Advertisement

விலகல் 7

திவ்யாவிடம் பந்தால் அடி வாங்கியவன் மாடியில் இருந்த தங்கள் வீட்டின் உள்ளே சென்றதும் அவன் கண்ணை பார்த்த அவனது நண்பன், “டேய்! என்னாச்சு?” என்று சிறு பதறலுடன் கேட்டான்.

“ஒரு பொண்ணு கிரிகெட் பாலால் அடிச்சிட்டா மச்சி” என்று சோகமாக கூற,

அவன் நண்பனோ புன்னகையுடன், “நான் தான் சொன்னேனே! ஏதாவது பொண்ணு கிட்ட அடி வாங்கப் போறன்னு.. ஆனாலும் இவ்வளவு சீக்கிரம் வாங்குவனு நினைக்கலைடா” என்றான். 

“டேய் நானே கடுப்பில் இருக்கிறேன்” 

அவன் நண்பன் எழுந்து சென்று குளிர்சாதனப்பெட்டியில் இருந்து சின்ன சின்ன பனிக்கட்டிகளை எடுத்து ஒரு துணியில் கட்டி கொண்டுவந்து அவனிடம் கொடுத்தபடி, “சரி.. சரி.. இதை வைத்து ஒத்தடம் கொடு” என்றான். 

அவன் ஒத்தடம் கொடுத்தபடி, “வலிக்குதுடா” என்றான். 

“வம்பு பண்றதுக்கு முன் யோசித்து இருக்கணும்” 

“வம்பெல்லாம் பண்ணலைடா.. நான் சின்னதா கண்ணடித்தேன்.. அவ்ளோ தான்” 

“அதான் கண்ணுலேயே தாக்கிட்டா போல!” என்றான் மென்னகையுடன்.

“இது கூட பரவா இல்லைடா மச்சான்.. என்னை பார்த்து என்ன சொல்லிட்டா தெரியுமா?” 

“என்ன சொன்னா?” 

“எப்படிடா அவ அப்படி சொல்லலாம்?” 

“ஏன்! சொப்பன சுந்தரியை யாரு வச்சிருக்கானு கேட்டாளா?” 

அவன் முறைக்கவும், அவன் நண்பன், “எதுக்கு முறைப்பு மச்சி! நானும் அந்த கேள்விக்கு தான் பதிலை தேடிட்டு இருக்கிறேன்னு சொல்ல வேண்டியது தானே!” என்றான். 

“டேய்!” என்று அவன் கத்த, நண்பனோ, “என்ன?” என்று அலட்டாமல் கேட்டான்.

“உனக்கு அந்த பஜாரியே மேல்” 

“பஜாரியா?” 

“பின்ன பொண்ணா அது! என்னா பேச்சு பேசுது! சரியான பஜாரி!” 

“உன்னை எதிர்த்து பேசினா பஜாரி யா?” 

அவன் முறைக்கவும், நண்பன், “தப்பு யாரு மேல்?” என்று கேட்டான். 

“என் மேல் தான்.. அதுக்காக இப்படி பேசலாமா?” 

“என்ன சொன்னா?” 

“நீயே சொல்லு மச்சி.. நான் சும்மா லைட்டா கடலை போடுவேன்……………………..” 

“லைட்டா!” 

“சரி கடலை போடுவேன்.. அப்புறம் மிஞ்சி மிஞ்சி போனா கண்ணடிப்பேன்.. அவ்ளோ தானேடா!” 

“அதையும் ஏன் செய்யணும்!” 

“பின்ன உன்னை போல் சாமியார் மாதிரி இருக்க சொல்றியா?” 

“நான் சாமியாரா?” 

“பின்ன சைட் கூட அடிக்காத நீ சாமியார் தான்.. எப்படிடா நீ எனக்கு பிரெண்ட் ஆன!” 

“எனக்கும் சில நேரம் இந்த சந்தேகம் வரும்.. சரி அதை விடு.. ஆனா என்னை சாமியார்னு சொல்லாத.. ஏன்னா இப்பலாம் சாமியார்னு சொல்லிட்டு தான் பல வேலைகளை பார்க்கிறாங்க!” 

“அதுவும் சரி தான்” என்றவன் மீண்டும், “எனக்கு மனசே ஆரலைடா..” என்றான். 

“அப்படி என்னடா சொன்னாள்?” 

“..” 

“சொல்லித் தொலைடா” 

“அது” 

“இப்போ நீ சொல்லலை நானே உன்னை மொத்துவேன்” 

“எனக்கு குடும்ப கட்டுப்பாடு பண்ணிடுவேன் சொல்லிட்டா டா!” 

