Advertisement

ஹரீஷ் காபியுடன் வந்த போது, திவ்யா கால் விரல்களில் நின்றபடி ஜன்னல் வழியாக குனிந்து ஏதோ செய்துக் கொண்டிருந்தாள்.

காபி அடங்கிய தட்டை மேஜை மீது வைத்த ஹரீஷ் வேகமாக அவள் அருகே சென்றபடி, “ஹே! என்ன பண்ணிட்டு இருக்க! விழுந்திர போற” என்றவன் அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

அவன் இழுத்த வேகத்தில் அவன் மேல் மோதி நின்றவள், “அங்க மரத்தில் ஒரு பறவைக் கூடு இருக்குது.. அதில் மூணு குஞ்சுங்க இருக்குது.. ஒண்ணு கீழ விழுற மாதிரி இருக்குது.. அதான் அதை உள்ளே தள்ளி வைக்க பார்த்தேன்.. எனக்கு எட்டலை.. ப்ளீஸ் ப்ளீஸ் நீ அதை சரி பண்றியா?” என்று கெஞ்சினாள்.

“சரி.. நீ தள்ளி நில்லு” என்றவன் அவள் சற்று தள்ளி நின்றதும் அந்த கூட்டை நேராக வைத்து குஞ்சை சற்று உள்ளே தள்ளி வைத்தான்.

அவன் ஜன்னலை விட்டு சற்று நகர்ந்து, “இப்போ பார்” என்றான்.

வேகமாக எட்டி பார்த்தவள் பெரும் மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்தபடி, “சூப்பர்.. ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.

தன்னை மறந்து அவளை சில நொடிகள் ரசித்தவன் பின் சுதாரித்து, “காபி” என்றபடி கையை நீட்டி காட்டினான்.

காபி அடங்கிய தட்டை எடுத்தவள் முதலில் அவனிடம் நீட்டினாள்.

அவன், “உங்க மூணு பேருக்கு தான் கலந்தேன்” என்றான்.

விஜயிடமும் நந்தகுமாரிடம் தட்டை நீடியவள் மீதம் இருந்த ஒரு காபி குவளையுடன் சமயலறைக்கு சென்று அதை சரி பாதியாக மற்றொரு குவளையில் ஊற்றிக் கொண்டு வந்து ஹரீஷிடம் நீட்டினாள்.

அவன் கைகளை கட்டிக் கொண்டு அவளை பார்க்க, அவளும் அவனை தீர்க்கமாக பார்த்தாள்.

‘பிடிவாதம்’ என்ற முணுமுணுப்புடன் அவன் ஒன்றை எடுத்துக்கொள்ள,

அவள் விரிந்த புன்னகையுடன், “அதை நீ சொல்றியா!” என்றுவிட்டு காபியை பருக ஆரம்பித்தாள்.

அவள் இதழ்கள் காபியை பருக கண்களோ ஹரீஷை பருகியது. அதை உணர்ந்து அவன் ஜன்னல் அருகே சென்று வெளியே பார்ப்பது போல் அவளுக்கு முதுகு காட்டி நின்றுக் கொண்டான்.

செய்கையின் மூலம் விஜய் மற்றும் நந்தகுமாரை வெளியே செல்ல சொன்னவள் அவர்கள் வெளியேறியதும் ஹரீஷ் அருகே சென்று, “ரிஷி” என்று மென்மையாக அழைத்தாள்.

சட்டென்று திரும்பியவன் அங்கே அவர்கள் மட்டும் இருக்கவும் அமைதியாக மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பி நின்றுக் கொண்டான்.

அவள் மெல்லிய குரலில், “நான் சேர்மன் ரிலேடிவ் என்பதாலும், என் அப்பா கோடீஸ்வரர் என்பதாலும் தானே உன் மனதை மறைக்கிற?” என்று கேட்டாள். 

அவன் பார்வையை வெளியே பதித்தபடி, “என் மனதில் உள்ளதை உன்னிடம் சொல்லிட்டேன்” என்றான். 

“அது பொய்” 

“பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” 

“அப்போ என் கண்ணை பார்த்து என்னை காதலிக்கலைனு சொல்லு” 

அவள் பக்கம் திரும்பியவன் நக்கல் குரலில், “இந்த சினிமா டயலாக்ஸ் என்னிடம் பலிக்காது” என்றான். 

