Advertisement

தன்னவனை ரசிக்கும் எண்ணமின்றி சைமன் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் திவ்யா. ‘நான் வேற அடித்திருக்கிறேன்.. அவன் அமைதியா இருக்க மாட்டான்.. அடுத்து என்ன செய்வான்!!!’ என்று சிந்தித்தவள், ‘நான் அடித்திருக்க கூடாதோ! ஆனா அவனது செய்கை அடிக்கும் படி தானே இருந்தது! அவன் என்னை மட்டும் பேசி என்னை நெருங்கி இருந்தால் கூட நான் அடிக்காமல் பார்வையிலேயே அவனை தள்ளிப் போக வைத்திருப்பேன் ஆனா அவன் பவியை போய்’ என்று நினைத்தவளுக்கு இப்பொழுது கூட அவனை அடித்துவிடும் அளவிற்கு கோபம் வந்தது.

அவன் அவளைப் பற்றி மட்டும் பேசியிருந்தால் இந்நேரம் அவனை பற்றிய சிந்தனை சிறிதுமின்றி தன்னவனை ரசித்துக் கொண்டு இருந்திருப்பாள் ஆனால் தற்போதோ அவளது மனம் அவனால் பவித்ராவிற்கு கெட்டப் பெயர் வந்துவிட கூடாதே என்று தவித்தது.

அவளது கணிப்பு சரியே. சைமன் சேர்மன் ராஜாராமை பார்ப்பதற்காக அவர் அறை வெளியே காத்திருந்தான்.

அப்பொழுது ராஜாராம் முதன்மை ஆசிரியரிடம் சில கல்லூரி திட்டங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார். சந்திப்பு முடிந்து அவர் மருத்துவ கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த போது கதவை தட்டி அனுமதி பெற்று உள்ளே வந்த அவரது செயலாளர், “சார் உங்களை பார்க்க ஒரு பைனல் இயர் ஸ்டுடென்ட் வெயிட் பண்ணிட்டு இருக்கிறான்” என்றார்.

ராஜாராம் மணியை பார்க்கவும், அவரது செயலாளர், “மெடிக்கல் காலேஜில் மூணு மணிக்கு தான் சார் மீட்டிங்” என்றார். 

“சரி அவனை உள்ளே வரச் சொல்லுங்க”

“ஓகே சார்” என்று கூறி வெளியே சென்றவர் சைமனை உள்ளே போகுமாறு கூறினார்.

அனுமதி பெற்றுக் கொண்டு அவன் உள்ளே சென்றதும் ராஜாராமின் பார்வையை கண்டு அவன், “குட் அப்ட்டர்-நூன் சார்.. நான் சைமன் மத்தியு.. பைனல் EEE படிக்கிறேன்” என்றான். 

“கிளாஸ் நேரத்தில் இங்கே என்ன பண்ற?” 

“உங்களிடம் ஒரு கம்ப்லைன்ட் கொடுக்க வந்தேன்” 

“என்ன?” 

“பைனல் CSE திவ்யா என்னை அடிச்சுட்டா சார்” 

ஒரு நொடி உள்ளுக்குள் அதிர்ந்தவர் அவனை கூர்மையுடன் பார்த்து, “நீ என்ன பண்ண?” என்று கேட்டார். 

“நீங்க நேர்மையானவர்னு நினைத்தேன் சார்” 

“நான் நேர்மையானவன் தான்.. எனக்கு திவ்யாவின் நேர்மை பற்றியும் தெரியும்” என்றவர் அவனை தீர்க்கமாக பார்த்தார்.

அவனோ பயத்தை சிறிதும் வெளியே காட்டிக்கொள்ளாமல் வரவழைத்த நிமிர்வுடன் அவரை பார்த்து, “நான் எதுவும் பண்ணலை சார்.. நான் தெரியாமல் அவளை இடிச்சிட்டேன்.. அதுக்கு போய் என்னை அடிச்சிட்டா சார்..” என்றான்.

“இது எப்போ எங்கே நடந்தது?” 

“கொஞ்ச நேரத்திற்கு முன் லன்ச் பிரேக்கில் கேன்டீனில் நடந்தது” 

அவன் முகத்தை கூர்ந்து பார்த்தவர், “சரி கொஞ்ச நேரம் வெளியே வெயிட் பண்ணு” என்றார். அவன் சென்றதும் தனது செயலாளரை அழைத்தார்.

செயலாளர் உள்ளே வந்ததும், “கொஞ்ச நேரத்திற்கு முன் கேன்டீனில் ஏதும் பிரச்சனை நடந்ததானு விசாரித்து சொல்லுங்க.. குவிக்” என்றார்.