“வாட்!” 

“கேட்கிற உனக்கே ஷாக்-ஆ இருக்குதே! எனக்கு எப்படி இருக்கும்?” 

“உன்னை நினைத்து ஷாக் ஆகலை.. ஒரு பொண்ணு இப்படி சொன்னாளானு ஷாக் ஆனேன்” 

அவன் பல்லை கடித்தபடி, “உன்னிடம் போய் சொன்னேன் பாரு!” என்றான். 

“அப்படியே சொன்னாளா?” 

அவன் முறைக்கவும், நண்பன், “ஸீன் போடாம சொல்லுடா” என்றான். 

“இன்னொரு முறை கண்ணடித்தா அடுத்த பால் கண்ணை தாக்காது.. நேரா குடும்ப கட்டுப்பாடு தான்னு சொன்னா போதுமா!” என்று எரிச்சலுடனும் கடுப்புடனும் சொன்னான்.

நண்பன் வாய்விட்டு சிரிக்கவும், அவன், “வேணாம்டா! நானே கடுப்பில் இருக்கிறேன்” என்றான். 

ஒருவாறு சிரிப்பை அடக்கிய நண்பன், “இருந்தாலும்” என்றுவிட்டு மீண்டும் சிரிக்கவும், அவன் பல்லைகடித்துக் கொண்டு, “எல்லாம் அவளால்.. எனக்கு வர கோபத்துக்கு!!!” என்றான். 

“போய் அந்த பொண்ணை திட்ட போறியா! அதை அப்பவே……………….” 

“ஏன்டா உனக்கு இந்த கொலை வெறி! நான் கல்யாணம் பண்ணி பிள்ளைக் குட்டினு சந்தோஷமா இருக்க ஆசைப் படுறேன்.. நீ ஏன்டா அந்த சொர்ணாக்கா கிட்ட கோர்த்து விட பார்க்கிற!” 

நண்பன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க, அவன், “டேய் வேண்டாம் ஓடி போய்டு” என்றான்.

நண்பன் எழுந்து தன் அறைக்கு செல்லும் போது, “இனி உனக்கு இந்த தெருவில்.. இல்லை.. இல்லை.. இந்த ஏரியாவில் மதிப்பிருக்கும்!?!” என்று நக்கலாக கூறிவிட்டு செல்ல,

“ரொம்ப சந்தோஷப்படாத” என்று கத்தினான்.

 

அடுத்த இரண்டு நிமிடத்தில் அவன் கால் அடியில் அதே பந்து வரவும், முதலில் சிறிது அதிர்ந்தவன் அடுத்த நொடியே கோபத்துடன் பந்தை எடுத்துக் கொண்டு மாடி-முகப்பிற்கு(பால்கனி) சென்று திவ்யாவை பார்த்து முறைத்தான்.

அவளோ வலது கையில் கிரிகெட் மட்டையை பிடித்தபடி இடது கையை இடுப்பில் வைத்துக் கொண்டு இவனை கோபத்துடன் முறைத்தபடி, “என்ன வாங்கின அடி பத்தலையா!” என்றாள். 

தனது பார்வையை சுழற்றியவன் மற்ற வீட்டில் இருந்து யாரும் பார்க்கவில்லை என்றதும் சிறிது நிம்மதி அடைந்து, “எப்பொழுதும் அமைதியாவே இருக்க மாட்டேன்” என்றவன், “இப்போ எதுக்குடி பந்தை மேலே அடித்த?” என்று கேட்டான்.

“டேய் மரியாதையா பேசு” 

“நீ ரொம்ப மரியாதையுடன் தான் பேசுற!” 

“அது நீ நடந்துக்கொள்ளும் முறையைப் பொருத்து” 

“இப்போ எதுக்குடி பந்தை மேலே அடித்த? அதை சொல்லு” 

“இப்படி தெரியாதது போல் கேட்டா! நீ ஜன்னல் மறைவில் இருந்து பார்த்தது இல்லைனு ஆகிடாது” 

அவன் வாய்விட்டு சிரித்தபடி, “ஆமா இவ பெரிய உலக அழகி! இவளைத் தான் திரும்ப திரும்ப பார்க்கிறேன்! போடி சொர்ணாக்கா” என்றான். 

“டேய் சூம்பிப்போன சிக்கன் வேணாம்” 

“என்னடி சொன்ன?” என்றபடி அவன் வேகமாக கீழே இறங்கி வந்தான். 

திவ்யா பயமின்றி, “நீ சொன்னதுக்கு பதில் சொன்னேன்” என்றாள். 

