Advertisement

விலகல் 5

நாட்கள் நகர அவர்களது மூன்றாம் ஆண்டு இறுதி தேர்வு வந்தது. கடைசி தேர்வை முடித்துக் கொண்டு மூவரும் வெளியே வந்தனர்.

விஜய், “பேப்பர் ரொம்ப கஷ்டமா இருந்தது.. நீங்க எப்படி எழுதி இருக்கீங்க?” என்று கேட்டான். 

பவித்ரா, “ஓகே” என்று கூற,

திவ்யா, “கஷ்டமா இருந்ததா? எனக்கு அப்படி ஒன்றும் தெரியலையே!” என்றாள். 

விஜய், “நீ ஒரு புரியாத புதிர் தான் திவி” என்றதும், அவள் சிரிக்கவும்,

“அது எப்படி கஷ்டமான பேப்பரை எல்லாம் அசால்ட்டா டீல் பண்ணி பஸ்ட் மார்க் வேற வாங்குற?” என்றான். 

அவள் தோள் குலுக்கவும், அவன் கடுப்புடன், “பதில் சொல்ல மாட்டியே! ஏன் வேணும்னே சிலதில் பெயில் ஆகிற? அதுவும் ரொம்ப ஈஸியான பேப்பரில்?”

அவள் உதட்டை பிதுக்க, “நான் உன் நண்பன் தானே திவி?” என்று கேட்டான். 

“என்னைப் பற்றி சொன்னால் தான் என்னை உன் தோழியா………..” 

“லூசு மாதிரி பேசாதே! இதெல்லாம் நீ வேணும்னு செய்றனு தெரியாம இல்லை..  ஏதோ உன் மனதை போட்டு படுத்துது.. அதை தெரிந்து என்னால் முடிந்தால் அதை தீர்க்க தானே கேட்கிறேன்” 

“நீ தீர்க்க கூடியதா இருந்தால் உன்னிடம் சொல்ல மாட்டேனா?” 

“அதை என்னிடம் சொன்னால் தானே தெரியும்” 

“என் கஷ்டம் என்னோட போகட்டும்” 

“அப்போ நான் யார் உனக்கு?” 

“நீ எப்படி நல்ல தோழனா என் துயர் நீக்க நினைக்கிறியோ அதை போல் தான் நானும் நல்ல தோழியா என் துயரை தெரிந்து நீ வருந்த வேண்டாம் என்று நினைக்கிறேன்.. என்னை நினைத்து இவள் ஒருத்தி வருந்துவது போதாதா?” 

“ஏன்டி இப்படி பண்ற?” 

“ப்ளீஸ் டா.. அதை பற்றி பேசி என் ரணத்தை கிளற நான் விரும்பவில்லை.. எனக்கு உதவி வேணும்னா உன்னை தான் கேட்பேன்” 

“ச்ச்.. போடி” 

“அங்கே பார்.. அருண் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கிறான்” 

“இப்போ மட்டும் என்னை கிளப்புவதில் குறியா இருப்பியே!” 

அவள் புன்னகைக்கவும், “சரி நான் கிளம்புறேன்.. ரெண்டு பேரும் சீக்கிரம் கிளம்புங்க” என்று அக்கறையுடன் கூறியவன் மெல்லிய புன்னகையுடன் பவித்ராவை பார்த்து, “ஏய் குள்ள கத்தரிக்கா திவியை பத்திரமா அவள் வீட்டில் விட்டுட்டு போ” என்று கூறி, அவள் அடிக்கும் முன் சிட்டாக பறந்திருந்தான்.

திவ்யா, “விஜி” என்று அழைக்கவும், திரும்பி பார்த்தான்.

அவள் அவனை நோக்கி வரவும் அவன் வேகமாக அவள் அருகே வந்து, “என்ன?” என்றான். 

“பசங்க கூட சேர்ந்து ஊர் சுற்றி கூத்தடி ஆனா நைட் தண்ணி அடிச்ச கொண்ணுடுவேன்”

அவன் சிரிக்கவும், “இளிக்காதே! கொண்ணுடுவேன்” என்றாள். 

“இன்னைக்கு மட்டும்.. ஒரே ஒரு பீர்.. ப்ளீஸ்டி” 

“ஓகே குடிச்சுக்கோ” என்றவள் பளிச்சிட்ட அவன் முகத்தை பார்த்தபடி, “ஆனா இன்னைக்கு தான் நான் உன்னிடம் பேசும் கடைசி நாள்” என்றாள். 

