Advertisement

விலகல் 4

மதிய உணவு இடைவேளையின் போது பவித்ரா, “என்ன யோசனை திவி?” என்று கேட்டாள்.

“நேத்து தியேட்டரில் ஒருத்தனை பார்த்தோமே! அவனைப் பற்றி தான் யோசிச்சிட்டு இருந்தேன்” 

“பார்த்தோம் இல்லை.. பார்த்தேன் சொல்லு.. நீ மட்டும் தான் பார்த்த” 

“சரி பார்த்தேன்” 

“அவனைப் பற்றி என்ன யோசனை?” 

“ஆள் கொஞ்சம் ஸ்மார்ட்டா தான் இருந்தான்……….” 

பவித்ரா ஆச்சரியமாக பார்க்கவும் திவ்யா, “என்ன?” 

“பசங்களை பற்றி நீ இப்படி பேசியது இல்லையே!” 

“ஸ்கூல் காலேஜில் நான் பெருசா நோட் பண்ணது பண்றது இல்லை.. நான் பார்த்து அதை அவன்க பார்த்து! எதுக்கு தேவை இல்லாத வினைனு விட்டுட்டேன்” 

“ஆச்சரியமா இருக்குதே!” 

“எது?” 

“இல்லை ஒரு விஷயம் வினையை கூட்டும்னா அதை தானே நீ செய்வ” 

“நானா வினையை கூட்டுவேன்.. அதுவா என்னை தேடி வர மாதிரி நடந்துக்க மாட்டேன்” 

“என்னவோ போ!” என்றவள் சிறு தயக்கத்துடன், “ஒண்ணு கேட்கலாமா?” என்றாள். 

“என்ன?” 

“நீ.. உனக்கு..” 

“தந்தி அடிக்காம விஷயத்தை சொல்லு” 

“அது” 

“அடி தான் தர போறேன்.. சொல்லி தொலைடி” 

“அது வந்து..” 

திவ்யா முறைக்கவும், பவித்திர வேகமாக, “நீ கல்யாணம் பண்ணிக்குவ தானே!” என்றாள். 

திவ்யா வாய்விட்டு சிரிக்க, பவித்ரா சிறு கலக்கத்துடன், “என்னடி?” 

“இதுக்கு தான் இவ்ளோ பில்ட்-அப் குடுத்தியா?” 

“பதிலை சொல்லுடி” 

திவ்யா சிறு இறுக்கத்துடன், “பண்ணிப்பேன் ஆனால் அவர்களை போல் இல்லாமல் சந்தோஷமான நிறைவான வாழ்க்கையை வாழ்வேன்” என்றாள். 

பவித்ரா ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்க்கவும், திவ்யா மெல்லிய புன்னகையுடன், “அவர்களை நான் வெறுத்து விலக்கினேன் தான்.. ஆனா.. நான் கண்டிப்பா திருமணம் செய்துப்பேன்.. அதுவும் காதல் திருமணம்” என்றாள். 

பவித்ராவின் விழிகள் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியுடன் மேலும் விரியவும் திவ்யா விரிந்த புன்னகையுடன், “எதுக்கு இவ்ளோ ஷாக்?” 

“அது இல்லை.. நீ…” 

“ஹ்ம்ம்.. என்னை போல ஒருத்திக்கு கல்யாணம் நடக்கணும் என்றால் அது காதல் கல்யாணமாக இருந்தால் தான் அது சாத்தியம்..

ஆனால் அதிலையும் என் பின்புலத்திற்காக இல்லாமல், முக்கியமா என் மீது பரிதாபப்பட்டு அல்லாமல் என்னை எனக்காக விரும்பும், என்னை மட்டும் காதலித்து, என்னை உயிராய் நேசிக்கும் ஒருவனை நானும் உயிராய் காதலித்து கல்யாணம் செய்துக்கணும்.. அவனது அன்பின் சிறை வாசத்தில் திகட்ட திகட்ட இனிய வாழ்க்கையை வாழனும்” என்று கண்கள் மின்ன கனவில் மிதப்பவள் போல் கூறியவளை கண்டு பவித்ராவின் மனமும் கண்களும் கலங்கியது. அந்த நொடியே தன் தோழிக்கு அத்தகைய வாழ்க்கை அமைய வேண்டும் என்று மனமார இறைவனை வேண்டினாள்.

