Advertisement

மாதம் ஒன்றுக்கு மேல் கடந்தது அதியனும், ஸனாவும் பிரிந்து. இடையில் இருவரும் பார்த்துக் கொள்ளவே இல்லை.

அதியனும் சரி, ஸனாவும் சரி அவரவர் பழைய வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர்.

அதியன் நேரம் பார்க்காமல் பிஸ்னெஸ் என சுற்ற ஆரம்பித்தான்.

ஸனா நடிப்பை முழு மூச்சாக ஏற்றாள்.
பகலில் எப்படியோ வேலை, பார்ப்பவர்கள், பழகுபவர்கள் என மனம் சிதறி எண்ணங்களை மாற்றினாலும்,  இரவில் அதியனவளாகவே திகழ்ந்தனர் இருவரும்.

அவன் மனம் ஸனாவிடமும், அவள் மனம் அதியனிடம் தான் இருந்தது.

இரவுப் பொழுது அவரவர் துணையை தலையணையாக மாற்றி நித்திரைக்கு இழுத்தது.

****

வரலெட்சுமிக்கு அதியன் தான் தன் மகன் என தெரிந்ததும், அவரால் அதியன், ஸனா பிரிந்த வாழ்க்கையைப் பார்க்க முடியவில்லை.

பீவிக்கு தன் மகளின் வாழ்க்கை இப்படி பாலைவனமாக மாறிவிட்டதை  எண்ணி கண்ணீர் வடித்து, அந்த அல்லா தான் துணை என தொழுகையில் ஆழ்ந்தார் எந்நேரமும்.

அன்று ஸனா சற்று நேரத்திலே வீட்டிற்கு வந்து விட்டாள்.

பீவியைப் பார்க்க வரலெட்சுமி, வகீம் வந்திருந்தனர். அவர்களும் அடுத்து என்ன செய்வது என்று பேசாத நாளில்லை.

மற்ற நாட்களில் ஸனா மாட்டவில்லை, அன்று ஸனா மாட்ட, வரு”ஸனா! நீ என்ன  தான் நினைச்சுட்டு இருக்க…? ஒரு முடிவுக்கு வா, அதியன் கிட்ட பேசு நீ பேசினா அவன் மாறுவான், என் அப்பாவை விட்டு வருவான்..” என்றார்.

“அத்தை! எப்பையுமே அதியன் கிட்ட நானா..? உன் தாத்தாவானு..? கேட்க மாட்டேன். அப்படி கேட்டா அது என் அதியன் மனசை பாதிக்கும், அப்புறம் உங்க அப்பாக்கும், எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும்.. அது மட்டுமில்லை அதியன் அவர் தாத்தாவை ஒதுக்கி என்னைய ஏத்துப்பாருனு எல்லாம் நான் காதலிக்கவில்லை, எனக்கு முழுசா தெரியும் அதியனுக்கு அந்த குடும்பம், தாத்தா தான் முக்கியமுனு, அதனால் எனக்கு வருத்தமில்லை.. எல்லாமே தெரிஞ்சு தான் காதலிச்சேன்..” என்றாள் தெளிவாக.

“சரி! இப்படி தனிதனியா தான் வாழப் போறீங்களா…?” என்றார் பீவி.

“யாரு சொன்னா நானும் அதியனும் தனி தனியா வாழுறோமுனு, எங்களுக்கு தெரியும் எங்க மனசில் எப்படி வாழ்ந்துட்டு இருக்கோமுனு.. ஒன்னா இருந்தா தான் சந்தோஷமான  வாழ்க்கைனு அர்த்தமில்லை… நாங்க ஹேப்பியா இருக்கோம்மா எங்க உலகத்தில்.” என்றாள் சிரித்தவாறு.

“அடியேய்! நீ நல்லா டயலாக் பேசி நடிப்பேனு எனக்கு தெரியும் அதுக்காக வாழ்க்கையிலும் நடிக்காத..?” என்றார் வரு.

“வரு!” என்று அதட்டினார் வகீம்.

“பின்ன என்னங்க…? அவ பேசுறதை கேட்டீங்கள..”

“அவங்க தெளிவா இருக்காங்க. இதில் வீம்பு பிடிப்பது உன் அப்பா தான்.. என்ன செய்ய சொல்ற…?” என்றார் சற்றுக் கோபமாக.

“ஆமாங்க! ஆமா! என் அப்பா தான். என் வாழ்க்கையை ஏத்துக்கல, ஏன் என்னையே ஏத்துக்கலை, இப்ப என் பிள்ளை வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்கார்.. ஒன்னு நான் சாகனும் இல்ல அவர் சாகனும். அவர் சாகுறதை விட நான் சாகுறது நல்லது” என்று தன் தலையில் அடித்து அழுதார்.

மற்றவர்கள் அவரை சமாதானம் செய்தனர்.

