Advertisement

விலகல் 29

இரு கரங்ககள் தன்னை பின்னால் இருந்து அணைக்கவும் சட்டென்று திரும்பி பார்த்தவள் ஹரீஷின் கையை அடித்து விலக்கியபடி, “பட்டப் பகலில் என்ன பண்ற! அதுவும் ஒரு சாரா இருந்துட்டு” என்றாள். 

“அப்போ அந்தி சாயும் நேரம்னா ஓகே யா!” என்று கேட்டு கண்ணடித்தான்.

அவள் முறைத்தாள்.

அவன், “யாரும் பார்க்கலை.. நீ தான் வசதியா தனியா மரத்துக்கு பக்கத்தில் வந்து நிற்கிறியே! சரி.. ஸ்டாஃப் ரூம் போய் பேசலாம் வா”  என்று அழைத்துச் சென்றான்.

செல்லும் வழியில் அவன், “நான் சார்னு இப்போ தான் உனக்கு தெரியுதா?” என்று கேட்டான். 

“மத்தவங்களுக்கு தான் நீ சார்” 

“உனக்கு?” 

“உனக்கு தெரியாதா?” 

“ஏன் நீ சொல்ல மாட்டியா?” 

“ரொம்ப கஷ்டமான கேள்வியாச்சே!” 

“ஈஸினா தானே அரியர் வைப்ப!” 

“நீ என்ன பாட்ஷா பாயா!” 

“என்ன?” 

“இல்ல நாடி நரம்பில் எல்லாம் நீ ஒரு வாத்தியார்னு ஊறி போய் இருக்குதோனு கேட்டேன்!” என்றவள் பின் முறைப்புடன், “என்னிடம் பேசும் போது வாத்திங்கிற நினைப்பு வந்துது! பிச்சிடுவேன்” என்றபோது ஆசிரியர் அறை வந்திருந்தது.

மூடியிருந்த ஆசிரியர் அறைக் கதவை திறந்தான். உள் பக்கமாக சென்ற கதவை பாதி மட்டுமே திறந்து அவளது கையை பற்றி இழுத்தவன் கதவின் மறைவில் அவளை சுவற்றில் சாய்த்து நிறுத்தி, தனது இரு கரங்களையும் சுவற்றில் வைத்து அவளுக்கு அணை கட்டினான்.

பின் காதல் பார்வையுடன் சற்று கிறங்கிய குரலில், “அப்போ எந்த நினைப்புடன் பேச?” என்று வினவினான்.

அவனது நெருக்கத்திலும் பாவனையிலும் பாவையவள் மயங்கினாள். இருப்பினும் சுதாரித்தவளாக, “இன்னைக்கு என்னாச்சு உனக்கு! தள்ளி நின்னு பேசு” என்றாள்.

அவனோ, “தள்ளி போகாதேனு சொல்லிட்டு என்னை தள்ளி போ-னே சொல்லிட்டு இருக்க!” என்றான். 

“விளையாடத ரிஷி.. யாராவது வந்திரப் போறாங்க.. அந்த வில்லன் வந்தாலும் வருவான்” 

“வில்லனா!” 

“அந்த நொந்தகுமாரை சொன்னேன்” 

சிரித்த ஹரீஷ், “இனி தங்ககுமார் வந்தால் டிஸ்மிஸ் ஆர்டர் தான்.. ஆனாலும் அவனை போய் வில்லன்னு சொல்லிட்டியே! அவன் அவ்ளோ வொர்த்தே இல்லை” 

“வொர்த் இல்லை தான், ஆனா அவன் தானே நமக்கு வில்லனா போய்ட்டான்” 

“ஒரு சாருன்னு கொஞ்சமாவது மரியாதை தரியாடி!” 

அலட்சியமாக உதட்டை சுழித்தவள், “உனக்கே மரியாதை தரலை.. அவனுக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்குது!” என்றாள். 

“நான் தான் உனக்கு சார் இல்லையே!” என்றவன் மெல்லிய குரலில், “உசுரே போகுதே! உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கயிலே” என்று பாடினான்.

அவள் விழி விரித்து, “நிஜமாவே இன்னைக்கு உனக்கு என்னவோ ஆகிருச்சு” என்றாள். 

புன்னகையுடன் தலையை கோதியவன், “இனி என்னை ரிஷிகேஷ்! விறைப்பு மன்னன்னு சொல்லுவ!” என்று கேட்டு புருவம் உயர்த்தினான்.

அவன் கையை எடுத்த இடைவேளையில் நகர்ந்தவள் இருக்கையில் அமர்ந்து கண்ணில் குறும்புடன், “சில ட்ரைலர் நல்லா இருக்கும் ஆனா மெயின் பிக்சர் மொக்கையா இருக்கும்.. பார்க்கலாம்” என்றாள்.

