ஆக, தன்னைப்போல் மனதினில் தான் சொத்துக்காரன். எல்லாம் நமக்குத்தான் என்கிற எண்ணம் நிறையவே உண்டு. அதனால் தான் இங்கே வந்து எங்களோடு இரு என்று அழைத்தமைக்கு கூட ‘எனக்கு உரிமையான இடம் தானே..’ என்ற எண்ணத்தில் தான் வந்ததே.
எல்லாம் தாண்டி, சித்தி சித்தப்பா மீது அன்பில்லாமலோ, பற்று இல்லாமலோ எல்லாம் இல்லை. எது செய்தாலும் வேம்பரசன் – அழகரசியிடம் கேட்டுவிட்டு செய்வதுதான் பழக்கம். இளங்கலை கடைசி வருடம் இருக்கையிலேயே, முதுகலைக்கு சென்னை சென்று படிக்கவேண்டும் என்று சொல்ல, பெரியவர்கள் இருவரும் மறுக்கவே இல்லை.
“அதுக்கன்ன ராசா, எங்க படிக்கணுமோ படி. வெளிநாடு போறதுன்னாலும் போய் படி. யார் வேணாம்னு சொல்றா? ஆனா வாரத்துக்கு ஒருதடவ வந்து முகத்தை காட்டிடணும்..” என்று சொல்லிய அழகரசியைப் பார்த்து
“வெளிநாடு போனாலும் வாரத்துக்கு ஒருவாட்டி வந்து முகத்தை காட்டணுமா சித்தி?” என்று சந்தோசமாகவே கேட்டு வைத்தது வேறு யார், எல்லாம் போஸ் தான்.
வேம்பரசனை விட, சிறு வயது முதலே அழகரசியிடம் ஒட்டுதல் அதிகம் தான். பெயருக்கு என்றில்லாமல், நிஜமான அன்போடும், அக்கறையோடும் நடந்துகொள்ளும் அழகரசியோடு எப்போதுமே தயக்கமின்றி தான் போஸ் பேசுவது வழக்கம்.
இப்படி தனிகாட்டு ராஜாவாய் கோளோச்சிக்கொண்டு இருக்க, கண்ணில் விழுந்த தூசிபோல உறுத்தலாய் வந்து சேர்த்த விஷயம் ஒன்றும் நடந்தது.
அழகரசியின் தம்பி குடும்பம் திடீர் விபத்தொன்றை சந்திக்க, எத்தனை முயன்றும் தம்பியையும், தம்பி மனைவியையும் காப்பாற்ற முடியாமல் போக, பல வைத்திய போராட்டங்களுக்குப் பிறகு உயிர் பிழைத்தது அழகரசியின் தம்பி மகன் காசிராஜன்.
போஸ்ராஜனும், காசிராஜனுக்கும் ஏறக்குறைய ஒரே வயது தான். என்ன விபத்து நடந்ததால், கிட்டத்தட்ட அரைவருடம் காசிராஜனின் படிப்பு தடைபட, அழகரசி – வேம்பரசன் பொறுப்பில் தான் காசிராஜனும் இருக்க, ஆரம்பத்தில் இதெல்லாம் போஸிற்கு பெரிதாய் தெரியவில்லை.
தனக்கு மட்டுமே கிடைத்த அன்பும், கவனிப்பும், இப்போது காசிக்கும் கிடைக்க “பாவம் அடிபட்டு வந்திருக்கான்..” என்று அனுதாபம் பிறந்தது.
ஆனாலும் ஒருசில சொந்த பந்தங்களோ “என்ன போஸு.. அழகரசி தம்பி மகனையும் கூட்டிட்டு வந்துடுச்சு போல.. பார்த்து இருந்துக்கப்பா..” என்று அக்கறையில் சொல்வது போல பேச, போஸ் ராஜனுக்கு மனதில் சுருக்கென்று இருந்தது.
ஆனால் உடல்நலம் தேற தேற, காசியும் தன்னைப்போல் இங்கேதான் இவர்களோடு தான் இருக்கப்போவது தெரிந்து, அதனை முழுமனதாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னவோ தன்னுடைய முக்கியத்துவம் இங்கே குறைந்துவிடுமோ என்கிற எண்ணம் தலைதூக்க,
“ஏன் சித்தப்பா, அவன் படிக்கவேணாமா?” என்று நாசூக்காய் கேட்டுப் பார்க்க,
“அவனுக்கு வெளியூர்ல தங்கி படிக்கிறதுக்கு, விருப்பம் இல்லையாம் போஸு. உடம்பும் இப்போதானே தேறி வந்திருக்கு. இங்கனயே இருக்கட்டும்..” என்றுவிட்டார்.
“அதுவும் சரிதான். அவனுக்கு உடம்பும் சரியில்ல தானே..” என்று போஸ் அதையும் பெரிதாய் எண்ணவில்லை தான்.