அவன் முறைக்கவும், “நான் சொன்னது சொன்னது தான்.. அதற்கு மேல் உன் இஷ்டம்” என்றுவிட்டு பவித்ராவுடன் நகர்ந்தாள்.

“ஓகே.. நீ சொன்னதை கேட்கிறேன்” என்று அவன் கடுப்புடன் கத்திவிட்டு செல்ல, திவ்யா இதழ் புன்னகையில் மலர்ந்தது.

இருவரும் கல்லூரி உணவகத்திற்கு சென்றனர்.

பவித்ரா, “எப்படிடி இவனை இவ்ளோ ஈஸியா டீல் பண்ற?” 

“ஏன்னா அவன் என் நண்பன்” 

“எனக்கும் தான் அவன் நண்பன்” 

“ஆனா உன்னதை விட எங்கள் நட்பு ஆழமானது.. நீ அவனிடம் நட்பு கொண்டது அவன் என் நண்பன் என்பதால் ஆனால் எங்களது அப்படி இல்லையே! எனக்கு நீ எப்படியோ அப்படி தான் அவனும்” 

“அப்போ நானும் அவனும் ஒன்றா?” 

“குறுகிய காலமாக இருந்தாலும் அவனும் உன்னை போல் தான் எனக்கு.. எப்படி சொல்ல உனக்கு! எதையும் எதிர்பார்க்காமல் அன்பை, நட்பை, நம்பிக்கையை, பாதுகாப்பை தருபவன் அவன்.. உன்னதும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாதது தான்.. ஆனால் என்னை பற்றி எதையும் தெரியாமல் அதை போர்ஸ் பண்ணி கேட்காமல் என்னை எனக்காக ஏற்றுக் கொண்டு துணை நிற்பவன் அவன்..” 

“என்ன போர்ஸ் பண்ணலை?” 

“இப்போ கேட்டதை சொல்றியா? அவன் நினைத்து இருந்தால் என்னிடம் இருந்து விஷயத்தை வாங்கி இருக்கலாம்.. என்னை நண்பனாக நினைத்தால் சொல்லுனு சொல்லி இருந்தால் நான் சொல்லி இருப்பேன்.. அது அவனுக்கும் தெரியும் ஆனால் அப்படி கேட்கலை.. இன்னொன்னு” என்றவள் தோழியின் கன்னத்தை கிள்ளி புன்னகையுடன் விளையாடியபடி, “என் செல்ல பவி கிட்ட இருக்கும் பொசஸிவ்நெஸ் அவனிடம் கிடையாது.. அவன் தெளிவா இருக்கிறான்..” என்றாள். 

“போடி” என்று தோழியின் கையை தட்டிவிட்டபடி அவள் சிணுங்க, திவ்யா, “இப்படி சிணுங்கும் போது நீ செம்ம அழகுடி” என்று கூற பவித்ரா சிறு வெட்கத்துடன், “போடி லூசு” என்றாள்.

அப்பொழுது அங்கே வந்த ஒரு இளம் பெண் திவ்யாவிடம் புன்னகையுடன் டைரி-மில்க் நீட்டினாள்.

நிமிர்ந்து பார்த்த திவ்யா அவளை முறைக்கவும் அவள், “இன்னைக்கு என் பர்த் டே அதான்” என்றாள். 

திவ்யா இறுகிய குரலில், “பவி வா கிளம்பலாம்” என்றபடி எழுந்தாள்.

அந்த இளம் பெண், “ப்ளீஸ் கா” 

திவ்யவோ அவளை தீ பார்வை பார்த்தாள்.

அவள், “பவி கா நீங்களாவது சொல்லுங்களேன்” என்றது தான் தாமதம் பவித்ரா நெஞ்சில் கை வைத்தபடி, ‘ஆத்தி மாரியாத்தாவை என் பக்கம் திருப்புறாளே!’ என்று மனதினுள் அலறினாள்.

கோபத்துடன் தோழி பக்கம் திரும்பிய திவ்யா தோழியின் நிலை அறிந்து சின்னதாக சிரிப்பு வந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கிளம்பினாள்.

பவித்ரா அவளை தொடர்ந்து ஓடினாள்.

