Advertisement

விலகல் 16

இரண்டு நாட்கள் கழித்து திவ்யா உற்சாகத்துடன் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றாள்.

ஆண் ஆசிரியர்கள் அறை வழியாக வகுப்பறைக்கு சென்றவளின் கால்கள் ஆசிரியர் அறையில் ஹரீஷ் மட்டும் இருப்பதை கண்டு ஆசிரியர் அறையை நோக்கி சென்றது.

உற்சாக குரலில், “குட் மார்னிங் ரிஷி” என்றாள்.

அவளது குரலில் புத்தகத்தில் இருந்து பார்வையை நிமிர்த்தியவன் அமைதியாக இருக்கவும்,

அவள், “என்ன பார்க்கிற! ஹரீஷ் என்ற பெயரை தான் சுருக்கி ரிஷி-னு கூப்பிட்டேன்.. நல்லா இருக்கா?” என்று கண்கள் மின்ன வினவினாள்.

ஆனால் அதில் சிறிதும் பாதிக்கப் படாதவனாக அவன் முறைப்புடன், “ஒருமையில் பேசாதனு சொன்னேன்” என்றான். 

“நானும் அப்படி தான் பேசுவேன்னு சொன்னேனே” 

“காலையில் என் கோபத்தை கிளறாதே!” 

“அப்போ வேற எதை கிளறுறது?” என்று அவள் குறும்புடன் வினவ,

அவன் முறைப்புடன், “எதையும் கிளற வேணாம்” என்றான். 

“ஆணியே பிடுங்க வேணாம்னு சொல்ற!” என்று தலை சரித்து புன்னகையுடன் கேட்டாள்.

அவன் அவளை கண்டுக்கொள்ளாமல் பார்வையை புத்தகத்தில் பதித்தான்.

‘உனக்கு ரிஷினு பெயர் வச்சிருக்க கூடாதோ! இப்படி முற்றும் துறந்த ரிஷி போல் இருக்கிறியே!’ என்று மனதினுள் கூறிக் கொண்டவள், ‘ஆனா மகனே என்னிடம் உன் பாட்சா பலிக்காது’ என்ற உறுதியுடன் அவனை பார்த்து, “நான் கொடுத்த கோட் கண்டுபிடிச்சியா?” என்று வினவினாள். 

அவன் முறைப்புடன், “எனக்கு வேற வேலை இல்லை பாரு!” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறவும்,

அவள் மென்னகையுடன், “மிர்ச்சி மிளகாய் செம்ம ஹாட்டா இருப்பதை பார்த்தால் கண்டு பிடிச்சிட்ட போல!” என்று கூறி புருவம் உயர்த்த,

அவன் கடும் கோபத்துடன், “உனக்கெல்லாம் ஒரு முறை சொன்னா புரியாதா? நீயெல்லாம் எதுக்கு காலேஜ் வர? சேர்மன் ரிலேடிவ்னா ரெண்டு கொம்பா முளைத்து இருக்குது? நான் உன் சார் என்ற மரியாதையை மனதில் வைத்து பன்மையில் பேசி பழகு இல்லை கஷ்டப்படுவ” என்றான். 

அவள் கோபத்துடன், “நமக்கு நடுவில் அவரை கொண்டு வராதே” என்றாள். 

அவள் முகத்தை பார்த்தவன் உதட்டோர புன்னகையுடன், “நீ என் கோபத்தை கிளறினால் நானும் உன் கோபத்தை கிளறுவேன்” என்றான்.

“நீ அவரை பற்றி பேசி என் கோபத்தை கிளறலை, என் மனதின் ரணத்தை தான் கிளறுற” என்று அவள் வேதனையுடன் கூற, அவனது உதட்டோர புன்னகை மறைந்தது.

