நாட்கள் வேகமாய் நகர்ந்துகொண்டு இருந்தது. அப்படித்தான் தங்கமீனாளுக்குத் தோன்றியது. ஆனா ப்ரித்விக்கும், பிருந்தாவிற்கும் நாட்கள் ஆமை வேகத்தை காட்டிலும் மிக மிக மெதுவாய் நகர்வது போலத்தான் இருந்தது. சென்னையில் இருந்த, அவர்களின் கார் மற்றும் அவனின் யமகாவை வரவழைத்து இருந்தான் ப்ரித்வி.
“ரெண்டு காரையும் வர வச்சிருக்கலாம் தானே ப்ரித்வி..” என்று ராதா கேட்டதற்கு,
“ஒரு கார் போதும் ம்மா. இன்னொரு கார் ரென்டலுக்கு விட்டுட்டேன். இங்க தாத்தா பாட்டிக்கிட்ட இருக்க கார் தேவைன்னா வாங்கி யூஸ் பண்ணிக்கலாம்..” என்று சொல்லி முடித்துவிட்டான்.
சென்னையில் வீட்டினில் எப்போதுமே மூன்று கார்கள் நிற்கும். போஸ்ராஜனுக்கு ஒன்று. பெண்களுக்கு ஒன்று. ப்ரித்விக்கு ஒன்று. ஆனாலும் ப்ரித்வி யமகாவில் தான் எங்கே செல்வதும். தேவைப்பட்டால் மட்டுமே காரினை எடுத்துச் செல்வான். ஆதனால் மூன்று கார்கள் இங்கே அதிகப்படி என்று தெரிய, இரண்டினை அங்கேயே அவனது நண்பன் மூலமாய், வாடகைக்கு விட்டுவிட்டான்.
அதுவும் ஒருவகை வருமானம் தானே.
ஆனால் போஸ்ராஜனோ இது தெரியவும் “காரை வாடகைக்கு விட்டுத்தான் நம்ம சம்பாரிக்கணும்னு இல்லை..” என்று கடுகடுத்த முகத்தோடு சொல்லிட,
“ப்பா இங்க நான் வொர்க் ப்ரம் ஹோம் தான். கார் நீங்க யார்னாலும் யூஸ் பண்ணிக்கோங்க. மூணு கார் கொண்டு வந்து அதை சும்மா நிறுத்தி வைக்கிறதுல என்ன யூஸ்?” என்று எதிர்கேள்வி மகன் கேட்க,
ராதாவோ “ஏன்டா?! எல்லாமே அப்பாக்கு பிடிக்காததா செய்யணும்னு இருக்கியா நீ?” என்று கடிய,
“பிடிக்குதோ பிடிக்கலையோ, நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை நம்ம எடுத்துக்கத்தான் வேணும்னு கொஞ்ச நாள் முன்ன, எனக்கு அட்வைஸ் பண்ணது நீங்கதான் ம்மா..” என்றுவிட்டு போன மகனிடம் என்ன சொல்வது என்றுகூட அவருக்குத் தெரியவில்லை.
அழகரசி கூட “எதுக்கு ராதா, சின்னவன் எது பண்ணாலும் ஏதாவது சொல்லிட்டே இருக்கீங்க? அவனும் யோசிச்சுத்தான் எதையும் செய்றான். இங்க எங்களது ஏற்கனவே ஒரு கார் இருக்குதானே. வேணும்னா எடுத்து யூஸ் பண்ணிக்க வேண்டியதுதானே..” என்று சற்று அழுத்தம் கொடுத்து பேச,
ராதாவோ “அவருக்கு சங்கடமா இருக்குமில்லையா அத்தை..” என்றார்.
“என்ன சங்கடம்? போஸ் கார் வந்திடுச்சு தானே..” என்று கேட்ட மாமியாரிடமும் என்ன பதில் சொல்ல என்று ராதாவிற்கு தெரியவில்லை.
திருமணம் ஆனதில் இருந்து தனிக்குடித்தனம். ஒருவகையில் சுதந்திரப் பறவையாய் இருந்த ராதாவிற்கு, இப்போது பெரியவர்களோடு இருப்பது கொஞ்சம் சிரமமாய் தான் இருந்தது. பொதுவாய் அழகரசியும், வேம்பரசனும் எதிலும் தலையிடுவது இல்லைதான். இருந்தாலும், வீட்டினில் லேசாய் சலசலப்பு எட்டிப்பார்த்தால், அவர்கள் தலையீடு இல்லாமல் இருப்பது இல்லை.
