அத்தியாயம் – 12

நள்ளிரவு இரண்டு மணி…

இன்னும் எத்தனை மணித் துளிகள் நகர்ந்தாலும், என் கண்கள் உறக்கத்திற்கு செல்லாது எனும்விதமாய், கொட்ட கொட்ட கண் விழித்துக்கொண்டு இருந்தாள் தங்கமீனாள்.

என்ன முயன்றும் கூட அவளுக்கு உறக்கம் என்பது இல்லை. அலைபேசியை மீண்டும் எடுத்துப் பார்த்தாள். ஆம் மீண்டும் தான். அன்றைய தினம் வீடு வந்து சேர்வதற்கே பதினோரு மணியாகி இருக்க, வந்ததுமே அவளது அறைக்குள் நுழைந்துகொண்டாள்.

இன்னுமே கூட அந்த படபடப்பு அவளுக்கு குறையவில்லை.

அப்பப்பா என்னவொரு கோபம் இந்த ப்ரித்விக்கு என்று எத்தனை முறை எண்ணினாளோ, இதோ இப்போதும் கூட ஒரு பெருமூச்சினை வெளியிட்டு அலைபேசியில் அவனோடு கதைத்தை எடுத்து படித்தாள்.

வீடு வந்திருந்த சில நிமிடத்திலேயே “ஆர் யூ ஓகே தங்கா?!” என்று கேட்டு குறுந்தகவல் அனுப்பியிருந்தான்.

‘தங்கா…’ என்ற அழைப்பிலேயே அந்த எண் அவனுடையது என்று தெரிந்துபோனது.

அவளின் அலைபேசி எண் பிருந்தாவிடம் இருக்குமென்று தெரியும். ஆனால் ப்ரித்விக்கு எப்படி தெரியும் என்பது தெரியவில்லை. இத்தனை நாட்களாய் வித்தியாசமாய் தெரியாத ‘தங்கா..’ என்ற அழைப்பு, இன்று ஏனோ கொஞ்சம் வித்தியாசமாகவும், அழகாகவும் கூட தெரிந்தது அவளுக்கு.

‘தங்கா…’ மெதுவாய் அவளது இதழ்கள் உச்சரித்துப் பார்க்க, மீண்டும் பார்வை அலைபேசியில் பதிந்தது.

அவனது குறுந்தகவல் கண்டதுமே, உள்ளுக்குள்ளே ஒரு சிறு உதறல். சில பல தடவைகள் அவன் அனுப்பியதை படித்துப் படித்துப் பார்த்தாள். மெதுவாய் அவளாது விரல்கள் ‘எஸ்…’ என்று பதிலை அடிக்க, உடனே எல்லாம் அனுப்பவில்லை.

பார்வை மீண்டும் அவனது கேள்வியில் தங்கி, அவளின் பதிலில் வந்து நின்று, அடித்திருந்த அவளது ‘எஸ்…’ அடுத்து அழிக்கப்பட்டு ‘எஸ் மாமா….’ என்று மாற்றியமைக்கப்பட்டு, அவனுக்கு அனுப்பப் பட,

“குட் தங்கா. ஹேவ் எ டைட் ஸ்லீப். குட் நைட்…” என்று அடுத்த நொடியே பதில் வந்து சேர,

‘பதிலுக்கு பார்த்துட்டே இருந்தாங்களோ…’ என்று அவளால் எண்ணாமல் இருக்கவே முடியவில்லை.

மனது புதிதாய் ஒரு சூட்டினை உணர்ந்தது. மனது மட்டுமல்ல, அவளது மொத்த உடலும் அவனது உடற்சூட்டை அந்த நொடி உணர்வது போலிருக்க,    அலைபேசியை பற்றியிருந்த அவளது கரம் கொஞ்சம் வேர்த்து பிசுபிசுப்பது போல இருந்தது.

‘ம்ம்ச்…’ என்று தானே சலித்துக்கொண்டவள், வேகமாய் எழுந்து சென்று ஒரு குளியல் போட்டுவிட்டு வர, மீண்டும் அலைபேசியை எடுத்துப் பார்த்தாள், அவனிடம் இருந்து இன்னும் ஏதேனும் வந்திருக்கிறதா என்று மனது எதிர்பார்த்தது.

