ப்ரித்விக்கு உறக்கமே வரவில்லை. படுத்தான்.. எழுந்தான்.. நடந்தான்.. தலையை கோதினான்.. ஆழ மூச்செடுத்து விட்டான்.. ம்ம்ஹூம் என்ன செய்தும் அவனது மனதினில் உஷ்ணம் அடங்குவதாய் இல்லை.
அத்தனை கோபம். அதுவும் தன்மீதே அவனுக்கு. அவன் இப்படித்தான். பார்க்கத்தான் ஆள் சாதுபோல. அவனைப் பார்ப்பவர்கள் யாராகினும் எண்ணுவது இதைதான் ‘சாப்ட் நேச்சர்…’ என்று. பழகுவதற்கும் இலகுவானவன் என்றுதான் நினைப்பார். ஈகோ பார்ப்பது எல்லாம் அவனுக்கு வராத செயல்.
ஆனால் அவன் அப்படியில்லை. கோபமே வராது. வந்துவிட்டால் இப்படித்தான். தானாய் சரியாகவேண்டும் இல்லையோ அதை சரிபடுத்த எதேனும் வழி அவனுக்கு புலப்படவேண்டும். ஆனால் இம்முறை எங்கே வழி கிடைக்கும். தானாய் தீர்ந்தால் தான் உண்டு.
கண்களை மூடினாலே தங்கமீனாளின் கலங்கிய முகமல்லவா வந்து வாட்டி நிற்கிறது. அந்த வினோதன் யாரோ எவனோ, பிருந்தாவை எத்தனை அழகாய் பாதுகாத்து அழைத்து வந்தான். தான் கொஞ்சம் சுதாரிப்புடன் இருந்திருக்க வேண்டும் தானே என்று எண்ணி எண்ணி, அவன் மீதே மீண்டும் மீண்டும் கோபம் கொண்டான் ப்ரித்விராஜன்.
அவனது பஞ்சிங் பேக் தான் சிக்கிக்கொண்டு படாதபாடு பட்டது அவனிடம். உள்ளிருக்கும் பஞ்செல்லாம் வெளி வந்துவிடும் போல. அதைபோட்டு அத்தனை இம்சை செய்துகொண்டு இருந்தான். என்ன செய்தும் கூட அவனது ஆத்திரம் தீரவில்லை. நன்கு உணர்ந்தானே பின்னிருந்தவன் தன்மீது எப்படி அழுத்தம் கொடுத்து உரசினான் என்று. ஆணாகிய அவனுக்கே அதனை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அப்படியிருக்க, மீனாள் நொடியில் எத்தனை துடித்திருப்பாள் என்று நினைக்கும்போதெல்லாம், கோபம் புதிதாய் துளிர்த்தது.
‘ஐம் சாரி தங்கா…’ என்று எத்தனை முறை சொல்லிக்கொண்டானோ.
தங்கமீனாளுக்கோ, எப்போது எப்படி உறங்கினோம் என்றெல்லாம் தெரியாது. ஆனால் மறுநாள் கண்விழிக்கையில் நேரம் கடந்திருப்பது மட்டும் நன்கு புரிய, அடித்து பிடித்து எழுந்தமர்ந்தாள். வேலைக்குச் செல்லவேண்டுமே.
“ம்மா…” என்று சத்தம் கொடுத்துக்கொண்டே அறையை விட்டு வெளியேவர, அவள் கண்ணில் பட்டது என்னவோ காசிராஜன் தான்.
இரவே சந்திரா கணவரிடம் நடந்ததை சொல்லியிருக்க, மகள் எதுவும் வாட்டமாய் இருப்பாளோ என்று அவள் எழுந்து வருவதற்காக காத்திருந்தார் மனிதர்.
“ப்பா…” என்று அவரை கேள்வியாய் பார்த்தவள் “அம்மா எங்க?” என,
“சரியான தூக்கம் ப்பா. நீங்களும் யாரும் எழுப்பல. மீட்டிங் வேற இருக்கு இன்னிக்கு. லேட்டாச்சு..” என்று அவள் பேசுவதிலேயே, மகள் இயல்பாய் இருக்கிறாள் என்று புரிந்துபோனது அவருக்கு.
