Advertisement

வியூகம்.2

இதெல்லாம் ஒரு நொடிதான்.  மற்றவர்கள் அவனை கவனிப்பதற்குள்ளே தன் உணர்வுகளை  கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டான் அகத்தீஸ்வரன்.

அவன் இந்த வேலையில் சேரும்போது அவனுக்கு  கற்றுக் கொடுத்த  முதல் விசயமே, அவனுடைய  உணர்வுகளை எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும்,  ஒருவேளை உயிரே போகும் நிலை வந்தாலும் எதிரி முன் மட்டும்  காட்டி விடக்கூடாது என்பது தான். அது இப்போது அவனுக்கு உதவியது.

உள்ளே கோபம் எரிமலையாக கொதித்தாலும் முகத்தில் துளியும் காட்டாமல், ரா ஏஜென்ட்  அகத்தீஸ்வரனாக அந்த நொடியில் இருந்து மாறி விட்டான். இனி அவனே நினைத்தால் மட்டுமே அவன் உணர்வுகள் வெளிப்படும்.

முகத்தில் சிறு புன்னகை தவழ அதே சமயம் அவன் வகிக்கும் பதவிக்கு உண்டான கம்பீரத்துடன் அவர்களை நோக்கி சென்றான்.

அவன் அந்த ஹாலிற்குள் நுழைந்தது முதலே அவனின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்த அந்த நபருக்கு தன் விழிகளையே நம்ப முடியவில்லை. சில நொடிகளுக்கு முன்னர் கோபத்தில் விழிகள் சிவக்க தன்னை பார்த்தவனா, இவன்  என்று குழம்பிப்போய் அவனை விழியகளாமல் பார்த்துக் கொண்டிருந்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தில்லைநாதன்.

அவர்களை  பார்த்ததும் ப்ரைம் மினிஸ்டர்,  “வெல்கம்… வெல்கம்.” என உற்சாகமாக வரவேற்றார்.

அகத்தீஸ்வரனும் அவனுடன் வந்த டீம் மெம்பர்ஸ் நால்வரும் வாங்கி வந்த மலர் கொத்தை ப்ரைம் மினிஸ்டர்க்கு குடுத்து நன்றி தெரிவித்தனர். அவரும் மரியாதை நிமிர்த்தமாக அதை வாங்கிக்கொண்டார்.

ராவின் தலைவர் அவர்கள் ஐவரையும் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு  முறையாக அறிமுகப்படுத்தி வைத்தார்.

தில்லைநாதனும், வந்திருந்த நால்வரிடமும் கை குலுக்கி கொண்டவர், இறுதியாக அகத்தீஸ்வரனிடம் வந்து சிறிது தயங்கியவாரே கையை நீட்டியவர், “வெல்கம் பேக் டூ இந்தியா அகத்தீஸ்வரன்.” என்றார்.

உள்ளுக்குள் கோபம் எரிமலையாக வெடித்தாலும் முகத்தில் அதை துளியும் காட்டிக் கொள்ளாமல் புன்னகையுடன் அவரின் கையை பற்றி குலுக்கியவாரே,  “தேங்க்யூ சார்!” என்றான்.

அவன் தன்னிடம் கை குடுக்க மாட்டான் என நினைத்தவர் அவன் கையை பற்றி குலுக்கியதும் இல்லாமல் தன்னிடம் பேசியதும் மகிழ்ச்சியை குடுக்க, “எப்படி இருக்க அகத்தி?” அவரையும் மீறி மெல்ல கேட்டு விட்டார். அதன் பிறகே தான் வாய் விட்டு கேட்டது புரிந்தது. இத்தனை பேர் முன்னால் கோபத்தில் அவன் எதாவது சொல்லிவிடுவானோ என அதன் பிறகே யோசித்தார். அப்படி எதாவது சொல்லிவிட்டால் தனக்கு அசிங்கமாகிவிடுமே என பயந்தே விட்டார்.

