Advertisement

வீட்டை விட்டு வெளியில் வந்த அதியன், வகீம் கையை உதறியவாறு நின்றான்.

அதை கண்ட ஸனா”அதியன்!” என்றாள்.

“நோ! ஐ கான்ட் மஸ்து, இது தான் என் வீடு, இங்க உள்ளவங்க தான் என் சொந்தம், வேற யாரும் எனக்கு வேணாம்.. நான் இங்கிருந்து எங்கும் போக மாட்டேன்” என அந்த வீட்டின் படியில் அமர்ந்தான்.

“அதியன்! நானும் அதை மறுக்கலை, வரு அத்தை, வகீம் மாமாவும் உன்னை இங்கிருந்து கூட்டிட்டுப் போகனுமுனு நினைக்கலை, உன் தாத்தா அவர் தான் மறுக்கிறார்.. இனி எப்படி நீ இங்க தங்க முடியும்..? யோச்சிப்பாரு..” என்று அவன் முன் மண்டியிட்டுக் கெஞ்சினாள்.

“எனக்கு நம்பிக்கை இருக்கு, தாத்த என்னை ஏத்துப்பார்.. அதுவரை இங்கயே இருப்பேன்” என்றான் அமைதியாக.

“அதியா! உன்னோட பாசம் எனக்கு புரியுது, என் பிள்ளை நீ தானு தெரிஞ்சும் என்னால உரிமையா உன் கிட்ட பேச முடியலை, அந்தளவு நம்ம தூரமா வாழ்ந்துட்டோம். இனிமேயாவது எனக்கு அந்த பாக்கியம் கொடுடா போதும்.. எங்க கூட வாடா.. பாசமுனா என்னனே தெரியாத என் அப்பா கிட்ட நீ ஏன் பிச்சை  எடுக்குற பாசத்தை. நாங்க தரோம் இந்தா உன் அப்பா, இவ உன் தங்கச்சி.. நாங்க இருக்கோம் அதியா.. நீயும், ஸனாவும் சந்தோஷமா எங்க கூட வாழலாம் வாடா” என்று அவன் காலடியில் அமர்ந்து கெஞ்சி அழுதார் வரலெட்சுமி.

வீட்டில் இருந்த அனைவருமே வெளியில் வந்தனர்.

அதியன் செல்லாமல் படியில் அமர்ந்திருந்ததும், பாட்டி”அதியா! எப்பா என் கண்ணுல, நீ உன் அம்மா கூட போப்பா” என்றார் அவன் அருகில் அமர்ந்து.

மல்லிகா மனம் சந்தோஷமானது, அதியன் போகாமல் அமர்ந்ததும்.. ஆனால் சோழா மல்லிகாவை கண்களால் அடக்கிவிட்டு, “அதியா! நீயும் ஸனாவும் சந்தோஷமாக இருக்கனுமா போடா, உன் அம்மா, அப்பா கூட” என்றார்.

அதுவரை கீழே குனிந்திருந்தவன் நிமிர்ந்து”அப்ப நீங்க ரெண்டுப் பேரும் யாரு எனக்கு…?”

“யாரு என்ன சொன்னாலும் எங்களுக்கு மகனா நீ தான்டா, ஆனா இப்ப நாங்க விட்டுக் கொடுப்பது தான் நியாயம்.. நீ போ” என்றார் சோழா.

மற்றவர்கள் எல்லாம் அமைதியாய் இருந்தனர்..

“பாட்டி! மரத்தை வேரோடு புடுங்கி வேற இடத்தில் புதைச்சா பிழைக்காது, எனக்கு இந்த வீடு தான் வேர்…” என்றான் அதியன்.

“அதியா! நாங்களும் இந்த வீட்டுப் பொண்ணுங்க தான், நாங்க எல்லாம் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி பாசத்தை விட்டுக் கொடுத்து தானே கல்யாணம் பண்ணிப் போறோம். அப்படி நினைச்சிக்கோடா…” என்றார் அவனின் சின்ன அத்தை, அதாவது சித்தி ராஜி.

