Advertisement

காலையில் செய்தது போலவே இருவரும் வெவ்வேறு வழியில் உள்ளே சென்றனர். திவ்யா பவித்ராவுடன் அமர்ந்துக்கொள்ள, ஹரீஷ் அரவிந்துடன் அமர்ந்துக் கொண்டான்.

அரவிந்த், “என்னடா.. கல்யாணத்திற்கு முன் பஸ்ட் டே கொண்டாடிட்டு வரியா?” என்று கிண்டல் செய்தான். 

ஹரீஷ் முறைக்க, அரவிந்த் விடாமல், “ட்ரைலர் கூட ஓட்டாமயா வந்திருப்ப!” என்றான். 

‘ட்ரைலர்’ என்றதும் திவ்யா சொன்னதை நினைத்துப் பார்த்தவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

அரவிந்த், “என்னடா! நிறைய ட்ரைலர் ஓடியிருக்கும் போல!” 

“அடங்குடா.. அவ உன் ஸ்டுடென்ட்” 

“உன் மனசை மாற்ற நான் பேசினப்ப, இது தெரியலையா! இல்லை அவளிடம் பேச ஹெல்ப் கேட்டப்ப தெரியலையா!” 

“டேய்.. இம்சை பண்ணாதடா” 

“இனி உன் தியாவின் இம்சைகள் தானே உனக்கு………….” 

“போதும்டா.. தனியா என்ன வேணா ஓட்டித்தொலை.. இப்போ விடு” 

“பொழச்சு போ” 

 

 

திவ்யா வந்ததும், அங்கே வந்த விஜய், “என்ன மேடம் முகம் பிரகாசமா இருக்குது.. ஒரே ரொமன்ஸ் தானா!” என்று கிண்டல் செய்தான். 

“டேய்” 

“பார் டா! நம்ம திவி கூட வெக்கப்படுறா” 

“டேய்.. சும்மா இருடா..” என்றபடி அவனை இரண்டு அடி அடித்தாள். பவித்ரா தோழியின் மகிழ்ச்சியை மகிழ்ச்சியுடன் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

விஜய், “அம் வெரி ஹாப்பி மச்சி” என்று நெகிழ்ச்சியுடன் கூறினான்.

பவித்ரா திவ்யாவின் கையை இறுக்கமாக பற்றி ‘எனக்கும் ரொம்ப சந்தோசம்’ என்று சொல்லாமல் சொன்னாள்.

அப்பொழுது “அக்கா” என்று கலங்கிய கண்களுடன் சூர்யா ஓடி வந்தான்.

அவன் அவள் அருகே வரும் முன் எழுந்துக் கொண்ட திவ்யா அவனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு, “எப்படி டா இருக்க?” என்று கேட்டாள். 

“நீ ஏன் என்னுடன் பேசவே இல்லை? ஏன் வீட்டுக்கு வரதே இல்லை? நான் எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா?” என்றபடி அழ ஆரம்பித்தான்.

அவன் கண்களை துடைத்தவள், “என் தம்பி ப்ரேவ் பாய் ஆச்சே! அழவே மாட்டான்” என்றாள். 

“அப்போ நீ என் கூடவே இருப்பியா?” 

“அது முடியாதுடா.. ஆனா இனி அக்காவை தேடினா நீ வந்து என்னை பாரு” 

“ப்ராமிஸ்” என்றபடி கையை நீட்ட, அவளும், “ப்ராமிஸ்” என்றபடி அவன் கை மீது கை வைத்தாள்.

“சித்தி வந்திருக்காங்களா?” 

“ஆமா.. அப்பாவும் அம்மாவும் முன்னாடி இருக்காங்க” 

“ஒரு நிமிஷம் இரு” என்றவள் தன் கைபேசியில் ஹரீஷை அழைத்தாள்.

அவன் அழைப்பை எடுத்ததும், “உடனே நான் இருக்கும் இடத்திற்கு வா” என்றாள். 

“என்னடி சொல்ற?” 

