Advertisement

“நீங்க எல்லாம் வந்ததே லேட், பேசிக்கிட்டே இருக்காம சீக்கிரம் கிளப்பி விடுங்கம்மா.”என்றார் பரமேஸ்வரி.

“ஓகே ஆன்டி! அதான் பியூட்டிசியன் அக்கா முடிச்சு இதோ ரெடியாகிட்டாளே” என்றனர் தோழிகள்.

பரமு மற்ற வேலைகளை கவனிக்க வெளியில் சென்று விட்டார்.

“ஹேய்! என்னடி திடீருனு பொண்ணு பார்க்க வராங்கனு சொல்லிட்ட, நாங்களும் அதிர்ச்சியாகி வந்தால் நீ கேஷ்வலாக புடவைக் கட்டிக் கிளம்பிட்டு இருக்க”என்றாள் ஒருத்தி.

“ம்ம்ம்! பொண்ணு பார்க்க வந்தால் புடவை தானே கட்டனும், அது தானே நம்ம கல்ச்சர்….”என்றாள் மஞ்சரி.

“அந்த கல்ச்சர் எல்லாம் இருக்கட்டும், உன் முகத்தில் சோகத்திற்கான அறிகுறி கொஞ்சம் கூட தெரியலையே.”

“எதுக்குடி சோகம்…?”

“எதுக்கா…?”என்ற தோழி, பியூட்டிசியன் பெண்ணைப் பார்த்தாள்.

மஞ்சரி”நீ வெளியில் போ, நான் கூப்புடும் போது வரலாம்”என்றாள் அலட்சியமாக.

“ஓகே மேடம்!”என்றவள் வெளியில் சென்றாள்.

“ஹேய் மஞ்சரி! சரவணனோட லவ், அவனுக்கு தெரியுமா…?”

“ம்ம்ம்! தெரியும், நேற்றோடு எல்லாத்தையும் முடிச்சுட்டேன்…”

“புரியல, அப்பிடினா..?”என்று தோழிகள் ஒருவர் ஒருவரைப் பார்த்தனர்.

“அப்பிடினா அவனுக்கு ஏத்த மாதிரி ஒரு மல்லிகா, ரோஜா, செம்பருத்தினு ஒருத்தி கிடைப்பானு..”

“மஞ்சு! ஹி இஸ் அசெப்ட்டுடா..?”

“எஸ்டி!”

“எப்பிடி மஞ்சு, வெரி சின்சியரா இருந்தீங்க ரெண்டுப்பேரும், மகாபலிப்புரம், பாண்டிச்சேரி எல்லாம் கூடப் போனீங்களே…?”

“ஹேய் கேர்ள்ஸ், என் தகுதி என்ன…? அவன் தகுதி என்ன…?”

“அப்புறம் ஏன்டி லவ் பண்ண…?”

“யாரு லவ் பண்ணா..? நான் ஜெஸ்ட் என் செல்ப் பர்போர்ஸ்க்காக யூஸ் பண்ணிக்கிட்டேன். லைக் ஒரு டிரைவராக, சேப்டி ஹார்டாக.”

“ஓ!”

“எஸ் டியர்ஸ்..”என்றவள் எழுந்து கண்ணாடி முன் நின்று தன் அழகை சுற்றிப் பார்த்தாள்.

“ஸீ! ஹவ் ஐ ஆம் லுக்கிங் வெரி பிரிட்டி..? கமிட்டாக இருந்ததால்  காலேஜில் எல்லாம் தள்ளி நின்னாங்க, அதான் ஒரு ஏழை வீட்டுப் பையனா பார்த்து லவ்னு கூடவே சுத்த விட்டேன். அவனும் நாக்கைத் தொங்கப் போட்டு சுத்தினான். என்ன கர்மம் அவனுக்கு அப்பப்ப ஒரு சைவ முத்தம் கொடுத்து ஏமாத்தினேன். அதுக்கே அவன் மயங்கிட்டான், லூசப்பயல்.”

