“ஓ..!” என்றவள் அடுத்து பிருந்தாவோடு பேச்சினை ஆரம்பித்துவிட்டாள்.

“சூப்பாரா இருக்கும் பிருந்தா. அதுவும் திருக்கல்யாணம் அன்னிக்கு போகணும் செமையா இருக்கும். என்ன கூட்டம் தான் ஜாஸ்தி. அடுத்த வருஷம் அப்படி ப்ளான் பண்ணிப்போம்..” என்று பேச்சுக் கொடுக்க,

இதனை கேட்ட ராதாவோ “அடுத்த வருஷம், எல்லாம் அவங்கவங்க ஜோடியோட போகணும்னு ப்ளான் போடுங்க. வேண்டிக்கோங்க..” என்று சொல்ல, சந்திராவும் லேசாய் நகைத்துவிட்டார்.

திருமண வயதில் பிள்ளைகள் வைத்திருக்கும் அம்மாக்களின் சிந்தனை இப்படித்தானே இருக்கும். அதனால் ராதாவின் பேச்சினை சந்திரா வித்தியாசமாய் எடுத்துக்கொள்ளவில்லை.

 “என்ன சந்திரா சிரிக்கிற? நான் சொன்னது சரிதானே..” என்றவர் “வினோதனுக்கு சொல்லியாச்சா சந்திரா? நமக்காக வந்து காத்துட்டு இருக்கப் போராப்டி..” என்று சொல்ல,

சந்திராவோ இம்முறை மகள் முகம் பார்க்க, தங்கமீனாளோ “நான் பேசிட்டேன் அத்தை. வழக்கமா எங்களுக்கு வெய்ட் பண்ற இடம் ஒன்னு இருக்கு. அங்கதான் இருப்பார்..” என்றவள், ப்ரித்வியிடமும்  எங்கே என்று சொல்ல,

“நீ நேர்ல கூட்டிட்டு போய் காட்டினா கூட அது என்ன இடம்னு தெரியாது தங்கா..” என்றான் மெல்லிய புன்னகையோடு.

“ஷ்..! ஆமால்ல.. அங்க பக்கத்துல ரீச்சாகும் போது சொல்றேன் மாமா..” என்றவள் வேடிக்கைப் பார்க்க தொடங்கிவிட்டாள்.

மதுரையின் எல்லையை தொடுவதற்கு முன்னமே, வண்டி வாகன நெரிசல் அதிகமாகவே இருக்க, சந்திராவோ “ப்ரித்வி எதுவும் பேக்கரில பார்த்து நிறுத்துப்பா. ஏதாவது சாப்பிட்டு போயிடலாம். நைட் எப்படியும் லேட்டாகிடும்..” என,

ராதாவும் “அதுவும் சரிதான். பார்த்து எங்கயாவது நிறுத்து ப்ரித்வி..” என, பிருந்தாவிற்கோ ஒவ்வொரு நொடியும் யுகமாய் நகர்வது போலிருக்க, எப்போதுமே தன்னிடம் நன்றாய் பேசும் பிருந்தா இன்று ஒருவித அமைதியில் வருவதனைக் கண்டு

“ஏன் பிருந்தா உடம்பு எதுவும் முடியலையா?” என்று கேட்டுவிட்டாள் தங்கமீனாள்.

அப்போதுதான் காரினை ஒரு பேக்கரி முன்பு ப்ரித்வி நிறுத்தியிருக்க, அனைவரும் இறங்கும் கவனத்தில் இருந்ததால், தங்கமீனாளின் இந்த கேள்வியை யாரும் கவனிக்கவில்லை. பிருந்தாவோ கொஞ்சம் திடுக்கிட்டு “அப்படில்லாம் இல்லையே மீனா..” என,

“இல்ல சைலன்ட்டாவே வர்றியே. அதான்..” என்றாள் மீனாளும்.

“எனக்கு இந்த கூட்டமெல்லாம் கொஞ்சம் அலர்ஜி மீனா. அதான் ஒரு டென்சன்..” என்றவளிடம்

“அட.. இதுக்கெல்லாம் பயந்தா ஆகுமா? நீ வந்து பாரு அத்தனை அழகா இருக்கும். மனசை எல்லாம் என்ஜாய் பண்றதுல வை..” என்றாள் தோழியாய்.