அவன் பல்லை கடித்தபடி, “எனக்கு வர கோபத்துக்கு உன்னை!!!!” 

பவித்ரா பயத்துடன் தோழியின் கையை பிடித்தபடி, “திவி.. வேணாம்டி.. வா வீட்டுக்கு போகலாம்” என்றாள். 

தன் கையை கோபத்துடன் உதறி தோழியின் பிடியை தளர்த்தியவள், “சும்மா இருடி..” என்றுவிட்டு அவன் பக்கம் திரும்பி, “என்ன செய்ய போற? அடிக்க போறியா? தைரியம் இருந்தா கை வைடா.. நீயா நானா பார்த்திறலாம்..” என்றாள். 

“பொண்ணாடி நீ! சரியான பாஜாரி” 

அவள் கோபத்துடன், “உன்னை மாதிரி பொறுக்கியிடம் இப்படி தான் நடந்துக்க முடியும்..” என்றாள். 

“ஏய் வார்த்தையை அளந்து பேசு” 

“அதை நீ முதலில் செய்” 

“நான் பொறுக்கியா?” 

“நீயும் உன் பார்வையும் செய்கையும்! வேற எப்படி சொல்றது?” 

“பொறுக்கி எப்படி நடந்துக்குவான் காட்டவா!” 

இப்பொழுது பசங்களிடம் பதற்றம் வந்தது, விக்னேஷ் கூட, “இவனுடனெல்லாம் நீங்க ஏன் கா பேசிட்டு.. வாங்க கா போகலாம்” என்றான்.

அவன் கோபத்துடன்,டேய் பொடிப் பயலே! என்ன ரொம்ப துள்ற!” என்று எகிறினான்.

திவ்யா அடக்கிய கோபத்துடன் நிதானமாக, “ஒரு பெண்ணிற்கு உடளவில் டார்ச்சர் கொடுப்பவன் மட்டுமில்லை மனதளவில் டார்ச்சர் கொடுப்பவனும் பொறுக்கி தான்” என்றாள். 

அவன் கோபத்துடன், “என்னடி திரும்ப திரும்ப பொறுக்கினு சொல்லிட்டு இருக்கிற!” என்றபடி அவளை நெருங்கினான்.

அவள் சிறிதும் பயமின்றி, “நான் சொன்ன காரணத்தை நீ ஒழுங்கா கவனிக்கலையா?” என்று கேட்டாள். 

“அப்படி என்ன உனக்கு டார்ச்சர் கொடுத்தேன்? சைட் அடித்தேன்.. சின்னதா கண்ணடித்தேன்.. அது உன் மனதை வருத்திருச்சோ!” என்றவன் சிறு நக்கலுடன், “அதுக்கெல்லாம் நீ ஒரு பொண்ணா இருக்கணும்! நீ உருவத்தில் வேணா பெண்ணா இருக்கலாம்” என்றவன் அவளை மேலும் கீழும் பார்த்து அதீத நக்கலுடன், “அது கூட கொஞ்சம் சந்தேகமா தான் இருக்குது” என்றான். 

அவனது பேச்சில் சிறிது அதிரத் தான் செய்தாள். இருப்பினும் அந்த வார்த்தைகள் தந்த வலியை புறம்தள்ளி இரண்டே நொடிகளில் அவனை தீர்க்கமாக பார்த்தவள், அதை விட தீர்க்கமான குரலில், “நான் பொண்ணா இல்லையா என்பதை உன்னிடம் நிரூபிக்கும்னு எனக்கு அவசியம் இல்லை.. நான் எனக்காக மட்டும் பேசலை” என்றவள் விக்னேஷை சுட்டிக் காட்டி, “இவனுடைய அக்காவிற்கும் சேர்த்து தான் பேசுகிறேன்.. உன் செய்கையால் மென்மையான சுபாவம் கொண்ட அவ எவ்வளவு பயத்தில் இருக்கிறாள்னு உனக்கு தெரியுமா? உனக்கு இது ஒரு டைம் பாஸ் ஆனால் அது அவளை எவ்வளவு பாதிக்கிறதுனு தெரியுமா? ஒருவேளை அவளது பயம் அதிகரித்து அவளை மனநல மருத்துவரிடம் காட்டும் நிலை வந்தால் என்ன செய்வ? சிம்ப்பிள்லா ஒரு சாரி சொல்லுவ.. வேற என்ன செய்ய முடியும் உன்னால்?” என்று கேட்டாள். 

