Advertisement

தோழமைகளே!
இன்று(10Nov) காலையில் பதிவிட்ட ‘விலகல் 27’  படிக்காதவர்கள், அதை படித்துவிட்டு இந்த விலைகளை படிக்கவும் 🙂 

விலகல் 28

அன்று காலையில் ஹரீஷும் அரவிந்தும் மட்டும் ஆசிரியர் அறையில் இருந்தபோது உள்ளே நுழைந்த திவ்யா அரவிந்தை பார்த்து, “குட் மார்னிங் சார்” என்றாள்.

அரவிந்த் நண்பனை பார்த்துவிட்டு அவளிடம், “குட் மார்னிங்” என்றான்.

திவ்யா ஹரீஷை பார்த்தபடி, “ஊருக்கு போயிட்டு வந்துட்டீங்களா சார்?” என்று கேட்டாள். 

அரவிந்த் அமைதியாக இருக்க,

“என்ன சார் பதில் சொல்ல மாட்டிக்கிறீங்க?” என்று வினவியவளின் பார்வை இப்பொழுதும் ஹரீஷிடம் தான் இருந்தது. அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அரவிந்த், “நீ என்னிடமா கேட்ட?” 

“நீங்க தானே ஊருக்கு போயிட்டு வந்திருக்கீங்க?” 

“ஆமா.. ஆனா உன் பார்வை ஹரியை நோக்கி இருக்கவும் அவனை கேட்கிறியோனு நினைத்தேன்” 

“நீங்க அவரையும் என்னையும் மாற்றி மாற்றி பார்த்து பேசுறீங்க.. நான் அவரை மட்டும் பார்த்து பேசுறேன்.. அவ்ளோ தான் வித்யாசம்” 

“ஓ” 

“நீங்களும் உங்க பிரெண்டை போல் ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு வீட்டில் இருந்துட்டு வரீங்களோனு நினைத்தேன்.. நீங்க நிஜமாவே ஊருக்கு தான் போயிட்டு வந்திருக்கீங்க போல.. சரி சார் நான் கிளம்புறேன்” 

“இதை சொல்லவா வந்த?” 

“ச ச.. நான் உங்களுக்கு குட் மார்னிங் சொல்ல வந்தேன்” 

“எனக்கா ஹரிக்கா?” 

“உங்களுக்கு தான்” 

“பார்த்தா அப்படி தெரியலையே!” 

“பின்ன எப்படி தெரியுது?” 

“ஹரிக்கு சொன்னது போல் தான் தெரியுது” 

“நான் இவ்வளவு நேரம் உங்களிடம் தானே பேசினேன்” 

“வாய் என்னிடம் தான் பேசுது ஆனா கண்கள் இப்போ கூட அவனிடம் தானே பேசிட்டு இருக்கிறது” 

“கண்கள் பேசுமா? எனக்கு தெரியாதே!” 

“நம்பிட்டேன்” 

“காலேஜ் டே-க்கு ப்ராக்டிஸ் பண்ண போறேன்.. போறதுக்கு முன் உங்களுக்கு விஷ் பண்ணிட்டு போக வந்தேன்.. சரி சார் நான் கிளம்புறேன்” என்றவள் வெளியேறி இருந்தாள்.

அவள் சென்றதும் அரவிந்த், “என்னடா நடக்குது? ஒரு நாள் தானே நான் வரலை!” என்றான். 

ஹரீஷ் மெலிதாக புன்னகைக்கவும்,

அரவிந்த், “எப்படி டா! நீ பக்கம் பக்கமா பேசியும் ரெண்டு நாளா உன்னை கண்டுக்காம தானே இருந்தா?” என்றான். 

 

ஆம் பவித்ரா வீட்டில் ஹரீஷ் பேசிவிட்டு சென்றதும் பவித்ரா மற்றும் விஜய் பேசியதை காதில் வாங்காமல் உடனே கிளம்பி விடுதிக்கு வந்தவள் அடுத்து வந்த இரண்டு நாட்களும் யாருடனும் பேசாமல் தனிமையில் தான் கழித்தாள்.

