிதானித்து, அனைத்து சாதக பாதகங்களையும் ஆராய்ந்து, அடுத்து முடிவிற்கு வருகிறான் என்கையில் யாருக்குத்தான் பெருமையாய் இருக்காது.
“பரவாயில்ல ராதா நல்லா வளர்த்திருக்க பசங்களை..” என்று மருமகளை கொஞ்சம் மெச்சிக்கொள்ள, ராதாவிற்கு கொஞ்சம் மனது உற்சாகம் கொண்டது.
வேம்பரசனோ “வைகாசி பொறந்துடுச்சு. சட்டுன்னு முடிவு பண்ணா வீட்டு வேலை ஆரம்பிக்கலாம்..” என்று போஸ்ராஜனிடம் பேசிக்கொண்டே எழுந்து செல்ல,
போஸ்ராஜனும் “அவன் யோசிச்சு முடிவு பண்ணட்டும்..” என்று அவரும் நகர்ந்துவிட்டார்.
அழகரசியோ ஆண்கள் இல்லை எனவும் ராதாவிடம் “வீடு ஆரம்பிக்கிறப்போ, முறைப்படி பூமிபூஜை செஞ்சு ஆரம்பிக்கணும் ராதா. இங்கன நெருங்கிய சொந்தம் நாலு குடும்பம் இருக்கு. அவங்களை கண்டிப்பா கூப்பிட்டே ஆகணும். அடுத்து என் பக்கம்னு பார்த்தா, காசி வீட்டை மட்டுமாவது கூப்பிடணும். இப்போன்னு இல்லை, நல்லது கெட்டது எதுன்னாலும் நீங்களும் அவங்களை விடக் கூடாது. அவங்களும் உங்களை விட மாட்டாங்க. போஸ் கிட்ட இதை பேச முடியாது. ஆனா நீ புரிஞ்சுக்கணும். சொந்தம்னு நிஜ அக்கறையோட வந்து நிக்கிற ஆளுங்க நமக்கு எப்பவும் வேணும்..” என்று சொல்ல,
ராதா தான் ஏற்கனவே மீனாவை மருமகள் ஆக்கிடும் எண்ணத்தில் இருக்கிறாரே. வாய்ப்பு கிடைத்தால் விடுவாரா என்ன?!
“இதை நீங்க சொல்லனுமா அத்தை? மீனாவ நான் வேறயா பார்க்கவே இல்லை. காசி அண்ணனும், சந்திராவும் எத்தனை நல்லவிதமா பழகுறாங்க..” என்றிட,
“என்ன டி இது? ரெண்டு நாள் லீவ் போட்டா இங்கன யார் எல்லாம் செய்றதாம்.. என்னத்துக்கு உனக்கு லீவு?” என்றார் அழகரசி படபடவென.
ராதாவிற்கோ பக்கென்று ஆனது. இரண்டு நாட்களுக்கு சமையல் பொறுப்பு எங்கே மொத்தமாய் அவரிடம் வந்து நின்றுவிடுமோ என்று பயமாய் போனது. மகன் திட்டியதில் இருந்து, மகளையும் இழுத்து பிடித்து கொஞ்சம் வேலைகள் செய்கிறார் தான்.
ஆனால் மூன்று வேளை சமையல், மாலை நேர சிற்றுண்டி, அதுபோக காபி டீ என்று நேரத்திற்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுப்பது எல்லாம், நினைத்தாலே அவருக்கு மூச்சு வாங்குவது போலிருக்க, கொஞ்சம் அரண்டுதான் போனார்.
“ம்மா வீரபாண்டி திருவிழா இல்லையா. எங்க அண்ணன் கிடா வெட்டுது. எங்க அண்ணி தீ மிதிக்குது. நான் ஆயிரங்கண் பானை எடுக்கிறேன்..” என்று சொல்ல,
“ஓ! ஆமால்ல.. வீரபாண்டி திருவிழா ஆரம்பிச்சுட்டாங்க தானே..” என்றவர் “சமையலுக்கு வேற யாரும் தெரிஞ்ச ஆள் இருந்தா கூட்டிவந்து விடு..” என,
“ரெண்டு நாளைக்கு எல்லாம் யாரும்மா வருவாங்க?” என்றார் கற்பகம் லேசாய் நெளிந்தபடி.
“ஏன் வராம? பெரிய வீட்டுக்குன்னு சொல்லு டி.. எல்லாம் வருவாவ..” என்றவர் “ஆள் கூட்டி வந்து விட்டுட்டு நீ லீவு போட்டுக்க..” என்றவர் அவரின் சுருக்கு பையில் இருந்து ஒரு ஐநூறு ரூபாயை எடுத்துக் கொடுக்க, கற்பகத்திற்கு மகம் பளிச்சென்றாகி விட்டது.