அவர் பயந்ததை போல அகத்தீஸ்வரன் எதுவும் பேசி வைக்கவில்லை.

அவர் அப்படி உரிமையாக கேட்டது அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும், தன் கோபத்தை காட்டுமிடம் இதுவல்ல என தெரிந்திருந்ததால் மூன்றாம் மனிதரை பார்ப்பது போல ஒரு பார்வை  பார்த்துவிட்டு, திரும்பி பிரதமரிடம் பேச ஆரம்பித்து விட்டான்.

அவன் அப்படி பேசாமல் விலகி போனதே அவருக்கு முகத்தில் அடித்தது போல தான் இருந்தது. “வேணும்னே பண்றான்.” என பல்லைக் கடித்தார்.

பிரதமர் அருகில் இருந்ததால் தன் கோபத்தை வெளியே காட்டாமல் அரசியல் வாதியாக போலியாக சிரித்து மழுப்பினார்.

நல்லவேளை அவர் தமிழில் கேட்டதால் தமிழ்நாட்டை சேர்ந்த நந்தகுமாரை தவிர மற்ற யாருக்கும் அவர் என்ன கேட்டார் என்பது புரியவில்லை.

நந்தகுமார் , அகத்தீஸ்வரன், மினிஸ்டர் மூவரும் ஒரே மாநிலம் அதோடு அல்லாமல் நந்தகுமார் வேறு அவர்களுக்கு பக்கத்து மாவட்டம் என்பதால் இருவருக்கும் இடைய உள்ள உறவு பற்றி ஏற்கனவே அவனுக்கு தெரிந்திருந்தது. அதனால் அகத்தீஸ்வரனின் செயலில் பெரியதாக அதிர்ந்து போகவெல்லாம் இல்லை. அதே சமயம் அவர்களை பற்றி எனக்கு தெரியும் என்பதை மற்றவர்கள் முன்பு காட்டிக்கொள்ளவும் இல்லை.

“கங்கிராட்ஸ் அகத்தீஸ்வரன். சொன்ன மாதிரியே  யாருக்கும் எந்த சந்தேகமும் வராத அளவுக்கு மிஷன கம்ப்ளீட் பண்ணிட்டு வந்துட்டிங்க.” என பாராட்டினார்.

“தேங்க்யூ சார், ஆனா இவங்க மட்டும் இல்லைனா  இந்த மிஷன் இவ்வளவு சீக்கிரம் கம்ப்ளீட் ஆகிருக்காது. இந்த பாராட்டை நீங்க இவங்களுக்கு தான் சொல்லனும்.” என்றான்.

“ஐ ம் அக்ரி வித் யுவர் வேர்ட்ஸ் அகத்தீஸ்வரன். இவர்கள் அனைவருமே திறமையானவர்கள் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் ஒரு டீமை சரியாக வழி நடத்தி அதில் வெற்றியும் பெறுவது சாதாரண விசயம் இல்லை. அதனால இந்த பாராட்டிற்கு நீங்க தகுதி ஆனவர் தான் அகத்தீஸ்வரன்.”  அங்கிருந்தவர்களின் முன் அவனை பாராட்டினார் பிரதமர்.

பிரதமரின் பாராட்டில் அகத்தீஸ்வரன் உச்சி குளிர்ந்து எல்லாம் போகவில்லை.   சாதாரண புன்னகையுடன், “தேங்க்யூ சார்!” என்பதோடு கடந்துவிட்டான்.

அகத்தீஸ்வரனை பாராட்டியது  மட்டும் இல்லாமல் அவனின் டீம் மெம்பர்ஸ் அனைவருடனும் சகஜமாக பேசி, கடந்த இரண்டரை வருடத்தில் அவர்கள் வேலையில் சந்தித்த  சம்பவங்களை தெரிந்துக் கொண்டதுடன் அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். அவருடன் கூடவே ராவின் தலைவரும், மினிஸ்டரும் சேர்ந்துக்கொண்டனர்.

