Advertisement

விலகல் 3

அடுத்த நாள் கல்லூரியின் முதன்மை ஆசிரியர் அறையில் விஜய் மற்றும் பவித்ரா தலை குனிந்தபடி நிற்க, திவ்யா எப்பொழுதும் போல் கெத்தாக நிற்க, முதன்மை ஆசிரியர் தொண்டைத் தண்ணி வற்ற கத்திக் கொண்டிருந்தார்.

அரை மணி நேரமாக தொடர்ந்து திட்டியவர் இறுதியாக, “பவித்ரா! உன்னிடம் இதை எதிர்பார்க்கவில்லை” என்று கூற,

விஜய், ‘இதை தானயா முதலில் சொன்ன! திரும்பவும் முதலில் இருந்தா!’ என்று மனதினுள் அலறினான்.

முதன்மை ஆசிரியர், “இவர்களுடன் சேர்ந்து உன் லைஃப் ஸ்பாயில் பண்ணிக்காதே! அவ்ளோ தான் சொல்வேன்” என்று கூறியவர் மேஜை மீது இருந்த தண்ணீரை பருகினார்.

அவர் நீரை குடித்து முடித்ததும் திவ்யா, “முடிச்சிட்டீங்களா சார்?” என்று கேட்க, அவர் அவளை முறைத்தார்.

அவ்ளோ அலட்டிக்கொள்ளாமல், “அப்போ முடிச்சிட்டீங்க” என்று கூறியபடி காதில் இருந்த பஞ்சை எடுத்து அவரது மேசை அருகே இருந்த குப்பைக் கூடையில் போட்டாள்.

பவித்ரா ‘அடி பாவி’ என்று மனதினுள் அலறியபடி தோழியை பார்க்க, விஜய் சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றான்.

முதன்மை ஆசிரியரின் நிலையை நான் சொல்லியா தெரியவேண்டும்! இப்பொழுது மட்டும் அவருக்கு இரத்த அழுத்தத்தை பரிசோதித்து இருந்தால் பாதரசம்(Mercury) அந்த கருவியை உடைத்துக் கொண்டு வெளியே வந்திருக்கும்.

திவ்யா அமைதியான குரலில், “எனக்கு ஒரு சந்தேகம் சார்.. நீங்களும் தான் காலேஜ் ஹவர்ஸில் தியேட்டருக்கு வந்தீங்க.. நாங்க பண்ணது மட்டும் தப்பா?” என்று வினவ,

அவர் கோபத்துடன் முறைத்தார்.

“என்ன சார்?” 

“நீங்களும் நானும் ஒன்னா?” 

“தப்பை யார் செய்தாலும் தப்பு, தப்பு தானே!” 

“அதிகமா பேசாத!” 

“உண்மையை தானே சொன்னேன்” 

“எது உண்மை? நான் நேற்று லீவ் எடுத்து இருந்தேன்” 

“ஓ! அப்போ இனி நாங்களும் லீவ் எடுத்துட்டு படத்துக்கு போறோம் சார்” என்று கூறி புன்னகைத்தாள்.

“சேர்மன் உன் ரிலேடிவ் என்பதற்காக அதிகம் பேசாதே!” 

அவள் உடல் இறுகியது.

முதன்மை ஆசிரியர் தொடர்ந்தார், “இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை.. சேர்மன் ரிலேடிவ் என்று ரொம்ப ஆடாத! இனி ஏதாவது கம்ப்லேன்ட் வந்தது உன் அப்பாவிடம் தான் பேசுவேன்” 

அவள் இறுகிய குரலில், “அடுத்த முறை என்ன! இப்பவே கூட யாருக்கு வேணாலும் போன் பண்ணி பேசுங்க” என்றாள். 

“யாருக்கோ இல்லை உன் அப்பாவிடம் பேசுவேன் என்று சொன்னேன்” 

“அதை தான் நானும் சொல்றேன்.. யாருக்கு வேணாலும் பேசுங்க.. அப்புறம் இன்னொரு விஷயம்.. எனக்கும் சேர்மனுக்கும் எந்த உறவுமில்லை.. அவர் என் ரிலேடிவ் கிடையவே கிடையாது..” என்று சிறிது ஆவேசமாக பேசியவளை விஜய் மற்றும் முதன்மை ஆசிரியரும் வாயடைத்துப் போய் பார்த்திருக்க, பவித்ரா அவளது கையை ஆதரவாக இறுக்கமாக பற்றினாள்.