“உனக்கு வாய் ரொம்ப அதிகம்டி” என்று மென்னகையுடன் கூறியவன் ஒரு இருக்கையை அவள் அருகே இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

அவள் புன்னகையுடன் தலை சரித்து, “நீ வேணா அடக்கிப் பாரேன்” என்று கூற, 

“காலேஜ்ஜா போயிருச்சு!” என்றவனது பார்வை அவள் இதழில் பதிந்தது.

அவனது பார்வை அவளை என்னவோ செய்தாலும் விடாமல் மெல்லிய குரலில், “ஏன்! இல்லைனா என்ன செஞ்சிருப்ப?” என்றாள். 

“உன் மாமன் செயல் வீரன்டி” 

“பார்க்கலாம்” 

“பார்க்கதானே போற!” 

“எதை! காளியோட ஆட்டத்தையா!” 

“உன் ரிஷியோட ஆட்டத்தை” என்று கூறி கண் சிமிட்டினான்.

“சும்மா சும்மா கண் சிமிட்டாத” 

“ஏன்?”

“அது! உள்ள என்னென்னவோ பண்ணுது..” 

“என்னென்னவோ னா!” என்றவன் விஷம புன்னகையுடன் மீண்டும் கண் சிமிட்ட,

“வேணாம்! அப்புறம் பின் விளைவுக்கு நான் பொறுப்பில்லை” என்றாள். 

“என்ன செய்வ?” 

“நீ கிளாஸ் நடத்தும் போது நான் கண் சிமிட்டுவேன்.. ஏன் ப்ளையிங் கிஸ் கூட கொடுப்பேன்” 

ஒரு நொடி அதிர்ந்தவன், “என் மானத்தை வாங்கிடாத!!” என்றான். 

“அது நீ நடந்துக்கிறதைப் பொருத்து” 

“ஹ்ம்ம்” என்றவன் பின் ஆழ்ந்த குரலில், “ஏன்டி அப்படி பாடின?” என்று கேட்டான். 

“…” 

“நான் எங்கே தள்ளி போனேன்? இல்லை, உன்னை தள்ளி போக தான் சொன்னேனா?” 

“அது இப்போ தானே.. முன்னாடி அப்படி தானே செஞ்ச!” என்றவளது குரல் சற்று சுருதி இறங்கி இருந்தது. 

“அதான் என் மனநிலையை சொன்னேனே” 

“ஹ்ம்ம்” 

சட்டென்று எழுந்து, “கிளம்பு.. வீட்டுக்கு போகலாம்” என்றான். 

அவள் சிறு அதிர்ச்சியுடன் பார்க்கவும்,

அவன், “எனக்கு உன்னுடன் மனம் விட்டு பேசணும்” என்றான். 

அடுத்த நொடி, “சரி வா போகலாம்” என்றபடி எழுந்தாள்.   

“நான் முதலில் கிளம்புறேன்.. நீ பதினைந்து நிமிஷம் கழிச்சு வா” 

“ஒண்ணும் தேவை இல்லை.. பெர்மிஷன் வாங்கி கேட் வழியா வந்தா என் கெத்து என்னாகுறது! நீ உன் வழியில் வெளியே போ நான் என் வழியில் வெளியே வரேன்” 

அவன் அவளை முறைக்கவும், “அப்ப்பா! இப்போ தான் நீனு தெளிவாச்சு! இவ்ளோ நேரம் எஸ்.ஜே.சூர்யா மாதிரி உன்னோட க்ளோனிங்கை அனுப்பிட்டியோனு சின்ன சந்தேகம் இருந்துது” என்றாள். 

அவன் மென்னகையுடன், “எனக்கே ஆச்சரியமா தான் இருக்குது! ஆனா உன்னிடம் இப்படி இருக்க தான் வருது.. பிடிச்சும் இருக்குது.. உனக்கு பிடிச்சிருக்கா?” என்றவனின் கண்களில் காதல் நிறைம்பி இருந்தது.

அவன் கன்னத்தில் கையை மென்மையாக வைத்து, “ரொம்ப பிடிச்சு இருக்குது” என்று காதலுடன் கூறியவள் பின் கையை எடுத்து குறும்புடன், “ஆனா விறைப்பு மன்னன் ரிஷிகேஷை ரொம்ப ரொம்ப பிடிச்சு இருந்துது” என்றாள்.

“கல்யாணத்திற்கு பின் ரிஷிகேஷாவே இருக்கவா?” என்று சிறு நக்கல் குரலில் கேட்டவனின் கண்கள் குறும்புடன் சிரித்தது. 