காரணம், அவன் அனுப்பிய குட் நைட்டிற்கு அவள் இன்னும் பதில் சொல்லியிருக்கவில்லை. என்னவோ உடனே பதில் சொல்ல அப்போது முடியவில்லை. இப்போது ஒரு சிறு குளியல் முடிந்து வரவும், கொஞ்சம் தேவலாம் போல இருக்க, மீனாளின் விரல்கள் கொஞ்சம் நடுக்கம் காண, அதனோடே “குட் நைட் மாமா…” என்று பதில் அனுப்பினாள்.

உடனே பதில் வரவில்லை. ஆனாலும் அவன் ஆன்லைனில் தான் இருக்கிறான் என்பது தெரிந்தது. தங்கமீனாளின் பார்வையோ பதில் வருமா என்று அலைபேசி திரையையே வெறித்துப் பார்க்க “நீ இன்னும் தூங்கலையா தங்கா?” என்று அடுத்த கேள்வி வந்து விழுந்தது அவனிடம் இருந்து.          

அதை வாசிக்கும்போதே, என்னவோ ப்ரித்வி ஆழ்ந்த குரலில் அவளின் செவியருகே நின்று இதனை கேட்பது போலிருக்க வேகமாய் தன் தலையை உலுக்கிக்கொண்டாள்.

‘ச்சே.. என்னாச்சு எனக்கு…’ என்றபடி நெஞ்சை அழுந்த நீவிக்கொண்டவள் “தூங்க போறேன் மாமா..” என்று பதில் அனுப்ப..

“ஓகே தங்கா…” என்ற பதிலோடு ஒரு சிரிக்கும் ஈமோஜியும் வந்து விழுந்திருந்தது.

அதனைப் பார்த்ததுமே மீனாளின் முகத்திலும் ஒரு புன்னகை. வழக்கமாய் எப்போதும் ப்ரித்வி தான் இதமாய், மென்மையாய் எல்லாம் புன்னகை செய்வான். இப்போது அவன் அனுப்பிருக்கும் சிரிக்கும் பொம்மையும், அவனைப் போலவே புன்னகை செய்ய, சிறிது நேரத்திற்கு முன்னே அவன் காட்டிய கோப முகமும் நினைவில் வந்து நின்றது.

‘அப்பாடி..!’ என்று ஒருவித அயர்வோடு கண்களை மூடித் திறந்தவள் “உங்க கோபம் போயிடுச்சா மாமா?” என்று பதில் கேள்வி கேட்டு அனுப்பியிருந்தாள்.

அவள் அனுப்பியதை உடனே படித்துவிட்டான். ஆனால் உடனே பதில் வரவில்லை. ‘டைபிங்…’ என்றே காட்டிக்கொண்டு இருக்க, மீனாளோ என்ன பதில் வருமோ என்று வெகுவாய் ஆவலோடு பார்த்துக்கொண்டு இருந்தாள்.

கிட்டத்தட்ட ஒரு ஐந்து நிமிடங்களேனும் கடந்திருக்கும். ப்ரித்வியிடம் இருந்து பதில் வந்தது. ஆனால் அது அவள் கேட்ட கேள்விக்கான பதில் இல்லை.

“ஐம் டயர்ட்.. நீயும் எதையும் நினைக்காம தூங்கு. குட் நைட் தங்கா…” என்றவன் உறங்கும் பொம்மையை போட்டு அனுப்பியிருந்தவன், அடுத்து ஆளே காணவில்லை.

மீனாளுக்குள் சட்டென்று ஒரு கோபம் மூண்டது. ‘கேட்டதுக்கு பதில் சொல்லாம இதென்ன…’ என்று, சுருக்கென்று அவனிடம் சண்டைக்கு சிலிர்த்துக்கொண்டு நிற்கவேண்டும் போல ஒரு உத்வேகம் எழுந்தது. ஆனாலும் அதனை அவளால் வெளிபடுத்த முடியவில்லை.

ராதா தான் சொன்னாரே ‘என் மகனுக்கு கோபமே வராது. அப்படி வந்துட்டா லேசுல போகாது. அந்த கோபத்தை வெளிப்படுத்த சரியான வழி இருந்ததுன்னா சரி, இல்லையா  ரெண்டு மூணு நாளைக்கேனும் அதை பிடிச்சு தொங்கிட்டே சுத்துவான்..’ என்று.

