Advertisement

பவித்ராவை பார்த்த அவளது அன்னை, “கொஞ்சமாவது பொறுப்பு இருக்குதா? ஆறு மணி வரை தூங்குற! திவ்யாவை பாரு.. பொறுப்பா நல்ல பிள்ளையா சீக்கிரம் எழுந்ததோடு விளக்கேற்றிய போது சாமி பாட்டெல்லாம் அழகா பாடினா” என்றார். 

பவித்ரா கடுப்புடன் தோழியை முறைக்க அவளோ வைஷ்ணவி பின் நின்று இவளுக்கு அழகு காட்டினாள்.

வைஷ்ணவி, “சரி சரி.. சீக்கிரம் முகத்தை கழுவி தலை சீவிட்டு வா.. காபி சேர்த்து வைக்கிறேன்” என்று கூறி செல்ல,

பவித்ரா, “நீ அம்புட்டு நல்லவளாடி!!!” 

திவ்யா விரிந்த புன்னகையுடன், “யா யா” என்றாள்.

பவித்ரா காபி அருந்தியதும் திவ்யா, “சீக்கிரம் வா.. கிளம்பிட போறான்க” 

“அம்மா கிட்ட சொல்லணுமே!” என்று பவித்ரா தயங்க,

திவ்யா, “ஆன்ட்டி பவி வெளியே விளையாடுற பசங்களை இன்ட்ரோ கொடுக்கிறேன் சொன்னா.. நாங்க கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வரோம்” என்று கூற,

பவித்ரா மானசிகமாக நெஞ்சில் கைவைத்தபடி நிற்க, திவ்யா மனதினுள் சிரித்து வெளியே அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றாள்.

வைஷ்ணவி, “எதுக்கு பவி?” 

“அது வந்து மா.. அது திவிக்கு கிரிகெட் ரொம்ப பிடிக்கும் அதான்” 

“சரி சரி.. போங்க” என்றதும் தான் பவித்ரா நெஞ்சில் இருந்து கையை எடுத்தாள்(மானசிகமாக தான்).

திவ்யா பவித்ராவை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினாள்.

 

 

வெளியே சென்றதும் விளையாடிக் கொண்டிருந்த பசங்க நடுவில் போய் நின்ற திவ்யா, “ஹாய் பசங்களா! நான் திவ்யா.. பவித்ராவோட தோழி.. என்னையும் உங்க ஆட்டத்தில் சேர்த்துக்கிறீங்களா?” என்றாள். 

பதிமூன்று பதினான்கு வயதில் இருந்த அந்த ஆறு பசங்களும் அவளை மேலும் கீழும் பார்த்தனர்.

ஒருவன், “கிரிகெட் பத்தி ஏதும் தெரியுமா?” என்று வினவ, 

திவ்யா கெத்தாக, “எ டு இசட்(Z) தெரியும்” என்றாள். 

“நீங்க பேட்டிங்கா பௌலிங்-ஆ?” 

“ரெண்டும் வரும்” 

மற்றொருவன், “ஓ!! பௌலிங்யில் எத்தனை வகை உண்டு தெரியுமா?” என்று கேட்டான். 

“லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின், பாஸ்ட் பௌலிங்.. அதுலயும்.. டாப்-ஸ்பின்னர், லெக்-பிரேக், ஆஃப்-பிரேக், ப்ளிப்பர், ஸ்லைடர், ஸ்லோவர் பால், பௌன்சர், யாகர், இன்-ஸ்விங்கர், அவுட்-ஸ்விங்கர், ரிவர்ஸ் ஸ்விங், லெக் கட்டர், ஆஃப் கட்டர் னு நிறைய இருக்குது” என்றவளை வாயை பிளந்து பார்த்தனர் அந்த பசங்க.

பவித்ரா ‘உங்க அலப்பறையை யாரிடம் காட்டுறீங்க!” என்பது போல் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்க, 

திவ்யா ஆர்வமுடன், “என்னடா சேர்த்துக்கிறீங்களா?” என்றாள்.