பிருந்தாவின் பதற்றம் எதற்கென்று அவளுக்குத்தானே தெரியும். சந்திராவும், ராதாவும் பேசியபடி நடக்க, ப்ரித்வி காரினை தகுந்த இடம் பார்த்து நிறுத்திவிட்டு வந்தவனும் இவர்களுடன் இணைந்துகொள்ள,

மீனாள் சும்மா இராது “ஏன் மாமா உங்களுக்கும் கூட்டம்னா அலர்ஜியா?” என்று கேட்டுவிட, பிருந்தாவிற்கு திடுக்கென்று ஆகிப்போனது.

‘ஐயோ..’ என்று அண்ணன் முகம் பார்க்க, அவனோ “என்ன தங்கா?!” என்றான் அவள் கேள்வி புரியாது.

“இல்ல பிருந்தா கூட்டம்னா அலர்ஜின்னு சொன்னா. அதான் உங்களுக்கும் அப்படியான்னு கேட்டேன்?” என, ப்ரித்வி ஒருவித குழப்ப பார்வையை தங்கை மீது செலுத்தியவன் “இப்படியெல்லாம் அங்க எந்த கோவில் விசேசமும் நாங்க நின்னு பார்த்தது இல்லை. அதனால அப்படி சொல்லிருப்பா..” என்றிட, பிருந்தாவிற்கு அப்போதுதான் சீரான மூச்சே வெளிவந்தது.

ஒருவழியாய் அனைவரும் தங்களுக்கு வேண்டியதை தருவித்து, அருந்தி முடிந்து அடுத்து கிளம்ப அடுத்த ஒரு அரைமணி நேரமாகிவிட, சந்திராவோ கிளம்புகையில் “வீட்ல ஒரு பையன் இருக்கிற அருமை இதுதான் அண்ணி. நிம்மதியா போயிட்டு வர்றோம் இல்லையா. நானும் இவளுமா போறோம்னா அங்க போறது வரைக்குமே எனக்கு ஒரு டென்சன் உள்ள இருக்கும்..” என்று பேச,

மீனாளோ “ம்மா?!” என்று ஆச்சர்யமாகவும், கேள்வியாகவும் பார்த்து வைத்தாள். பின்னே இதுநாள் வரைக்கும் சந்திரா இப்படியெல்லாம் பேசியதே இல்லையே.

ராதாவோ “என்னோட பிடிவாதத்துக்கு கிளம்பி வர்றான் ராதா. பார்ப்போம் நாளைக்கு அவங்கவங்களுக்குன்னு வர்றவங்க வந்தா, என்னென்ன சாக்குபோக்கு சொல்றான்னு..” என்று லேசாய் மகனை இடித்துரைக்க,

ப்ரித்வியோ பதிலே சொல்லாமல் கார் கதவினை திறக்க, ராதாவோ மீண்டும் “மீனா நீ முன்னாடி உக்கார்ந்துக்கிட்டா வழி சொன்ன ஈசியா இருக்கும்..” என்றிட, தங்கமீனாள் யோசிக்கவெல்லாம் இல்லை. சகஜமாய் முன்னிருக்கையில் சென்று அமர்ந்துகொண்டாள்.

ஒருநொடி ராதாவின் பார்வை இருவரையும் தொட்டுத் தழுவிக்கொள்ள, அவரின் மனதோ ‘தாயே மீனாட்சி, ஒரு பெரிய கோரிக்கையோட உன்னோட இடத்துக்கு வர்றேன். நல்லதை நடத்திக்குடும்மா..’ என்று மனதார வேண்டியது.

மீனாளோ “இந்த சைட் போகணும் மாமா..” என்று தாங்கள் செல்லும் இடத்தின் வழியை காட்டியவள், அடுத்து வினோதனுக்கு அழைத்துப் பேசினாள்.

அடுத்து சந்திராவும் காசிராஜனுக்கு அழைத்து விபரம் சொன்னவர் “ஹாட் பாக்ஸ்ல சப்பாத்தி போட்டு வச்சிருக்கேன். குருமா மட்டும் சூடு பண்ணிக்கோங்க..” என்று சொல்லிக்கொண்டு இருக்க, ராதாவிற்கு ஏனோ இப்படி சம்பாசனைகள் எல்லாம் கேட்கையில் மனதில் ஒருவித ஏக்கம் சூழும்.

இயல்பான ஒரு கணவன் மனைவிக்கான பேச்சுவார்த்தைகள் தான் அவர்களிடம் இல்லையே. இதோ கிளம்பி வந்திருக்கிறார்கள். ஒரு அழைப்பு கூட போஸ்ராஜனிடம் இருந்து வராது. ராதாவே அழைத்து பேசினால் கூட “போன வேலையை பார்க்காம, சும்மா போன் போட்டுட்டு..” என்று கடிந்துவிடுவார்.