“சரி நீ போய் ரெடியாகு…“ என்று மகளை அனுப்பியவரிடம் “ப்பா…” என்று அழைத்து “ஐம் ஓகே…“ என்றாள் தலையை ஆட்டி தங்கமீனாள்.
காசிராஜனோ மலர்ந்த முகமாய் “சந்தோசமா இரு…” என்று மகளின் தலையை லேசாய் தடவி கொடுக்க, மீனாவினுள் புதிய உற்சாகம்.
அறைக்குள் வந்தவள், அவளின் அலைபேசியை எடுத்து சார்ஜ் போட்டுவிட்டவள், பின் நினைவு வந்தவளாய் ப்ரித்வியிடம் இருந்து எதுவும் மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தாள். எதுவுமில்லை. காரணமே இல்லாமல் ஒரு ஏமாற்றம் தலைதூக்கியது.
‘ம்ம்..’ என்று உதடுகள் தானாய் வளைய ‘ரொம்ப கோபம் வரும்போல…’ என்று நினைத்துக்கொண்டே, அவனுக்கு ‘குட் மார்னிங் மாமா…’ என்று அவனுக்கு அனுப்பிவிட்டு வேகமாய் குளிக்கவும் சென்றுவிட்டாள்.
மனதோ பார்த்திருப்பானோ என்று ஒரு சிறு ஆவல்கொள்ள, இன்னொருபுறமோ அவசரப்பட்டு அனுப்பிவிட்டோமோ என்று கலக்கமும் கொண்டது.
‘எதுவும் நினைச்சுக்கிட்டா என்ன செய்றது?’ என்று அதுவேறு ஒரு தயக்கம்..
வேகவேகமாய் குளித்து வந்தவள், அவன் பார்துவிட்டானா என்று அலைபேசி எடுத்துப் பார்க்க, அவன் ஆன்லைனில் கூட இல்லை என்று தெரியவும் ‘நல்லவேளை…’ என்று நினைத்துக்கொண்டே அனுப்பியதை அழித்தும்விட்டாள்.
ஏதேனும் கேட்டால், மாற்றி அனுப்பிவிட்டேன் என்று சொல்லிக்கொள்ளுவோம் என்று தானாகவே ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வந்தவள், தயாராகி உணவுண்ண வர “என்ன மீனா நல்ல தூக்கமா?” என்றார் சந்திராவும்
“ஆமா ம்மா.. லேட்டாச்சு. என்ன டிபன்?” என்று கேட்டபடி அமர,
“ஒரேதா புலாவ் போல பண்ணிட்டேன் டி. எனக்கு அலுப்பா இருக்கு. நாளைக்கு ஒரு அவசர ஆர்டர் வேற முடிச்சு குடுக்கணும்..” என்றவர் மகளுக்கு பரிமாற, கையும் வாயும் உணவுண்ணும் வேலையில் இருந்தாலும், மனது அப்படியில்லை அவளுக்கு.
ஒருவித அலைபுருதல் இருந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது அலைபேசி எடுத்து எடுத்து பார்க்க “நேரமாச்சுன்னு சொல்லிட்டு போன்ல என்ன பார்வை?” என்று கடிந்த அம்மாவிடம்
“டைம் தான் பார்த்தேன் ம்மா..” என்றவள், உண்டுவிட்டு கிளம்பிட
காசிராஜனோ “பஸ் போயிருக்கும் தானே மீனா. நான் கொண்டு போய் விடுறேன்..” என்று சொல்ல,
“இல்லப்பா நானே போயிக்கிறேன்..” என்றாள்.
“கார் எடுத்துட்டு போயேன்..” என்ற அப்பாவிடம் மறுக்காமல் கார் சாவியும் வாங்கிக்கொண்டவளுக்கு மனதெல்லாம் ப்ரித்வியின் எண்ணம் தான்.
