Advertisement

விலகல் 17

சைமன் வேகமாக கல்லூரி உணவகம் நோக்கி சென்றுக் கொண்டிருக்க, அவன் கூடவே வந்த அவனது நண்பன், “நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம எங்கடா போற?” என்று கேட்டான். 

“இப்போ என்ன தெரியனும் உனக்கு?” 

“ரெண்டு நாளா ஏன் காலேஜ் வரலை? நான் போன் பண்ணப்பவும் எடுக்கலை!” 

“அப்புறம் சொல்றேன் இப்போ அமைதியா வா” 

“இப்போ எதுக்கு கேன்டீன் போற?” 

“பவித்ரா உள்ளே போறதை பார்த்தேன்” 

“டேய் என்னடா பண்ணப் போற? இப்போ எதுவும் பிரச்சனை வேண்டாம்.. சொன்னா கேளுடா……….” 

“மூடிட்டு வா டா” என்றபடி திவ்யா பவித்ரா மற்றும் விஜய் அமர்ந்திருந்த மேஜை அருகே சென்றவன் பவித்ரா முன் நின்றான்.

நிமிர்ந்து பார்த்த பவித்ரா சைமனை பார்த்ததும் சிறு பயத்துடன் தன் அருகே அமர்ந்திருந்த தோழியின் கையைப் பற்றினாள்.

சைமன் பவித்ராவிடம், “அன்னைக்கு நான் பேசியது, நடந்துக்கிட்டது தப்பு தான்.. சாரி” என்றான்.

பவித்ரா அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, சைமனின் நண்பனும் அதிர்ச்சியுடன் தான் நின்றிருந்தான். ஆனால் திவ்யாவும் விஜயும் அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் ஆராய்ச்சி பார்வையை பொருட் படுத்தாத சைமன் இருவர் முகத்தையும் பார்க்காமல் பொதுவாக, “சாரி” என்றான்.

பின் திவ்யாவின் முகத்தை பார்த்து, “இதனால் நமக்கிடையே எல்லாம் சரியானதா அர்த்தம் இல்லை” என்று கூறியவன் அவள் பதிலை எதிர் பார்க்காமல் வெளியேறினான்.

சைமனின் நண்பன், “என்னடா நடக்குது?” என்று வினவினான். 

“அப்பா என்கிட்ட தனியா பேசினார்.. அவர் யாரிடமும் மன்னிப்பு கேட்டு நான் பார்த்தது இல்லை.. ஆனா என்னிடம் கேட்டார்டா..

சேர்மன் சார் அப்பா கிட்ட பேசியிருக்கார்.. எல்லாத்தையும் சொல்லியிருக்கார்.. அப்பா என்னை திட்டவே இல்லை.. பிஸ்னஸ் பின்னாடி போய் என்னை கவனிக்க தவறியதா பீல் பண்ணி சாரி கேட்டார்..

அவர் ஒன்னே ஒண்ணு தான்டா சொன்னார்.. ‘நீ ஏதோ தப்பா பேசியிருக்கனு தெரியும், ஆனா அது என்னனு நான் தெரிந்துக்க விரும்பலை.. ஒன்னே ஒண்ணு சொல்றேன்.. நீ பேசியதை வேறு ஒருவன் உன் தங்கையிடம் பேசியிருந்தால் நீ என்ன செய்திருப்பனு யோசி.. அதுவே நீ பேசியது சரியா தப்பானு சொல்லிடும்.. இனி எதுவா இருந்தாலும் அப்பாவிடம் மனசு விட்டு பேசு.. அப்பா எப்பவும் உன் கூடவே தான் இருப்பேன்’ னு சொல்லி என் தோளை தட்டி கொடுத்துட்டு போயிட்டார்”

‘இதை தானே நானும் சொன்னேன்’  என்று மனதினுள் நினைத்த அவனது நண்பன், “சூப்பர்டா..” என்றுவிட்டு, “ஆனா திவ்யாவும் விஜயும் நம்பியது போல் தெரியலை” என்றான். 

“அவங்க நம்பனும்னு எனக்கு அவசியம் இல்லை.. என் மனசாட்சி படி நான் நடந்துகிட்டேன்.. அவ்ளோ தான்.. சரி இந்த ரெண்டு நாள் என்னென்ன நடந்தது?” என்று பேச்சை மாற்றியவன் பேசியபடியே வகுப்பறைக்கு சென்றான்.