தோழியின் பிடியில் சற்று இயல்பிற்கு திரும்பியவள் அமைதியாக நின்றாள்.

முதன்மை ஆசிரியர், “சேர்மன் தான் உன்னை ரிலேடிவ் என்று சொன்னார்” என்றார். 

பவித்ரா தோழியை கவலையுடன் பார்க்க, திவ்யாவின் உடலும் மனமும் மீண்டும் இறுகியது.

முதன்மை ஆசிரியர், “சேர்மன் பொய் சொல்ல மாட்டார்.. இதில் பொய் சொல்லும் அவசியமும் அவருக்கு இல்லையே!” என்றார். 

தன் உணர்வுகளை கட்டுபடுத்திய திவ்யா, “யாருக்கோ போன் பண்ணி பேசுவேன்னு சொன்னீங்களே! அவரிடம் கேட்டு பாருங்க உங்கள் சேர்மன் எனக்கு ரிலேடிவ்வா என்று” என்றவள் அவரது பதிலை எதிர்பாராமல் வெளியேறினாள்.

முதன்மை ஆசிரியரோ குழப்பத்துடன், “யாரிடம் கேட்க சொல்கிறாள்? இவ பேசுறதே புரியலை” என்று தனக்குத் தானே கூறியவர் பவித்ராவை பார்த்து, “உனக்கு புரிந்ததா?” என்று கேட்டார். 

“அவங்க அப்பாவிடம் பேசுறேன்னு சொன்னீங்களே சார்.. அதை தான் சொல்றா” என்று மென் குரலில் கூற,

அவர் மேலும் குழம்பியவராக, “அப்பாவையா யாரோனு சொல்லிட்டு போகிறாள்!” 

தோழியின் மனம் அறிந்த பவித்ரா மெளனமாக நின்றாள். விஜய் முதன்மை ஆசிரியரின் நிலையில் தான் இருந்தான். 

சில நொடிகள் மௌனத்தில் கழிய பவித்ரா, “சார்” என்று அழைக்க, அவர், “இனி இப்படி செய்யாதீங்க.. போங்க” என்று கூறவும் இருவரும் வேகமாக வெளியே சென்றனர்.

விஜய் வெளியே வந்ததும், “திவி குழப்பியதில் பனிஷ்மென்ட் எதுவும் கொடுக்காமல் அனுபிட்டார்” என்றான்.

அதை கவனிக்காமல் பவித்ராவின் கண்கள் தோழியை தேடியது.

விஜய், “திவி எங்க?” என்றவன், “சேர்மன் உண்மையில் திவி ரிலேடிவ் இல்லையா?” 

“..” 

“பவி” என்று அவன் சற்று குரலை உயர்த்தவும் அவள், “இம்சை கொஞ்ச நேரம் அமைதியா இருக்கிறியா!”

விஜய் அவளிடம் சண்டை போட வாய் திறக்க போகையில், அவள், “திவி அங்க இருக்கிறா” என்றபடி வேகமாக சேர்மன் அறை நோக்கி செல்லவும் அவனும் வேகமாக சென்றான்.

சேர்மன் அறை வாசலில் இறுக்கத்துடன் நின்றிருந்தவளை பார்த்து பவித்ரா, “திவி” என்று சிறு கலக்கத்துடன் அழைக்க, அவளோ தோழியின் முகம் பார்க்காமல், “நீ கிளாஸ்க்கு போ” என்றாள்.

“நான் சொல்றதை கேளுடி…………..” 

கோபமாக திரும்பிய திவ்யா, “உன்னை கிளாஸ்க்கு போனு சொன்னேன்” என்று கூறினாள்.

