ஏற்கனவே நேரமாகிவிட்டது. இனி வீட்டு வேலைகள் ஆரம்பித்துவிட்டால் அடிக்கடி அவனுக்கு விடுமுறை எடுக்கும் சூழலும் கூட வரலாம் இல்லையா. பேசாமல் இரவு நேரத்திற்கு மாற்றிக்கொள்ளலாம என்றுகூட எண்ணம் போனது. அவன் இப்படியிருக்க, பேரனின் இந்த திடீர் மௌனம் கண்டு அழகரசி தான் ராதாவிடம் என்னவென்று வினவ, ராதாவும் போஸ்ராஜன் முன்னமே நடந்ததை எல்லாம் சொல்ல,போஸ்ராஜன் மனைவியைத் தான் முறைத்தார்.
“எ.. என்னங்க..?” என்று ராதா திணற,
“அறிவுன்னு ஒன்னு இருக்கா இல்லையா ராதா?” என்று ஏகத்திற்கும் கடிந்துவிட்டார் போஸ்ராஜன்.
அழகரசியே போஸ்ராஜனின் கோபத்தில் “என்ன போஸ்..” என்று பதற,
“பின்ன என்ன சித்தி.. எல்லாம் வயசு பசங்க.. அவங்களை கூட்டிட்டு போனா, பெரியவங்க நம்மைத்தானே பொறுப்பா இருக்கணும். உன்னால முடியலைன்னா, எதுக்கு நீ கிளம்பின ராதா. கால் வலி வந்ததாம். பசங்களை மட்டும் அனுப்பினாளாம். முதல்ல இந்த கூட்டம் இதெல்லாம் இவங்களுக்கு பழக்கமா சொல்லு?” என்று அடிக்குரலில் வினவ,
“இல்லைங்க.. இப்ப.. இப்படி ஆகும்னு நாங்க யாரும் நினைக்கல..” என்று ராதா கையை பிசைய,
“பிள்ளைங்களுக்கு கல்யணம் பண்ணனும்னு துடிச்சா மட்டும் போதாது. எப்பவும் பொறுப்பா இருக்கணும். பிருந்தா யாரோட இருக்கிறா, ப்ரித்வி என்ன செய்றான்னு கவனிக்காம என்ன வேலை உனக்கு? இப்போ வினை வந்துச்சா?” என்று சாட, அழகரசிக்கு போஸ்ராஜன் பேச்சினில் இருக்கும் நியாயமும் புரிந்தது.
அழகரசியாவது தனக்கு சாதகமாய் பேசுவார் என்று ராதா அவரின் முகம் பார்க்க, பிருந்தாவும் அங்கே வந்து நின்றிட, போஸ்ரஜனோ “இனி எங்கயாவது கிளம்பி பாருங்க.. அப்புறம் இருக்கு..” என்று கடிந்துவிட்டுச் செல்ல, அழகரசியும் ராதாவை கண்டமனாய் தான் பார்த்தார்.
“அத்தை.. என்ன அத்தை..” என்று ராதா கலங்கிட,
“பின்ன என்ன ராதா.. நம்மைதான சூதானம் பாக்கணும் பிள்ளைங்களுக்கு. ஒருநிமிசம்னாலும் மீனா பயந்திருப்பா தானே. ப்ரித்வியை தப்பு சொல்லல நான். ஆனா நீயும் சந்திராவும் கூட போயிருக்கனும்..” என்றவர் சந்திராவையும் அழைத்து திட்டிவிட்டே வைத்தார். பாவம் சந்திரா என்ன செய்வார். ராதாவிற்கு பாவம் பார்த்து உடன் நின்றார் இல்லையா.
மகனின் கோபத்தை எப்படி மலையிருக்கவது என்று மலைத்து நின்ற வேளையில், இப்போது கணவரும், மாமியாரும் சேர்த்து கண்டிக்க ராதா ஒரேதாய் சோர்ந்து தான் போனார். அப்பாவின் கோபம் பார்த்து பிருந்தாவே கொஞ்சம் பயந்துபோனாள்.
வினோதனோடு இருந்த அந்த சில நிமிடங்கள் அவளுக்கு சொர்கமாக அல்லவா இருந்தது. இருவரும் கொஞ்சம் இலகுவாய் பேசிக்கொள்ளக் கூட செய்தார்கள் தானே. அதை எண்ணி எண்ணியே இரவெல்லாம் அவளும் உறங்காமல் தானே இருந்தாள். காலையிலும் கூட அந்த இதம் அப்படியே இருக்க, மீனாவை பற்றியும் எண்ணாமல் இல்லை.
‘பயந்திருப்பா..’ என்று நினைத்தவள் அவளுக்கு அழைத்து பேசவேண்டும் என்று நினைத்திருக்க, இப்போதோ அண்ணன் முகம் தூக்கி இருப்பதும், வீட்டில் பெரியவர்களின் கண்டிப்பும் சேர்த்து அவளை இப்போதே மீனாவிற்கு அழைப்பு விடுக்கச் செய்தது.