திங்கட்கிழமை கல்லூரிக்கு வந்தவள் பவித்ரா அருகே அமராமல் தனியாக கடைசி இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

ஹரீஷ் வகுப்பினுள் நுழைந்ததும் மேஜை மீது கைகளை வைத்து அதில் தலை சாய்த்து கண்களை மூடிக் கொண்டாள்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்த ஹரீஷ் ஆசிரியராக மாறி, “திவ்யா கெட் அவுட்” என்றதும், அதற்காகவே காத்திருந்தது போல் அவனைப் பார்க்காமல் வெளியே சென்றுவிட்டாள்.

அவள் வகுப்பு வாசலில் நிற்பாள் என்று அவன் நினைக்க, அவளோ வெளியே சென்றுவிட்டாள். அவளது செய்கையில் காதலனாக வருந்தித் தவித்தாலும், ஆசிரியராக அவள் மீது கோபம் கொண்டான்.

மதிய இடைவேளையில் திவ்யா அருகே பவித்ராவும் விஜயும் வந்தனர். அவள் அவர்களை கண்டுக் கொள்ளாமல் உணவை உண்ணத் தொடங்கினாள்.

பவித்ரா, “ப்ளீஸ்டி பேசு” என்று கலங்கிய குரலில் கெஞ்சினாள்.

விஜய், “திவி நாங்க உனக்காக தான் செய்தோம்னு உனக்கு நல்லா தெரியும்.. ஆனாலும் நாங்க செய்தது தப்பு தான்.. எங்களை எப்போ மன்னிக்கிறியோ அப்போ பேசு.. நீ பேசலைனு நான் பேசாம இருக்க மாட்டேன்.. நான் எப்போதும் போல் தான் இருப்பேன்.. ஆனா ஹரி சார் கூட நீ சொல்லாம பேச மாட்டேன்” என்றான். 

அவள் சட்டென்று நிமிர்ந்து அவனை முறைக்கவும்,

“உன் கிட்ட சொன்னதில் இருந்து இப்ப வரை நான் அவரிடம் பேசலை.. அன்னைக்கு அவர் ஊரிலில்லைன்னு உன்னிடம் சொல்லச் சொன்னதை கேட்டுகிட்டேன் அவ்ளோ தான்” என்றான். 

அவள் கண்ணசைவில் கூட பதில் கூறாமல் உணவில் கவனத்தை திருப்பினாள். 

அதன் பிறகு பவித்ரா அவளிடம் அழுது கெஞ்சிய போதும், அவள் மனம் இறங்காமல் அமைதியாகத் தான் இருந்தாள்.

அதன் விளைவாக அன்று மாலை பவித்ரா ஹரீஷ் வீட்டிற்கு சென்று சண்டை போட்டாள்.

பவித்ரா கோபமாக, “நீங்க சொன்னீங்கனு தானே ஹெல்ப் பண்ணேன்.. இப்போ என் முகத்தை கூட பார்க்க மாட்டிக்கிறா.. இதுவரை அவ என்னை ஒதுக்கியதே இல்லை.. எல்லாம் உங்களால் தான்.. உங்களை யாரு இங்கே வரச் சொன்னது?” என்று கத்தினாள்.

ஹரீஷ் அமைதியாக இருக்க, நந்தகுமார் தான், “ஹே! பிள்ளைப் பூச்சி மாதிரி இருந்துட்டு ஓவரா சவுண்ட் விடுற” என்று எகிற,

“நீ சும்மா இருடா.. நான் உன்னிடம் பேசலை” என்று பவித்ரா அவனை விட அதிகமாக எகிறினாள். 

ஒரு நொடி அதிர்ச்சியில் மௌனமான நந்தகுமார் அடுத்து பேசும் முன்,

“நந்து அமைதியா இரு” என்று அவனை அடக்கிய ஹரீஷ் பவித்ராவிடம், “சாரி.. நானும் இதை எதிர்பார்க்கலை” என்றான். 

அவன் மன்னிப்பு கேட்டதும், பவித்ராவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட கோபம் வடிந்தவளாக, “சாரி சார்.. திவி என்னை ஒதுக்கவும்.. சாரி” என்று சிறிது திணறினாள்.

