Advertisement

விலகல் 26

ஹரீஷை காதலிப்பதில் திவ்யா எவ்வளவு தீவிரமாக இருந்தாளோ அதே தீவிரத்தை அவனை விட்டு விலகி இருப்பதிலும் காட்டினாள்.

தனிமையில் அவளை அணுக முடியாமல் திண்டாடிய ஹரீஷ் அரவிந்தின் உதவியை நாடினான்.

தங்ககுமார் வகுப்பின் நடுவே ஒரு மாணவன் வந்து திவ்யாவை அரவிந்த் அழைப்பதாக கூறினான்.

திவ்யா அரவிந்தை காண கணினி ஆய்வு கூடத்திற்கு சென்றபோது அங்கே ஹரீஷ் மட்டுமே இருந்தான். அவன் புன்னகையுடன் அவளை வரவேற்றான்.

அவள் அவனை முறைத்துவிட்டு கிளம்ப, அப்பொழுது உள்ளே வந்த அரவிந்த், “YYY காலேஜ்ஜில் பேப்பர் பர்சன்ட் பண்ணனும் சொன்னியே.. அதை பற்றி பேச தான் கூப்பிட்டேன்” என்றான். 

“கிளாஸ் நடுவில் கூப்பிட மாட்டீங்களே சார்!” 

“அது.. இப்போ தான் நான் ஃப்ரீயா இருந்தேன்” 

“நீங்க ஃப்ரீயா.. இல்லை உங்க நண்பர் ஃப்ரீயா?” 

“அதுவும் சரி தான்.. அவன் தான் உன்னை கைட் பண்ணப் போறான்” 

“அப்போ இந்த பேப்பரை நான் பர்சன்ட் பண்ணலை சார்” 

“திவ்யா.. பர்சனல் வேறு படிப்பு வேறு” 

“அது மத்தவங்களுக்கு.. என்னை பெற்றவரை டென்ஷன் படுத்த அரியர் வைத்தவள் நான்.. இதெல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்லை.. தேவை இல்லாமல் உங்க தரத்தை இறக்கிக்காதீங்க” என்றபடி அவள் கிளம்ப,

ஹரீஷ் சட்டென்று அவளது வலது கையை பற்றி நிறுத்தினான்.

அவள் திரும்பி அரவிந்தை முறைக்க,

அரவிந்த் மனதினுள் ‘தேவை தான்டா எனக்கு!’ என்று கூறிக் கொண்டு ஹரீஷை முறைத்தான்.

ஹரீஷ் அதை கண்டுக் கொள்ளாமல், “தியா நான் உன்னிடம் பேசணும்” என்றான்.

“எனக்கு யாருடனும் பேச வேண்டியது இல்லை சார்” என்று அரவிந்தை பார்த்து கூறினாள்.

ஹரீஷ், “உன்னை பேச சொல்லலை.. நான் பேசுவதை கேளுனு தான் சொல்றேன்” என்றான். 

“இவர் சொல்றதை நான் ஏன் சார் கேட்கணும்?” 

“நான் சொல்றதை கேட்காமல் யாரு சொல்றதை கேட்ப?” 

“அது இவருக்கு தேவை இல்லாதது” 

“அதை நான் சொல்லணும்” 

“என் சம்பந்தப்பட்ட விஷயத்தை நான் தான் முடிவு செய்வேன்” என்று அப்பொழுதும் அரவிந்தை பார்த்து தான் கூறினாள். 

“நீ தான் நான்.. நான் தான் நீ என்றாகி ரொம்ப நாள் ஆச்சு”

பார்வையை சுழற்றியவள் மேஜை மீது இருந்த பேனாவை இடது கையில் எடுத்து அரவிந்தை நோக்கி, “இப்போ என் கையை விடலை நான் என்ன செய்வேன்னு உங்க பிரெண்ட் கிட்ட சொல்லுங்க சார்” என்றாள். 

அரவிந்த் பதற்றத்துடன், “டேய் விடுடா.. மணிமேகலை மேடம் லீவ் தரலைனு பென்சிலால் கையை கீறிக்கிடா” என்றான். 

