Advertisement

“என்ன சார், வீட்டில் யாரையும் காணும்…?”என்றான் அவன்.

“இருப்பா, இன்னைக்கு பெரிய தம்பி பிறந்த நாள் எல்லாரும் கோயிலுக்கு கிளம்பிட்டு இருக்காங்க. போயிட்டு வந்து தான் சாப்பிடுவாங்க.”என்றார் பரணிநாதன்.

இவர் அந்த வீட்டின் மேனேஜெர். பரணி அங்கு கொடுக்கும் அனைத்து பணிகளின் மேற்பார்வையாளராக வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஐம்பது வயதை தொட்டவர்.

“ஓ! சரி சார். என்னைய தான் இண்டர்வியூ வச்சு செலக்ட் பண்ணிட்டீங்களே, இன்னுமா வேலை உறுதியாகல”

“தம்பி! உனக்கு கார் ஓட்டத் தெரியுமானு டெஸ்ட் பண்ணிட்டோம். ஆனா உன்னைய செலக்ட் பண்றது ஐயாவின் முடிவு. அவர் நேரில் பார்த்தா தான் ஓகே செய்வார். வெயிட் பண்ணு.”
என்றவர் ஓரமாக நின்றார்..

அவனும் அருகில் நின்றான்.

ஒவ்வொரு ஆளாக வெளியில் வந்து கொண்டிருந்தனர்.

“சார்! என்ன இத்தனை பேர் இருக்காங்க, கூட்டுக் குடும்பமா…?”

“ம்ம்ம்! அது தான் மூத்தவர் பேரு சேர ராகவன். அவர் மனைவி பேரு தேவிபிரியா. அவருக்கு மூன்றுப் பிள்ளைகள் ராகவி, பார்கவி, அப்புறம் ரொம்ப நாள் கழித்து பிறந்தவர் பாரி நவநீத ராகவன்…”

“பரணி! புது டிசைன்ஸ் இண்ட்ரோ மீட்டிங் டைம் ஃபிக்ஸ் பண்ணிடுங்க.” என்றார் ஒருவர்..

“ஓகே சோழா.”என்றார் பரணி.

“இவர் யார் சார்…?”என்றான் மெதுவாக பரணியிடம் அவன்.

“இவரு தான் இரண்டாவது பையன் பேரு சோழ ராகவன், மனைவிப் பெயர் மல்லிகா. இவருக்கு ஒரு பையன். ஒரு பொண்ணு சங்கவி”

“இவரு பேரு சொல்லி கூப்புடுறீங்க…?”

“இவரும் நானும் ஒரே வயது தான். மூத்தவரை தான் சாருனு சொல்வேன்.”

“இவங்களுக்கு ஒரு ட்ரைவர் எல்லாம் பத்தாது சார்.”

“மூன்றாவது பையன் இருக்காரு பேரு பாண்டியராகவன், மனைவி பெயர் மாலினி. இவங்களுக்கு இரண்டும் பெண்கள் சைந்தவி, சாருமதி”

“அப்ப சோழா சார் பையன் பேரு என்ன…?”

“சொல்றேன். அவருக்கு தான் இன்று பிறந்தநாள். அவர் தான் இந்த வீட்டின் முதல் ஆண் வாரிசு…”

“சார்! பெரிய குடும்பம் தான் பணத்தில் மட்டும் இல்லை, எண்ணிக்கையிலும்.” என்று திரும்பியவன் பார்வையில் பட்டது ஒரு புகைப்படம் மாலைப் போட்டு தொங்கிய நிலை.

“சார் இவங்க யாரு, இறந்துட்டாங்களா..?”

நொடியில் கலங்கியவர், “ஆமாப்பா! ஐயாவோட மூத்தப் பொண்ணு ஆனா இந்த மூன்று பசங்களுக்கு அப்புறம் பிறந்தவங்க, போயிட்டாங்க.”என்றார்.

“பாவம்! இந்த குடும்பத்தில் வாழ கொடுத்து வைக்கலப் போல.”என வருத்தமாக கூறினான்.

“ஆமா! ஆமா!”என்று அவர் கூறிய அடுத்த நொடியில் வேகமாக நுழைந்தது ஒரு குடும்பம்.