இதோ இரண்டு நாட்கள் முன்னர் கூட, கற்பகம் வந்து அழகரசியிடம் “ம்மா இத்தனை பேருக்கும் தினமும் நான் ஒருத்தியா சமைக்கிறது கஷ்டமா இருக்கு. உதவிக்கு இன்னொரு ஆள் வேணும்..” என்று சொல்லிவிட,
அழகரசியும், சந்திராவிற்கு அழைத்து “கற்பகத்துக்கு உதவி செய்றதுபோல ஆள் இருந்தா பார்த்து அனுப்பிவிடு..” என்று கேட்டுவிட்டார்.
பின்னே அவரும் கவனித்துக்கொண்டு தானே இருக்கிறார். சமையல் வேலை ஜாஸ்தித்தான். அதிலும் ராதா சொல்லும் உணவு வகைகள் எல்லாம் பாதிக்கு மேலே கற்பகத்திற்கு என்னவென்று கூட தெரியாது. இதில் மூன்று வேளையும் நான்கு ஐந்து வகை உணவுகள், அவரே செய்யவேண்டும் என்கையிலே முடியாது தான்.
ஆனால் இதனையும் ப்ரித்வி கவனித்துவிட்டு “எதுக்கு இன்னொரு ஆள் பாட்டி?!” என்று கேட்டான்.
“வேணும்ல ப்ரித்வி. வீட்ல ஆளுங்க கூடுதல் இல்லையா. இனி வீட்டு வேலை ஆரம்பிச்சுட்டா, வேலை செய்றவங்களுக்கு நாளுக்கு ரெண்டு தடவ டீ, போண்டான்னு போட்டுத் தரணும். கற்பகம் ஒருத்தியா என்ன செய்வா? எனக்கும் ரொம்ப முடியாது..” என,
“அம்மாவும், பிருந்தாவும் இருக்காங்க. கூட நானும் இருக்கேன் தானே பாட்டி..” என்றவனின் பார்வை கண்டனமாய், அம்மாவின் மீதும், தங்கையின் மீதும் படர்ந்தது.
அதே நேரம் மீனாள் வந்தவளோ, சந்திரா கொடுத்தார் என்று இனிப்பு மற்றும் கார பணியாரம் கொண்டுவந்தவள், அவளே அடுப்படி சென்று ஆளுக்கு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொடுத்தும் அல்லாமல், பேசிக்கொண்டே கற்பகத்தோடு அவருக்கு உதவியாய் எதையோ செய்துவிட்டும் செல்ல, இது அவன் அடிக்கடி காணும் காட்சி தான்.
தங்கமீனாளும், சந்திராவும் சரி எப்போது வந்தாலும் அழகரசிக்கு உதவியாகவோ, இல்லை கற்பகத்திற்கு உதவியாகவே ஏதேனும் வேலை செய்துகொடுப்பது வழக்கமாய் இருந்தது. ஆனால் வந்து இத்தனை நாட்களில் ராதா ‘இதை செய்.. அதை செய்..’ என்று அதிகாரம் செய்வதோடு மட்டும் தான் நிற்கிறார்.
பொறுப்பெடுத்து எதையும் செய்வதுமில்லை. பார்ப்பதும் இல்லை. இவர்கள் வந்திருக்கும் தகவல் அறிந்து, அக்கம் பக்கம் ஆட்களோ இல்லை சொந்தங்களோ யாரேனும் வந்தால், அவர்களோடு அமர்ந்து பெருமை பேச்சு பேசுவதற்கு மட்டும் தான் ராதா மெனக்கெடுகிறார். சரி பிருந்தவிற்கோ எதையும் சொல்லிக் கொடுப்போம் என்பதுமில்லை. அவளும் அறைக்குள்ளேயே இருந்துவிடுகிறாள். நினைக்க நினைக்க ப்ரித்தவிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.
“ம்மா…” என்று அழைத்துக்கொண்டே அவனது அறைக்குள் சென்றிருக்க, ராதாவோ மகன் எதற்கோ அழைக்கிறான் என்றெண்ணித்தான் உள்ளே சென்றார்.