“தெரியும் டா..” என்று அசால்ட்டாக கூறிய ஹரீஷ் சட்டென்று பிடியில் அழுத்தம் கொடுத்து சிறிது இழுக்க, அவள் அவன் அருகில் வந்து நின்றாள்.

இருவருக்கும் இடையே சிறு இடைவெளி மட்டுமே இருக்க, இவ்வளவு நேரம் அவனது தொடுகையை உணராத அவளது மனம் அவனது அருகாமையில் அதை உணர்ந்தது. கோபம் மறையத் தொடங்கி அவளது பெண்மை விழிக்க தொடங்கியது.

அவள் மௌனமாக நிற்க, அவன் புன்னகையுடன், “என் செல்ல ரௌடி பேபி! மாமா உன்னை விட பெரிய ரௌடி-டி”  என்றபடி கண் சிமிட்டினான்.

அரவிந்த் வாயடைத்து போய் பார்த்துக் கொண்டு நின்றான்.

அவளது வைராக்கியத்தையும் மீறி அவனது ஒவ்வொரு வார்த்தைகளும், கண்சிமிட்டலும் அவளது மனதை மயிலிறகை போல் வருடியது.

அவன், “என்ன! பென்சிலும் பேனாவும் உன் கையை மட்டும் தான் கீறுமா?” என்று கேட்டு புருவம் உயர்த்த, அவளுள் சிறு அதிர்வலை ஓடியது. அதை அவளது கையில் உணர்ந்தவன் அவளது கண்களை ஆழ்ந்து நோக்கினான்.

அவள் அவன் பார்வையுடன் கட்டுட்டுண்டு நின்றது சில நொடிகளே, பின் சுதாரித்தவளாக கையை உருவ முயற்சித்தாள்.

கையை உருவ முடியவில்லை என்றதும் அவள் அரவிந்தை முறைத்தபடி, “நீங்க செய்திருக்கும் வேலைக்கு பெயர் என்ன தெரியுமா?” என்று கேட்டாள். 

ஹரீஷ் கோபத்துடன், “தியா!!” என்றான். 

“இந்த கத்தலை வேறு எங்கேயாவது காட்ட சொல்லுங்க சார்” என்றவளது பார்வை மீண்டும் அரவிந்திடம் மட்டுமே இருந்தது. 

“பேசுறதுக்கு அளவில்லை! உன் சாரை இப்படி தான் பேசுவியா?” 

“கோபம் வந்தால் இவர் பேசுறதை விட அதிகமா நான் பேசிடலை சார்.. அது போக, நான் பேசுவது உண்மை” 

“எதுடி உண்மை?” என்று கடும் கோபமாக அவள் கையை உலுக்கியவன் அவள் முகத்தை பற்றி தன்னை நோக்க செய்து, “நீ அவனை மட்டும் கேவலமா பேசலை.. நம் உறவையும் தான் கேவலமா பேசுற” என்றான். 

கண்களை மூடியவள், “எனக்கும் இவருக்கும் ஆசிரியர் மாணவி என்ற உறவை தவிர வேறு எந்த உறவும் இல்லை சார்.. இப்போ இவர் கையை விடலை நான் சொன்னது தான் அர்த்தம்னு சொல்லுங்க” என்றாள். 

“ஏய்!” என்றவனின் கோபத்தில் அவனது பிடி இறுக, அவளது கையும் தாடையும் வலித்தது. அதை வெளியே காட்டாமல் அவள் இருந்தாலும், அரவிந்த் ஹரீஷின் கையை பற்றியபடி, “டேய் விடுடா.. அவளுக்கு வலிக்குது” என்றான்.

அவளது மூடிய கண்களில் அவளது வலியை உணர்ந்தவன் முகத்தில் இருந்து மட்டும் கையை எடுத்தான். அவளது கையை விடவில்லை என்றாலும் பிடியை சிறிது தளர்த்தி இருந்தான்.