அவள் குரலை உயர்த்தவில்லை ஆனால் அவளது கண்களில் தெரிந்த கோபம் எனும் ஜுவாலை கண்டு விஜய் அதிர்ச்சி மற்றும் சிறு பயத்துடன் ஓரடி பின்னால் நகர்ந்தான். அவன் மனதினுள், ‘பாட்ஷா பாய் ‘உள்ளே போ’ சொன்னது போல் எபக்ட்.. ஒருவேளை அந்த மாதிரி ஏதும் பிளாஷ்பக் இருக்குமோ!’ என்று ஒரு நொடி யோசித்தவன் அடுத்த நொடி, ‘சச அப்படியெல்லாம் இருக்காது! ஆனா இவ ஒரு மர்மம் தான்.. இன்னைக்கு அந்த மர்மத்தை கண்டு பிடிச்சே ஆகணும்டா விஜி’ என்று தனக்குள் நூறாவது முறையாக சபதம் எடுத்தான்.

ஆனால் பவித்ரா சிறிதும் நகராமல் தோழியின் கையைப் பற்றினாள்.

கையை உதறிய திவ்யா, “ப்ச்.. நான் அவரிடம் பேசிட்டு தான் வருவேன்.. நீ போ” என்றாள். 

“சேர்மன் சார் மேல் எந்த தப்பும் இல்லையே.. நீ………………” 

“முன்பு நடந்ததிற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை தான்.. அவர் மேல் தப்பு இல்லை தான்.. ஆனால் உடைந்த, ஒட்டாத உறவை ஒட்ட அவர் முயற்சிப்பது தப்பு தான்..” 

பவித்ரா ஏதோ கூற வர, அதற்குள் சேர்மன் அறையில் இருந்து வேறு துறை தலைமை ஆசிரியர் வெளியே வரவும் திவ்யா அவசரமாக உள்ளே சென்றாள்.

அதிரடியாக உள்ளே வந்தவளைப் பார்த்த சேர்மன் அவள் முகத்தை பார்த்து கனிவாக, “என்ன டா?” என்றார். 

“ஸ்டுடென்ட்ஸ் எல்லோரிடமும் இப்படி தான் பாசமா பேசுவீங்களா?” 

“அவர்களும் நீயும் ஒன்றா?” 

“அந்த ஆளை டென்ஷன் படுத்தி வெறுப்பேத்த தான் உங்கள் காலேஜில் சேர்ந்தேன்.. ஆனால் இப்போ ரொம்ப பீல் பண்றேன்.. எதுக்காக என்னை உங்கள் ரிலேடிவ்னு சொன்னீங்க?” 

“அது தானே உண்மை” 

“என்ன உறவென்று சொல்லித் தான் பாருங்களேன்” என்று அவள் நக்கலுடன் கூற,

அவர் அசராது தீர்க்கமான குரலில், “நீ ஆசை பட்டால் இப்போதே சொல்ல நான் தயார்” என்றார். 

“ஆசையா! ஐ ஹேட் தட்..” என்று வெறுப்புடன் கூறியவள், “தினமும் யாராவது உங்களை என் உறவு என்று சொல்லும் போது எனக்கு எப்படி இருக்குது தெரியுமா? நான் மறக்க நினைப்பதை தினம் தினம் ஞாபகப்படுத்தி கொல்றாங்க.. என் வலி உங்க யாருக்குமே புரியாது” என்றபோது அவள் கண்கள் கலங்கியது.

“அதை நினைக்க நினைக்க நான் ஏன் பிறந்தேன்னு தோணுது.. என் மேலேயே எனக்கு வெறுப்பு வருது.. இன்னும் கொஞ்ச நாளில் நான் இல்லாமலேயே போய்டுவேன் நினைக்கிறேன்.. அது தானே உங்கள் எல்லோருக்கும் வேணும்” 

“என்ன பேச்சு இது” என்று அதட்டியவர் இருக்கையை விட்டு எழுந்திருந்தார். அவரது மனம் அவளது நிலையை நினைத்து கலங்கியதோடு, அவளது பேச்சை கேட்டு அவர் உள்ளம் பதறியது. பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி மற்றும் பெரிய மருத்துவமனையை திறம்பட நடத்தும் அவரால் அவளை எப்படி கையாளுவது என்று தெரியாமல் திணறினார். எப்படி அவளது துயர் நீக்குவது என்று அறியாமல் தவித்தார்.

அவர், “நான் சொல்வதை கொஞ்சம் கேளேன்” என்று கெஞ்சினார்.

“நீங்கள் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் என் முடிவில் மாற்றம் இல்லை.. எனக்கு ஒரு உதவி மட்டும் பண்ணுங்க” 

“என்ன?” 