இப்போதோ ‘என் பிள்ளைகளுக்காவது இப்படியொரு இயல்பான வாழ்வு அமைய வேண்டும்..’ என்று ராதாவின் மனது ஆசை கொண்டது.

ஒருவழியாய் காரினை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, வினோதன் காத்திருக்கும் இடத்திற்கு சென்று சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அப்போதே. மாலை ஏழு மணிதான் ஆகியிருந்தது. அப்போதே அத்தனை கூட்டம்.

வினோதனைக் கண்டதும் “ஹாய்..” என்று மீனாள் மலர்ந்து புன்னகை செய்ய,

அவனோ அவளைப் பார்த்து, லேசாய் தலையை ஆட்டியவன் “ஹாய் ப்ரித்வி..ஹாய் பிருந்தா..” என்று சொல்ல, ப்ரித்வி அவனோடு இலகுவாய் கரம் குலுக்க, பிருந்தா தான் அவனை ஏறிட்டுப் பார்க்கவே திணறிப் போனாள்.

வினோதனின் கண்களுக்கு, அவளது திணறல் புதிதாய் தெரிய, ஒரு கூர் பார்வை கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை பார்த்துவிட்டு பின் திரும்பிக்கொண்டான். இருக்காதா பின்னே, இளம் வயதில் இருக்கும் கல்லூரி ஆசிரியன். மாணவிகள் சிலரின் பார்வை தடுமாற்றங்கள் கண்டிருக்காமல் இதுவரையிலும் இருப்பானா என்ன?

அதனால் நொடியில் பிருந்தாவின் தடுமாற்றம் ஏன் என்று கண்டுகொண்டுவிட்டான்.

தங்கமீனாளோ ப்ரித்வியிடம் “மாமா நீங்க இங்க நிறைய போட்டோஸ் எடுக்கலாம்.. அங்க பாருங்க குட்டீஸ் எல்லாம் எப்படி அழகா சாமி வேஷம் போட்டுட்டு வர்றாங்கன்னு..” என்று குதூகலித்துக் காட்ட,

சந்திராவோ “இவ ஒருத்தி..” என்று மகளை செல்லமாய் கடிந்துகொள்ள, ராதாவிற்கோ மீனாள் ப்ரித்வியிடம் பேசுவது மகிழ்ச்சியே. ஆனால் வினோதனும் பிருந்தாவும் பார்வையை எங்கெங்கோ வைத்து நிற்க,

“என்ன சந்திரா இத்தனை கூட்டமா இருக்கு?” என்று வாய்த்தான் கேட்டது.

“இதெல்லாம் கம்மி. நாளைக்கு திருக்கல்யாணம், அடுத்து தேர் எல்லாம் பார்த்தா அவ்வளோதான்..” என்று சொன்ன மீனாள் “ப்ரித்வி மாமா.. அந்த சைட் பாருங்க.. ஒரு குட்டி பையன் கருப்பசாமி வேஷம் போட்டு வர்றான்..” என,

ப்ரித்வியோ “வாவ்…” என்றபடி தனது அலைபேசியை எடுத்து, புகைப்படங்கள் எடுக்கத் தொடங்க, இப்படியே அனைவரும் பேசியபடியே மெல்ல நடக்க,

பிருந்தா அமைதியாகவே வருவதனால், மீனாளோ “என்ன டி பிருந்தா, நீயும் இந்த வினோதன் கூட சேர்ந்துட்டியா. வார்த்தைக்கு காசு கேட்ப போல..” என்று கேலி பேச,

வினோதனோ “ஏய் லூசு..” என்று அவளின் தலையில் கொட்ட,  பிருந்தாவோ அதிர்ந்து வினோதனைக் காண,

அவனோ கண்ணால் சிரித்து “இவ இப்படித்தான் பேசுவா..” என்று பிருந்தாவிடம் சொல்ல, வினோதன் தன்னிடம் பேசுகிறான் என்பதே அவள் முகத்தினில் அப்படியொரு மலர்ச்சியை காட்ட, வினோதனுக்குள் ஒரு சிறு தடுமாற்றம் அந்தநொடி நிகழவே செய்தது.

