Advertisement

“அப்படியா! உனக்கு தெரியுமா?” என்று சிறு ஆர்வத்துடன் கேட்டாள்.

“ஹ்ம்ம்.. உன்னை யாரும் கடத்தலை, ஆனா நீ பிறந்ததும் உன்னை உன் தாய் மாமா ஒரு ஆளிடம் கொடுத்து ஆசிரமத்தில் சேர்க்கச் சொல்லிட்டு உன் அம்மா கிட்ட நீ பிறக்கும் போதே இறந்துட்டதா சொல்லிட்டார்..

அது கூட தன் தங்கையின் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைத்து தான் அப்படி செய்துட்டார்.. நீ உயிருடன் இருக்கும் உண்மை தெரிந்ததில் இருந்து உன் அம்மா ஒற்றை சொந்தமான அண்ணனுடன் பேசுவதை நிறுத்திட்டாங்க” 

“என்னடா சொல்ற?” 

“அதுமட்டுமில்லை.. அவங்க உன்னை கருவில் கலைச்சிட்டதா சொன்னது கூட உன் அப்பாவை தவிர்க்க தான்.. உன் அப்பா உன் அம்மாவிற்கு செய்த கொடுமையைப் பற்றி தெரிந்த உன் பாட்டி அதாவது உன் அப்பாவின் அம்மா சுபாம்மா கிட்ட போய் உன் அப்பாவை கல்யாணம் செய்துக்க கேட்டு இருக்காங்க..

அவங்க மறுக்கவும், உன் அப்பாவிற்கு ‘தன்னை ஒரு பெண் வேணாம்னு சொல்வதா? அதுவும் உன் அம்மா!’ என்று தன்மான பிரச்சனை ஆகிருச்சு.. அவர் உன் அம்மாவை தன்னை கல்யாணம் செய்துக்கச் சொல்லி போர்ஸ் பண்ணவும், அவங்க வேறு வழி இல்லாம கருவை கலைச்சிட்டதா பொய் சொல்லி இருக்காங்க..

அப்புறம் யாரிடமும் சொல்லாம உன்னோட தாய் மாமா உன் அம்மாவை கூட்டிட்டு போய்ட்டார்..

அப்புறம் உன் பாட்டி சொல்லி உன் அப்பா தன்னை விரும்பின தன் தாய் மாமா மகளான உன் சாரும்மாவை கல்யாணம் செய்திருக்கிறார்..” 

அப்பொழுது ராஜாராமிடமிருந்து ஹரீஷிற்கு அழைப்பு வந்தது.

அவன் எடுத்ததும், அவர், “திவிமா எப்படி இருக்கா?” என்று தான் கேட்டார். 

“இப்போ கொஞ்சம் பரவா இல்லை சார்” 

“ரெண்டு பேரும் என் ரூமுக்கு வாங்க.. இப்போ நீங்க போனை கட் பண்ணாதீங்க.. முதலில் திவ்யாவை என் ரூமிற்கு வர சொல்லுங்க.. அப்புறம் ரெண்டு நிமிஷம் கழித்து நீங்க வாங்க” 

“சரி சார்” 

“இன்னும் என்ன சார்னு கூப்பிடுறீங்க?” 

“காலேஜ்ஜில் இதான் சார் சரி” 

“சரி வாங்க” 

ஹரீஷ் அழைப்பைத் துண்டிக்காமல் கைபேசியை சட்டை பையில் வைத்துவிட்டு, “சார் ரெண்டு பேரையும் அவர் ரூமுக்கு வர சொல்றார்.. முதலில் உன்னை வர சொன்னார்.. நீ போய் ரெண்டு நிமிஷத்தில் நான் வரேன்.. நீ இப்போ போ” 

“எதுக்குடா?” 

“போனால் தெரியப் போகுது” 

“சரி.. நீ உடனே வா” என்றுவிட்டு கிளம்பினாள்.

கைபேசியை எடுத்த ஹரீஷ், “சொல்லுங்க சார்” 

“திவிமா எதை நினைத்து கலங்குறா?” 

“அது..” 