அவன் பார்வையிலிருந்து அவன் மனதை படிக்க முடியாமல் அவள் சிறு பெருமூச்சை வெளியிட்டு, “சரி அதை விடு.. இப்போ எனக்கு பதில் சொல்லு” என்றாள். 

அவன் தீர்க்கமான குரலில், “என்ன பதில்?” என்று வினவினான். 

“நான் கோடில் சொன்னதிற்கு” 

“அதில் நீ என்ன சொல்லியிருந்தனு எனக்கு தெரியாது” 

அவள் அவனை ஆழ்ந்து நோக்க, அவனும் சளைக்காமல் அவள் பார்வையை தீர்க்கமான பார்வையுடன் எதிர் கொண்டான்.

அவள், “பொய் சொல்ற” என்றாள். 

“…” 

“அவ்ளோ தான் உன் திறமையா?” 

“என் திறமையை இதில் காட்டனும் என்றோ, உனக்கு நிரூபிக்கணும் என்றோ எனக்கு அவசியம் இல்லை” 

அவன் கண்களை தீர்க்கமாக பார்த்தவள், “அப்போ அதில் சொன்னதை நேரிடையா இப்போ சொல்லவா?” என்று கேட்டாள். 

அப்பொழுது அரவிந்த் வருவதை பார்த்தவன் சிறு பதற்றமும் கோபமுமாக, “இப்போ நீ இங்கிருந்து போகலை என்னிடம் அடி தான் வாங்குவ” என்றான். 

அவனது பதற்றத்தை ரசித்தவள் அரவிந்த் வருவதை பார்த்துவிட்டு புன்னகையுடன், “கருத்து(அரவிந்த்) வந்ததால் தப்பித்த” என்றாள். பின் குறும்பும் காதலும் நிறைந்த விழிகளுடன், “இனி நீ அடித்தால் பதிலுக்கு நானும் அடிப்பேன்.. ஆனால் கையால் இல்லை” என்று கூறி கண்சிமிட்டிவிட்டு ஓடிவிட்டாள்.

ஹரீஷ் சிறு அதிர்வுடன் போகும் அவளைப் பார்த்தான். ‘என்ன சொல்லிட்டு போற? கையால் இல்லை என்றால்! என்ன சொல்றா!’ என்று யோசித்தவனுக்கு கிடைத்த விடையில் அவள் மீது கோபம் வந்தது. அதே நேரத்தில் அவனது மனதின் ஒரத்தில் ‘இவளை எப்படி சமாளிக்கப் போறேன்!’ என்ற கேள்வியும் எழுந்தது.

உள்ளே வந்த அரவிந்த், “திவ்யா என்ன சொன்னா?” என்று கேட்டான். 

“ஒண்ணும் சொல்லலையே!” 

“நீ ஏன் இவ்ளோ விறைப்பா பதில் சொல்ற?” 

“அதெல்லாம் இல்லை.. நான் எப்பொழுதும் போல் தான் சொன்னேன்” 

அரவிந்த் யோசனையுடன், “என்னவோ சரியில்லையே!” என்றான். 

“ஏன்?” 

“திவ்யா முகத்தில் தெரிந்த சந்தோஷம்! அவள் எப்போதுமே உற்சாகமா தான் சுத்துவா ஆனா இப்போ அவ முகத்தில் இருந்த சந்தோசம் தனியா தெரிந்தது.. அதான் உன்னை ஏதும் வம்பிழுத்திட்டு போனாளா என்ற எண்ணத்தில் தான் கேட்டேன் ஆனா நீ விறைப்பா பதில் சொன்னதில் ஏதோ இருப்பது போல் தான் தோணுது” 

“நீ சொன்னது போல் வம்பிழுத்திட்டு தான் போறா” 

“என்ன சொன்னா?” 

“அவளை பற்றிய பேச்சு எதுக்கு இப்போ?” 

“நீ என்னிடம் எதையும் மறைக்கிறியா?” 

“ஏன் கேட்கிற?” 