இடக்கர கட்டை விரலால் லேசாய் நெற்றியை நீவிக்கொண்டவன் “பார்த்து வாங்க..” என்று பொதுவாய் சொல்லிவிட்டு முன்னே நடக்க, அவனுக்கு பின்னே பிருந்தாவும், இவர்களுக்கு பின்னே ராதாவும், சந்திராவும் வந்துகொண்டு இருக்க, ப்ரித்வி புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் சில அடிகள் முன்னே நடந்திருக்க, அவனோடு பேசிக்கொண்டே மீனாளும் நகர்ந்திருந்தாள்.

நிஜமாகவே பிருந்தாவிற்கு இப்போது இந்த கூட்டத்தைக் கண்டு பயமாய் இருக்கவே செய்தது. யாரின் கரத்தையும் பிடித்துக்கொண்டால்  தேவலை  என்பதுபோல இருக்க, ராதாவோ மெதுவாய் மூச்சு வாங்கி “சாமி இந்தபக்கம் வாரம்தானே சந்திரா..” என்றார்.

“வரும் அண்ணி. ஆனா இன்னும் கொஞ்ச தூரம் போய் நின்னா, நல்ல கிட்டக்க பார்க்கலாம்..” என,

“என்னது இன்னும் கொஞ்சம் தூரமா? முடியல சந்திரா.. பழக்கமில்லாம வந்திருக்கேனா, இதுக்கே மூச்சு வாங்குது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க.. நான் இங்கயே இருக்கேன்..” என்று அங்கே ஒரு கடை வாயிலில் தள்ளி நின்றுகொண்டார்.

நிஜமாய் அவருக்கு நடக்கவும் கூட முடியவில்லை. உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது. சந்திராவிற்கே அவரைப் பார்க்க சங்கடமாகிவிட “என்ன அண்ணி உடம்புக்கு எதுவும் பண்ணுதா?” என்றார் பதறி.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. இப்படி வந்தது இல்லை தானே. அதான். நீ பிள்ளைகளோட போ சந்திரா. நான் இங்கயே இருக்கேன்..” என,

“உங்களை மட்டுமே விட்டு எப்படி அண்ணி போறது..” என்றவர் “வினோதன்..” என்று சற்று சத்தமாய் அழைக்க, அவனும் திரும்பிப் பார்க்க, உடன் பிருந்தாவும் திரும்பிப்பார்த்தாள்.

“அண்ணிக்கு முடியலை.. நானும் அவங்களோட இருக்கேன். தனியா விட முடியாது. நீ பார்த்து கூட்டிட்டு போயிட்டு வா. ப்ரித்விக்கும் இங்க பழக்கம் இல்லை..” என,

“என்னாச்சும்மா?” என்று பிருந்தா அம்மாவின் கரத்தினைப் பற்றிக்கொள்ள,

“ஒண்ணுமில்ல டி..” என்றவரின் பார்வை, இவர்களிடம் இருந்து தூரம் சென்று இருந்த மீனாள் மற்றும் ப்ரித்வி மீது படிந்தது.

“அண்ணன கூப்பிடவா ம்மா?” என்று பிருந்தா கேட்கவும்

“வேணாம் வேணாம்..” என்று வேகமாய் மொழிந்தவர் “நீங்க எல்லாம் போயிட்டு வாங்க. நான் இங்கயே இருக்கேன்..” என, சந்திராவிற்கோ அவரை மட்டும் தனியே விட்டுச் செல்ல மனம் வரவில்லை.

“வினோதன்.. நீ பிருந்தாவை அழைச்சுட்டு போய் மீனாவோட விடு..” என,

அவனோ அருகில் இருந்த கடையில் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி ராதாவிடம் கொடுத்தவன், பிருந்தாவைப் பார்க்க, அவளோ தயங்கி அம்மாவைப் பார்க்க, ராதா இந்த வாய்ப்பை வீண் செய்வாரா என்ன?

“போ பிருந்தா.. சேர்ந்து போய் சாமி பார்த்துட்டு வா..”   என்று சொல்ல, வினோதனைப் பார்த்து மெல்ல தலை அசைத்தவள், அவனோடு இணைந்து நடக்க, வினோதனோ மீனாவிற்கு அழைத்து நிற்கும்படி சொன்னான்.

சில அடி தூரங்கள் தான் இடையில், ப்ரித்வியும் கூட திரும்பி இவர்களைப் பார்த்து நிற்க, பக்கவாட்டு சந்தில் இருந்து வந்த கூட்டம் ஒன்று, இரு ஜோடிகளின் இடைவெளியை அதிகம் செய்துவிட்டதும் அல்லாமல், கடந்து செல்ல வழியில்லாமலும் செய்துவிட்டது.