பிரதமர், மினிஸ்டரின் செயலில் அவனுடைய டீம் மெம்பர்ஸ் அனைவரும் ஆச்சர்யப்பட்டு விட்டனர். அது அவர்களின் பேச்சிலும் தெரிந்தது. ஆனால் அகத்தீவரன் மட்டும் அவர்களை தூக்கி வைத்து கொண்டாடவெல்லாம் இல்லை. அரசியல்வாதிகள் ஒரு செயல் செய்கிறார்கள் என்றால் அதில் அவர்களுக்கு லாபம் இல்லாமல் இருக்காது என்பதது தெரியும் என்பதால் அதை இயல்பாக கடந்துவிட்டான்.

அவர்கள் கிளம்பும் போது பிரதமர் அவர் கையில் அவர்கள் செய்த சாதனைக்கு மெடல் குடுத்தது கௌரவித்தார்.

ஒரு உளவாளியாக நான்கு சுவர்களுக்குள் குடுக்கப்பட்ட அந்த மெடல் கூட அவர்களுக்கு மிகப்பெரிய கௌரவம் தான். அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு  கிளம்பினர்.

அன்று இரவே அனைவரும் அவரவர் ஊர்களுக்கு போக   டெல்லி ஏர்போர்ட் வந்தடைந்தனர்.

மற்ற மூவரும் அவர்கள் மாநிலம் செல்ல ப்ளைட் வந்ததும் சென்று விட்டனர். அகத்தீஸ்வரன், நந்தகுமார் இருவருக்குக்கும் கோவைக்கு ப்ளைட் விடியகாலை  4 மணிக்கு என்பதால் இருவரும்  ஏர்ப்போர்ட்டில் காத்திருக்க ஆம்பித்தனர்.

ப்ளைட்க்கு அரைமணி நேரம் இருக்கும் போது நந்தகுமார், “சார் டீ குடிக்க போறேன், உங்களுக்கு வேணுமா?” என்று கேட்டான்.

“எனக்கு வேண்டாம். நீங்க போய் குடிச்சிட்டு வாங்க நந்தகுமார்.” என அகத்தீஸ்வரன் கூறி  விடவும், நந்தகுமார் மட்டும் எழுந்து சென்றான்.

அந்த நேரம் கார்ட்ஸ் சூழ அங்கு வந்தார் சென்ட்ரல் மினிஸ்டர் தில்லைநாதன்.

அகத்தீஸ்வரனை பார்த்ததும் தன்னுடன் வந்த ஆட்களிடம், “நீங்க இங்கையே இருங்க.” என்று விட்டு அகத்தீஸ்வரனின் அருகில் சென்று அமர்ந்தார்.

அவர் வரும்போதே பார்த்து விட்டதால் அவர் அருகில் வந்து அமர்ந்ததை உணர்ந்தாலும் அவரை திரும்பி பார்க்காமல்  போனை பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னடா என்ன அசிங்க படுத்தனும்னே எல்லாத்தையும் பண்ணுவியா?” கோபமாக கேட்டு வைத்தார்.

அவரிடம் பேசப்பிடிக்கவில்லை என்றாலும் சூழ்நிலை கருதி தன் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு, “நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு புரியலைங்க சார். நான் எதுக்கு உங்கள அசிங்க படுத்தனும்? உங்கள அசிங்கப்படுத்தற அளவுக்கு நமக்குள்ள என்ன இருக்கு?”  நிதானமாக கேட்டு வைத்தான்.

“என்னடா நடிக்கிறீயா? நான் எத கேட்கறேன்னு உனக்கு புரியலை இத நான் நம்பனுமா?” என்றார்.