ஹரீஷ், “புரியுது.. கவலைப் படாத.. நீங்க அவளுக்காக தான் பண்ணீங்கனு அவளுக்கு தெரியும்.. இருந்தாலும் அவள் பக்கம் நிற்காமல் நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணியதுக்காக தான் இப்படி நடந்துக்கிறா.. சீக்கிரம் உங்களுடன் பேசுவா.. நாளைக்கே கூட பேசலாம்” என்றவன் மனதினுள், ‘ஆனா என்னைப் பற்றி தான் அவ என்ன நினைக்கிறானு எனக்கு தெரியலை’ என்று கூறிக் கொண்டான்.

“தேங்க்ஸ் சார்” என்றபடி விடை பெற்றாள்.

 

நந்தகுமார், “உன் ஆள் பயங்கரமான ஆள் தான்டா.. புயலை போன்ற உன்னை பூவா மாத்துறா, பூவை போன்ற பவித்ராவை புயலா மாத்துறா” என்றான். 

“இப்படியே பேசிட்டு இரு.. உன்னை நோயாளியா மாத்திருவா” 

“செஞ்சாலும் செய்வா.. நான் சொன்னதை அவளிடம் சொல்லிடாதடா” என்றான்.

 

ரீஷ் சொன்னது போல் அடுத்த நாளே நண்பர்களுடன் சகஜமான திவ்யா இவனை மட்டும் கண்டுக்கொள்ளவில்லை. முன்பை விட இன்னும் அதிகமாக விலகியவள் இன்று திடீரென்று வந்து வம்பு செய்துவிட்டு சென்று இருக்கிறாள்.

 

ரவிந்தின் கூற்றை கேட்டு ஹரீஷ் முறைக்க, அவனோ அலட்டிக்கொள்ளாமல், “விஷயத்தை சொல்லு.. அப்புறமா ஆற அமர உட்கார்ந்து முறைக்கலாம்” என்றான்.

ஹரீஷ் அமைதியாக இருக்கவும், அரவிந்த், “ஹ்ம்ம்.. சொல்லுடா” என்றான்.

“நேத்தும் என்னை கண்டுக்காம தான் இருந்தா.. இன்னைக்கு தான் புதுசா இப்படி பண்றா” 

“என்ன டிசைனோ நீயும் உன் ஆளும்!” என்றவன் பின், “அது எப்படிடா உள்ளுக்குள் அவ்ளோ லவ் இருந்தும், அவள் உன்னை பார்த்துட்டே என்னிடம் பேசிய போது பறப்பது போல் பீல் பண்ணியும் கண்ணில் எதையும் காட்டாம அவளை பார்த்த?” என்று கேட்டான். 

“அவ மட்டும் எப்படி பார்த்தாளாம்?” 

“அது சரி.. ரெண்டும் ஜாடிக்கு ஏத்த மூடி தான்” 

ஹரீஷ் அமைதியாக இருக்கவும், அரவிந்த், “என்னடா யோசிக்கிற?” 

“காலையிலேயே ப்ராக்டிஸ் இருக்குமா?” 

“இன்னும் ரெண்டு நாள் தானே இருக்குது அதான் இன்னைக்கும் நாளைக்கும் புல் டே ப்ராக்டிஸ் தான்” 

“ஓ” 

“ஏன் கேட்கிற?” 

“சும்மா தான்” 

அரவிந்த் சிறு தோள் குலுக்கலுடன் தனது வேலையை தொடர்ந்தான்.

சிறிது நேரம் கழித்து ஹரீஷ் வகுப்பிற்கு கிளம்பவும், அரவிந்த், “உனக்கு இன்னைக்கு காலையில் கிளாஸ் கிடையாதே!” என்றான். 

“மணிமேகலை மேடம் ஹவரை நான் எடுத்துக்கிட்டேன்” 

“எப்படி இருந்த நீ இப்படி ஆகிட்டடா!” 

“ஏன்!” 

“செய்றதை எல்லாம் செய்துட்டு இப்படி ஒண்ணும் தெரியாத பாப்பா போல் கேட்டா நாங்க நம்பிடுவோமா! மதியம் உன் ஆளை பார்க்க முடியாதுன்னு தானே இப்போ கிளாஸ் மாத்திக்கிட்ட!” 

“அதான் தெரியுதுல! அப்புறம் என்ன கேள்வி! வேலையை பாரு” என்றுவிட்டு வெளியேறினான்.