 

 

அங்கே உணவகத்தில் விஜய், “ஏதோ பெருசா பிளான் பண்றானோ?” என்று சந்தேகத்துடன் கேட்டான். 

“நம்ம கிட்ட வேண்டா வெறுப்பா சாரி சொன்னாலும் பவி கிட்ட உண்மையா கேட்டது போல் தான் இருந்துது.. ஆனா அவனை நம்பவும் முடியாது.. பார்க்கலாம்” என்ற திவ்யா, “சீக்கிரம் சாப்பிடு.. கிளாஸ் போகலாம்” என்றாள். 

விஜய், “நீயா கிளாஸ் போக இவ்ளோ ஆர்வம் காட்டுற!” என்றான். 

“முதல் பிரியட் என் ஆளோடதாச்சே!” என்று கூறி கண்சிமிட்ட,

புன்னகையுடன், “அதானே பார்த்தேன்” என்றவன் பவித்ராவை, “ஹே சுண்டைக்கா என்ன அமைதியா இருக்கிற!” என்று சீண்டினான். 

விஜய் நினைத்தது போல் பவித்ரா அவனை முறைப்புடன், “போடா டம்மி பீஸ்” என்றாள்.

“என்னைச் சொல்றதுனா மட்டும் வாய் எட்டூருக்கு நீளும்” 

“வே..வே..வே” என்று அவனுக்கு அழகு காட்டினாள்.

அதன் பிறகு மூவரும் வகுப்பிற்கு சென்றனர்.

அவர்கள் சென்ற சில நொடிகளில் வகுப்பு தொடங்குவதற்கான மணி அடிக்கவும் ஹரீஷ் உள்ளே வந்தான்.

வருகை பதிவேடை முடித்துவிட்டு அவன் பாடத்தை தொடங்கினான். அவன் சுவாரசியமாக நடத்திக் கொண்டிருக்க, திவ்யாவோ மிக சுவாரசியமாக கன்னத்தில் கைவைத்தபடி அவனை ரசித்துக் கொண்டிருந்தாள்.

ஹரீஷ் மறந்தும் அவள் பக்கம் திரும்பவில்லை ஆனால் அவளது பார்வையை உணர்ந்தவன் ஐந்து நிமிடத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அவள் முகம் பார்க்காமல், “திவ்யா கெட் அவுட்” என்றபடி கரும்பலகையில் எழுத தொடங்கினான்.

சிலிர்த்துக் கொண்டு எழுந்த திவ்யா, “எதுக்கு? நான் ஏன் வெளியே போகணும்?” என்றாள்.

அவன் திரும்பி அவளை முறைக்க, அவளோ முறைப்புடன், “நான் என்ன பண்ணேன்?” என்று வினவினாள். 

“வகுப்பை கவனிக்காமல் கனவு கண்டுட்டு இருந்த” 

“நான் கனவில் இருந்தேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்க தான் என்னை பார்க்கவே இல்லையே!” 

அவளை இன்னும் அதிகமாக முறைத்தவன் தற்போது நடத்தியதில் இருந்து சில கேள்விகளை கேட்டான்.

அவள் சமாளிப்பாக சில பதில்களை சொன்னாலும், அவன், “கெட் அவுட்” என்றான்.

“நான் தான் பதில் சொல்லிட்டேனே!” 

“எல்லாத்துக்கும் பதில் சொன்னியா?” 

“அது.. ஆனா தப்பா சொல்லலையே” 

அவளை ஒரு நொடி தீர்க்கமாக பார்த்தவன் பின் சுண்ணத்துண்டை வைத்துவிட்டு வெளியே செல்ல போகவும், இவள் அவசரமாக வெளியே சென்று நின்றாள்.

அவள் வெளியே சென்றதும் அவன் உதட்டோர புன்னகையை மறைத்துக் கொண்டு அவளைப் பார்க்க, அவளோ அவனுக்கு மட்டும் தெரியும் படி சுவற்றிற்கு பின் சற்று மறைவாக நின்று கொண்டு அவனுக்கு அழகு காட்டினாள்.

அவன் அவளை முறைத்துவிட்டு உள்ளே சென்று வகுப்பைத் தொடர்ந்தான்.