“ராகவனை நினைத்து வருந்துறாளா?” 

“ஆமா சார்.. அவ மனசே அவள் செய்தது சரி தப்புனு பேசி அவளை வதைக்குது.. அதுவும் இப்போ அவர் முன்னிலையில் உங்களை அப்பானு கூப்பிட்டு, அதன் பிறகு பேசியது எல்லாம் அவரை ரொம்ப காயப்படுத்தி இருக்கும்னு ரொம்ப பீல் பண்றா” 

“ஹ்ம்ம்.. அவ சொல்றது சரி தான்.. ராகவன் ரொம்பவே உடைந்து போனது போல் தான் தெரிந்தது.. உடனே வேற கிளம்பிட்டார்.. திவிமா உடனே என்னை அப்பானு அழைப்பாள் என்றோ, அப்படி பேசுவானோ நானே எதிர்பார்க்கலை.. சரி திவிமா வந்திடுவா.. நான் வைக்கிறேன்.. நீங்களும் வாங்க” என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.

அவர் அழைப்பைத் துண்டிக்கவும், திவ்யா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

அவர் எழுந்து வந்து அவளை தோளில் சாய்த்து, “இந்த குட்டி மண்டைக்குள் என்ன ஓடுது? என்ன கலக்கம்? யாரும் உன் பிறப்பைப் பற்றி பேச மாட்டாங்க.. நீ பிறந்தது நம்ம ஹாஸ்பிடலில் தான்.. அங்கே இருக்கும் ரெக்கார்டில் உன் அப்பா பெயராக என் பெயர் தான் இருக்குது..” 

அவள் ஆச்சரியத்துடன் அவரை பார்க்க,

அவர், “சுபாவின் அண்ணன் சரவணனும்  நானும் பிரெண்ட்ஸ்.. எனக்கு சுபாவை ரொம்ப பிடிக்கும்.. என் காதலை அவளிடம் சொல்றதுக்கு முன்னாடி என்னென்னவோ நடந்துருச்சு.. என் அம்மாவுக்கு என் காதல் பற்றி தெரியும்.. சுபா நிலை பற்றி தெரிந்த பிறகும் எனக்கு மனைவினா அது சுபா தான்னு நான் சொன்னதும், அவங்களும் சந்தோஷத்துடன் ஏத்துகிட்டாங்க.. அவங்க தான் சுபாக்கு டெலிவரி பார்த்தாங்க.. என் சின்ன வயசுலேயே என் அப்பா இறந்துட்டாங்க..

நீ பிறக்குறதுக்கு முன்னாடியே உன் அம்மாவிடம் என் காதலை சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்.. குழந்தை பிறக்கும் போதே என் குழந்தையா தான் பிறக்கணும்னு நினைத்தேன், ஆனா உன் அம்மா சம்மதிக்கலை.. என் அன்பிற்கு அவள் தகுதியற்றவள்னு நினைத்தா.. அவ வாழ்க்கை அவளோட குழந்தை மட்டும் தான்னு சொல்லி என்னைக் கல்யாணம் செய்துக்க மறுத்துட்டா.. அப்புறம் நீ பொறந்த..

சரவணன் சுபா வாழ்க்கையை நினைத்து உன்னை யாரிடமோ கொடுத்து அனாதை ஆசிரமத்தில் சேர்க்கச் சொல்லிட்டான்.. அதை செய்த பிறகு தான் அம்மாவிடமும் என்னிடமும் சொன்னான்.. கூடவே நீ பிறக்கும் போதே இறந்துட்டதா சுபா கிட்ட சொல்லச் சொன்னான்.. நாங்க அவனை திட்டி உன்னை கூட்டிட்டு வர சொன்னோம்.. அவன் அரை மனதுடன் அந்த ஆளைப் பார்க்க போனான்.. ஆனா அவரோ ஒரு அக்சிடென்ட்டில் இறந்திருந்தார்.. உன்னை யாரிடம் கொடுத்தார்னு கண்டு பிடிக்க முடியலை.. அப்புறம் சுபா கிட்ட நீ இறந்துட்டதா சொன்னோம்.. அப்போ அவ எப்படி அழுதா தெரியுமா!