“ம்ம்ம்! ஆனா அவன் ரொம்ப டீப்பா இருந்தானேடி, நாங்க கூட நீ அவனை சூஸ் பண்ணி இருக்கியேனு யோசிச்சோம். பட் காதலுக்கு எந்த தகுதியும் இல்லப்போலனு நினைச்சி கேட்டுக்கல…”

“அவன் டீப்பா தான் இருந்தான், எங்க அப்பா ஒத்துக்கல நானும் கெஞ்சிப் பார்த்துட்டேன். உன்னைய பத்தி விசாரிச்சார் நான் சொல்லல ஏனா உன் ஃபேமிலிக்கு எதும் ஆபத்து செஞ்சுடுவாருனு பயமா இருக்கு, நான் எப்பிடியாவது கன்வினிஸ் பண்ணலாமுனு நினைச்சேன் ஆனால் அது முடியல, இப்பிடி நிறைய கதை விட்டேன் கண்ணீரை வரவச்சு, அவனும் நம்பிட்டான்…”என்று சிரித்தாள்.

“எப்பிடி மஞ்சரி, அவன் இருந்த நிலைக்கு நான் கூட உன்னைய அழைச்சுட்டு ஓடிடுவானு நினைச்சேன்”

“ச்சே! அதுக்கு நான் போகனுமே, அவன் கூப்புட்டான் தான், அப்பிடியே காதல் படக் கதையை நினைவுப்படுத்தி சொல்லவும் பயல் கொஞ்சம் ஆட்டம் தான் கண்டுட்டான். பத்தாதுக்கு அவன் குடும்பத்துக்கு எதும் ஆகிடுமுனு பயந்து பிரியா விடைக் கொடுத்தான் நேற்று.”

“இருந்தாலும் பாவம் மஞ்சரி அவன், தேவையில்லாமல் அவனோட மனசைக் கெடுத்து நம்ப வச்சு ஏமாத்திட்ட.” என்றாள் ஒரு தோழி.

“ஏன் உனக்கு ரொம்ப வலிக்குது..? வேணுனா நீ போய் ஆறுதல் சொல்லி அவன் கூட காதலில் மூழ்கிடு. அவனும் சமாதானம் ஆகிடுவான்”என்று சிரித்தாள்.

“உனக்கு இது தேவையா..? பேசாம இருடி”என்று மற்றொரு தோழி அமைதிப்படுத்தினாள் கேள்விக் கேட்டவளை.

“அது சரி, இப்ப உன்னைய பொண்ணுப் பாக்க வர மாப்பிள்ளை யாரு…?”

“மிஸ்டர் அதியன் நவநீத ராகவன்.. நவநீ குரூப்ஸ் ஓனர் வீட்டுப் பேரன் தான்டி…”என்றாள் கெத்தாக.

“ஓ! அவரா, செம ஹேண்ட்செம்டி. ரீசன்டா ஒரு அவார்ட் பங்சனுக்கு வந்து அவார்ட் கொடுத்தாரே, அது கூட சோசியல் மீடியாவில் டிரெண்ட் ஆனுச்சே…”

“எஸ்! எஸ்! அவரு தான்…”என்றாள் புன்னகையோடு.

“யாருடி நான் பார்க்கல..”என்ற தோழியிடம், மற்றொருத்தி உடனே அந்த போட்டோவை சர்ச் செய்துக் காட்டினாள்.

“வாவ்! செம ஹேண்ட்செம், ஓ! ஆக்டிரிஸ் ஸனாக்கு தான் அவார்ட் கொடுத்தார, இவங்க போட்டோ செம க்யூட்டா இருக்கு”

“போதும்! ரொம்ப எல்லாரும் வழிஞ்சு விழாதீங்க, அவரு என்னைய பொண்ணுப் பார்க்க வரவரு. இது ஜஸ்ட் அவார்ட் பங்கனுக்கு சீப் ஹெஸ்டா போய் இருப்பார் போல, அதை பப்ளிசிட்டி பண்ணிப் போட்டு விட்டானுங்க இந்த மீமிக்ஸ்…”என்றாள் மஞ்சரி.