கனவில் மிதந்தவள் மெல்ல இறுகவும், பவித்ரா பேச்சை மாற்றும் விதமாக, “சரி தியேட்டர் பார்ட்டி பத்தி என்ன யோசனை?” என்று கேட்டாள். 

“இதுவும் பெருசா ஒண்ணும் இல்லை.. சும்மா திடீர்ன்னு யோசித்தேன் அவ்ளோ தான்” 

“அப்டிங்கிற!” 

“அப்படியே தான்” 

“ஆனாலும் சண்டை போட்டுட்டே சைட் அடிச்ச ஆள் நீயா தான்டி இருப்ப” 

“அது வேற டிப்பார்ட்மென்ட் இது வேற டிப்பார்ட்மென்ட்” என்று புன்னகையுடன் கண்சிமிட்ட, பவித்ரா புன்னகைத்தாள்.

“சரி நேத்து என்ன சண்டை? அப்பறம் சொல்றேன்னு சொல்லி விட்டுட்டியே!” 

“அதுவா…” என்று நேற்று திரை அரங்கத்தில் நிகழ்ந்ததை பற்றி சொல்ல ஆரம்பித்தாள். 

 

திரைப்பட இடைவேளையின் போது விஜய் கழிப்பறைக்கு சென்றிருக்க, பவித்ரா ‘பிரெஞ்சு ஃப்ரைஸ்’ வாங்க ஒரு இடத்திற்கு செல்ல, திவ்யா மக்காச்சோளப்-பொறி(பாப்-கார்ன்) மற்றும் குளிர்ந்த காபி வாங்க ஒரு இடத்திற்கு சென்றாள்.

திவ்யா நின்ற இடம் சற்று கூட்டமாக தான் இருந்தது.

அவளிடம் மக்காச்சோளப் பொறியை கொடுத்தவர், “கோல்ட் காபி அடுத்த கவுன்டரில் வாங்கிக்கோக மேம்” என்று கூற,

இரண்டு கைகளிலும் மக்காச்சோளப் பொறியை பிடித்தபடி, “தன்க் யூ” என்றபடி புன்னகையுடன் திரும்பியவள் ஒரு இளைஞன் மீது மோதினாள்.

அவள், “சாரி” என்று கூற,

அவனோ அவளது மன்னிப்பை பொருட்படுத்தாமல், “அறிவில்லை உனக்கு? கண்ணு என்ன பொடதிலேயா இருக்குது உனக்கு? இல்லை வேணும்னே இடிச்சியா?” என்று கடுமையாக வினவினான்.

ஒரு நொடி அவன் முகத்தை சலனமற்று பார்த்தவள் அடுத்த நொடி கையில் இருந்த மக்காச்சோளப் பொறி ஒன்றை அவன் தலையில் கொட்டினாள்.

அவன் கோபத்துடன் கையை ஓங்கினான். ஆனால் கண்ணில் சிறிதும் பயமின்றி தைரியத்துடன் தீர்க்கமாக பார்த்த அவளது விழிகளை கண்டு என்ன நினைத்தானோ கையை கீழே இறக்கி கோபத்துடன், “உன்னை எல்லாம் பெத்தாங்களா செஞ்சாங்களா?” என்றான். 

“உன்னை போன்ற ஆட்களை சமாளிக்க என்னை செஞ்சாங்க” 

“ஏய்! என்ன கொழுப்பா?” 

“ஏன் உனக்கு வேணுமா?” 

அவன் கோபத்துடன் பல்லை கடிக்க, அப்பொழுது அவன் பின்னால் இருந்த நடுத்தர வயதுடைய ஒரு ஆள், “ஏம்பா உங்க ஊடலை சத்த தள்ளி நின்னு வச்சுக்கபிடாதோ!” என்றார். 

அவன் கோபத்துடன் அவரை முறைத்தபடி ஏதோ சொல்ல வர,

அவள் தலையை மட்டும் சரித்து அவனுக்கு பின் இருந்தவரை பார்த்து, “இப்போ என்ன சொன்னீங்க?” என்று கேட்டாள். 

அவர், “மற்றவாளுக்கு வழி விட்டு உங்க ஊடலையோ கூடலையோ சத்த தள்ளி இருந்து வச்சிண்டா நல்லது” என்றார். 