விஜய் அருகே அமர்ந்திருந்தவன், “என்ன டா அதிசியம் எல்லாம் நடக்குது!” என்றான். 

“ஏன்?” 

“தப்பு செய்யாம இவ வெளியே போறா! அதுவும் சார் போனால் போகட்டும்னு விடாமல் இவ அவருக்கு முன் வெளியே போறா!” 

“நம்ம கருத்து சொன்னா செய்ய மாட்டாளா?” 

“இருந்தாலும்” என்று அவன் இழுக்க,

“மூடிட்டு கிளாஸ்ஸை கவனி, இல்லை உன்னையும் வெளியே அனுப்பிடுவார்” 

அதற்கு ஏதோ சொல்ல போனவன் ஹரீஷ் பார்வை இவர்கள் பக்கம் திரும்பவும் அமைதியாக இருந்தான்.

வகுப்பு முடிந்து ஹரீஷ் வெளியேற, இவள் உள்ளே சென்றபடி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், “ரிஷிகேஷ் ரொம்ப பண்ற” என்று முணுமுணுத்தாள்.

நடையை நிறுத்தி அவளைப் பார்த்தவன், “இன்னைக்கு நடத்தியதை டென் டைம்ஸ் எழுதிட்டு வா” என்றுவிட்டு செல்ல, இவள் கோபத்துடன் இடத்தில் அமர்ந்தாள்.

பவித்ரா அருந்த தண்ணீரை கொடுக்க, இவளோ முறைப்புடன், “ரொம்ப பண்றான்டி” என்றாள். 

“எனக்கு அப்படி ஒன்றும் தெரியலை” 

“என்ன தெரியலை? வேணும்னு என்னை கண்டுக்க மாட்டிக்கிறான்.. நான்  பதில் சொல்லியும் வெளியே போக சொன்னது மட்டுமில்லாம இம்போசிஷன் எழுதிட்டு வர சொல்றான்” 

“நீ ப்ரொபோஸ் பண்ணாமல் இருந்து இருந்தால் எல்லோரையும் போல் உன்னையும் இயல்பா பார்த்திருப்பாரோ என்னவோ!” 

சட்டென்று கோபம் நீங்கி புன்னகையுடன், “ஸோ நான் அவனை டிஸ்டர்ப் பண்றேன்” என்றாள். 

“அப்படியும் சொல்லலாம், இல்லை உன் நடவடிக்கை பிடிக்காமல் உன்னை தவிர்ப்பதாக கூட இருக்கலாம்” 

“அவனே என் காதலை ஏத்துக்கிட்டாலும் நீ விட மாட்டடி” 

பவித்ரா தவிப்புடன் சிறிது கலங்கிய குரலில், “என்னடி இப்படி சொல்ற!” என்றாள். 

“பவி செல்லம் நோ பீலிங்க்ஸ்.. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” 

அப்பொழுது ‘பவித்ரா’ என்ற ஆசிரியரின் அழைப்பில் திடுக்கிட்டு எழுந்து நின்றாள்.

தங்ககுமார், “அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது என்ன அரட்டை? சிட் டோவ்ன்” என்றார்.

“சாரி சார்” என்றுவிட்டு அமர்ந்தாள்.

திவ்யா, “வர வர.. உன்னை ரொம்ப மிரட்டுறான்.. என்னை திட்ட தைரியம் இல்லாம உன்னை திட்டுறான்.. இரு இன்னைக்கு இருக்குது இவனுக்கு” 

“சும்மா இருடி.. எந்த வினையையும் கூட்டாத” 

“இவனை வேற மாதிரி டீல் பண்றேன்” 

“என்னடி பண்ணப் போற?” 

“வெயிட் அண்ட் ஸீ பேபி” என்றாள்.

 

தங்ககுமார் பாடம் நடத்த ஆரம்பித்த பத்து நிமிடங்கள் கழித்து சந்தேகம் என்று கேள்வி கேட்க ஆரம்பித்த திவ்யா கேள்விகளால் அவரை திணற திணற அடித்தாள். அவளது அறிவுபூர்வமான கேள்வி ஒன்றிற்கு கூட அவரால் பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கி நின்றார்.

வகுப்பு முடிவதற்கான மணி அடிக்கவும், அவர் விட்டால் போதுமென்று பேயை கண்டது போல் ஓடிவிட்டார்.

