Advertisement

விலகல் 18

அரவிந்தின் கேள்வியில் அதிர்ந்த ஹரீஷ், “வாட்?” என்று வினவினான்.

அரவிந்த் நிதானமான குரலில், “உன் மனதில் காதல் இல்லை என்றால் அதை நேரிடையா அவளிடம் சொல்ல வேண்டியது தானே” என்றான். 

“அவ நேரிடையா விருப்பத்தை சொல்லலை.. ஒரு கோட் கொடுத்து என்னை டிகிரிப்ட் பண்ண சொன்னா.. சரி அப்படியே தெரியாத மாதிரி இருந்து அவளை விலக்கிடலாம்னு நினைத்தேன்” 

“ஆனா அவளிடம் அது பலிக்கலை” 

“..” 

“நிஜமாவே உன் மனதில் அவள் மேல் விருப்பம் இல்லையா?” 

“இல்லவே இல்லை” 

“உனக்கு அவ மேல் சாப்ட் கார்னர் இல்லை?” 

“அதுவும் இதுவும் ஒன்றா?” 

“உன் மனதை நீயே………………..” 

“அவள் சேர்மன் சார் ரிலேடிவ்.. அதனால் அவ மேல் சாப்ட் கார்னர் இருக்குது.. அவ்ளோ தான்” 

“ஓ! இங்க வரதுக்கு முன்னாடியே அவ சேர்மன் சார் ரிலேடிவ்னு தெரியுமா?” 

“தங்ககுமார் சார் சொல்லி தானே தெரியும்” 

“இங்கே வந்த பிறகு தான் அவ மேல் உனக்கு சாப்ட் கார்னர் வந்ததா?” 

“ஆ..மாம்” 

அரவிந்த் மெல்லிய புன்னகையுடன், “ஆல் தி பெஸ்ட்” என்றான்.

“எதுக்கு?” 

“திவ்யாவை சமாளிக்க” 

ஹரீஷ் முறைக்க, அரவிந்த், “சும்மாவே புத்திசாலியான அவளை சமாளிக்கிறது கஷ்டம்.. இதுல நீ உன் மனதுடன் வேற போராடனும்.. உன் மனதுக்கு எதிரா செயல் பட்டு அவளை விலக்க முயற்சிக்கணும்” என்றான். 

ஹரீஷ் சிறு கோபத்துடன், “லூசு மாதிரி உளறாதே.. நான் தான் என் மனதில் எதுவும் இல்லைனு சொல்றேனே!” என்றான். 

“என்ன தான் நீ இல்லைனு சொன்னாலும் என்னால் அதை ஒத்துக்க முடியலை.. அதுக்கு காரணம் உன் நடவடிக்கை தான்.. நிறைய சொல்லலாம், எதையும் நீ ஏற்றுக்கொள்ள போறது இல்லை ஸோ அதை விடு..

என் யூகம் என்னனா, திவ்யா சேர்மன் சார் ரிலேடிவ்னு தெரிவதற்கு முன்னாடியே அவ உன் மனதினுள் நுழைந்து இருக்கணும்.. சேர்மன் சார் ரிலேடிவ் என்பது மட்டுமில்லாம அவ கோடீஸ்வரினு நான் சொன்னதும் சேர்ந்து உன்னை ஆஃப் பண்ணி இருக்கணும்..

ஆல் ரைட், எப்போ உன் கூட்டை விட்டு நீ வெளியே வரனு பார்க்கிறேன்” என்றவன் மெல்லிய புன்னகையுடன்,

“நீயா வெளியே வந்துட்டா சேதாரம் கம்மியா இருக்கும்.. திவ்யா உன்னை வெளியே கொண்டு வந்தா!!!” என்று நிறுத்தி சிரித்தான்.

ஹரீஷ் ஏதோ சொல்ல போக,

அரவிந்த், “நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. நான் உன் பதிலை கேட்கலை.. என் மனதில் உள்ளதை சொன்னேன்.. அவ்ளோ தான்.. நான்கு நாட்கள் தான் என்றாலும், உன்னை நான் சரியா தான் புரிந்துக் கொண்டு இருக்கிறேன்னு நினைக்கிறேன்” 

ஹரீஷ் அமைதியாக இருக்கவும்,

அரவிந்த், “இதை பற்றி திவ்யா கிட்ட நான் எதுவும் சொல்ல மாட்டேன்.. இனி நான் ஒரு பார்வையாளன் மட்டுமே.. வா போகலாம்” என்று கூறி அவனை அழைத்துச் சென்றான்.

அன்று ஹரீஷிற்கு திவ்யாவின் வகுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால் இருவரும் பேசிக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போனது. அவள் இரண்டு முறை அவனை பார்த்தபடியே ஆசிரியர் அறையை கடந்து சென்றாள் தான் ஆனால் இவன் அவளை கண்டுகொள்ளவில்லை.

