Advertisement

விலகல் 24

ராஜாராம் சொன்னதை எல்லாம் கேட்ட ஹரீஷ் இரண்டு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தான். பிறகு ஒரு முடிவுடன் அவரை நிமிர்ந்து பார்த்தவன், “உங்க மகள் திவ்யாவை எனக்கு கல்யாணம் பண்ணி தாங்க சார்.. நான் அவளை நல்லா பார்த்துக்கிறேன்” என்றான்.

பதில் கூறாமல் அமைதியாக அவனை பார்த்தவரின் கண்களில் மென்னகை இருந்தது.

அவன், “நான் அனாதைனு தயங்குறீங்களா சார்? என்னை தவிர என் திவ்யாவை யாரும் நல்லா பார்த்துக்க முடியாது.. திவ்யா விரும்பும் சந்தோஷம், அன்பு, காதல், நிம்மதி எல்லாமே என்னிடம் மட்டும் தான் அவளுக்கு கிடைக்கும்” 

“இது தெரியாமலா உங்க கிட்ட என் மகளை பற்றி கூறினேன்!!” 

“சார்!!” என்று அதிர்ச்சியுடன் பார்த்தான்.

அவர் புன்னகையுடன், “என் மகளோட மனம் எனக்கு முன்பே தெரியும்.. உங்க மனம் ஓரளவிற்கு புரிந்தாலும் அதை ஒப்புக்கொள்வதில் உங்களுக்கு தயக்கம் இருப்பது புரிந்தது” என்றார். 

“எப்படி சார்?” 

“மாமா சொல்லலாமே!” 

“திவ்யா முழு மனதுடன் உங்களை ஏற்றுக் கொண்ட பிறகு அப்படி கூப்பிடுறேன் சார்.. அதுவும் காலேஜ் வெளியே” 

சிறு புன்னகையில் அதை அங்கீகரித்தவர் பின், “என்ன தான் நீங்க ரெண்டு பேரும் வெளியே சண்டை போட்டுக் கொண்டாலும் இருவரும் மற்றவர் வார்த்தைக்கோ மனதிற்கோ கட்டுப் படுவது முதல் நாளே எனக்கு புரிந்தது..

இன்னைக்கு என்ன தான் நீங்க எனக்காகனு சொல்லி திவிமா பற்றி கேட்டாலும், உங்க முகத்தில் சிறு தவிப்பும் கவலையும் இருந்ததை பார்த்தேன்” என்றார். 

“உங்க நிம்மதியும் எனக்கு முக்கியம் தான் சார்.. நான் பொய் சொல்லலை ஆனா………….” 

“உங்க திவ்யாவின் நிம்மதி அதை விட முக்கியம்” என்று அவர் முடித்தார்.

அவனும் அசராமல் சிறு புன்னகையுடன், “ஆமாம் சார்” என்றான்.

“திடீர்ன்னு எப்படி பொண்ணு கேட்டீங்க?” 

“இன்னும் என் மனதை திவ்யா கிட்ட சொல்லலை.. இன்னைக்கு தான் சொல்லணும் நினைத்தேன்.. உங்களிடம் மெதுவா தான் பேசுறதா இருந்தேன் ஆனா திவ்யாவின் ரணத்தை பற்றி தெரிந்ததும் அவளோட நிம்மதி, சந்தோஷத்தை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியலை.. அதான் கேட்டுட்டேன்” 

“ஹ்ம்ம்.. ஆல் தி பெஸ்ட்” 

“தன்க் யூ சார்” என்றவன், “நான் உங்க கிட்ட அவளைப் பற்றி கேட்டதை அவ கிட்ட சொல்ல வேண்டாம்” 

அவர் சரி என்பது போல் தலையை ஆட்டினார்.

அவன், “சார் ஒரு விஷயம்.. ரெண்டு நாள் முன்னாடி ராகவன் திவ்யாவைப் பார்க்க வந்திருந்தார்……..” 

“தெரியும்.. திவ்யா ஏதோ கோபமா பேசி அனுப்பி இருக்கிறா” 

“கோபமா மட்டுமில்லை சார்.. வெறுப்புடன் அனுபிட்டா.. இனி அவளை பார்க்க வந்தால், அவ உயிரை விட்டுவிடுவானு சொல்லி அனுபிட்டா” 

“என்ன சொல்றீங்க?” 