“எல்லோரிடமும் என்னை உங்க உறவாக பார்க்காமல் ஒரு சாதான மாணவியாக பார்க்க சொல்லுங்க.. என்ன பனிஷ்மென்ட் கொடுக்கணும் என்றாலும் கொடுக்கட்டும்” என்றவள் அவரது பதிலை எதிர்பாராமல் வெளியேறினாள்.

சோர்ந்து போய் இருக்கையில் அமர்ந்தவர் “உனக்கு அளித்த வாக்கை எப்படி நிறைவேற்ற போறேன் தெரியலையே சுபா!” என்று கலங்கினார்.

அலையின் சீற்றத்தை போல் கொந்தளித்த மனதுடன் புயல் வேகத்தில் வெளியே வந்த திவ்யாவை தொடர்ந்து ஓடிய பவித்ரா தோழியின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு ஓட்டத்தை தொடர்ந்தாள்.

‘என் தலை என்னைக்கு வெடிக்க போகுதுன்னு தெரியலையே!’ என்று மனதினுள் புலம்பியபடி விஜய் அவர்களுடன் வேகமாக சென்றான்.

வகுப்பறை நோக்கி செல்லப் போன திவ்யாவை பவித்ரா இழுத்துக் கொண்டு கல்லூரி உணவகத்திற்கு சென்றாள். அங்கே சென்று அமர்ந்ததும் பவித்ரா எதுவும் பேசாமல் தோழியின் கையை ஆறுதலாக தட்டிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தாள்.

ஐந்து நிமிடங்கள் மௌனமாக கழிந்தது. திவ்யா சுற்றுபுறத்தில் கவனமின்றி தன்னுள் உழன்றுக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது முகத்தில் தண்ணீர் தெளிக்கப்படவும் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அந்த காரியத்தை செய்த தோழனை முறைத்தாள்.

அவனோ அலட்டிக் கொள்ளாமல், “முதலில் இதை குடி” என்று அவளுக்கு பிடித்த தர்பூஷினி பழச்சாறை கொடுத்தான்.

அவள் அதை வாங்காமல் அமைதியாக இருக்கவும் அவன், “இப்போ வாங்கலை இதை உன் தலையில் ஊத்திடுவேன்” என்று மிரட்டினான். 

“..” 

பவித்ரா பக்கம் கையை காட்டியவன், “இந்த லூசு மாதிரி அமைதியா இருக்க மாட்டேன்.. நான் என் ரெட்டை வால் பிரெண்ட் திவி போல் அடாவடி.. ஒழுங்கா குடி” என்றதும் பவித்ரா அவனை முறைக்க, திவ்யாவின் இதழ் புன்னகையில் விரிந்தது. அதை பார்த்ததும் பவித்ரா கோபம் மறந்து தோழியை கனிவுடன் நோக்கினாள்.

அவன் புன்னகையுடன், “குட் கேர்ள்” என்றதும் திவ்யா பழச்சாறை வாங்கி பருக தொடங்கினாள்.

பவித்ராவின் தலையில் கொட்டிய விஜய், “அவள் அமைதியா இருந்தால் பேசி தேற்றாமல் வயோலின் வாசிச்சிட்டு இருக்க!” என்றான். 

தலையை தடவியபடி முறைப்புடன், “பேச்சு பேச்சா இருக்கணும்.. இந்த கை நீட்டுற வேலையை வச்சுக்காதே!” என்றாள். 

“நீட்டினா என்ன பண்ணுவ?” 

மேசை மீது இருந்த தண்ணீர் குவளையை எடுத்து அவன் முகத்தில் தண்ணீரை ஊற்றியபடி, “இப்படி என் கையும் நீளும்” என்றாள். 

“என்னடி பண்ணி வச்சிருக்க பக்கி! இப்போ நான் எப்படி கிளாஸ்க்கு வரது?” 

அப்பொழுது தான் அவனது சட்டை நனைந்ததை கவனித்த பவித்ரா, “அது உன் கவலை” என்றாள். 