மாலை அவள் கிளம்பிய போது ஆசிரியர் அறையில் வேறு சில ஆசிரியர்கள் இருக்கவும் அமைதியாக கிளம்பிவிட்டாள்.

 

     

      அடுத்த நாள் அவள் சீக்கிரம் வர, அவனோ வேண்டுமென்றே தாமதமாக வந்தான். அவள் அவனை முறைத்துவிட்டு வகுப்பை நோக்கி சென்றாள்.

அன்று வகுப்பிற்கு சென்றவன் வருகை பதிவேடை முடித்துவிட்டு திவ்யாவை பார்த்து, “இம்போசிஷன் எங்கே?” என்று கேட்டான். 

அவள் எழுந்து நின்று, “டென் டைம்ஸ் எழுத சொன்ன நீங்க, என்னைக்கு கொண்டு வரணும்னு சொல்லலையே சார்” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.

அவன் அவளை முறைத்தபடி, “நாளைக்கு கொண்டு வந்திருக்கணும்” என்றான். 

புன்னகையுடன், “ஓகே சார்” என்று கூறி அமர்ந்தாள்.

அதான் பிறகு அவன் வகுப்பை தொடங்க, அவள் அவனை ரசிக்கத் தொடங்கினாள்.

ஹரீஷ், “திவ்யா” என்று அழைத்து நடத்தியதில் இருந்து பல கேள்விகளை கேட்க, அவளோ அசராமல் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறினாள்.

அவன் சிறு யோசனையுடன் பார்க்க, அவளோ புன்னகையுடன் அவனைப் பார்த்து புருவம் உயர்த்தினாள்.

அவன் கடுப்புடனும் சிறு கோபத்துடனும், “சிட் டவ்ன்” என்றான்.

அதான் பிறகு அவளது செய்கையை(அதாங்க சைட் அடிப்பதை) பல்லை கடித்து பொறுத்துக் கொண்டு பாடத்தை நடத்தினான்.

அவன் வகுப்பு முடிந்து சென்றதும், பவித்ரா, “எப்படி டி?” என்று கேட்டாள். 

தனது சல்வாரில் இருந்த காலரை தூக்கிவிட்டபடி, “திவ்யா யாரு!” என்றவள், “இன்னைக்கு என்ன எடுப்பானோ அதை நேத்தே படிச்சிட்டேன்” என்று கூறி கண்சிமிட்டினாள்.

அடப் பாவி”

 

 

      அடுத்து வந்த சில தினங்கள் இப்படியே கழிந்தது. அதாவது ஹரீஷ் காலையில் சற்று தாமதமாக வந்து தனிமையில் அவளிடம் சிக்கவில்லை. அதை போல் இவளும் அவனது கேள்விகளில் சிக்கவில்லை.

ஆனால் அவளை கண்டுக்கொண்ட ஹரீஷ் ஒரு நாள் இரண்டு தலைப்புகளை விட்டுவிட்டு வேறு தலைப்பை நடத்தினான். அதை கவனிக்காமல் அவனை கவனித்துக் கொண்டிருந்தவள் அவனது கேள்வியில் திருதிருவென்று முழித்தாள்.

அவன் உதட்டோர புன்னகையுடன், “கெட் அவுட்” என்றான்.

அவளோ அவனை கடக்கும் பொழுது சன்ன குரலில், “வெளியனா சைட் அடிக்க இன்னும் வசதி” என்று கூறிவிட்டு சென்றாள்.

அவன் அவளை முறைத்துவிட்டு பாடம் நடத்துவதை தொடர்ந்தான்.

வகுப்பு முடிந்து வெளியே செல்லும் போது அவன் வாய் திறக்க போக,

அவள் புன்னகையுடன்,. ”நாளைக்கு இதை டென் டைம்ஸ் எழுதிட்டு வரணும்.. அதானே!” என்றாள்.

“இல்லை.. நாளைக்கு டுவென்டி டைம்ஸ் எழுதிட்டு வா” என்று கூறிவிட்டு வெளியேறினான்.

 

இப்படியே இருவருக்கும் இடையே சின்ன சின்ன சீண்டல்களுடன் நாட்கள் நகர்ந்தது.

இதற்கிடையில் இரண்டு முறை ஜனனி திவ்யாவைப் பார்த்து பேச முயற்சித்து தோல்வியைத் தழுவி இருந்தாள்.

 

 

ன்று மாலை திவ்யா விடுதிக்கு சென்றுக் கொண்டிருந்த போது, “ஹாய் அக்கா” என்றபடி புன்னகையுடன் இவள் முன் ஜனனி வந்து நின்றாள்.