“முந்தாநாள் அப்பப்போ எதோ யோசனையில் இருந்த.. இன்னைக்கு ஏதோ வித்தாயசம் இருப்பது போல் தோணுது.. ஆனா என்னனு சரியா தெரியலை” 

“ஒரு வித்யாசமும் இல்லை” 

அரவிந்த் அப்பொழுதும் விடாமல் ஆராய்ச்சி பார்வை பார்க்கவும், ஹரீஷ் கடுப்புடன், “ஏன் டா! காலையில் இம்சை பண்றீங்க!” என்றான். 

“பண்றீங்கனா! யாரெல்லாம்?” 

“ஹ்ம்ம்.. நீயும் உன் அப்பத்தாவும்” 

“என் அப்பாத்தா இந்நேரம் மேலோகத்தில் தாத்தா கூட டூயட் பாடிட்டு இருக்கும்.. அதை ஏன் இழுக்கிற” 

ஹரீஷ் முறைக்கவும், அரவிந்த், “இந்த முறைப்புக்கு பயப்பட நாங்க ஒண்ணும் நந்தகுமார் இல்லை.. எவ்வளவோ பார்த்துட்டோம்! போடா போய் வேலையை பாரு” என்றான். 

ஹரீஷ் இன்னும் முறைக்கவும், அரவிந்த், “பார் டா! திரும்ப முறைக்கிறதை!” என்று நகைச்சுவை நடிகர் வடிவேல் போல் கூறினான். 

ஹரீஷ் இருந்த நிலையில் மாற்றம் இல்லை என்றதும் அரவிந்த், “பார்த்துடா! உன் முறைப்பை தப்பா புரிஞ்சிட்டு எவனாவது அவனா நீ னு கேட்டுற போறான்.. என் கற்பை கேள்விக்குறி ஆக்கிடாதடா” என்றான். 

“அந்த அளவிற்கு எல்லாம் நீ வொர்த் இல்லை” என்று அலட்டிக் கொள்ளாமல் கூறியவன் பார்வையை புத்தகத்தில் பதித்தான்.

அரவிந்த் ஆள்காட்டி விரலை தன் முகத்தை நோக்கி நீட்டி, “இந்த அவமானம் உனக்கு தேவையா?” என்றான்.

ஹரீஷ் நக்கல் குரலில், “இப்போ எது உனக்கு அவமானம்? வொர்த் இல்லைனு நீ அவன் இல்லைனு சொன்னதில் வருத்தப்படுறியா? அப்போ உண்மையாவே அவனா நீ?” என்றதில் அரவிந்த் ‘நை’ என்று முழித்தான்.

 

 

திவ்யா வகுப்பிற்கு சென்ற ஐந்து நிமிடத்தில் உள்ளே வந்த பவித்ரா ஆச்சரியத்துடன், “என்ன அதிசயம்!!!” என்றாள்.

திவ்யா புன்னகையுடன், “இனி இப்படி தான், ஏன்னா என் ஆள் சீக்கிரம் வந்திறானே!” என்று கூறி கண் சிமிட்டினாள்.

பவித்ரா, “இது எங்க போய் முடிய போகுதோ!” என்று சிறு கலக்கத்துடன் கூறினாள். 

“எல்லாம் எங்க கல்யாணத்தில் தான் முடியும்” 

“திவி எதுக்கும்…………..” 

“முன் வைத்த காலை பின் வைக்க மாட்டா இந்த திவ்யா” 

“ஹ்ம்ம்” என்ற பவித்ரா, “உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லவா?” என்றாள். 

“என்ன?” 

“உனக்கு குட் நியூஸ், ஆனா எனக்கு அது குட் நியூஸ்ஸா பேட் நியூஸ்ஸானு தெரியலை!” 

“என்னடி சொல்ற?” 

“நம்ம ஹரீஷ் சார்…………..” 