ஆகா, இன்னும் அதே ஆங்கார மனநிலையில் தான் இருக்கிறான் என்பது புரிந்தது. ஆனாலும் அவனுடைய அந்த கோபம் தனக்காக வந்தது என்று நினைக்கையில், அவளையும் மீறிய ஒரு பூரிப்பும், இதழில் ஒருவித மலர்ச்சியும் தோன்றியது நிஜம்.

ப்ரித்வி நல்ல நிறம் தான். கோபத்தில் அவனது கன்னம், காது என்று எல்லாம் சிவந்து, அவனது பிடி கொடுத்த அழுத்தம் இப்போதும் கூட அவளது கரம் உணர்வதாய் தான் இருந்தது. அலைபேசியை வைத்துவிட்டு இப்போது அவளின் கரத்தினைப் பார்த்தாள்.

அவன் கரம் பற்றிய கதகதப்பு இப்போதும் அவள் உடலும், உள்ளமும் உணர்வது போலிருக்க ‘நோ…’ என்று முணுமுணுத்தவள் வேகமாய் கண்களை மூடிக்கொண்டாள். ஆனாலும் உறக்கம் வரவில்லை.

மனது மதுரையில் நடந்ததையே எண்ணிக்கொண்டு சுற்றி சுற்றி வந்தது. தங்கமீனாளுக்கு மட்டுமல்ல, பிருந்தாவிற்கும் கூட அங்கே நடந்தவைகள் தான் மனதினில். இதோ அவளும் கூட உறங்காது தான் கண்விழித்து இருந்தாள். 

வினோதன் அழைத்து நிற்கும்படி கூறவும், ப்ரித்வியிடமும் அதனை சொன்னவள், வினோதனும் பிருந்தாவும் தங்களருகே வருவதற்காக காத்திருந்து நிற்க, ப்ரித்வி அவளோடு நின்றபடி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இருந்தான்.

ஆனால் அவர்களுமே எதிர்பார்க்காத ஒன்று, பக்கவாட்டு சந்திற்குள் இருந்து ஒரு பெருங்கூட்டம் இடையில் வந்துவிட்டது. கடந்து செல்வதற்கும் கூட அப்போது இயலாத ஒருநிலை. மீனாளுக்கு இது பார்த்து பழக்கப்பட்டது தான். ஆனா பிருந்தா நிஜமாகவே பயந்து போனாள்.

அதுவும் வந்தவர்கள், சாமி வரும் திசைக்கு நகர்ந்துகொண்டே செல்ல என்று லேசாய் இடித்துக்கொண்டும், காலை மிதித்துக்கொண்டும் செல்ல, பிருந்தா அரண்டு போனாள் என்றுதான் சொல்லவேண்டும். அவளது முகமே மாறிப்போனது. 

பின்னே திரும்பி ராதாவிடம் செல்லலாம் என்றாலும், அங்கேயும் ஆட்கள் நிரம்பித்தான் இருந்தார்கள். சரி முன்னே நகர்ந்து அண்ணனிடம் செல்லலாம் என்றாலும், அதற்கு சுத்தமாக வழியே இல்லை என்று தெரிந்தது. இப்படியே இங்கேயே நிற்கவும் ஒருமாதிரி இருக்க, பயந்தே தான் வினோதன் முகத்தினை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவனோ அலைபேசியில் பார்வையை வைத்திருந்தவன், பிருந்தா அரண்டு போய் பார்க்கவும் “என்னாச்சு?” என்றான் நெற்றியை சுருக்கி.

“இல்ல இத்தன கூட்டமா…” எனும்போதே, அவளுக்கு குரல் நடுங்கி வியர்த்துவிட்டது.

“பயமா இருக்கா..?“ என்று வினோதன் கேட்க,

“ம்ம்…” என்றவளுக்கு கண்கள் கலங்கிப்போனது.

வினோதன் பார்வையோ பிருந்தாவில் ஒருநொடி நிலைத்து, பின் சுற்றிலும் ஒரு வட்டம் அடித்து வந்து “இப்போதைக்கு இங்கன தான் நிக்க முடியும்.. கொஞ்சம் வெய்ட் பண்ணலாம்..” என்றவன் “இப்படி வந்து நில்லு..” என்று அவளை உள் பக்கமாய் கொஞ்சம் நகர்ந்து நிற்கச் சொல்ல, அவளும் அதுபோலவே நின்றுகொண்டாள்.