“அத்தை! நீங்க இப்படி அழுதா எல்லாம் என் மனசு மாறாது, இது அதியனின் முடிவு. அது தான் என்னோட முடிவும். நீங்க அன்னைக்கு மாமா முடிவைக் கேட்டு தானே வெளியில் போனீங்க கல்யாணம் செய்ய. அது சரினா நாங்க செய்றதும் சரி தான்..” என தன் அறையை நோக்கி நடந்தாள்.

வரு வகீமைப் பார்த்தார். “இந்த காலத்து பிள்ளைங்க வரு, அவங்க எடுக்குற முடிவு பக்குவமா தெரியுது. நம்ம பொறுமையா இருப்போம். கண்டிப்பா மாறும்…” என்று மனைவியை சமாதானம் செய்தார்.

***

அதியனுக்கு தான் இந்த வீட்டில் முன் உரிமை என்ற போராட்டம் ஏற்கனவே இருக்கிறது.

இதில் அதியன் இந்த வீட்டு வாரிசே இல்லைனு தெரிந்ததும், தேவி, மாலினிக்கு முற்றிலுமாக மாறியது குணம்.

தேவி”மாலினி! கடைசி வரை நம்ம அடிமையாக தான் வாழனும் போல, முன்னாடி ஆச்சும் அவன் இந்த வீட்டு வாரிசு சரினு விட்டுக் கொடுத்தோம்.
ஆனா இப்ப இவங்க பொண்ணோட வாரிசை இங்க அரசனாக்கப் பாக்குறாங்க, அது எப்படி முடியும்..?”

“ஆமா அக்கா, அதான் எனக்கு புரியலை.. இதை எல்லாம் கேட்டா நம்ம கெட்டப்புத்தினு முத்திரைக் குத்துறாங்க, நம்ம மாமியாரே போதும் அதுக்கு, அன்னைக்கு பேச்சோட பேச்சா நம்மளையும் போட்டு தள்ளுது, நம்ம கட்டிகிட்டதுங்க சரியில்லை..” என்றார் மாலினி.

“ம்ம்ம்! ஆனா நான் பயப்புட மாட்டேன் இதுக்கு எல்லாம், என் புள்ளை இருக்கும் போது.. அவ பிள்ளை எப்படி இங்க வருவான்..”

“ஏன் அக்கா! வருவோடா பொண்ணை பாரிக்கு கேட்டு தானே அவங்க வந்தது அதுக்கு நீங்க  ஒன்னுமே சொல்லலை…”
என்று நைஸாக கேட்டார் மாலினி.

“ம்ம்ம்! எனக்கு என்ன தெரியும்.. அது பாரியும், அவன் அப்பாவும் தான் முடிவுப் பண்ணனும். நான் சொல்ல என்ன இருக்கு…?” என்று மழுப்பினார், என்ன இருந்தாலும் வகீம் வசதியான இடமென்று.

“ஆனாலும் அக்கா, அதியன் சுக்ர திசையில் பிறந்திருப்பான் போல, இங்கயும் ராஜா, அங்க போனாலும் மகாராஜா தான்.. இல்ல…?”

“என்ன சொல்ற..?”

“ஆமா அக்கா, இங்க நம்ம மாமனாருக்கு செல்லப் பேரன். மூத்தப்பேரன்.. அங்க வருக்கு ஒரே ஆண் வாரிசு.. எல்லா இடத்திலும் அவனுக்கு தானே சொத்து, உரிமை, பங்கு எல்லாம்..”

“ம்உக்கும்! வரு வீட்டில் வேணா வாரிசு உரிமை கிடைக்கும். இந்த வீட்டில் கிடைக்காது.. என் பிள்ளை பாரி இருக்கும் போது..”

“உங்க பையனும் நல்ல அதிஷ்டசாலி தான்….” என்று சிலுப்பினாள்.

“பின்ன இங்கயும் வாரிசு.. அந்த பொண்ணு ஷர்தா தான் அங்க இப்ப பொறுப்பில் இருக்கா, ஒரு வேளை அதியன் அங்கு போனாலும் அந்த பொண்ணுக்கும் வரு சமமா தானே கொடுப்பா, அப்படி பாத்தா பாரி அந்த பொண்ணை கட்டினா நல்ல லாபம் தானே..?” என்று தன் மனதில் இருந்த பொறாமையை வெளிப்படையாக கொட்டினார் மாலினி.

தேவிக்கும் அது இப்ப தான் உணர்வுக்கு ஏறியது.

ஆனால் வெளிக்காட்டாமல்”ம்ம்ம்! அது எல்லாம் நடந்தா பாப்போம்.. நீ வேலையைப் பாரு..” என்று அதட்டினார்.

***
நவநீதம் அன்று வீட்டில் பரணியோடு கணக்குப் பார்க்க, அதியன் நேரம் கழித்து வீட்டிற்குள் நுழைந்தான்.

“என்ன அதியா இவ்வளவு லேட்..?”