அப்புறம் போராடி அவளோட மனதை கரைத்து என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதம் வாங்கினேன்.. அப்புறம் மெல்ல மாறினா ஆனா ஜனனி பிறந்தப்ப எப்போதும் ஏதோ யோசனையிலேயே இருந்தா.. என்னன்னு கேட்டபோ உன்னை நினைத்து ரொம்ப அழுதா.. அப்போ தான் நீ உயிருடன் இருப்பதை அவளிடம் சொன்னேன்.. ரொம்ப சந்தோஷப்பட்டா.. அதே நேரத்தில் ரொம்ப கோபப்பட்டா..

சரவணன் கூட இன்னையவரை பேசுறது இல்லை.. என் மேல் கூட ரொம்ப கோபப்பட்டு பேசாம இருந்தா.. என் சுயநலத்திற்காக உன்னை அவளிடமிருந்து பிரிச்சிட்டதா கோபப்பட்டா.. ஹாஸ்பிடலில் இருந்த டிடேல்ஸ் காட்டினேன்.. உன் அப்பாவா என் பெயர் இருப்பதை பார்த்து தான் கொஞ்சம் சமாதானம் ஆனா..

அப்புறம் ஒரு டிடெக்டிவ் மூலம் உன்னை கண்டுபிடிச்சு அந்த ஆசிரமத்திற்கு நாங்க போன போது ராகவனும் சாருலதாவும் உன்னை தத்தெடுத்திட்டு இருந்தாங்க.. உன்னை பார்க்கும் போது சாருலதா முகத்தில் இருந்த பரவசத்தையும் அன்பையும் பார்த்து சுபா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டா..

ஆனாலும் உன்னை நான் கண்கானிச்சிட்டே தான் இருந்தேன்.. உண்மை தெரிந்து நீ ஆசிரமத்திற்கு போனதை நான் வைத்த ஆட்கள் எப்படியோ கவனிக்க விட்டுட்டான்க.. உன்னை மீண்டும் கண்டு பிடிக்கும் வரை நாங்க தவிச்சது எங்களுக்குத் தான் தெரியும்.. அதற்கு மேல் உன்னை அங்கே விட்டு வைக்க கூடாதுனு சுபா சொன்னதும் தான் நானும் சுபாவும் அன்னைக்கு அங்கே வந்தோம்..” என்று நிறுத்தியவர்,

“அன்னைக்கு நாங்க பேசிட்டு இருந்ததை நீ கேட்டுட்டு இருந்தது எனக்கு தெரியாதுடா.. தெரிந்து இருந்தால் சுபாவை தடுத்து கூட்டிட்டு வந்திருப்பேன்.. ராகவனிடம் தனியா பேசியிருப்பேன்.. ச்ச்.. சாரிடா” 

“நீங்க எதுவும் செய்யலையே!”

 “அவங்க ரெண்டு பேரும் பேசியது உன்னை எவ்ளோ காயப்படுத்தி இருக்கும்னு எனக்கு தெரியும் டா.. இப்பவரை தான் பேசியதை சுபா உணரலை அதனால் அது உன்னை வதைப்பதையும் அவள் அறியவில்லை” 

“பழசை விடுங்க” என்றவள் அப்பொழுது தான் உணர்ந்தவளாக, “ரிஷியை காணும்” என்றாள்.

அவர் மென்னகையுடன், “நமக்கு தனிமை கொடுக்க நினைத்து இருப்பார்” என்றவர், “இன்னொரு முறை அப்பானு கூப்பிடுடா” என்று ஆசையுடன் கேட்டார்.

சட்டென்று அவளுக்கு ராகவனின் ஏக்கம் நினைவிற்கு வர, அவள் கண்கள் அவளையும் மீறி கலங்கியது.

அவள் முகத்தை தன் நெஞ்சோடு அணைத்தவர், “சரி விடுடா.. உனக்கா எப்போ வருதோ அப்போ கூப்பிடு” என்றார். 

