Advertisement

திவ்யா அவளது அறையில் ராகவன் மடியில் படுத்து அழுதுக் கொண்டிருக்க, ராகவனும் கலங்கிய கண்களுடன் அவளை சமாதானம் செய்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்த பார்வதி, “உங்களை பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்க” என்றார். 

“யாரு?” 

“எனக்கு தெரியாது” 

“இதை கூட கேட்க மாட்டியா?” என்று ராகவன் எரிந்துவிழ,

பார்வதி கோபத்துடன், “என்னை யாரு மதிக்கிறா?” என்றார். 

“மதிக்கிறது போல் நீ நடந்துகிறது இல்லை” 

“அதானே என்னை பார்த்தா உங்களுக்கு மனிஷியா தெரியாதே.. இவளை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுங்க.. சனியன் ஒழிஞ்சுதுனு நினைத்தேன்.. கண்டு பிடிச்சு கூட்டிட்டு…………………” 

“ஏய்” என்றபடி பார்வதியை அடித்தவர், “யாரை பார்த்து என்ன சொல்ற? நீ தான்டி சனியன்.. உன்னை கல்யாணம் பண்ணாமல் இருந்திருந்தா நானும் என் மகளும் சந்தோஷமா இருந்து இருப்போம்” 

“யாரோ பெத்தவளை உங்க மகள்னு சொல்றீங்களே உங்களுக்கு வெக்கமா இல்லை” 

“ஏய்” என்று மீண்டும் கையை ஓங்கியவர், “சீ.. மனுஷன் பேசுவானா உன்னிடம்” என்றவர் மகளிடம் திரும்பி, “குட்டிமா அப்பா போய் யாருன்னு பார்த்துட்டு வரேன் டா” என்றார். 

திவ்யா அமைதியாக இருக்கவும், அவளது தலையை வருடி, “எதையும் யோசிக்காத டா” என்று அன்புடன் கூறியவர் பார்வதியிடம் திரும்பி கோபத்துடன், “வா” என்றார்.

“நான் எதுக்கு?” 

“உனக்கு இங்கே என்ன வேலை?” 

“என்னவோ பண்றேன்” 

“ஒண்ணும் தேவை இல்லை.. என்னுடன் வா” என்றபடி அவரை இழுத்துக் கொண்டு சென்றார்.

 

 

வரவேற்பறைக்கு சென்ற ராகவன் அங்கே இருந்த சுபாஷினியை பார்த்து, “நீ.. நீ..” என்று முதலில் யோசனையில் ஆரம்பித்தவர் பின் கோபத்துடன், “உனக்கு இங்கே என்ன வேலை?” என்றவர், “வேலா” என்று கத்தினார்.

ராகவனின் கத்தலில் தோட்டக்காரன் ஓடி வரவும், “இவளை கழுத்தை பிடித்து வெளியே தள்ளு” என்று கத்தினார்.

ராஜாராம் கோபத்தை அடக்கிய குரலில், “அவள் மேல் கை வைத்த! அடுத்த நொடி உன் உடம்பில் உன் கை இருக்காது” என்றார். குரலை உயர்த்தாமலும் கர்ஜிக்க முடியும் என்பதை தோட்டக்காரன் வாயடைத்துப் போய் பார்த்தான்.

ராகவனின் குரலில் அங்கே வந்து அறை வாயிலில் நின்றிருந்த திவ்யாவை யாரும் கவனிக்கவில்லை.

ராகவன், “நீ யார்?” 

“சுபாவின் கணவன்” 

ராகவன் இகழ்ச்சியான குரலில், “கல்யாணம் பண்ண உனக்கு இவள் தான் கிடைத்தாளா?” 

“இவளுக்கு என்ன குறை? இரண்டு கல்யாணம் பண்ண உனக்கு இவளை பற்றி பேசும் அருகதை இல்லை” 

“ஏய்” என்று ராகவன் விரலை நீட்டி கத்தினார்.