தான் விருப்பப்பட்ட பட்டினத்துப் படிப்பு தான் அந்த சூழலில் போஸிற்கு பெரிதாய் தெரிந்தது. ஆனாலும் தன்னுடைய இடத்தை வேறு யாருக்கும் பங்கு கொடுக்க, அவரது குணம் சம்மதிக்கவில்லை. அனைத்திலும் குறைகண்டு பிடித்தது. ஆரம்பத்தில் தோழமையாய் இருந்த பழக்கம், நாளடைவில் சுருக்கென்று வார்த்தைகளை விட வைத்தது.
காசிராஜன் எப்போதுமே கொஞ்சம் சாது தான். நன்றாய் படிப்பு வரும். ஆரம்பத்தில் இருந்தே வசதிகளுக்கு பஞ்சமில்லை என்றாலும், திடீரென்று குடும்பத்தினை இழந்து, இப்படி அத்தையின் வீட்டினில் வந்து இருக்க வேண்டிய நிலை வரவும் நிறையவே தடுமாற்றமும் இருந்தது.
வேம்பரசன் அதனை உணர்ந்து “எங்க அண்ணன் இறந்தப்போ எனக்கு எப்படி இருந்ததோ அதேபோல தான், உங்கப்பா இறந்தப்போவும். ரெண்டு பிள்ளைக பொறுப்பையும் எங்களுக்கு கொடுத்துட்டு இப்படி எல்லாம் போய் சேர்ந்துட்டாங்க. நீ எதுக்கும் கவலைப்படாத தம்பி. போஸ் எப்படி எங்களுக்கோ, அதே போலதான் நீயும்..” என்று தைரியம் சொல்ல,
அழகரசியோ “ஏ ஐயா.. உன்னைய விட்டுடுவேனா நானு? என் ரத்தம்யா நீ.. நீ எனக்கு தம்பி மவன் மட்டுமில்ல.. என் தம்பியா தான் உன்னைய பாக்குறேன் கண்ணு. அத்தை இருக்கேன் உனக்கு..” என்று அன்பை பொழிய, கொஞ்சம் கொஞ்சமாய் அனைத்திலிருந்தும் மீண்டு வந்தார்.
என்ன இருந்தாலும், எங்களின் ரத்தம் என்று இருவருமே, இருவருக்கும் மனதார தான் எல்லாம் செய்தார்கள். காசிராஜனின் அப்பாவின் சொத்துக்களை எல்லாம், குத்தகைக்கு விடாமல் அழகரசி தன் பொறுப்பில் எடுத்துப் பார்த்தார். அவருக்கு ஏற்கனவே பிறந்த வீட்டினில் இருந்து கொடுத்தும் இருக்க, இதனையும் அதனோடு சேர்ந்து பார்த்தார்.
போஸிற்கு இந்த விசயம் தெரியவும் “ஏன் சித்தி, அப்பா சொத்தை மட்டும் சித்தப்பா குத்தகைக்கு விட்டுட்டார். இப்போ நீங்க உங்க தம்பியோடத்தை எடுத்து பாக்குறீங்க?” என்று மனதினில் தோன்றியதை அப்படியே கேட்டுவிட,
“ராசா.. உன்னளவு விவரம் எல்லாம் காசிக்கு இல்லப்பா. இப்போ நீ பட்டினத்துல படிக்கிற. அவனோ உள்ளூர்ல இருக்கான். உன்னோடதை பாக்குறப்போ, அவனுக்கு சொத்துபத்து கம்மி தான். வருமானம் எத்தனை வருதுன்னு தெரிஞ்சாதானே அவனுக்கும் நல்லது. நாளைக்கு அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை அமையுறப்போ, பெருசா எந்த சிக்கலும் இருக்க கூடாது இல்லையா?” என்று அழகரசி சொன்னது, போஸிற்கு சரியாகவே பட்டது.
இருந்தும், காசிராஜனை காணும் போதெல்லாம் ஒரு எள்ளல் உருவாவதை தடுக்க முடியவில்லை.
‘என்ன இவன், இந்த கிராமத்துலயே கிடக்கான்..’ என்று எண்ணிக்கொண்டே “ஏன் காசி, படிப்பு முடிச்சிட்டு வேலைக்காவது சிட்டி பக்கம் வரலாமில்ல..” என்று ஒருமுறை கேட்க,
“எங்கப்பாக்கு நான் வாத்தியார் ஆகணும்னு ஆசை போஸு. வாத்தியார் வேலை எங்க பார்த்தா என்ன? அதுவுமில்லாம இங்க அத்தை மாமாக்கும் யார் இருக்கா? அவங்களுக்கும் வயசு ஆகுது இல்லையா. பார்த்துக்க ஆள் வேணும்..” என்று காசிராஜன் சொன்ன பதிலில்,
‘அட பைத்தியமே..’ என்பதுபோலத்தான் பார்த்தார் போஸ்.