திவ்யா கல்லூரி உணவகத்தை விட்டு வெளியே சென்றதும் அவளது செய்கையை பற்றி யோசித்த சைமன் எப்பொழுதும் போல் இன்று அவள் ஆவேசப் படலை என்பதை உணர்ந்து, அதற்கு காரணம் தான் பவித்ரா பற்றி பேசியது தான் என்பதை கண்டுக் கொண்டான். மேலும் தான் பேசியதை பற்றி அவள் வெளியே சொல்ல மாட்டாள் என்பதையும் சரியாக கணித்து சாமர்த்தியமாக காயை நகர்த்தினான்.

அவன் மனதினுள், ‘வாடி வா.. என்னையா அடிக்கிற! உன்னை சஸ்பெண்டு ஆக வைக்கிறேன்’ என்று கூறியபடி வன்மத்துடன் ராஜாராம் அறை வெளியே அமர்ந்திருந்தான்.

ராஜாராமோ ‘அங்கே மீட்டிங்க்கு நேரமாகுது.. இதை முடித்துவிட்டு நான் எப்போ போக! நாளுக்கு நாள் திவ்யாவின் செய்கை கூடிட்டே போகுது! அவள் மனம் மாறனும்னு விட்டு கொடுத்து போய் நானே அவள் குணத்தை மாற்றிக் கொண்டு இருக்கிறேனோ!’ என்று ஆராய்ந்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே வந்த செயலாளர், “சார் திவ்யா மேடம் ஒருவனை அடித்து இருக்காங்க ஆனா என்ன பிரச்சனைனு தெரியலை” என்றார். 

மருத்துவ கல்லூரியில் அவருக்காக காத்திருக்கும் ஒரு பிரச்சனையும் நேரமின்மையும் மன குழப்பமும் சேர்ந்து ராஜாராமிற்கு ஆயாசமாக இருந்தது. 

செயலாளர், “சார்” என்று அழைக்கவும்.

“திவ்யாவை வரச் சொல்லுங்க” என்றார்.

 

 

திவ்யாவின் வகுப்பிற்கு சென்ற பியூன் திவ்யாவை சேர்மன் அழைப்பதாக கூறவும், 

‘என்னை வேவு பார்க்க தனி ஸ்பை ஸ்குவார்ட் வச்சிருப்பார் போல!’ என்று அலுத்துக் கொண்டு எழுந்த திவ்யா தன்னை யோசனையாக பார்த்த ஹரீஷை கண்டு, ‘சும்மாவே இவனுக்கு என் மேல் நல்ல அவிப்பிராயம் இல்லை’ என்று மனதினுள் பெருமூச்சை விட்டபடி அவனிடம் தலை அசைத்துவிட்டு வெளியே சென்றாள்.

சேர்மன் அறை நோக்கி சென்றவள் வெளியே அமர்ந்து தன்னை வெற்றிப் புன்னகையுடன் பார்த்த சைமனை கண்டு யோசனையுடன் உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே சென்றதும் ராஜாராம் சிறு கோபத்துடன், “வர வர நீ பண்ணும் பிரச்சனைகள் கூடிட்டே போகுது.. இப்படி பண்றதால் உன் பெயரை தான் கெடுத்துக்கிற.. ஒரு நாளைக்கு எத்தனை பிரச்சனையை தான் கிளப்புவ?” என்றார். 

அவள் அவரை அமைதியாக பார்த்தாள்.

அவர், “என்ன?” என்றார். 

“இப்போ நான் என்ன சொல்லணும்?” 

அவர் அமைதியாக பார்க்கவும், அவளும் அமைதியான குரலில், “ஸோ நான் தான் பிரச்சனை பண்ணேன்னு முடிவு பண்ணிட்டீங்க..” என்றவள் அவரை தீர்க்கமாக பார்த்து, “இது வரை நான் எந்த ஸ்டுடென்ட் கூடயாவது பிரச்சனை செய்திருக்கிறேனா?” என்று வினவினாள். 

ராஜாராம் சிறு தவிப்புடன் இல்லை என்பது போல் தலையை ஆட்டினார்.

திவ்யா, “HOD விஷயத்திலாவது எனக்கு எதிரா ஆதாரம் இருந்தது.. ஆனா இது…” என்று ஒரு நொடி நிறுத்தியவள், “நீங்க மட்டுமே என்னை புரிந்துக் கொண்டிருப்பதாக நினைத்தேன்.. அது தப்புனு புரிய வச்சிட்டீங்க…………………….” 

ராஜாராம் தவிப்புடன் “திவிமா நான்………………” 

கையை காட்டி அவரது பேச்சை நிறுத்தியவள், “அவன் என்ன சொன்னான்?” என்று கேட்டாள்.

“திவிமா………….” 

“அவன் சொன்னதை மட்டும் சொல்லுங்க” என்று இறுகிய குரலில் அவள் கூற,

ராஜாராம் மனதினுள் நொந்தபடி, “அவன் தெரியாமல் உன்னை இடிச்சதுக்காக நீ அவனை அடித்ததாக சொன்னான்” 

“ஓ”

“நான் வேறு ஒரு டென்ஷனில் உன்னிடம் அபப்டி பேசிட்……………………” 

“என் இடத்தில் ஜனனி இருந்திருந்தால்?” 