சுபாஷினி, “இவனுடன் பேசி உங்களை தாழ்த்திக்காதீங்க” 

ராகவன், “அதே திமிர்.. நீ மாறவே இல்லை” 

“நான் ஏன் மாறனும்? அது திமிர் இல்லை நிமிர்வு.. அது உனகெல்லாம் புரியாது” 

ராகவன் எரிச்சலுடனும் கோபத்துடனும், “இப்போ எதுக்கு வந்த? உன்னையும் ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு சொல்லி காட்டவா?” 

“அது என்ன தேவைக்கு?” 

“அப்புறம் எதுக்கு வந்த?” 

“என் மகளை கூட்டிட்டு போக” 

“என்ன!! என்ன சொன்ன?” 

“என் மகளை கூட்டிட்டு போக வந்தேன்” என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்.

ராகவன் நக்கல் குரலில் ராஜாராமை பார்த்து, “இவளுக்கு பயித்தியம் பிடிச்சிருக்கா?” 

ராஜாராம், “ராகவன் வார்த்தையை அளந்து பேசு” 

“இல்லைனா என்ன செய்வ?” 

“நானும் இந்த ஊரில் அந்தஸ்த்து உள்ள ஆள் தான்.. மேலும் உன்னை விட சில இடங்களில் செல்வாக்கு அதிகம் உடையவன்” 

“அப்படி என்ன செல்வாக்கு?” 

“இப்போ அது தேவை இல்லாதது.. நாங்க எங்கள் மகள் திவ்யாவை கூட்டிட்டு போக வந்தோம்” 

“என்ன சொன்ன?” 

“திவ்யா எங்கள் மகள்” 

ஒரு நொடி அதிர்ந்த ராகவன் அடுத்த நொடியே சுதாரித்து, “திவ்யா உங்கள் மகளா? என்ன உளறல்?” 

“ஒரு DNA டெஸ்ட் போதும் அதை நிரூபிக்க” என்றார் சுபாஷினி. 

திவ்யா அதிர்ச்சியுடன் வந்தவர்களை பார்த்தாள். ராஜாராமை அப்பொழுது அவள் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.. தாயின் பாசத்திற்கு ஏங்கியவளின் கண்கள் சுபாஷினியை தான் பார்த்தது. சுபாஷினி தன்னை பெற்றவள் என்றதை கேட்டு அவள் எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே புரியவில்லை. 

ராகவனோ அலட்டிக் கொள்ளாமல், “இருக்கட்டுமே! நான் சட்டபடி அவளை தத்தெடுத்து இருக்கிறேன்.. பெத்தவங்களாவே இருந்தாலும் நீங்க அவளை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது” என்றார். 

“நீ அவளை பார்த்துக்கிட்ட லட்சனத்தை சொல்லி அவளை உன்னிடமிருந்து எங்களால் வாங்க முடியும்” 

“ஏன்! என் வளர்ப்பிற்கு என்ன குறை?” 

ராஜாராம், “வளர்ப்பில் குறை இல்லை ஏன்னா அவளை வளர்த்தது உன் முதல் மனைவி.. குணத்தில் திறமையில் அவள் அவளை பெற்ற அன்னையை போல் தான் இருக்கிறாள்..” என்றார். 

“அவள் என் மகள்.. அவளை நான் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்” என்று சிறு பதற்றத்துடனும் கோபத்துடனும் ராகவன் கத்தினார்.

ராஜாராம், “நீ அவளை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்பதற்கு சாட்சி இரண்டு நாட்கள் அவள் அனாதை ஆசிரமத்தில் இருந்தது” என்றார். 

சுபாஷினி, “இவனுடன் என்ன பேச்சு? திவ்யாவை கூட்டிட்டு போகலாம்………..” 