‘இன்னுமா தூங்கி எந்திரிக்கல…’ என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை. அதேநேரம் ஆச்சி வீட்டிற்கு சென்று ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம் என்றாலும், வேலைக்கும் நேரமாகிவிட்டது. அத்தனையையும் மீறி உள்ளுக்குள்ளே ஒரு தயக்கம்.
அவனை எப்படி ஏறிடுவது?!
ஒருமாதிரி வெட்கம் பரவி, முகமெல்லாம் சூடாக உணர முடிய, தலையை உலுக்கியவள் சாலையை பார்த்து காரினைச் செலுத்தினாள். அலுவலகத்திற்கு அழைத்து, வர தாமதமாகும் என்று சொல்லியே கிளம்பியிருந்தாள். அன்றைய தினம் தங்கமீனாளுக்கு ஒரு மீட்டிங் வேறு இருந்தது. அனைத்தையும் மறந்துவிட்டு அவள்பாட்டில் உறங்கிப்போனாள்.
முதல்நாள் விடுமுறைக்கு கேட்கும்போதே “மீட்டிங்கு சரியா வந்திடனும் மீனா…” என்று மேலதிகாரி சொல்லியேதான் விடுமுறைக்கு ஒப்புதல் கொடுத்தார்.
‘போச்சு போச்சு… இனி போய் பேச்சு வாங்கணும்…’ என்று புலம்பியபடியே தான் காரினை செலுத்திக்கொண்டு இருந்தாள்.
அங்கே ப்ரித்வியோ அவனது அலைபேசியில் தான் நெற்றி சுளித்து, பார்வையை பதிய வைத்திருந்தான். தங்கமீனாள் என்னவோ அனுப்பியிருக்கிறாள் பின் அதனை அழித்தும்விட்டால் என்பது பார்த்து மனது ஒருமாதிரி துணுக்குற்றது.
‘என்ன அனுப்பியிருப்பாள்? அனுப்பிவிட்டு ஏன் அழித்திருக்கிறாள்? அழைத்து கேட்போமா?’ என்று இப்படியாக யோசனை.
இத்தனை நேரமாகியும் மகன் அறையில் இருந்து வெளிவராததால், ராதாவே “ப்ரித்வி…” என்று அவனின் அறை கதவை தட்டி, வெளியே நிற்க
“கம் இன் ம்மா..” என்றான்.
“என்ன ப்ரித்வி என்ன பண்ணிட்டு இருக்க நீ? லாக் இன் பண்ண வேணாமா? வெளிய கூட வரல ?” என்று ராதா கேள்விகளாய் அடுக்க,
“ம்மா…” என்று நெற்றியை தேய்த்தவன் “இப்போதான் எழுந்தேன்..” என்றபடி கட்டில் விட்டு இறங்க,
“ஓகே தானே?” என்றார் ராதாவும்.
“ம்ம்…” என்றவனோ குளியலறைக்குள் செல்லப் பார்க்க, அவன் அலைபேசி அலறி அவனை நிற்க வைத்தது.
ப்ரித்வி அலைபேசி திரையைப் பார்க்கவும், அழைப்பது அவன் ஆருயிர் நண்பன் என்று தெரியவும், தன்னைப்போல் அவன் முகத்தினில் ஒரு மலர்வு.
“ரித்திக் கால் பண்றான் ம்மா…” என்றபடி அழைப்பினை ஏற்க ,
‘அப்பாடி இனி இவன் மலை இறங்கிடுவான்…’ என்று எண்ணிக்கொண்டே ராதாவும் நகர்ந்திட “சொல்ல மச்சான்…” என்றான் சற்றே புத்துணர்வாய்.