“ம்ம்ம்! ஆனா மஞ்சு, அவரோட தாத்தா பத்தி கேள்விப் பட்டிருக்கோம். செம டெரர் ஸ்ரிட்டாம். என் அப்பாக்கு பிஸ்னஸ் ரீதியா தெரியும்..”

“ஆமா! என் அப்பாவும் சொன்னாரு தான். செம ரிச் பேமிலி அப்பிடி ஸ்ட்ரிட்டா இருந்தால் தானே மேனெஜ் பண்ண முடியும்.”

“உனக்கு அந்த வீடு செட் ஆகுமா..? அவங்க எல்லாம் ஜாயின் பேமிலி. நீ ஒரே பொண்ணு..”

“ஒய் நாட், அவங்க என்ன எங்க பெட் ரூமை எட்டிப் பார்க்க போறாங்களா…? அது மட்டுமில்லை எனக்கு அவங்க எல்லாரையும் எப்பிடி சமாளிக்கனுமுனு தெரியும்.”

“ஏய்! அவள் யாரு..? மஞ்சரி, ஆளுக்கு ஏத்த மாதிரி ஆக்ட் பண்ணி காரியத்தை சாதிச்சுடுவா. இந்த ஸனா எல்லாம் என்ன நடிகை. இவ பக்கத்தில் நிக்க முடியுமா…?  அழகில், அறிவில். நவநீதம் குடும்பத்தையே தன் கண்ட்ரோலில் வச்சுடுவா…”என்றாள் ஒருத்தி.

“அப்சொல்யுட்டிலி கரெக்ட் மை டியர் ப்ரண்டு, அங்க யாரு வேணாக இருக்கட்டும், அதியன் தான் மூத்தப் பேரன் அப்ப எல்லா பொறுப்பும் உரிமையும் எனக்கு தான். அதை எப்பிடி வாங்கனுமுனு தெரியும். அதியன் தாத்தாவை எப்பிடி சமாளிக்கனுமுனு எனக்கு தெரியும்”என்று சிரித்தாள்.

நடிகை தானே என அலட்சியம் செய்யப்படும் ஸனா மாதிரிப் பெண்கள் தொழிலுக்காக நிழல் வாழ்க்கையில் நடிக்கின்றனர்.

ஆனால் மஞ்சரி மாதிரி பெண்கள் எதற்காகவும் தான் நினைத்தது நடக்க வேண்டும் என நிஜ வாழ்க்கையில் நடிக்கின்றனர்.

இங்கு யார் நடிகை..?

***

“வாங்க! வாங்க! எல்லாரும் வாங்க..”என்று பரந்தராமன் அனைவரையும் வரவேற்றார் மனைவி பரமுவோடு.

நவநீத குடும்பமும் உள்ளே நுழைந்தது பாட்டியைத் தவிர.

அன்னம் பாட்டி வரவில்லை. வரவும் விரும்பவில்லை. ஆனால் அதியனை மட்டும் ஆசிர்வதித்து அனுப்பினார்.

அவரை யாரும் அழைக்காமல் இல்லை, நவநீதம் தவிர மற்றவர்கள் அழைக்க அவர் மறுத்துவிட்டார்.

அதியனுடன் பாரி, மாதவன், தீரன், ரஞ்சித் இளைஞர்களாக வந்திருந்தனர்.

அச்சு  ஃபோனில் மட்டுமே தொடர்பில் இருந்தான்.

மாதவன் மற்றும் தீரனை, நவநீதம் தான் அழைத்திருந்தார் மாப்பிள்ளைத் துணை என்று.

அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.

நவநீதமும், பரமாவும் பேச ஆரம்பித்தனர்..

“ஐயா! சேரா நண்பனாக இருந்தாலும் என் பெண்ணைப் பற்றி நான் சொல்லவில்லை, ஆனா நீங்களே கேட்டு என் பெண்ணை உங்க பேரனுக்கு முடிக்க வருவீங்கனு நான் யோசிக்கலை. ரொம்ப நன்றிய்யா. உங்க கூட சம்பந்தம் செய்ய பலப்பேர் க்யூவில் நிற்க எனக்கு அந்த வாய்ப்புக் கிடைச்சு இருக்கு.”என்றார் பரமா.

“ஹஹஹ! எல்லாம் ஜாதகமும் மற்றவையும் பொருந்தி வந்ததால் தான் பரமா”என்றார் நவநீதம்.

“என்னடா இவர் ஏதோ குலுக்கலில் கார் விழுந்த மாதிரி, நீ கிடைச்சு இருக்கனு சொல்லிட்டு இருக்கார். கடைசியில் உன் நிலை இப்பிடி லாட்டரி டிக்கெட் ரேஞ்சில் வந்துட்டே நண்பா”என்றான் தீரன்.

“ம்ம்ம்! இந்த ஜோக்கை தாத்தா கிட்ட சொன்னால், நீ என் கல்யாணத்தை அச்சு மாதிரி போனில் தான் பார்க்கனும் ஓகேவா.”என்றான் அதியன் நக்கலாக.

“வேண்டாம்! வேண்டாம்! நீயே சிரிச்சுடு அவரு சிரிக்குற அளவுக்கு இது வொர்த்தான ஜோக் இல்லை”என்று சமாளித்தான் தீரன்.

மாதவன் நண்பனை முறைத்தான்.

“என்ன அண்ணா, அண்ணியை காட்ட சொன்னால் இதுங்க வரலாற்றை பேசியே கொன்னுடுங்கப் போல. பொண்ணு பார்க்க வந்த இடத்தில் பேச வேண்டிய கதையா இது”என்று நொந்தான் பாரி.

“அடேய் பாரி தம்பி! உன் தாத்தா பொண்ணு, மாப்பிள்ளை சம்பந்தமாக எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டார். இப்ப சும்மா டைம் பாஸ் பண்றார். பொண்ணு வந்ததும் இலைப் போடுவாங்க சாப்பிட்டு கிளம்ப வேண்டியது தான். எப்பிடியும் உன் அண்ணண் தாலிக் கட்டிடுவான். இப்பிடி வந்த உடனே பொண்ணு வந்தால் உடனே  கிளம்புற ஃபீல் வருமுல அதான் தே ஆர் சேட்டிங் அபௌவுட் சோசியலிசிம்…” என்றான் மாதவன்.

அத்தை பையனான ரஞ்சித்”பலியாடு ரெடியாகுங்க”என்று அதியனை கிண்டல் செய்தான்.

தேவிக்கோ பொறாமை பொங்கியது,
“ஏன் மாலினி! இந்த பொண்ணு அப்பா  என் வீட்டுக்காரர் கூட பள்ளியில் படிச்சவரு, நானுமே பொண்ண பார்த்தில்லை, ஆனா பாரு யாருக்கு கொடுத்து வச்சு இருக்குனு. என் பையன் செகண்ட்ல”என்றார்.

“ம்ம்ம்! எனக்கு அதுவுமே இல்லை அக்கா, ஏதோ ஓடுது…”என்று சலித்தாள் மாலினி.

மல்லி மனதில் தனக்கு வரப்போகின்ற மருமகளை ஒரு தடவை போட்டோவில் கூட காட்டவில்லை என்ற கோபம்.

ராகவி, பார்கவியும் தங்கள் கணவர்களோடு வந்திருந்தனர்.