பார்வதி, “தாராளமா கூட்டிட்டு போங்க” 

“நீ வாயை மூடு.. அவள் என் மகள்” என்று பார்வதியிடம் கர்ஜித்த ராகவன் சுபாஷினி பக்கம் திரும்பி, “என் நிம்மதியை கெடுக்க வந்தியா.. வெளியே போ” என்று கத்தினார். 

“உன்னை போல் கெட்ட எண்ணம் எனக்கு கிடையாது” 

“அப்புறம் எதுக்கு வந்த? அதுவும் திடீர்னு இத்தனை வருஷம் கழித்து” 

“முதலில் திவ்யா எங்கே இருக்கிறாள்னு தெரியாமல் இருந்தோம்.. அவளை கண்டு பிடித்து வந்தபோது தான் நீயும் உன் முதல் மனைவியும் அவளை தத்தெடுத்துட்டு இருந்தீங்க………….” 

“அப்போவே உண்மையை சொல்லியிருக்க வேண்டியது தானே! இப்போ ஏன் திடீர்னு வந்து என் உயிரை வாங்குற” 

“இத்தனை வருஷம் நான் பொருத்துப் போனது என் மகளுக்காகவும் உன் முதல் மனைவிக்காகவும் தான்.. ஆனா இப்போ, என் மகள் எவ்வளவு மனம் ஒடிந்து இருந்தால், அனாதை ஆசிரமம் போய் இருப்பாள்!” 

“பொய்” 

“எது பொய்? திவ்யா என் மகள் என்பதா?” 

“திவ்யா உன் மகளாக இருக்கலாம்.. நான் சொன்னது வேறு” 

“என்ன?” 

“அவளை என்னிடம் விட்டதிற்கான காரணம் தான் வேறு.. அவளை இங்கே வளர விட்டு சொத்தை ஆட்டையை போடலாம்.. என்னையும் பழி வாங்கலாம்னு நினைத்து இருப்ப” 

“சீ.. உன் புத்தி இப்படி தானே போகும்” 

“ஓ! சரி உனக்கு வேறு பிள்ளைகள் இருக்காங்களா?” 

“ஏன் கேட்கிற?” 

“இல்லை.. பிள்ளையே இல்லாம இவளை கூப்பிடுறியோனு கேட்டேன்” என்றார் இகழ்ச்சி நிறைந்த குரலில். 

சுபாஷினி வெறுப்புடன், “எனக்கு இன்னொரு மகள் இருக்கிறாள்” 

“அப்போ நான் சொன்னதில் என்ன தப்பு! அது தான் உண்மை.. சொத்துக்காக………” 

“வாயை மூடு” என்று கோபமாக கத்திய சுபாஷினி, “நான் ஏன் உன் சொத்தை புடுங்கனும்? இந்த சொத்து திவ்யாவோடது தான்.. ஆனால் இது எங்களுக்கு தேவை இல்லை.. எங்களுக்கு எங்கள் மகள் போதும்” என்றார். 

ராஜாராம் சிறு பதற்றத்துடன், “சுபா அமைதியா இரு” என்று குரலை உயர்த்தி பேசினார்.

ராஜாராமின் பதற்றத்தையும் சுபாஷினியின் பேச்சையும் இணைத்த ராகவன் யோசனையுடன் இருவரையும் பார்த்தார். ராஜாராம் முகத்தில் ஒரு நொடி பதற்றம் கூடியது போல் இருந்தது. சில நொடிகள் சுபாஷினியின் ‘இந்த சொத்து திவ்யாவோடது தான்’ என்ற வார்த்தைகளையும் வேறு சிலதையும் யோசித்த ராகவன் முகத்தில் சிறு மின்னல் வந்தது. அவர் மனம் ‘அப்படியும் இருக்குமோ!’ என்று யோசித்தது.

சட்டென்று சுபாஷினி அருகே சென்ற ராகவன், “ஏய் உண்மையை சொல்லு திவ்யா யாரோட மகள்?” என்று கேட்டார். 

