Advertisement

அதே நேரத்தில் அரவிந்த் ஹரீஷிடம், “என்ன முடிவு பண்ணியிருக்க?” என்று கேட்டுக் கொண்டு இருந்தான். 

ஹரீஷ் புன்னகையுடன், “நாளைக்கு சொல்றேன்” என்றான். 

“ஏன் நாளைக்கு தான் நல்ல நாளா?” 

“நாளைக்கு திவ்யா பர்த்டே” 

“பார்டா!” என்று கிண்டலாக கூறியவன், “உன்னையே பரிசா தரப் போறீங்களாக்கும்!” என்றான் கண்சிமிட்டி. 

“டேய்” 

“என்ன! உண்மையை தானே சொன்னேன்” 

“அடங்குடா” என்றவன் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

 

திவ்யா பாடல்களுடன் இரவை கழிக்க ஹரீஷோ அடுத்த நாள் தனக்கு காத்திருக்கும் அதிர்ச்சிகளை பற்றி அறியாமல் தன்னவளிடம் எப்படி தன் காதலை சொல்வது என்ற சிந்தனையில் இரவை கழித்தான்.

ஹரீஷ் தன் காதலை சொல்லும் போது திவ்யா மறுப்பாள் என்பதை இருவருமே அப்பொழுது அறியவில்லை.

 

 

டுத்த நாள் திவ்யா வகுப்பிற்கு செல்லும் போது ஆசிரியர் அறையில் இருந்த ஹரீஷ், “திவ்யா” என்று அழைத்தான்.

அவள் ஆசிரியர் அறையினுள் சென்றதும், அவன் முதல் முறையாக வசீகர புன்னகையுடன், “ஹப்பி பர்த்டே” என்று கூறி கையை நீட்டினான்.

ஆச்சிரியத்தில் கண்களை விரித்தவள் மெல்லிய புன்னகையுடன், “தேங்க்ஸ்” என்று கூறி கையை நீட்டி அவனுடன் குலுக்கினாள். அவளது புன்னகை கண்களை எட்டவில்லை என்பதை கவனிக்க தவறினான்.

அப்பொழுது தங்ககுமார் உள்ளே வரவும், அவள், “ஓகே சார்” என்று கூறி வெளியேறினாள்.

எப்பொழுதும் சற்று தாமதமாக வரும் தங்ககுமார் இன்றைக்கு சீக்கிரமாக வந்தது விதியின் சதியோ! அவர் சற்று தாமதமாக வந்திருந்தால், அவன் அவளுக்காக வாங்கிய புடவையை கொடுத்து காதலை சொல்லி இருப்பான். இந்த இடத்தில் தான் விதி விளையாடி விட்டது. அதை அறியாத ஹரீஷ் தங்ககுமாரை மனதினுள் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் அங்கே வந்த விஜய் ஹரீஷிடம் சென்று, “கொஞ்சம் தனியா பேசணும் சார்” என்றான்.

ஹரீஷ் எழுந்து வெளியே வந்ததும், விஜய், “இன்னைக்கு திவ்யா பர்த்டே சார்” என்றான். 

“தெரியும்.. நான் விஷ் பண்ணேன்” 

“சார்!” என்று அவன் நம்ப முடியாமல் பார்க்க,

ஹரீஷ் உதட்டோர புன்னகையுடன், “எதுக்கு கூப்பிட்ட?” என்று கேட்டான். 

“திவி பர்த்டேயை கொண்டாடியதே இல்லை சார்” 

ஹரீஷ் ஆச்சரியத்துடன் பார்க்கவும்,

விஜய், “ஸ்கூல் டேஸ்ஸில் கொண்டாடியதா பவித்ரா சொல்லியிருக்கா ஆனா எனக்கு தெரிந்து கொண்டாடியது இல்லை.. இது தான் கடைசி வருஷம் அதான் கேக் வாங்கிட்டு வந்திருக்கிறேன்.. முதல் பிரியட் நீங்க தான்.. நீங்க சொன்னா அவ கேட்பா சார்.. ப்ளீஸ் சார் நீங்க சொல்றீங்களா?” என்று சிறு தயக்கதுட்டன் கேட்டான். 