“நான் எதுக்குங்க சார்  நடிக்கனும். அதுவும் இல்லாம நீங்க சென்ட்ரல் மினிஸ்டர். நான் உங்களுக்கு கீழ வேலை செய்யற சாதாரண ஆள். உங்ககிட்ட நடிச்சு எனக்கு என்ன  ஆகப்போகுது?” என கேட்டு வைத்தான்.

அதில் கடுப்பானவர் “என்ன கோபபடுத்தனும்னே எல்லாம் பண்ற டா? நான் உன்னோட அப்பாங்கிறத மறந்துடாத.” என்றார்.

“சாரி சார்  நீங்க தப்பான ஆள்கிட்ட பேசுறீங்கன்னு நினைக்கறேன். என்ன பொறுத்த வரைக்கும் என்னோட அம்மா  இறந்த அன்னைக்கே அவரும் இறந்துட்டார்.” என்றுவிட்டான்.

“என்னோட பொறுமைய ரொம்ப சோதிக்கற அகத்தி. இங்க எல்லாரும் இருக்காங்கன்னு பாக்கறேன், இல்லைனா ஓங்கி அறைஞ்சிடுவேன்.” கோபத்தில் பல்லைக்கடித்துக் கொண்டு பேசினார்.

அவரின் கோபத்தில் துளியும் பாதிக்கப்படாதவனாக, “மை நேம் இஸ் அகத்தீஸ்வரன். கால் மீ அகத்தீஸ்வரன் சார்.” என்றான்.

“உனக்கு பேர் வச்சதே நான் தான். எனக்கே நீ சொல்லித் தரீயா?” எரிச்சலுடன் கேட்டார்.

“எனக்கு பேர் வச்சது என்னோட தாத்தான்னு என்னோட மாமா சொல்லிருக்கார் சார்.  என்னோட மாமாவுக்கு பொய் சொல்ற பழக்கம் எல்லாம் இல்லை.” என்னான்.

“அப்ப நான் பொய் சொல்றேன்னு சொல்றீயாடா?” கோபத்துடன் கேட்டார்.

“அது எப்படி எனக்கு தெரியும் சார்.” என்றான்.

“முதல்ல இந்த சார் சார்னு சொல்ற நிப்பாட்டு அகத்தி. கேட்கறதுக்கே எரிச்சலா இருக்கு.”

“சரிங்க மிஸ்டர் தில்லைநாதன்.”

“அப்பாங்கிற மரியாதை துளியாவது இருக்கா டா? இதுதான் அவன் உன்ன வளர்த்த லட்சணமா?”  என்றுவிட்டார்.

அதுவரை நிதானமாக பேசிக் கொண்டிருந்தவன் அவரின் பேச்சில் இழுத்து பிடுத்து வைத்திருந்த பொறுமை எல்லாம் பறக்க, “உங்க பெத்தவங்க உங்கள வளர்த்த லட்சணத்தை  விட என்ன வளர்த்தவர் நல்லாவே வளர்த்தி இருக்கார் மிஸ்டர் தில்லைநாதன் சார். அவரோட வளர்ப்பை குறை சொல்ற அளவுக்கு நீங்க ஒன்னும் ஒழுக்கமானவர் எல்லாம் இல்லை. இன்பேக்ட் அவரை பத்தி பேசக்கூட உங்களுக்கு தகுதி இல்லை.” என்றுவிட்டான்.

“எனக்கு என்னடா தகுதி இல்லை. நான் யாருண்ணு தெரியும்ல.”   திமிராக கேட்டு வைத்தார்.

“ஏன் தெரியாம சார். உங்க எச்ச அரசியலுக்காக என்னோட தாத்தாகிட்ட  நடிச்சு அவர் பெண்ணையே கட்டிகிட்டு அவர் மூலமாகவே அரசியல்ல பதவி வாங்கிட்டு கடைசில அவர் சாவுக்கு காரணமான ஆள் தானே நீங்க. என்னமோ எங்கிட்ட வந்து உத்தமன்ங்கிற ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்கீங்க. போங்க சார்.  அப்பறம் நான் பேச ஆரம்பிச்சா உங்க முகமூடி தான் கிழியும். அது உங்களுக்கு தான் அசிங்கம்.” நக்கலாக பேசி வைத்தான்.