“அண்ணா! நேரமாச்சா…?”என்று கேட்டுகய்கொண்டே.

“சார்!”என்றவனிடம்,

“இவங்க ஐயாவின் கடைசிப் பொண்ணு பேரு ராஜலெட்சுமி, அவரு வீட்டுக்காரர் லோகநாதன். அவங்களுக்கு ஒரு பையன் ரஞ்சித், பொண்ணு லாவண்யா.”

“ஹப்பா! அவ்வளவு தானா, இல்ல இன்னும் இருக்காங்களா சார்…?”

ஒரு பெரியவர் மாடிப் படியில் இறங்கி வர, அங்கிருந்தவர்கள் அமைதியாய் நின்றனர்..

“சார்! இவரு பேரு ராகவன் தானே…?”
என்றான் மெதுவாக..

“தம்பி! மரியாதை கொடுத்து சொல்லு.
இவர் தான் நவநீதம் ராகவன் ஐயா..”

கதர் வேஷ்டி, கதர் ஜிப்பா வெண்மைக்கே எடுத்துக்காட்டுடன் மிடுக்காக வந்தார்.

ஒரு கையில் ரோலக்ஸ் பிராண்ட் சில்வர் கலர் வாட்ச்.

மற்றொரு கையில் சிவப்பெருமானின் சிறிய ருத்ராட்ச மாலையால் ஆன கைசெயின் தங்கம் அல்லாதது.

அடர்ந்த கேசம் முழுவதும் வெண்மை ஆகாமல் கருமை படர, மீசையும் சரிசமமாய் அதே கலப்போடு தென்பட கம்பீரமாக நடந்து வந்தார்.

மனிதனுக்கு எழுபது வயது ஆனால் சிறிதளவும் தெரியாத உடவாகும், அவரின் நடையும் பார்ப்பவர்களை ஆச்சிரியத்தித் ஆழ்த்தும்.

“அப்பா! கார் ரெடியாகிட்டு.”என்றார் சேரர்.

மூத்த மகன் கூறியதும் பார்வையை சுண்டும் பொழுதில் சுழல விட்டவர்,
சோழனை  நோக்கினார்.

தந்தையின் பார்வை வீறியத்தின் அர்த்தம் அறிந்தவர், “அப்பா! அதி…” என்று ஆரம்பிக்க..

வேகமாக இறங்கி வந்தான் அவன்,
“சாரி தாத்தா! ஒரு இம்பார்ட்டென்ட் கால்”என்று படிகளில் இறங்கி வந்தவனை பார்த்து கருவப் பெருமைக் கொண்டார் நவநீதம்..

“நீ கேட்டியே, சோழா பையன் யாருனு இவர் தான்… பேரு அதியன் நவநீத ராகவன்..”என்றார் பரணி, அருகில் நின்றவனிடம்.

“ம்ம்ம்! தாத்தாக்கு ஏத்த பேரன் தான் சார், அப்பிடியே இருக்கார். ஆனா இந்த காலத்தில் இப்பிடி ஒரு ட்ரஸ்.”

“இது பிறந்தநாள் அன்று கோயிலுக்குப் போகும் போது போடனும் என்பது ஐயாவின் கட்டளை.”

அதியன் நவநீத ராகவன்..

நிமிர்ந்துப் பார்க்க வேண்டிய உயரம், மூத்தவனாக பிறந்ததால் பாலும், நெய்யும், பருப்பும் கொடுத்து வளர்த்த பளப்பள தேகம்..

ஆமாங்க! சைவக் குடும்பம். இவங்க ஒன்னும் பரம்பரை சைவம் எல்லாம் இல்லை.

நவநீதம் மாற்றியது தான். அவரின் ஆட்சியில் அசைவத்திற்கு தடைப் போட்டுவிட்டார்.

அவரது தடையை அங்கு எவருக்கும் மீற இயலாது.

“சார்! ஆனாலும் அதியன் சார் வயசுக்கு இந்த ஜிப்பா கொஞ்சம்…”என்று இழுத்தவன், பிறகு அவனே”ஐயா மாதிரி தெரியப் போட சொல்லி இருப்பாரு போல”என்று முடித்தான்..