“சரி.. என் கண்ணை பார்த்துச் சொல்லு” 

ஒரு நொடி அவளை ஆழ்ந்து பார்த்தான். பின் அவள் கண்களை பார்த்து, “நான் உன்னை காதலிக்கவில்லை” என்றவன் சிறிது குரலை உயர்த்தி, “போதுமா” என்றான்.

கண்ணில் கண்ணீர் வடிய அவனது சட்டை காலரை பற்றியவள், “ஏன்டா இப்படி பண்ற? என் உள் மனசு சொல்லுது நீ என்னை விரும்புறனு..

உனக்கு யாரும் இல்லை.. உன்னை ஏற்க மாட்டாங்கனு நீயா நினைச்சுக்காத.. உனக்கு நான் இருக்கிறேன்.. என்னை திவ்யா என்ற தனி மனிஷியா பாரு.. நான் தனி மனிஷி தான்.. எனக்குனு நீ மட்டும்……………………” 

அவள் கையை பிரித்து எடுத்தவன், “ஒரு குடும்பத்தோட அருமை அது கிடைக்காத எனக்கு நல்லா தெரியும்.. அது கிடைத்த உனக்கு அதன் அருமை தெரியலை அதான் ஈஸியா தனி மனிஷினு சொல்லிட்ட” என்றான். 

“குடும்பம்!!!” என்று விரக்த்தியாக சிரித்தவள் வேறு எதுவும் சொல்லாமல் கிளம்பிவிட்டாள்.

அவளது மனமோ, ‘என்னை பற்றி தெரிந்தால் ஒருவேளை உன் மனதை மறைக்காமல் காதலை என்னிடம் நீ சொல்லலாம் ஆனால் நான் அதை விரும்பலை.. என்னை எனக்காக ஏற்று உன் காதலை நீ சொல்லணும்’ என்றது.

 

கண்ணீருடன் வெளியே வந்தவளை பார்த்து பதறிய விஜய், “திவி என்னாச்சு? ஏன் அழுற? சார் திரும்ப அடிச்சுட்டாரா? என்ன நினைச்சிட்டு இருக்கார்!” என்றபடி அவன் சண்டைப் போட கிளம்ப,

அவனது கையை பிடித்து தடுத்த திவ்யா மறு கையால் நெஞ்சை சுட்டிக்காட்டி, “வார்த்தையால் இங்கே அடிச்சிட்டான்டா” என்றவள் கண்களை துடைத்து, “வா கிளம்பலாம்” என்றாள்.

நந்தகுமார் சிறு தவிப்புடன் அவளைப் பார்க்க, அவள் வரவழைத்த புன்னகையுடன், “இது உனக்கு செட்டே ஆகலையே சூம்பிப்போன சிக்கன்” என்றாள். 

அவளது முயற்சி புரிந்து அவனும் வரவழைத்த முறைப்புடன் அவளை பார்க்க,

அவள், “இது செட் ஆகுது.. பை” என்று கூறி கிளம்பினாள்.

விஜய், “பவி வீட்டுக்கு………….” 

“இப்போ வேணாம்டா.. என்னை ஹாஸ்டலில் விட்டிரு” 

“இப்போ தான் பவி வீட்டுக்கு போகணும் வா” என்று அவளை இழுத்துக் கொண்டு பவித்ரா வீட்டிற்கு சென்றான்.

சிறிது நேரம் நண்பர்களுக்காக சிரித்தவள் அரை மணி நேரத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல், “விஜி கிளம்பலாம்” என்றாள்.

பவித்ரா, “திவி மனசை போட்டு குழப்பிக்காத” என்றாள். 

புன்னகையை அவளுக்கு பதிலாக தந்தவள் நண்பனுடன் கிளம்பினாள். பவித்ரா கவலையுடன் தன் அறைக்கு சென்றாள்.

 

 

திவ்யா விடை பெற்றதும் உள்ளே சென்ற நந்தகுமார் கண்டது கவலை கலந்த யோசனையுடன் அமர்ந்திருந்த ஹரீஷை தான்.

“ஏன்டா உன் மனசை மறைத்து அவளோட மனசையும் நோகடிக்கிற?” 

சட்டென்று சிந்தனையில் இருந்து வெளி வந்தவன், “என் மனதில் எதுவும் இல்லை” என்றான்.

“உனக்கு கோபம் அதிகம் வரும் தான் ஆனா இதுவரைக்கும் எந்த பெண்ணையும் நீ அடித்தது இல்லை.. இவ தான் விதிவிலக்கு” 

“….” 