அவன் வாய்யடைத்துப் போய் நிற்பதை பார்த்து, “நான் ஏன் பொறுக்கி என்ற வார்த்தையை சொன்னேன்னு இப்போ புரியும்னு நினைக்கிறேன்” என்றவள் சிறு பயத்துடன் நின்றிருந்த விக்னேஷின் கையை பற்றி, “வாடா போகலாம்” என்றபடி அழைத்துச் சென்றாள்.

தான் பேசியதின் தாக்கத்தை சட்டென்று மறைத்து நிமிர்ந்த திவ்யாவின் ஆளுமையை சிறு வியப்புடன் பார்த்தவன் அவள் கூறிய விஷயத்தை கேட்டு அதிர்ந்தான். தனது செய்கைக்கு இப்படி ஒரு கோணம் இருக்கும் என்று அவன் சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. அவன் அதே அதிர்ச்சியுடன் மேலே சென்றான்.

 

அவன் வீட்டின் உள்ளே வந்ததும் நண்பன், “என்னடா! இப்போ என்ன சொன்னா?” என்று கேட்டான். 

அவன் அமைதியாக இருக்கவும் அவன் தோளை பிடித்து உலுக்கிய நண்பன், “டேய்!” என்று கத்தினான்.

நண்பனின் உலுக்கலில் தெளிந்தவன், “என்னடா?” என்றான். 

“இப்போ என்ன சொன்னா?” 

“என்னை பொறுக்கினு சொல்லிட்டா டா” 

“என்னடா சொல்ற? இருந்தாலும் இது கொஞ்சம் அதிகம் தான்” 

“பதிலுக்கு நானும் நீயெல்லாம் பொண்ணே இல்லைனு சொன்னேன்டா” 

“என்னடா சொல்ற?” 

நடந்ததை சொல்லியவன், “இப்படி ஒரு கோணம் இருக்கும்னு நான் யோசிக்கவே இல்லைடா.. நான் சும்மா தான் அப்படி பண்ணேன்.. அந்த பொண்ணு அமைதியா போகும் ஆனா உள்ளுக்குள் பயந்துட்டு இருக்கானு சத்தியமா எனக்கு தெரியாதுடா” என்று வருந்தினான்.

“சரி விடுடா.. அந்த பொண்ணு கிட்ட சாரி சொல்லி இனி தொந்தரவு செய்ய மாட்டேன்னு சொல்லிடு.. சரியாகிடும்” 

“என்னடா நீயும் தொந்தரவுனு சொல்ற? அப்போ அந்த சொர்ணாக்கா சொன்னது போல் நான் நிஜமாவே பொறுக்கி போல் தான் நடந்துகிறேனா!” 

“சச.. அப்படி இல்லைடா.. ஆனா நீ பண்றது பொண்ணுகளுக்கு தொந்தரவு தானே டா!” 

“பொண்ணுகளும் தானேடா என்னுடன் கடலை போடுறாங்க!” 

“எல்லா பொண்ணுங்களுமா அப்படி இருக்கிறாங்க?” 

“இல்லை தான் ஆனா அதுக்காக இப்படி பொறுக்கியுடன் கம்பேர் பண்ணி சொல்லிட்டாளே மச்சி!” 

“நீ கூட தான் அவளை பொண்ணே இல்லைனு சொல்லியிருக்க” 

“அது.. சும்மா கோபத்தில் சொன்னதுடா” 

“அது போல் தான் அவளும் சொல்லியிருப்பா” 

“இருந்தாலும் அந்த பொண்ணை நினைத்தால் மனசுக்கு ஏதோ பண்ணுதுடா! சொர்ணாக்கா சொன்னது போல் அந்த பொண்ணுக்கு என்னால் பிரச்சனை வந்திருக்குமோ!” என்று பெரிதும் கலங்கினான். 

“அப்படியெல்லாம் ஒண்ணும் இருக்காதுடா” 

“ச்ச்.. எனக்கு என்னவோ போல் இருக்குதுடா” 

“டேய் அவ என்ன சொன்னாள்! ஒருவேளை அப்படி நடந்தால்னு தானே சொன்னா! அப்போ அப்படி இல்லைனு தானே அர்த்தம்!” 

சிறு புன்னகையுடன், “ஹ்ம்ம்.. கரெக்ட் டா! அப்போ அந்த பொண்ணுக்கு ஒன்றுமில்லை தானே!” என்று சிறு நிம்மதியுடன் கேட்டான்.

