“மங்கள ரூபிணி மதியணி சூலினி…” என்ற பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க, பொழுது புலர்ந்த அந்த காலை வேளையில், அழகரசி – வேம்பரசன் தம்பதியினரின் இல்லமே தெய்வீக மனம் கமழ்ந்து கொண்டிருந்தது.
தேனி மாவட்டத்தின் அழகிய கிராமங்களில் ஒன்றான மதுராபுரியில், அழகரசி – வேம்பரசன் தம்பதியினரை தெரியாதவர்கள் இல்லை. இருவருமே எழுபதுகளின் மத்தியில் இருக்க, ஊரில் என்னவொரு நல்லது கெட்டது என்றாலும் இவர்களை கலந்துகொள்ளாமல் யாரும் எதுவும் செய்வதுமில்லை.
பெரிய குடும்பம் என்பதனை விட, தங்களின் உள்ளத்தால், ஊர் மக்கள் உள்ளத்தில், உயர்ந்த இடத்தில் இருக்கும் குடும்பம் என்று சொல்லலாம். மதுராபுரியின் பெரிய தலைகட்டும், வசதியிலும், சொத்துபத்துகளிலும் முதன்மையில் இருக்கும் தம்பதியினர் இவர்கள். ஆனாலும் தங்களின் பெருந்தன்மையாலும், ஊர் மக்களை அரவணைத்துச் செல்லும் குணத்தாலும், அழகரசி வேம்பரசன் தம்பதியினருக்கு தனி மரியாதையே உண்டு.
அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதனால், வழக்கம் போல் காலை ஐந்து மணிக்கே எழுந்து நீராடி முடித்து, அழகரசி பூஜையில் அமர்ந்துவிட, அவர்களின் வீட்டினில் சமையல் வேலை செய்யும் கற்பகம் வேம்பரசனுக்கு காலை நேரத்தில் பருகவென நீராகாரம் கரைத்துக் கொடுக்க “அழகிக்கு இருக்கு தானே?” என்று கேட்டபடி தான் கையிலே வாங்கினார்.
“ஆமா.. மறந்துட்டேன் பாரு. டிக்காசன் இறக்கிட்டியா? பூஜை முடிஞ்சு வந்துட்டா, கண்ணுல காபிய காட்டிடணும்..” என்ற வேம்பரசனுக்கு மனைவியை எண்ணி, லேசாய் புன்னகையும் கூட.
அடுத்த சில நிமிடங்களிலேயே அழகரசி பூஜை முடித்து வந்துவிட “ம்மா காபி…” என்று வந்து நின்றார் கற்பகம்.
“என்ன சொல்லு நீ போடுற காபி தனி ருசி தான் கற்பகம்…” என்று எப்போதும் கொடுக்கும் பாராட்டினை, இப்போதும் கொடுத்தபடியே, முதல் மிடறை விழுங்க, நீராகாரம் பருகி முடித்திருந்த வேம்பரசனோ காபியை ரசித்துக் குடிக்கும் மனைவியைத் தான் பார்த்திருந்தார்.
சற்று பருத்த தேகம்தான். ஆனால் தேஜஸ் நிறைந்தவர் அழகரசி. கணவரின் பார்வையை உணர்ந்தவர் “என்னவாம் ராசாவுக்கு பார்வை எல்லாம்?” என்று கேட்க,
“காபிய குடி அழகி. உனக்குத்தான் காபி குடிக்கிறப்போ யாரும் தொந்தரவு பண்ணக் கூடாதே..” என்று சொல்ல,
“நீங்க எனக்கு தொந்தரவாக்கும்?!” என்று லேசாய் நொடித்தவரைக் கண்டு, இன்னும் புன்னகை விரிந்தது பெரியவருக்கு.
அழகரசி காபி குடித்து முடிக்கவும் தான், கற்பகம் “காலை டிபனுக்கு என்ன செய்யம்மா?” என்று கேட்க,
“வெண்பொங்கல் செய். மதியத்துக்கும் சேர்த்தே சாம்பார் வச்சிடு. நம்ம முத்து கடையில வடை வாங்கிடு. சட்னி மட்டும் கெட்டியா..” என்றவர் “சாயந்திரம் மாவு ஆட்டிடணும்..” என்றும் சொல்ல,
“சரிங்கம்மா..” என்றுவிட்டு போனார் கற்பகம்.