திவ்யா அரவிந்தை பார்த்து உறுதியான குரலில், “கடைசியா கேட்கிறேன் சார்.. என் கையை விட முடியுமா முடியாதானு கேளுங்க” என்றாள். 

ஹரீஷ், “நான் சொல்றதை கேளு.. அப்புறம் விடுறேன்” என்றான். 

“இப்போ இவர் விடலை! நான் நிச்சயம் என் கையை கீறுவேன்.. பதிலுக்கு அவரும் கீறிகிட்டும்.. அதை பார்க்க நான் இருக்க மாட்டேன்” 

ஹரீஷ் மீண்டும் கோபத்துடன், “ஏன்டி என்னை உயிருடன் கொல்ற!” என்றான். 

அவள் வலியுடன் அவனை பார்க்க, அவன் வேதனையுடனும் காதலுடனும், “ஏன்டி இப்படி கஷ்டப்படனும்? நான் சொல்றதை கொஞ்சம் கேளேன்.. நான் உன்னை உனக்காக தான் விரும்புறேன்.. நான்……………..” 

கையை பலம் கொண்டு உதறி விடுவித்தவள், “அன்னைக்கும் இப்படி தான் சேர்மன் கிட்ட அவர் நிம்மதிக்காக மட்டும்னு பேசினார்.. அப்புறம் நான் கேட்டா எனக்காக பேசினாராம்.. அதை போல் இப்போ எனக்காகனு சொல்லுவார்..

அப்புறம் சேர்மன் சாரின் உறவை நான் ஏற்ற பிறகு அவருக்காகனு சொல்லி இவர் விலகினாலும் விலகுவார்.. எதுக்கு! நானே விலகிக்கிறேன்.. எனக்கு யாருமே வேணாம்” என்று ஆவேசமாக பேசியவள் வேகமாக வெளியேறினாள்.

ஹரீஷ் பெருமூச்சை வெளியிட்டபடி இருக்கையில் அமர அரவிந்த், “கோபத்தை குறை டா” என்றான்.

“அவள் பேசுறதை கேட்டு கோபப்படாம கொஞ்சவா செய்வாங்க!” 

“அவளை இப்படி பேச தூண்டியது நீ தானே!” 

“நான் இப்படி தான்டா..” 

“இப்படியே இருந்தா ரெண்டு பேரும் ரெண்டு துருவங்களா தான் இருக்க முடியும்” 

ஹரீஷ் முறைக்கவும்,

அரவிந்த், “என்னை முறைத்து ஒண்ணும் ஆகப் போறது இல்லை.. நான் இப்படி தான்னு வாய் கிழிய சொல்லுறவன் இப்படிப் பட்ட உன்னை உனக்காக காதலித்தவளை வாயை மூடிட்டு ஏத்துகிட்டு இருக்கனும்” என்றான். 

“என்னவோ போனா போகுதுனு ஏத்துகிறது போல் சொல்ற! அவள் தேவதைடா.. அவள் கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கணும்” 

“ஹ்ம்ம்.. என் கிட்ட மட்டும் வாய் கிழிய அவளை கொஞ்சு” 

“எல்லாம் என் தலையெழுத்து! உன்னிடம் கொஞ்சிட்டு இருக்கிறேன்..” என்றவன், “நானா மாட்டேன்னு சொல்றேன்! அவ கேட்க மாட்டிக்கிறாடா” என்றான். 

“நீயா இழுத்து விட்டுக்கிட்டது தான்.. சரி சரி உடனே கண்ணகி அவதாரம் எடுக்காத.. இப்போ என்ன பண்ணப் போற?” 

“பார்க்கலாம்” 

“ஆனாலும் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துட்டடா” 

“நண்பனுக்காக இது கூட செய்யலைனா எப்படி!” 

“ஹ்ம்ம்.. தேவை தான்டா” என்றவன், “ஆனாலும் இப்படி டக்குனு கையை பிடிச்சு இழுத்துட்ட! ஒரு சின்ன பையன் முன்னாடி ப்ரீ ஷோ காட்டிருவியோனு பயந்துட்டேன்” 

அவன் அரவிந்த்தை மேலும் கீழும் பார்த்தான். 