அவன் திரும்பி பார்த்து அவளை முறைக்க, பதிலுக்கு அவனை முறைத்தவள் இரண்டடி முன்னால் வந்து அந்த ஆள் அருகே இருந்த மாமியை சுட்டிக் காட்டி, “உங்க தங்கை ரொம்ப அழகா இருக்காங்க” என்றாள். 

“என்ன??!!” 

அவரது முகத்தை பார்த்து வந்த சிரிப்பை அடக்கி நிதானமாக, “உங்க தங்கை ரொம்ப அழகா இருக்காங்கனு சொன்னேன்” என்றாள் மீண்டும். 

“இவ என் தங்கை இல்லை.. இவ…………….” 

“அப்போ உங்க அக்கா வா! ஆனா பார்க்க அப்படி தெரியலையே! ரொம்ப இளமையா அழகா இருக்காங்க!!!!” 

அவள் அக்கா என்றதும் கோபமான அந்த மாமியின் முகம் அவள் அடுத்து கூறியதை கேட்டு புன்னகையை தத்தெடுத்தது.

அந்த ஆள், “இல்லை.. இவ” 

“அக்காவும் இல்லையா! அப்போ உங்க பொண்ணா?” என்றதும் அவர் அழாத குறையாக, “இவ என் ஆம்படையா.. நோக்கு தெரியலைனா நீயா ஏதாவது சொல்லாதே” என்றார். 

“அதே தான் உங்களுக்கும்” என்றவள் இடத்தை விட்டு நகர்ந்தாள்.

அந்த இளைஞன் சிறு ஆச்சரியத்துடன் போகும் அவளை பார்க்க, அவரோ, “ஏன்டா அம்பி உன் ஆம்படையா எப்போதுமே இப்படி தான் புரியாமல் பேசுவாளா இல்……………………………” 

அவர் முடிக்கும் முன் அவர் தலையில் மக்காச்சோளப் பொறியை கொட்டியவள் சிறு கோபத்துடன், “இப்போ தானே சொன்னேன்.. பேசுறதுக்கு முன் யோசிச்சு பேசுங்க” என்றவள் அந்த மாமியிடம், “நீங்க உண்மையிலேயே ரொம்ப அழகு மாமி.. இவருக்கு நீங்க மனைவியா கிடைத்தது கொஞ்சம் அதிகம் தான்” என்று கூறிச் செல்ல, மாமி புன்னகையுடன் நிற்க, அவர் கணவரோ அதிர்ச்சியுடன் நிற்க, அவனோ வாய்விட்டு சிரித்தான்.

அவனது சிரிப்பு சத்தத்தில் திரும்பியவள் சிரிக்கும் போது அவன் முகத்தின் அழகை ஒரு நொடி ரசித்தவள் பின் தோள்களை குலுக்கிக் கொண்டு நகர்ந்தாள். 

அவன் அவரிடம், “அந்த பொண்ணு சொன்னது போல் பேசுறதுக்கு முன் யோசித்து பேசுங்க.. ஏன்னா அந்த பொண்ணு யாருனே எனக்கு தெரியாது” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.

அவர் மனைவியிடம், “அந்த பொண்ணு பாப்-கார்ன் கொட்டிண்டு போறா! வாய் திறக்காம ஜடம் மாதிரி நிக்கிற!” 

“ஹ்ம்ம்.. நீங்கோ தேவை இல்லாம வாய் கொடுத்து மாட்டின்டேள்.. அதற்கு நான் என்ன செய்ய? அந்த குழந்தை சொன்னது போல் நான் உங்களுக்கு அதிகம் தான்.. என்னை திட்டுறேளா!” என்ற பிறகு அவர் மறு பேச்சு பேசுவார்? அதற்கு அவருக்கு தைரியம் வரும்!

அவர், ‘நேக்கு நேரமே சரியில்லை’ என்று மனதினுள் புலம்பியபடி மனைவிக்கு வேண்டியதை வாங்க சென்றார்.

 

திரை அரங்கத்தில் நடந்ததை கூறி முடித்த திவ்யா, “அவனது கோபத்திற்கும் அந்த சிரிப்பிற்கும் சம்பந்தம் இல்லை.. அதான் அவன் குணம் என்னன்னு யோசிச்சிட்டு இருந்தேன்..” 

“நீ ஒரு ஒரிஜினல் பீஸ்டி.. ஆனாலும் அந்த மாமா கொஞ்சம் பாவம்” 

“மாமா வா?” 