“ஆமா சார்.. ராகவன் நண்பர் யாரிடமோ அவரைப் பற்றி கேட்டதாவும், அவரோட சுயரூபம் தெரிஞ்சிருச்சுனும் சொன்னா” 

“ஸோ அவளோட அம்மா மேல் பெரிதாக தப்பு இல்லைனு புரிந்திருப்பா” என்றவர், “அதான் அன்னைக்கு ஜனனி கிட்ட சாதாரணமா பேசியிருக்கனும்” என்றார். 

“ஜனனி?” 

“என் இரண்டாவது மகள்.. நம்ம மெடிக்கல் காலேஜ்ஜில் முதல் வருடம் படிக்கிறா” 

“சின்ன திருத்தம் சார்.. அது உங்க காலேஜ்” 

அவர் புன்னகைக்கவும், “சரி சார் நான் கிளம்புறேன்” என்று கூறி வெளியே சென்றவன் முதல் வேலையாக தன்னவளை தேடினான்.

அவன் ஆசிரியர் அறைக்கு சென்றதும் அவன் முகத்தை பார்த்த அரவிந்த் மற்றவர்கள் முன் எதையும் கேட்காமல், “காபி குடிக்க போகலாமா?” என்று வினவினான். 

“ஹ்ம்ம்” என்று கூறி அரவிந்துடன் கல்லூரி உணவகம் சென்றான்.

எப்பொழுதும் போல் காபியுடன் அமர்ந்த அரவிந்த், “என்னாச்சு டா?” 

“திவ்யா பற்றி சார் எல்லாம் சொன்னார்.. நான் அவரிடம் பொண்ணு கேட்டேன்.. அவர் சாதாரணமா சிரிச்சிட்டே இது தெரியாமலா திவ்யா பற்றி உங்களிடம் சொன்னேன்னு கேட்கிறார்டா” 

“பார்த்தியா! நான் பஸ்ட்டே சொன்னேன்.. சாரிடம் பேசுன்னு.. சரி அதான் பிரச்சனை இல்லையே அப்புறம் ஏன் உன் முகம் சரி இல்லை?” 

“திவ்யாவை காணும்டா” 

“நல்லா தேடுனியா?” 

“தேடிட்டேன்.. கிளாஸ்ஸில் இல்லை.. பவித்ராவிடம் கூட கேட்டுட்டேன்.. அவளுக்கும் தெரியலை.. விஜயும் காணும்.. ரெண்டு பேர் போனுக்கும் காள் பண்ணிட்டேன்.. எடுக்கலை” 

“விஜய் கூட தானே இருக்கிறா.. பத்திரமா தான் இருப்பா” என்று கூறியவனும் மனதினுள் ‘எங்கே போனாள் இந்த பெண்?’ என்றே கேட்டுக் கொண்டான். 

“ச்ச்.. எனக்கு இப்போவே அவளை பார்க்கணும்டா.. அவள் அழுதுட்டு போனது தான் என் கண் முன்னாடி வருது” என்றவனின் குரல் வெகுவாக கலங்கி இருந்தது.

என்ன சொல்லி தேற்ற என்று அறியாத அரவிந்த் நண்பனின் கையை ஆதரவாக பற்றினான்.

 

 

 

சிறிது நேரம் திவ்யாவை அழ விட்ட விஜய், “போதும் டா” என்றான்.

அவன் அறையில் இருந்த தண்ணீரை அவளுக்கு கொடுத்து பருக சொன்னான்.

அவள் தேம்பியபடியே, “இப்போ ரிஷிக்கு எல்லா உண்மையும் தெரிந்து இருக்கும்” என்றாள். 

“என்னடா சொல்ற?” 

“ஹ்ம்ம்.. சேர்மன் அவனிடம் என் பிறப்பை பற்றி சொன்னதை கேட்டேன்.. அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்!! சும்மாவே என் காதலை ஏற்கமாட்டான்” என்றவள் விஜய் பதில் சொல்லும் முன், “ஆனா இப்போ கூட அவன் எனக்காக கேட்கலை டா.. சேர்மன் சாருக்காக தான் கேட்டான்” என்றாள். 