சட்டென்று முகத்தை நிமிர்த்தியவள், “அப்படி இல்லை ப்பா.. ஆனா அது.. அவர்..” என்று நிறுத்தி தயங்க,

ராஜாராம், “என்னிடம் ப்ரீயா பேசுடா.. நீ ராகவனை நினைத்து கலங்குவது எனக்கு புரியுது..” என்றார். 

“எது எப்படியோ! அவர் என்ன தான் மன்னிக்க முடியாத தப்பைச் செய்து இருந்தாலும், எனக்கு நல்ல அப்பாவா தான் இருந்தார்.. இப்பவும் அவர் மேல் எனக்கு கோபமும் வெறுப்பும் இருக்கிறது.. அவரை என்னால் மன்னிக்க முடியலைத் தான், ஆனாலும் சில நேரம் மனசு கேட்க மாட்டிக்குதே!” 

அவள் கன்னத்தை வருடியவர், “உன் அம்மா போலவே இருக்கடா.. என்ன தான்  தைரியமானவளா இருந்தாலும், உங்க மனசு பூ போல் ரொம்ப மென்மையானது.. ராகவன் செய்ததிற்கு அவனை கொலை செய்யும் அளவிற்கு எனக்கு அவன் மேல் கோபம் இருந்தது தான்.. ஆனா இப்போ உனக்காக அவன் ஏங்குவதைப் பார்க்கும் போது, எனக்கே பாவமா தான் இருக்குது.. என்னைக் கேட்டால், காலம் தான் இதற்கு சிறந்த மருந்து.. கொஞ்ச நாள் ஆறப்போடு டா..”  என்றார். 

“ஹ்ம்ம்” 

“உங்க பாசப்பிணைப்பில் நானும் சேர்ந்துக்கலாமா?” என்ற ஜனனி குரலில் இருவரும் திரும்பினர். அங்கே சுபாஷினியும் இருந்தார்.

இப்பொழுது சுபாஷினியைப் புரிந்துக் கொண்ட திவ்யா முதல் முறையாக பாசத்துடன் அவரை பார்த்தாள். அந்த ஒற்றை பார்வையிலேயே சுபாஷினி கலங்கிய விழிகளுடன் பலமிழந்து தரையில் அமர்ந்தார்.

ராஜாராம், “சுபா” என்றபடி அவரை நோக்கிச் செல்ல, அவருக்கு முன் அவரது மகள்கள் சுபாஷினியின் இரு புறம் அமர்ந்திருந்தனர்.

திவ்யா, “அ..ம்..மா” என்று மெல்லிய கரகரத்த குரலில் அழைக்கவும், சுபாஷினி கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவர் திவ்யாவை இறுக்கமாக அணைத்துக்கொள்ள, அவளும் அவரை அணைத்துக் கொண்டு, “சாரி மா” என்றாள்.

ஜனனி மெல்ல எழுந்து தந்தையின் தோளில் சாய்ந்துக் கொண்டாள். இருவரும் அம்மா மகள் இணைப்பை மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

சுபாஷினி, “சாரி எதுக்குடா! நீ எதுவும் செய்யலையே! உன் நிலையில் யாரா இருந்தாலும் இப்படி தான் நடந்துப்பாங்க” என்றார். 

அவர் கண்களை துடைத்தவள், “எனக்கு ஒரு அடி போட்டு சொல்றதை கேளுடினு சொல்லி உண்மையைச் சொல்லி இருக்கலாமே!” என்று சிறு ஆதங்கத்துடன் சொன்னாள். 

“பழையதை விடுடா.. இனி நாம சந்தோஷமா இருப்போம்” என்று சுபாஷினி கூற,

ஜனனி, “யூ டோன்ட் வொர்ரி சிஸ்.. இனி அதை நான் பாலோ பண்றேன்” என்றாள்.

திவ்யாவும் சுபாஷினியும் அவளை முறைக்க,

அவளோ, “எவ்ளோ நேரம் தான் இந்த படத்தை ஓட்டுவீங்க.. வெளியே தனியா மாம்ஸ் பாவம் போல உட்கார்ந்து இருக்கார்” என்றாள். 