“ப்ரண்ட்ஸை பாக்கப் போனேன் தாத்தா..”

“ம்ம்ம்! இங்க வா உட்காரு..” என்றழைத்தார்.

தன் மகன்களையும் அழைத்தார் முக்கியமாக பேச வேண்டுமென்று.

பாட்டி அமைதியாக வேடிக்கைப் பார்த்தார்.

“நான் அதியனுக்கு வரன் பாக்கலாமுனு இருக்கேன்..”

அதியன் தன் தாத்தாவைப் பார்த்தான்.

“அப்பா! அவங்க இன்னும் புருசன் பொண்டாட்டி தான் சட்டப்படி” என்றார் சோழர்.

“அது தெரியும் எனக்கு, விவாகரத்து ஆனதுமா போய் தேட முடியும். இன்னும் சில மாதங்கள் தானே இருக்கு, இப்பவே பாத்து வச்சா விவாகரத்து ஆகிய அடுத்த நாளே கல்யாணத்தை முடிச்சுடலா…”

“யாருப்பா பொண்ணு மஞ்சரியா…?” என்று கேட்டார் சேரர்.

“ச்சே! ச்சே! அந்த வெட்கம்கெட்ட குடும்பம் இல்லை, அதியனை வேணாமுனு பாரியை கேட்டானுங்க ஒரே குடும்பத்தில்.. நான் எடுத்த முடிவை மாற்றி… வேற இடம் தான் பாக்கனும்..” என்றார்.

பாட்டி மனதில்’அடுத்த ஆட்டமா…? இவன் என்ன சொல்லப் போறானு பாப்போம்..’ என அதியனைப் பார்த்தார்.

“அதியா நீ அமைதியா இருந்தா எப்படி பேசு…?” என்றார் சோழர்.

“ஆமா அண்ணா! அண்ணியை உன்னால மறக்க முடியுமா..?” என்ற பாரி ‘பேசு’ என கண்களை காட்டினான்.

நவநீதம் அதியனைப் பார்த்துக் கேட்டார்.

“அதியா! அதான் வேணானு அனுப்பிட்டீயே அப்புறம் என்ன..? நான் பாக்குறப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ”

“தாத்தா! நான் என் பொண்டாட்டி மஸ்துவை நானா வெளியில் அனுப்பவில்லை, உங்களுக்கு விருப்பமில்லைனு தான் வெளியில் அனுப்பினேன், அதுக்காக அவளை மறந்துட்டேனு அர்த்தம் இல்ல, நாங்க எங்க மனசளவில் ஒன்னா வாழ்ந்துட்டு இருக்கோம். நீங்க நானா….? மஸ்துவா…? கேட்டீங்க, அவ அந்த கேள்வியை கேக்காம போயிட்டா. அப்படிபட்டவளை நான் எப்படி மறப்பேன். நான் கடைசிவரை அவளின் நினைவோடு உங்க பேரனா வாழுறேன், ஆனா இன்னொரு பொண்ணை நினைக்க சொல்லி கட்டாயப்படுத்தாதீங்க.. நீங்களும், பாட்டியும் எனக்கு விவரம் தெரிஞ்சு பேசிகிட்டதில்லை ஆனா நீங்க வேற ஒரு பொண்ணை தேடியா போனீங்க, அப்படி தான் நாங்களும், வேற வேற வீடு, பேச்சே இல்லைனாலும் நாங்க புருசன், பொண்டாட்டி தான்.. நான் உங்க பேரன் தான்..” என்று கூறிவிட்டு தன் அறை நோக்கிச் சென்று விட்டான்.

பாட்டி முகத்தில் அத்தனை பூரிப்பு. அதியன் கிட்ட பாட்டி பேசுறதில்லை, ஸனாவை வெளியில் அனுப்பிட்டான் என்று.

“மயிலே! மயிலே! னு கொஞ்சி சொன்னா இறகுப் போடாது தான்.. ஏதோ ஆசைக்கு ஒன்னு ரெண்டை பிச்சுடலாம்.. அதுக்காக ஒட்டு மொத்த இறகுகளையும் பிச்சுப் போட நினைச்சா அது உயிரோடு இருக்காதுல.. அப்புறம் மயிலே! மயிலேனு கொஞ்ச வளர்த்த மயிலுக்கு எங்கப் போறது… இந்தா வந்துட்டுல மனசுல இருக்கறது…” என்று நீட்டி முழக்கியவர்.

“என் கிட்ட ஜெயிச்சுட்டதா நினைச்சா அது தப்பு மனுசா! இன்னுமே இருக்கு நீர் பாக்க வேண்டியது, இருக்கு, இந்த வீட்டு மக்க மனசு தெரியல…” என்று நேரடியாக நவநீதத்தை தாக்கிட்டு நடந்தார்.

Advertisement