இன்னும் சிறிது நேர்த்தி திக்விஜயம் நிகழ்ந்துவிடும். அதுவரைக்கும் கூட்டம் எங்கேயும் செல்லாது. இங்கேயே தான் நிற்கவேண்டும். வினோதனுக்கு இது நன்கு தெரியும் தானே.

அதனால் மீண்டும் மீனாளுக்கு அழைத்தவன் “அங்கே இருங்க மீனா. தாண்டி வர முடியாது போல இருக்கு..” என, அதற்குள் மீனாளும் ப்ரித்வியிடம் இதனை சொல்லியிருக்க, ப்ரித்வி பிருந்தாவோடு பேசவேண்டும் என்று சொல்லவும்,

“பிருந்தா கிட்ட போன் கொடுங்க வினோதன்..” என்றாள் மீனாள்.

வினோதனும் பிருந்தாவிடம் அலைபேசியை நீட்ட, கேள்வியாய் அவன் முகம் பார்த்தபடியே அலைபேசியை வாங்கி செவியில் வைக்க “பிருந்தா அங்கேயே வினோதன் கூட இரு.. கூட்டம் நிறைய இருக்கு. பயந்துக்காத என்ன?” என்று மீனாள் கேட்கவும்,

“ம்ம்..” என்றாள் மெதுவாய்.

அவளது குரலே சொன்னது, கொஞ்சம் சங்கடமாய் நிற்கிறாள் என்று. அதற்குள் ப்ரித்வியிடம் அலைபேசி மாறியிருக்க “பிருந்தா…” என்றான்.

“அண்ணா…” என்றவள் முகத்தில் சட்டென்று ஒரு தெளிவு.

“அங்கேயே நில்லு ஓகே. வினோதன் கூடவே இரு.. எங்கேயும் நகர்ந்திடாத.. கொஞ்சம் நேரம் தான்..” என்றவன், அடுத்து வினோதனிடம் “பார்த்துக்கோங்க வினோதன்..” என்றும் சொல்ல,

“டோன்ட் வொரி ப்ரித்வி. நான் பார்த்துக்கிறேன்..” என்ற வினோதனின் ஒவ்வொரு வார்த்தைகளையும் பிருந்தா உள்வாங்கித்தான் நின்றிருந்தாள்.

சட்டென்று அவளுக்குள் இருந்த பயம் விலகி, மெல்லிய படபடப்பு வந்து ஒட்டிக்கொள்ள வேகமாய் பார்வையை தழைத்துக்கொண்டாள். வினோதன் அலைபேசியை பேண்ட் ஜோப்பினுள் வைத்தவன் “சாமி இந்த பக்கம் இருந்து வரும்.. பார்த்து நில்லு..” என்று சொல்ல,

“ம்ம்..” என்று தலையை ஆட்டியவள், அவன் சொன்ன பக்கம் திரும்பி நின்றுகொள்ள, அவளுக்கு பின்னே உயரமாய் அவனும் நின்றுகொண்டான். அவனது இரு கரங்களும், அவளுக்கு அரணாய் அவளையும் தொடாமல், ஆட்கள் யாரும் அவளை இடித்தும் விடாமல்,  இருபக்கமும் கைகளை விரித்து நிற்க, பிருந்தாவிற்குள் ஒரு இனம்புரியா உணர்வு.

கழுத்தினை பின்னே திருப்பி, மெல்ல அவன் முகம் ஏறிட்டுப் பார்த்தவள் பின் வேகமாய் நேரே நின்றுகொண்டாள். இந்த நொடி இப்படியே நீண்டுகொண்டே இருக்கட்டும் என்பதுபோல இருந்தது பிருந்தாவிற்கு.

அங்கே மீனாளோ, சுற்றிளும் வேடிக்கைப் பார்ப்பதும், பின் ப்ரித்வி எடுக்கும் புகைப்படங்களை பார்ப்பதுமாய் இருக்க, சற்று தள்ளி அம்மனின் திக்விஜயம் கண்களுக்கு அகப்பட “மாமா அங்க பாருங்க…” என்றாள்.

“ஆனாலும் இவ்வளோ ரஷ்..” என்று தலையை ஆட்டிக்கொண்டவன், தூரத்திலேயே அம்மனைப் பார்த்து, இரு கரம் கூப்பி கண்களை மூடி வேண்டி நிற்க, அவனது இந்த செயல் மீனாளை புருவம் உயர்த்த வைத்தது.