“அத்தை! நான் இதுவரை அப்பா, அம்மானு நினைச்சவங்களை அவங்க, உன் பெத்தவங்க இல்லைனு சொன்னா எப்படி போக முடியும். நீங்க அப்பா, அம்மானு உறவை விட்டுப் போகலையே.. எப்ப வந்தாலும் இவங்க தானே உங்க அப்பா, அம்மா.. ஆனா எனக்கு…? நான் போயிட்டா எல்லாமே மாறிடும்.. நான் போக மாட்டேன்” என்ற அதியன் பாரி, தன் தங்கை சங்கவி, சாரு, சைந்து அனைவரையும் பார்த்தான்.

“உங்களுக்கும் நான் வேணாமுல…?” என்று கேட்டான் அழுத்தமான வார்த்தைகளாக.

அவர்கள் ஓடி வந்து அவனை கட்டி அணைத்தனர்.

“நீங்க போறதுனா நாங்களும் வரோம் அண்ணா… கண்டிப்பா” என்று அவனோடு நின்றனர் அந்த உடன்பிறவாத பிறப்புகள்.

“பாரி!” என்றழைத்தார் தேவி.

“ஆமாம்மா! அண்ணன் இந்த வீட்டிற்குள் வரலைனா நாங்களும் வரலை, தாத்தா வெளியில் வரட்டும் பதில் சொல்லட்டும்.” என்றான் பாரி.

தேவிக்கு கோபம் வந்தது.

“பாரி! அவன் இந்த வீட்டுப் பிள்ளை இல்லை, அவங்க பெத்தவங்க வந்தாங்க கூப்புட்டுப் போறாங்க, ஆனா நீ இந்த வீட்டுப் பிள்ளைடா..” என்றார்.

“அம்மா!” என்று பாரி முறைக்க.. சேரர்
தேவியை ஒரு பார்வைப் பார்த்தார்.

“இனி நீ ஒரு வார்த்தைப் பேசக் கூடாது, மனிதாபிமானத்தோடு என் பிள்ளை நடந்துட்டு இருக்கான்..” என்றார் மனைவியிடம் சேரர்.

“ஏய்! அவன் ஆம்பள பையன். நீங்க ஏன்டி நிக்குறீங்க…?” என்று அதட்டினார் மாலினி தன் மகள்களை.

“உங்களுக்கு பையன் இல்லைல, அதான் அந்த குறை வந்துடக் கூடாதுனு அப்பாவுக்காக நிக்குறோம்” என்றாள் சாரு.

பாண்டியன்”இது உனக்கு தேவையா…? அவங்களுக்கு உள்ள பாசம் அது. உனக்கு புரியலைனா ஒதுங்கி இரு” என்றார்.

இப்படியே போக, அனைவரும் வாசலிலே நின்று போராடினர் நீண்ட நேரம்.

அந்த நேரத்தில் தான் நவநீதம் கதவை திறந்துக் கொண்டு வெளியில் வந்தது.

வீடே அமைதியாக இருப்பது அவருக்கு தெரியும்.

அவர் அறைக்கு வெளியில் தான் அனைவரும் போராடிக் கொண்டிருந்தனர் அதியனோடு.

அனைத்தையும் காதில் வாங்கியவருக்கு, மனதில் ஒரு தெம்பு வந்தது.

தன் மனைவி தன்னை பழிவாங்க, அதியனை தன்னோட பாசத்தில் சிக்க வைத்தது அவருக்கு பெரும் பாதிப்பை மனதில் உண்டாக்கியது.

அவர் இந்த மாதிரி ஒரு நாள் தனக்கு வருமென்று எதிர்ப்பார்த்ததில்லை.

அது மட்டுமில்லை, நவநீதம் அதியனை இந்த வீட்டு வாரிசு, மூத்த  பேரப்பிள்ளை என்பதை தாண்டி அதீத பாசமாக வளர்த்தார்..

கணவனுக்கு  மனைவி தான் ஆறுதல் அனைத்து நேரங்களிலும், அந்த ஆறுதல் நவநீதத்திற்கு தன் மனைவியிடம் இருந்து நின்றபின், அதியன் தான் அவரின் எல்லாமாக மாறினான்.

அப்படிபட்டவன் ஸனாவை திருமணம் செய்தும், வெளியில் அனுப்பாமல் தன் கண் முன்னே வைத்துக் கொண்டார்.

இப்போது தான் காரியம் செய்த மகளின் பிள்ளையாக இருப்பவனை எப்படி ஏற்பது என்ற மனக்குழப்பம் வந்தது அவருக்கு. ஆனால் அவனின் பாசம் அவரோடு கலந்தது அதை பிரிக்க முடியாது.