அதியன் அணிந்திருந்த உடை அப்பிடியிருந்தது.

வேஷ்டி, ஜிப்பா, படிந்த தலை, கையில் வாட்ச் என நவநீதத்தின் வாரிசாக காட்சி அளித்தான்.

“தாத்தா! என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க”என்று நவநீதம் காலில் விழுந்தான் அதியன்..

“நல்லா இருப்பா, அடுத்த வருசம் முப்பதை தொட்டுவிடுவ, அதற்குள் உனக்கு ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கனும்…” என்றார்..

அதியன் லேசாக சிரித்தான். பிறகு பெற்றோர், பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா என ஆசிர்வாதத்தை வாங்க தொடங்கினான்.

சாமி அறையில் இருந்து எழுந்து வந்தார் அன்னலெட்சுமி. வீட்டின் மூத்தப் பெண்மணி.

நவநீதத்தின் துணையாள்.

அவர் அதியனுக்கு விபூதி, குங்குமத்தை வைத்துவிட்டார்..

“பாட்டி! ஆசிவாதம் செய்யுங்க”என்று அவர் காலில் விழாமல் கட்டிப் பிடித்தான் அதியன்.

“உனக்கு என்னடா கண்ணா, சிறப்பா வாழுவ எந்த காலத்திலும்..”என்றார் சிரித்த முகத்தோடு..

ஆனால் அந்த சிரித்த முகத்திற்குள்  வலியும், வெறியும் ஒழிந்திருக்கிறது என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.

என்றோ நடந்து முடிந்த ஒரு சம்பவத்தினால் இன்றுவரை கணவரோடு பேசுவதையே நிறுத்தியிருக்கின்றார் அன்னம்.

பேசுவதில்லையே தவிர, ஒரே அறை அவருக்குத் தேவையான அனைத்தும் செய்கிறார் ஒரு மனைவியாக.

நவநீதம், அவர் ஏன் பேசவில்லை என்று ஒரு நாளும் வருந்தியதில்லை, அவருக்கு தேவையான அனைத்தும் நேரத்தில் கிடைத்தமையால், மனைவி என்பவள் மனைவி என்ற பெயரில் போதும் என நினைத்து வாழ்கின்றார்.

அதியனிற்கு தாத்தா, பாட்டி பேசவில்லை என்று தெரியும். ஆனால் எதற்காக என்ற காரணம் இன்றளவும் தெரியாத ஒன்று.

அதைக் கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்கு குடும்பத்தில் உள்ள புதிய தலைமுறையினர் முன்வரவில்லை அந்த ஒன் மேன் ஆர்மி வீட்டில்..

அந்த வீட்டில் நவநீதம், அவர் மட்டுமே பேசவேண்டும், பேசவும் முடியும்.

சேர ராகவனின் மூத்த இருப் பெண்கள்
ராகவி, பார்கவி கல்யாணம் முடித்துச் சென்று விட்டார்கள்..

அதியனிற்கும், பாரிற்கும் ஐந்து வருட வித்தியாசம்…

அதியன் பிறந்த பின் தான் பாரி, சங்கவி எல்லாம் பிறந்தார்கள்.

அதியன் நவநீத ராகவன் என்று நவநீதம் தன் பேரனிற்கு பெயர் சூட்டியப் போது, ராகவி கேட்டாள் அந்த கேள்வியை..

“தம்பிக்கு மட்டும் ஏன் பின்னாடி உங்க பேரு தாத்தா.. எனக்கும், பார்கவிக்கும் வைக்கல…” என்று..

“இவன் தான் இந்த வீட்டு வாரிசு, அடுத்து எந்த ஆம்பளப் பிள்ளை பிறந்தாலும் என்னோட பெயர் வைப்பேன். ஆனா நீங்க எல்லாம் பொம்பளைப் புள்ளைங்க,போற இடத்தில் உங்க புருசன் பேரு சேர்த்து வச்சுக்கோங்க அது தான் மரியாதை” என்றார் நவநீதம்.

இது, இது தான் நவநீதம். ஆண்கள், பெண்கள் என தனி தனி இடம் கொடுப்பவர்.