கல்லூரி விடுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த திவ்யா முன் அந்த இளம் பெண் வந்து வழியை மறித்தாள்.

அவள், “ப்ளீஸ் கா.. வாங்கிக்கோங்க” 

“என்னை அக்கானு கூப்பிட்ட! பிச்சிடுவேன்” 

அந்த இளம் பெண் தலையை சரித்து சிரிப்புடன், “அப்போ சிஸ்னு கூப்பிடவா?” 

திவ்யா முறைக்கவும், அவள் அதே புன்னகையுடன், “அப்போ திவினு கூப்பிடவா?” 

“நீ எப்படியும் கூப்பிட வேணாம்.. இனி என்னை வந்து பார்க்காதே” 

“அது முடியாதே!” 

“ஏய் உனக்கு ஒரு முறை சொன்னா புரியாது?” 

“உன் தங்கை உன்னை போல் தானே இருப்பேன்” 

“ஏய்.. என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.. ஓடி போய்டு” 

அவள் அமைதியாக டைரி-மில்க்கை நீட்டவும் திவ்யா கோபத்துடன், “இந்த ஆடு பகை குட்டி உறவு கதை எல்லாம் என்னிடம் வேண்டாம்.. என்னை பொறுத்தவரை ஆடும் பகை தான், குட்டியும் பகை தான்” 

“பெண் ஆடு பகை.. குட்டி ஆடும் பகை ஆனால் ஆண் ஆடு மட்டும் உறவோ?” 

திவ்யா நக்கலாக வாய்விட்டு சிரிக்கவும், அவள், “அப்பா மேல் உனக்கு சாப்ட் கார்னர் இருப்பது எனக்கு தெரியும்” 

“ஒரு மண்ணும் இல்லை..” 

“கத்தினால் பொய் உண்மை ஆகிவிடாது” 

“உன் எண்ணத்திற்கு நான் பொறுப்பாக முடியாது” 

“நான் சொன்னது உண்மைனு எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும் கா” 

திவ்யா கோபத்துடன், “எனக்கு யாரும் உறவு இல்லை.. அதுவும் உன் அப்பா நிச்சயம் இல்லை” 

“என் அப்பா இல்லை நம் அப்பா”

“ஏய்” என்று கத்தியவள் கோபத்துடன், “இனி ஒரு முறை இப்படி பேசின பல்லை கலட்டி கையில் கொடுத்திருவேன்” என்று ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரித்தாள்.

திவ்யாவின் கோபத்தை கண்டு பவித்ரா சிறு பதறலுடன், “ஜனனி நீ கிளம்பு” என்றாள்.

ஆனால் ஜனனியோ அசராமல் திவ்யாவை பார்த்து, “ஒரு முறை என்ன பல முறை சொல்வேன்.. அவர் நம் அப்பா தான்” 

அடுத்த நொடி திவ்யா அவள் கன்னத்தில் அரைந்திருந்தாள்.

பவித்ரா, “என்ன பண்ற திவி?” என்று பதற்றத்துடன் அதட்ட,

அப்பொழுத்து, “என் மேல் உள்ள கோபத்தை ஏன் சின்ன பெண்ணிடம் காட்டுற?” என்று கேட்ட இறைஞ்சும் குரலில் வேகமாக திரும்பிய திவ்யா கடும் கோபத்துடன், “உங்களை அடிக்க முடியலையே, அதான் உங்க பெண்ணை அடிக்கிறேன்” 

அவர் துயரத்துடன், “அப்போ நீ யாரு?” என்று கேட்டார். 

“அனாதை” 

“திவ்யா!” என்று அதிர்வுடன் அவளை பார்த்தார். அவர் கண்களில் வேதனையும் வலியும் நிறைந்திருந்தது.

அவரது வலியை பொருட்படுத்தாமல் திவ்யா, “என்னை அனாதை ஆசிரமத்தில் சேர்த்த நொடியில் எனக்கும் உங்களுக்குமான உறவு முடிந்து போனது.. இனி நீங்களோ உங்கள் மகளோ என் முன் வந்து நிற்காதீங்க.. மீறி வந்தால் நான் எங்கேயாவது கண் காணாத இடத்திற்கு போய்டுவேன்” என்றாள். 