இவள் கண்டுக் கொள்ளாமல் நடக்க,

ஜனனி, “அம்மா மேல் உனக்கு என்ன கோபம்?” என்று கேள்வி கேட்டாள். 

இவள் இறுக்கத்துடன் நடந்து கொண்டே இருக்கவும், ஜனனி ஓடி சென்று இவள் வழியை மறித்து நின்றபடி, “எனக்கு இன்னைக்கு தெரிந்தே ஆகணும்” என்று உறுதியான குரலில் கூறினாள். 

ஒரு நொடி அவளை ஆழ்ந்து பார்த்த திவ்யா உணர்சிகளற்ற குரலில், “பிறந்ததில் இருந்தே அம்மா அப்பா பாதுகாப்பில் வளரும் உன்னால் என் உணர்வுகளை புரிந்துக் கொள்ள முடியாது.. என் வழியை விடு” என்றாள். 

“உனக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும் முன்னாடியே நீ வீட்டில் அம்மா அப்பா கூட தானே வளருற” 

“அதாவது நானும் நீயும் ஒரே மாதிரி சூழலில் தான் வளர்ந்தோம்னு சொல்ற?” 

“ஹ்ம்ம்” 

“ஓ! உன் பதினைந்தாவது வயதில், நீ தத்தெடுத்தபட்டவள்னு வந்து யாரும் உன்னிடம் சொன்னாங்களா?” 

ஜனனி வார்த்தைகளின்றி ‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்டினாள்.

“இல்லை தானே.. அப்போ மூடிட்டு போ” என்றுவிட்டு இவள் நடக்க ஆரம்பிக்க,

அவளது கையைப் பிடித்து நிறுத்திய ஜனனி, “அப்பாவை ஏத்துக்க முடிந்த உன்னால் என்னை ஏன் ஏத்துக்க முடியலை?” என்று கேட்டாள். 

தனது கையை வேகமாக உதறியவள், “நான் யாரையும் ஏற்றுக் கொள்ளவில்லை” என்றுவிட்டு நடக்க தொடங்கினாள்.

ஜனனி சிறிது கலங்கிய குரலில், “எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் தெரியுமா! நீ என் அக்கானு தெரிந்த நாளில் இருந்து எனக்கு எது வாங்கினாலும் உனக்கும் சேர்த்து தான் வாங்குறேன் தெரியுமா? நான் சாப்பிடும் போது கூட உனக்கு தனியா ஒரு ப்ளேட் எடுத்து வைச்சிட்டு தான் சாப்பிடுவேன்..” என்றாள். 

ஒரு நொடி நடையை நிறுத்திய திவ்யா அடுத்த நொடியே வேகமாக நடந்தாள். 

“எனக்கு என் அக்கா வேணும்” என்ற ஜனனியின் தவிப்பு நிறைந்த குரல் தன்னை பலவினபடுத்துவதை உணர்ந்து இன்னும் வேகமாக விடுதி நோக்கி சென்றாள்.

அறைக்கு சென்று கதவை சாற்றி அதன் மீது சாய்ந்து நின்றவளின் மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

 

 

 

அதே நேரத்தில் ராஜாராம் அறைக்கு சென்ற ஜனனி சோர்ந்து போய் அவர் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

அவளுக்கு அருந்த நீரை கொடுத்த ராஜாராம், “என்னடா?” என்று கேட்டார். 

“அக்கா நம்மை ஏற்கவே மாட்டாளா பா?” 

“திவிமா என்ன சொன்னா? ஏன் சோர்ந்து போய் இருக்கிற? இது உன் குணம் இல்லையே!” 

“ச்ச்.. என்னை விட அக்கா ரொம்ப பிடிவாதக்காரியா இருக்காளே ப்பா!” 

“நீ விக்கரமாதித்தனை தொடர்ந்த வேதாளத்தை போல் இருக்க வேண்டாமா?” 

“சைக்கிள் கேப்பில் என்னை வேதாளம்னு சொல்றீங்க” என்று அவள் செல்லமாக முறைக்கவும்,

ராஜாராம் புன்னகையுடன், “ஜனா இஸ் பேக்” என்றார்.

“அக்கா ரொம்ப பாவம் பா.. அந்த லேடி இப்படி உண்மையை போட்டு உடைச்சிருக்க வேணாம்.. அம்மாவும் அடுத்த உண்மையை சொல்லி இருக்க வேணாம்.. நீங்களாவது அம்மாவை தடுத்து இருக்கலாம்” 

“சூழ்நிலை அப்படிடா..” 

“அப்படி என்ன சூழ்நிலை?” என்று கோபத்துடன் வினவினாள்.