“நம்ம இல்லை என் ஹரீஷ்” என்று முறைப்புடன் கூற,

ஒரு நொடி அதிர்ச்சியுடன் பார்த்த பவித்ரா பின், “இவ்ளோ பொசஸிவ் வேணாம்டி” என்றாள்.

“ரிஷி விஷயத்தில் நான் இப்படி தான்” என்று உறுதியுடன் திவ்யா கூற, பவித்ரா சிறு கவலையுடன் பார்த்தாள்.

திவ்யா, “என்ன?” 

“மூன்றே நாளில் இவ்வளவு அன்பு! எனக்கு பயமா இருக்குதுடி” 

“மூன்று நாள் எதுக்கு! மூன்று நொடியே போதும்.. என் ரிஷி என் தனிமையை போக்க வந்த ரக்ஷகன்” என்று காதலுடன் கூறியவள், “உனக்கு என்ன பயம்?” என்று கேட்டாள். 

“அது.. வந்து.. திவி.. உன் காதலை அவர் ஏத்துக்கலைனா!” என்று தயக்கத்துடன் கூறினாள்.

புன்னகையுடன், “அதெல்லாம் ஏத்துப்பான்!” என்றவள், “உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லவா?” 

“என்ன?” 

“ரெண்டு நாள் முன்னாடி.. அதாவது அவன் வந்த அன்னைக்கே நான் ப்ரொபோஸ் பண்ணிட்டேன்” 

நெஞ்சில் கை வைத்த பவித்ரா, “இது குட் நியூஸ் இல்லைடி ஷாகிங் நியூஸ்” என்றாள். 

“உனக்கு எல்லாமே ஷாக்கிங் நியூஸ் தான்” 

“அவர் என்ன சொன்னார்? ஏன்டி என்னிடம் சொல்லலை?” 

“அவன் பதிலை தெரிந்துட்டு உன்னிடம் சொல்லலாம்னு நினைத்தேன்” 

“என்னடி சொன்னார்?” என்று சிறு பதற்றத்துடன் கேட்டாள். 

திவ்யா உதட்டை பிதுக்கவும், பவித்ரா, “என் பீபி ஏத்தாம சீக்கிரம் சொல்லுடி பிசாசு” என்றாள். 

“அவன் ஒண்ணும் சொல்லலை” 

“என்னடி சொல்ற? எப்போ அவரிடம் சொன்ன?” 

“அன்னைக்கு அவன் ஹாஸ்டல் வந்தான்னு சொன்னேனே அப்போ தான் ப்ரொபோஸ் பண்ணேன் ஆனா நான் நேரிடையா சொல்லலை.. 24.10.56னு சொன்னேன்..” 

“எதில் விளையாடுவதுனு இல்லையா திவி?” என்று பவித்ரா கோபத்துடன் வினவினாள்.

“எனக்கு என்னவோ யாரும் சொல்லாத முறையில் என் காதலை சொல்லணும்னு தோணுச்சு.. அவன் க்ரிப்டோக்ராபி தானே எடுக்கிறான்! அதான் இப்படி சொன்னேன்..” 

“ச்ச்.. ஏன்டி தலையை சுத்தி மூக்கை தொடுற! இதை அவர் எப்போ கண்டு பிடிச்சு………….” 

“அதெல்லாம் கண்டு பிடிச்சிட்டான் ஆனா ஒத்துக்க மாட்டிக்கிறான்.. ‘எனக்கு வேற வேலை இல்லையா! இதை நான் ஏன் கண்டு பிடிக்கணும்’ னு சொல்றான்” 

“அது உண்மையா கூட இருக்கலாமே!” 

‘இல்லை’ என்பது போல் மறுப்பாக தலையை ஆட்டியவள், “நிச்சயம் கண்டு பிடிச்சிட்டான்” என்று உறுதியுடன் கூறினாள். 

“எதை வைத்து சொல்ற?” 