அவரின் பிள்ளைகளான முதல் மூன்று ஆண் பிள்ளைகளிற்கு இருக்கும் உரிமை, அடுத்துப் பிறந்த இருப் பெண்பிள்ளைகளிற்கு இல்லை.

ராஜிற்கு அந்த வருத்தம் இன்றளவும் உண்டு.

தன் தமக்கையின் போட்டோவைப் பார்த்து மனதில் அழுதார். ‘வரு நீ மட்டும் நிம்மதியா போயிட்ட, நான் இந்த ஆண் வர்க்கத்தில் மாட்டிக் கிட்டேன். அம்மா வீடுக் கூட ஏதோ ஜெயிலுக்கு வர மாதிரி இருக்கு..’என்று புலம்பினார்.

வரலெட்சுமி.

போட்டோவில் சிரித்தார் சிறுப் பெண்ணாக, தன் பத்து வயதில் எடுத்த புகைப்படத்தோடு..

“அப்பா! எல்லாரும் ரெடி கிளம்பலாம்..” என்றார் சேரா..

“ம்ம்ம்! பரணி”என அழைத்தார் நவநீதம்.

“ஐயா!”என்று வந்து முன் நின்றார் அவர்.

“வேடிக்கைப் பார்த்ததுப் போதும் அந்த பையனை போய் கார் ஓட்டச் சொல்லு!” என்றார்..

“சரிங்க ஐயா!”என்று அந்த புதுப் பையனை வெளியில் அழைத்துச் சென்றார்.

“சார்! அந்த ஐயா, எதுமே கேக்கல கார் ஓட்ட சொல்லிட்டார். வேலை கன்பார்மா…?”

“அவர் ஏதாவது கேட்டு இருந்தா தான்  வேலை ஓகே ஆகி இருக்கும். எனக்கு என்னமோ உன்னை கார் ஓட்ட சொல்லி செக் செய்றார் போல. இங்க பாரு நீ என் ஊருனு ரெக்மென்ட் செஞ்சேன் உன் அம்மா, தங்கச்சிக்காக,  இனி உன் பொறுப்பு…”என்று சொல்லி முடித்து முன்னே நின்ற காருக்கு ஓடினார்.

“அத்தை! நாங்க வரோம்..”என்று மருமகள்கள் கிளம்பினர்.

மற்றவர்களும் கிளம்ப, ராஜி மட்டும் வந்து”அம்மா! எனக்காக வரலாமுல கோயிலுக்கு, நம்ம அதியன் பிறந்தநாள் தானே…”என்றார்.

“நீ போயிட்டு வாடா, எனக்கு என்ன கோயில், குளம் வேண்டிக் கிடக்கு…” என்று போட்டோவில் தொங்கும் தன் மகளைப் பார்த்தார்.

“இத்தனை வருசம் வராத நீ இந்த வருசம் வரப்போறீயா என்ன..? இதுக்கு எல்லாம் ஒரு காலம் வரும்…”என்று கூறியவாறு ராஜி வெளியேறினாள்.

நான்கு கார்களில் அனைவரும் பிரிந்துச் சென்றனர்.

முதலில் நவநீதம் கார் செல்ல, அதை ஃபாலோ செய்தவாறு மற்ற கார்கள் சென்றது.

ஒரு ட்ராபிக் சிக்னல் வரவும், நவநீதம் கார்  சைடு ட்ராக்கில் நின்றது..

சிக்னல் விழுந்தது, புது ட்ரைவர் ஓட்டியக் காரில் தான் பாரி, அதியன், ரஞ்சித் அமர்ந்திருந்தனர்.

புது ட்ரைவர்”சார்! எந்த கோயில்…?” என்று கேட்டான்..

பாரி தான் முன் அமர்ந்திருந்தது..
அதியனும், ரஞ்சித்தும் ஏதோப் பேசி போனைப் பார்த்தப்படி வந்தனர்.

“சிவன் கோயில், ராயன்தெரு பக்கத்தில் உள்ள…”என்று ஆரம்பிக்க..

