Advertisement

விலகல் 19

ஒரு நாள் கணினி ஆய்வு கூடத்தில் திவ்யாவின் வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஹரீஷ் சொல்லி கொடுத்ததை தங்கள் கணினியில் ஆய்வு செய்துக் கொண்டிருந்தனர்.

அந்த ஆய்வு கூடம் சதுரங்கம் வடிவில் இருந்தது. ஹரீஷ் ஆய்வு கூடத்தின் நடுவில் அமர்ந்து மேஜை மீது இருந்த பதிவுருப்புத்தகங்களை(Record Notebooks) திருத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே இருந்த வரிசையின் மூலையில் தான் திவ்யா அமர்ந்திருந்தாள்.

அப்பொழுது திவ்யா அவளது கைபேசியில்,
“கண்ணாமூச்சி ஏனடா..
கண்ணாமூச்சி ஏனடா..
என் கண்ணா..
கண்ணாமூச்சி ஏனடா..
என் கண்ணா..
நான் கண்ணாடி பொருள் போலடா…” என்ற பாடலை (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்பட பாடல்) ஒளிபரப்ப,

ஹரீஷ் கோபத்துடன் அவள் அருகே வந்து கையை நீட்டினான்.

அவன் எழுந்ததும் பாடலை நிறுத்தியவள் ஒன்றும் அறியாதது போல், “என்ன சார்?” என்று வினவினாள். 

“உன் மொபைல் கொடு” 

“எதுக்கு சார்?” 

“கொடு” 

“எதுக்குனு சொல்லுங்க” 

“இப்போ நீ தரலைனா, இனி வேறு யாரவது வந்து கிரிப்டோக்ரஃப்பி எடுப்பாங்க” என்றதும் அவள் கைபேசியை அவன் கையில் வைத்தாள்.

அடுத்த நொடி அவன் கீழே எறிந்த வேகத்தில் அது உடைந்து சிதறியது.

அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, அவன் அவளை கண்டுக் கொள்ளாமல் தன் இடத்தில் அமர்ந்தான்.

அவள் சிதறிய கைபேசியை தொடக்கூட இல்லை.

“ஹ்ம்ம்.. ப்ரோக்ராம் போடுங்க” என்ற ஹரீஷின் கோபக் குரலில் மாணவர்கள் தங்கள் பார்வையை கணினியிடம் திருப்பினர்.

பவித்ராவும் விஜயும் திவ்யாவைப் பார்க்க, அவளோ ஹரீஷை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

விஜய் சைகையில் ‘உன் வேலையை பார்’ என்பது போல் பவித்ராவிடம் கூற, அவள் தோழியை பார்த்தபடி கணினியில் செய்நிரலை(Program) போட ஆரம்பித்தாள். விஜயும் அதைத் தான் செய்தான்.

அன்று மதியம் இருந்த மூன்று வகுப்புகளுமே ஹரீஷ் எடுக்கும் பாடத்தின் ஆய்வு செய்வதற்கான வகுப்பு தான். அங்கே இருந்த நேரம் முழுவதும் திவ்யா அவனை முறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் ஆனால் அவன் அவளை சிறிதும் கண்டுக்கொள்ளவில்லை.

வகுப்பு முடியும் தருவாயில் அங்கே ஒரு ஆசிரியை வந்தார்.

ஹரீஷ் ‘என்ன’ என்பது போல் பார்க்கவும்,

மனதினுள் ‘வாயை திறந்தால் முத்தா உதிர்ந்திடும்?’ என்று ஹரீஷை திட்டிய அந்த ஆசிரியை அவனிடம் புன்னகையுடன், “நாளைக்கு மார்னிங் தர்ட் ஹவர் தர்ட் CSE போக முடியுமா?” என்று கேட்டார். 

ஒரு நொடி தனது நாளைய வகுப்புகளை யோசித்த ஹரீஷ், “சரி” என்றான்.

“நீங்க எப்போதும் இப்படி தானா?” 

“எப்படி?” 

“இப்படி ஒரு வார்த்தையில் தான் பேசுவீங்களா?” 

அவன் தோளை குலுக்க, அவர் செல்லமாக முறைப்பது போல் பார்த்து, “இது டூ மச் சார்” என்றார்.

இவர்களை பார்த்துக் கொண்டிருந்த திவ்யாவின் முறைப்பில் காரம் கூடியது. அதை ஹரீஷ் உணர்ந்தாலும் இப்பொழுதும் அவன் பார்வை அவள் பக்கம் திரும்பவில்லை.