“இரேன்! நஷ்டம் உனக்கு தான்” 

“ஏன் உனக்கு நஷ்டமில்லையா!” என்று அவன் ஒருமாதிரி குரலில் கேட்டு புருவம் உயர்த்த,

அவனது செய்கையை ரசித்தபடி, “எனக்கு வேண்டியப்ப உன்னை என் ரிஷியா எப்படி மாத்துறதுன்னு எனக்கு தெரியும்” என்று கூறி கண் சிமிட்டினாள்.

பிறகு, “சரி சீக்கிரம் கிளம்பி வா.. நான் பவி, விஜி கிட்ட சொல்லிட்டு வரேன்” என்றாள்.

“நான் சொல்றதை கேளு.. பெர்மிஷன் கேட்டுட்டே போகலாம்………..” 

“என்னென்னன்னு கேட்கிறது? வீட்டிற்கு போகணும்னா!” 

“உன் வீட்டிற்கு தானே வர” 

“அது நீ மட்டும் இருந்தால்! உன் கூட தான் ஜந்து ஒண்ணு இருக்குதே!” 

“அவனை ஏன் ஜந்துனு சொல்ற? நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் அவன் வீடு மாறிடுவான்.. உனக்கும் பவி வீட்டிற்கு பக்கத்தில் இருந்தா நல்லா இருக்குமே!” 

“நந்து ஜந்து ரைமிங் நல்லா இருக்குதே!! சரி.. சரி.. வீட்டில் பேசிக்கலாம்.. இப்போ கிளம்பலாம்.. நீ ஹாப் டே மட்டும் பெர்மிஷன் போடு போதும்..” 

“ஏன்?” 

“இவனிங் இங்கே வரணும்.. சூர்யா வருவான்” என்றவளது குரல் சற்று இறுகி இருந்தது.

அவள் தோளை சுற்றி கைபோட்டு ஆறுதலாக தட்டினான்.

அவள் மென்னகையுடன், “அம் ஆல்ரைட்.. கிளம்பலாம்” என்றாள். 

“ஏன்டி என்னையும் திருட்டு வேலை பார்க்க வைக்கிற!” 

“டேய் ஓவரா ஸீன் போட்ட! இப்பவே ஸ்டேஜ்க்கு போய் நீயும் நானும் லவ் பண்றோம்னு மைக்கில் சொல்லிடுவேன்” 

அவன் முறைக்க,

“சீக்கிரம் வந்து வெளியே வெயிட் பண்ணு, நான் வந்திருவேன்” என்றவள் அவன் பதிலை எதிர்பாராமல் கிளம்பினாள்.

 

 

அடுத்த பத்தாவது நிமிடம் இருவரும் இருசக்கர வண்டியில் பயணித்தனர்.

அவன், “என்ன சொல்றாங்க உன் பிரெண்ட்ஸ்?” என்று கேட்டான்.

“கிண்டல் பண்ணாங்க.. ரெண்டு பேரும் செம்ம ஹாப்பி.. உன் காட் பாதர் என்ன சொன்னார்?” 

“அவரும் ரொம்ப ஹாப்பி.. பார்த்து போயிட்டு வாங்கனு சொன்னார்” என்றவன், “எனக்கு மட்டுமா அவர் காட் பாதர்?” என்று வினவினான். 

“ஹ்ம்ம்.. எனக்கு காட் பாதர்.. பாதர் எல்லாம் அவர் தான்” என்று அவள் கூற, சட்டென்று வண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தான்.

அவள், “நமக்குள் எந்த ஒளிவு மறைவிற்கும் இடமில்லை.. அதான் என் மனதில் உள்ளதை சொன்னேன்.. ஆனா இதை அவரிடம் சொல்லிடாதே.. நான் விலகி இருப்பது தான் நல்லது” என்றாள். 

“யாரோ செய்த தப்பிற்கு அவருக்கு ஏன் தண்டனை தர?” 

“நான் அவருடன் சேர்வது தான் அவருக்கு தண்டனை.. என்னை யாருன்னு சொல்வார்? அவர் மனைவியோட மகள்னு சொல்ல முடியுமா? விடு ரிஷி.. எனக்கு நீ.. உனக்கு நான்.. நமக்கு நம் குழந்தைகள்” 

அவளது முடிவை அவன் ஏற்கவில்லை என்றாலும் அவள் சொல்வது யோசிக்க வேண்டியதாக இருக்கவும் அவன் மெளனமாக வண்டியை கிளப்பினான்.

அவள் அமைதியாகவே வரவும் அவன், குழந்தைகள்னு சொன்னியே! எத்தனை?” என்று பேச்சை மாற்றினான்.

“ரெண்டு.. உன்னை போல் ஒரு பொண்ணு என்னை போல் ஒரு பையன்” என்று கற்பனையுடன் சொன்னவளின் கரங்கள் அவன் இடுப்பை வளைக்கவும், வண்டி அவன் கையில் பறந்தது.

Advertisement