Advertisement

விலகல் 23

ஹரீஷ் ஆய்வு கூடம் இருந்த கட்டிடத்திலிருந்து அவனது ஆசிரியர் அறை இருக்கும் கட்டிடத்திற்கு செல்லும் போது ஒரு மரத்தின் அருகே திவ்யா ஒருவரை முறைத்துக் கொண்டு நிற்பதை கண்டவன் வேகமாக சென்றான்.

ஹரீஷ், “எனி ப்ராப்ளம் திவ்யா?” என்று கேட்டான். 

ராகவன் (திவ்யா முறைத்த நபர்) இவனை முறைக்க, இவன் அவரை முறைத்துவிட்டு திவ்யாவை பார்த்தான்.

திவ்யா, “எனக்கு தெரிந்தவர் தான்” என்றாள். 

ஹரீஷ் புருவம் உயர்த்தி பார்க்க, அவரோ வேதனையுடன் திவ்யாவை பார்த்தார்.

அவரது கண்ணில் தெரிந்த வலியில் அவன் யோசனையுடன் பார்க்க,

அவள் வானை வெறித்தபடி, “இவர் மிஸ்டர் ராகவன்.. சொர்ணம் கோல்ட் ஷாப் அண்ட் RR டிரெஸ் ஷாப் ஓனர.. புரியும்னு நினைக்கிறேன்” என்றாள்.

ஒரு நொடி அதிர்ந்த ஹரீஷ் பின் அவரிடம், “சாரி சார்.. நான் உங்களை பார்த்தது இல்லை.. நான் திவ்யாவின் சார் ஹரீஷ்” என்றான்.

அவர் இவனை அதிகமாக முறைத்தார்.

அவன் புரியாமல் பார்க்கவும், அவர், “எவ்வளவு தைரியம் இருந்தால் என் மகளை அடித்திருப்ப! அப்போ நான் ஊரில் இல்லை.. ஒரு மாசம் கழித்து விஷயம் தெரிந்து, வந்த போது உன் சேர்மன் உன்னை காப்பாற்றிவிட்டான்..” என்றார். 

அவன் நிமிர்வுடன், “தவறு உங்கள் மகளிடம் தான் இருந்தது” என்றான். 

ராகவன் கோபத்துடன், “டீயை கொட்டியதிற்காக கையை நீட்டுவியா? என் மகளே உன்னை மன்னித்ததால் தான் உன்னை எதுவும் செய்யவில்லை” என்றார். 

“இல்லை என்றால்?” 

“உன்னை உருத் தெரியாமல் செய்திருப்பேன்” 

“முடிந்தால் செய்து பாருங்களேன்” 

“அடித்துப் போட்டால் ஏன்னு கேட்க ஆள் இல்லாத அனாதை! உனக்கு இவ்வளவு திமிரா!” என்று இகழ்ச்சியுடனும் கோபத்துடனும் பேசினார். 

ஹரீஷ் பதில் சொல்ல வாய் திறக்கும் முன் திவ்யா, “பவித்ரா” என்று சற்று குரலை உயர்த்தி கத்தினாள்.

சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்த பவித்ரா வேகமாக வந்தாள்.

ஹரீஷிடம் கோபத்துடன், “என்னை இவரது மகள்னு சொல்லாதே” என்ற திவ்யா  பவித்ராவை பார்த்து, “அவரை ரிஷி கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லு” என்றாள். 

பவித்ரா அமைதியாக நிற்க, திவ்யா கோபத்துடன், “சொல்லுடி” என்று கிட்டதிட்ட கத்தினாள்.

பவித்ரா ராகவனை பார்க்க, அவரோ திவ்யாவை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

மகளின் அன்னிய வார்த்தைகளிலும், தான் எது செய்தாலும் சரி என்று சொல்லும் மகள் இன்று தன்னை மன்னிப்பு கேட்க சொல்லவும் பேச்சற்று நின்றிருந்தார். வெளியே மற்றவர்களிடம் பணத்திமிரை காட்டியவர் இன்று தான் முதல் முறையாக மகள் முன் அதை காட்டுகிறார் என்பதை அவர் மறந்திருந்தார். எப்பொழுதும் மகள் இருக்கும் நேரத்தில் அவரிடம் பாசம் மட்டுமே மேலோங்கி இருக்கும் ஆனால் இன்று அவள் ஹரீஷிடம் தன்னை மூன்றாம் மனிதன் போல் பேசவும் அவரையும் அறியாமல் பணத்திமிரை காட்டிவிட்டார்.