அப்பொழுது வகுப்பு முடிவதற்கான மணி அடிக்கவும் மாணவர்கள் ஹரீஷிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப ஆரம்பித்தனர்.

திவ்யா எழாமல் இருக்கவும், பவித்ராவும் விஜயும் அவள் அருகில் வந்தனர்.

அவளோ ஹரீஷை முறைத்தபடி, “நீங்க கிளம்புங்க” என்றாள்.

அவளது மனநிலையை உணர்ந்து பவித்ரா தயங்க, விஜய் சிதறியிருந்த திவ்யாவின் கைபேசி பாகங்களை எடுத்துக் கொண்டு பவித்ராவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

அந்த ஆசிரியை திவ்யாவை பார்த்து, “நீ கிளம்பலை?” என்று கேட்டார். 

அவள் கடுகடுத்த முகத்துடன், “சாரிடம் சந்தேகம் கேட்கணும்” என்றாள். 

“கேளு” 

“நீங்க பேசி முடிச்ச பிறகு கேட்டுக்கிறேன்” 

“பெருசா ஒண்ணும் பேசலை, நீ கேளு” 

“பரவா இல்லை.. நான் வெயிட் பண்றேன்” 

ஹரீஷ், “என்ன டவுட்?” என்று கேட்டான். 

“ரமா மேம் இப்போ கிளம்பிடுவாங்க சார்.. அதுக்கு அப்புறம் கேட்கிறேன்” என்றாள்.

அவன் அந்த ஆசிரியை அறியாமல் அவளை முறைக்க, அவளோ சிறு புன்னகையுடன் அந்த ஆசிரியை பார்த்து, “நான் வெயிட் பண்றேன் மேம்” என்றாள்.

அந்த ஆசிரியை திவ்யாவை மனதினுள் திட்டியபடி அடுத்து பேச்சை எப்படி தொடர என்று யோசிக்க,

“சரி மேம் நாளைக்கு பார்க்கலாம்” என்ற ஹரீஷ் அவரது பதிலை எதிர் பார்க்காமல், “என்ன டவுட்?” என்றபடி திவ்யாவை நோக்கி சென்றான்.

அவள், “மேம்………….” என்று ஆரம்பிக்க,

அவன் அழுத்தமான குரலில், “என்ன டவுட்?” என்று வினவினான்.

அவள் கணினியை பார்த்து, “இதில் எரர் வந்துட்டே இருக்குது” என்றாள்.

அவனும் மும்மரமாக கணினியில் பார்வையை பதித்தபடி அவள் கேட்டதை விளக்கவும்,

அந்த ஆசிரியை வேறு வழியின்றி, “சரி சார் நான் கிளம்புறேன்” என்றார். 

“சரி மேம்” என்றவனது பார்வையோ கணினியில் தான் இருந்தது.

அவர் மனதினுள் திவ்யாவை திட்டியபடி கிளம்பினார்.

அவர் கிளம்பியதும் அவன் அவளை பார்த்து கோபத்துடன், “உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா?” என்று வினவினான். 

அவள் கடுப்புடன், “அதான் உன்னிடம் நிறைய இருக்குதே! கொஞ்சம் எனக்கு கொடு” என்றாள். 

“உன்னையெல்லாம்” என்று அவன் பல்லை கடிக்க,

அவளோ கோபத்துடன், “அவளுடன் உனக்கு என்ன பேச்சு?” என்றாள்.

“அது உனக்கு தேவை இல்லாதது” 

“தேவை என்பதால் தான் கேட்கிறேன்” 

“என் சொந்த விஷயத்தில் நுழைய உனக்கு எந்த உரிமையும் இல்லை” 

“உன் சொந்த விஷயத்தில் நுழைய எனக்கு மட்டுமே உரிமை இருக்கிறது” 

“என் பொறுமையை சோதிக்கிற.. என்னை மறுபடியும் அடிக்க வச்சிராத.. நீ இங்கிருத்து கிளம்பு” 

“இன்னொரு முறை நீ அவளுடன் பேசியதை பார்த்தேன்…….” 

“அப்படி தான் பேசுவேன்.. என்ன செய்வ?” 

கோபத்துடன், “என்ன செய்வேனா!!” என்றவள் அரை நொடி யோசித்தாள். பின் என்ன பேசுகிறோம் என்றே உணராமல், “அவ முன்னாடியே உன்னை கிஸ் பண்ணுவேன்” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவள் கன்னத்தில் அடித்திருந்தான்.