நண்பனும் சிறு புன்னகையுடன், “ஒன்றுமில்லைடா.. நீ நாளைக்கு அந்த பொண்ணு கிட்ட பேசு” 

“ஹ்ம்ம்.. சரிடா” என்றவன், “ஆனாலும் இந்த சொர்ணாக்காக்கு வாய் கொஞ்சமில்லை ரொம்பவே அதிகம்டா” என்றான். 

நண்பன் மென்னகையுடன், “இத்தனை நாள் நான் சொன்னதை எல்லாம் கொஞ்சமாவது கண்டுகிட்டியா! அப்படிப்பட்ட உன்னையே யோசிக்க வச்சிட்டாளே!” என்றான். 

“ஹ்ம்ம்.. நான் மாற இப்படி ஒரு சொர்ணாக்கா தேவைப்பட்டு இருக்கிறாள்” 

“ஹ்ம்ம்” என்றபடி எழுந்த நண்பன் தனது அறை வாயிலில் நின்றபடி, “அப்புறம் மச்சி.. ஜன்னல் மறைவில் இருந்து நான் தான் அவளை பார்த்தேன்” என்றதும்,

அவன் அதிர்ச்சியுடன் எழுந்து, “அடப்பாவி!!!!!” என்று கத்தினான். 

நண்பன் சிரிக்கவும் அவன் கடுப்புடன், “நண்பனா டா நீ! என்னை அந்த கிழி கிழிச்சிட்டு இருக்கா! அப்போவே கீழ வந்து சொல்லியிருக்க வேண்டியது தானே!” என்றான். 

“எதுக்கு! அப்புறம் அந்த மாரியாத்தா என் மேல் ஏறுறதுக்கா!” 

அவன் கடுப்புடனும் கோபத்துடனும் முறைக்க, நண்பனோ அலட்டிக்கொள்ளாமல், “இன்னைக்கு டின்னர் உன் டர்ன் தான்.. ஒழுங்கா சமைச்சு வை” என்றுவிட்டு அறைக்கதவை சாற்றிக் கொண்டான்.

 

 

விக்னேஷ் கையை பிடித்தபடி சென்ற திவ்யா, “உன் அக்காவிற்கு ஒண்ணுமில்லைடா.. அவனை பயமுறுத்த தான் அப்படி சொன்னேன்” என்றாள். 

“நிஜமா அக்காவுக்கு ஒண்ணுமில்லை தானே கா” 

“ப்ராமிஸ்ஸா ஒண்ணுமில்லைடா.. இவனை பார்த்தால் மட்டும் கொஞ்ச நேரத்திற்கு பயத்தில் இருக்கிறா.. அவ்ளோ தானே! இனி அதையும் சரி பண்ணிடலாம்” 

“ஹ்ம்ம்” 

“டேய்.. அவ எப்பொழுதும் போல் சிரித்து பேசிட்டு தானே இருக்கிறா?” 

“ஆமா” 

“பாதி நேரம் ஏதோ யோசனையிலோ பயத்திலோ இல்லை தானே!” 

“ஆமா கா” என்று அவன் சிறு தெளிவுடன் கூறவும்,

“அவனை பார்த்தால் கொஞ்சம் நல்லவனா தான் தெரிகிறான்.. இனி உன் அக்காவுக்கு தொல்லை தர மாட்டான்னு நினைக்கிறேன்.. பார்க்கலாம்.. இல்லைனாலும் திவ்யா இருக்க பயம் ஏன்! கவலைப் படாதே” என்று புன்னகையுடன் கூறியபடி நிமிர்ந்தவள் அதிர்ச்சியுடன் நடையை நிறுத்தினாள்.

அவள் எதிரே பவித்ராவின் தந்தை சந்திரன் நின்றுக் கொண்டிருந்தார்.

அவள் பார்வையை சுழற்ற, அவளையும் விக்னேஷையும் தவிர மற்றவர்கள் மறைந்து இருந்தனர். அவள் அந்த இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்த போது, சந்திரனின் வண்டியை தெருமுனையில் பார்த்ததுமே பவித்ரா வீட்டின் உள்ளே சென்றிருந்தாள். பவித்ரா ஓடுவதை பார்த்த மற்ற சிறுவர்களும் மறைந்திருந்தனர்.

இப்படி சிக்னல் கொடுக்காம பயபுள்ளைங்க எஸ் ஆகிருச்சுங்களே!’ என்று மனதினுள் சொல்லிக் கொண்ட திவ்யா வெளியே சந்திரனை பார்த்து சிரித்தாள்.

விக்னேஷோ மனதினுள், ‘இந்த அக்கா கையை விட்டா இப்போ கூட எஸ் ஆகிடலாமே!’ என்று புலம்பினான்.

Advertisement