திவ்யா கடும் கோபத்துடன், “மாறிட்டேன் மாறிட்டேன்னு சொல்றாரே! இவர் கொஞ்சம் கூட மாறவே இல்லை.. பணத்திமிர் இவரை விட்டு போகவே போகாது.. அது இவர் ரத்தத்தில் ஊறி இருக்கிறது” என்றாள். 

ராகவன் வேதனையுடன், “குட்டிமா” என்று ஏதோ சொல்ல போக, கையை நீட்டி அவரை தடுத்தவள்,

“நேற்று தான் இவரோட நெருங்கிய நண்பரிடம் போனில் பேசினேன்னு சொல்லு.. இவரது வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றிவிட்டார்..

இவர் முகத்தை கூட நான் பார்க்க விரும்பலை.. இதுவே இவரை பார்ப்பது கடைசியாக இருக்கட்டும்.. மீறி இவர் என்னை பார்க்க வந்தால் அன்று தான் எனக்கு கடைசி நாள்..

அதாவது நான் பூமியில் ஜனிக்க காரணமானவரே நான் மரணிக்கவும் காரணமானவராக இருப்பார்” என்றாள். 

“குட்டிமா”, “திவ்யா”, “தியா” என்ற மூன்று குரல்கள் ஒலித்தது. மூவரும் ஒன்றாக அழைத்ததில் ஹரீஷின் ‘தியா’ ‘திவ்யா’-வாகவே ஒலித்ததோ இல்லை அதிர்ச்சியில் யாரும் கவனிக்கவில்லையோ!

திவ்யாவின் கோபத்தை ஹரீஷ் அதிர்ச்சியுடன் பார்த்தான். அவளது கோபத்தை சில முறை கண்டிருக்கிறான் தான் ஆனால் இந்த ரௌத்திரத்தை முதல் முறையாக பார்க்கிறான். அந்த ரௌத்திரதிற்கு பின் இருக்கும் அவளது வலியும் வேதனையும் தான் அவனை மிகவும் பாதித்தது. அவளை தோள் சாய்த்து ‘உனக்கு நான் இருக்கிறேன்டா’ என்று சொல்ல அவன் மனம் துடித்தது தான் ஆனால் தன்னை கட்டு படுத்திக் கொண்டு நின்றிருந்தான்.

திவ்யாவின் வார்த்தைகளை கேட்டு ராகவன் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. அதை சிறிதும் பொருட் படுத்தாத திவ்யா மேலும் பேசினாள்.

“சும்மா சொல்றேன்னு நினைக்க வேண்டாம்னு சொல்லு.. நான் சொன்னதை செய்பவள்.. அப்புறம் இன்னொரு விஷயம்.. நான் படிப்பது செலவு செய்வது எல்லாம் சாருமா எனக்காக விட்டு சென்ற பணம் தான் என்றாலும் சம்பாதிக்க ஆரம்பித்ததும் இதை எல்லாம் திருப்பி கொடுத்து விடுவேன்னு சொல்லு” 

“இப்படி வார்த்தையால் கொல்றதுக்கு பதில் என்னை ஒரேடியா கொன்னுடுடா” 

“செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவிக்க வேண்டாம்?” என்றவள் வேகமாக சென்றுவிட்டாள்.

கண்ணிலிருந்து மறையும் வரை திவ்யாவையே பார்த்துக் கொண்டிருந்த ராகவன் கண்களை துடைக்கும் எண்ணம் கூட இல்லாதவராக ஹரீஷை பார்த்து, “சாரி சார்.. நான் பேசியது தப்பு தான்.. மன்னிச்சிருங்க” என்றார்.

“நான் ஆனாதை தான் ஆனா ஏன்னு கேட்க ஆள் இல்லாதவன் இல்லை” என்றவன் அவரது பதிலை எதிர்பார்க்காமல் சென்றான்.

ராகவன் பவித்ராவிடம், “நான் சாரி கேட்டுட்டேன்னு சொல்லிடு மா” என்று கூறி தளர்ந்த நடையுடன் சென்றார்.