“ரிஷி.. நீ உடனே வர” 

அவளது குரலில் இருந்து, “ஏதும் பிரச்சனையாடா?” என்று கேட்டான். 

“இல்லை.. ஆனா கொஞ்சம் முக்கியமான விஷயம் தான் வா” 

“சரி வரேன்” என்று அழைப்பைத் துண்டித்தவன் அரவிந்துடன் அங்கே வந்தான்.

 

அவள் அருகில் இருந்த சிறுவன் சூர்யா என்று புரிந்துக் கொண்டவன் யோசனையுடன் அவளைப் பார்த்தான்.

“சூர்யா சித்தி இருக்கிற இடத்திற்கு போகலாமா?” 

“வேணாம் கா.. அம்மா உன்னை திட்டுவாங்க” 

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. வா” என்றவள் ஹரீஷை கண்ணசைவில் ‘வா’ என்று அழைத்துச் சென்றாள்.

மூவரும் ராகவன் மற்றும் பார்வதி இருந்த இடத்திற்கு சென்றனர். அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சற்று தள்ளி இருந்த மரத்தின் அருகே நின்றவள், “சூர்யா அவங்களை இங்கே கூட்டிட்டு வா” என்றாள்.

சூர்யா ஓடி போய் இருவரையும் அழைத்து வந்தான். இவளைப் பார்த்ததும் ராகவன் பாசத்துடனும் தவிப்புடனும் நோக்க, திவ்யாவோ பார்வையை சிறிதும் அவர் பக்கம் திருப்பவில்லை.

பார்வதி வெறுப்புடன் நோக்க, திவ்யா நிமிர்வுடன் அவரை நோக்கினாள். 

பார்வதி, “சனியன் ஒளிஞ்சுதுன்னு நினைத்தால் நிம்மதியா இருக்க விடுறியா? இப்போ எதுக்குடி கூப்பிட்ட? சும்மா விலகுற மாதிரி பாசாங்கு பண்ணி எங்க சொத்தை பிடுங்க தானே பிளான் பண்ற!” என்றார். 

“நான் சம்மதித்ததால் மட்டுமே இவர் வாழ்க்கையில் நீங்க நுழைஞ்சீங்க.. இப்போ கூட நான் ஒரு வார்த்தை சொன்னால்….” என்று நிறுத்தி அவரை நக்கலாக பார்த்தவள் பின் இறுகிய குரலில், “இவரையே வேணாம் சொல்லிட்டேன்.. இவர் சொத்து எனக்கு எதுக்கு?” என்றாள். 

பார்வதி கோபத்துடன், “ஆனாலும் முறை தவறி பிறந்த உனக்கு இவ்வளவு திமிர் கூடாதுடி” என்றார். 

ராகவன் கோபத்துடன், “வெளி இடம்னு பார்க்காம அடிச்சு பல்லை கழட்டிருவேன்.. வாயை மூடிட்டு இரு” என்று கூறினார்.

என்ன தான் தைரியமான பெண் என்றாலும் பார்வதியின் வார்த்தைகள் திவ்யாவின் மனதை குத்தி கிழித்தது தான். இருப்பினும் வெளியே திடமாக காட்டிக் கொண்டு நின்றாள்.

அவளை புரிந்தது போல் ஹரீஷ் பிறர் அறியாமல் அவள் கையை பற்றி தைரியம் அளித்தான்.

அவன் கைகளை அவள் இறுக்கி பிடித்ததில் இருந்தே அவள் மனம் எவ்வளவு காயப்பட்டு இருக்கிறது என்பது அவனுக்கு புரிய, அவன் பார்வதியை கடுமையாக முறைத்தான்.

திவ்யா பார்வதியிடம், “அது திமிர் இல்லை.. நிமிர்வு.. பிறப்பிலேயே என்னைப் பெற்ற தாயிடமிருந்து வந்தது” என்றாள். 