“சரி சொல்றேன்” 

“ரொம்ப தேங்க்ஸ் சார்.. நீங்க உடனே சரி சொல்லுவீங்கனு நான் நினைக்கவே இல்லை சார்.. இன்பாக்ட் திட்டுவீங்கனு நினைத்தேன்” 

“ஏன்?” 

“அது.. நீங்க.. கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்.. அதான்” என்று சமாளித்தான்.

ஹரீஷ் மெல்லிய புன்னகையுடன், “சரி கிளாஸ்க்கு போ” என்று கூறி ஆசிரியர் அறைக்கு சென்றான்.

 

 

வகுப்பு தொடங்குவதற்கான மணி அடிக்கவும் ஹரீஷ் உற்சாகத்துடன் திவ்யாவின் வகுப்பிற்கு சென்றான்.

அவன் வருகை எண்ணிக்கையை பதிவு செய்ததும் விஜயிடம் கண்ஜாடை காட்டினான்.

விஜய் கேக்கை எடுத்துக் கொண்டு திவ்யா முன் நிற்க, மற்றொரு நண்பன் ‘பாப்பர்ஸ்’ எனப்படும் கருவி கொண்டு வண்ண காகிதங்களை தூவ, அனைவரும் ஒன்றாக, “ஹப்பி பர்த்டே திவ்யா” என்றனர்.

திவ்யா விஜயை முறைத்தாள்.

விஜய், “இது தான் கடைசி வருஷம்.. ப்ளீஸ் திவி” 

“எனக்கு பிடிக்காதுனு தெரிந்தும் ஏன் என்னை கம்பெல் பண்ற?” 

ஹரீஷ், “உன் பிரெண்ட்ஸ் ஆசை படுறாங்க.. இந்த முறை கட் பண்ணலாமே!” என்றான். 

திவ்யா ஹரீஷை பார்க்க, அவன் கண்களில் ‘கட் பண்ணு’ என்று கூறினான்.

அவள் மறுப்பாக தலை அசைக்கவும், ஹரீஷ் ஆழ்ந்த குரலில், “திவ்யா.. நானும் சொல்றேனே!” என்றான்.

சிறிது கலங்கிய கண்களுடன் அவனை பார்த்தவள், “என்னை பொறுத்தவரை இது ஒரு கருப்பு நாள்.. ப்ளீஸ் வேண்டாம்” என்றவள் வெளியேறிவிட்டாள்.

ஹரீஷ் அதிர்ச்சியுடன் நிற்க, “சாரி சார்” என்ற விஜய் கேக்கை மேஜை மீது வைத்துவிட்டு திவ்யா பின்னால் ஓடினான்.

வகுப்பிலிருந்து இப்படி வெளியே சென்று பழக்கமில்லாத பவித்ரா கவலையுடன் அமர்ந்திருந்தாள்.

சில நொடிகளில் சுதாரித்த ஹரீஷ் பாடத்தை நடத்த ஆரம்பித்தான். ஆனால் சிறிது நேரத்திலேயே சரியாக நடத்த முடியாமல் முதல் முறையாக தடுமாறியவன், “டேக் நோட்ஸ்” என்று கூறி புத்தகத்தை பார்த்து கூற ஆரம்பித்தான்.

அந்த வகுப்பு முடியும் வரையிலும் திவ்யாவும் விஜயும் வகுப்பிற்கு வரவில்லை.

வகுப்பு முடிந்ததும் அவன் திவ்யாவை தேடி உணவகத்திற்கு சென்றான் ஆனால் அங்கே அவள் இல்லை. அவளை சில இடங்களில் தேடியவன் அவளும் விஜயும் ஒரு மரத்திற்கு பின் அமர்ந்திருந்ததை சரியாக கவனிக்கவில்லை.