தங்ககுமார் இடத்தில் அமர்ந்து தண்ணீர் குடித்த வேகத்தை பார்த்து அரவிந்த், “என்னாச்சு சார்?” என்று கேட்டான். 

“அந்த திவ்யா கேள்வி கேட்டு தொலைச்சு எடுத்திட்டா சார்” 

ஹரீஷ், “அப்படி என்ன கேட்டாள்?” 

தங்ககுமார், “சப்ஜெக்டில் தான் கேட்டா” 

ஹரீஷ் ‘அப்புறம் என்ன! பதில் சொல்ல வேண்டியது தானே!’ என்பது போல் பார்க்க, அரவிந்த் சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

ஹரீஷ் கண்ணசைவில் அரவிந்திடம் ‘என்ன?’ என்பது போல் கேட்க,

அவனும் ‘அப்புறம் சொல்றேன்’ என்று செய்கையில் சொல்லிவிட்டு தங்ககுமாரிடம், “அவளிடம் என்ன வம்பு பண்ணீங்க?” என்று கேட்டான். 

தங்ககுமார், “நான் ஒண்ணுமே பண்ணலை சார்” என்று பரிதாபக் குரலில் கூற,

அரவிந்த், “விஜய் இல்லை பவித்ராவை திட்டுனீங்களா?” என்று கேட்டான். 

“அது” என்று இழுத்த தங்ககுமார், “ஆனாலும் இது டூ மச் சார்.. ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்க.. அதான் பவித்ராவை எழுப்பி திட்டினேன்.. அதுக்காக இப்படியா சார்! நானும் எவ்ளோ நேரம் தான் எல்லாம் தெரிந்த மாதிரியே நடிக்கிறது!” என்றார். 

‘உனக்கு எதுவும் தெரியாதுனு எல்லோருக்கும் தெரியும்’ என்று மனதினுள் நினைத்த அரவிந்த், “சரி விடுங்க சார்.. இனி பார்த்து நடந்துக்கோங்க” என்றான். 

“கால கொடுமை சார்” என்று புலம்பியபடி எழுந்து வெளியே சென்றார்.

ஹரீஷ் இப்பொழுது அரவிந்தை பார்க்க, அவன் சன்ன குரலில், “இவர் ஒரு டம்மி பீஸ் டா.. புக்கில் உள்ளதை மக்கடிச்சிட்டு போய் சொல்லுவார்.. நடுவில் கூப்பிட்டாலே, ரோபோ ஷங்கர் மாதிரி ஆறு மணினு திரும்ப முதலில் இருந்து தான் ஆரம்பிப்பார்.. இவரிடம் போய் கேள்வி கேட்டால்! அதுவும் டார்கெட் பண்ணி கேட்டால்!” என்று கூறி சிரிக்க, ஹரீஷின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

அதே நேரத்தில் மனதினுள் ‘உன் திறமை எல்லாம் இந்த மாதிரி டம்மி பீஸ் கிட்ட தானா!’ என்று திவ்யாவிடம் மானசீகமாக கூறினான்.

 

 

      அடுத்த நாள் காலையில், முன் தினம் போல் திவ்யா நேராக ஆசிரியர் அறை நோக்கி சென்றாள்.

“குட் மார்னிங் ரிஷி” என்ற அவளது உற்சாக குரலில் நிமிர்ந்த ஹரீஷ்,

“உன் மனதில் என்ன நினைச்சிட்டு இருக்க?” என்றான் முறைப்புடன். 

“அதை தான் அந்த கோடில் சொல்லிட்டேனே!” 

“எனக்கு அது தெரியாது” 

இரு கைகளையும் அவனது மேஜையில் ஊன்றி அவன் கண்களை ஆழ்ந்து நோக்கியவள், “உண்மையா நீ கண்டு பிடிக்கலையா?” என்று கேட்டாள். 

“..” 

“உன் மௌனமே சொல்லுது நீ கண்டுபிடிச்சிட்டனு” 

அவன் பல்லை கடித்துக் கொண்டு, “காலையில் வந்து இம்சை பண்ணாமல் கிளம்பு” என்றான். 

“இந்த இம்சை என்றும் தொடரும் இம்சை ரிஷி கண்ணா” 

“ஏய்!” என்றபடி அவன் கையை ஓங்க, அவளோ சிறிதும் பயமின்றி சற்றும் நகராமல் அவனைத் தீர்க்கமாக பார்த்தாள்.