ஆனால் மகனின் முகத்தினில் தெரியும் கோபத்தினைக் கண்டு “என்ன ப்ரித்வி?” என்று கேட்க,
“என்ன பண்ணிட்டு இருக்கீங்கம்மா நீயும் பிருந்தாவும்?” என்று கடிய,
“என்னடா? என்ன?” என்றார் விளங்காமல்.
“இது நம்ம வீடுன்னு உரிமை கொண்டாடினா மட்டும் போதாதும்மா. பொறுப்பா எதுவும் செய்யணும். என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க? எதையும் கவனிக்கிறதும் இல்லை. எதையும் செய்றதும் இல்லை..” என்று கடிய, அப்போதும் மகன் எதனைச் சொல்கிறான் என்று ராதாவிற்கு புரியவில்லை.
“ம்ம்ச் அம்மா.. வீட்ல வேலைகளே இல்லையா என்ன? தங்கமீனாள் வரும்போதெல்லாம் எதையாவது செஞ்சு குடுத்துட்டு போறா. அவங்கம்மாவும் அப்படிதான். இன்னிக்கு கற்பகம் அக்கா, தனியா முடியலை இன்னொரு ஆள் வேணும்னு பாட்டிக்கிட்ட கேட்டுட்டு இருக்காங்க. வீட்ல நீங்க என்ன செய்றீங்கம்மா, ஏன் நீங்க பிருந்தா எல்லாம் ஹெல்ப் பண்ண கூடாதா என்ன?” என்று படபடக்க,
‘நாங்களா?!’ என்று அதிர்ந்து பார்த்தார்.
“ஏன்? இது நம்ம வீடு.. நம்ம எல்லாம் ஒரே குடும்பம்னு வாய்க்கு வாய்.. வார்த்தைக்கு வார்த்தை சொல்லிட்டு இருக்கிறது யாரு? செய்யக் கூடாதா? நீங்க கிட்சன் பக்கம் போய் நான் பார்க்கவே இல்லைம்மா. இங்கபாருங்க, வீடு கட்டி முடிக்க மாசக் கணக்குல ஆகும். என்னதான் தாத்தா அப்பாக்கு பிஸ்னஸ் கொடுத்தாலும், நானும் ஏர்ன் பண்ணாலும், முன்னாடி இருந்தது போல லக்ஸரியா எல்லாம் இருக்க முடியாது. வசதியா இருக்கலாம். அவ்வளோதான். பட்ஜட் போட்டு மட்டும் தான் இனி கொண்டு போக முடியும். இதுல சமையலுக்கு மட்டுமே ரெண்டு வேலைக்காரங்க எல்லாம் ஓவர் தான்…” என்று மகன் நீளமாய் பேச, ராதா மௌனமாய் நின்று இருந்தார்.
“என்னம்மா?!” என்று கொஞ்சம் குரலில் அழுத்தம் கொடுத்தே ப்ரித்வி கேட்க,
“என்ன மாறிட்டேன் ம்மா? புரியலை எனக்கு..” என்று நெற்றி சுருக்கி அம்மாவினை ஒரு தீவிர பார்வை பார்த்தவன் “பொறுப்பாவும் இருங்கன்னு சொல்றது தப்பா?! இங்க நம்ம நாலு பேரு. தாத்தாவும் பாட்டியும் ரெண்டே பேர் தான். சில செலவுகள் நம்மளும் செஞ்சுத்தான் ஆகணும். அப்படிப் பார்த்தா நம்மதான் அவங்களுக்கு செய்யணும். வந்ததுல இருந்து அவங்களே தான் எல்லாம் பாக்குறாங்க, பண்றாங்க..” என, ராதாவிற்கு மகன் சொல்ல வருவதின் அர்த்தம் கொஞ்சம் புரிந்தது.
“பிருந்தாவுக்கு இந்த பக்கம் மாப்பிள்ள பார்க்க நினைக்கிறது தப்புன்னு சொல்லல. ஆனா அவளோட விருப்பமும் என்னன்னு கேட்டுட்டு செய்ங்க. அதையும் மீறி, முதல்ல குடும்பத்தை எப்படி கொண்டு போகணும்னு சொல்லிக் கொடுங்க. இன்னும் ஒரு டீ கூட உருப்படியா அவளுக்கு போட தெரியலை..” என்று அடுத்த ஒரு அரைமணி நேரத்திற்கு அம்மாவிற்கு வகுப்பு எடுத்திருந்தான் மகன்.
