Advertisement

கார் வீட்டு வாசல் முன் சென்று நின்றது.

இரவு நேரம் கடந்தாலும், வீட்டில் அனைத்து மின் விளக்குகளும் ஒளிந்தப் படி இருந்தது.

அதியனுக்கு அதுவே பல விஷயங்களை சொல்லியது.

மனதில் ஒரு முடிவோடு இருந்ததால், எதையும் யோசிக்கவில்லை அவன்.

ஆனால் ஸனாவிற்கு தான் ஏனோ மனதில் பயம் பந்தாக உருண்டோடியது, தாத்தாவைப் பார்த்ததும் அதியன் எப்படி மாறுவான் என்று அவளிற்கு புரியவில்லை.

இந்தப் பொழுது வரை அவளின் காதலன், கணவன் என்ற உறவில் மூழ்கி இருக்கிறான் ஆனால் இனி நவநீதத்தின் பேரன் கதாப்பாத்திரம் வரப்போகிறது, அதை எப்படி எதிர்க்கொள்ள போகின்றான் என்பது அவளிற்கு அதிர்ச்சியாகவே இருந்தது.

“மஸ்து!” என்றழைத்தான், தான் இறங்கியும் ஸனா இன்னும் காரில் அமர்ந்திருந்ததால்.

நினைவுலகிற்கு வந்த ஸனா, கதவைத் திறந்தப்படி நின்ற அதியனை கண்டாள்.

“இறங்கு மஸ்து”

“ம்ம்ம்!” என்றப்படி இறங்கியவள் கையைப் பிடித்தான் அதியன்.

ஸனா அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

அவன் நடக்க அவனை பார்த்துக் கொண்டே பின்னால் நடந்தாள்.

வீட்டினுள் சென்றவர்கள், கூடத்தில் மொத்த குடும்பமும் ஐக்கியமாகி இருந்ததைக் கண்டு சற்று இல்லை பெரிதாகவே அதிர்ச்சி ஆகினர்.

அதியன்-ஸனா இருவரையும் பார்த்தவர்களில் முதலில் பாட்டிக்கு தான் மகிழ்ச்சியாக இருந்தது, அதும் அதியன் கை ஸனாவின் கையைப் பிடித்திருந்தமையால்.

பாரி பயத்தில் பரணியை தான் பார்த்தான்.

தங்கைகளோ, என்ன நடக்கப் போகுதோ…? என்று ஒருவர் ஒருவரைப் பார்த்து கண்களால் ஜாடை செய்தனர்.

தேவியும், மாலினியும் வாயை சுளித்துக் காட்டி ஜாடை செய்தனர் இருவரையும் நோக்கியவாறு.

மல்லிகா இருவரும் ஜோடியாக வந்ததைப் பார்த்ததும் அவர்களிடம் வேகமாக சென்றார்.

“அதியா! உனக்கு என்ன ஆச்சு..? ஏன் இப்படி பண்ண…? மீட்டிங் போகாம எதுக்கு இவ கூடப் போன.. தாத்தா ரொம்ப கோபமா இருக்காரு, பத்தாததுக்கு மஞ்சரி அப்பா வந்து நீயும், இவளும் பேசிக்குற வீடியோவை காட்டி அசிங்கமா பேசிட்டு போயிட்டார்” என அவன் கோட்-ஐ பிடித்து கேட்டார் கோபமாக.

அவரின் கோபமான வார்த்தைகளில் இருந்து ஓரளவு புரிந்தது இருவருக்கும்.

“அம்மா! அமைதியா இருங்க.. நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்க” என்றான்.

“என்னத்த கேக்க சொல்ற…? அப்படி என்னடா சொல்லி உன்னைய மயக்கினா..?” என்றார் வார்த்தையை விட்டவாறு.

ஸனா கைகளை உருவப் போனாள், ஆனால் அதியன் விடவில்லை.

அதியன் மல்லிகாவை விலக்கி விட்டு நேராக சென்றது நவநீதத்திடம் தான்.

“தாத்தா! நான் எதையுமே பிளான் பண்ணி செய்யல, நான் இவளை விட்டு மீட்டிங் போக தான் சென்றேன். ஆனால் சூழ்நிலை அங்க மாட்டிகிட்டேன்..” என்றான்.

நவநீதம் அடங்கா கோபத்தில் இருக்க, அதனை அடக்கியவாறு, தலையை குனிந்தப்படி..

“உன்னைய மீட்டிங் தானே போக சொன்னேன் நீ ஏன் ட்ரைவர் வேலைப் பார்க்கப்போன…?” என்றார் தலை நிமிராமல்.

“அது…” என்று அதியன் ஆரம்பிக்க.