“ஏய்! பெத்த பையனாச்சேன்னு பாக்கறேன் இல்லைனா.” பல்லைக்கடித்துக்கொண்டு தன்னையே அடக்க பெரும்பாடு பட்டார்.

“இல்லைனா என்ன பண்ணுவீங்க சார். என்ன கொன்னுடுவீங்களா? அதானே உங்களுக்கு கொலை பண்றதுதான் கை வந்த கலையாச்சே. தாலி கட்டுன பொண்டாட்டியவே கொலை பண்ண மாமனிதர் தானே நீங்க.”

“டேய். என்ன ரொம்ப கோபபடுத்தி பாக்காத. அது உனக்கு நல்லது இல்லை.” என மிரட்டல் விடுத்தார்.

“காமெடி பண்ணாம போங்க சார், நான் மிஸஸ் பானுமதி கிடையாது உங்களோட உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படறதுக்கு.  நான் அகத்தீஸ்வரன் ஈஸ்வரமூர்த்தி. உங்க முகத்திறைய கிழிச்சு தொங்க விட எனக்கு ரொம்பநேரம் ஆகாது. அத என்ன செய்ய வச்சுடாதிங்க.” என்றுவிட்டான்.

“பெத்த அப்பன் உசுரோட இருக்கும் போது வேற எவனோட பேரயோ சொல்றீயே வெட்கமா இல்லை.”

“நான் எதுக்கு வெட்கப்படனும் மிஸ்டர் தில்லைநாதன். அவர் என்னோட அம்மாவுக்கு நிகரானவர். என்ன வளர்த்தவர். இப்ப வரையிலும் எனக்காக மட்டுமே வாழ்பவர். உறவு முறையில் அவர் எனக்கு மாமாவா இருந்தாலும் என்ன பொருத்தவரை அவர் தான் என்னோட அப்பா.” என்றவன்,

“ஆனா நீங்க அப்படியா சார் இருக்கீங்க. உங்களை பொறுத்தவரை குழந்தை பிறக்க காரணமா இருந்தா மட்டும் போதும் அப்பா ஆகிடலாம்னு நினைக்கிறீங்க. ஆனா அது இல்லை சார்.  தன்னுடைய உயிர் அணுவில் பிறக்கலைனாலும் இப்பவரை அந்த குழந்தைய தன்னுடைய உயிரா நினைச்சு அவனுக்காகவே வாழ்றாரு பாருங்க அவர் தான் அப்பாங்கிற வார்த்தைக்கு தகுதி ஆனவர். அப்பாங்கிற வார்த்தை அவ்வளவு புனிதமானது சார். அதெல்லாம் வெறும் உடம்பு சுகத்துக்கு அலையற உங்கள மாதிரி ஆளுக்கு எல்லாம் புரியாது.” என்றான்.

“என்னடா  என்ன அசிங்கபடுத்தனும்னே பேசுறீயா? நீ என்னோட இரத்தம்னு நான் நினைக்கற வரையிலும் தான் உனக்கு நல்லது. ஒருகாலத்தில கட்சில செல்வாக்கா இருந்த உன்னோட தாத்தாவையே ஒன்னும் இல்லாம ஆக்கினவன் நான். நீயெல்லாம் எனக்கு எம்மாத்திரம்.  நான் இப்போ நினைச்சாலும் இருந்த இடம் தெரியாம அழிக்க முடியும். அத மறந்துடாத?“

“ஐயோ நான் பயந்துட்டேன் சார்.”  என்றான்.  அவன் குரலின் அத்தனை நக்கல் இருந்தது.