எப்போதுமே சந்திரா தான் கண்களை மூடி வேண்டி நிற்பார். மீனாளோ வேடிக்கைப் பார்ப்பாள். சந்திரா முறைத்தாளோ “ம்மா எனக்காக நீ பிரே பண்றதே போதும்..” என்று சொல்லி சிரிப்பாள்.

இப்போதோ, ப்ரித்வி வேண்டி நிற்பது கண்டு, தானும் கண்களை மூடி வேண்டிநிற்க, யாரோ தன்னைப் போட்டு பின்னே அழுத்துவது போல இருந்தது. சுவாமியின் வாகனம் பக்கம் வர வர, கூட்டம் அதிகரிக்கும்தான். கூட்டத்தில் தான் அழுத்துகிறார்கள் என்று முதலில் பெரிதாய் எண்ணாமல் நின்றிருந்தாள்.

அடுத்த சில நொடிகளிலேயே மீண்டும் ஒரு இடிப்பு. பட்டென்று திரும்பிப்பார்க்க, ஆண்களும் பெண்களுமாய் கலந்து நின்றிருந்தார்கள். அதில் ஒருவனோ, அத்தனை நேரம் மீனாவைப் பார்த்திருந்து, அவள் திரும்பியதுமே வேகமாய் பார்வையை திருப்பிக்கொண்டான். அடுத்த சில நிமிடங்கள் ஒன்றுமில்லை.

சுவாமியின் தரிசனமும் வெகு அருகில் கிடைக்க, ப்ரித்வி வேக வேகமாய் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இருக்க, மீனாளோ இத்தனை நெரிசலில் தான் இடித்திருக்கிறார்கள் என்று மனதினை கொஞ்சம் சமன் படுத்திக்கொண்டாள்.

அதே நேரம், வந்திருந்த பக்தர்களில் முக்கால்வாசிபேர் அம்மனுக்கு மல்லிகை பூச்சரம், முல்லை பூச்சரம், மலர்மாலை என்று வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துக்கொண்டே இருக்க, அதிகமான பூக்களை கூட்டத்தினருக்கு பிரசாதமாகவும் வழங்கிக்கொண்டு இருந்தனர். அப்படி வழங்கிய மல்லிப்பூச்சரம் ஒன்று ப்ரித்வியின் கரத்தினில் வந்து விழ

“எனக்கென்ன பூ குடுக்கிறாங்க..?” என்றான் விளங்காது.

“மாமா.. மீனாட்சியோட அருள் உங்களுக்கு கிடைச்சிருக்கு. இந்த கூட்டத்துல எல்லாருக்குமா பூ கிடைக்குது.. அங்க பாருங்க இத்தனை பேர் கை நீட்டுறாங்க.. சும்மா நின்ன உங்களுக்கு கிடைச்சிருக்குன்னா இது ஸ்பெசல் இல்லையா..” என்று மீனாள் பேச,

“அதுசரி தான்…” என்றவன்

“இந்த பூவை நான் வச்சு என்ன செய்ய.. இந்தா பிடி..” என்று அவளிடம் நீட்ட,

‘எனக்கா?!’ என்று கொஞ்சம் திகைத்துப் பார்த்தாள்.

பின்னே, ஒரு பெண்ணுக்கு பூ என்பது அவளது உணர்வுகளோடு கலந்த விசயமல்லவா. அப்பா அண்ணன் தம்பி எல்லாம் வாங்கிக் கொடுப்பது வேறு. அதைமீறி கணவன் வாங்கிக் கொடுப்பது தனி. ஆனால் மாமன் முறையில் இருப்பவன் கொடுப்பது, அதிலும் சாமியின் மீதிருந்து வந்த பூவினைக் கொடுப்பது என்றால்?!

நொடியில் மனதினில் பூகம்பம், பிரளயம், இடி, மின்னல், மழை எல்லாம்.

“பிடி தங்கா…” என்று அவன் இலகுவாய் சொல்ல,

“அது.. அத்தை.. பிருந்தா…” என்று அவள் தயங்கி தயங்கி சொல்ல,

“இந்த கூட்டத்துல இந்த பூவை அங்க கொண்டு போறதுக்குள்ள நசுங்கிடும். சாமி பூ ஸ்பெசல்னு வேற சொல்லிட்ட. யார் வச்சா என்ன.. நீ வேறயா.. பிடி வச்சுக்கோ..” என்று அவன் அழுத்திச் சொல்லவும், அதற்குமேல் அவளுக்கு மறுக்கவும் முடியவில்லை.