அவள் வேலைக்குச் சென்றிருப்பாள் என்று தெரியும். இருந்தாலும் மனது கேளாமல் அழைத்தவளுக்கு பதில் தான் கிடைக்கவில்லை. தங்கமீனாள் அலைபேசியை சைலண்டில் போட்டிருந்தாள். மதிய உணவு நேரம் வரைக்குமே அவளுக்கு வேலை சரியாய் இருந்தது. சொல்லப்போனால் நெட்டி முறித்தது என்றுகூட சொல்லலாம்.
ஒருவழியாய் உணவுண்ணும் நேரம் மேஜைக்கு வந்தமர, அப்போதுதான் அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். பிருந்தாவிடம் இருந்து இரண்டொரு முறை அழைப்பு வந்திருந்தது.
‘பிருந்தா கால் பண்ணிருக்கா…’ என்று சொல்லிக்கொண்டே அவளுக்கு அழைப்புவிடுக்க, பிருந்தாவும் உடனே எடுத்துவிட்டாள்.
“ஹேய் மீனா… நீ ஓகே தானே ப்பா?” என்று கேட்க,
“என்னாச்சு பிருந்தா?!” என்றாள் கண்களை சுருக்கி.
“ஒண்ணுமில்ல.. நேத்து நீ கொஞ்சம் டிஸ்டர்பா இருந்தியா.. அதான்..” என்று பிருந்தா கேட்க,
“அடடா.. அதுவா…” என்று சிரித்தவள் “ஐம் ஓகே டி..” என,
“நிஜமாவா?!” என்றாள் பிருந்தா.
“அட நிஜமா? இதுல பொய் சொல்ல என்ன இருக்கு? அந்த செக்கன்ட் எனக்கு ஒருமாதிரி இருந்தது தான். பட் இதெல்லாம் இப்போ நம்ம லைப்ல பேஸ் பண்ற விசயங்களா மாறிடுச்சு இல்லையா. அதையும் தாண்டி நான் வொர்க் பண்றேன். எத்தனை பேர் பார்வையை தாண்டி வரணும் தெரியுமா பிருந்தா..” என்றவள் “ஐம் ஆல்ரைட்..” என்று சொல்ல,
“இப்போதான் மீனா நிம்மதியா இருக்கு.. ஆனா அண்ணா இன்னும் நார்மல் ஆகல. அப்பாவும் அம்மாவை திட்டிட்டார். பாட்டியும் பேசிட்டாங்க..” என்று சொல்ல,
அவர்கள் வீட்டில் இப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லையே. அப்பா ஏதேனும் அம்மாவை சொல்லியிருக்கலாம் ஆனால் அது அவள் முன்னே நடந்திருக்கவில்லை. அப்படியே இருந்தாலும் காசிராஜன் சூழலை புரிந்திருப்பார் என்றே தோன்றியது.
“ஆமா மீனா.. அண்ணன் ஒருப்பக்கம் உர்ருன்னு இருக்க, அப்பா ஒருப்பக்கம் பேச எனக்கே ஒருமாதிரி ஆகிருச்சு. அதான் உனக்கு கால் பண்ணேன்..” என்று பிருந்தா பேசவும்
“ம்ம் நான் லேட்டா தான் டி கிளம்பி வந்தேன். மீட்டிங். இப்போதான் முடிஞ்சது. சரிவிடு ஈவ்னிங் போறப்போ வந்துட்டு போறேன்..” என்றுவிட்டு வைத்தாள்.
‘ஊப்…’ என்று பெருமூச்சினை வெளியிட்டவள், மீண்டும் ப்ரித்வியிடம் இருந்து ஏதேனும் வந்திருக்கிறதா என்று பார்க்க, எதுவுமில்லை.
‘அப்படியென்ன கோபம்…’ என்று எண்ணிக்கொண்டே இருந்தவளிடன் அருகில் உடன் பணிப்புரிவோர் வந்து அமர்ந்திட, தன் சிந்தையில் இருந்து மீட்டுக்கொண்டாள்.
சொன்னதுபோலவே மாலை பெரியவீடிற்கு தான் நேராய் காரினை விட்டிருந்தாள். யாருமே முன்னே இல்லை. அமைதியாய் இருந்தது வீடு. ப்ரித்வி எப்படியும் வேலையில் இருப்பான் என்று தெரியும். அதனால் நேராய் ஆச்சியின் அறைக்கு சென்றாள்.
அழகரசி முகம் கழுவி, தலை சீவிக்கொண்டு இருக்க “ஆச்சி…” என்றபடி அங்கே சென்று அமர்ந்தவளை “மீனாளே…” வாஞ்சையாய் பார்த்தார்.