கற்பகம் தலை மறையவுமே “காசிய வரச்சொன்னேன். இன்னும் காணோம்..” என்று வேம்பரசன் சொல்லி முடிக்கவில்லை. காசி என்று அவர் சொன்ன, காசிராஜன் உள்ளே நுழைந்துகொண்டு இருந்தார்.
“வா தம்பி..” என்று அழகரசி, முகம்கொள்ளா புன்னகையோடும், மனம் நிறைந்த அழைப்போடும் வரவேற்க,
வேம்பரசனோ “வா காசி..” என்றபடி இருக்கையை காட்டினார்.
காசிராஜனோ “என்ன ராஜாவும், ராணியும் ஜோடியா காட்சி தர்றீங்க..” என்று ஒரு சிறு புன்னகையோடு கேட்டபடி அமர,
அழகரசியோ “கற்பகம்…” என்று சத்தம் கொடுக்கும்போதே “அத்தை எனக்கு எதவும் வேணாம். குடிச்சிட்டு தான் வந்தேன்.. மாமா வரச் சொன்னாரு..” என்றிட,
“அட.. உன் பொண்டாட்டி போடுற காபிய விட எங்க கற்பகம் போடுறது சூப்பரா இருக்கும். குடி..” என்று தம்பி மகனின் கரத்தினை ஒரு அழுத்து அழுத்தி விடுவிக்க,
வேம்பரசனோ “நாளைக்கு போஸு குடும்பமா வர்றான் காசி..” என்றார் ஒருவித ஆழ்ந்த குரலில்.
“வருசத்துக்கு ஒருதடவ, இருந்துட்டு போலாம்னு வருவாங்க. இப்போ இங்கனவே இருக்கலாம்னு வர்றாங்க..” என்ற அழகரசி, கற்பகம் கொண்டு வந்த காபியை வாங்கி, காசியின் முன் நீட்ட, அதனை வாங்கியவரோ யோசனையோடு மாமாவின் முகம் பார்த்தார்.
“என்னன்னு சொல்ல காசி, தொழில்ல அகல கால் வச்சிட்டான். கூட்டாளிகளும் கை விரிச்சிட்டாங்க போல. இத்தனை வருசமா சம்பாரிச்சது எல்லாம் கடனுக்கே போயிருச்சு..” என,
“என்ன மாமா சொல்றீங்க?!” என்று அதிர்ந்து போய் பார்த்தார் காசிராஜன்.
“ஆமா தம்பி. நேத்து ராத்திரி தான் போன் வந்துச்சு. போஸ் பொண்டாட்டி ராதா ஒரே அழுக. மகளுக்கும் இப்போதான் வரன் பார்க்க ஆரம்பிச்சாங்க. சொல்ல சொல்ல கேட்காம, அவங்களுக்குன்னு இருந்த வீட கூட வித்துட்டு, எல்லாத்தையும் அங்க தொழில்ல கொண்டு போய் போட்டான். இங்க இருக்க சொத்தையும் விட்டு வைக்கல. எல்லாத்தையும் வித்து வித்து தொழில் பண்ணான். கடன் வாங்கி செய்றதுக்கு இது மேலுன்னு சொன்னான்.
சரி நல்லாதானே லாபம் பாக்குறான்னு நாங்களும் சம்மதிச்சோம். இப்போ எல்லாம் போச்சு. வந்த லாபத்துல வாங்குன வீடு, இடத்து மேல எல்லாம் அங்க திரும்ப பேங் லோன் போட்டிருப்பான் போல. தொழில் கொஞ்சம் நட்டமாகுறது கண்டு, கூட்டாளிங்க ரெண்டு பேரும் போட்ட காசை கேட்டிருக்காங்க. இவனும் ஒரு வேகத்துல திருப்பிக் கொடுத்துட்டு, இப்போ எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறான்..” எனும்போதே,
காசிராஜனுக்கு, போஸின் குடும்பம் தான் கண் முன்னே வந்து நின்றது. எதற்கும் குறைவில்லாத வாழ்வு. ஆனால் பேராசை என்ற ஒன்று வந்துவிட்டால், அது யாரையும் விட்டுவைக்காதே. இங்கே போஸ்ராஜனின் பேராசையும், என்னால் முடியாததா என்கிற இறுமாப்பும், இத்தனை ஆண்டுகால உழைப்பினை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது.