திவ்யா மெல்லிய புன்னகையுடன், “ஏன் நீ பேச வேண்டியதானே!” 

“எங்கே! அவர் தான் உன்னைத் தவிர வேறு பெண்ணுடன் பேச மாட்டாரே!” 

“நீ என் தங்கைனு தெரிந்த பிறகு அன்னைக்கு உன்னிடம் பேசலையா?” என்று வினவி புருவம் உயர்த்த,

ஜனனி, “எப்பா! இப்போவே மாம்ஸ்க்கு என்னமா சப்போர்ட் பண்ற!” 

“உண்மையைச் சொன்னேன்” என்றவள் சுபாஷினியை எழுப்பியபடி தானும் எழுந்து கைபேசியில் ஹரீஷை அழைத்தாள்.

அவன் அழைப்பை எடுத்ததும் அவள், “உள்ளே வா” என்றாள். 

“இல்லைடா.. நான்..” என்று அவன் தயங்க,

இவள், “உன்னை உள்ளே வர சொன்னேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

ஹரீஷ் சிறு தயக்கத்துடன் உள்ளே வர வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்த ஜனனி, “அப்பா இனி உங்க நிலைமை தான் மாம்ஸ்க்கும் போல! நான் கூட மாம்ஸ் ஒரு டெரர் பீஸ்னு நினைத்தேன்.. ஆனா..” என்று நிறுத்தி மீண்டும் சிரிக்க,

ஹரீஷின் கையை இருகரம் கொண்டு பற்றிய திவ்யா, “ஓய்! என் ரிஷி என்னிடம் மட்டும் தான் பாசக்காரன்.. மத்தவங்களுக்கு டெரர் தான்” என்றாள். 

“ஓ” என்று ஜனனி ராகம் இழுக்க, ராஜாராமும் சுபாஷிணியும் புன்னகையுடன் பார்த்தனர்.

சுபாஷினி, “வாங்க மாப்பிள்ளை” என்று புன்னகையுடன் கூற, ஹரீஷ் அவரை பார்த்து சிறு தலை அசைப்புடன் புன்னகைத்தான்.

‘நான் உன்னுடன் தான் எப்பொழுதும் இருக்கிறேன்’ என்பதை சொல்லாமல் சொல்வது போல் திவ்யா ஹரீஷ் கையைப் பற்றியதும், அவன் மனம் மகிழ்ச்சி அடைந்தாலும் பெரியவர்கள் முன் அப்படி இருக்க சங்கோஜப் பட்டு கையை உருவ பார்த்தான்.

அவனைப் பார்த்த திவ்யா, “சுபிமாவும் ராஜா அப்பாவும் ஒன்னும் சொல்ல மாட்டங்க.. அமைதியா இரு” என்றாள்.

ராஜாராம், “ப்ரீயா இருங்க மாப்பிள்ளை.. என்னை சேர்மேனா பார்க்காமல் அப்பாவா பாருங்க” என்று கூற,

ஹரீஷ், “மாமா அத்தை எங்களை ஆசிர்வாதம் செய்யுங்க” என்று கூறி திவ்யாவுடன் அவர்கள் காலில் விழுந்தான்.

இருவரும், “நல்லா இருங்க.. எப்போதும் இதே அன்புடன் சந்தோஷமா இருங்க” என்று மனமார வாழ்த்தினர்.

ஹரீஷ் ராஜாராமிடம், “ரொம்ப நேரம் நாம இங்கேயே இருக்க முடியாது.. அதுவும் நீங்க அங்கே இருக்கணும்” என்று சிறு தயக்கத்துடன் கூற,

ஜனனி கைகளை தேய்த்தபடி, “ஸ்ப்பா.. உங்கள் கடமை உணர்ச்சியை கண்டு புல்லரிக்குது மாம்ஸ்” என்றாள். 

“வீட்டில் ஒருத்தருக்காது பொறுப்பு வேணாமா?” என்று ஹரீஷ் கண்ணில் சிறு புன்னகையுடன் கூற,

ஜனனி, “அப்போ அப்பாவுக்கு பொறுப்பில்லைனு சொல்றீங்களா!” என்று குறும்புடன் வினவ,

“ஜனனி” என்று கண்டிப்புடன் அழைத்த சுபாஷினி, “தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை.. இன்னும் விளையாட்டு பொண்ணாவே இருக்கா” என்றார். 