“இல்லை டா.. அவர் உனக்காக தான்…………..” 

மறுப்பாக தலை அசைத்தவள், “அவன் சொன்னதை நானே கேட்டேன்.. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? போன ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணேனோ!” என்றவள்,

“என்னுடைய ஒன்பதாவது வயது வரை நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. அப்போ என்னுடன் என் சாருமா இருந்தாங்க.. எனக்கு திவ்யானு பேர் வச்சது அவங்க தான்.. நான் எப்பவும் சந்தோஷமா இருக்கணும் என்றும் அவங்க வாழ்க்கைக்கு ஒளி தருபவள் என்ற எண்ணத்திலும் இந்த பெயரை வச்சதா சொல்லுவாங்க.. சாருமா யாருனு உனக்கு தெரியாதுல! அவங்க தான் என் அம்மா.. மிஸ்டர் ராகவனோட முதல் மனைவி.. ராகவன் யாருன்னு……..” 

“தெரியும் டா” 

“உனக்கு ஒரு வேடிக்கை தெரியுமா? பெத்த பொண்ணையே தன் பொண்ணுனு தெரியாம தத்தெடுத்த மேதாவி தான் அவர்..” 

“என்னடா சொல்ற!” 

“ஹ்ம்ம்.. மிஸ்டர் ராகவன் தான் நான் ஜனிக்க காரணமானவர் ஆனா என்னை பெத்த தாய் சாருமா இல்லை..

சேர்மன் சாருக்கும் எனக்கும் என்ன உறவுன்னு கேட்டியே! அவர் எனக்கு அப்பா முறையில் இருப்பவர் ஆனால் மனதால் என்னை பெற்ற மகளாக நினைப்பவர்” என்றவள் நண்பனை பார்த்து, “குழப்பமா இருக்குதா!” என்று கேட்டாள்.

அவன் பதிலை எதிர்பார்க்காமல், “சேர்மன் சார் மனைவி தான் என்னை பெற்ற தாய்.. மிஸ்டர் ராகவனோட முதல் மனைவி சாருமா தான்.. என்னை பெற்ற தாய் கல்யாணம் செய்துக் கொண்டது சேர்மன் சாரை தான்” என்றாள்.

சில நொடிகள் மெளனமாக இருந்தவள், “இப்போ புரியுதா நான் ஏன் என்னை இல்லீகல் சைல்ட் சொன்னேன்னு?” என்று வினவினாள். 

விஜய்க்கு அதிர்ச்சியில் வார்த்தையே வரவில்லை. அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவுமில்லை. அவள் தொடர்ந்தாள். 

“சாருமாவுக்கு குழந்தை பிறக்காதுனு டாக்டர் சொன்னதும், அவங்க தான் குழந்தையை தத்தெடுக்கும் முடிவை எடுத்து இருக்காங்க..  என்னை அவங்க தத்தெடுத்த போது எனக்கு மூணு வயசு.. சாருமா இருந்தவரை அவ்ளோ சந்தோஷமா இருந்தேன்..” என்றவள் கண்ணில் சிறு ஒளியுடன்,

“அன்பான அழகான குடும்பம் எங்களது.. அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் நான்-னா உயிர்.. எனக்கும் அப்படி தான்.. சாருமாக்கு அதிர்ந்து பேச கூட தெரியாது.. அன்பே உருவானவங்க.. என்னோட ஒன்பதாவது வயதில் ஒரு அக்சிடென்ட்டில் அவங்க இறந்துட்டாங்க..” என்றவளின் முகம் வேதனையில் சுருங்கியது.