பார்வதி இகழ்ச்சி குரலில், “நிமிர்வு! உன்னை பெற்றவள் ஒன்றும் குணவதி கிடையாது.. நல்ல குடும்பத்தில் பிறந்தவள் யாரும் அவள் செய்……………” 

திவ்யா கோபத்துடன் விரலை நீட்டி, “ஏய்! என் தாயை பற்றி தப்பா பேசின முகரையை பேத்திருவேன்.. உன் புருஷன் தான் குணம் கெட்டவர்..” என்றவள் கோபத்தை சற்று அடக்கி, “சூர்யா இருப்பதால் சும்மா விடுறேன்” என்றாள். 

பார்வதி பேச வாயை திறக்க, ராகவன் பல்லை கடித்துக் கொண்டு, “உன்னை வாயை மூடிட்டு இருக்க சொன்னேன்” என்றதும், வாயை மூடிக் கொண்டாலும் அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“முக்கியமான விஷயம் சொல்லத் தான் கூப்பிட்டேன்” என்று கூறி நிறுத்திய திவ்யா, சூர்யாவின் தோளை பற்றி புன்னகையுடன் ஹரீஷை சுட்டிக் காட்டி, “இவர் தான் உன் மாமா” என்றாள்.

ஹரீஷ் சிறு அதிர்ச்சியுடன் பார்க்க, சூர்யா, “மாமா னா?” என்று கேட்டான்.

“அக்காவை கல்யாணம் செய்துக்க போறவர்” 

“உனக்கு கல்யாணமா கா?” 

“இப்போ இல்லை.. அக்கா படிச்சு முடிச்சதும் கல்யாணம் செய்துப்பார்.. மாமா பெயர் ஹரீஷ்” 

ஹரீஷ் பக்கம் திரும்பி, “ஹாய் மாமா..” என்று புன்னகையுடன் கூறிய சூர்யா பின், “என் அக்காவை நல்லா பார்த்துக்கோங்க.. அக்கா கஷ்டபட்டா நான் வந்து கேட்பேன்” என்றான்.

ஹரீஷ் சிறுவன் உயரத்திற்கு மண்டியிட்டு மென்னகையுடன், “சரீங்க சார்.. உங்க அக்காவை நல்லா பார்த்துக்கிறேன்.. உன் அக்கா இனி எப்போதும் சந்தோஷமா இருப்பா” என்றான்.

“குட்” என்றான் பெரிய மனிதர் தோரணையில்.

திவ்யா புன்னகையுடன் தம்பியின் தலையை கலைத்துவிட்டாள்.

பார்வதி ராகவனை பார்த்து, “எப்பவும் உங்க பொண்ணுனு தலை மேல் தூக்கி வச்சு கொண்டாடுறீங்களே! அவள் கல்யாணத்தை அவளே முடிவு செஞ்சுகிட்டா.. அதான்.. முறையா பிறந்து ஒழுங்கா வளர்த்து இருந்தால் தானே பெற்றவரை மதிக்க தோணும்” என்றார். 

“கல்யாணம் அவள் விருப்பம்.. அதை அவள் முடிவு செய்ததில் என்ன தப்பு?” என்ற ராகவன் திவ்யாவை பார்த்து, “எனக்கு ரொம்ப சந்தோசம்.. நல்லா இரு டா” என்றார். 

திவ்யா பாரவ்தியை பார்த்து, “என் பிறப்பைப் பற்றி இனி பேசாமல் இருபது தான் உங்களுக்கு நல்லது.. நான் ஏன் கூனி குறுகனும்? அதில் என் தவறு எதுவும் இல்லை.. அப்புறம்.. என் வளர்ப்பு.. உங்களை வளர்த்தது போல் இல்லாமல் என்னை என் சாரும்மா நல்லா தான் வளர்த்து இருக்கிறாங்க..” என்றவள் சூர்யாவிடம், “நல்லா படிக்கணும்டா.. நான் பின்னாடி போய் உட்காருறேன்” என்றாள்.