அது கொஞ்சம் ராதாவிடம் வேலை செய்ய, பதவிசாக அழகரசியிடம் “எதுக்கு அத்தை சமையலுக்கு ரெண்டு ஆளு. நானும் பிருந்தாவும் இருக்கோமே.. கூட செஞ்சுக்கிறோம்…” என்று சொல்லியிருக்க, மறுத்து எல்லாம் அழகரசி பேசவில்லை.
அவருக்கும் எல்லாம் தெரியும் தானே. ஆனால் ராதா நகர்ந்து செல்லவும் ப்ரித்வியை தான் அர்த்தமாய் பார்த்து வைக்க “நீங்க கொஞ்சம் மாமியாரா நடந்துக்கோங்க பாட்டி..” என்று சொன்னவனைப் பார்த்து, பக்கென்று சிரித்துவிட்டார்.
“என்ன பாட்டி?!” என்று பேரன் சலுகையாய் கேட்க,
“திடீர்னு மாமியாரா நடந்துக்கோங்க அப்படின்னா நான் என்ன பண்றது பேராண்டி..” என,
“நிஜமா சொல்றேன் பாட்டி, நீங்க கொஞ்சம் இழுத்து பிடிங்க. இல்லைன்னா அம்மா எதையும் எடுத்துச் செய்ய மாட்டாங்க.. பிருந்தாவும் இப்படியே இருந்திடுவா..” என்று கொஞ்சம் ப்ரித்வி வருந்தியே சொல்ல,
“சரி சரி விடு பார்த்துக்கலாம்..” என்றுவிட்டுப் போனார்.
அடுத்து இப்போது கார் பிரச்சனைக்கு ராதா பேசவும் தான், அழகரசி கொஞ்சம் பேசியது. ஆனால் வீட்டினில் இத்தனை நடக்கிறது, பிருந்தாவோ எதையும் கண்டுகொள்ளாமல், அலட்டிக்கொள்ளாமல் வேறொரு உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டு இருந்தாள்.
மனம் முழுவதும் வினோதன் எண்ணங்கள் தான். என்னவோ தெரியவில்லை, அவனைப் பார்த்ததுமே மனது கொஞ்சம் ஆட்டம் கண்டுவிட்டது பிருந்தாவிற்கு. அதிலும் அவனது புன்னகை, அவளை மொத்தமாய் கொள்ளை கொண்டது என்றுதான் சொல்லவேண்டும். இதோ இப்போதும், அவனைப்பற்றிய சிந்தனையில் இருந்தவளுக்கு, சில தினங்கள், அதாவது வினோதன் அவனின் அப்பா மற்றும் தம்பியோடு வீடு வந்து சென்றதும் நினைவில் வந்தது.
காசிராஜன் அனைவரையும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து வைக்க, கணேசனும் சிறு வயதில் போஸ்ராஜனை கண்டிருக்கிறார் தானே. அதனால் “ரொம்ப பழக்கம் இல்லைன்னாலும் தெரியும் காசி..” என்று நல்லமுறையில் தான் அனைவரோடும் பேசினார்.
வினோதன் வந்ததுமே மீனாளை தேட, அவளோ “டீ எடுத்துக்கோங்க..” என்று அனைவருக்கும் மீனாள் வந்து தேநீர் கொடுக்க,
“நீ போட்ட டீயா மீனா? நம்பி குடிக்கலாமா?” என்று வினோதன் கேட்கவும்,
“வேணாட்டி போங்க..” என்று அவன் கரத்தினில் இருந்து வாங்கியவள் “நீங்க குடிங்க மாமா..” என்று ப்ரித்வியிடம் டம்பளரை நீட்ட, ப்ரித்விக்கு மீனாள் மற்றும் வினோதனைக் காண ஆச்சர்யமாய் இருந்தது.