அந்த பசங்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “எங்க டீம் தான் திவ்யா அக்கா” என்று சண்டை போட ஆரம்பித்தனர்.

பவித்ரா அமைதியான குரலில், “அடிபாவி ஒத்துமையான பசங்களை ஒரே நிமிஷத்தில் இப்படி அடிச்சுக்க வச்சிட்டியே!” என்றாள். 

“சும்மா இருடி” என்றவள், “டேய் பசங்களா.. இன்னைக்கு ஒரு டீமில் இருக்கிறேன்.. நாளைக்கு ஒரு டீமில் இருக்கிறேன்.. ஓகே வா?” என்றாள். 

“சரி” என்றவர்கள் அடுத்து, “இன்னைக்கு எங்க டீம் தான்” என்று மீண்டும் சண்டை போட ஆரம்பித்தனர்.

தலையில் கை வைத்தபடி நிமிர்ந்த திவ்யா பவித்ராவின் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த ஒருவன் அவளை பார்த்துக் கொண்டிருந்த பார்வையில் அவனை முறைத்துவிட்டு தோழியிடம், “யாருடி அந்த குரங்கு?” என்று கேட்டாள். 

“யாரை கேட்கிற?” 

“உன் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருப்பவன்” 

“தெரியலையே” 

“உன்னையெல்லாம்” என்று பல்லை கடித்தவள், சண்டை போட்டுக் கொண்டிருந்த பசங்களிடம், “சரி.. பூவா தலையா போடலாம்” என்றதும் சண்டை ஒருவாரு நின்றது.

பசங்க பூவா தலையா போட தயாராக, பவித்ரா, “உண்மையிலேயே நல்லா விளையாடுவியா? இவன்க சண்டை போட்ட அளவிற்கு நீ வொர்த்தா? மானத்தை வாங்கிறாதடி” என்று முணுமுணுக்க,

திவ்யா புன்னகையுடன், “வெயிட் அண்ட் ஸீ பேபி” என்றாள்.

பூவா தலையா போட்டு திவ்யா யார் குழு என்பது முடிவானதும் அவளது குழு தலைவனை பார்த்து, “உன் பெயர் என்ன?” என்று கேட்டாள்.

அவன், “ராஜா” என்று கூற, எதிர் குழு தலைவன் சிரிப்புடன், “ராசப்பா” என்றான்.

திவ்யா குழு தலைவன் அவனை முறைத்து, “ராஜானு சொல்லுங்க கா” என்றான்.

மற்றவன் சிரிப்புடன், “அவன் பெயர் ராசப்பா தான் கா” என்றான்.

“டேய் வேணாம்” 

“உண்மையை தானே சொன்னேன்” 

“சரி சரி திரும்ப சண்டையை ஆரம்பிக்காதீங்க.. இனி உன்னை லயன் கிங்-னு கூப்பிடுறேன்.. ஓகே வா!” 

“அக்கா!” என்று ராஜா சிணுங்க, திவ்யா புன்னகையுடன், “நீ தானே ராஜானு கூப்பிட சொன்ன.. ராஜா-னா கிங் தானே!” என்றவள் மற்றவனை பார்த்து, “உன் பெயர் என்ன?” என்று கேட்டாள். 

“விக்னேஷ்.. விக்கினு கூப்பிடுவாங்க” 

“விக்கி.. கொக்கி.. ஹா.. இனி நீ கொக்கி குமாரு.. ஓகே வா?” 

ராஜா வாய்விட்டு சிரிக்க, விக்னேஷ் அவனை முறைத்து விட்டு, “அவனுக்கு மட்டும் கிங்-னு அழகா பேர் வச்சீங்க!” 

“உனக்கும் சூப்பர் பெயர் தான்டா.. கொக்கி குமார் ஒரு டான் தானே!” 