“மாமா! அதுக்கு காரணம் அத்தை தான், இவளுக்கு கார் வரலைனு தெரிஞ்சதும் அதியனை அழைச்சுட்டுப் போக சொன்னார். அவன் பாட்டுக்கும் மீட்டிங் தான் கிளம்பினான்” என்றார் மல்லிகா, மாமியாரைப் பார்த்தவாறு.

அவரோ கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தார்.

நவநீதம் அதை எல்லாம் காதில் வாங்கவில்லை.

“உன் கிட்ட நான் சொன்ன வேலை என்ன அதியா…?”

“தாத்தா! பாட்டி சொன்னாங்க தான், நானும் போற வழி தானேனு அழைச்சுட்டுப் போனேன்.. அங்க போனதும் கூட்டம் நகர முடியவில்லை…”

“ஒரு நடிகையை கூட்டிட்டுப் போனா அந்த கார் ட்ரைவர் கூட தான் கூட்டத்தில் மாட்டுவான் அதுக்காக அவன் இறங்கி கூட போய், பக்கத்திலே உட்கார முடியுமா…? இறக்கி விட்டு போயிட்டே இருப்பான்ல.. நீ ட்ரைவரா தானே போன அதியா. எப்படி போய் பக்கத்தில் உட்காந்த..?”

“தாத்தா!” என்றான் அதிர்ந்து.

ஸனா அதியன் கையை வலுக்கட்டாயமாக விலக்கினாள், ஆனால் முடியவில்லை.

“தாத்தா! என்ன இருந்தாலும் அவ எனக்கு பொண்டாட்டி..” என்ற அதியனின் வாய் அதன் பின் பேசவில்லை.

‘பொண்டாட்டி’ என்ற வார்த்தையை அதியன் வாயினால் கேட்ட நவநீதம் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் நிமிர்ந்து எழுந்தார்.

‘பளார், பளார்’ என்று எழுந்த வேகத்தில் அதியனை இரு கன்னங்களிலும் அறைந்தார். பிறகு கையில் இருந்த கைத்தடியால் அவனை அடிக்க ஆரம்பித்தார்.

அனைவருக்குமே அதிர்ச்சி, மல்லிகா
“மாமா! என்ன பண்றீங்க…? அவன் தோளுக்கு மேல் வளர்ந்தவன்.” என்று கெஞ்ச நவநீதம் நிறுத்தவில்லை, அதியனும் தடுக்கவில்லை.

மல்லிகா தன் கணவரை உலுக்கினார். அவரோ அப்போதும் தன் அண்ணனைப் பார்த்தார்.

சேரர் தன் தந்தையிடம்”அப்பா! நிறுத்துங்க” என்று சொல்வதை அவர் காதில் வாங்கவில்லை.

அவ்வளவு அடி வாங்கியும், அதியன் ஸனா கையை விடவில்லை.

ஸனாவும்”அதியா! ப்ளீஸ் விடுங்க” என்றாள் மெதுவாக.

“நீ அமைதியா நில்லு மஸ்து, எதுவும் பேசாத ப்ளீஸ்.. எனக்காக” என்றான்.

ஸனா அப்படியே சிலையாகி நின்றாள்.

நவநீதத்தின் பார்வை அவர்களின் கை இணைப்பில் விழ, சட்டென்று அடிப்பதை நிறுத்தினார்.

அதியனின் கை ஸனாவை விடாமல் பிடித்திருப்பதை நோக்கிய நவநீ,

“ஓ! அந்தளவு போயாச்சா..? இவ்வளவு அடிகள் வாங்கியும், எனக்கு அவ தான் முக்கியமுனு சொல்லாம சொல்றீயா..? அவ கையைப்பிடிச்சுகிட்டு.. அப்ப நான் எல்லாம் உனக்கு தேவையில்லை…” என்று சத்தமாக கேட்டார்.

“தாத்தா! நீங்க வேணுமுனு தான் இவ்வளவு அடிகளையும் வாங்கினேன். இத்தனை வருசங்களில் என் மேல சுண்டு விரலால் கூட அடியை கொடுத்தது இல்லை நீங்க, அப்படிபட்டவரு அடிக்குறீங்கனா புரியுது எனக்கு, உங்க மனசுல நான் செய்றது புடிக்கலைனு, ஆனா எனக்கும் மனசு இருக்குல தாத்தா அதுல இவ மட்டும் தான் இருக்கா” என்று மறுகையினால் ஸனாவை அணைத்து சொன்னான்.

நவநீதத்திற்கு கோபம் வர அவன் எதிர்பக்கம் திரும்பினார்.

“என்னடா பேசுற…? இவ நம்ம வீட்டு மருமகளா…? உனக்காக தாத்தா மஞ்சரியை நம்ம அந்தஸ்து மரியாதைக்கு தகுந்த மாதிரி பேசி வச்சு இருக்கார். நீ என்னன்னா இந்த நாடகக்கரியை பொண்டாட்டினு சொல்ற.” என்று அவனை திட்டினார் மல்லிகா.