பெரியவர்கள் இருவருமே வருந்தி பேச “உடனே எல்லாம் அப்படி எல்லாத்தையும் எடுத்துக்க முடியாது மாமா. பேங்ல இத்தனை வருசமா இவங்க பரிவர்த்தனை பண்ணிருக்காங்க இல்லையா. எல்லாத்துக்கும் நேரம் குடுப்பாங்க. இங்க குடும்பமா வந்து என்ன செய்யப் போறாங்க? யோசிச்சு முடிவெடுக்கணும். ப்ரித்விக்கு நல்ல சம்பளம் தானே..” என்று காசிராஜன் சொல்ல,
“நல்ல சம்பளம் தான் காசி. ஆனா சொந்த வீடுமில்லை. வாடகைக்குன்னாலும், பெரிய வீடா பார்க்கணும். வீட்டு வாடகை, தங்கச்சிக்கு கல்யாணம், குடும்ப செலவுன்னு எல்லாம் அவன் ஒருத்தனே பார்க்க முடியுமா? அதுவுமில்லாம இத்தனை வருசமா வசதி வாய்ப்போட ரொம்ப நல்லாவே இருந்தாச்சு. இப்போ திடீர்னு எதுவுமில்லைன்னு ஆகவும், அவனுமே திகைச்சுத்தான் நிக்கிறான். இதுல பிருந்தா வேற வேலைக்கு போறேன்னு கிளம்பினாளாம். வீட்ல நிம்மதியே இல்லைன்னு ராதா சொல்லுது..” என்றார் வேம்பரசன்.
“பேங்ல பேசி அவகாசம் கேட்க சொல்லுங்க மாமா..”
“இந்த பிரச்சனை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு வருசமா ஓட்டிட்டு இருந்திருக்கு தம்பி. அப்பனுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் தான் போல. எதுக்கு இத்தனை இழுத்து விடணும்னு ப்ரித்வி கேட்டு அவங்கப்பாவோட சண்டையாம். போஸும் விட்டதை பிடிக்கிறேன்னு, மேற்கொண்டு மேற்கொண்டு இருக்க பணத்தையும் தொழில்ல போட்டுட்டான். கையிருப்பு சுத்தமா போச்சு.. கடைசியில சமாளிக்க முடியாமத்தான், கடனுக்கு பதிலா எல்லாத்தையும் கொடுத்து முடிச்சிருக்காங்க..” என,
“இடிஞ்சு போனானா? பேசவேயில்லை அவன். நான்தான் பேசி பேசி தைரியம் சொல்லவும், கடைசியில எங்க போறது, என்ன பண்றதுன்னு தெரியலை சித்தப்பான்னு உடைஞ்சு போய் சொல்றன். உனக்கு இருக்க இடமா இல்லை, இங்க வா பார்த்துக்கலாம்னு சொல்லிட்டோம்..” என,
“நல்லது தான் மாமா. ஆனா எதுவா இருந்தாலும் இன்னும் யோசிச்சு முடிவு பண்ணுங்க. எல்லாம் சென்னை வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவங்க. இங்கன முடியுமான்னு பாருங்க. நீங்களும் தனியா, சுதந்திரமா இருந்துட்டீங்க. இப்போ சூழ்நிலைக்குன்னு வந்துட்டு, பின்ன எல்லாருக்கும் சங்கடமாகிட கூடாது..” என்று காசியும் சொல்ல,
“அதுதான் தம்பி என் எண்ணமும். இப்போதைக்கு இங்கன வரட்டும். அடுத்து முடிவு பண்ணிக்கலாம்னு நானும் சொல்லிட்டேன்..” என்ற அழகரசி “நம்ம தங்கம் வந்துட்டாளா?” என்றார் கண்கள் மின்ன.
“ராத்திரி பதினோரு மணிக்குதான் வந்தா அத்தை. தூங்கிட்டு இருக்கா. இன்னிக்கு லீவாம். கொஞ்ச நேரம் கழிச்சு வருவா..” என்றவர் “சரிங்க மாமா நான் கிளம்புறேன்.. ஸ்கூலுக்கு நேரமாச்சு..” என்று விடைபெற்றுக்கொண்டார்.