உள்ளுக்குள்ளே ஏற்படும் நடுக்கத்தை மறைத்து, அவனிடம் இருந்து அந்த பூவினை வாங்கி தலையில் வைத்துக்கொள்வதற்குள் உடல் எல்லாம் நடுங்கிடத் தொடங்கிவிட்டது. ஒருவிதமான கனமான உணர்வு அவளுக்குள். ஆனால் ப்ரித்வி வெகு இயல்பில் நின்று இருந்தான். இன்னுமே கூட கூட்டம் குறைவதாய் இல்லை.                      

எறும்பு ஊர்வதைப் போல மெல்ல மெல்ல அனைவரும் நகர, மீனாளோ யாரேனும் வேகமாய் பின்னே அழுத்தினால், ப்ரித்வி மீது தான் மோதி நிற்கவேண்டும் என்று,   கொஞ்சமே கொஞ்சம் கால்களை நகட்டி தள்ளி நிற்க முயல, அவளது இடையில் ஒரு கரம் அழுந்த பற்றுவது நன்கு புரிந்தது. சட்டென்று மீனாளுக்கு கோபமும் அழுகையும் ஒருசேர வந்துவிட, இம்முறை கொஞ்சம் முறைப்போடு தான் பார்வையை பின்பக்கம் திருப்பிட,

ப்ரித்வியும் “என்ன?” என்றான்.

“இ.. இல்ல.. ஒண்ணுமில்ல…” என்று தலையை ஆட்டியவளின் முகம் சரியில்லை என்று அவனுக்கு பார்த்தால் புரியாதா என்ன.

“என்னாச்சு தங்கா?!” என்று திரும்பக் கேட்க,

“இல்ல போட்டு அழுத்துறாங்க…” என்று மெல்ல சொல்ல,

“கூட்டம் நிறைய..” என்றிட, அதற்குமேல் அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

“மெல்ல நடக்கலாம்…” என்றுமட்டும் சொல்லி அவள் திரும்ப, மீண்டும் அதே தீண்டல். சட்டென்று அவள் முகம் மாறிவிட்டது. ப்ரித்வியும் அவள் குரல் மாறியதுமே, கொஞ்சம் யூகித்தவன், இப்போது அவள் முகம் மாறவும்,

 “இப்படி வா…” என்று, அவளது கரம் பற்றியே, தனக்கு முன்னே லேசாய் நகர்த்தி நிற்க வைக்கும் நேரம், ப்ரித்விக்கு பின்னே யாரோ அழுத்துவது தெரிந்தது.

அந்த அழுத்தம் எவ்வகை என்று உணர்ந்ததுமே, அவனுள் அப்படியொரு கோபம். சட்டென்று உடல் விரைத்து, கை முஷ்டி எல்லாம் இறுகிப் போனது. பின்னே ஒரு ஆணுக்குத் தெரியாத, இது எப்படியான ஒரு தீண்டல் என்று. சட்டென்று மூண்ட ஆத்திரம் தாளாமல், தங்கமீனாளை முழுதாய் மறைதத்தவன் 

“தங்கா…!” என்று அடிக்குரலில் அவளை அழைத்தவன் பிடி அத்தனை இறுக்கமாய் இருந்தது. 

தங்கமீனாள் தடுமாறியது ஒருநொடி தான். இதோ இப்போது தெளிந்துவிட்டாள். ஆனால் இவனல்லவோ முறுக்கிக்கொண்டு நிற்கிறான்.

அவனது பிடி உணர்ந்தே, அவன் கோபமாய் இருப்பது விளங்கியது. ப்ரித்வியோ பின்னே திரும்பி யார் என்று பார்ப்பது போல பார்க்க, அங்கே ஆண்கள் யாருமில்லை. ஆனால் உரசி அழுத்தம் கொடுத்தது ஆண் என்று அவனுக்குத் தெரியும் தானே.

‘எஸ்கேப் ஆகிட்டான்…’ என்றபடி ஆங்கிலத்தில் ஒரு கெட்ட வார்த்தையை உமிழ்ந்தவன், மீண்டும் சுற்றிலும் மீண்டும் பார்வையை செலுத்த

“நம்ம போலாம் மாமா…” என்றாள் மீனாளும்.