“நான் கண்டுபிடிச்சிட்டானானு கேட்டதும் அவன் கோபமா பேசினான் ஆனா……….” 

“திவி.. நான் எதிர்மறையா பேசுறேன் நினைக்காதே.. ஒருவேளை அவர் நிஜமாவே அதை பற்றி யோசிக்காமல் இருக்கலாம்.. அதாவது நீ அவரை பாதிக்காமல் இருக்கலாம்.. நீ அவரை பாதித்து இருந்தால் உடனே அதை தான் கண்டு பிடித்து இருப்பார்..

இல்லை நீ சொன்னது போல் கண்டு பிடித்து அதை மறுக்கிறார் என்றால் அவர் உன்னை விரும்பலை என்று தானே அர்த்தம்..

எப்படி பார்த்தாலும் அவர் உன்னை விரும்பலை என்று தானே அர்த்தம் வருது”

“நிச்சயம் அப்படி இல்லை.. அவனுக்கு என் மேல் தனி அக்கறை இருக்கிறது..” 

“அக்கறை வேறு காதல் வேறுடி” 

“உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது!” என்று சிறு தவிப்புடன் கூறிய திவ்யா, “அன்னைக்கு அவன் முகத்தில் கோபத்தை பார்த்தேன் ஆனா என் இறுக்கம் புரிந்து கோபத்தை விட்டு என் மனதை திசை திருப்பி என் மனநிலையை மாற்றினான்.. அந்த தைரியத்தில் தான் அப்போவே நான் ப்ரொபோஸ் பண்ணேன்..

இப்போ பேசுனப்ப கூட கோபமா பேசினவன் அவன் பேச்சு என் வேதனையை கிளறுதுனு சொன்னதும் சட்டென்று கோபத்தை கைவிட்டான்..

எனக்கு தெரிந்து அவன் கோபம் வந்தால் லேசில் மலை இறங்குபவனா தெரியலை, ஆனா என் விஷயத்தில் நிச்சயம் அவன் அப்படி இல்லை” 

“இது எல்லாம் உன் யூகம் மட்டும் தானே!” 

“யூகம் தான் ஆனா இது தான் உண்மையும் கூட.. எனக்கு இருநூறு சதவிதம் நம்பிக்கை இருக்குது” 

“இதற்கு மேல் எனக்கு என்ன சொல்லனு  தெரியலை திவி.. நீ சந்தோஷமா இருக்கணும்.. எனக்கு அது தான் வேண்டும்.. உன் வேகம் பார்த்து எனக்கு ரொம்ப பயமா தான் இருக்குது.. நூற்றில் ஒரு சதவிதமா அவர் உன் காதலை ஏற்கலை என்றால் உன்னால் அதை தாங்கிக்க முடியாது.. கொஞ்சம் பொறுமையா போடி ப்ளீஸ்” 

“இதில் நான் என்ன பண்ண? மனம் அறிவு சொல்றதை கேட்க மாட்டேங்குதே! ஆனா எனக்கு நம்பிக்கை இருக்குது.. அவனுக்கும் என்னைப் பிடிக்கும்.. என் காதலை ஏற்றுக் கொள்வான்”   

“நானும் கடவுளிடம் இதை தான் வேண்டிக்கிறேன்” 

“சரி நீ என்ன குட் நியூஸ் சொல்ல வந்த?” 

“அதுவா.. சொன்னா ஓட்டக் கூடாது” 

“அது நீ சொல்லும் விஷயத்தை பொருத்து” 

“அப்போ நான் சொல்ல மாட்டேன் போ” 

“சரி சொல்ல வேணாம்” 

“என்னடி இப்படி சட்டுன்னு சொல்லிட்ட!” 

திவ்யா புன்னகைக்கவும், பவித்ரா செல்லமாக முறைத்து, “ஒரு பேச்சுக்காவது கெஞ்சிறியா!” என்றாள். 