“அம்மா! மஞ்சரி கூட என் வாழ்க்கை நிம்மதியா இருக்காது, எனக்கு இவளை தான் புடிச்சு இருக்கும்மா, புரிஞ்சுகோங்க…”

“அதியா! அப்ப எதுக்கு மஞ்சரியை பொண்ணு பாக்க வந்த, தாத்தா  சொன்னதுக்கு எல்லாம் சரினு மண்டையை ஆட்டுன…?” என்றார் அவனின் தந்தை சோழர்.

“அப்பா! இப்படி கேட்டா நான் என்ன பதில் சொல்வேன். அப்ப என் மனசில் இருந்தது எனக்கே புரியலை. புரிஞ்சப் போது எல்லாமே என்னைய மீறி போயிட்டு, அப்புறம் தாத்தாக்காக தான் யோசிச்சேன். ஆனா என் மனசில் இருப்பது மாதிரி இவ மனசிலும் இருக்குனு நான் இன்னைக்கு தான் புரிஞ்சுகிட்டேன் அப்பா, நாங்க சேர்ந்து வாழுறது தான் எங்களுக்கு சந்தோஷமுனு நினைக்குறேன். அதை தான் தாத்தா கிட்ட சொல்ல முயற்சி செய்றேன் அட்லீஸ்ட் நீங்களாவது புரிஞ்சுக்கோங்க” என்றான்.

அவர் தன் தந்தையை பார்த்து அமைதியாக நின்றார்.

“சேர, சோழா, பாண்டியா.. எப்பையும் போல வாயை மூடிட்டு நிக்காம, உங்க பிள்ளைங்க சந்தோஷத்தை நீங்களாவது யோசிங்க.. ஆண்டு ஆட்டிப் படைச்சு என்னத்த கண்டீங்க இந்த குடும்பத்தில்…” என்றார் பாட்டி.

“தாத்தா!” என்று அதியன் ஆரம்பிக்க.

“நிறுத்துடா! இனி நீ என்னைய தாத்தானு கூப்புடக் கூடாது.. ஆமா! நான் தான் ஆளுவேன், என் முடிவு தான் இங்க முக்கியம் இந்த சாம்ராஜ்ஜியம் என் ஒருத்தனால் வந்தது” என்றார் அதிகாரமாக.

மேலும்”நீ இந்த பொண்ணை விட்டு விலகுறேனு கையெழுத்துப் போட்டு விலகினா தான் இங்க உனக்கு எல்லா உரிமையும். கவலைப் படாத உனக்கு காலம் இருக்கு இன்னும் ஆறு மாசம் முடியல தானே. ஆறாவது மாச முடிவில் நீ, நான் சொல்ற முடிவை ஏத்துக்கிட்டு இவளை விட்டு விலகனும். இல்லனா உனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த உறவும் இல்லை, அன்னைக்கு நீயும் அவ கூட வெளியில் போயிடு. இன்னையில் இருந்து நீ தனி தான் இன்னும் ஆறு மாசத்திற்கு, அவளை கையெழுத்துப் போட்டு அனுப்பிட்டு எங்க கூட உறவாடு. அதுவரை…” என்றவர் பாரியை அழைத்தார்.

“பாரி! நீ தான் இனி நவநீத குருப்ஸ்க்கு பொறுப்பாளர், அவன் இல்லை, அவனுக்கு எது வேணுமுனு முடிவுப் பண்ணட்டும். இந்த குடும்பம், பொறுப்பு, நானா..? இல்லை அந்த நடிகையா…? அதை எப்ப முடிவு எடுக்குறானோ அதை பொறுத்து தான் எல்லாம் மாறும் இனி நீ மட்டும் தான் எனக்கு பேரன்..” என்றார்.

“அப்பா! அவசரப்படாதீங்க, அதியன் நம்மளை விட்டுப் போக மாட்டான்..” என்றார் சேரர்.

“ஆமா தாத்தா! அண்ணனுக்கு தான் டைம் இருக்கே அதுவரை அவரே பாக்கட்டும்..” என்றான் பாரி.

‘இது ரெண்டும் தானா வந்த வாய்ப்பை விட்டுக் கொடுக்குதுங்க, நான் கட்டிக்கிட்டது பெத்தது ரெண்டுமே சரியில்லை’ என்று மனதில் புழுங்கினார் தேவி.

மாலினி நக்கலாக பார்த்து”என்ன அக்கா! உங்க ஆசை நிறைவேறப் போது போல…” என்றாள்.

“ஆமா! எங்க அதான் பாசத்தை போட்டு பம்மிட்டு இருக்குதுங்களே” என்று நொந்தார் தேவி.