“சரிம்மா. சந்திராக்கா கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லி வைங்க. அங்க பலகாரம் செய்ய வர்ற யாரும் வந்தா கூட சரிதானே..” என்றபடி நடந்தார்.
“அதுவும் சரிதான்…” என்றவர் “ராதா நீ சந்திராக்கு பேசி, ரெண்டு நாளைக்கு ஆள் ரெடி பண்ண சொல்லு..” என,
ராதாவும் சந்திராவிடம் பேச “ திருவிழா நேரம் அண்ணி.. சமையல் ஆள் எல்லாமே அங்க இருப்பாங்க. சித்திக்கு தெரியுமே..” என்றார்.
ராதாவோ ‘ஐயோ…’ என்று உள்ளுக்குள்ளே பதறிக்கொண்டு “யாரும் கிடைக்கமாட்டாங்களா சந்திரா..” என,
“கேட்டு பாக்குறேன்.. கிடைக்கலன்னா ஒன்னும் பண்ண முடியாது. வீரபாண்டி திருவிழா முடிஞ்சாதான் ஆள் கிடைக்கும்…” என்றுவிட்டார்.
அழகரசிக்கும் இது தெரியாமல் இல்லை. ஆனாலும் விசாரிப்பதில் தவறில்லை என்று தான் ராதாவையே பேசச் சொன்னது. சந்திராவும் இப்படி பதில் சொல்ல, பிருந்தாவோ “ஆள் கிடைக்கலன்னா என்னம்மா ரெண்டு நாள் தானே நம்மலே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்..” என்றாள் என்னவோ சமையல் எல்லாம் எளிது என்பதுபோல.
ஆனால் இரண்டு நாட்களுக்கு எளிமையான சமையல் செய்தால் வேலை மிச்சம் தானே. ராதாவிற்கோ அழகரசி முன்பு எதுவும் சொல்ல முடியவில்லை. எங்கே நாமே செய்வோம் என்று சொல்லிடுவாரோ என்று பயந்து அமைதியாய் இருந்தார்.
அங்கே சந்திராவும் தன்னிடம் வேலைக்கு வருபவர்களிடம் சொல்லி விசாரிக்க “திருவிழா நேரம் க்கா. யார் வருவா..” என்றுதான் பதில் வந்தது.
பேச்சு வாக்கில் இதனை மகளிடம் சந்திரா சொல்ல “ஏன் ம்மா.. ஆச்சிக்கு நின்னு செய்ய முடியாதுன்னு தான் கற்பகம் அக்காவ வேலைக்கு வச்சாங்க. சரி இப்போ ஆளு கூடுதல். கூடமாட அவங்களே எல்லாம் சேர்ந்து பண்றாங்க. அதுபோல சமையலும் செஞ்சிட வேண்டியது தானே. ரெண்டு நாளைக்கு எல்லாம் இப்படி டென்சனா?” என்றாள்.
“அதெல்லாம் செஞ்சு பழக்கம் இருக்கணும்ல டி..” என,
“அதுசரி மகாராஜாக்கள் குடும்பம். அப்படிதான் இருக்கும்..” என்று சொல்லிக்கொண்டவளுக்கு, ப்ரித்வியின் முகம் சட்டென்று முன் வந்து நின்றது.
இதோ இருவரும் பேசி கூட ஒருவாரத்திற்கு மேலாகி போனது.
‘என்ன மெசேஜ் அனுப்பினாய்..?’ என்று கேட்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்க, அவனோ அழைக்கவே இல்லை. அவள் மனதில் என்ன தயக்கமோ, கொஞ்சம் தவிர்க்கிறாள் என்று தவறாய் அல்லவா அவன் புரிந்துகொண்டு இருக்கிறான்.
‘ச்சே எனக்கு ஏன் தான் மனசு இப்படி போகுதோ…’ என்று தலையில் தட்டிக்கொண்டே அலுவலகம் கிளம்ப,
“மீனா டேபிள்ல பூ கட் பண்ணி வச்சிருக்கேன். எடுத்து வச்சிட்டு போ..” என்றார் சந்திரா.
“ம்ம் சரிம்மா..” என்றவள், சந்திரா அழகாய் கட்டி வைத்திருந்த மல்லிகைப் பூவைப் பார்க்கவுமே, அவளுக்கு அன்று ப்ரித்வி அவளுக்கு பூ கொடுத்தது தான் நினைவில் வந்து நின்றது.