 

அன்று முழுவதும் திவ்யா ஆண்டு விழா பயிற்சியில் மும்மரமாக இருந்ததால் அவனால் அவளை பார்க்க முடியவில்லை.

 

      அடுத்த நாள் ஆண்டு விழாவிற்கு முன் தினம் என்பதால் வந்ததும் பயிற்சிக்கு கிளம்பியவள் பயிற்சிக்கு செல்லும் முன் ஆசிரியர் அறைக்கு சென்றாள். உள்ளே வந்த பிறகு தான் ஹரீஷ் அரவிந்த் மட்டுமின்றி தங்ககுமாரும் இருப்பதை பார்த்தாள். கீழே விழுந்த பேனாவை குனிந்து தேடிக் கொண்டிருந்த தங்ககுமார் அவள் உள்ளே வந்த போது தான் நிமிர்ந்தார்.

அரை நொடி மட்டுமே திடுக்கிட்டு நின்றவள் பின் தங்ககுமார் அருகே சென்று, “ஒரு டவுட் சார்” என்றாள்.

அவர், “என்ன?” என்றதும் அவர் மேஜையில் இருந்த அவரது புத்தகத்தை வைத்தே சந்தேகம் என்ற பெயரில் பல கேள்விகளை கேட்டு அவரை திணறடித்தாள்.

அவளது பிறந்தநாள் அன்று அவர் தெரியாமல் சீக்கிரம் வந்ததின் விளைவு தான் இது என்பதை புரிந்துக் கொண்ட ஹரீஷும் அரவிந்தும் சிரிப்பை அடக்கியபடி அமர்ந்திருந்தனர்.

பத்து நிமிடங்கள் கழிந்தும் அவள் விடுவதாக இல்லை என்றதும் தங்ககுமார், “உனக்கு என் மேல் என்ன கோபம்?” என்று பரிதாபக் குரலில் கேட்டேவிட்டார்.

அப்போதைக்கு அவரை விட்டவள், “என்னகென்ன கோபம்?” என்றாள்.

ஹரீஷ் உதட்டோர புன்னகையுடன், “எதற்கும் இனி காலையில் லேட்டாவே வாங்க சார்” என்றான்.

தங்ககுமார், “இனி சீக்கிரம் வருவேன்!! சான்ஸ்சே இல்லை” என்று கூற,

ஹரீஷ் தங்ககுமார் அறியாமல் திவ்யாவை பார்த்து கண்சிமிட்டினான்.

அவனை முறைத்தவள் தங்குமாரிடம், “சார் உங்களுக்கு ஒரு டிப்ஸ் சொல்லவா?” என்றாள். 

தங்ககுமார் சந்தேகமாக பார்க்கவும், அவள், “இதில் எந்த உள்குத்தும் இல்லை சார்” என்றவள் ஹரீஷை பார்த்தபடி, “உங்களுக்கு சேர்மன் சாரிடம் காரியம் ஆகணும்னா ஹரி சாரை பிடிங்க.. இப்போ அவர் தான் சேர்மன் சாருக்கு ரொம்ப(அழுத்தம் கொடுத்து கூறினாள்) நெருக்கமானவர்” என்றாள்.

ஹரீஷ் அவளை முறைத்தபடி, “சும்மா சொல்றா சார்” என்றான்.

திவ்யாவோ தங்ககுமாரிடம், “நிஜம் சார்.. என்னை விட இவர் தான் ரொம்ப க்ளோஸ் இப்போ.. இவர் என்ன சொன்னாலும் சேர்மன் சார் மறுபேச்சின்றி கேட்பார்..” என்றவள் ஹரீஷை பார்த்து, “இவரை கவனித்தால் தான் இவர் மத்தவங்களை நல்லா கவனிப்பார்னு நினைக்கிறாரோ என்னவோ!” என்றபடி புருவம் உயர்த்தினாள்.

தங்ககுமார், “என்ன சொல்ற?” 

திவ்யா புன்னகையுடன் தங்ககுமாரை பார்த்தபடி ஹரீஷை நோக்கி கையை நீட்டி, “இவரை கேளுங்க.. விம் போட்டு விளக்கிச் சொல்வார்” என்றுவிட்டு வெளியேறினாள்.

Advertisement