சோர்ந்து போய் ஆசிரியர் அறைக்கு சென்றவனை பார்த்து அரவிந்த், “என்னாச்சு ஹரி?” என்று கேட்டான்.

திவ்யா கூறியதை சொன்னவன், “இப்போ எங்க இருக்கானு தெரியலைடா.. எனக்கு பயித்தியம் பிடிப்பது போல் இருக்குது” 

“போன் பண்ணியா?” 

“அவ போன் எடுத்துட்டு போகலை” 

“காலேஜ்ஜில் தான் இருப்பா.. கொஞ்ச நேரத்தில் வந்திருவா.. வெயிட் பண்ணு” 

சில நொடிகள் கண்களை மூடி அமர்ந்திருந்தவன், “நான் சேர்மன் சாரை பார்த்துட்டு வரேன்” என்று கூறி சென்றான்.

 

 

ராஜாராமின் அனுமதியுடன் உள்ளே சென்றவன், “குட் மார்னிங் சார்” என்றான்.

“குட் மார்னிங்.. என்ன விஷயம்?” 

“அது” என்று சிறிது தயங்கியவன் பின், “ஒண்ணு தெரிந்துக்கணும்” என்றான். 

“என்ன?” 

“உங்களுக்கும் திவ்யாவிற்கும் என்ன உறவுனு தெரிந்துக்கலாமா சார்?” 

“ஏன் கேட்கிறீங்க?” 

இந்த கேள்வியை எதிர்பார்த்திருந்தவன் தயங்காமல் யோசித்து வைத்திருந்த பதிலை சொன்னான். ஆனால் அதை திவ்யா கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அறியவில்லை.

 

விஜயின் கைபேசியின் மூலம் பாடல்களை கேட்டு ஓரளவிற்கு தன்னை சமன் செய்திருந்தவள் வகுப்பிற்கு செல்லும் முன் ஹரீஷை பார்க்க விரும்பி ஆசிரியர் அறைக்கு சென்றாள். அரவிந்த் ஹரீஷ் ராஜாராமை பார்க்க சென்றதாக கூறவும் இங்கே வந்தாள்.

அன்று போல் கதவை அவள் திறந்த போது தான் ஹரீஷ் அவர்களின் உறவை பற்றி கேட்டான். ஏனோ அன்று போல் உள்ளே செல்லாமல் ஹரீஷ் அடுத்து கூற போகும் பதிலை அறிய அமைதியாக நின்றாள்.

ராஜாராமும் ஹரீஷும் கதவு லேசாக திறந்ததை கவனிக்கவில்லை.

ஹரீஷ், “அவளை பற்றிய கவலை உங்களுக்கு இருப்பது எனக்கு தெரியும்.. உங்களுக்குள் ஏதோ பிரச்சனைனு புரியுது.. என்னால் முடிந்தால் அதை சரி செய்வேன்.. எனக்கு உங்கள் நிம்மதி முக்கியம்” என்றான். 

“இது மட்டும் தானா காரணம்?” என்று அவரது கேள்வி கூர்மையுடன் வந்தது.

அவனும் அசராமல், “ஆமாம் சார்” என்று கூறி வேதனையில் உழன்றுக் கொண்டிருந்த திவ்யாவின் இதயத்தை உடைத்தான்.

ராஜாராம், “திவ்யாவிற்கு ஏனோ உங்களை பிடித்திருக்கிறது.. ஒருவேளை நீங்கள் சொன்னால் அவள் கேட்பாளோ என்ற ஆசையில் சொல்கிறேன் ஆனா…………..” 

“என்னை தாண்டி வெளியே போகாது சார்” 

“தன்க்யூ.. உட்காருங்க” என்றவர் அவன் இருக்கையில் அமர்ந்ததும், “திவ்யா என் மகள்” என்றார். 