அது நவநீதத்தின் அழைப்பு.

ராகவி கணவர் தமிழின்பன், பார்கவி கணவன் சரத்பாபு.

ராகவிக்கு ஒரு பையன் கிருஷ்ணா..
பார்கவிக்கு ஒரு மகள் கனிகா..

சங்கவி, சைந்தவி, சாரு, அத்தை பெண் லாவண்யா,  தங்கள் அக்காகளோடு மெதுவாக பேசிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

சரத் மற்றும் தமிழ் பாவப்பட்ட மாப்பிள்ளைகளாக அமர்ந்திருந்தனர் தங்களுக்குள் பேசிக்கொண்டு.

நவநீதத்தின் கடைசிப் பெண் ராஜி அண்ணிகளோடு அமர, அவ கணவர் லோகு சேரா கூட அமர்ந்திருந்தார்.

***

ஒரு வழியாக மஞ்சரி வந்தாள் தோழிகளின் துணையோடு.

அவளின் அழகு அனைவரையும் ஈர்த்தது.

நவநீதத்தின் செலக்சன் தப்பாது என்பது போல் அனைவர் முகத்திலும் மலர்ச்சியை பார்த்த நவநீதம் பெருமிதம் கொண்டார்.

அதியன் முகத்தைப் பார்த்தார் தாத்தா.

அவன் மற்றவர்களைப் போல் முகத்தில் உணர்வை காட்டவில்லை.

இருப்பினும் முகம் சுளிக்கவில்லை என்பதால் அவன் மனமும் சம்மதம் என முடிவெடுத்தார்.

“டேய்! உன் தாத்தாவை சும்மா சொல்லக் கூடாது, நீ நம்பினதுக்கு சூப்பர் செலக்சன்டா”என்றான் தீரன்.

பெண்கள் அருகில் வந்த மஞ்சரி, பரமு சொல்ல கீழே விழுந்து வணங்கினாள் பொதுவாக.

“தேவி எழுந்துப் போய் பொண்ணுக்கு பொட்டு வை”என்றார் நவநீதம்.

மல்லி பொருமிக் கொண்டாலும், மஞ்சரியின் அழகில் சாந்தமானார்.

தேவி எழுந்து மஞ்சரிக்கு பொட்டு வைத்து, தாங்கள் வாங்கி வந்த பூவை வைத்து விட்டார்.

பிறகு வரிசையாக மல்லி, மாலினி என சென்றனர்.

ராஜியும் சென்று பொட்டு வைத்து வந்தார்.

அடுத்து ராகவி, பார்கவி சென்றனர்.

மஞ்சரி அனைவருக்கும் சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்தாள்.

அவளிடம் பேச ஆசைப்பட்டனர் இளம் பெண்கள்.

ஆனால் நவநீதத்தின் அனுமதிக்காக அமர்ந்திருக்கவும். அவரோ அதியனை அழைத்தார்.

எழுந்து சென்றவனிடம் “பரமாவோட பொண்ணு தான் மஞ்சரி, மஞ்சரி இப்ப  தான் படிப்பை முடிச்சு இருக்காள். படிச்சது பேஷன் டிசைனிங் தான். நீ போய் தனியா பேசிட்டு வா” என்றவர், “நாங்க நிச்சயத் தேதியைக் குறிச்சு வைக்குறோம்” என்பதை அழுத்திச் சொன்னார்.

அதில் ‘இது தான் பெண், சும்மா ஃபார்மால்டிக்ஸ்க்கு பேசிட்டு வா’ என்ற அர்த்தம் இருந்தது.

தலையை அசைத்தவாறு விலகி நடந்தான்.

மஞ்சரியிடம் பரமா அதியனை அழைத்துக் கொண்டுப் போக சொல்ல, மஞ்சரி நடந்தாள் பால்கனிக்கு.

பின்னால் சென்றான் அதியன்.

***

“ஹாய்!”