திவ்யாவின் மதிப்பெண்களை பற்றி அறிந்து அவளை வாழ்த்த வந்திருந்தார்.

‘இவர் இப்போ உண்மையா சாரி கேட்டாரா இல்லை திவிக்காக கேட்டாரா!’ என்று யோசித்த பவித்ரா, ‘எதுவா இருந்தா நமக்கென்ன! திவியை போய் பார்ப்போம்’ என்று மனதினுள் கூறிவிட்டு திவ்யாவை பார்க்க சென்றாள்.

 

 

பவித்ரா வகுப்பறையை நோக்கி சென்ற போது வழியில் ஆசிரியர் அறையில் ஹரீஷும் திவ்யாவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஆசிரியர் அறை வெளியே நின்றுக் கொண்டாள்.

ஹரீஷ், “திவ்யா………” என்று ஆரம்பிக்க,

அவளோ கோபத்துடன், “இப்போ உனக்கு என்ன தெரியனும்?” என்று கேட்டாள். 

அவளை அமைதி படுத்தும் எண்ணத்துடன் அவன், “இல்லை எனக்கு எதுவும் தெரிய வேணாம்… நீ………………..” 

“அதானே! நீ என்ன என்னை காதலிக்கிறியா! என்னைப் பற்றி நீ எதுக்கு தெரிந்துக்கணும்?” என்று வெடித்தாள்.

ஹரீஷ் மனதினுள், ‘இப்படி முன்னே போனால் முட்டி பின்னே போனால் உதைத்தால் என்ன பண்றது!’ என்று நினைத்தான்.

“என்ன அமைதியா இருக்கிற? அந்த ஆள் பேசியே கொல்றார்னா நீ அமைதியா இருந்தே கொல்ற!” என்று அதற்கும் திட்டினாள்.

“உன் மொபைல் கொடு” 

“எதுக்கு? நீ வாங்கி கொடுத்தை நீயே வச்சிக்க போறியா?” 

அவன் அமைதியான குரலில், “கொடு” என்றாள். 

“முடியாது” 

“நான் கேட்டா தர மாட்டியா?” 

“ஏன் நீ மட்டும் என்ன ஸ்பெஷல்?” 

“எனக்கு நீ ஸ்பெஷல் இல்லை தான் ஆனா உனக்கு நான் ஸ்பெஷல் தானே!” 

“அதான் உனக்கு நான் ஸ்பெஷல் இல்லைனு சொல்லிட்டியே! அப்புறம் என்ன?” என்றாள் முறைப்புடன். 

அவன் அவளை ஆழ்ந்து நோக்கவும், இரண்டு நொடிகள் கழித்து கைபேசியை கொடுத்தாள்.

அவன் தனது கைபேசியில் இருந்த சில மெல்லிசை பாடல்களை அவளது கைபேசிக்கு அனுப்பினான்.

பின் கைபேசியை அவளிடம் நீட்டியபடி, “சில சாங்ஸ் அனுப்பி இருக்கிறேன்.. ஹாஸ்டல் போய் கேட்டு மைன்ட் ரிலாக்ஸ் பண்ணு” என்றான். 

“என்ன திடீர் கரிசனம்?” 

“என் ஸ்டுடென்ட் மனநிலை எனக்கு முக்கியம்.. அதான்” 

“ஓ! அதாவது என் இடத்தில் வேற எந்த ஸ்டுடென்ட் இருந்தாலும் இப்படி தான் செஞ்சிருப்ப!!!” 

“ஆமா” 

அவள் கோபத்துடன் கைபேசியை தூக்கிப் போட அவன் சிரமத்துடன் அது கீழே விழும் முன் கைப்பற்றி, “திவ்யா கொஞ்ச நேரம் கண் மூடி பாட்டு கேளு, மைன்ட் ரிலாக்ஸ் ஆகும்.. எதுனாலும் அப்புறம் யோசி.. இப்போ கிளம்பு” என்றான். 

“ஏன்டா நீயும் என்னை படுத்துற?” என்று இறங்கிய குரலில் கேட்டாள். 

“..” 