“அப்புறம் எனக்காகனு சொல்லி பார்வதி சித்தியை கல்யாணம் பண்ணிகிட்டார்.. நான் தத்தெடுக்கப் பட்டவள்னு தெரிந்த அவங்களுக்கு என்னை சுத்தமா பிடிக்காது.. என்னை காயபடுத்த முயற்சி செஞ்சு என் கிட்ட பலமுறை பல்ப் வாங்கி இருக்காங்க.. வெளிப்படையா அவங்களால் வெறுப்பை என்னிடம் காட்ட முடியாது, ஏன்னா அவர் அவங்களை திட்டுவார்.. அப்போலாம் அவர் தான் என் ஹீரோ.. எவ்ளோ பெருமையா அவர் பொண்ணுனு சொல்லுவேன் தெரியுமா ஆனா…” என்று சில நொடிகள் மெளனமாக இருந்தவள் மீண்டும் ஆரம்பித்தாள்.

“எனக்கும் சித்தியை பிடிக்காது, ஆனா அவருக்காக அவங்களை ஏத்துக்கிட்டேன்.. அவங்களுக்கு சூர்யா பிறந்த போது எனக்கு பன்னிரண்டு வயசு.. எனக்கு சூர்யாவை ரொம்ப பிடிக்கும்.. அவனுக்கும் என்னை பிடிக்கும்.. அந்த சின்ன வயசுலேயே என்ன தான் சித்தி என்னிடம் பேச கூடாதுனு சொன்னாலும் கேட்காமல் என்னிடம் தான் ஒட்டிப்பான்.. இப்போ கூட எனக்காக ஏங்குவான் தான் ஆனா என்னால் தான் முன்ன மாதிரி ஓட்டமுடியலை..

இப்படி தான் போய்கிட்டு இருந்தது.. அந்த கொடிய நாள் என் டென்த் ரிசல்ட் வந்த அடுத்த நாள்..

நான் டென்த்தில் ஸ்டேட் பஸ்ட் வந்தேன்னு அவர் ஒரு நகை கடையை என் பேரில் புதுசா ஆரம்பிக்க போறதா சொன்னதும், சித்தி சண்டை போட்டாங்க.. அப்போ தான் அவங்க ‘என் பையனுக்கு வர வேண்டிய சொத்தை ஒரு அனாதைக்கு போக விட மாட்டேன்’ னு கத்தினாங்க.. அவர் அவங்களை அடிச்சார்.. அவங்க ஏதேதோ கத்தினாங்க ஆனா அவங்க சொன்ன ‘அனாதை’ என்ற வார்த்தையில் என் மூளை மரத்துபோச்சு.. அதை கேட்ட நான் எப்படி துடிச்சேன் தெரியுமா?” என்றவள் கண்கள் மீண்டும் கலங்கியது. விஜய் அவள் கையை ஆதரவாக தட்டி கொடுத்தான்.

“அவர் சித்தி பொய் சொல்றதா சொல்லி என்னை சமாதானம் செய்ய முயற்சித்தார்.. நான் எப்பவும் அவர் பொண்ணு தான்னு சொன்னார்.. என் மேல் சத்தியம்னு கேட்டதும், தத்தெடுத்த உண்மையை சொல்லிட்டார்..

அவர் என்ன தான் சமாதனம் செஞ்சாலும், அந்த வயசில் அதை என்னால் ஏத்துக்க முடியலை.. அத்தனை நாள் என் வீடுனு நினைச்சது என் வீடு இல்லை.. என் அம்மா அப்பானு நான் பெருமையா நினைச்சவங்க என் பரென்ட்ஸ் இல்லைன்ற உண்மையை என்னால் ஏத்துக்க முடியலை.. என்ன செய்யனு தெரியலை.. ஆனா என்னால் அங்கே இருக்கவும் முடியலை.. சித்திக்கும் அவருக்கும் ஒரே சண்டையா இருந்துது.. யார்கிட்டயும் சொல்லாம ஒரு ஆசிரமத்தில் போய் அனாதைனு சொல்லி சேர்ந்துட்டேன்..

நான் அங்கே போன ரெண்டாவது நாள் அவர் வந்து என்னை கூட்டிட்டு போய்ட்டார்.. ‘அவர் தான் என் அப்பானும், இனி இப்படி போகக் கூடாது’ னு சொல்லி அழுதார்.. நானும் அவர் மடியில் படுத்து அழுதேன்.. அப்போ சேர்மன் சாரும் அவர் மனைவியும் அங்கே வந்தாங்க..” என்றவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள். அவள் கண் முன் அந்த நாள் படமாக ஓடியது….

Advertisement