“ஹ்ம்ம்” என்று அவன் அரை மனதுடன் கூற, திவ்யா மற்றவர்கள் பெயரை கேட்டு அவர்களுக்கு, சைல்ட் சின்னா, சோட்டா பீம், டக்லஸ், லட்டு பையா என்று அருமையாக பட்டப் பெயரை வைத்தாள்.

அதன் பிறகு மெல்ல ராஜாவிடம், “பவித்ரா வீட்டிற்கு எதிர் வீட்டில் இருப்பவன் யாருடா? அவன் பார்வையே சரி இல்லையே!” என்றாள். 

“அந்த அண்ணாக்கு வேறு வேலையே இல்லைகா.. நாங்க விளையாடும் போது எங்க விளையாட்டை பார்ப்பது போல் இந்த தெருவில் இருக்கும் அக்காக்களை சைட் அடிப்பார்.. ஆனா இன்னொரு அண்ணா இருக்கார்.. ரொம்ப நல்லவர்.. எங்களுக்கு ப்ரீயா பாடம்லாம் சொல்லி தருவார்.. நல்ல பேசுவார்..” 

“சரி விளையாடலாம் வா” என்றபடி விளையாட தொடங்கினாள். முதலில் அவளது குழு பௌலிங் செய்தது. தனது திறமையால் முப்பது ரன்னில் அவர்களை அவுட் ஆக்கியிருந்தாள்.

அடுத்து அவள் பேட்டிங் செய்துக் கொண்டிருந்த போது எதேர்ச்சையாக திரும்ப அவன் இவளை பார்த்து கண்ணடிக்கவும் பல்லை கடித்தபடி முகத்தை திருப்பிக் கொண்டாள். அதன் பிறகு முகத்தில் கோபத்தை காட்டாமல் வாய் அசைக்காமல் ராஜாவை பார்க்காமல், “டேய் லயன் கிங் கொக்கி குமாரை லட்டு பால் போடச் சொல்லு.. இந்த பாலை கவுன்ட் பண்ண வேண்டாம்னு சொல்லு” என்றாள்.

“ஏன் கா?” 

“காரணமா தான்.. சொன்னதை செய்” என்றதும் யோசனையுடன் அவள் சொன்னதை விக்னேஷிடம் சொல்லிட்டு வந்தவன் புன்னகையுடன், “பார்த்து செய் கா.. ஆம்புலன்ஸ் வர மாதிரி செய்திராத” என்று கூற, அவள் புன்னகையுடன் பந்திற்காக தயாரானாள்.

விக்னேஷ் அவள் சொன்னது போல் பந்தை போடவும் அவள் அடித்த பந்து அவளை பார்த்து கண்ணடித்தவனின் கண்ணை பதம் பார்த்தது.

ராஜா, “செம கா” என்று கூற, விக்னேஷ் வலது கை பெருவிரலை தூக்கி காட்டினான்.

விக்னேஷ் பந்தை எடுக்க போக, “டேய் கொக்கி குமாரு.. நான் போறேன்” என்றபடி இவள் ஓடினாள்.

அந்த இளைஞன் செய்த சேட்டை அறியாத பவித்ரா திவ்யாவின் செயலில் பதற்றத்துடன் நின்றுக் கொண்டிருந்தாள்.

பவித்ராவின் எதிர் வீட்டிற்கு சென்று பந்தை எடுத்தவள் அந்த இளைஞனை நெருங்கினாள்.

இவள் வருவதை பார்த்தவன் வலியை பொறுத்துக் கொண்டு, “பரவா இல்லைங்க” என்று அசடு வழிந்தான்.

“நான் உன்னிடம் சாரி கேட்க வரலை.. ஏன்னா, தெரிந்தே தான் குறி பார்த்து அடித்தேன்” என்றவள் அடுத்து சொன்னதில் அவன் பேய்யரைந்தது போல் நிற்க, இவளோ புன்னகையுடன் வெளியே சென்றாள்.