நினைவில் வந்து நின்றதுமே, உடலில் ஒரு மெல்லிய சிலிர்ப்பும் கூட.
‘நீ என்ன வேறயா.. பிடி…’ என்று அவன் அழுத்திக் கொடுத்த அழுத்தம் இன்னும் அவள் கரம் உணர்வது போல் இருக்க, இப்போது அவள் கையில் இருந்த மல்லிகையை, இமைகள் மூடி ஆழ்ந்து நுகர்ந்து பார்த்தாள்.
ப்ரித்வி அவளைப் பார்த்து தலை சரித்து லேசாய் புன்னகை பூத்து நிற்பது போல தோன்றவும், பட்டென்று கண்களை திறந்துகொண்டாள்.
‘நோ மீனா நோ.. என்ன நீ இப்படி டிஸ்ட்ராக்ட் ஆகுற? டீன் ஏஜ் பொண்ணா நீ..?’ என்று தன்னையே கடிந்துகொண்டு, தலையில் பூவைச் சூடிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
பெரிய வீட்டிற்கு சென்றும்கூட நாட்கள் ஆகிப்போனது. ஆச்சி அடிக்கடி அழைப்பு விடுத்துக்கொண்டு தான் இருந்தார். ஆனாலும் என்னவோ ஒரு தயக்கம் வந்து அவளை வெகுவாய் தவிக்கச் செய்கிறதே. ப்ரித்வியை நேரில் கண்டால் என்ன சொல்வது, என்ன பேசுவது என்றுகூட அவளுக்கு இப்போது தெரியவில்லை.
“என்ன மீனா இங்க வரவே இல்லை?” என்று பிருந்தாவும் கூட முதல் நாள் அழைத்து கேட்டிருந்தாள்.
எத்தனை நாளைக்கு இப்படி ஓடி ஒழிய முடியும்?!
வேலை செய்யும் போதும் கூட, உள்ளுக்குள்ளே இதே சிந்தனை தான். ஆச்சியைப் பார்க்கவேண்டும் போலவும் இருந்தது. போகாமல் இருக்கவும் முடியாது. அங்கே போய் வந்தே பழக்கமும் பட்டுவிட்டாள். செல்லாமல் இருப்பதும் ஒருவித கனத்தை கொடுத்தது.
“என்னடா இது…” என்று சலித்துக்கொண்டவள், நெற்றியை துடைத்துக்கொண்டாள்.
எப்படியோ நேரத்தை நெட்டித்தள்ளி, வேலை நேரம் முடியவும் கிளம்பியவளை வேம்பரசனின் அழைப்பு நிறுத்தியது.
“தாத்தா…” என்று சொல்ல,
“என்னடா மீனாளே வீட்டுக்கே வரலையாம். ஆச்சி சங்கடப் படுறா..” என்று சொல்ல,
“இல்ல தாத்தா… வேலை ஜாஸ்தி…” என்றாள் சத்தமே எழும்பாமல்.
“இதுக்கு முன்ன எல்லாம் வேலையே இல்லையோ தங்காளுக்கு?” என்று தாத்தா அடுத்த கேள்வியை கேட்க,
“வர்றேன்…” என்றவள் அலைபேசியை வைத்துவிட்டாள்.
அடுத்து அம்மாவிற்கு அழைத்து “ஆச்சிய பார்த்துட்டு வர்றேன்..” என்று சொல்லிவிட்டு, வீட்டிற்கு செல்லாமல் நேராய் பெரிய வீட்டிற்குத்தான் சென்றாள்.
அவள் எண்ணியது போல ப்ரித்வி அங்கே கூடத்தில் இல்லை. அவனது அறையில் இருந்து வேலை செய்துகொண்டு இருந்தான். ஒரு சிறு ஆசுவாசமும், அதை தாண்டிய ஏமாற்றமும் கலந்து கண்டது அவளது மனது.
“வா மீனா இப்போவாது வந்தியே?” என்று பிருந்தா சொல்ல,
ராதாவும் கூட “வா மீனா..” என,
ஆச்சியோ “இப்போதான் கண்ணு தெரிஞ்சதா டி?” என்றார் கொஞ்சம் கோபமாய்.
“அட ஆச்சி..” என்று சொல்லி அவரை லேசாய் கட்டிக்கொண்டவள்,
“வந்துட்டேன் தானே…” என்றாள் சலுகையாய்.
“போன் மேல போன் போட்டு அழைப்பு விடுத்தா தான் வர்ற..” என்று அப்போதும் ஆச்சி பேச,
பிருந்தாவோ “அரசாங்க வேலை செய்றாங்க இல்லையா பாட்டி. அதான்..” என்றாள் அவளும் கிண்டலாய்.