“அது எதுக்கு! எப்படியும் உன்னால் என்னிடம் சொல்லாமல் இருக்க முடியாது.. அதுவும் எனக்கு குட் நியூஸ்னு வேற சொல்ற” 

“ஹ்ம்ம்.. உன் ஆள் வீடு எங்கனு எனக்கு தெரியும்” 

“இதுக்கு ஏன் நான் உன்னை ஓட்டக் கூடாதுனு சொன்ன?” 

பவித்ரா சிறிது அசடு வழிந்தபடி, “அது.. வந்து திவி.. அவர் என் எதிர் வீட்டு மாடியில் தான் இருக்கிறார்” என்றாள். 

“ஓ! அந்த சூம்பிப் போன சிக்கன் பிரெண்ட்.. அதாவது விக்கி கொக்கி சொன்ன நல்லவர் வல்லவர் நாளும் தெரிந்த அண்ணா ரிஷி தானா!” என்றவள் நக்கல் சிரிப்புடன், “ஆனாலும் நீ இவ்ளோ பழமா இருக்க கூடாதுடி!” என்றாள். 

“நீயும் தான் ரெண்டு நாள் என் வீட்டில் இருந்த! அவரை பார்த்தியா?” 

“ரெண்டு நாளும் ரெண்டு மாசமும் ஒன்னாடி!” 

“உன் ஆள் என் கண்ணில் படலைனா நான் என்ன செய்வேன்!” 

“ஆமா அவனுக்கு வேறு வேலை இல்லை பாரு” 

“எனக்கு மட்டும் வேறு வேலை இல்லையா!” 

“அதுக்காக இப்படியாடி இருப்ப! உன் வீட்டுக்கு எதிர் வீட்டில் யாரு இருக்காங்கனு கூட தெரியலை.. உன்னை எல்லாம்!” 

“நான் ரொம்ப நல்ல பிள்ளைடி” 

“அது என்னவோ உண்மை தான்.. நீ சமத்து பேபி தான்” என்று கிண்டலாக கூற,

பவித்ரா சிணுங்கலுடன், “கிண்டல் பண்ணாதடி” என்றாள். 

திவ்யா சிரிக்கவும், பவித்ரா, “திவி!” என்று முறைத்தாள்.

“சரி சரி.. இன்னைக்கு எப்படி கண்டு பிடிச்ச?” 

“அது.. அப்பா இன்னைக்கு சீக்கிரம் கிளம்பினாங்க.. கேட் திறந்து விட வெளியே வந்தேன்.. அப்போ தான் அவரும் அவர் பிரெண்ட்டும் பைக்கில் கிளம்பினாங்க” 

“ஹ்ம்ம்” 

“சரி 24.10.56 க்கு என்ன அர்த்தம்?” 

திவ்யா ‘லூசா டி நீ’ என்பது போல் பார்க்கவும்,

பவித்ரா, “அது ‘ஐ லவ் யூ’ னு தெரியும் ஆனா எப்படினு எக்ஸ்ப்ளேன் பண்ணு” என்றாள். 

“பார் டா! நம்ம பவி பேபிக்கு கூட இந்த விஷயம் புரியுது” 

“ரொம்ப பண்ணாதடி” 

புன்னகையுடன், “சரி சொல்றேன்” என்றவள், “நம்பர்ஸ் எதுவும் சரியான இடத்தில் இல்லை ஸோ அதை எல்லாம் மாத்தி போட்டா என்ன வரும்?” என்று கேட்டாள். 

சிறிது யோசித்த பவித்ரா, 10 56 24 வரும்” என்றாள். 

“கரெக்ட்.. அதில் -1 -2 -3 பண்ணால் என்ன நம்பர்ஸ் வரும்?” 

“9 54 21” 

அவ்ளோ தான்..” 

“என்னடி சொல்ற?” 