அவள் கோபத்துடன், “நீ அடிச்சாலும் நான் அதை தான் செய்வேன்” என்றாள். 

மீண்டும் கையை ஓங்கியவன், “சீ..” என்றபடி கையை இறக்கி, “உனக்கு வெக்கமே இல்லையா?” என்று கேட்டான். 

“உன்னிடம் எனக்கென்ன வெக்கம்?” 

“ஒரு ஆணிடம் இப்படி தான் பேசுவியா?” 

“உன்னிடம் இப்படி தான் பேசுவேன்” 

சிரமத்துடன் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவன், “இங்கே பார்.. இது வெறும் இன கவர்ச்சி தான்.. இந்த வயசில்…………………..” 

“எனக்கு உன்னை பிடித்தது உன் வெளி தோற்றத்தை வைத்து இல்லை.. உன் அகத்தின் அழகு தான் என்னை கவர்ந்தது..

எனக்கு உன்னை ரொம்ப பிடித்து இருக்கிறது.. உன் சிறு சிறு அசைவுகளில் இருந்து, உனது அளவான பேச்சு.. உன் குணம்.. உன் கோபம்னு எல்லாத்தையும் நான் அணு அணுவா ரசிக்கிறேன்.. நேசிக்கிறேன்.. எஸ் ஐ லவ் யூ ட்ருலி அண்ட் டீப்லி” என்றாள். 

“..” 

“என்ன!” 

“எனக்கு அப்படி ஒரு எண்ணம் சிறிதும் இல்லை” 

“பொய்” 

“எனக்கு காதல் மேல் நம்பிக்கை இல்லை.. நான் யாரையும் காதலிக்க மாட்டேன்” 

“ஏன்?” 

“அதை உன்னிடம் சொல்லணும்னு அவசியம் இல்லை” 

“நீ என்ன தான் சொன்னாலும் உன் மனதில் நான் இருக்கிறேன்னு எனக்கு தெரியும்” 

அவன் தோள் குலுக்களுடன், “உன் தவறான எண்ணத்திற்கு நான் பொறுப்பில்லை” என்றான் அலட்சியத்துடன். 

“நீ சொல்வது பொய் தான்.. சில மாதங்களுக்கு முன் ஒரே ஒரு முறை பார்த்த, யாருனே தெரியாத என்னை எப்படி மறக்காம இருந்த? நான் உன் மனதில் நிச்சயம் இருக்கிறேன்..

நீ கோபம் கொண்டால், லேசில் மலை இறங்குபவனா தெரியலை.. ஆனா என் விஷயத்தில் பல முறை உன் கோபம் சட்டென்று மறைந்து இருக்கிறது.. இல்லைனு பொய் சொல்லாத.. முதல் நாள் சேர்மன் அறையில் நான் கை ஓங்கியதும், உன் கண்ணில் கடும் கோபத்தை ஒரு நொடி பார்த்தேன்.. ஆனா அதுக்கு அப்புறம், நான் பேசியதும், என்னோட கலங்கிய குரலோ, வார்த்தையோ, ஏதோ ஒன்று உன் மனதை சட்டுன்னு மாத்திடுச்சு.. நான் வெளியே போகும் போது உன்னிடம் கோபம் இல்லை.. என்ன சரியா?” 

“அது………….” 

“நீ ஒத்துக்கலை என்றாலும் அது தான் உண்மை.. அப்புறம் கேன்டினில் ஒரு ஆசிரியரா உனக்கு என் மேல் கோபம் வந்தது தான், ஆனா அப்பவும் நான் பேசிய ஏதோ ஒன்றில் உன் கோபம் போய்விட்டது..

அப்புறம் ஹாஸ்டலில் என் இறுக்கம் தளர, என் மனதை திசை திருப்பிட்டு தான் கிளம்பின.. இப்படி பல இருக்கிறது” என்றவள் அவனது கண்களை ஆழ்ந்து நோக்கி,

“இன்னமும் உனக்கு என் மேல் விருப்பம் இல்லைனு பொய் தான் சொல்லப் போறியா?” என்று கேட்டாள். 

மூச்சை இழுத்து விட்டவன், “என் கோபத்தை பற்றி நீ சொன்னது சரி தான் ஆனா அதுக்கு நீ சொன்ன காரணம் தான் தவறு.. நான் சேர்மன் சார் டிரஸ்ட் மூலமா தான் படித்தேன்.. அதனால் அவரிடம் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்…………….” 