“என்ன ஆச்சி? மேக்கப்பா…” என்று சிரித்தபடி அவள் கேட்க,
“ஆமா டி ஆமா…” என்று முகம் வருடியவர், அவள் முகத்தினை அர்த்தமாய் பார்க்க,
“என்னவாம் பார்வை எல்லாம்?” என்று சலுகையாய் கேட்டாள்.
“எதுக்குன்னு தெரியாதா?” என்று அழகரசி கேட்க,
“எனக்கு ஒண்ணுமில்ல நான் நல்லாத்தான் இருக்கேன். உங்க சின்னமகாராஜா தான் உர்ருன்னு இருக்கார் போல..” என, அழகரசி முகத்தினில் ஒரு புன்னகை.
“ஆனாலும் இத்தனை கோபம் ஆகாது..” என்று மீனாள் சொல்ல,
“இந்த விசயத்துல எந்த ஆம்பிளைக்கும் கோபம் வரும்…” என்று அழகரசி சொல்ல,
“இது அவர்மேலயே அவருக்கு கோபம்..” என்றாள் மீனாள்.
“தப்பில்லையே…” என்றபடி அழகரசி தலைசீவ.
“ஆனா எனக்கு சங்கடமா இருக்கே ஆச்சி. என்னை வச்சு இங்க யாருக்கும் மனத்தாங்கல் வேணாமே..” என, அழகரசி பட்டென்று பேத்தியின் முகம் பார்க்க,
“தப்பா?!” என்று லேசாய் தலை தாழ்த்தி சின்னவள் கேட்க,
“தப்பில்லையே…” என்றார் மீண்டும்.
“பின்னே காலைல என்னவோ சத்தம் போட்டீங்கலாம்..” என்று கேட்க,
“சந்திரா சொன்னாளா?” என்றார் ஆச்சி.
“இல்ல.. பிருந்தா சொன்னா..” என்றதும், இதுவும் ஆச்சிக்கு கொஞ்சம் அதிர்ச்சியாய் இருக்க, என்னவோ பெண்கள் இருவரும் நட்பாய் பழகுவது கொஞ்சம் சந்தோசமாகவும் இருந்தது.
“ம்ம் என்னவோ ஆனா போஸ் பேசுனதுல தப்பில்லைன்னு தோணுது. எல்லாம் கல்யாண வயசுல இருக்கீங்க. நாளைக்கு வேற எதுவும் சங்கடமா வந்திடக் கூடாது..” என்று ஆச்சி சொல்லவும்,
“அட அப்படி இல்ல என் தங்காளே.. இப்போ இதெல்லாம் உங்களுக்கு புரியாது..” என்றவர் “சரி வா ஏதாவது சாப்பிட்டு போவியாம்..” என்றபடி பேத்தியை அறைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டு வர, ராதாவும் அங்கே தான் வந்தார்.
“அட மீனா எப்போ வந்த?” என,
“இப்போதான் அத்தை பத்து நிமிஷம் தான்..” என்றவள் “பிருந்தா எங்க?” என்று கேட்க,
“வந்துட்டேன் வந்துட்டேன்…” என்று பின்னோடு அவளும் வர, பெண்களுக்குள்ளே பேச்சு நீண்டது.
இறுதியில் ராதாவிடம் “நான் எதுவும் நினைக்கல அத்தை..” என்று சமாதானம் செய்ய,
ராதாவிற்கோ “விடும்மா.. பேச்சு வாங்குறது எல்லாம் புதுசில்ல எனக்கு..” என்று அதனை முடித்துவிட்டார்.
மீனாளின் மனதில் ப்ரித்வி எழுந்து வருவானோ என்று எதிர்பார்ப்பு இருக்க, அப்படியொரு சம்பவம் நடப்பது போலவே தெரியவில்லை. மிகவும் கடினப்பட்ட கண்களின் அலைபாய்தலை நிறுத்தி வைக்கவேண்டி இருந்தது. ஒருமாதிரி திணறலாய் இருக்க, கிளம்பினால் போதும் என்பதுபோல இருந்தது அவளுக்கு.
நல்லவேளை சந்திரா அழைத்து “வந்து எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம் தானே..” என்று கேட்க,
“வந்துட்டேன் ம்மா..” என்று அலைபேசியை வைத்தவள், கிளம்பியும்விட்டாள்.
சரியாய் கிளம்பி அவள் கார் எடுக்கும் நேரம். ப்ரித்வி அவனது அறையில் இருந்து வெளிவந்தான். பிருந்தாவோ “இப்போதான் மீனா வந்துட்டு போறா..” என, அவனுக்கோ சுருக்கென்றது.
காலையில் என்னவோ அனுப்பிவிட்டு அழித்துவிட்டாள். இப்போது வந்துவிட்டு பேசாமல் கூட போகிறாள். தவிர்க்கிறாளோ என்று நினைக்காமல் அவனால் இருக்கவே முடியவில்லை.
அவள் தவிர்க்கவில்லை, தவிக்கிறாள் என்று எப்படி இவனுக்கு யார் சொல்வது?!