அப்பொழுது அங்கே வந்த சேர்மன் ராஜாராம், “என்ன பேச்சு இது திவ்யா?” என்று அதட்டினார். பின் அந்த பெண்மணியிடம், “நீ ஏன் இங்கே வந்த சுபா?” என்றார்.

கணவரின் குரலில் கண்ணில் வழிந்த நீருடன் திரும்பியவர் ‘என்னால் முடியலையே!’ என்று கண்களால் பேசினார்.

மனைவியின் துயர் அறிந்து தோளில் ஆறுதலாக கை போட்டவர் கண்களிலேயே நம்பிக்கையும் தைரியமும் ஊட்டினார். சில நொடிகளில் கண்களை துடைத்து நிமிர்ந்து நின்றார் சுபாஷினி(சேர்மன் மனைவி). கணவரின் அன்பிற்காக தன் துயரை தன்னுள் புதைத்துக் கொண்டு நிமிர்ந்து நின்றவரை திவ்யா வெறுப்புடன் பார்த்தாள்.

திவ்யாவின் வெறுப்பில் மீண்டும் மனம் கலங்கத் தான் செய்தது. இருப்பினும் மனதை தேற்றி திவ்யாவை பார்த்து உறுதியான குரலில், “நிச்சயம் ஒரு நாள் என்னை நீ புரிந்துக் கொள்வ……………………..” 

“உங்களை பற்றி தெரிந்தவரை போதும்.. இதுவே நான் உங்களை சந்திப்பது கடைசியாக இருக்கட்டும்” என்றவள் நகர்ந்தாள்.

அப்பொழுது ஜனனி சொடக்கு போட்டபடி, “ஹலோ சிஸ்.. இனி அடிக்கடி உன்னை வந்து பார்ப்பேன்.. உன் தைரியத்தை பற்றி இந்த காலேஜ்ஜே பேசுது! ஆனால் இனி உன்னை வந்து பார்த்தால் கோழைத்தனமா புற முதுகு காட்டி ஊரை விட்டு ஓடுவேன்னு சொல்லுற?” என்றாள்.

“இப்படி எல்லாம் பேசினால் இங்கேயே இருந்திடுவேன்னு தப்பு கணக்கு போடத! நான் கோழை போல் ஓடவில்லை.. வெறுப்புடன் விலகுறேன்..” என்றவள் தோழியை அழைத்துக் கொண்டு விடுதி நோக்கி சென்றாள்.

செல்லும் திவ்யாவை கலங்கிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் தோளில் அழுத்தம் கொடுத்து அவரது பார்வையை தன் பக்கம் திருப்பிய ராஜாராமன், “நீ சொன்னது போல் ஒரு நாள் எல்லாம் சரியாகும்” என்றார். 

“ப்ச்” 

ஜனனி, “உச்சு கொட்டுறதை விட்டுட்டு அக்காவை எப்படி கரெக்ட் பண்றதுனு யோசிங்க” என்றாள். 

“..” 

“அம்மா சும்மா சோக கீதம் வாசிக்காதீங்க.. நமக்கு இன்னும் ஒரு வருஷம் தான் இருக்குது.. அப்பறம் படிப்பு முடிஞ்சு அக்கா சொன்னது போல் எங்கேயாவது போய்டுவா..” 

சேர்மன், “அவ எங்கே போனாலும் என் பார்வை அவளை தொடர்ந்துட்டு தான் இருக்கும்” 

“தொடர்ந்து என்ன பிரயோஜனம்?” 

சில நொடிகள் மௌனத்தில் கழிய, ஜனனி, “இந்த அம்மா சொன்னதை கேட்டு அக்காவை நீங்க விட்டிருக்க கூடாது பா? அதுவும் அந்த ஆளிடம்” என்றாள். 

ராஜாராம், “ஜனனி மரியாதை கொடுத்து பேசு” என்றார். 

“அந்த ஆளுக்கெல்லாம் என்னால் மரியாதை கொடுக்க முடியாது” என்றவள் அன்னை முகத்தில் தெரிந்த இறுக்கத்தில் பேச்சை மாற்றினாள்.

“ஹெலோ சுபா மேடம்! உங்கள் பெரிய பொண்ணை பற்றிய கவலையில் சின்ன பொண்ணை மறந்திறாதீங்க! அதுவும் இன்னைக்கு என் பிறந்த நாள்.. ஹோட்டல் கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருக்கீங்க.. அப்புறம் மால் போகணும்.. நான் கேட்பதையெல்லாம் வாங்கி தரனும்.. வாங்க.. வாங்க.. கிளம்பலாம்” என்று பெற்றோரை விரட்டினாள்.