“ச்ச்” என்று எரிச்சலுடன் கையை இறக்கியவன், “உனக்கெல்லாம் மண்டையில் மூளையே இல்லையா? என்னை தொந்தரவு செய்யாமல் கிளம்பு” என்றான். 

“எனக்கு பதில் சொல்லு, நான் கிளம்புறேன்” 

“என்ன பதிலை சொல்லணும்?” என்றபடி அரவிந்த் உள்ளே வர திவ்யா நேராக நின்றபடி,

“குட் மார்னிங் சார்” என்றாள். பின் ஹரீஷை ஓரப்பார்வை பார்த்தபடி, “நான் இவரிடம் ஒண்ணு சொன்னேன் சார்.. அதுக்கு பதிலை கேட்டால் சொல்ல மாட்டிக்கிறார்” என்றாள். 

ஹரீஷ் பல்லை கடித்துக் கொண்டு அவளை முறைக்க, அவளது உதட்டின் ஓரம் புன்னைகை அரும்பியது.

இருவரின் முகபாவனையும் பார்த்த அரவிந்த், “கேள்வி கேட்டால் தானே பதில் சொல்ல முடியும்.. நீ ஏதோ சொன்னதா தானே சொன்ன!” என்றான். 

“இது அப்படி தான் சார்” 

“ஓ!” என்றவன் இருவரின் முகத்தையும் ஆராய்ந்தபடி, “சரி என்னிடம் சொல்லு, நான் பதில் சொல்றேன்” என்றான்.

“ஐயோ சார்!” என்று திவ்யா அலற, ஹரீஷ் வாய்விட்டு சிரித்தான்.

தன்னவனின் சிரிப்பை இமைக்க மறந்து ரசித்துக் கொண்டிருந்த திவ்யா மற்றொரு ஆசிரியர் உள்ளே வரவும், “ஓகே சார் நான் கிளாஸ்க்கு போறேன்” என்று கூறி மனமே இல்லாமல் கிளம்பினாள்.

உள்ளே வந்த ஆசிரியர் ஹரீஷை பார்த்து, “என்ன சார் சிரிப்பு சத்தம் பலமா இருக்குது! என்ன விஷயம்?” என்று கேட்டார். 

ஹரீஷ் சிரிப்பை அடக்க முயற்சித்தபடி, “அரவிந்த் ஒரு ஜோக் சொன்னான்.. அதான் சிரித்தேன்” என்றான். 

அவர் ஆர்வத்துடன், “அப்படி என்ன ஜோக் அரவிந்த்?” என்று அரவிந்திடம் கேட்டார். 

அரவிந்த் ஹரீஷை முறைத்தபடி, “நீங்க வேற சார்! அவன் சும்மா கிண்டல் பண்றான்” என்றான். 

“ஆக மொத்தம் ரெண்டு பேரும் அந்த ஜோக்கை சொல்லப் போறது இல்லை” என்று அவர் கூற,

அரவிந்த், “நிஜமாவே எந்த ஜோக்கும் இல்லை சார்” என்றான். 

“அப்புறம் ஏன் ஹரீஷ் சார் அப்படி சிரித்தார்?” 

“அதை அவனிடம் கேளுங்க” என்றபடி அவன் எழுந்து செல்ல,

ஹரீஷ் அவர் கேள்வி கேட்கும் முன், “அரவிந்த்” என்று அழைத்தபடி எழுந்து சென்றான்.

அந்த ஆசிரியர் தோள் குழுக்களுடன் அவரது வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

 

 

கல்லூரி உணவகத்தில் இரண்டு காபியை வாங்கிக் கொண்டு அமர்ந்த அரவிந்த் ஒன்றை ஹரீஷிடம் கொடுத்தான்.

அதை பருகியபடி அரவிந்த், “இப்போ சொல்லு.. உனக்கும் திவ்யாவிற்கும் நடுவில் என்ன?” 

“ஒன்றுமில்லை” 

அரவிந்த் முறைக்கவும், ஹரீஷ், “நிஜமாவே என்னை பொறுத்தவரை அவளுக்கும் எனக்கும் நடுவில் ஒன்றுமில்லை” என்றான். 

“அப்போ அவளை பொறுத்தவரை?” 

“அதை அவளிடம் தான் கேட்கணும்” 

“ஏன் அதை நீ சொல்ல மாட்டியா?” 