“இதுக்கெல்லாம் நீ அனுபவிப்படா, அப்பான்னு கதறிட்டு வந்து எங்கால்ல விழுவ. விழ வைப்பேன்.” என்றார்.

“அட போங்க சார். நான் என்னோட அப்பாவே இல்லைங்கிறேன். நீங்க என்னடானா எங்கிட்ட வந்து அப்பா லொப்பான்னு உளறிட்டு இருக்கீங்க. போய் ஒரு நல்ல டாக்டரா பாருங்க சார்.” என நக்கலடித்தான்.

“தலைவர் நீ இன்னைக்கு வரன்னு சொன்னனும் முக்கியமான வேலை எல்லாத்தையும் விட்டு உனக்காக இங்க வெயிட் பண்ணேன் பாரு என்ன சொல்லனும். பெத்த பையன ரொம்ப நாள் கழிச்சு பாக்க போறோமேங்கிற பாசத்துல உன்கிட்ட வந்து பேசுனதுக்கு  நல்ல மரியாதை குடுத்துட்ட.”

“அடடே நீங்க பெத்த பையன் மேல எம்புட்டு பாசம். உங்க பாசத்த  பார்த்து அப்படியே உருகிட்டேனா பாத்துக்குங்களேன்.” என நக்கலடித்தான்.

“அவன் உன் கூட இருக்க தைரியத்துல தானே ஆடிட்டு இருக்க, அவனையே என்னால இல்லாம பண்ண முடியும். அத மறந்துடாத.” என மிரட்டி பார்த்தார்.

 “என்ன மிரட்டுறீங்களா சார். ஆனா பாருங்க உங்களுடைய மிரட்டலுக்கு பயப்படற ஆள் நான் இல்லை. அப்புறம் என்ன சொன்னிங்க அவர இல்லாம பண்ணிடுவிங்களா? உங்களால அவரோட *** கூட புடுங்க முடியாதுங் சார்.‌ என்னோட தாத்தா மாதிரி ஏமாளி அவர் கிடையாது.”

“பேசுடா பேசு, கூடிய சீக்கரம் நான் யாருன்னு தெரிஞ்சிப்பிங்க. அப்ப  உன்ன பாத்துக்கறேன்.” என கோபமாக கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு காலி செய்தார்.

அவர் மேல் அத்தனை கோபம் வந்தது அவனுக்கு. ‘எப்படி எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாம இவரால மட்டும் பேச முடியுது?’ தனக்கு தானே கேட்டுக்கொண்டான்.

தில்லைநாதன் சென்றதும் அங்கு வந்த   நந்தகுமார், “உங்களுக்கும், தில்லைநாதன் சாருக்கும் என்ன பிரச்சனை சார்?” என்றான்.

“ஏன் அப்படி கேட்கிறீங்க நந்தகுமார்?”

“நீங்களும் சாரும் பேசிட்டு இருக்கறத பார்த்தேன். ரெண்டு பேரும் ரொம்ப கோபமா பேசிட்டு இருந்த மாதிரி இருந்தது. அதான் கேட்டேன்.” என்றான்.

“பிரச்சினை எல்லாம் எதுவும் இல்லை நந்தகுமார். சும்மா பேசிட்டு இருந்தோம் அவ்வளவு தான்.” என முடித்துவிட்டான்.

‘இதற்கு உன்னோட கேள்விக்கு பதில் சொல்ல  முடியாது போடான்னு  சொல்லிருக்கலாம்.’ தனக்கு தானே கவுண்டர் குடுத்துக்கொண்டவன் “சாரி சார். கேட்கனும்னு தோணுச்சு. அதான் கேட்டான். உங்களுக்கு பிடிக்கலைனா  சாரி.” என்றான்.

“சாரி கேட்கற அளவுக்கு இதில் ஒன்னும் இல்லை நந்தகுமார், விடுங்க.” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே விமானத்திற்கான அழைப்பும் வந்துவிட இருவரும் எழுந்து சென்றனர்.

Advertisement