ராஜாராம், “ஒரு சின்ன வேலை இருக்குது.. என் ரூமுக்கு வந்து வெயிட் பண்ணுங்க” என்றபடி மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

 

 

கல்லூரி விடுதி அறைக்கு சென்ற திவ்யா கோபத்துடனும் வெறுப்புடனும் இயலாமையுடன் முகத்தை மூடிக் கொண்டு படுக்கையில் அமர்ந்தாள்.

அவளது தோளில் பவித்ரா கையை வைக்கவும் தோழியின் இடுப்பை இறுக்கமாக கட்டிக் கொண்ட திவ்யா சில நொடிகளில் முகத்தை மட்டும் நிமிர்த்தி, “எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்?” என்று கேட்டாள். 

“உன்னை விட மோசமான நிலையில் பலர் இருக்காங்க.. மனசை போட்டு குழப்பிக்காம எப்பொழுதும் போல் தைரியமா நிமிர்ந்து நில்”

“சில நேரம் இந்த வாழ்க்கை மீது வெறுப்பா இருக்குது?” 

“இப்போ கூட நீ நினைத்தால் ஒரு அன்பான குடும்பம் உனக்கு கிடைக்கும்” 

திவ்யாவின் உடலும் மனமும் இறுகிவிட, “என்னை வேண்டாம்னு சொன்ன குடும்பம் எனக்கு வேண்டாம்” என்றாள். 

“அப்போ……………..” 

“எனக்கு யாரும் வேண்டாம்” 

“உன் காதல் கணவன் கூடவா?” 

ஒரு நொடி அதிர்ந்த திவ்யா, அடுத்த நொடி சிரித்தபடி, “இங்கே காதலுக்கே வழி இல்லை இதில் காதல் கணவனா?” என்றாள். 

“கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறப்பார்” 

“என் விஷயத்தில் ஒன்று இல்லை இரண்டு கதவுகளை மூடிவிட்டார்” என்று கூறியவள் பின் தலையை உலுக்கிக் கொண்டு “சரி அதை விடு.. இன்னைக்கு ஈவ்னிங் பீச் போகலாமா?” என்று பேச்சை மாற்றினாள். 

“போகலாமே” 

“பீச் போயிட்டு.. அப்படியே.. நான்.. உன் வீட்டிற்கு வரட்டுமா?” 

“வா.. இதை கேட்கணுமா? எதுக்கு தயக்கம்?” 

“தேங்க்ஸ்டி” 

பவித்ரா இடுப்பில் கை வைத்து செல்லமாக முறைக்கவும், திவ்யா புன்னகையுடன், “நீ தான் எனக்கு தேங்க்ஸ் சொல்ல கூடாது.. நான் சொல்லுவேன்” 

“எப்போதும் இப்படி சிரிச்சிட்டே இரு” 

“அப்புறம் என்னையும் உன்னை போல் நினைச்சிடுவாங்களே!” 

“யாரு என்ன நினைப்பாங்க?” 

“மற்றவர்கள்.. என்னையும் உன்னை போல் லூசுன்னு நினைச்சுப்பாங்கனு சொன்னேன்” என்று புன்னகையுடன் கூற, பவித்ரா இப்பொழுது நிஜமாகவே முறைத்தாள்.

வாய்விட்டு சிரித்த திவ்யா, “சரி சரி.. வேலையைப் பார்.. அந்த டிரெஸ்ஸை எல்லாம் இந்த பேக்கில் வை” 

“என் முறைப்பை கொஞ்சமாவது மதிக்கிறியா?” 

“நீ முறைச்சியா? எப்போ? சொல்லவே இல்ல!!!!” 

பவித்ரா முறைக்க முயற்சித்து சிரித்துவிட்டாள்.

மனதின் கொதிப்பை வெளியே காட்டாமல் சிரித்தபடி தோழியுடன் கிளம்பிய திவ்யாவின் அகத்தோடு முகமும் விடுதி வெளியே நின்றவரை கண்டதும் சிரிப்பை தொலைத்து இறுகியது.

இணைய காத்திருப்போம்…

Advertisement