“அவளை நீ காதலிக்கலைனா இதுக்கு என்ன அர்த்தம்?” என்றபடி தனது கைபேசியை ஹரீஷ் முகத்திற்கு முன் காட்டினான்.

கைபேசியை பிடுங்கியபடி ஹரீஷ் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றான். ஜன்னலில் இருந்து ஹரீஷ் திவ்யாவை இழுத்த வேகத்தில் அவள் அவனை மோதி நின்றபடி பேசிக் கொண்டிருந்ததை புகைப்படம் எடுத்து இருந்தான். அந்த நெருக்கத்தை திவ்யா ஹரீஷ் இருவருமே உணரவில்லை ஆனால் அந்த நொடியில் தான் ஹரீஷின் மனதை முழுமையாக நந்தகுமார் அறிந்துக் கொண்டான்.

“உண்மையை சொல்லுடா.. ஏன் உன் மனதை மறைக்கிற?” 

“ச்ச்” என்றபடி அமர்ந்தவன் நந்தகுமார் அறியாமல் அந்த புகைப்படத்தை தன் கைபேசிக்கு அனுப்பிவிட்டு அதை நந்தகுமார் கைபேசியில் இருந்து அழித்துவிட்டு கைபேசியை கொடுத்தான்.

“இதை அழித்ததை போல் உன் மனதை அழிக்க முடியுமா?” 

“முடியாது தான்.. இப்போ என்ன செய்யணும்னு சொல்ற?” என்று வெடித்தான்.

“உனக்காக என் பரென்ட்ஸ் பொண்ணு கேட்பாங்கடா” 

“திவ்யா யார் தெரியுமா? அவள் உயரம் தெரியுமா? எனக்கு பரென்ட்ஸ் இருந்தாலே என்னை ஏற்பது நடக்காத விஷயம், இதில் என்னை போன்ற அனாதையை………..” 

“ஹரி” என்று அதட்டினான்.

“உண்மையை தானே சொல்றேன்..” 

“உன் மனதை என்னிடம் கூட ஏன்டா சொல்லலை?” 

“…” 

“சொல்லுடா” 

“முதலில் அவளிடம் சொல்லணும் நினைத்தேன் ஆனா அதற்கு வாய்ப்பே இல்லைனு தெரிந்த பிறகு எதற்கு சொல்லணும்னு விட்டுட்டேன்” 

“அன்னைக்கு ஸ்க்ரீன் பின்னாடி இருந்து பார்த்ததும் விழுந்துட்டியா?” 

“ஏழெட்டு மாசத்திற்கு முன் ஒரு பொண்ணு என் தலையில் பாப்-கார்ன் கொட்டினதா சொன்னேனே ஞாபகம் இருக்கா?” 

“ஆமா!” என்று இழுத்தவன் பின் அதிர்ச்சியுடன், “அது இவளா?” என்றான். 

ஹரீஷ் புன்னகையுடன் தலையை ஆட்டவும், “இன்னும் எதை எல்லாம் என்னிடம் மறைத்து வச்சிருக்கடா?” என்ற நந்தகுமார், “சரி சொல்லு எப்போதில் இருந்து லவ் பண்ற?” என்று கேட்டான். 

“அவளை காலேஜில் பார்ப்பதற்கு முன்பே என் மனசுக்குள்ள் நுழைஞ்சிட்டா ஆனா அவளது பின்புலம் தெரிந்ததும் என் மனதை மாற்றிக் கொண்டேன்” என்று முடித்த போது அவன் குரல் வேதனையுடன் இறுகியது. 

“மாற்றிக் கொண்டதாக உன்னை நீயே ஏமாத்திக்கிற” 

“ஏதோ ஒன்று.. நான் அவளுக்கு சரி இல்லை” 

“அப்படி என்ன பின்புலம் அவளுக்கு?” 

“திவ்யா கோடீஸ்வரி.. சொர்ணம் கோல்ட் ஷாப் அண்ட் RR டிரெஸ் ஷாப் ஓனர் பொண்ணு..” என்றான். 

“இருக்கட்டுமே! அவள் உன்னை விரும்பும் போது……………”

மறுப்பாக தலையை அசைத்தவன், “அவ ராஜாராம் சாரோட ரிலேடிவ்..” என்றான். 