“இப்போ இப்படி இல்லாமல் வேற எப்போ இருக்கிறது” என்று மென்னகையுடன் அவரிடம் கூறியவன் ஜனனியைப் பார்த்து, “நான் மாமாவை சொல்லலை.. என் வீட்டை பற்றி சொன்னேன்” என்றவனது பார்வை தன்னவளை நோக்கியது.

ஜனனி, “இப்போ நாங்க மூணு பேரும் மறைந்து போயிருப்போமே!” 

சுபாஷினி, “என்னடி சொல்ற?” 

“அதுவா மா! அக்காவும் மாம்ஸ்ஸும் கனவு லோகத்தில் நுழையும் போது, நாம மறைந்து போயிருவோம் தானே! அதை சொன்னேன்” 

ஹரீஷும் திவ்யாவும் சிறிது அசடு வழிய, ராஜாராம், “சரி வாங்க ப்ரோக்ராம் நடக்கிற இடத்திற்கு போகலாம்” என்றார்.

ஹரீஷ், “நீங்க எல்லோரும் முதலில் போங்க சார்.. நான் பின்னாடி வரேன்” என்றான்.

திவ்யா கண்ணசைவில் தன்னவனிடம் விடை பெற்று சென்றாள்.

 

 

அங்கே சென்றதும் திவ்யா, “நான் பவிகிட்ட போறேன்” என்று கூறவும் சுபாஷினி சிறு தவிப்புடன் பார்க்க,

திவ்யா புன்னகையுடன் அவர் கையைப் பற்றி, “நான் எப்படி இருக்கிறேனோனு கவலையில் இருப்பா மா.. நான் போய் பேசிட்டு வரேன்” என்றதும் அவர் முகம் தெளிந்தது.

ஜனனி, “பவி அக்கா விஜய் அண்ணா போல் எனக்கு பிரெண்ட்ஸ் இல்லையே!” என்று கூற,

திவ்யா, “அதான் இனி நான் இருக்க போறேனே” என்று கூற,

ஜனனி புன்னகையுடன் திவ்யாவுயடன் கைதட்டினாள்.

 

 

கடைசி வரிசையில் சென்று அமர்ந்த திவ்யா பவித்ராவையும் விஜயையும் அங்கே வர சொன்னாள். அவர்கள் வந்ததும், இருவருக்கும் நடுவில் அமர்ந்தபடி தாழ்ந்த குரலில் நடந்ததை சுருக்கமாக கூறினாள்.

பின், “ரிஷி கிட்டயும் ராஜா பா கிட்டயும் பேசிய பிறகு மனசு கொஞ்சம் தெளிவா இருக்குது..” என்றாள்.

“சேர்மேன் சார் சொன்னது போல் காலம் தான் இதற்கு மருந்துடா.. பார்க்கலாம்” என்ற விஜய், “அப்புறம்.. எப்போ கல்யாணம்?” என்று கேட்டு கண் சிமிட்டினான்.

திவ்யா சிறு வெட்கத்துடன், “நான் படிப்பை முடித்த பிறகு” என்றாள். 

“பார் டா! ஹரி சார் பேச்சு வந்தாலே பயபுள்ளைக்கு வெக்க வெக்கமா வருது” 

“டேய்” என்றபடி அவன் கையில் ஒரு அடி போட்டாள்.

அதன் பிறகு இருவரிடமும் பேசியபடி ஹரீஷிடம் குறுஞ்செய்தி மூலம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

சிறிது நேரம் கழித்து திவ்யாவிற்கு ராகவனின் நண்பரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசியவள் சிலையென அமர்ந்திருக்க பவித்ராவும் விஜயும் அவளை அழைத்துப் பார்த்தும் பலனில்லை.

இவற்றை தள்ளி இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஹரீஷ் திவ்யாவின் கைபேசிக்கு அழைத்தான்.

Advertisement