“ஓ! அந்த கோயிலா, அது எனக்கு தெரியும் சார், ஆனா இப்பிடி போறதை விட எனக்கு தெரிந்த வழி சீக்கிரப் போகும்..”என்று காரைத் திருப்பினான் பாரி சொல்வதற்குள்..

நிமிர்ந்த அதியன், கண்களால் பாரியிடம்
“விடு, போகட்டும்”என்று சிரித்தான்.

ரஞ்சித் மெதுவாக”இவனுக்கு முதல் நாளே வேலை காலி போல..”என்றான்..

*** ***

நவநீதம் கார் சென்று கோவில் வாசலினை அடைய, பின்னே தொடர்ந்து வந்த கார்களும் நின்றது..

ஆனால் அவர்களுக்கு முன்னே வந்து நின்ற காரில் இருந்து அதியன், பாரி, ரஞ்சித் இறங்க, ட்ரைவரும் இறங்கினான்..

சந்தோஷமாக நின்றவனை பரணி முறைத்தார்..

‘இவர் ஏன் முறைக்குறார்…?’என்று முழித்தான் அந்த பையன்..

“பரணி! அவனுக்கு நம்ம க்டோனில் லோட் ஏத்த அப்பாயிண்ட்மென்ட போட்டுறு இப்பவே”என்றார் நவநீதம்.

“சரிங்க ஐயா!”என்றவர் அவனிடம் சென்றார்.

நவநீதம் குடும்பம் கோவிலிற்குள் சென்றார்கள்.

“சார்! நான் நல்லா தானே ஓட்டினேன்.”

“அடேய்! நீ ஏன்டா தனியா போன. எங்க பின்னாடியே வராம…?”

“சார்! இந்த கோயிலுக்கு வர வழி தான்  நான் வந்தது, கால் மணி நேரம் முன்னாடியே வந்துடலாம்.”

“இப்ப முன்னாடி வந்து என்ன பண்ண..?”

அவன் முழிக்க.

“நீ ஒரு மணி நேரம் முன்னாடி வந்தாலும் இங்க தான் நிக்கனும். அவர் ஒரு மணி நேரம் லேட்டா வந்தாலும் அவருக்காக பூஜைச் செய்ய காத்திருப்பாங்க.”

“சாரி சார்! ஏதோ ஆர்வக் கோளாரில், நான் வந்த வழி ரொம்ப ஈஸினு நினைச்சு வந்தேன்..”

“அடேய்! நீ வந்த வழி தான் பிரச்சனையே. லேட்டா ஆனாலும் அவரோட கார் ராயல் ஏரியாவில் தான் வரனுமுனு நினைப்பார். நீ வந்த வழி லோக்கல்,  ரோடுக் கூட சரி இல்லாத ஏரியா, அந்த ஏரியாப் பக்கமே அவர் கார் போவதுக் கூட அவருக்குப் புடிக்காது. இப்ப புரியுதா…”

“ம்ம்ம்!  புரியுது சார்..”

“இப்ப புரிஞ்சு என்ன பண்ண…? போ, நடந்தே போ, கார்மென்ட்ஸ் குடோன் அட்ரஸ் தரேன். அங்க போய் என் பேரு சொல்லு. வீட்டில் கார் ஓட்டினா நல்ல சம்பளம் கிடைக்குமுனு நினைச்சேன். உனக்கு ஒட்டுறது தான் ஒட்டும்..”என்று ஒரு இருநூறு ரூபாய்  கொடுத்தார் அவரின் சொந்த காசினை.

“சார்! ஒரு டவுட்.?”

“என்ன…?”

“இல்ல! திடீருனு வீட்டில் இருக்கும் போது ஏதாச்சுனா, அவசரமா ஹாஸ்பெட்டல் போக இப்பிடி தான் சுத்திப் போவார…?”

“ம்ம்ம்! அவருக்கு இருக்க பணத்துக்கு வீட்டுக்கே ஹாஸ்பெட்டலை  மாத்திடுவாரு, நீ கிளம்பு, உனக்கு அங்க தான் வேலை சரியா  இருக்கும்.. போடா…”என்று அவரும் கோவிலிற்குள் சென்றார்.

அதியனவள் அடுத்து…

Advertisement