“சாருலதாவும் ராகவனும் அவளை தத்தெடுத்த உண்மையை அவளோட சித்தி பார்வதி மூலம் தெரிந்ததும், அவ காணாம போய்ட்டா டா.. நானும் அம்மாவும் எப்படி துடிச்சோம் தெரியுமா! ஒரு வழியா அவளை தேடி கண்டுபிடிச்சோம்.. ஒரு அநாதை ஆசிரமத்தில் இருந்தா..

ராகவன் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போனதும், நாங்க அங்கே போனோம்.. இனி அவனிடம் திவிமா இருப்பது நல்லதில்லைனு தான் எங்களுடன் கூட்டிட்டு வர முடிவுடன் உண்மையை சொல்லி கேட்டோம்.. அப்போ அம்மாவுக்கும் ராகவனுக்கும் சில வாக்குவாதம் நடந்தது.. அதை எல்லாம் திவிமா கேட்டுட்டு இருந்தது எனக்கு தெரியாது.. தெரிந்து இருந்தால் அம்மாவை தடுத்து இருப்பேன்..” என்று வேதனையுடன் கூறியவர் ஒரு நொடி கண்களை மூடி திறந்து,

“திடீர்னு யாரோ கீழே விழும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தா, அங்கே திவிமா கீழே கிடந்தாள்.. கண் முழித்த திவிமா யாருடனும் பேசவே இல்லை.. நானும் அம்மாவும் பேச முயற்சித்தபோது தடுத்தவள் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்..” 

“என்னப்பா கேட்டா?” 

“உன் வயதை கேட்டாள்.. அதை சொன்னதும் ‘எல்லோரும் வெளியே போங்க.. எனக்கு யாரும் வேணாம்.. என்னை தனியா விடுங்க’ னு கத்தினா..

ராகவன் குட்டிமானு கூப்பிட்டதும் அவனை வெறுப்புடன் பார்த்தவள் கலங்கிய கண்களுடன் ‘ஐ ஹெட் யூ’ னு சொன்னா.. எனக்கு தெரிந்து அது தான் அவனிடம் அவ கடைசியா பேசியது..” 

“அந்த ஆளுக்கு தேவை தான்” என்று வெறுப்புடன் கூறினாள்.

“அப்புறம் ரெண்டு வருஷம் வேறு வழியே இல்லாம அவன் வீட்டில் இருந்தாலும் அவ யாருடனும் பேசலை..

அவ மன அழுத்தம் தாங்காம கிளாஸ் டெஸ்ட்டில் பெயில் ஆனது தெரிந்ததும், நான் ஸ்கூலில் அவளை தனியா பார்த்து பேசினேன்.. என்னை பார்க்க மறுத்தவளை ஸ்கூல் பிரின்சிபால் உதவியுடன் பார்த்து பேசினேன்..

அவளோட மனநிலையை நான் சரியா கணித்து, அவ போக்கில் போய் பேசவும், என் மேல் சின்ன நம்பிக்கை அவளுக்கு வந்தது.. அவள் ஒத்துக்கலை என்றாலும் இலை மறை காயாக அவளுக்கு என் மேல் பாசம் இருப்பது எனக்கு தெரியும்.. எனக்கு தெரியும்னு அவளுக்கும் தெரியும்.. அவளை நல்ல தெரிந்ததால், இன்று வரை அதை பற்றி நான் பேசியது இல்லை..

அப்புறம் தியான கிளாஸ்ஸில் சேர்ந்து படிப்பில் கவனத்தை திருப்பினா.. ராகவனை வெறுப்பேத்தும் ஒரே காரணத்துக்காக இங்கே இஞ்சினீரிங் சேர்ந்தாள்” 

“எதுக்கு ஒவ்வொரு செம்மிலும் ஒரு பேப்பர் அரியர் வைக்கிறா?” 

“அது அவ டுவேள்த்தில் ஸ்டேட் ரேங்க் வந்தப்ப ராகவன் ரொம்ப சந்தோஷப்பட்டான்.. அவ லெவன்த்தில் கிளாஸ் டெஸ்ட்டில் பெயில் ஆன போது ரொம்ப பீல் பண்ணியிருப்பான் போல.. ஸோ வேணும்னே இப்படி பண்றா” 

“இதனால் அவ எதிர்காலம் தானே பாழாகுது!” 

“என்ன பண்றது!!! பதினேழு வயதில் கோபத்தில், வெறுப்பில் எடுத்த முடிவை இன்னும் பிடிச்சிட்டு தொங்குறா..” 

“ஹ்ம்ம்.. ஆனாலும் பதினைந்து வயது சின்ன பெண் இந்த கொடிய இரண்டு உண்மைகளை எப்படி தாங்கியிருப்பாள்?” 

“அதனால் தான் நான் அவ போக்கிலேயே போறேன்.. பார்க்கலாம்” என்று பெருமூச்சை வெளியிட்டார்.

Advertisement