போஸ், மேற்படிப்படை சென்னையில் முடித்துவிட்டு, அங்கேயே நண்பர்களோடு முதலில் ஒரு சிறிய அளவில் கட்டுமான பொருட்களின் மொத்த விற்பனை செய்யும் தொழிலை தொடங்க, ஆரம்பத்தில் கடினமாய் இருந்தாலும், இரண்டு வருடங்களில் தொழில் நன்றாகவே சூடு பிடிக்க, இங்கே மதுராபுரியில் இருக்கும் வீடு, தன் பங்கு சொத்து என்று ஒவ்வொன்றாய் விற்று தொழில் போட்டார்.
பெரியவர்கள் கூட “வீடாவது உனக்கு வேணும் ராசா…” என்று சொல்ல,
“நான் இனி இங்கதான் சித்தப்பா. அடிக்கடி வந்து உங்களை பார்த்துப்பேன்.. இல்லையா நீங்க எங்களோட வந்து இருங்க..” என்றுவிட்டார்.
போஸின் பிடிவாதம் அறிந்தவர்களோ, எப்படியாவது இந்த ஊர் பெண்ணை திருமணம் செய்துவைத்து விடலாம் என்று பெண் பார்க்க, போஸிற்கு யாரையும் பிடிக்கவில்லை. கடைசியில் தூரத்து உறவில், சென்னையில் வசிக்கும் ராதாவை தான் கட்டி வைத்தார்கள்.
வாழ்வு என்னவோ மிக நன்றாகவே சென்றது. கடந்த ஆண்டு வரைக்கும். ஆசைக்கும் ஆஸ்திக்கும் என்று ஆண் ஒன்று, பெண் ஒன்றாய் பிறக்க, தொழிலும் சிறக்க, வானில் இறகில்லாமல் தான் பறந்தார் போஸ். லட்சங்கள் தாண்டி, கோடிகள் எல்லாம் அவருக்கு மிக சாதாரணம் போல இருந்தது.
அதே நேரம், இங்கே காசிராஜனோ, மதுராபுரி ஊராட்சி பள்ளியில் கணித ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்து, அடுத்த இரண்டு ஆண்டுகளில் தான் திருமணமும் செய்தார். பள்ளியில் சமையல் வேலை செய்பவரின் மகளையே திருமணம் செய்துகொள்ள, போஸ்ராஜனுக்கோ பயங்கர கிண்டலாய் இருந்தது.
“ஏன் காசி, அரசாங்க உத்தியோகம் பாக்குற, உனக்கு நல்ல இடமே வருமே..“ என்று கேட்டவர் முகத்தில் அப்படியொரு பெருமை தாண்டவம் ஆடியது, என் வாழ்வை பார் என்று.
ஆனால் காசியோ “எனக்கு சந்திராவை பிடிச்சிருக்கு போஸு…” என்று முடித்துவிட்டார்.
இதோ காசிராஜன் – சந்திரா தம்பதியினருக்கு மகள் மட்டுமே. தங்கமீனாள். கல்லூரி படிப்பெல்லாம் முடித்து, அப்பாவினைப் போலவே அரசு உத்தியோகம் வேண்டுமென்று, படித்து பரீட்சை எழுதி, தேனி தாலுகாவிலேயே வேலையும் கிடைத்துவிட்டது அவளுக்கு.
சந்திராவும் ஒன்றும் சும்மா இல்லை. மதுராபுரியின் புகழ்பெற்ற ‘பலகார மாஸ்டர்..’ அவர். அவரது அப்பாவிடம் இருந்து சமையல் கற்றுக்கொள்ள, அதிலும் இனிப்புகள், கார வகைகள் செய்ய தனியாய் கற்றுகொள்ள, அவரின் கை பக்குவம் மேலும் ருசி சேர்க்க, இதோ சந்திராவிற்கு அடியில் ஐந்து பேர் வேலையில் இருக்கிறார்கள்.
அளவான சொத்து, நிறைவான சம்பாத்தியம், அழகான குடும்பம் என்று காசிராஜனின் வாழ்வு சென்றுகொண்டு இருக்கிறது. உள்ளூரிலேயே இருப்பதினால், ஊராட்கள் மொத்தமும் தெரியும்.
தொழில் செய்யவென்று ஊர்விட்டு போன போஸ்ராஜனையும், உள்ளுரிலேயே அனைவரின் அன்பையும், மரியாதையையும் சம்பாரித்த காசிராஜனையும் விதி நேருக்கு நேர் நிற்க வைக்குமா?
இல்லை, அவர்களின் பிள்ளைகளான, ப்ரித்விராஜனையும் தங்கமீனாளையும் விதி நேருக்கு நேர் நிற்க வைக்குமா தெரியவில்லை.