ராதாவோ கையோடு மீனாளுக்கு காபி கலந்து கொண்டுவந்து கொடுக்க “ம்மா நீயா இது?” என்றாள் பிருந்தா வியப்பாய்.
“ஏன் டி.. அவளே அசந்து போய் வந்திருக்கா..” என்ற ராதா “இந்த போய் அண்ணனுக்கும் குடு..” என்றிட, அதே நேரம் ப்ரித்வியும் அங்கேயே வந்துவிட்டான்.
சட்டென்று மூச்சு நின்று, நெஞ்சடைத்த உணர்வு மீனாவிற்கு. ப்ரித்விக்கும் அவளைப் பார்த்ததுமே ஒருவித அடர்ந்த உணர்வு. ஆனாலும் முகத்தில் ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் “வா தங்கா…” என,
“அ.. வ.. வர்றேன் மாமா..” என்றாள் திக்கி திணறி.
அவளது இந்த புதிய திணறல், ப்ரித்விக்கு லேசாய் இமைகள் சுருக்க வைக்க, அவளுக்கோ அடுத்து பேச்சே வரவில்லை. காபி குடிக்கும் சாக்கில் அமைதியாகிவிட, ராதாவோ “அம்மா சமையல் ஆளுக்கு விசாரிச்சாங்களா?” என்று கேட்கவும்,
“ஆள் இல்லை அத்தை. திருவிழா நேரம் இல்லையா. கிடைக்கிறது கஷ்டம்..” என்று சொல்ல,
“ஓ..!” என்றவருக்கு முகம் வீழ்ந்து போனது.
ப்ரித்வியோ “என்ன விஷயம்?” என்று கேட்க, பிருந்தா விபரம் சொல்லவும்
“ஏன் ம்மா ரெண்டு நாள் தானே.. சமாளிக்க முடியாதா?” என்றான் ஆழ்ந்த குரலில்.
“ம்ம்..” என்று ராதா கலக்கமாய் மகன் முகம் பார்க்க,
“ம்மா ப்ரீயா விடுங்க. ஈசி சமையல் எல்லாம் நிறைய இருக்கு. நம்மளே பண்ணிக்கலாம்…” என்று அதிசயிதிலும் அதிசயமாய் பிருந்தா பேச, ப்ரித்வி கூட ஆச்சர்யமாய் பார்த்தான் தங்கையை.
மீனாவோ “பிருந்தா, நீ சமைக்கப் போறியா?” என்று கேட்க,
“ஏன் டி நான் பண்ண கூடாதா?! ஏன் நீ செய்ற தானே..” என,
“ம்ம் சரி.. செய் செய்..” என்றவள் மெதுவாய் ரகசியம் போல “இன்னொரு ஐடியா சொல்லவா, நானும் எனக்கு கம்பனிக்கு ஆள் இல்லாம இருந்தேன்..” என்று பீடிகை போட,
“என்ன ஐடியா?!” என்றாள் பிருந்தாவும்.
ஆனால் அவள் பேசியது கொஞ்சமே கொஞ்சம் அனைவரின் காதிலும் விழவும் செய்தது. மீனாள் என்னவோ சொல்லப் போகிறாள் என்று நினைத்து, ப்ரித்வியும் கூட கேள்வியாய் பார்க்க, மீனாவோ “எனக்கு ரொம்ப நாள் ஆசை. யார் என்னன்னே தெரியாத ஒரு கல்யாண வீட்டுக்கு போய் நல்லா சாப்பிட்டு வரணும்னு. என்கூட நீயும் வாயேன்..” என்றதுமே,
‘அட அல்பமே…’ என்று பிருந்தா பார்க்க,
ப்ரித்வியோ ‘அடிப்பாவி..’ என்று பார்த்தான்.
அழகரசியோ “போக்கிரி..” என்று அவள் தோளை தட்ட, ராதாவிற்கும் சிரிப்பு தான்.
“அட நிஜமா.. எனக்கு ரொம்ப ஆசை. ஒருவித த்ரில்லா இருக்கும் தானே..” என, அவள் சொல்லிய பாவனையில், ப்ரித்வி அடக்கிக்கொண்டு இருந்த சிரிப்பினை விடுத்து, கொஞ்சம் சத்தமாகவே சிரித்துவிட்டான்.
அவன் சிரிப்பதை பார்த்தவளோ ‘யப்பா சிரிச்சுட்டாங்க..’ என்று நினைக்க, ப்ரித்வியும் சிரித்துக்கொண்டே அவளைத்தான் பார்த்தான்.