அரவிந்த், “சரி வா.. வேலையை பார்ப்போம்” என்றபடி கணினியை இயக்கினான்.

 

 

ய்வகத்தை விட்டு வெளியேறிய திவ்யா நேராக சென்றது ராஜாராம் அறைக்கு.

அவள் உள்ளே சென்றதும் ராஜாராம், “என்னடா இந்த நேரத்தில் வந்திருக்க?” என்று கேட்டார். 

“என்னை ஸ்டுடென்ட் போல் பாருங்க” 

“ராகவன் பற்றி தெரிந்துமா இப்படி பேசுற?” 

“அவர் தப்பானவர் தான்.. அதுக்காக உங்க மனைவி செய்தது சரியாகிடாது” 

“சுபா எதுவும் செய்யலை.. அவ……………” 

“எனக்கு அது தேவை இல்லை.. நான் இப்போ வந்தது ஒரு ஹெல்ப் கேட்டு தான்” 

“ஒரு ஸ்டுடென்ட்டாவா என் மகளாவா?” 

அவள் முறைக்கவும், அவர், “நீ தானே ஸ்டுடென்ட்டா பார்க்க சொன்ன” என்றார். 

“நான்  சொல்றதை எல்லாம் அப்படியே செஞ்சுட்டு தான் இருக்கிறீங்களா?” 

“இப்போ நான் என்ன செய்யணும்? உன்னை ஸ்டுடென்ட்டா பார்க்கணுமா இல்லை மகளா பார்க்கணுமா?” 

அவள் கோபத்துடன் திரும்பி கதவை நோக்கி செல்ல, அவர் விளையாட்டை கைவிட்டவராக, “சொல்லுடா என்ன செய்யணும்?” என்று இறங்கி வந்தார். 

அவள் நிற்காமல் செல்லவும், அவர் அவசரமாக, “சாரிடா.. சும்மா விளையாடினேன்.. நான் உன்னுடன் விளையாடக் கூடாதா?” என்றவரின் குரலில் கட்டுண்டவளாக திரும்பினாள்.

அவர் அன்புடன், “சொல்லுடா” என்றார். 

அவள் அமைதியாக இருக்கவும், அவர், “நான் தான் சாரி சொல்………………” 

“சாரி” 

“எதுக்குடா” என்று அவர் பதறினார்.

அவள் சிறிது கலங்கிய விழிகளுடன், “உங்க தூய்மையான அன்பிற்கு நான் தகுதியானவளே இல்லை………..” 

“அப்படியெல்லாம் இல்லைடா” என்று பதறியபடி அவர் எழுந்து அவள் அருகே வர,

கையை நீட்டியபடி, “அங்கேயே இருங்க.. நான் முடிச்சுக்கிறேன்.. உங்க தூய்மையான அன்பிற்கு நான் தகுதியானவள் இல்லை தான் ஆனா உங்க அன்பு என்னை கட்டு படுத்துவதையோ, உங்களுக்காக உங்களிடம் கொண்ட நன்றிக் கடனுக்காக ஹரீஷ் என் காதலை ஏற்பதையோ நான் விரும்பலை.. இருங்க நான் பேசி முடிச்சுக்கிறேன்..

தெரியாத மாதிரி எதுவும் கேட்க வேணாம்.. நீங்க என்னை சரியா கணிப்பது போல் நானும் ஓரளவிற்காவது உங்களை புரிந்துக் கொண்டு இருக்கிறேன்.. என் காதல் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.. ஹரீஷ் மனதும் ஓரளவிற்கு தெரிந்து இருக்கும்.. ஏன் இப்போ நீங்க ரெண்டு பேரும் கூட்டா கூட இருக்கலாம்..

ப்ளீஸ் என்னை விட்டுருங்க.. இதற்கு மேல் என்னால் முடியலை.. இன்னொரு அதிர்ச்சியை தாங்கும் சக்தி எனக்கு இல்லை.. நான் மொத்தமா விலகி போய்டுறேன்.. என்னை வேற காலேஜ்ஜில் சேர்த்து விட்டுருங்க” என்றாள். 