 

அதே நேரத்தில் மேடையில் பேசத் தொடங்கிய ராஜாராம், “குட் இவனிங் அண்ட் வெல்கம் ஆல்.. என்னடா இவன் ப்ளேட் போடப் போறானானு பயப்படாதீங்க.. ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் தான்.. முக்கியமான ஒன்றை அறிவிக்க தான் வந்தேன்.. இங்கே பைனல் CSE-யில் படிக்கும் திவ்யாவிற்கும் எனக்கும் என்ன உறவென்ற கேள்வி பலர் மனதில் ரொம்ப நாளா ஓடிக் கொண்டு இருக்கிறது.. அதை பற்றித் தான் சொல்லப் போகிறேன்.. திவ்யா மேடைக்கு வா” என்றார்.

திவ்யா அதிர்ச்சியுடன் ஹரீஷை பார்க்க, அவன், “எனக்கு எதுவும் தெரியாது டா” 

“உனக்கு தெரியுமானு நான் கேட்டேனா?” என்று முறைப்புடன் கூறினாள்.

“சரி.. இப்போ மேலே போ” 

“நான் மாட்டேன்” 

அப்பொழுது ராஜாராம், “திவிமா மேடைக்கு வா” என்று மீண்டும் கூற,

அவள் தவிப்புடன் மறுப்பாக தலையை அசைக்க,

ஹரீஷ், “போடா.. அவர் கூப்பிட்ட பிறகும் நீ போகலைனா அவருக்கு தான் அவமானம்” என்றான். 

ராகவன் கோபத்துடன் ஏதோ சொல்ல போக, அதற்குள் அங்கே வந்த பவித்ரா, “திவி வா” என்றபடி திவ்யாவை இழுத்துக் கொண்டு சென்றாள்.

மேடை அருகே சென்ற பிறகும் அவள் ஏற மறுக்க, ஜனனி இப்பொழுது அவளை இழுத்துச் சென்றாள்.

திவ்யாவின் தோள் மீது கை போட்டு அணைத்த ராஜாராம் புன்னகையுடன், “திவ்யா என் மூத்த மகள்.. அவ பிறந்த கொஞ்ச நாளில் நாங்க அவளை தொலைச்சிட்டோம்.. இவளை கடத்தியவர்களிடம் இருந்து யாரோ இவளை காப்பற்றி ஆனாதை ஆசிரமத்தில் சேர்த்துட்டாங்க..

இவளுக்கு மூணு வயசு இருக்கும் போது மிஸ்டர் ராகவனும் அவரது முதல் மனைவி சாருலதாவும் இவளை தத்தெடுத்து சீரும் சிறப்புமா வளர்த்திருக்காங்க..

இவளோட பதினைந்தாவது வயதில் தான் இவளை நாங்க கண்டு பிடிச்சோம்.. அப்போ தான் இவளுக்கு இவளை பெத்தவங்க நாங்கனு தெரியும்.. ஆனா அதன் பிறகு எங்களை ஏற்காதவள் இப்போ தான் எங்களை ஏற்றுக் கொண்டாள்” என்றார்.

திவ்யா கண்களில் கண்ணீர் வடிய அவரை பார்த்தாள். அவர் அவளது கண்களை துடைத்துவிட்டார்.

அப்பொழுது கோபத்துடன் மேடை ஏறிய ராகவன், “என்னடா கதை விடுற.. என் மகளுக்கு நீ அப்பாவா” என்றபடி ராஜாராம் சட்டையை பிடிக்க போக,

அவர் கையை தட்டிவிட்ட திவ்யா மைக்கை விட்டு அகன்று ராஜாராமை பார்த்து, “அப்பா அவரை கீழே போக சொல்லுங்க” என்றாள்.

ராகவன் பெரும் அதிர்ச்சியுடனும் வேதனையுடனும் அவளை பார்க்க, ராஜாராமோ ஆனந்தக் கண்ணீருடன் அவளைப் பார்த்தார்.

கீழே அமர்ந்திருந்த சுபாஷினியின் கண்களிலும் மேடையில் நின்றுக் கொண்டிருந்த ஜனனியின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் நிறைந்திருந்தது.

இணைய காத்திருப்போம்…

Advertisement