“இது வேறயா” என்றவன், “என்ன உறவு?” என்று கேட்டான். 

“அது தெரியாது ஆனா ஏதோ நெருங்கிய சொந்தம் தான்.. நேர்மைக்கு பேர் போன சார் இவளுக்காக திறமையான HOD ஒருத்தரை வேலையை விட்டு போக சொல்லி இருக்கார்..

என்னால் அவங்க குடும்பத்தில் பிரச்சனை வருவதை நான் விரும்பலை.. என் திருமணத்தால் எனக்கு ஒரு குடும்பம் கிடைக்கணும்னு நினைத்தவன் நான்.. ஒரு காலமும் ஒரு குடும்பம் கலைய நான் காரணமா இருக்க மாட்டேன்.. கண்ணில் படாதது கருத்தில் பதியாது என்பது போல் அவ படிச்சு முடித்த கொஞ்ச நாளில் என்னை மறந்திடுவா” 

“நீ” 

“…” 

“சொல்லுடா” 

“தனிமை எனக்கு பழகி போன ஒன்று தானே!” என்றவன் எழுந்து தன் அறைக்கு சென்று விட்டான்.

 

 

 

வண்டியில் செல்லும் போது விஜய், “சார் உன்னை விரும்புறார் மச்சி.. நூறு சதவிதம் உண்மை” என்றான். 

அவ்வளவு நேரம் சோக கீதம் வாசித்துக் கொண்டிருந்தவள் உற்சாகத்துடன், “எதை வைத்து சொல்ற?” என்று கேட்டாள். 

“அவர் உன்னை ரசித்து பார்த்ததை நான் பார்த்தேன்.. அது அழகை ரசிக்கும் ரசனை இல்லை.. அவர் உன் மகிழ்ச்சியை ரசித்து பார்த்தார்.. அப்புறம்…” என்று அவன் சிறிது தயங்க,

“அப்புறம் என்னடா?” 

“அது.. நீ ஜன்னலில் எட்டி பார்த்தப் போது விழுந்திடுவியோனு அவர் பயந்தார்.. அப்போ தயங்காம உன் கையை பிடித்து இழுத்தார்……….” 

“இதுக்கு ஏன் தயங்கின?” 

“இருடி.. அவர் இழுத்த வேகத்தில் நீ அவர் மேல் மோதி நின்ன.. அவரை டச் பண்ணிட்டு நின்னபடி தான் பேசின.. நீ டச் பண்ணிட்டு நின்னதை நீயும் உணரலை அவரும் உணரலை.. நிச்சயமா காதல் இல்லாமல் இது சாத்தியமில்லை” 

“..” 

“என்னடா அமைதியாகிட்ட?” 

“நீ சொன்னதை யோசித்து பார்த்தேன்.. நீ சொன்னது போல் நான் அதை உணரவே இல்லை..” என்றவள், “ச்ச்” என்று உச்சுக் கொட்டினாள்.

“என்னடா?” 

“ஆனா அந்த பக்கி தான் உண்மையை ஒத்துக்க மாட்டிக்குதே!” 

“அது தான் ஏன்னு புரியலை” 

“எல்லாம் ஸ்டேடஸ் பிரச்சனை தான்.. விடு நான் பார்த்துக்கிறேன்” என்றவள் மனதை குடும்பம் என்ற சொல் மீண்டும் தாக்கியது.

 

 

 

றைக்கு சென்ற ஹரீஷின் மனம் முழுவதும் திவ்யா தான் நிறைந்திருந்தாள்.

‘குடும்பம்னு சொல்லி ஏன் விரக்த்தியா சிரிச்சா? அவ கண்ணில் ஏன் அப்படி ஒரு வேதனை? என்ன தான் பிரச்சனை? ஏன் தனியா இருக்கிறா?’ என்ற கேள்விகள் அவனை குடைந்தது.

தன்னால் அவளது துயரை போக்க முடியவில்லையே என்ற இயலாமையுடன் விழிகளை மூடியவன் விழியோரம் கண்ணீர் கசிந்தது.

சிறு வயதில் இருந்து தனது தனிமையை நினைத்து ஒருபோதும் கண்ணீர் வடிக்காதவன் முதல் முறையாக தன்னவளின் துயர் போக்க முடியவில்லையே என்று துயர் கொண்டு கண்ணீர் வடித்தான்.

இணைய காத்திருப்போம்….

Advertisement