“அய்யர் வீட்டு லேடினா மாமி சொல்வோம் தானே! அதை போல் மாமா” 

“அதுக்காக எவனையோ மாமா சொல்லுவியா?” 

“சரி.. அந்த ஆள்.. போதுமா?” 

“ஹ்ம்ம்..” 

“அவன் உன்னை எப்படி அடிக்காம விட்டானோ?” 

“அவன் அடிக்கலைன்னு உனக்கு ரொம்ப வருத்தம் போல!” 

“லூசு” 

“அதை நீ சொல்லாதே” 

“நான் என்ன லூசா?” 

“பின்ன இல்லையா?” 

பவித்ரா முறைக்க, அதை கண்டு கொள்ளாமல், “அவன் அடிக்க கையை தூக்கினான்.. ஆனா என்ன நினைத்தானோ விட்டுட்டான்..” 

“உனக்கு பயமா இல்லையா?” 

“எதுக்கு பயப்படனும்? என் மேல் தப்பு இருந்தால் தானே பயப்படனும்? நியாயமா பார்த்தா அவன் பேசியதிற்கு நான் தான் அவனை அடித்து இருக்கணும்.. சரி பொது இடமாச்சேனு விட்டுட்டேன்.. ஆனா அவனால் பாப்-கார்ன் வேஸ்ட்டா போச்சு.. முன்னூற்றி அறுவது ரூபாய் தண்டம்” 

“அதை கொட்டுறதுக்கு முன் யோசித்து இருக்கணும்” 

“அப்போ அதானே என் கையில் இருந்தது” 

“சரி.. அவன் அடிச்சு இருந்தால் என்ன பண்ணியிருப்ப?” 

“ஸோ சிம்பிள்.. அடுத்த நொடி நான் அவனை அடித்து இருப்பேன்” 

“அடி பாவி” என்று பவித்ரா நெஞ்சை பிடித்தாள்.

“ஒரு நாள் நிஜமாவே உனக்கு நெஞ்சு வலி வர போகுது” 

“உன் வாயில் நல்ல வார்த்தையே வராதா?” 

“நீ செய்றது அப்படி தானே இருக்குது” 

பவித்ரா அவளை முறைக்க, அப்பொழுது அங்கே வந்த விஜய், “ஹாய் கேர்ள்ஸ்.. வாட்’ஸ் அப்?” 

திவ்யா, “என்ன உன் நீண்ட நாள் கனவு நிறைவேறியது போல!” என்றாள். 

“என்ன?” 

“அந்த சுனிதா கூட கடலை போட்டுட்டு தானே வர! இத்தனை நாள் உன்னை கண்டுக்காதவள் இன்னைக்கு உன் கூட பேசிட்டா போல!” 

“ஹி..ஹி..ஹி” 

“போதும் வழியாதே! சகிக்கலை” என்று பவித்ரா கூற அவன் அவளை முறைத்தான்.

திவ்யா “என்ன நான் சொன்னது சரி தானே” 

“எப்படி சொன்ன? பார்த்தியா?” 

“இதை வெத்தலையில் மை தடவியா பார்க்கணும்! அதான் உன் முகத்தை பார்த்தாலே தெரியுதே!” 

அவன் மீண்டும் அசடு வழிய, இப்பொழுது இருவரும், “டேய் வேணாம்.. சிரிக்க மட்டும் செய்யாதே! அழுதுருவோம்!” என்று கூற,

“போங்கடி.. உங்களுக்கு பொறாமை” என்றான். 

“பொறாமை பட்டுட்டாலும்” என்று பவித்ரா நொடித்துக்கொள்ள,

“ஒரு ஆமையும் இல்லை” என்று திவ்யா கூறினாள்.

“இருந்தாலும் இது தான் எப்படி கண்டுபிடிச்ச?” 

“பேட் டாங்கி ஸ்மால் வால்” 

பவித்ரா, “என்னடி சொல்ற?” 

விஜய், “கழுதை கெட்டா குட்டிச் சுவர்னு சொல்றா.. நீயெல்லாம் ஒரு காலேஜ் ஸ்டுடென்ட்” 

“போடா.. நீங்களும் உங்க பாஷையும்” 

“இது தான்மா காலேஜ் பாஷை”

பவித்ரா, “சரி அதை விடு.. நீ அந்த சுனித்தாவை லவ் பண்றியா?” 