“அவள் எண்ணத்தை பற்றி எனக்கென்ன தெரியும்?” 

“உனக்கு தெரிந்ததை சொல்லு” 

ஹரீஷ் அமைதியாக இருக்கவும், அரவிந்த், “என் மேல் நம்பிக்கை இல்லையா இல்லை என்னை உன் நண்பனா நினைக்கலையா?” 

“ச்ச்.. அவளை பற்றி சொல்லி தான் நம் நட்பை நிரூபிக்கனுமா?” 

அரவிந்த் பதில் கூறாமல் அழுத்தத்துடன் பார்க்கவும், மூச்சை இழுத்து விட்ட ஹரீஷ், “அவள் என்னிடம் ப்ரொபோஸ் பண்ணாள்” என்றான். 

“எதிர் பார்த்தேன்” 

ஹரீஷ் சிறு ஆச்சரியத்துடன் பார்க்கவும்,

அரவிந்த், “நீ சிரிக்கும் போது அவள் கண்ணில் ரசனையுடன் கூடிய காதலை பார்த்தேன்.. அதுக்கு தான் பதிலை கேட்டாளா?” என்றான். 

“ஹ்ம்ம்” 

“நீ வந்த அன்னைக்கே ப்ரொபோஸ் பண்ணிட்டளா?” 

“ஹ்ம்ம்” 

“இதுக்கு முன்னாடி நீங்க சந்தித்து இருக்கீங்களா?” 

“ஹ்ம்ம்” 

“டேய்! நான் என்ன ஒன் வர்ட் அன்சரா கேட்கிறேன்?” 

“பார்த்து இருக்கிறோம்.. முதல் சந்திப்பே மோதல் தான்..” 

“ஓ மோதல் பின் காதலா?” என்று அரவிந்த் சிரிப்புடன் கூற,

ஹரீஷ் முறைத்தபடி, “உளறாதடா” என்றான். 

“சரி மேலே சொல்லு” 

“முதல் சந்திப்பு ஆறு மாசம் முன்னாடி நடந்தது..” என்று ஆரம்பித்து அந்த சம்பவத்தை பற்றி சுருக்கமாக கூறியவன், “அடுத்து கிட்ட திட்ட ஒரு மாசம் முன்னாடி இரண்டு முறை அவளை பார்த்து இருக்கிறேன் ஆனா அவளுக்கு தெரியாது” என்றான். 

“எங்க பார்த்த?” 

“நான் அவ பிரெண்ட் பவித்ரா வீட்டுக்கு எதிர் வீட்டு மாடியில் தான் இருக்கிறேன்.. அங்கே தான் பார்த்தேன்” என்றவனின் இதழில் புன்னகை அரும்பியது.

“என்னடா மலரும் நினைவுகளா?” என்ற அரவிந்த்தின் கேள்வியில், அவனது புன்னகை மறைய அரவிந்தை முறைத்தான்.

“என்ன முறைப்பு? பின்ன நீ சிரித்ததிற்கு என்ன அர்த்தம்?” 

“நிச்சயம் நீ நினைத்த அர்த்தம் இல்லை” 

“நான் என்ன நினைத்தேன்?” என்று நக்கல் சிரிப்புடன் அரவிந்த் கேட்டான்.

ஹரீஷ் முறைப்புடன், “அவ நந்துவை படுத்திய பாட்டை நினைத்து சிரித்தேன்” என்று கூறி அந்த இரு சம்பவங்களை(திவ்யா கிரிகெட் விளையாடி ஹரீஷ் நண்பன் நந்தகுமார் கண்ணை பதம் பார்த்து சண்டை போட்டதையும், கோவிலில் விக்னேஷ் அக்காவிடம் பேசியதையும்) பற்றி கூறினான்.   

அரவிந்த் புன்னகையுடன், “பாவம் நந்து” என்றான். 

இரண்டு நொடிகள் மௌனத்தில் கழிய, அரவிந்த், “நீ ஏன் உன் மனதை மறைக்கிற?” என்று கேட்டான். 

“புரியலை” 

“திவ்யா மேல் இருக்கும் காதலை ஏன் மறைக்கிறனு கேட்டேன்” 

“வாட்?” என்று ஹரீஷ் அதிர்ந்தான். 

இணைய காத்திருப்போம்…

Advertisement