காசிராஜனுக்கு அத்தனை சந்தோசம், கணேசனே மீனாளை தன் மகன் வினோதனுக்கு பெண் கேட்டது. தானே பேச்சினை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் தானே. ஆனால் இந்த பெண்கள் எல்லாம் ஜாதகம் பார்க்கவென்று சென்று வந்ததில், தங்கமீனாளுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் கழித்தே திருமண பேச்சினை எடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்க, என்ன செய்வது என்று யோசனையில் இருக்க, கணேசனே பேசியது கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது.
“நானே இதை பேசணும்னு நினைச்சேன் கணேசா. நீயே கேட்டது ரொம்ப சந்தோசமப்பா…” என,
“பின்ன.. மீனாள் சின்னதுல இருந்து எங்க கண்ணு முன்னாடி வளர்ந்த பொண்ணு. என்ன குறைச்சல் அதுக்கு. அவளை விட்டுட்டு வேற இடத்துல தேட, எனக்கு மனசு கேட்குமா என்ன? ஆனாலும் கொஞ்சம் தயக்காம தான் இருந்தது கேட்க…” என்று கணேசன் சொல்ல,
“என்கிட்டே என்ன தயக்கம் உனக்கு?” என்றார் ஒரு நண்பராய்.
“இல்லப்பா போஸ் குடும்பம் வேற இங்கன வரவும், சரி நீங்க ஒண்ணுக்குள்ள ஒண்ணா கொடுக்கணும்னு இருப்பீங்கன்னு ஒரு எண்ணம். ஆனாலும் ஆசை யாரை விட்டுச்சு. அன்னிக்கு மீனாளும், வினோதனும் பேசிட்டு நிக்கிறத பாக்குறப்போ, உன்கிட்ட கேட்டு வைக்கலாமேன்னு தான் கேட்டேன்..” என, காசிராஜன் முகத்தில் ஒரு அமைதியான புன்னகையே.
“என்னப்பா பதில் சொல்லாம சிரிக்கிற?” என்றவரிடம்,
“எங்க அத்தைக்கும், மாமாவுக்கும் ஆசைதான். ஆனா, எனக்கு ஆரம்பத்துல இருந்தே வினோதனுக்கு பேசணும்னு ஒரு எண்ணம். அதையும் மீறி போஸ் குணம் உனக்கே தெரியுமேப்பா..” என,
“சரி சரி விடு. நீயே சொல்லு. முறைப்படி பேச என்னிக்கு வரட்டும்..?” என்று நண்பரை சம்பந்தி ஆக்கிக்கொள்ளும் மகிழ்ச்சியில் கணேசன் கேட்க,
“அதுல தான் ஒரு சிக்கல் வந்து நிக்குது கணேசா..” என்றார் கொஞ்சம் சிறுத்த குரலில் காசிராஜன்.
“ஏன் ப்பா என்னாச்சு? மீனாளுக்கு எதுவும் இதுல விருப்பமில்லையா?”
“அட.. இம்புட்டுத்தானா?! இப்போ என்ன அஞ்சு மாசம் கழிச்சே பேசுவோம்.” என்றவர் “மீனாளுக்கு இதுல விருப்பம் தானே..?” என்றும் கேட்க,
“இன்னும் பேசல கணேசா. நம்மலே இதுல முடிவும் உறுதியா எடுக்க முடியாது இல்லையா? வளர்ந்த பசங்க. அஞ்சு மாசம் கழியட்டும், வினோதனும் மீனாளுக்கும் நம்ம விருப்பம் இதுன்னு சொல்லுவோம், அதுக்குமேல அவங்க பேசி முடிவு பண்ணட்டும்..” என்று காசிராஜன் சொன்னது, கணேசனுக்கும் சரியாகவே பட்டது.