அழகரசியோ பெருமூச்சு ஒன்றினை வெளியிட்டு “எல்லாம் நல்லபடியா நடந்திருந்தா, நம்ம தங்கமீனாளுக்கும், ப்ரித்விரஜனுக்கும் கல்யாணம் பேசலாம்னு நினைச்சோம்..” என்று சொல்ல,
“என்ன நடக்கணும்னு இருக்கோ அதுதான் நடக்கும் அழகி. வீணா போட்டு மனசை வருத்திக்காத..” என்ற வேம்பரசன் எழுந்துகொள்ள, அழகரசி இன்னும் அப்படியேதான் அமர்ந்திருந்தார்.
ஆண்டவன் இவர்களுக்கு அனைத்தையும் கொடுத்தான் பிள்ளை வரம் தவிர. திருமணமான புதிதில், என்றிருந்தாலும் பிள்ளை பிறக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். பின் வருடங்கள் உருண்டோட ஏங்கித் தவித்தார்கள். அப்படியே காலம் நீள கொஞ்சம் கொஞ்சமாய் தங்களின் மனதினை பக்குவம் செய்துகொண்டார்கள்.
கணவன் – மனைவி என்ற உறவையும் தாண்டி, இருவருக்குள்ளும் சொல்லமுடியாத ஒரு ஆழமான பிணைப்பு ஒன்று இருந்தது. நண்பர்கள் போல சில நேரம், எதிராளியை போல சில நேரம், காதலாய் சில நேரம் என்று அவர்களின் பொழுது ஒவ்வொருவிதமாய் நகரும்.
ஆனால் அவர்களுக்கும் வாழ்வில் கொஞ்சம் பிடிப்பினை கொடுத்தது, இருவரின் உடன்பிறந்தவர்களின் பிள்ளைகள். வேம்பரசனின் அண்ணன் திடீரென நோய்வாய்பட்டு இறந்துவிட, அவரது மனைவியும், மகன் போஸ்ராஜனும், அவர்களின் தனி வீட்டினில் வசித்து வர,
“எங்களோட வந்து இருக்கலாம் தானே அண்ணி. வீடு நம்ம பூர்வீக வீடு தானே..” என்று வேம்பரசன் அழைத்தமைக்கு
“வீடு பூர்வீக வீடுதான். ஆனா, ஆரம்பத்துல இருந்தே தனி தனியா இருந்து பழகிட்டோம். திடீர்னு ஒண்ணா இருக்கணும்னா எல்லாருக்கும் சங்கடம் தான் வரும் தம்பி…” என்று மறுத்துவிட்டார் சுகமதி.
ஆனால் காலம் என்ன நினைத்ததுவோ, ஒருநாள் விடியலில் விதி அவரது உயிரையும் தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள போஸ்ராஜன் தனித்து நிற்க “போஸ், தனியா என்ன செய்வ நீ? எங்களோட வந்துடு ராசா..” என்று அழகரசி தான் கை பற்றி, மூத்தார் மகனை தங்களின் மகனாய் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
அப்போது போஸ் ராஜன் கல்லூரி படித்துக்கொண்டு இருக்க, வேம்பரசன் அண்ணன் மகனின் மனமறிந்து தான் எல்லாம் செய்தார். பெற்றோர் காலத்திலேயே சொத்துக்கள் இரண்டாய் பிரிக்கப்பட்டு இருக்க, அண்ணன் பங்கு சொத்துக்கள் எல்லாம் குத்தகைக்கு விட்டு, அதில் வரும் பணத்தினை அப்படியே போஸ் பெயரில், வங்கி கணக்கில் சேமிப்பாய் வைத்துவிட்டார் வேம்பரசன்.
போஸ் ஆரம்பத்தில் இருந்தே, செழிப்பான குடும்பத்தில் ஒற்றை மகனாய் வளர்ந்த கர்வம் கொஞ்சம் கொண்ட ஆள் தான். குணக்கேடு என்று சொல்ல முடியாது. ஆனாலும் ஒரு செருக்கு எப்போதுமிருக்கும். அதிலும் சுகமதி அடிக்கடி “உங்க சித்தப்பா சித்திக்கும் பிள்ளைங்க இல்ல. நாளைக்கு எல்லாம் உனக்குத்தான் வந்து சேரும். நீ இருக்க வரைக்கும் அவங்களை விட்டுடக் கூடாது போஸு..” என்று சொல்வார்.