“என்ன சொல்லு மச்சான்?! என்னடா உயிரோட தான் இருக்கியா? அங்க போய் எத்தன நாள் ஆச்சு? ஒரு கால் இல்ல.. என்னடா?” என்று எடுத்ததுமே ரித்திக் டெசிபல் கூட்டி பேச,
“ஹேய்.. ஹேய்.. கூல் மென்..” என்றவன் “உனக்கே தெரியும் எப்படியொரு சிச்சுவேஷன்ல நாங்க இங்க வந்திருக்கோம்னு..” என்று ப்ரித்வி தயங்கி பேச,
“அட போடா.. என்ன பெரிய சிச்சுவேஷன்.. அக்சுவலா நீங்க இங்கயே நல்லா இருந்திருக்கலாம்..” என்ற நண்பனின் பேச்சு அவனுக்கும் சரியாகவே தான் பட்டது.
ஆனால் ராதா தான் ஒரேதாய் பிடிவாதம் செய்துவிட்டாரே. ஆழ ஒரு பெருமூச்சினை எடுத்து விட்டவன் “சொல்லு மச்சி எப்படி இருக்க..?” என்று கேட்டு அடுத்த ஒரு கால்மணி நேரம் நண்பர்களுக்கு இடையில் பேச்சு நீண்டது.
ப்ரித்விக்கு ரித்திக்கோடு பேசியபிறகுதான் மனது கொஞ்சம் இலகுவானது என்று சொல்ல முடியும். அப்படியிருந்தும் கூட முழுதாய் மனம் அமைதிகொள்ளவில்லை. மீண்டும் தங்கமீனாள், அனுப்பி அழித்திருந்த அந்த குறுந்தகவலை பார்த்தவன், அழைத்துக் கேட்போமா என்று நினைத்தான்.
முற்றிலும் புதிதாய் எதையோ உணர்வது போல இருந்தது. சென்னையில் அவன் உண்டு அவன் வேலையுண்டு என்று இருப்பான். வார கடைசியில் நண்பர்களோடு ஊர் சுற்றுவான். அது ஒருவித நிம்மதியான வாழ்வாய் தெரிந்தது. இங்கே வந்தபிறகு தான் வாழ்வின் மற்றொரு பக்கத்தை காண்கிறான் ப்ரித்வி.
நிறைய உணர்வுகளும், சூழலும் முற்றிலும் அவனுக்கு புதிதாய் இருக்க, இதோ இப்போது தங்கமீனாள் பற்றிய எண்ணம் ஒருவகையில் உள்ளுக்குள் புகுந்து கொஞ்சம் அவனை சுனங்க வைத்தது.
முன்போல என்றால் அவளுக்கு அழைத்தே ‘என்ன அனுப்பினாய்..’ என்று வெகு இயல்பில் கேட்டிருப்பான். ஆனால் இப்போது அது அவனால் முடியவில்லை.
இப்படி ஒருவித கலவையான உணர்வுகளோடு குளித்துமுடித்து உண்பதற்காக வந்தமர்ந்தான். போஸ்ராஜனும் அதே நேரம் தான் உணவு மேஜையில் இருக்க, அவருக்கு அருகில் அழகரசி அமர்ந்திருக்க, ப்ரித்வியைப் பார்த்தவரோ “என்ன ப்ரித்வி நல்லா தூங்கிட்டியா?” என்று வினவ,
“ஆமா பாட்டி..” என்றவன் “ம்மா டைம் ஆச்சு..” என்றான்.
கற்பகம் உள்ளே பூரி சுட்டுக்கொண்டு இருக்க, ராதாவும் பிருந்தாவும் தான் மாறி மாறி எடுத்துக்கொண்டு வந்து மேஜையில் எல்லாம் வைத்துக்கொண்டு இருந்தார்கள்.
போஸ்ராஜனோ “நீ லேட்டா வந்துட்டு அவசரம் பண்ணக் கூடாது..” என்று கண்டிக்க,
“லாக் இன் பண்ணனும் ப்பா..“ என்றவன் வேகமாகவே உண்ண, அவன் அடுத்து எதுவும் பேசாமல் இருப்பதை கண்ட அழகரசி “என்ன பேராண்டி முகம் வாடி கிடக்கு?” என்று விசாரித்தார்.
“அதெல்லாம் இல்ல பாட்டி…” என்றவன் உண்டு முடித்து அறைக்குள் புகுந்துவிட்டான்.