“ஹாய்!”

“நான் மஞ்சரி, பேஷன் டிசைனிங்..”

“ம்ம்ம்! தாத்தா இப்ப தான் சொன்னாரே..”

“யு லுக் வெரி ஹேண்ட்சம் அதியா…” என்றாள் சட்டென்று.

அவன் பதிலிற்கு தன்னை சொல்வான் என எதிர்ப்பார்த்தவளிடம் அவனோ “தேங்க்ஸ்”என்றான்.

“என்னைய காம்பிலிமென்ட் செய்ய மாட்டீங்களா…?”என்றாள் வெட்கத்தை விட்டு.

அவளே  கேட்கும் போது என்ன செய்வது
“யு ஆல்சோ லுக் குட்”என்றான் பொதுவாக.

“தேங்க்ஸ்..”என்றவள், “தென்! உங்க பேமிலி பெரியது போல. ஐ லைக் தட். நான் ஒரே பொண்ணு….”என்று அவ பேச ஆரம்பித்தாள்.

அதியன் மனதில் மஞ்சரியின் பேச்சு, மேனரிசம் எல்லாமே ஏதோ போலியாக தெரிந்தது..

அவள் பேசுவது ஏதோ நடிப்புப் போல் தோன்றியது, அவனை அட்ராக்ட் செய்வதற்கு பேசுகிறாள் என்பது புரியாமல் இல்லை அவன் மனதிற்குள்.

அவள் பேசிக் கொண்டிருக்க, அவனோட சிந்தனையில் நடிப்பு என்றதும் ஸனா வந்தாள்.

அவள் ஒரு நடிகை ஆனால் ரியலில் அவள் அவளாக இருந்தாள். பார்வை, பேச்சு, சிரிப்பு எல்லாமே இயற்கையாக தெரிந்தது.

ஆனால் மஞ்சரி சிரிப்பு வலுக்கட்டாயமாக தெரிந்தது ஏதோ ஒரு வகை ஈர்ப்பிற்காக என்ற நிலையில்.

அதியனின் முன் ஸனா மஞ்சரி கெட்டப்பில் இருப்பது போல் தோன்றியது.

ஒரு நொடி அதிர்ந்து, கண்களை விரித்துப் பார்க்க அங்கு மஞ்சரி நின்றாள்.

“ஹலோ அதியன்”என்று கைகளை அசைத்தாள்.

அவன் லேசாக சிரித்தான்.

அவளோ தன் அழகில் மயங்கிட்டான் என கர்வம் ஓங்க சிரித்தாள்.

அதியன் வெளியில் வர, அவன் நினைவில் ஸனா சம்பந்தமே இல்லாமல் அமர்ந்திருந்தாள்.

ஹாலில் நிச்சயத்திற்கு தேதிக் குறித்து, அதை அதியனிடம் சொல்ல அவனும் தலையை அசைத்து சம்மதம் சொன்னான்.

மஞ்சரியும் தலையை சந்தோஷமாக அசைத்தாள்.

இருவருக்கும் பிடித்து விட்டது என அனைவரும் மனம் மகிழ்ந்தனர்.

ஆனால் அதியன் மனதில் மஞ்சரி இடத்தில் ஸனாவே தெரிந்தாள்.

அவனின் மனம்’இது என்னடா நீ நினைப்பது’என்றது.

அவனோ’அவளை என் வலையில் விழ வைக்குறேனு சொன்னேல அதை நினைவுப்படுத்துகிறது போல அதான் மஞ்சரி இடத்தில் அவள் தெரியுறா. என்னோட நிச்சயத்துக்குள் அவளை மடக்குறேன்’ என்றான்.

அவளை விழ வைக்குறேன் என்று  இவன் வீழ்ந்துக் கொண்டிருக்கான் என்பதை உணரவில்லை அதியன்.

அதியனவள் அடுத்து…

Advertisement