அதியனை விட்டுப் பிரிய நவநீதத்தால் முடியாது, ஆனால் வீண் பிடிவாதம் அதான் வரட்டுப் பிடிவாதம் கூடவே பிறந்தது அதுவும் மாறாது. வெளியில் வந்தார்..

***

நவநீதம் வெளியில் வர, முதலில் பார்த்தது பரணி தான்.

“ஐயா! வாங்க ஐயா, தம்பி போக வேண்டாமுனு சொல்லுங்க…” என்றார்.

அதியன் எழுந்து நின்று தன் தாத்தாவைப் பார்த்தான்.

“அதியா!” என்று கை நீட்டினார்.

ஓடிப்போய் அவரிடம் தஞ்சம் புகுந்தான்.

அவனை ஆறுதல் செய்தவர்.

தன்னிடம் இருந்து விலக்கி, “அதியா! நீ என் கிட்ட வளர்ந்தவன், யாரு ரத்தமா வேணா இருந்துட்டு போ, ஆனா இந்த வீட்டில் இருக்கனுமுனா, உன் அம்மானு வந்தவ, அவ குடும்பம், உன் பொண்டாட்டினு சொல்லிட்டு இருக்க இந்த நடிகை எல்லாரையும் விட்டு வா, இதே வீட்டில் நீ என் பழைய அதியனா, அது எனக்கு போதும்” என்றார்.

அதிர்ச்சி ஆகாத அதியனின் பார்வை ஸனாவைப் பார்த்தது. அவனே அதை சொல்லி தானே சற்று முன் வாதாடினான் நீங்க சொன்னால் ஸனாவையே விட்டுப்பிரியுறேனு.

அவனின் பார்வையை ஏற்ற ஸனா, ஒரு சிரிப்பை மெல்ல சிரித்தாள்.

“அப்பா! நீங்க தப்பு பண்றீங்க…? அவன் வாழ்க்கையை அழிக்காதீங்க…? அவங்க ரெண்டுப்பேரும் மனதார விரும்பி வாழுறாங்க பிரிக்காதீங்க…” என்றார் வரு.

“இங்க பாருங்க உங்க எண்ணம் நடக்காது.. அதியா நீ போ வெளியில், போய் ஸனாவோடு சந்தோஷமா இரு” என்றார் பாட்டி.

ஆனால் ஸனா நவநீதம் முன் சென்றவள், “உங்க ஆசை நிறைவேறப் போகுது மிஸ்டர் நவநீதம்..
இது உங்களுக்காக இல்லை அதியனுக்காக என்னோட அதியனுக்காக மட்டும் தான்..” என்று அவன் அருகில் சென்றாள்.

சிரித்தவள்”நான் உங்களை ரொம்ப லவ் பண்றேன் அதியா, அதே மாதிரி நீங்களும் என் மேல உயிரே வச்சு இருக்கீங்க, அது எனக்கும் தெரியும்.. ஒரே வீட்டில், ஒரே அறையில் தங்கி இருந்தா தான் நம்ம கணவன், மனைவினு எல்லாரும் நினைக்கலாம். அப்படி நினைச்சி தான் இந்த  நவநீதமும் ஏததோ செஞ்சுப் பாத்து இப்ப எமஷோனலா அட்டாக் பண்றார் நேரம் பார்த்து.. இதுக்கு எல்லாம் நம்ம காதல் சாகாது.. நாமளும் மனம் மாற மாட்டோம்.. நீங்க ஹேப்பியா இருங்க.. இந்த மஸ்து மனசில் நீங்க இருப்பீங்க, அதே மாதிரி இந்த அதியன் மனசில் நான் இருப்பேன்.” என்று இருவரின் கைகளையும் மாற்றி மார்பில் வைத்தாள்.

“இந்த வீடு, இந்த சொந்தம் உங்களுக்கு முக்கியமுனு தெரிஞ்சு தான் நான் உங்களை காதலித்தேன்.. அப்புறம் எப்படி இவரு மாதிரி நானா..? இந்த குடும்பமா..? னு கேட்பேன். நீங்க இங்கயே இருங்க நான் போறேன்.” என்றாள் ஸனா.

“ஸமா! என்ன பேசுற…?” என்றார் பீவி.