“ஸோ.. அவர் என் ரிலேடிவ் என்பதால் தான் நீ உன் விருப்பத்தை மறைக்கிற” 

“உளறாதே” 

‘நீ என்ன வேணா சொல்லிக்கோ’ என்ற அலட்சியத்துடன் அவள் இருக்க,

அவன், “நீ அவர் ரிலேடிவ் என்பதால் தான் உன் மேல் இந்த கரிசனம்னு சொல்றேன்.. மற்றபடி நீ நினைப்பது போல் இல்லை” என்றான். 

அவனை முறைத்தவள், “என்னை அவர் ரிலேடிவ்வா பார்க்காதே..” என்றாள். 

“அப்போ இந்த கரிசனம் கூட இருக்காது பரவா இல்லையா?” 

“அப்படிப்பட்ட கரிசனமே எனக்கு தேவை இல்லை.. இன்பாக்ட் எனக்கு உன் கரிசனம் தேவையே இல்லை.. அன்பு தான் தேவை.. அதுவும் எனக்கே எனக்கான தூய அன்பு.. என்னை திவ்யா என்ற தனி மனிஷியா மட்டும் பார்” 

சில நொடிகள் மௌனத்தில் கழிய,

கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டவள், “சரி.. உனக்கு என் மேல் விருப்பம் இல்லைனே வச்சிப்போம்………….” 

“அது தான் உண்மை” 

“சரி.. நீ என்னை விரும்பலை.. பரவா இல்லை.. என் காதலை நீ ஏற்றுக் கொள்” என்று அவள் அசராமல் கூற, அவன் மனதினுள் மலைத்துத் தான் போனான்.

அவன், “என் பொறுமையை நீ ரொம்ப சோதிக்கிற” என்றான். 

“இது கூட..” என்று ஆரம்பித்தவள் பின், “சரி விடு நீ ஒத்துக்க மாட்ட” என்றாள். 

“இங்கே பார்.. நான் உன் சார்.. சாரை ஸ்டுடென்ட் விரும்புறது தப்பு” 

“ஓ! அப்போ ஒரு வருஷம் கழித்து வந்து என் காதலை சொன்னா ஒத்துப்பியா! ஏன்னா அப்போ நீ என் சார் கிடையாதே” என்று நக்கலுடன் சிரித்தாள்.

அவன் அவளை முறைக்க, அவளோ அலட்டிக் கொள்ளாமல், “உருப்படியான காரணம் எதையாவது யோசித்து சொல்லுங்க பாஸ்.. ஆனா என்ன காரணத்தைச் சொன்னாலும் என் முடிவில் மாற்றம் இல்லை.. நான் இப்போ கிளம்புறேன்” என்றபடி எழுந்தாள். 

அவள் நடக்க ஆரம்பிக்கவும், அவன், “அமைதி விரும்பியான எனக்கு அடாவடியான உன்னை எப்படி பிடிக்கும்னு நினைக்கிற?” என்றான். 

“எதிர்வினை தான் ஈர்க்கும் பாஸ்” என்று அவள் அழகான புன்னகையுடன் தலை சரித்து கூறினாள்.

அவன், “டாப்பரான எனக்கு அரியர் வைத்திருக்கும் உன்னை எப்படி பிடிக்கும்?” என்று கேட்டான்.

அவள் புன்னகைக்கவும், அவன், “என்ன?” 

“இப்படி ஒரு மொக்கை ரீசனை சொல்றியே! அதுவும் புஸ்ஸுன்னு போகும் போது நீ என்ன சொல்லுவியோனு யோசித்தேன்..” 

அவன் அவளை முறைக்க,

“ஓகே ரிஷி கண்ணா நாளைக்கு பார்க்கலாம்.. பை” என்று கூறி கிளம்பியவள் மேஜை மீது இருந்த அவனது கைபேசியை எடுத்து, “எனக்கு புது மொபைல் நீ வாங்கி தரும் வரை இது என்னிடம் தான் இருக்கும்” என்று கூறி ஓடிவிட்டாள்.

“ஏய்” என்று அவன் கத்தியதை கேட்க அவள் அங்கே இல்லை.

இணைய காத்திருப்போம்…

குறிப்பு: அடுத்த பதிவு இன்று இரவு 7 மணிக்கு

Advertisement