“நல்லதுப்பா. அதுக்குள்ளே நானும் இந்த போஸ் வீட்டு வேலையை முடிச்சுக் கொடுத்துடுவேன்..” என்றிட, அதற்குமேல் நண்பர்கள் வெவ்வேறு விஷயம் பேசினாலும் இரு அப்பாக்களுக்குமே தங்களின் பிள்ளைகளுக்கு நல்லதொரு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்த சந்தோசம் நிறையவே மனதில் இருந்தது.
இவர்கள் இப்படி பேசினால், அதற்கு காலமும் சூழலும் உதவி செய்திட வேண்டுமே.
ப்ரித்விராஜன் முழுமூச்சாய் வீட்டு வேலையில் இறங்கி இருந்தான். அதன்பொருட்டு அப்பாவிடமும் பேசிட அவன் தயங்கவில்லை. கணேசன் சொன்ன யோசனைகளை அனைவருக்கும் திருப்தியாகவே இருந்திருக்க “நீங்க என்ன நினைக்கிறீங்கப்பா? இல்லை இன்னும் வேற யாரையும் கூட்டிட்டு வந்து காட்டணுமா?” என்று கேட்க,
போஸ்ராஜன் பதில் சொல்வதற்கு முன்னே, ராதா முந்திக்கொண்டு “அதெல்லாம் இந்த ஐடியாவே நல்லா இருக்கு ப்ரித்வி..” என்று சொல்ல, ஆண்கள் இருவரும் ராதாவை கேள்வியாய் பார்த்தனர்.
“அ.. அது.. இல்ல.. இவங்கன்னா தெரிஞ்ச ஆளுங்களா போயிட்டாங்க. அவங்க பசங்களும் பார்க்க பழக நல்லவிதமா இருக்காங்க. வேற ஆளுங்கன்னா நிச்சயம் காசு பார்க்கனும்னு தானே நினைப்பாங்க. இவர் சொன்ன யோசனை, பழசையும் இடிக்காம, முன்ன இருக்கிற இடத்தை இழுத்துப்போட்டு ஒன்னு சேர்த்து பண்ணற மாதிரி நல்லாதானே இருக்கு..” என்று படபடக்க, பிருந்தாவிற்கு கூட, அம்மாவின் பேச்சு ஆச்சர்யமாய் இருந்தது.
“எ.. என்ன எல்லாம் அப்படி பாக்குறீங்க?” என்று கேட்க,
“அப்படியா இல்லையே.. நான் நார்மலா தான் பேசுறேன்..” என்றவர் “என்னங்க..?” என்று கணவரின் முகம் பார்க்க
“ம்ம்ம்.. உனக்கு இங்க வந்ததுல இருந்து என்னவோ ஆகிருச்சு ராதா..” என்றவர் “இந்த ஐடியா ஓகே தான் ப்ரித்வி. அவங்க பில்டிங் ப்ளான் கொண்டு வரட்டும். பட்ஜெட் எஸ்டிமேசன் எப்படின்னு பார்த்துக்கலாம்..” என்று பேச, ப்ரித்விக்கே என்னவோ மனதினில் ஒரு புதிய உற்சாகம்.
வாழ்வில் முதன்முறையாய், தன் பொறுப்பில் இரு காரியம் செய்யப் போகிறான். நல்லமுறையில் செய்து முடிக்கவேண்டும் என்கிற பதற்றம் இருந்தாலும், நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கையும் இருக்க,
ராதாவோ “சரி பிருந்தா நீ போய் பாட்டிக்கு எதுவும் வேணுமான்னு பாரு..” என்றுசொல்லி மகளை நகட்டியவர்,
“பிருந்தா கல்யாண விசயம் எதுவும் பேசாம இருக்கீங்களே?” என்றார் சங்கடமாய் கணவர் மற்றும் மகன் முகம் பார்த்து.