திவ்யா வந்ததும் ராஜாவும் விக்னேஷும் கை கொடுத்து கொண்டாடினர்.

பவித்ரா, “சும்மா இருங்கடா.. இவளை சும்மாவே கையில் பிடிக்க முடியாது.. இதில் நீங்க வேற ஏத்தி விடாதீங்க” என்றவள் தோழியை பார்த்து, “ஏன்டி வந்த அன்னைக்கே வினையை கூட்டுற?” என்று திட்டினாள். 

திவ்யா பதில் சொல்லும் முன் விக்னேஷ் கோபத்துடன், “விஷயம் தெரியாம பேசாதீங்க கா.. அவன் நம்ம திவி அக்காவை பார்த்து கண்ணடித்தான் அதான் அக்கா அவன் கண்ணுலேயே அடிச்சுட்டாங்க” என்றான். 

பவித்ரா, “அப்படியாடி?” என்று அதிர்ச்சியுடன் கேட்க, அவளோ தோளை குலுக்கிவிட்டு, விக்னேஷை பார்த்து, “நீ ஏன்டா இவ்ளோ பொங்குற!” என்று கேட்டாள். 

அவன் பல்லை கடித்துக் கொண்டு, “அவன் என் அக்காவையும் பார்த்து கண்ணடித்து இருக்கிறான்.. என்னால் ஒண்ணும் செய்ய முடியலை.. அப்பா அம்மா கிட்ட சொல்லலாம்னா அக்கா பயப்படுறா” 

“உன் அக்கா என்ன படிக்கிறா?” 

“பி.இ பஸ்ட் இயர்” 

“எல்லோரிடனும் இப்படி தான் பண்ணுவானா? ரொம்ப தொல்லை கொடுப்பானா?” 

“தொல்லைனு இல்லை ஆனா அக்கா இவனை பார்த்தா பயப்படுவா..” 

“சரி நான் உன் அக்காவிடம் பேசுறேன்..” என்றவள் தோழியிடம், “நீ இவன் யாருனே தெரியாது சொன்ன!” என்றாள். 

“நிஜமாவே இன்னைக்கு தான் நான் இவனை பார்க்கிறேன்” 

விக்னேஷ், “பவி அக்கா குனிஞ்ச தலை நிமிர்ந்தா தானே அவனைப் பார்க்க முடியும்.. இவன் இங்கே வந்து ஒரு மாசம் தான் ஆகுது.. அது போக சந்திரன் அங்கிள் என்றால் கொஞ்சம் பயம் உண்டு.. எதிர் வீடுனு பவி அக்காவிடம் வால் ஆட்டியிருக்க மாட்டான்” என்றான். 

“பார் டா!  உன் வயசு என்னடா?” 

“போர்டீன்.. நயன்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்” 

“செம விவரமா பொறுப்பா இருக்கடா” 

“அக்கா கூட பிறந்து இருக்கிறேனே!” என்றதும் திவ்யா புன்னகையுடன் அவன் தலையை செல்லமாக கலைத்தாள்.

பவித்ரா, “இதெல்லாம் இருக்கட்டும்.. அவன் ஏன்டி பேயை கண்டது போல் முழித்தான்?” என்று கேட்டாள். 

“அதுவா” 

“என்ன சொன்ன?” 

“இன்னொரு முறை கண்ணடித்தா அடுத்த பால் கண்ணை தாக்காது.. நேரா குடும்ப கட்டுப்பாடு தான்னு சொன்னேன்” என்று அலட்டிக் கொள்ளாமல் கூற பவித்ரா வாயடைத்துப் போய் பார்க்க, சிறுவர்கள் வாய்விட்டு சிரித்தபடி, “நீங்க சான்ஸே இல்லை கா”, “செம கா”, “சூப்பர் கா” என்று வித விதமாக அவளை பாராட்டினர்.

இணைய காத்திருப்போம்….

Advertisement