விஜய் அவளை முறைக்க, திவ்யா வாய்விட்டு சிரித்தபடி, “இனியும் இவளை அமைதினு சொல்லுவ” 

“எல்லாம் என் கிரகம்” 

திவ்யா, “சரி நீங்க ரெண்டு பேரும் ஜூஸ் குடிங்க.. கிளாஸ் போகலாம்” 

விஜய், “இப்படியே எப்படி போறது?” 

“கொஞ்ச நேரத்தில் காஞ்சிரும்.. இல்லைனாலும் பரவா இல்லை.. சும்மா வா” 

விஜய் பவித்ராவிடம், “உனக்கு பிடிச்ச சப்போட்டா மில்க் ஷேக் சொல்லி இருக்கிறேன்.. போய் வாங்கிட்டு வா.. அப்படியே எனக்கு எக்-பப்ஸ் வாங்கிட்டு வா” 

பவித்ரா அவனை முறைத்துவிட்டு எழுந்து சென்றாள்.

“ஏன்டா அவளை சீண்டிட்டே இருக்க?” 

“அவளை பார்த்தா அதுவா வருது” 

“என்னைக்கு உன்னை மொத்த போறான்னு தெரியலை” 

“அதை விடு.. நான் ஒண்ணு கேட்கலாமா?” 

அவள் மெல்லிய புன்னகையுடன், “சேர்மன் எனக்கு ரிலேடிவ்வா இல்லையானு தெரியனுமா?” 

“கஷ்டமா இருந்தால் வேண்டாம்” 

“உன் மனதை ரொம்ப நாளா குடைவதால் சுருக்கமா சொல்கிறேன்.. ஆனால் இனிமேல் இதை பற்றி கேட்காதே..” என்றவள் வெறுமையான குரலில், எனக்கு வேண்டாத ஒரு உறவோட சொந்தகாரர்.. நான் வெறுக்கும், விலகி இருக்கும் ஒரு உறவோட உறவுக்காரர் எனக்கு எப்படி உறவாக முடியும்?” 

“ஸோ இருக்கு ஆனா இல்லை.. சரி அதை விடு.. இன்னும் ஒன்னே ஒண்ணு” 

அவள் கூறியதை கேட்டு அவன் மேலும் நோண்டாமல் இலகுவாக எடுத்துக் கொண்டதோடு அந்த பேச்சை தவிர்க்கவும் அவள் மெல்லிய புன்னகையுடன், “என்ன?” என்றாள். 

“நீ ஏன் ஹாஸ்டலில் இருக்கிற?” 

“அந்த வீட்டில் இருக்க பிடிக்கலை” என்று அவள் இறுக்கத்துடன் கூறவும் அவன், “ஏற்கனவே ஆர்டர் பண்ணதை வாங்கிட்டு வர இவ்வளவு நேரமாகுது! எப்படி இந்த சோம்பேறியுடன் சின்ன வயசில் இருந்து குப்பை கொட்டுற?” என்று பேச்சை மாற்றினான்.

அவன் தலையில் கொட்டியபடி, “உனக்கு போய் வாங்கிட்டு வந்தேன் பாரு! என்னை சொல்லணும்” என்றபடி முறைப்புடன் பவித்ரா இருக்கையில் அமர்ந்தாள்.

திவ்யா இறுக்கம் சிறிது தளர்ந்து அவர்கள் சண்டையை ரசிக்க தொடங்கினாள்.

அவன் பப்ஸ்ஸை உண்டபடி, “உனக்கு வாங்கும் போது கொசுறா எனக்கு வாங்கிட்டு வந்திருக்க.. வாங்கிட்டு கூட இல்லை, எடுத்துட்டு வந்திருக்க.. நான் தான் பே பண்ணேன்” 

“ஒரு மில்க் ஷேக் வாங்கி கொடுத்துட்டு அதை சொல்லி காட்டுறியே! உனக்கு கேவலமா இல்லை” 

“இல்லை” 

“அதானே மானம் ரோஷம் இருக்கிறவங்களுக்கு தானே அதெல்லாம் இருக்கும்” 

“அதை நீ சொல்லாத” 

திவ்யா, “சரி.. சரி.. வாங்க கிளாஸ் போகலாம்” என்று கூறி இருவரையும் இழுத்துக் கொண்டு வகுப்பறைக்கு சென்றாள்.

இணைய காத்திருப்போம்….

Advertisement