“ஏன்டா இப்படியெல்லாம் பேசுற! நீ என் மகள்டா” 

அவள் கலங்கிய விழிகளுடன் விரக்தியாக சிரிக்கவும், அவருக்கு நெஞ்சை பிசைவது போல் வலித்தது.

அவர் வேகமாக வந்து அவளை தோளோடு அணைத்து, “வேணாம்டா.. இப்படி பார்க்காத.. என்னால் தாங்கிக்க முடியலை.. நான் எப்பவும் உன்னுடன் தான் இருக்கிறேன், இருப்பேன்.. நீ என்னை ஏத்துக்கிட்டாலும் இல்லைனாலும் நீ என் மகள் தான்டா.. அப்பா கிட்ட வந்திருடா.. அப்பா உன்னை சந்தோசமா பார்த்துக்கிறேன்” என்றார். 

அவளது கலங்கிய விழிகளில் இருந்து கண்ணீர் வடிந்தது. அவர் வருந்துவது பொறுக்காமல் அவரை பார்த்து புன்னகைத்தவள் மெல்ல விலகியபடி, “நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர் சார்” என்றாள்.

‘இன்னமும் சார் தானா!’ என்பது போல் அவர் வலியுடன் பார்க்க,

அவள், “அடுத்த ஜென்மத்திலாவது உங்க அன்பு மொத்தத்தையும் எனக்கு மட்டும் தாங்க” என்றாள். 

“இப்பவும்…………………” 

“இப்போ உங்க அன்பிற்கு உரியவர்கள் உங்கள் காதல் மனைவியும், உங்கள் காதல் பரிசான மகளும்” 

“நீயும் என் மகள் தான்டா” 

மறுப்பாக தலையை அசைத்தவள் கிளம்ப பார்க்க,

அவர், “நீ வேற காலேஜ் போனால் அங்கே ஹரீஷ் வரமாட்டாரா?” என்று கேட்டார். 

“ஸோ நீங்களே அதையும் செய்வீங்க!” 

“உன் நல்லதுக்காக தேவை என்றால் செய்வேன்” 

“ஸோ நான் சொன்னது சரி.. ரெண்டு பேரும் கூட்டு” என்றவள், “தேங்க்ஸ்” என்று கோபத்துடன் கூறிவிட்டு கிளம்பிவிட்டாள்.

 

 

ஹரீஷும் அரவிந்தும் கணினியில் வேலையை பார்க்க ஆரம்பித்த சில நிமிடங்களில் ஹரீஷின் கைபேசி அலறியது. அழைத்தது சேர்மன். எடுத்து பேசி முடித்தவன், ‘இவளை எப்படி தான் வழிக்கு கொண்டு வரது!’ என்று முணுமுணுத்தான்.

ராஜாராம் திவ்யா வருத்தத்தில் இருப்பதாகவும் வேறு கல்லூரிக்கு போக விரும்புவதாக மட்டும் கூறியிருந்தார்.

அரவிந்த், “என்ன டா! யாரு போன்?” 

“சேர்மன்” 

“ஓ! மாரியாத்தா அங்கே போய் ஆடியிருக்கா!!” 

ஹரீஷின் முறைப்பில், “சரி சரி.. என்ன சொன்னார் சொல்லு” என்றான். 

“வேற காலேஜ்ஜில் சேர்த்து விடணுமாம்” 

அரவிந்த் வாய் விட்டு சிரிக்கவும், ஹரீஷ் பேனாவை அவன் மீது எறிந்தான்.

அரவிந்த் ஏதோ சொல்ல வாய் திறக்க, ஹரீஷ் கடுப்புடன், “என்ன! நீ சொன்னதை ஒழுங்கா கேட்டிருக்கனுமா?” என்றான். 

“ஹ்ம்ம்” 

“ஓடி போய்டு.. இல்லை கொலை பண்ணிடுவேன்” 

சட்டென்று சிரிப்பதை நிறுத்தியவன், “என்ன டா?” என்றான். 