சுபாஷினியோ ‘நீ என்ன லூசா!’ என்பது போல் பார்க்க, ராகவன் ஆர்வம் கலந்த கோபத்துடன், “சொல்லுடி திவ்யா யாரு மகள்?” 

ராஜாராம், “ராகவன் மரியாதையுடன் பேசு” என்று கடுமையுடன் கூறினார்.

அதை கண்டுக்கொள்ளும் நிலையில் ராகவன் இல்லை. அவர் கவனமோ சுபாஷினியிடம் தான் இருந்தது.

சுபாஷினி, “அதான் சொன்னேனே திவ்யா எங்க……………” 

ராகவன், “திவ்யா அம்மா நீ சரி.. அவள் அப்பா யாரு?” என்று கேட்டதும் சுபாஷினி அதிர்ச்சியுடன் பார்க்க,

சுபாஷினியை தன் பக்கம் இழுத்த ராஜாராம் வரவழைத்த கோபத்துடன், “இது என்ன கேள்வி ராகவன்? திவ்யா எங்கள் மகள்னு சொன்னேனே” என்றார். 

ராகவன், “பொய்” 

பார்வதி, “உங்களுக்கு என்ன பயித்தியமா பிடிச்சு இருக்குது! அதான் அந்த சிறுக்கி அவங்க பொண்ணு…………..” என்று அவர் முடிக்கும் முன் ராகவன் ருத்ரமூர்த்தியாக மாறியிருந்தார்.

ராகவன் பார்வதியை அடித்ததோடு சுபாஷினியை பார்த்து, “உண்மையை சொல்லு.. திவ்யா என் மகள் தானே!” என்று கர்ஜித்தார். 

சுபாஷினி அதிர்ச்சியுடன் வாயடைத்துப் போய் நிற்க ராஜாராம் பேச வாய் திறக்கும் முன் ராகவனே திரும்ப பேசினார்.

ராகவன், “நீ சொன்ன அதே DNA டெஸ்ட் போதும் திவ்யா என் மகள்னு நிரூபிக்க” என்றார். 

சில நொடிகள் மௌனத்தில் கழிய, திவ்யா அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள். பார்வதியிடமோ அதிர்ச்சியை மீறி கோபம் தான் அதிகமாக இருந்தது.

ராகவன் கோபத்துடன், “நீயெல்லாம் மனுஷியா? குழந்தையை அபார்ஷன் பண்ணதா பொய் சொல்லியிருக்க” என்றார்.

சுபாஷினி கோபத்துடன், “நான் மனுஷி இல்லையா! இப்படி பேச உனக்கு நா கூசலை! அது சரி மனுஷனா இருந்தா தானே உனக்கு அதெல்லாம் இருக்கும்!

என்னை பெருசா பேசுறியே! நீ யோக்கியனா? என் வயிற்றில் இருந்த குழந்தை மேல் உனக்கு என்ன பாசமா இருந்தது? என்னை பழி வாங்கிய வெறி தானே இருந்தது! நீ…………….” 

“ஆமாடி நான் அப்படி தான்.. நீ கருவை கலச்சிட்டதா சொல்லி விலகி போனதும் நான் நிம்மதியா தான் சாரு கூட வாழ்ந்தேன்.. இப்போ திவ்யாவை சொந்தம் கொண்டாடிட்டு வரவ ஏன் அவளை அனாதை ஆசிரமத்தில் விட்ட?” 

“இல்லை.. இல்லை.. நான் விடலை.. நான் குழந்தை பிறக்கும் போதே இறந்துட்டதா நினைத்தேன்.. என்………………..” 

“என் மேல் உள்ள கோபத்தில் கருவை அழிக்க பார்த்தவ தானே நீ………….” என்றபோது ஏதோ சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்க்க, அறை வாயிலில் திவ்யா மயக்கமாகி கீழே விழுந்திருந்தாள்.

Advertisement