கொஞ்சம் இருவரையும் ஆராய்ச்சி பார்வையும் பார்த்து வைக்க, வினோதனோ “வாயாடி..” என்று மீனாளை அன்பாய் கடிந்துகொண்டே
“இவ பண்ற வம்பெல்லாம் கொஞ்ச நஞ்சமில்ல.. இப்போ என்னவோ கொஞ்சம் அடக்கி வாசிக்கிறா..” என்று சொல்ல, ப்ரித்வி தங்கமீனாளை பார்த்து கேலியாய் சிரித்துக்கொண்டான்.
வேம்பரசன் “பின்ன போய் பார்த்துட்டு வாங்க..” என்று சொல்லவும், கணேசனும் அவரின் இளைய மகனும் எழுந்துகொள்ள, உடன் போஸ்ராஜன் குடும்பமும் எழுந்துகொள்ள, வினோதன் எழுந்துகொள்ளாதது கண்டு பிருந்தாவும் இங்கே தேங்கி நின்றாள்.
சந்திராவோ “நீ போகலையா பிருந்தா?” என்று கேட்க,
“இல்ல அத்தை.. அவங்க எல்லாம் போய் பார்த்துட்டு வரட்டும்..” என்றவள் மீனாவோடு இணைந்து நிற்க, வினோதன் அவளைப் பார்த்தும் லேசாய் புன்னகை பூத்துக்கொண்டான்.
காசிராஜனும், வேம்பரசனும், அழகரசியும் கூட இவர்களோடு பின்னே செல்ல, எஞ்சி நின்றது சந்திரா, மீனாள் மற்றும் பிருந்தா தான். அதிலும் தங்கமீனாள் வினோதனோடு, நிறைய கதைகள் பேசிக்கொண்டே இருக்க, அனைத்திற்கும் கொஞ்சம் கூட அலுத்துக்கொள்ளாமல் பதில் கொடுத்துக்கொண்டே தான் இருந்தான் வினோதனும்.
சந்திராவும் கூட இதனை ஒருவித ரசிப்போடு பார்த்திருந்தவர் “வினோதன் வந்துட்டா போதும், இப்போன்னு இல்லை சின்னதுல இருந்தே மீனாள் இப்படித்தான் வாய் ஓயாம பேசிட்டே இருப்பா..” என்று சொல்ல, அங்கே பின்னே சென்ற ராதாவிற்கோ மனது அங்கே இல்லை.
வினோதனைப் பார்த்ததுமே அவருக்கு மனதினில் பெரும் சஞ்சலம். ஆள் பார்க்கவும் நன்றாய் இருக்கிறான். படித்து, நல்ல வேலையிலும் இருக்கிறான். குடும்பமும் நல்ல ஆட்களாய் இருக்கிறார்கள். மொத்தத்தில் மகளுக்கு எப்படியான வரனை இங்கே எதிர்பார்த்தாரோ, அப்படியெல்லாம் வினோதன் இருக்க, அவனும் மீனாளும் பழகுவது கண்டும் கொஞ்சம் சஞ்சலமாய் இருந்தது.
இதில் மகளின் பார்வைகளை எல்லாம் எங்கே கவனித்தார். கவனித்திருந்தால் சட்டென்று ஒரு முடிற்கே வந்திருப்பார். இங்கே பின்பக்கம் வீட்டினை எப்படி மாற்றி, தனி வீடாய் கட்டுவது என்று கணேசனும், அவரது இளைய மகன் ரஞ்சனும் பார்த்து பேசிக்கொண்டு இருக்க,
ராதாவோ “ப்ரித்வி நீங்க பார்த்து பேசிட்டு வாங்கப்பா..” என்றவர், நகர்ந்துவிட்டார்.
அழகரசி கூட “என்ன ராதா?!” என்று விசாரிக்க
“இல்ல அத்தை.. கொஞ்சம் என்னவோபோல இருக்கு..” என்றுவிட்டு சென்றுவிட, அங்கே முன்னே வந்து பார்த்தவருக்கோ மீனாளும், வினோதனும் தான் காட்சி கொடுத்தனர்.
மனதில் பாரமேற அப்படியே ஒருபக்கமாய் சாய்ந்து நின்றுவிட்டார்.