“நீயும் ஜனனியும் எனக்கு ஒன்று தான்” 

திவ்யா அவரை நம்பாத பார்வை பார்க்கவும்,

அவர் தீர்க்கமான குரலில், “நீ நம்பலை என்றாலும் உங்களுக்குள் நான் வேறுபாடு பார்ப்பது இல்லை.. அப்புறம் உன் இடத்தில ஜனனி இருந்து இருந்தால், அவளை அடித்து இருப்பேன்” என்றார். 

“இதிலேயே உங்களோட வேறுபாடு தெரியுதே! அவளும் நானும் வேறு வேறு தான்” 

அவர் புரியாது பார்க்கவும், அவள் விரக்தியான புன்னகையுடன், “அவள் உங்கள் மகள் அதனால் அடித்து இருப்பீங்க.. நான் யாரோ அதான்……………………” 

“திவ்யா!!! நான் என்ன சொன்னால் நீ என்ன சொல்ற! உன் மேல் உள்ள நம்பிக்கையில் உன்னிடம் பேசிட்டு இருக்கிறேன் ஆனா ஜனனி கொஞ்சம் முன் கோபம் கொண்டவள்.. சில நேரம் யோசிக்காமல் செய்துவிட்டு பின்னாடி பீல் பண்ணுவா.. இந்த மாதிரி விஷயத்தில் அவள் கொஞ்சம் நிதானமின்றி செயல்ப் பட வாய்ப்பு இருக்கிறது.. அதனால் பெரிய பிரச்சனையில் மாட்டிக்க கூடாதேனு அவளை கண்டிக்க அடித்து இருப்பேன்னு சொன்னேன்..” என்று நீண்ட விளக்கத்தை கூறியவர்,

“ஏன்டா என்னை புரிஞ்சுக்கவே மாட்டிக்கிற! புரிந்துக் கொள்ள முயற்சி கூட பண்ண மாட்டேன்னு ஏன் அடம் பிடிக்கிற!” என்று வருந்தினார். 

இறுகி போய் நின்றிருந்தவள் இறுகிய குரலில், “நம்ம சொந்த விஷயம் பற்றி பேச வேண்டாம்” என்றாள். 

பெருமூச்சை வெளியிட்டவர், “சரி.. அவன் என்ன செய்தான்?” 

“அதை தான் அவன் சொன்னானே!” 

“நான் உண்மையை கேட்டேன்” 

“இனி அது தேவை இல்லாதது.. அவன் சொன்னதை வைத்து எனக்கு பனிஷ்மென்ட் கொடுங்க” 

“அப்பொழுது உன்னுடன் பவித்ராவோ விஜயோ இருந்தாங்களா?” 

“என் மேல் கொஞ்சமாவது நம்பிக்கை இருந்தால் இதற்கு மேல் இதை பற்றி விசாரிக்காமல் அவனை நான் அடித்ததிற்காக எனக்கு பனிஷ்மென்ட் கொடுங்க” 

அவர் அவளை தீர்க்கமாக பார்க்கவும், அவள், “அவன் என்னை சஸ்பெண்டு செய்ய வைக்க தான் பொய் சொல்லி இருக்கிறான்.. அதையே செஞ்சிடுங்க” என்றவள் மெல்லிய புன்னகையுடன், “இதனால் வெற்றி எனக்கு தான்” என்றாள்.

“எப்படி?” 

அவள் புன்னகையுடன், “இன்னைக்கு சாயுங்காலதிற்குள் உங்களுக்கு அது புரியும்” என்றாள்.

“உன் மேல் உள்ள நம்பிக்கையில் நீ சொன்னதை செய்கிறேன்.. அவனை நீ அடித்ததிற்காக இரண்டு நாட்கள் உன்னை சஸ்பெண்டு செய்கிறேன்” 

அவர் ‘நம்பிக்கை’ என்ற வார்த்தையை அழுத்தி கூறினார். அப்பொழுது அவளது இதழில் மெல்லிய புன்னகை அரும்பியது ஆனால் அதன் மூலம் அவள் மனதை படிக்க அவரால் முடியவில்லை.

“தன்க் யூ” என்று கூறி வெளியேற போனவள் அவரை திரும்பி பார்த்து, “அஞ்சு நிமிஷம் பிடித்த பாட்டை கேளுங்க.. டென்ஷன் போய் மனசு ரிலாக்ஸ் ஆகிரும்...என்றாள்.

ஏதோ சொல் வாய் திறந்தவர் பின், “தேங்க்ஸ் திவிமா” என்றார் புன்னகையுடன்.

அவள் புன்னகைத்துவிட்டு வெளியேறினாள்.

அவள் சென்றதும் சைமனை அழைத்தவர் அவளுக்கு கொடுத்த தண்டனையை பற்றி கூறவும் அவன் மகிழ்ச்சியுடன், “தன்க் யூ சார்” என்று கூறி வெளியேறினான்.   

Advertisement