போஸ்ராஜனோ “என்ன அவசரம் ராதா உனக்கு? இப்போதான் வீட்டு விசயமே முடிவாகியிருக்கு. அதுவும் கூட வைகாசி பொறந்து நல்ல நாள்ல ஆரம்பிக்கணும்னு சித்தி சொல்லிட்டாங்க. இப்போ கல்யாண பேச்சு வேற என்ன? கொஞ்சம் பொறுமை வேணும்..” என்று கண்டனமாய் பேச ,
“அதுக்கில்லங்க, அன்னிக்கு ஜாதகம் பார்த்ததுல, இன்னும் ஆறு மாசத்துக்குள்ள பிருந்தாவுக்கு கல்யாணம் பண்ணனும், இல்லைன்னா அடுத்து ரெண்டு வருசத்துக்கு தள்ளிப்போகும்னு சொன்னாங்க.. இப்போ அவளுக்கு பார்க்க ஆரம்பிச்சா தானே, எல்லாம் செய்றதுக்கும் நேரம் கிடைக்கும். அடுத்து ப்ரித்விக்கும் பார்க்கணும் இல்லையா?” என,
ப்ரித்வியோ “ம்மா.. என் கல்யாணம் பத்தி எல்லாம் இப்போ பேசவே வேணாம்..” என்றான் பட்டென்று.
போஸ்ராஜனுக்கு மனைவியின் பேச்சு எரிச்சலைக் கொடுக்க “தேவையில்லாம குழப்பத்தைக் கொடுக்காத ராதா..” என்று கடிந்தவர், எழுந்து சென்றுவிட, ராதாவிற்கோ முகம் விழுந்து போனது.
கண் முன்னே இருக்கும் வினோதனை பிருந்தாவிற்கும், மீனாளை ப்ரித்விக்கும் பேசி முடித்துவிட்டால், பிள்ளைகள் வாழ்வும் நல்லபடியாய் இருக்கும், ஒன்றுக்குள் ஒன்று என்று கடைசிவரைக்கும் அனைவரும் ஒற்றுமையாகவும் இருக்கலாம் என்று, ராதாவின் மனம் மிக தீவிரமாய் நம்பிக்கை கொண்டது. ஆனால் அதனை செயல்படுத்தும் வழியைத் தான் காணோம்.
இடையில் ப்ரித்வி சென்னைக்கு ஒருமுறை சென்றுவர, நாட்களும் மெதுவாய் நகர, அன்றைய தினம் தங்கமீனாள் அவளின் ஆச்சியை காண வந்திருந்தாள்.
ஆச்சியோ “என்ன டி மீனாளே.. வேலைக்கு லீவா?” என்று கேட்க,
“ஆமா அத்தை. நேத்து பட்டாபிசேகம் முடிஞ்சிருக்கு. இன்னிக்கு அம்மன் திக்விஜயம் வர்றது பார்க்க அத்தனை அம்சமா அழகா இருக்கும். எப்பவும் இந்த நாள் அங்க போவோம். வினோதன் வந்து எங்களை பிக்கப் பண்ணிக்குவார்..” என, பிருந்தாவிற்கோ வினோதன் பெயரை கேட்டதுமே, மனது படபடத்தது.
தனக்குள் ஏற்படும் மாற்றங்களையும், அவள் முகம் காட்டும் வெளிப்பாடுகளையும் மறைக்கவே படாதபாடு அவள் பட, ராதாவோ வினோதன் பெயரைக் கேட்டதுமே மனதினில் பல எண்ணக் கோடுகள்.
“நாங்க இன்னும் ஒருதடவை கூட இப்படி எல்லாம் போய் பார்த்தது இல்லை மீனா. அங்க கோவிலுக்கு போயி பல வருஷம் ஆகிருச்சு..” என்றவர் “ஏன் அத்தை இந்த தடவ நம்மளும் போகலாமா?” என்று கேட்க,
அழகரசியோ “என்னால முடியாது ராதா. வெயில் ஜாஸ்தியா வேற இருக்கு. அங்கன கூட்டமும் நிறைய இருக்கும். வேணும்னா நீங்க எல்லாம் போயிட்டு வாங்களேன்..” என்று சொல்லிட,
ராதாவோ மகள் முகம் பார்க்க, பிருந்தாவிற்கோ அங்கே சென்றால் வினோதனை காணும் வாய்ப்பு கிடைக்கும் என்பதனால் “சூப்பர் ம்மா.. இப்போவாச்சும் வெளிய போயிட்டு வர்றதுக்கு தோணிச்சே..” என்றாள்.