அவன் சிறு அதிர்ச்சியுடன் பார்க்கவும்,

அவர், “அன்பையும் பாசத்தையும் உணர்வுகளையும் வைத்து பார்த்தால், திவ்யா என் மகள்.. ஆனால் உயிரியல் முறையில் பார்த்தால், அவள் என் மகள் இல்லை” என்றார். 

அவன் அதிர்ச்சியுடனும் குழப்பத்துடனும் பார்க்கவும், அவர், “என்ன குழப்புறேனா?” என்று கேட்டார். 

“..” 

“திவ்யா என் மனைவி சுபாஷினிக்கும் ராகவனுக்கும் பிறந்தவள்.. ராகவன் யாருன்னு……..” 

“தெரியும் சார்” என்றான் அதிர்ச்சி நீங்காமல்.

அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் கிளம்பியவள் வெளியே நின்றிருந்த விஜயிடம், “என்னை இப்பவே உன் வீட்டிற்கு கூட்டிட்டு போறியா விஜி?” என்று கலக்கத்துடன் கேட்டாள்.

அவள் கண்ணில் தெரிந்த வெறுமையிலும் வலியிலும் துணுக்குற்ற விஜய், “வா” என்று கூறி அவளை அழைத்துச் சென்றான்.

இருவரும் சுவர் ஏறி குதித்து தானியில்(auto) அவனது வீட்டிற்கு சென்றனர். தானியில் சென்ற நேரம் முழுவதும் அவள் வானை வெறித்துக் கொண்டே சென்றாள்.

வீட்டிற்கு சென்றதும் விஜயின் அன்னை கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தனது சிந்தனையில் சுழன்றவள், “விஜி உன் மடியில் படுத்துக்கட்டுமா?” என்று கேட்டாள்.

அவர்கள் கூடத்தில் அமர்ந்திருந்தனர். விஜய் சிறு சங்கடத்துடன் அன்னையை பார்க்க, அவரோ, “உன் ரூமிற்கு கூட்டிட்டு போய் பேசு” என்றார்.

“தேங்க்ஸ் மா” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றான்.

 

உள்ளே சென்றதும் கட்டிலில் அவன் அமர்ந்ததும் அவன் மடியில் படுத்துக் கொண்டாள்.

விஜய் தாய் அன்புடன் அவளது கேசத்தை வருடி கொடுத்தான்.

சில நிமிடங்களில் கலங்கிய விழிகளுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எப்போதும் என்னை பற்றி கேட்பியே! இப்போ சொல்லட்டா டா?” என்றாள். 

அவன் பதைபதைக்கும் நெஞ்சுடன், “சொல்லு டா” என்றான்.

“இன்னைக்கு மட்டும் என்ன திடீர்னு சொல்றேன்னு பார்க்கிறியா?” என்று கேள்வி கேட்டவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவளே பதிலையும் சொன்னாள், “என்னவோ நெஞ்சு வெடிக்கிற மாதிரி இருக்குது.. என்னால் இந்த பாரத்தை தாங்க முடியலைடா” என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிய தொடங்கியது.

அவளது கண்களை துடைத்து விட்டவன், “உன் பாரத்தை சுமக்க நான் இருக்கிறேன்.. எப்பொழுதும் உன்னுடன் இருப்பேன்.. சொல்லுடா” என்றான்.

“நான்.. நான்..” என்று தயங்கியவள் கலங்கிய விழிகளுடன், “நான் இல்லீகல் சைல்ட் தெரியுமா?” என்றாள்.

விஜய் தனது அதிர்ச்சியை சிறிதும் கண்களில் காட்டாமல் மீண்டும் அவள் கண்களை துடைத்து தலையை வருடியபடி மென்மையானக குரலில், “அது உன் தவறு இல்லையேடா” என்றான்.

“தேங்க்ஸ் டா” என்றவள் எதையெதையோ நினைத்து கதறி அழுதாள்.

இணைய காத்திருப்போம்….

Advertisement