“நொண்ண டா.. போடா” 

“ஹரி” 

“ப்ச்.. முடிலடா.. எப்படி அணுகுறதுனே தெரியலை.. அவளை சுற்றி வளையத்தை போட்டு இருக்கா.. உள்ளே நுழையவே முடியலை..

தனியா பேச முடிஞ்சா தானே, என் காதலை புரிய வைக்க முடியும்! தனியா சிக்கவே மாட்டிக்கிறா! நான் கூப்பிட்டு விட்டா, கிளாஸ் விட்டு வெளியே வந்துட்டு எங்கேயாவது போய்டுறா.. இன்னைக்கு தான் சிக்கினா, அதுவும் நான் சொல்றதை கொஞ்சம் கூட நம்பாம போய்ட்டா..

போன் பண்ணா எடுக்கிறதே இல்லை.. புது நம்பர்களில் இருந்து கூப்பிட்டா உஷாரா ஹலோ கூட சொல்ல மாட்டிக்கிறா.. நான் ஹலோ சொன்னதும் கட் பண்ணிடுறா..

வாட்ஸ்-அப்-யில் நான் அனுப்புறதை பார்க்கிறது கூட இல்லை.. சந்தோஷப் படுற ஒரே விஷயம் புது நம்பரை மட்டும் ப்ளாக் பண்றா, என் ஒரிஜினல் நம்பரை ப்ளாக் பண்ணலை..

ஹ்ம்ம்.. வீட்டில் இருந்தா கூட பரவா இல்லை.. ஹாஸ்டல் வேற! என்ன பண்ண!” 

“லேப் நேரத்தில் கூப்பிட்டு பேச வேண்டியது தானே!” 

“நான் கூப்பிட்டதும் வந்துட்டு தான் மறுவேலை பார்ப்பா! போடா” 

“ஏன் டா!” 

“அதெல்லாம் முடியாமையா இன்னைக்கு உன்னிடம் வந்து நின்னேன்.. நான் கூப்பிட்டா திரும்பி கூட பார்க்க மாட்டா.. அவளுடைய அடாவடி தான் எல்லோருக்கும் தெரியுமே! அதானால் அவள் கண்டுகொள்ளததை ஸ்டுடென்ட்ஸ் யாரும் கண்டுகொள்வது இல்லை” 

“அவுட்-புட் காமிக்க கூப்பிடுவா தானே!” 

ஹரீஷ் முறைக்கவும், அரவிந்த், “என்ன டா!” என்றான். 

“நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கிறேன்” 

“சரி சரி.. டென்ஷன் ஆகாத.. இதில் என்ன பண்ணா?” 

“அவுட்-புட் காமிக்கவே மாட்டா.. லேப் முடிந்து போகும் போது நோட்டை என் டேபிளில் வச்சிட்டு போய்டுவா” 

“சைன் பண்ணாத” 

“அதையும் தான் பண்ணி பார்த்துட்டேனே! என் காதுபட இந்த லேபில் பெயில் ஆனா கூட கவலை இல்லைனு சொல்லிட்டு போறா” 

“ஸோ நல்ல தண்ணி காட்டுறா!” என்று மென்னகையுடன் அரவிந்த் கூற, அடுத்த நொடி ஒரு கனமான புத்தகம் அவனை நோக்கி பறந்து வந்தது.

அதை பிடித்த அரவிந்த், “நிஜமாவே என்னை நீ கொலை பண்ணிடுவ போலடா” என்று அலறினான்.

“என் புலம்பலும் கஷ்டமும் உனக்கு கிண்டலா இருக்குதா?” 

“இல்லைடா உன்னையும் சுத்தலில் விட………….” என்று பேசிக் கொண்டிருந்தவன் ஹரீஷ் கோபத்துடன் எழவும், “ஆத்தாடி ஆம்பளை சந்திரமுகி டோய்” என்று அலறியபடி வெளியே ஓடினான்.

இணைய காத்திருப்போம்….

Advertisement