என்னவோ அவளுக்கு அவனது கோபம் அந்த நேரத்தில் ஒரு பாதுகாப்பு உணர்வையும், ஒருவித பயத்தையும் சேர்த்தே கொடுத்து இருந்தது. ப்ரித்வியைப் பார்த்தாலே யாரும் கிடைத்தால், அடித்துவிடும் பாவனையில் இருந்தான்.

எப்போதுமே மென்மையாய் புன்னகைத்து, தன்மையாய் பேசும் ப்ரித்வி தானே அவளுக்குத் தெரியும். இவனோ கருப்பசாமி போல கண்களை உருட்டிக்கொண்டு நிற்க “வாங்க மாமா போயிடலாம்..” என்றாள்.

கூட்டமும் கொஞ்சம் குறைந்திருக்க, இதோ பிருந்தாவும், வினோதனும் கூட இவர்களின் அருகில் வந்துவிட்டனர். பிருந்தாவோ அண்ணனின் முகம் பார்த்தே “என்னாச்சு ண்ணா?” என்று கேட்டிருக்க,

மீனாளின்  முகமும் வாடியிருப்பது கண்டு, வினோதனோ “என்ன மீனா?” என,

“கூட்டத்துல எவனோ கை வச்சுட்டான்..” என்றான் ப்ரித்வி பல்லைக் கடித்து.

மீனாவோ சங்கடமாய் நிற்க, பிருந்தாவோ  “நானுமே பயந்துட்டே இருந்தேன் ண்ணா. ஆனா இவர் ரெண்டு பக்கமும் கை விரிச்சு யாரும் இடிக்காத போல பின்னாடி நின்னுக்கிட்டார்..” என்று சொன்னதுமே, ப்ரித்வியின் முகம் சட்டென்று மாறிவிட்டது.

வேகமாய் மீனாவை ஏறிட்டவன் “சாரி தங்கா…” என்று தயக்கமே இல்லாமல் கேட்டுவிட,

“அச்சோ மாமா என்ன நீங்க?!” என்றாள்.

“இல்ல.. நீ என்னோட நின்னிருந்த.. நான் இதெல்லாம் யோசிச்சிருக்கணும். தப்பு என் மேலயும் தான்..” என்றவனின் முகம் அப்போதும் மாறவில்லை.

அவன்மீதே கோபம் இப்போது. பிருந்தா யாரோதான். ஆனால் நிலைமை தெரிந்து வினோதன் அவளை சரியாய் பார்த்திருக்கிறான். ப்ரித்விகோ தங்கமீனாள் அவனின் வீட்டுப் பெண். நாமெல்லாம் ஒரே குடும்பம் என்று அவனேதானே சொல்லியிருக்கிறான். இப்போது அவனே கவனிக்காமல் விட்டானே என்று தன் மீதே கோபம்.

காரினில் வரும்போது கூட இறுகிய முகத்தோடு தான் வந்தான். மீனாளுக்கு அங்கே நடந்தது எல்லாம் பின்னோடு போய், ப்ரித்வியின் கோபமும் அதுவும் அவன்மீதே அவன்கொண்ட கோபம் மனதினில் நுழைந்துகொண்டது.

“இட்ஸ் ஓகே மாமா…” என்று மெதுவாய் சொல்லிப் பார்த்தும் கூட கேட்டுக்கொள்ளவில்லை அவன்.

சந்திரா மற்றும் ராதாவிற்கு விஷயம் தெரிந்தும் கூட, பெரியவர்கள் சமாதானம் சொல்லியும் கூட ப்ரித்வி அப்படியேதான் இருந்தான். அத்தனை கோபம் இருந்தும் கூட வீடு வந்ததும் அவளுக்கு விசாரித்தும் இருக்கிறான். என்னவோ மீனாளுக்கு மனம் போட்டு பிசைந்து எடுத்தது.

தலையில் வைத்திருந்த மல்லிகை பூ இங்கொன்றும், அங்கொன்றுமாய் உதிர்ந்து கிடக்க, அதில் ஒன்றினை எடுத்து மெதுவாய் நுகர்ந்துப் பார்த்துக்கொண்டாள்.

மீண்டும் ‘நீ வேறயா?’ என்று சொல்லி அவன் பூ கொடுத்த காட்சியே கண் முன் வந்து நின்றது.