“யோசி” 

சிறிது யோசித்த பவித்ரா, “அல்பபெட்-க்கு நம்பர்ஸ் போட்டியா?” என்று கேட்டாள். 

திவ்யா, “எஸ்” என்றாள் புன்னகையுடன்.

“ஆனா கடைசி நம்பர் வேறு வருதே! 61 தானே வரும்?” 

“YOU னா தான் 25+15+21 போட்டு 61 வரும்.. வெறும் U மட்டும் போட்டா 21 தானே!” 

“நிஜமா இதை அவர் கண்டு பிடிச்சிட்டார்னா சொல்ற?” 

“எதை யாரு கண்டு பிடிச்சா?” என்ற கேள்வியுடன் விஜய் வந்தான்.

தனது பார்வையை சுழற்றிய பவித்ரா மெல்லிய குரலில், “இவள் ப்ரொபோஸ் பண்ணதை பற்றி கேட்டேன்” என்றாள்.

விஜய் மகிழ்ச்சியுடன், “வாவ்! சூப்பர் திவி.. அந்த பக்கம் என்ன ரியாக்சன்?” என்று கேட்டான். 

பவித்ரா, “கேன்டீன் போகலாம் திவி” என்றாள். 

விஜய், “எனக்கு காலை டிபன் இன்னைக்கு பவி தான் ஸ்பான்சர்” 

“நான் எங்கே அப்படி சொன்னேன்?” 

“நான் அப்படி தான் சொல்றேன்” என்றவன், “காலையில் சாப்பிடலை” என்று சேர்த்து கூற,

பவித்ரா, “எத்தனை முறை சொன்னாலும் கேட்காத! இனி காலையில் சாப்பிடாம வந்த நானும் திவியும் உன்னுடன் பேச மாட்டோம்” என்றாள். 

“டென்ஷன் ஆகாத.. வா போகலாம்” 

“இப்ப கூட சாப்பிடுவேன்னு சொல்றியாடா!” 

“ஹீ ஹீ ட்ரை பண்றேன்டி” 

பவித்ரா முறைக்கவும், விஜய், “நான் இவ்ளோ இறங்கி வந்ததே பெருசு.. வந்து சாப்பாடு வாங்கி தா” என்றான். 

“உன்னை எல்லாம் திருத்த முடியாது” 

“அது இப்போ தான் தெரிந்ததா!” என்று சண்டை போட்டப்படியே கல்லூரி உணவகம் நோக்கி சென்றனர்.

விஜய், “இப்போ சொல்லு திவி” என்றான்.

திவ்யா சுருக்கமாக சொல்லி முடிக்கவும், உணவகம் வரவும் சரியாக இருந்தது. விஜயும் திவ்யாவும் இருக்கையில் அமர, பவித்ரா உணவு வாங்க சென்றாள்.

விஜய், “பவி சொன்னது போல் நீ நேரிடையாவே சொல்லி இருக்கலாம்” என்றான்.

திவ்யா மென்னகையுடன், “அவனிடம் நேரிடையா சொல்லவானு கேட்டதும் அவன் முகத்தில் வந்த பதற்றம் உறுதிபடுத்திடுச்சு அவன் அதை கண்டுக் பிடிச்சிட்டான்னு..

அவனுடன் இப்படி விளையாடுவது பிடித்து இருக்குது.. இப்படி காதலை சொல்லாமல் சொல்வதில் தனி சுகம் இருக்குது.. இது சொன்னால் புரியாது, அனுபவிச்சா தான் புரியும்..” என்று மென்மையான குரலில் காதலுடன் கூறியவளை சிறு பிரம்மிப்புடன் விஜய் பார்த்தான்.

இணைய காத்திருப்போம்…

அன்புத் தோழமைகளே!
யாருமே code-ஐ கண்டு பிடிக்கவில்லை என்றதில் சிறு வருத்தம் தான் என்றாலும், முயற்சி செய்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.

 

Advertisement