மீனாளும் “பிருந்தா வர்றாளான்னு கேட்கத்தான் வந்தேன் அத்தை. எல்லாருமே போறதுன்னா, நீங்க அம்மாவோட பேசி ப்ளான் பண்ணிக்கோங்க. நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்..” என்றவள் “வர்றேன் ஆச்சி..” என்று சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
ராதா சென்று போஸ்ராஜனிடம் இதனை சொல்ல, அவரோ “நீங்க எங்கனாலும் போயிட்டு வாங்க. நான் வரல..” என்றுவிட்டார்.
இதனைத்தானே ராதாவும் எதிர்பார்த்தார். அதனால் அதிகமாய் அழுத்தாமல் “சரிங்க..” என்றவர், மகனிடம் அந்த அழுத்தத்தை கொடுத்தார்.
“ம்மா கார் இருக்குதானே டிரைவர் போட்டுக்கலாம்.. நீங்க போயிட்டு வாங்க..” என,
இதனை கேட்ட வேம்பரசன் தான் “அதில்ல ப்ரித்வி.. அங்கன கூட்டம் ஜாஸ்தியா இருக்கும். உள்ளூர், வெளியூர் ஆளுங்கன்னு எக்கச்சக்கமா இருப்பாங்க. பொம்பளைங்களா போறப்போ, வீட்டு ஆளுங்க யாரும் போனா நல்லது..” என,
“ஏன் ப்ரித்வி நீயும் உங்கப்பா போலவே இருக்க. சென்னைல இருந்தப்போ தான், எங்க போனாலும் டிரைவரோட போகணும், வரணும். எங்கேயும் உங்கப்பா எங்களோட வரமாட்டார். அவருக்கு தேவைன்னா மட்டும் தான் எதுவும். நீயும் இப்படி பண்ற?” என்று நிஜமான வருத்தத்துடனே ராதா பேசவும், ப்ரித்விக்கும் ஒருமாதிரி ஆகிவிட்டது.
நிஜம் அதுதானே..
ப்ரித்வி இதனை எல்லாம் கண் கூடாக பார்த்திருக்கிறான் தானே..
“ஹ்ம்ம்..” என்று ஒரு பெருமூச்சு விட்டவன் “சரி..” என்று சொல்லிட, ராதாவிற்கும், பிருந்தாவிற்கும் முகம் மலர்ந்து போனது.
பிருந்தாவிற்கோ வினோதனை காணப் போகும் மகிழ்வு. ராதாவிற்கோ மனதிற்குள் பல கணக்குகள். ஆனால் இதனை எதையும் அறியாமல் தான் அவர்களின் பயணம் ஆரம்பம் ஆகியது.
சொன்னதுபோலவே தங்கமீனாள் மதியம் வேலை முடிந்து வந்திருக்க, அனைவரும் கிளம்பிடவே நான்கு மணிக்கு மேலே ஆகிவிட்டது. ப்ரித்வி வருகிறான் என்பது தங்கமீனாளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
மகள் வந்ததுமே சந்திரா “எல்லாரும் ஒண்ணா கார்ல போயிக்கலாம்னு பேசிருக்கோம்..” என்றிட, எப்படியும் டிரைவர் தான் வருவார் என்பதுபோல எண்ணிக்கொண்டாள்.
ஆனால் ஓட்டுனர் இருக்கையில் இருந்த ப்ரித்வியைப் பார்த்துவிட்டு, அம்மாவை கேள்வியாய் பார்க்க, சந்திராவோ “அண்ணிதான் வந்தே ஆகனும்னு பேசியிருப்பாங்க போல..” என்றார் மெதுவாய் மகளிடம்.