“அம்மா! அதியனுக்காக தான், அவரு கஷ்டப்பட்டது போதும்.. இன்னைக்கு அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியே ஜென்மத்துக்கும் போதும். நான் உன் பொண்ணு இல்லைனு சொன்னா உனக்கும், எனக்கும் எப்படி இருக்கும்..? இப்ப போய் நானா..? தாத்தாவா..? னு கேட்டு அவரை  கொல்ல நான் விரும்பலை..” என்று நவநீதத்தை பார்த்தவள்.

“பிடிவாதம் இல்லாத மனதோடு அதியன் மேல் உங்க பாசம் உண்மையா நீங்க உணரும் போது அதியனின் மனசு புரியும்.. என்னைய மாதிரி.. நான் கிளம்புறேன்” என்றவள்.

“அதியா!” என்று அவனை கட்டிப் பிடித்தாள்.

அதியன் செய்வதறியாது நின்றான். அவளை போகாதனு சொல்ல முடியாமல் சிலையாக நிற்க.

அவன் தோளில் சாய்ந்தவள், “ப்ளீஸ் அதியா!” என்றாள்.

கண்களை இறுக மூடித்திறந்தவன், அவளை இறுக அணைத்தான்.

அவனின் முகம் முழுவதும் முத்தத்தை வழங்கிய ஸனா, “தேங்க்ஸ்டா!” என்று அவனை விலகி சென்றாள்.

வேகமாக நடந்தாள்..

“அதியா! அவளை கூப்புடு.. இல்லனா நீ கூடப் போடா” என்றார் மல்லிகா.

“மாமா! அவன் சந்தோஷத்தை கெடுத்து நீங்க கூட வச்சுக்கிட்டாலும் அது நிம்மதியான வாழ்க்கையா இருக்காது. அவன் இங்க இருக்கனுமுனு ஆசைப்பட்டேன். ஆனா இப்படி ஸனாவை பிரிஞ்சு இல்லை..” என்று அவரை கேள்வியாய் மன்றாடினார் மல்லிகா.

“அப்பா!” என்ற வருவிடம்.. “அப்படி கூப்புடாத.. அன்னைக்கு நீ உன்னோட ஆசைப்பட்ட சந்தோஷம் தான் முக்கியமுனு போன.. ஆனா உன் இரத்தம், என்னோட வளர்ப்பு என் பேரன் அதியன் நவநீத ராகவன்.. எனக்காக அவன் ஆசைப்பட்டதை விட்டுக் கொடுத்துட்டு நிக்குறான்..” என்று பெருமையாக தன்னோடு அவனை அணைத்தவர், அதியனை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

“அதியா! நீ தப்பு பண்ற…?” என்றார் பாட்டி.

“நீ பழிவாங்க நினைச்சது உனக்கே திரும்பிட்டு அன்னம். இவன் என் பேரன்.. என் வளர்ப்பு, இனி நீ ஒரு வார்த்தைப் பேசக் கூடாது.. என் பேரன் பழைய மாதிரி இந்த வீட்டில் இருப்பான்.. மல்லிகா போ போய் ஆராத்தி எடுத்துட்டு வா” என்றார்.

அவர் நகராமல் நிற்க..

“மல்லிகா! அதியன் உன் பையன்” என்று சற்று வேகமாக அதட்ட.

மல்லிகாவிற்கு அந்த வாக்கியத்தில் மகிழ்ச்சி மேலிட வேகமாய் சென்று ஆராத்தி தட்டை தூக்கிட்டு வந்து சுற்றி திருஷ்டிக் கழித்தார்.

பாரி, தங்கைகள் அதியனோடு சேர்ந்து மகிழ்ச்சியாய் சுற்றி வளைத்தனர்.

நவநீதத்திற்கு பழைய அதியன் கிடைத்த நிம்மதி.. “அதியா! போய் குளிச்சுட்டு வா, கோயிலுக்கு போகலாம்.. எல்லாரும் கிளம்புங்க” என்று தன் அறை நோக்கி சென்றார்.

அதியனும் தன் அறையை நோக்கி சென்றான்.

வகீம் வரலெட்சுமியை அழைச்சுட்டு கிளம்பினார்..

பீவி மடியில் படுத்தவாறு ஸனா கண்களை மூடி இருந்தாள்.. கார் வேகமாக சென்றது..

ஷர்தா தன் தாயை சமாதானம் செய்ய, வகீம் காரை சீரான வேகத்தில் செலுத்தினார்..

அதியனவள் அடுத்து…

Advertisement