“ஏன் எதுக்குனு தெரியலைனாலும் என் வேதனையும் வலியும் உனக்கு புரியுது ஆனா இப்போ கூட என்னை தோள் சாய்த்து ‘உனக்கு நான் இருக்கிறேன்’ னு சொல்ல மாட்டிக்கிறியே!” என்று வலி நிறைந்த குரலில் கூறினாள். 

அவள் கூறியதை கேட்டு அவன் மனம் மெளனமாக கண்ணீர் சிந்தினாலும் வெளியே உணர்சியற்ற பார்வையை தான் பார்த்தான்.

“போடா” என்றவள் வேகமாக வெளியேறினாள்.

 

 

பவித்ரா, “திவி ஒரு நிமிஷம் என் பேக் எடுத்துட்டு வரேன்” என்றாள். 

“நான் ஹாஸ்டல் போறேன்.. நீ கிளம்பு” 

“திவி” 

“நீயாவது என்னை படுத்தாம நான் சொல்றதை கேளு” என்றவள் படி இறங்கினாள்.

 

 

பவித்ரா ஆசிரியர் அறைக்கு சென்றபோது ஹரீஷ் தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடியிருந்தான்.

பவித்ரா, “சார்” என்று இரண்டு முறை அழைத்த பிறகு தான் கண்களை திறந்தான்.

“திவ்யா ரொம்ப பாவம் சார்.. உங்கள் அன்பை மட்டும் தான் இப்போ அவ நம்பி இருக்கிறா.. நீங்க………………..” என்று அவள் சொல்லிக் கொண்டிருந்த போது,

“என்ன! எனக்காக அவனிடம் பிச்சை கேட்கிறியா?” என்று திவ்யாவின் குரல் கடுமையுடன் ஒலித்தது.

ஹரீஷ், “திவ்யா” என்று கண்டிக்கும் குரலில் அழைக்க,

திவ்யா கோபத்துடன் அவனை பார்த்து, “மூச்.. இவ்வளவு நேரம் நான் கெஞ்சிய போது அமைதியா தானே இருந்த! அப்படியே இரு.. நான் என் பிரெண்ட் கிட்ட தான் பேசிட்டு இருக்கிறேன்” 

“உன் பிரெண்ட் கிட்ட தான் பேசுற ஆனா என்னைப் பற்றி பேசுறியே!” 

“இல்லை நான் என்னைப் பற்றி தான் பேசுறேன்.. அவ எனக்காக தான் பேசுறா ஆனா அவ சொல்லி நீ புரிஞ்சுக்கிற அளவிற்கு என் காதல் இறங்கிட நான் விரும்பலை” என்றவள் பவித்ராவை பார்க்க,

அவள், “சாரி” என்றாள்.

“இனி என்னை பற்றி நீ இவனிடம் பேசக் கூடாது இது என் மேல் ஆணை” 

பவித்ரா அமைதியாக தலையை ஆட்டவும் திவ்யா, “கிளம்பு” என்றாள்.

பவித்ரா கிளம்பவும் ஹரீஷை திரும்பி பார்க்காமல் திவ்யாவும் கிளம்பினாள்.

 

சிறிது நேரம் கண்களை மூடி அமர்ந்திருந்தவன் பின் மணியை பார்த்துவிட்டு நந்தகுமாரை அழைத்தான்.

நந்தகுமார் அழைப்பை எடுத்து, “சொல்லுடா” என்றான். 

“நீ இப்போ ப்ரீயா?” 

“என்னடா சொல்லு” 

“நீ ப்ரீனா என்னை பிக்-அப் பண்ணிக்கிறியா?” 

“வரேன்.. உன் வண்டிக்கு என்னாச்சு?” 

“சரி நானே வந்துக்கிறேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.

உடனே அவனை அழைத்த நந்தகுமார் அவன் அழைப்பை எடுத்ததும், “என்னடா ஆச்சு? சொல்லுடா” என்றான். 

“..” 

“ஹரி” 

“மனசு கொஞ்சம் சரி இல்லைடா.. இப்போ என்னால் வண்டி ஓட்ட முடியாது” 

“அரவிந்த் எங்க?” 

“அவன் கிளம்பி இருப்பான்” 

“சரி அரை மணி நேரத்தில் நான் வரேன் நீ வெயிட் பண்ணு” என்று அழைப்பைத் துண்டித்தவன் அரவிந்தை அழைத்தான்.

Advertisement