விஜய் பதில் சொல்லும் முன் திவ்யா, “லிமிட்டோட கடலை மட்டும் தான் போடுவான்.. அதுவும் சும்மா டைம் பாஸுக்கு பண்றான்” என்று கூற, அவன் புன்னகையுடன் காலரை தூக்கியபடி, “யா..” என்றான்.

பவித்ரா, “ஓ! கடலை போடுறதுக்கு கூட ஆள் செலக்ட் பண்ணி தான் போடுவீங்களோ!” 

“பின்ன! ஐயா யாரு? என் லெவல் என்ன?” 

தோழிகள் இருவரும் துப்புவது போல் செய்கை செய்ய, அவனோ, “அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா” என்றான்.

அப்பொழுது வகுப்பு தொடங்குவதற்கான மணி அடிக்கவும், அவரவர் இடத்தில் அமர்ந்தனர்.

பவித்ரா, “இப்போ என்னடி யோசனை?” 

“வேற என்ன! இன்னைக்கு என்ன கலாட்டா பண்ணலாம்னு தான்”

“வேணாம்டி.. என்னால முடியலை” 

அப்பொழுது தங்ககுமார் வகுப்பறையினுள் நுழையவும், திவ்யா, “மில்கயா” என்றாள்.

“என்னடி சொல்ற?” 

“கண்டுபிடிச்சிட்டேன்னு சொன்னேன்” 

“அதுக்கு எதுக்கு மில்கயா சொன்ன?” 

“உன்னை எல்லாம் வச்சிட்டு! நான் சொன்னதிற்கு அது தான் அர்த்தம்.. த்ரீ இடியட்ஸ் படத்தில் ஆல் இஸ் வெல் பாட்டு முடிஞ்சதும் அமீர்கான் அப்படி தான் கத்துவான்” 

“ஓ” என்றவள் அடுத்த நொடியே கலவரத்துடன், “என்னத்தைடி கண்டுப் பிடிச்ச?” 

“ஹ்ம்ம்.. நேத்து சொன்னதை செய்திற வேண்டியது தான்” 

“நேத்து என்ன சொன்ன?” 

“திருவிழாவில் காணாம போன பக்கியாட்டம் நீ இந்த நொந்த குமாரிடம் மாட்டிட்டு முழிச்சப்ப என்ன சொன்னேன்” 

“முன்ன பின்ன தப்பு செஞ்சா தானே தெரியும்?” 

“சின்ன வயசில் இருந்து என் கூடவே இருக்கிறவ இந்நேரம் இதில் Ph.d வாங்கியிருக்க வேணாமா?” 

பவித்ரா அவளை முறைக்க அப்பொழுது ஆசிரியர், “பவித்ரா திவ்யா கெட் அப்” என்றார்.

அவர்கள் எழுந்ததும் அவர், “இப்போ நான் என்ன நடத்தினேன் சொல்லுங்க”

பலகையில் எழுதி இருந்த தலைப்பை பார்த்துவிட்டு பவித்ரா ஏதோ சொல்ல வர ஆசிரியர், “நீ இரு.. திவ்யா முதலில் சொல்லட்டும்” என்றார்.

அந்த தலைப்பை பற்றி சரியாக கூறியவள் “ஆனால்” என்று நிறுத்தி அவர் ஒரு இடத்தில் தவறாக கூறியதை சுட்டி காட்டி கூறவும் அவர் மட்டுமின்றி மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் அவளை பார்த்தனர்.

அவள் சிறு தோள் குலுக்கலுடன் இருக்கையில் அமர்ந்து தோழியின் கையை இழுத்து அவளையும் அமர செய்தாள்.

ஒருவாறு அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த ஆசிரியர், “குட்” என்று தன்னை சமாளித்தவராக கூறிவிட்டு, “இனி அடுத்த டாபிக் பற்றி பார்ப்போம்” என்றபடி வகுப்பை தொடர்ந்தார்.

பவித்ரா மகிழ்ச்சியுடன் தோழியை பார்க்க, அவளோ, “ரொம்ப சந்தோஷப் படாத.. சும்மா அவருக்கு ஷாக் கொடுக்க தான் பதில் சொன்னேன்” என்றாள்.

இணைய காத்திருப்போம்…

Advertisement