‘தன் பிள்ளையை விட்டு அனைத்து சிறப்பும், அதிகாரம், பதவி,  போகுது’ என்று நினைத்த மல்லி, தன் கோபத்தை ஸனா மீது பொழிந்தார்.

“இப்ப  நிம்மதியா உனக்கு.? என் மகனை அவன் தாத்தா கிட்ட இருந்து பிரிச்சுட்ட..” என்று திட்ட..

பாண்டியன்”அண்ணி! அமைதியா இருங்க, அதியா அதான் அப்பா சொல்றாங்கள, அவரு சொல்றப்படி நடந்துகுறேனு சொல்லு..” என்றார்.

“சித்தப்பா! எனக்கு மஸ்து தான் பொண்டாட்டி, அதுக்காக உங்க யாரையும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். வெளியிலும் போக மாட்டேன். இந்த வீட்டில் எனக்கு எந்த பதவி, அதிகாரமும் வேணாம், பாரியே பாத்துக்கட்டும்.” என்றவன் தன் தாத்தாவிடம்,

“தாத்தா! நானும் இதே வீட்டில் தான் இருப்பேன் இவளோடு. இந்த ஆறு மாதத்தில் நீங்களா எங்களை ஏத்துப்பீங்கனு நம்புறேன். அதுவரை நான் அதியனா மட்டும் வாழுறேன் அதியன் நவநீத ராகவனா வாழாமல்.” என்று ஸனாவை அழைச்சுட்டு தன் அறைக்குள் சென்று விட்டான்.

“கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா…?  அதுக்காக நம்ம தானே தாயினு குரல்வளையை அழுத்திட்டே இருந்தா ஒரு நாள் செத்துப் போயிடும். அந்த மாதிரி மிதிக்குறது அளவா இருக்கனும் அப்ப தான் உயிர் பிழைக்கும், பொறக்குற குஞ்சுகளை எல்லாம் மிதிச்சுட்டே இருந்தா தனி மரமா தான் வாழனும் தூக்கிப் போட நாதி இல்லாம… கோழிக்கே அந்த நெலமைனா மனுச பயலுங்க எம்மாத்திரம்” என்று தனக்கு தானே சத்தமாக புலம்பினார் பாட்டி. ஆனால் அது அனைவர் காதிலும் விழுந்தது.. அவர் யாரைபத்தி பேசுகிறார் என்று பெரியவர்களுக்கும் புரிந்தது.

தன் முன் இருந்த தண்ணீர் ரோட்டாவை ஒரு எட்டுத்தள்ளி விட்டவர் தன் அறையை நோக்கி சென்றார் நவநீதம்.

அறைக்குள் வந்த ஸனா அவன் கையை உதறி, அவன் கன்னத்தில் மாறி கைகளால் அடித்தாள்.

“ஏன்டா! ஏன்டா! இப்படி பண்ண, என்னைய விட்டு இருந்தா நான் போய் இருப்பேன்ல.. என்னைய பேச வேணாமுனு சொல்லிட்டு, இப்படி உனக்கு புடிச்ச மொத்தக் குடும்பத்திடம் இருந்து ஒதுக்கிட்டாங்க உன் தாத்தா. என்னால தானே நான் போறேன் அதியா.. உனக்காக நான் போறேன்..” என்றாள் அழுகையுடன், ஆனால் அடித்த மறு நொடியே அவன் கன்னத்தில் தன் இதழ்களால் ஒத்தடம் கொடுத்தவளை தன்னோடு அணைத்தவன்,

“நீ போறதுக்கா நான் இவ்வளவு எதிர்த்து நிக்குறேன் மஸ்து, என்ன நடந்தாலும் நீ என் கூடவே நின்னு போதும். நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான், நம்ம வாழ்க்கைகுனு புரிஞ்சுக்கோ..” என்றான் அவளை தன்னோடு இறுக்கியப்படி.

“அதியா! எனக்கு மனசு கேக்கல இப்ப, நான் தான் நடுவில் வந்துட்டேனு தோணுது.”

“நான் தான் உன் வாழ்க்கையில் வந்தது மஸ்து. நீ உன் வாழ்க்கையில் சந்தோஷமா இருந்த , ஆனா இப்ப நீ இல்லாத வாழ்க்கை என்னால நினைக்க முடியலை. நினைக்கவும் விரும்பலை. தாத்தா எனக்கு எந்தளவு முக்கியமோ அந்தளவு நீயும் என் வாழ்க்கையில் கலந்தவ.. நீ உன் மேல பாரத்தைப் போட்டுக்காத. நான் இருக்கேன்” என்று அவளை ஆறுதல் செய்தான்.

அதியனவள் அடுத்து….

Advertisement