சந்திரா பிருந்தாவோடு என்னவோ பேசிக்கொண்டு இருக்க, அவளோ கடினப்பட்டே வினோதன் பக்கம் சென்ற பார்வையை சந்திரா பக்கம் திருப்பி இருந்தாள். ஆனாலும் அவ்வப்போது மீனாளைப் பார்ப்பது போல, வினோதனையும் கண்டுக்கொண்டு தான் இருந்தாள். ஏனோ மீனாளைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது.
வினோதனோ “ஓகே மீனாள்.. எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு. நான் கிளம்புறேன்.. சர் வந்தா சொல்லிடு..” என்றவன்
“வர்றேன் ஆன்ட்டி..” என்று சந்திராவிடமும் மொழிந்தவன், பிருந்தாவிடமும் ஒரு மரியாதைக்காக “வர்றேன்..” என்று தலையை ஆட்டிவிட்டுச் செல்ல, அவளுக்கோ விண்ணில் பறப்பது போலத்தான் இருந்தது.
மீனாளும் “ம்மா நீங்க பேசிட்டு வர்றீங்களா? நான் வீட்டுக்குப் போகவா?” என்று கேட்க,
“ஏன் டி.. நைட் வரைக்கும் இங்கனன்னு தானே ஆச்சி சொன்னாங்க.. இப்போ என்ன?” என்று சந்திரா கேட்டு வைக்க,
“அதானே இரு மீனா..” என்று வேகமாய் வந்தார் ராதா.
இதுவரைக்கும் தள்ளி நின்று பார்த்துக்கொண்டு இருந்தவர், இப்போது மீனாள் கிளம்புகிறாள் என்றதும் பக்கம் வர, பிருந்தாவோ “இரு மீனா.. நீ கிளம்பிட்டா எனக்கு போர் அடிக்கும்..” என்றுசொல்ல,
“ம்ம்.. சரி வா அப்படியே மொட்ட மாடிக்கு போவோம்..” என்று அவளையும் இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
பிருந்தாவிற்கோ என்ன தோன்றியதோ, மீனாளின் கரத்தினைப் பற்றிக்கொண்டு “உன்னைப் பார்த்தா எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கு மீனா..” என்று சொல்ல,
“அட.. என்ன பிருந்தா?” என்றாள் கொஞ்சம் அதிர்ந்து.
“நிஜமா மீனா.. பிறந்து வளர்ந்தது எல்லாம் சிட்டி அப்படின்னாலும், நீ என்ஜாய் பண்ற பல விசயங்கள் எனக்கு என்னன்னு கூட தெரியாது. என்னோட பிரன்ஸ் எல்லாம் எங்க வீட்டுக்கு வந்ததே இல்லை. அவங்க வீட்டுக்கும் என்னை அப்பா அனுப்ப மாட்டார். ரொம்ப ஸ்டேட்டஸ் பார்ப்பார். நீ வினோதன் கூட பேசுறதைப் பார்க்கிறப்போ எனக்கு இன்னமும் நம்பவே முடியலை..” என்று சொல்ல,
“ஹா ஹா…” என்று கொஞ்சம் சத்தமாய் சிரித்தவள் “வினோதனை, எனக்கு நான் இத்துனூண்டா இருக்கும்போது இருந்து எனக்குத் தெரியும் பிருந்தா. ஹி இஸ் பக்கா ஜென்டில். என்னோட பிரண்ட், குருன்னு கூட சொல்லலாம். அத்தனை மரியாதை தெரிஞ்ச ஆள்..” என்று சிலாகித்துப் பேச, ஏற்கனவே மனதினில் போட்டிருந்த சிம்மாசனத்தில் வினோதன் இன்னும் ஒருபடி மேலேறி அமர்ந்துகொண்டான்.
மீனாள் சொல்லும்போது தோன்றிய பூரிப்பு, இதோ இப்போதும் கூட அவளுள் தலைதூக்க, தானாய் ஒரு புன்னகை பூத்து அமர்ந்திருக்க, விதியும் தன் விளையாட்டை தொடங்கி இருந்தது.
பின்னே, கணேஷன் நேரடியாகவே காசிராஜனிடம் “வினோதனுக்கு, மீனாளை பேசணும்னு எனக்கு ரொம்ப ஆசை காசி..” என்று கேட்டுவிட, காசிராஜன் மகிழ்வை சொல்லவும் வேண்டுமா என்ன?!